Friday, July 06, 2007

கடம்பம் - 1

கடம்ப மரத்தைப் பற்றி இலக்கியத்தில் எங்கெங்கு வருகிறது என்று எடுத்துச் சொல்ல முடியுமா என்று வெற்றி முன்பு ஒரு முறை கேட்டிருந்தார். என்னால் முடியவில்லை, நேரம் கிடைக்கவில்லை என்று இராகவனிடம் உங்களால் முடியுமா என்று கேட்டேன். அதே நேரத்தில் இராகவன் பதிவிலும் வெற்றி அதே கோரிக்கையை வைத்தார். இராகவன் பேச்சோடு பேச்சாக அந்த வேலையை என்னிடம் தள்ளிவிட்டுவிட்டார். :-) சரி. இனி மேலும் வெற்றியைக் காக்க வைக்கக் கூடாது என்று கூகிளாண்டவரின் துணையோடு இந்தத் தொடரைத் தொடங்குகிறேன். கூகிளாண்டவர் யூனிகோடில் இருக்கும் எடுத்துக்காட்டுகளை மட்டும் தருகிறார். அவையே வெற்றியின் ஆவலைத் தணிக்கப் போதும் என்று நினைக்கிறேன்.

கடம்ப மரம் என்றதுமே முருகன் நினைவு தான் வரும். கடம்ப மாலை, கடப்ப மாலை அணிந்திருப்பவன் முருகன் என்பது பழைய இலக்கியங்களிலும் அண்மைக்கால இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. கடம்ப மரம் அம்பிகையோடும் தொடர்புடையது என்பது அபிராமி அந்தாதி படித்தவருக்குத் தெரியும். அதில் பல இடங்களில் அன்னை கடம்பு அணிந்தவளாகப் புகழப்படுகிறாள். நான்மாடக்கூடலாம் மதுரையம்பதிக்கு இருக்கும் பல பெயர்களில் கடம்பவனம் என்பதும் ஒரு பெயர். அந்தப் பெயர் கொண்டு மீனாட்சி அம்மையைப் போற்றும் பாடல்களும் இருக்கின்றன.

இவை எல்லாம் போக பழைய இலக்கியங்களில் வேறு சில இடங்களிலும் கடம்பு, கடம்ப மரம், கடப்ப மரம், கடப்ப மாலை போன்றவை மற்றவருடனும் தொடர்பு கொண்டு வருவது போல் தோன்றுகிறது. அவை பழந்தமிழ் இலக்கியம் என்பதால் கொஞ்சம் பொறுமையுடன் அவற்றின் பொருளைப் பார்க்கவேண்டும். அதனால் அவற்றைப் பற்றி கடைசியில் எழுதுகிறேன்.

***

திரு. முத்துக் கறுப்பணன் எழுதிய 'பழனியாண்டவன் காவடிச் சிந்து' என்ற நூலினை இந்த வலைப்பக்கத்தில் பார்க்கலாம். இதில் கந்தனைக் கடம்பன் என்று அழைக்கிறார். கந்தா, கடம்பா, கதிர்வேலா என்று அவனை வணங்குவது பொது மக்கள் நடுவிலும் பெரும்பான்மையாக இருக்கிறதே.

படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மானப் புகழ் குமரன்


பாடல் வரிகளுக்குப் பொருள் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். மிக எளிதான வரிகள். மானப் புகழ் என்றால் பெரும் புகழ்.

***

ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தர் அலங்காரம், வேல் - மயில் - சேவல் விருத்தம் போன்ற நூற்களிலும் பல இடங்களில் கந்தனைக் கடம்பனைப் பாடியிருக்கிறார். அவற்றை இந்த வலைப்பக்கத்தில் பார்க்கலாம்.

(கந்தர் அலங்காரம் - 19ம் பாடல்)

சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்
மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மௌனத்தையுற்று
நின்னை உணர்ந்து உணர எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு
என்னை மறந்திருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே

பொன்னால் ஆகிய (சொர்ண - சொன்ன) கிரௌஞ்ச மலையை ஊடுருவித் துளைத்த சிறந்த வேல் மன்னவனே! கடம்ப மலர் மாலை அணிந்த மார்பனே! சொல், செயல், எண்ணம் என்ற மூன்று விதங்களிலும் மௌனத்தை உற்று உன்னை நன்கு உணர்ந்து கொண்டேன். அதனால் எல்லாம் ஒடுங்கி நிர்க்குண நிலை பூண்டு 'நான்' என்ற எண்ணம் மறந்திருந்தேன். அதனால் இந்த உடம்பு இறந்தது போல் ஆயிற்று - இனிப் பிறவா நிலை கிட்டிற்று.

அருணகிரிநாதர் கடம்பனைப் போற்றும் மற்ற பாடல்களை அடுத்த இடுகையில் பார்ப்போம்.

16 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அப்படியே கடம்ப மரம், கடம்ப மலர் படங்களும் தாருங்கள் குமரன்!

மதுரை மீனாட்சி ஆலயத்தின் தல விருட்சமும் கடம்பு தான் என்று எங்கோ படித்த நினைவு!

முருகப் பெருமான் விரும்பி அணியும் மலர், தற்காலங்களில் கோவிலில் முருகனுக்குச் சார்த்தப்படுவது போல் தெரியவில்லையே! ஏனோ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
நமது வேண்டுகோளும் அதே!
இவற்றின் படங்களைப் போடமுடியுமா?
இதுதான் எனத் தெரியாமல் கண்டுள்ளேனோ தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். நீங்கள் கேட்டபின் தேடி வைத்திருக்கிறேன். அடுத்த இடுகைகளில் அவற்றையும் இடுகிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தலமரம் கடம்பு தான்; மதுரைக்கு கடம்பாடவி (கடம்பங்காடு) என்ற பெயரும் உண்டு.

தற்காலத்திலும் முருகனுக்கு இந்தப் பூ சாத்தப்படுவதாக ஒரு வலைப்பதிவில் இப்போது தான் படித்தேன் இரவிசங்கர். பழனியில் ஒவ்வொரு வருடமும் கோடையில் இந்த மலர் பூப்பதாகவும் அப்போது அதற்காக ஒரு தனி விழாவே அங்கு நடைபெறுவதாகவும் அந்த வலைப்பக்கம் தெரிவித்தது.

குமரன் (Kumaran) said...

படங்களை அடுத்த இடுகையில் இடுகிறேன் யோகன் ஐயா.

குமரன் (Kumaran) said...

வலைப்பக்கங்களின் சுட்டிகளை இட மறந்துவிட்டிருந்தேன். இப்போது தான் கவனித்து அவற்றைக் கொடுத்திருக்கிறேன்.

சிவமுருகன் said...

வணக்கம் அண்ணா, பயணம், வீட்டு விஷேங்கள் நன்றாக முடிந்திருக்கும் என்று அறிந்து மகிழ்கிறேன்.

சென்னை மதுரை மற்றும் பல இடங்களில் சென்று வந்துள்ளீர்கள் என்று அறிந்தேன். தங்களது பயணக் கட்டுரை கண்டு படித்து மகிழ காத்துள்ளேன்.

//மதுரை மீனாட்சி ஆலயத்தின் தல விருட்சமும் கடம்பு தான் என்று எங்கோ படித்த நினைவு!//

கடம்ப மரம் பற்றி மனற்கேணியில் ஒரு முறை இட்டுள்ளேன்.

வெற்றி said...

குமரன்,
முதலில் இப் பதிவுக்கு கோடி நன்றிகள். மிகவும் அருமையான பதிவு. இப் பதிவைப் பிரதி எடுத்து வைத்திருக்கிறேன்.

நான் முன்னர் ஒரு பதிவில் கூறியிருந்தது போல், ஈழத்தில் எனது ஊரில் உள்ள முருகன் ஆலயத்தில் மட்டும் தான் கடம்பமரம் உள்ளது.
அக் கடம்பமரத்தில் வேல் இருக்கும். இக் கடம்பமரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். வாரியார் சுவாமிகள் ஈழத்திற்கு வந்தால் இந்த ஆலயத்தைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம்.
எனது ஊரில் பலரின் பெயரிலேயே இந்தக் கடம்மைச் சேர்த்துள்ளார்கள் என்றால் பாருங்களேன்.
எடுத்துக்காட்டுக்கள்:-
கடம்பகுமார்
கடம்பரத்தினம்
கடம்பராணி
கடம்பன்

இப் பெயர்கள் எனது ஊரில் உள்ள பலரின் பெயர்கள்.

/* திரு. முத்துக் கறுப்பணன் எழுதிய 'பழனியாண்டவன் காவடிச் சிந்து' என்ற நூலினை இந்த வலைப்பக்கத்தில் பார்க்கலாம். */
சுட்டிக்கு மிக்க நன்றி.

/* அருணகிரிநாதர் கடம்பனைப் போற்றும் மற்ற பாடல்களை அடுத்த இடுகையில் பார்ப்போம். */

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் இப் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் குமரன்.
உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ தெரியாது.

வெற்றி said...

சிவமுருகன்,

/* கடம்ப மரம் பற்றி மனற்கேணியில் ஒரு முறை இட்டுள்ளேன் */

ஆட்சேபனை இல்லையெனின், தயவு செய்து அந்தப் பதிவின் இணையத்தளச் சுட்டியைத் தரமுடியுமா?

குமரன் (Kumaran) said...

வணக்கம் சிவமுருகன். பயணம் நன்கு அமைந்தது. வீட்டுச்சிறப்புகள் நன்கு நடைபெற்றது. பயணக்கட்டுரை எழுதுவது எனக்கு அவ்வளவாக வராத ஒன்று. இரண்டு இடுகைகள் மட்டும் எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

உங்கள் பதிவில் மதுரை அம்மன் கோவிலின் தல மரம் பற்றி படித்த நினைவு இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

ஆமாம் வெற்றி. உங்கள் ஊர்க்கோவிலைப் பற்றி முன்பு சொல்லியிருக்கிறீர்கள். மதுரை கடம்பவனம் என்று பெயர் பெற்றது. அதனால் அங்கும் கடம்பமரம் இருக்கும் என்று நினைக்கிறேன். பழனியில் இருப்பதாக வலையில் படித்தேன். படத்தையும் அடுத்த இடுகையில் இட்டிருக்கிறேன்.

தங்கள் ஊர்க்கடம்பமரத்திற்கு ஆயிரம் வருடப் பெருமை இருக்கிறது என்று நினைக்கிறேன். அது பெரும் சிறப்பே.

கைம்மாறு என்றெல்லாம் பெரிய சொற்கள் வேண்டாம். நீங்கள் கேட்டதால் கூகிளில் தேடி இடுகிறேன். அவ்வளவே. இதில் பெரிய ஆராய்ச்சி எல்லாம் இல்லை.

G.Ragavan said...

"தார் கடம்பத்தார் எம் கடவுள்" ஆகா...ஆகா...சொல்லச் சொல்ல இனிக்குதடா. நல்லதொரு தொடர். தொடருங்கள்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
முருகப் பெருமான் விரும்பி அணியும் மலர், தற்காலங்களில் கோவிலில் முருகனுக்குச் சார்த்தப்படுவது போல் தெரியவில்லையே! ஏனோ? //

:) தெரியலையே ரவி. முருகனுக்குக் கெடா வெட்டுனதாக் கூடத்தான் இலக்கியம் சொல்லுது. வெட்டுறோமா என்ன!

குமரன் (Kumaran) said...

தார் கடம்பத்தாரைப் பற்றி சொல்லாமல் கடம்பைப் பற்றி சொல்ல முடியுமா இராகவன்?! கடம்பத்தாரை வணங்கிவிட்டே அவள் அன்னை வணங்குகிறேன். அப்புறம் மற்றவர்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

13ஐத் தாண்டுவோம்

vijay said...

கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள்ளது கடம்பூர் என்னும் தளம்,பொன்னியின் செல்வன் வரலாற்று நிகழ் களம இக் கடம்பூர். மேலும் இக்கோயிலின் தலமரம் கடம்பு. அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். திருநாவுக்கரசர் தேவாரத்தில் "நன்கடம்பனை பெற்றவள் பங்கினன் தென்கடம்பை திருக்கரகோயிலான் " என பாடியுள்ளார் pl visit kadamburtemple.blogspot.com

குமரன் (Kumaran) said...

Thanks Vijay.