Monday, July 23, 2007

மதுரையில் திருக்குறள் கிடைக்கவில்லை


நேற்று சன் தொலைக்காட்சியில் இந்தச் செய்தியைக் கேட்ட போது நம்பமுடியவில்லை. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலா இந்த நிலைமை? ஆனால் தொலைக்காட்சியில் சொன்னதைப் பார்த்தால் உண்மை என்று தான் தோன்றியது.

இரவு 8 மணி 'செய்திகளின்' நடுவில் 'திருப்பம்' என்றொரு பகுதியைக் காட்டுகிறார்கள். நேற்று வள்ளல் பாண்டித்துரை தேவர் அவர்கள் எந்தக் காரணத்தால் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார் என்று காட்டினார்கள். ஒரு முறை மதுரையில் பாண்டித்துரை தேவர் ஏதோ ஒரு இடத்தில் சொற்பொழிவு ஒன்று ஆற்ற வேண்டியிருந்தது. சொற்பொழிவிற்குக் குறிப்புகள் வேண்டி திருக்குறள் நூலையும் கம்பராமாயண நூலையும் நண்பர்களிடம் கேட்டார். மதுரை முழுவதும் தேடியும் அவ்விரண்டு நூற்களும் கிடைக்கவில்லை. அது பாண்டித்துரை அவர்களுக்கு மிக்க மன வருத்தத்தைக் கொடுத்தது. தமிழ் இலக்கியங்களில் மிக மிக முக்கியமான இந்த இரு நூற்களுமே கிடைக்கவில்லை என்றால் மற்ற இலக்கியங்கள் விரைவில் அழிந்துபட்டுப் போகுமே என்று மனம் வருந்தி தன்னுடைய மதுரை மாளிகையை நான்காம் தமிழ்ச்சங்கமாக மாற்றினார்.

அந்தத் தமிழ் சங்கத்தின் மூலம் பல தமிழ் இலக்கியங்களை அச்சேற்றினார். பல தமிழ்த் தொண்டுகளை அந்த நான்காம் தமிழ்ச்சங்கம் செய்தது.

இந்த நான்காம் தமிழ் சங்கம் இன்னும் இருக்கிறதா? எங்கே இருக்கிறது? இன்னும் இருக்கிறதென்றால் சங்கம் வைத்துத் தமிழ் 'வளர்த்த' மதுரை என்றே இன்னும் சொல்ல வேண்டுமா? சங்கம் வைத்துத் தமிழ் 'வளர்க்கும்' மதுரை என்னலாகாதா? :-)

37 comments:

சதங்கா (Sathanga) said...

குமரன்,

அதிர்ச்சியான செய்தி தான்.

//இந்த நான்காம் தமிழ் சங்கம் இன்னும் இருக்கிறதா? எங்கே இருக்கிறது? இன்னும் இருக்கிறதென்றால் சங்கம் வைத்துத் தமிழ் 'வளர்த்த' மதுரை என்றே இன்னும் சொல்ல வேண்டுமா? சங்கம் வைத்துத் தமிழ் 'வளர்க்கும்' மதுரை என்னலாகாதா? :-)//

சரியாகச் சொன்னீர்கள். யாராவது நான்காம் தமிழ் சங்கம் பற்றி அறிந்தவர்கள் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

G.Ragavan said...

உண்மைதான். தமிழ் வளர்த்த மதுரையை தமிழ் வளர் மதுரை என்று சொல்லலாம். வளர்னு சொல்லும் போது உரிச்சொல் ஆகீருதுல்ல.

சிவபாலன் said...

// 'வளர்க்கும்' மதுரை //

Yes We have to! :-)

ஜீவா (Jeeva Venkataraman) said...

மதுரையில் கிடைக்காவிட்டாலும், மதுரைத் திட்டத்தினால், புவனமெங்கும் கிடைக்கும் வழி வந்துவிட்டதே, இணையத்தின் உதவியினால்!

ஜீவி said...

நம்புகிற மாதிரி இல்லை.
பாண்டித்துரை அவர்கள் பலபடக்கற்ற
பெரும் தமிழ் அறிஞர்.
இவரைப் பற்றி எழுத்தாளர் 'தீபம்' நா.பார்த்தசாரதி அவர்கள் சொல்லி நிரமபக்கேள்விபட்டிருக்கிறேன்.
அவரிடம் கம்பராமாயண, திருக்குறள்
படி ஒன்று கூடவா இருந்திருக்காது?
அவர் 'நண்பர்களைக் கேட்டார்' என்று
கூறியிருப்பதிலிருந்து, இவரிடம் இல்லாதது நண்பர்களிடம் இருந்திருக்குமா,அந்தக் 'கேட்டலுக்கு'அவசியமில்லையே என்றும் தோன்றுகிறது.

குமரன் (Kumaran) said...

ஜீவி அவர்களே. என் தப்பு. இன்னும் விவரமாகச் சொல்லியிருக்க வேண்டும். பாண்டித்துரையாரிடம் கட்டாயம் திருக்குறள், கம்பராமாயணம் இருந்திருக்கும்; இந்த நிகழ்ச்சி நடந்தது அவர் மதுரைக்கு வந்திருந்த போது. அவர் இராமநாதபுரத்துக் காரர். இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி பரம்பரையினர். மதுரைக்கு வந்த போது சொற்பொழிவிற்கு நூற்களைக் கேட்ட போது கிடைக்கவில்லை. இப்படி விவரமாகச் சொல்லாதது என் பிழையே.

மணியன் said...

இந்த நான்காம் தமிழ்சங்கம் என் நினைவிலிருந்து: சிம்மக்கல் அருகில்் உள்ளது. மதுரை வாசம் நாற்பதாண்டுகளாயிற்று. இப்போது இடம் மாறியிருக்கலாம். சம்பவம் நானும் சிறுவயதில் பாடப்புத்தகத்தில் படித்ததே. 'தமிழிற்கு கதி எனப்படும் கம்பராமாயணமும் திருக்குறளும் சங்கம் வளர்த்த மதுரையில் காணாமல் போனதே' என அவர் வருந்தியதாக மனப்பாடம் செய்தது இன்று நினைவிற்கு வருகிறது :)

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

மதுரை சிம்மக்கல் பகுதியில் மாவட்ட நூலகக் கட்டிடத்திற்கு நான்கைந்து கட்டிடங்கள் தள்ளி தமிழ்ச் சங்கம் சாலையில் நான்காம் தமிழ்ச் சங்கம் இயங்கி வருகிறது.

மதுரையம்பதி said...

குமரன்,

நான்காம் தமிழ்ச்சங்கம் இன்னும் இருக்கிறது....தமிழ்ச்சங்கம் ரோடு என்றே ஒரு தெரு இருக்கு...இத்தெருவை ஒர்க்ஷாப் ரோடு என்றும் சொல்வார்கள்...

சிம்மக்கல் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறம் செல்லும் சாலை மூன்றாக பிரியும், இடதுகைப் பக்க சாலை வடக்குவெளிவிதி, மத்தியில் இருப்பது தமிழ்ச்சங்கம் ரோடு, வலக்கை ஓரத்தில் செல்வது பேச்சியம்மன் படித்துறை ரோடு....

இந்த ரோடில் சிம்மக்கல் தாண்டியவுடன் முதலில் வருவது போஸ் இரத்தப்பரிசோதனை நிலையம், மேலும் சென்றால் தமிழ்ச்சங்கம் உள்ளது (நான் உள்ளே சென்றதில்லை), அதனை தாண்டிச் சென்றால் சந்தை, B4 போலீஸ் ஸ்டேஷன், மதுராக்கோட்ஸ் எல்லாம் வரும்....கடந்த 3-4 வருடங்கள் முன் ஒரு பிளைஓவர் கட்டப்பட்டுள்ளது....இதன் கிழே சென்று இடதுபுறம் திரும்பினால் வடக்கு வெளிவீதி...சேதுபதி பள்ளி, ஹிக்கின் பாத்தம்ஸ், சக்தி-சிவம் தியேட்டர் எல்லாம்.

குமரன் (Kumaran) said...

சதங்கா. தமிழ் சங்கத்தைப் பற்றி நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். பார்த்தீர்களா?

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவன். தமிழ் வளர் மதுரைன்னு சொல்லலாம். ஆமா. அது வினைத்தொகைன்னு தானே சொல்லுவாங்க. நீங்க உரிச்சொல்னு சொல்றீங்க? எனக்கு இலக்கணம் அவ்வளவா தெரியாது. அதனால நான் சொல்றது தப்பா இருக்கலாம்.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவபாலன். :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரா!
இதுதான் மதுரைக்கு வந்த சோதனை என்பதோ!!!
ஆச்சரியமான செய்தி

குமரன் (Kumaran) said...

உண்மை தான் ஜீவா. மதுரைத் திட்டத்தினால் எத்தனை பயன் என்று சொல்லிமுடியாது. நான் எல்லாம் தமிழகத்தில் இல்லாத குறையை நீக்கிக் கொள்வது மதுரைத் திட்டத்தினால் தான். அண்மையில் தமிழ் இணையப் பல்கலைகழக வலைப்பக்கத்தைப் பார்த்தேன். முன்பு பார்க்கும் போது நிறைய நூற்கள் அங்கே இல்லை. ஆனால் இப்போது நிறைய நூற்கள் அங்கே இருக்கின்றன. இரண்டு வலைப்பக்கங்களும் தமிழுக்கு ஆற்றும் தொண்டு அளவிட முடியாதது.


http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm

குமரன் (Kumaran) said...

மணியன் ஐயா. சிம்மக்கல் அருகிலா? மிக்க நன்றி. அந்தப் பக்கம் பல முறை சென்றிருக்கிறேன். மறுமுறை மதுரைக்குச் செல்லும் போது அங்கே சென்று பார்க்க வேண்டும்.

நீங்கள் மனப்பாடம் செய்ததைச் சொல்லி இந்த நிகழ்ச்சி உண்மை தான் என்றதற்கு மிக்க மகிழ்ச்சி. 'தமிழிற்கு கதி எனப்படும்...' நன்றாக இருக்கிறது. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி திண்டுக்கல் சர்தார். நான் அடிக்கடி மாவட்ட நூலகக் கட்டடத்திற்கு வந்திருக்கிறேன். அடுத்த முறை செல்லும் போது கண்டுபிடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

மௌலி ஐயா. தமிழ்ச்சங்கம் சாலையைப் பார்த்த நினைவு இருக்கிறது. அது முன்பிருந்த தமிழ்ச்சங்கத்தை ஒட்டி வைத்த பெயர் என்று நினைத்துவிட்டேன். அந்தச் சாலையின் வழி மாவட்ட நூலகத்திற்குச் சென்றிருக்கிறேன். மாவட்ட நூலகத்தில் புத்தகம் எடுத்துவிட்டு அப்படியே பேச்சியம்மன் படித்துறைக்குப் போய் பேச்சியம்மனையும் இராகவேந்திரரையும் தரிசித்து வருவேன். தேவி தியேட்டரும் அந்தப் பக்கம் தானே.

ஏரியாவைப் பற்றி நன்கு சொல்லிவிட்டீர்கள். இந்தக் குறிப்புகளை வைத்துக் கொண்டு அடுத்த முறை செல்லும் போது கண்டுபிடித்துவிடுவேன்.

தமிழ் வளர் மதுரை வாழ்க வாழ்க. :-)

குமரன் (Kumaran) said...

மதுரைக்கு வந்த சோதனை இல்லை யோகன் ஐயா. மதுரைக்கு வந்த நல்வாய்ப்பு. அப்போது திருக்குறள் நூல் கிடைத்திருந்தால் நான்காம் தமிழ்ச்சங்கம் தோன்றும் வாய்ப்பு கிடைத்திருக்காது; அல்லது தாமதப்பட்டிருக்கும். கெட்டதிலிருந்து நல்லதும் நல்லதிலிருந்து கெட்டதும் தோன்றுவது தானே உலக இயல்பு.

Sridhar Venkat said...

மதுரையம்பதி நன்றாக சொல்லியிருக்கிறார். அந்த தமிழ்ச்சங்க சாலையிலே தமிழ்சங்கத்திற்க்க்கு எதிராகத்தான் எங்கள் வீடு இருந்தது. நாங்கள் விற்றுவிட்டாலும் இன்னமும் அந்த வீடு அப்படியே அங்கேதான் இருக்கிறது.

சிறு திருத்தம் -

//இத்தெருவை ஒர்க்ஷாப் ரோடு என்றும் சொல்வார்கள்...
//

இல்லை. இது காலம் காலமாக தமிழ்ச்சங்க சாலை என்றுதான் அழைக்கப்படுகிறது. ஒர்க்ஷாப் ரோடு என்பது இதற்கு இணையாக செல்லும் சாலை. தேவி தியேட்டர் இருக்கும் சாலைதான். பார்திபனின் ஹவுஸ்புல் படத்தில் காட்டப்படும் தியேட்டர் இதுதான்.

//சிம்மக்கல் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறம் செல்லும் சாலை மூன்றாக பிரியும், இடதுகைப் பக்க சாலை வடக்குவெளிவிதி, மத்தியில் இருப்பது தமிழ்ச்சங்கம் ரோடு, வலக்கை ஓரத்தில் செல்வது பேச்சியம்மன் படித்துறை ரோடு....
//

வலது பக்கதில் இருப்பதுதான் ஒர்க்ஷாப் ரோடு. பல ஒர்க்ஷாப்கள் இருந்ததினால் அப்படி அழைக்கப்பட்டது. பேச்சியம்மன் படித்துறை சாலை வடக்குவெளியிலிருந்து குறுக்காக தமிழ்ச்சங்கம் மற்றும் ஒர்க்ஷாப் சாலைகளை வெட்டிக் கொண்டு பேச்சியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை.

//இதன் கிழே சென்று இடதுபுறம் திரும்பினால் வடக்கு வெளிவீதி...சேதுபதி பள்ளி, ஹிக்கின் பாத்தம்ஸ், சக்தி-சிவம் தியேட்டர் எல்லாம்.
//

கீழே சென்று இடதுபுறம் திரும்பினால் கிருஷ்ணராய தெப்பகுளத் தெரு. இங்கே ஒரு ஆஞ்சனேய கோவில் மிகவும் பிரசித்தம். அந்த தெரு வடக்குவெளி வீதியில் குறுக்காக வெட்டுகிறது. வடக்கு வெளி வீதியில் வலது பக்கம் திரும்பினால் சேதுபதி பள்ளி (நான் 7 வருடங்கள் படித்த பள்ளி).

வடக்கு வெளி வீதியில் திரும்பாமல் நேராக சென்றால் இடது பக்கம் ஹேப்பி மேன், பேபி ஸ்வீட் ஸ்டால் வலது பக்கம் ஹிக்கின் பாதம்ஸ், டைடன் ஷோரூம். இன்னும் சற்று முன்னே சென்றால் நாயக்கர் புதுத் தெரு வந்து சேரும் முக்கோண சந்திப்பு. இங்குதான் நேரு ஆல சுந்தர விநாயகர் கோவில் உண்டு.

தமிழ்ச்சங்கத்தில் பல நிகழ்ச்சிகள் நடந்த நினைவு இருக்கிறது. பட்டிமன்றங்கள், நூல் வெளியீட்டு விழா போன்ற பல நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். இங்கு தமிழில் பயில்வதற்க்கு சில டிப்ளமா போன்ற படிப்புகளும் இருக்கின்றன.

திருக்குறள் கிடைக்காமல் பாண்டித்துரை அவர்கள் இதை நிறுவினாரா என்று எங்கும் படித்தது கிடையாது. இந்த மாதிரி கதைகள் பல இருந்திருக்கலாம். தற்போது ஊடகங்களில் அவை சொல்லப்படுவதால் மட்டுமே அவைகளின் நம்பகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

குமரன் (Kumaran) said...

தமிழ்ச்சங்கம் இருக்கும் இடத்தைப் பற்றி இன்னும் தெளிவாகச் சொன்னதற்கு மிக்க நன்றி ஸ்ரீதர் வெங்கட்.

சதங்கா (Sathanga) said...

குமரன்,

//சதங்கா. தமிழ் சங்கத்தைப் பற்றி நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். பார்த்தீர்களா?//

பார்த்தும், தொடர்ந்து படித்துக் கொண்டும் தானிருக்கிறேன். ஒரு நாவலில் இருக்கும் அளவிற்கு மதுரையில் நம்மை வலம் வரச் செய்கிறார்கள் மதுரையம்பதி அவர்களும், ஸ்ரீதர்-வெங்கட் அவர்களும்.

ஸ்ரீதர் அவர்களின் //தற்போது ஊடகங்களில் அவை சொல்லப்படுவதால் மட்டுமே அவைகளின் நம்பகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.//

கருத்தும் யோசிக்க வைக்கிறது.

செல்வன் said...

குமரன்

மதுரையில் இவ்விரு நூல்களும் கிடைக்கவில்லை என்றால் சற்று ஆச்சரியமாக இருக்கிறது.மதுரை நூலகங்களில் கண்டிப்பாக இவ்விரு நூல்களும் இருக்குமே?ஒரு வேளை விலைக்கு கிடைக்கவில்லை என்று சொல்கிறார்களோ என்னவோ?

கோவை புத்தக கடைகளில் கம்பராமாயணம் கிடைக்கிறது என சில மாதங்களுக்கு முன்பு அறிந்தேன். திருக்குறள் பற்றி விவரம் தெரியவில்லை.

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
ஆமாம் இராகவன். தமிழ் வளர் மதுரைன்னு சொல்லலாம். ஆமா. அது வினைத்தொகைன்னு தானே சொல்லுவாங்க. நீங்க உரிச்சொல்னு சொல்றீங்க? எனக்கு இலக்கணம் அவ்வளவா தெரியாது. அதனால நான் சொல்றது தப்பா இருக்கலாம். //

இல்ல இல்ல. நீங்க சொல்றதுதான் சரி. அது வினைத்தொகை. சால உறு தவ நனி கூறு களி - இவைகள்தான் உரிச்சொற்கள்

குமரன் (Kumaran) said...

ஐயா, உலகின் புதிய கடவுளே. உடல் நலம் தேறிவிட்டதா? எப்படி இருக்கிறீர்கள்?

இடுகையையும் பின்னூட்டங்களையும் மீண்டும் படித்துப் பார்த்துவிட்டு இன்னொரு முறை பின்னூட்டம் இடுங்கள். கம்பராமாயணமும் திருக்குறளும் 'இப்போது' மதுரையில் கிடைக்கின்றன. பாண்டித்துரையார் தேடிய போது கிடைக்கவில்லையாம். அது அப்போது. :-)

ரவிசங்கர் said...

//சால உறு தவ நனி கூறு களி - இவைகள்தான் உரிச்சொற்கள்//

இவை மட்டும் உரிச்சொற்கள் இல்லை என்று நினைக்கிறேன். இவை உரிச்சொற்களுக்கான எடுத்துக்காட்டுகள். உரிச்சொல் = adjective என்ற தான் புரிந்து வைத்திருக்கிறேன். பெயர் அல்லது வினையின் பண்பை உரைப்பது உரிச்சொல்..

சிவமுருகன் said...

அண்ணா,

இது ஏழாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் படித்தேன். வள்ளல் பாண்டித்துரை அவர்களை "நான்காம் வேந்தர்", "நான்காம் சங்கம் அமைத்த நல்லவர்" போன்ற புகழுக்கு சொந்தக்காரர்.

மேலும், அப்போது யாரோ ஒருவரால் எழுதப்பட்ட ஒரு சீர்படுத்தப்பட்ட திருக்குறளை அறிந்து(அப்படின்னா என்னன்னு கூட எனக்கு தெரியாது:(), அத்தனை பதிவிட்ட நூல்களையும் விலைக்கு வாங்கி தீயிட்டு கொளுத்தினார் என்றும் அப்பாடத்தில் இருந்தது. இது போன்ற ஆச்சர்யமான தகவல்களும் இவரை பற்றி உண்டு.

//அந்தச் சாலையின் வழி மாவட்ட நூலகத்திற்குச் சென்றிருக்கிறேன். மாவட்ட நூலகத்தில் புத்தகம் எடுத்துவிட்டு அப்படியே பேச்சியம்மன் படித்துறைக்குப் போய் பேச்சியம்மனையும் இராகவேந்திரரையும் தரிசித்து வருவேன். //

எந்த வருஷம்? நானும் 1996-2000 வரை அப்பகுதியில் தான் அடிக்கடி
தெ(தி)ரிவேன்.

//ஏரியாவைப் பற்றி நன்கு சொல்லிவிட்டீர்கள். இந்தக் குறிப்புகளை வைத்துக் கொண்டு அடுத்த முறை செல்லும் போது கண்டுபிடித்துவிடுவேன்.//

அப்பாடம் நடத்திய தமிழாரியரும் இதே தமிழ் சங்கத்தில் பயின்றவர். அப்போதே எனக்கும் தமிழ் சங்கம் பற்றி தெரிய வந்தது. 1996களில் ஓரிரு முறை தமிழ்சங்கத்திற்க்கு சென்றுள்ளேன்.

குமரன் (Kumaran) said...

//உரிச்சொல் = adjective என்ற தான் புரிந்து வைத்திருக்கிறேன். பெயர் அல்லது வினையின் பண்பை உரைப்பது உரிச்சொல்..
//

இரவிசங்கர். இந்த ஆறு சொற்களைத் தான் நான் உரிச்சொற்களாகப் படித்திருக்கிறேன். உங்களின் புரிதலின் படி வேறு சில எடுத்துக்காட்டுகள் சொல்லுங்கள். பெயரின், வினையின் பண்பை உரைப்பது உரிச்சொல் என்ற் இலக்கணம் எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் எனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். நீங்களும் பாட புத்தகத்தில் படித்திருக்கிறீர்களா? அப்ப நம்பலாம்னு தான் எனக்குத் தோணுது சதங்கா. :-)

திருக்குறளைக் கொளுத்தினாரா? அப்ப அதையே தலைப்பா வச்சு இன்னொரு இடுகை போட்டுடலாமா? கட்டாயம் சூடான இடுகைகள்ல வந்துரும். கொளுத்துனா சூடாகாம எப்படி? :-)

1996 அமெரிக்கா வந்தாகிவிட்டது சிவமுருகன். 80களின் பின்பகுதி, 90களின் முன்பகுதியில் மதுரையில் இருந்தேன். அப்போது சென்று கொண்டிருந்தேன்.

ரவிசங்கர் said...

//இந்த ஆறு சொற்களைத் தான் நான் உரிச்சொற்களாகப் படித்திருக்கிறேன். //

வெறும் ஆறு சொற்களுக்காக ஒரு சொல்வகையை உருவாக்கியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? தமிழ்ப் பாடப்புத்தகங்களில் உரிச்சொல்லுக்குப் பரவலாகத் தரும் எடுத்துக்காட்டுகளாகத் தான் இவற்றைப் பார்க்கிறேன். பெயர்ச்சொல் தெரியும். வினைச்சொல் தெரியும். இவற்றைச் சார்ந்து வருவது இடைச்சொல். எடுத்துக்காட்டுக்கு போல என்ற சொல். இந்த மூன்று வகையில் அடங்காத சொற்கள் பெரும்பாலும் வினை அல்லது பெயரின் பண்பை விளம்பும் சொற்கள். இவையே உரிச்சொற்கள். எடுத்துக்காட்டுக்கு - நல்ல பையன்; வேமாகச் செல். இவற்றில் நல்ல, வேகமாக முதலிய சொற்கள் உரிச்சொற்கள். ஆங்கிலத்தில் good boy, go fast என்று மொழிபெயர்க்கும்போது good, fast ஆகியவற்றை adjective, adverb என்று எளிதாக இனம் காண்கிறோம் அல்லவா? adjective, adverb இரண்டையும் தமிழில் உரிச்சொல் என்று ஒரு வகையில் அடக்கலாம்.

என்னுடைய புரிதல் தவறென்றால் யாராவது சுட்டிக்காட்டவும்

ஜீவி said...

அக்கரை எடுத்துக்கொண்டு விளக்கம்
கொடுத்த நண்பர் குமரனுக்கு நன்றி.
அப்பாடி.. தொடர் பின்னூட்டங்களாக
நண்பர்கள், மதுரையின் ரோடு மேப்பையே எழுத்தில் கொண்டு வந்து
விட்டார்களே?..
சிம்மக்கல்லுக்கு நேரே--காவேரி படித்துரைப்பக்கம், அங்கிருக்கும்
ஆஞ்சநேயர் கோயில் அருகில் ஆதிமூலம் பிள்ளைத்தெரு என்று ஒன்று இருந்தது. அந்தத் தெருவிலிருந்த எலிமெண்டரி ஸ்கூலில் தான் நான் என் பாலபாடத்தை ஆரம்பித்தேன். பின்
மொட்டைக் கோபுரத்திற்கு எதிரிலிருந்த
அன்னக்குழிமண்டபம் ஸ்கூல். இந்த
தெருக்கள், பள்ளிகள் எல்லாம் இன்னும் இருக்கின்றனவா?..யாராவது சொன்னால் நல்லது.

வெற்றி said...

குமரன்,
பதிவின் தலைப்பைப் பார்த்ததும் ஒருகணம் குழம்பிவிட்டேன்.

என்னடா இது, தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மண்ணில் குறள் இல்லையா என்று!

மிகவும் சுவாரசியமான தகவல்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

தஞ்சாவூரான் said...

மதுரை... இன்னும் தமிழ் 'வளர்க்கும்' இடம்தான்! அதில் சந்தேகம் இல்லை!

இந்த இடத்தில்.... எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு ... 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... நீ இருக்கையிலே எனக்கு பெருஞ்சோதனை' - t.r.,mahalingam பாடியது!

குமரன் (Kumaran) said...

நன்றி தஞ்சாவூரரே.

நல்ல பாடல் நீங்கள் சொன்னது. வசை வருமோ பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே..... நல்ல பாடல். உச்சரிப்பும் வித்தியாசமாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

விளக்கத்திற்கு நன்றி இரவிசங்கர். நான் இலக்கணத்தில் கொஞ்சம் மக்கு. அதனால் இதே கேள்வியை இன்னொரு இடத்தில் மீண்டும் கேட்பதற்கு வாய்ப்புண்டு. :-)

குமரன் (Kumaran) said...

வெற்றி,

தலைப்பு தானாக அப்படி அமைந்தது என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? :-) அப்படி வேண்டுமென்றே தான் வைத்தேன். 'கண்டேன் சீதையை' என்று அனுமன் சொல்வதாகக் கம்பன் சொல்கிறாரே! அது போல் சொல்லவந்ததை கவன ஈர்ப்பு செய்வது போல் தலைப்பிட்டால் நல்லதல்லவா? எல்லா இடுகைகளிலும் அப்படி செய்ய முடிவதில்லை.

வாசன் said...

வணக்கம். சுவையான கருத்தாடல்களுக்கு நன்றி.

"உரிச்சொல்" என்பது பற்றி சிறு விளக்கம்.

நன்றி: அர.கமல தியாகராஜனின் "தமிழ் இலக்கணக் கையேடு"

உரிச்சொல்: தனித்து இயங்கும் தன்மை இல்லாமல் பெயர்களையோ வினைகளையோ அடுத்து நின்று அவற்றின் பண்பைக் காட்டும் சொற்கள் உரிச் சொற்கள் ஆகும்.

வகை

# 1. ஒரு பண்பு தழுவிய பல உரிச்சொல்.

# 2. பல பண்பு தழுவிய ஓர் உரிச்சொல்.

எ.கா # 1 க்கு

சாலச் சிறந்தது
உறு தவம்
தவச் சிறிதே


நனி பேதை
அன்பு கூர் மனம்
கழி பேருவகை

மேற்காணும் சொற்களில் உள்ள சால,உறு,தவ,நனி,கூர்,கழி என்பன 'மிகுதிப்' பொருள் ஒன்றை மட்டும் உணர்த்தும் பல உரிச்சொற்கள் ஆகும்.

எ.கா # 2 க்கு

கடிநகர் - காவலை உடைய நகரம்
கடிவேல் - கூர்மையான வேல்
கடிவிடுதும் - விரைவாக விடுவோம்
கடிமார்பன் - விளக்கமான மார்பை உடையவன்

இந்த சான்றுகளில் 'கடி' என்னும் உரிச்சொல்
காப்பு,கூர்மை,விரைவு,விளக்கம் முதலிய பொருள்களை உணர்த்துகிறது. எனவே இவை பல பண்பு தழுவிய ஓர் உரிச்சொற்களாகும்.

கடி என்னும் உரிச் சொல் காப்பு,கூர்மை,மணம்,விளக்கம்,அச்சம்,சிறப்பு,விரைவு,மிகுதி,புதுமை,ஒலி,
நீக்கம்,மன்றல்,காரம் ஆகிய பல பொருள்களில் அமையும்.

குமரன் (Kumaran) said...

உரிச்சொற்களுக்கு விளக்கம் சொன்னதற்கு மிக்க நன்றி வாசன்.