Friday, July 27, 2007

இல்லாமையிலிருந்து பிறவி தோன்றுமா?

பிறவி எங்கிருந்து வந்தது ? இல்லாமையிலிருந்து தானே பிறவியும் அதன் கர்ம வினையான பிறவிகளும் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன.

பிறவி இல்லாமை என்ற ஒரு நிலை இருந்தால் அது ஏன் முன்பு போலவே மீண்டும் பிறக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

கேள்வி புரியவில்லையா ? முக்தியில் இருந்து தானே முதல் பிறவி ஏற்பட்டு இருக்க வேண்டும் ?

இல்லாதிலிருந்து பிறந்து இல்லாதது (முக்தி) அடைந்தால் மீண்டும் பிறவாமை என்பது சாத்தியமே இல்லை என்கிறீர்களா ?

நான் பலரையும் கேட்டுப் பார்த்தேன்...உதட்டை பிதுக்குகிறார்கள்.

எனக்கென்னமோ பிறவு அறுப்பது என்பது சாத்தியமே இல்லை ... அது ஒரு கோட்பாடு மட்டுமே எனத் தெரிகிறது...

***

இப்படி ஒரு கேள்வியைக் கோவி.கண்ணன் 'அபிராமி பட்டர்' பதிவில் கேட்டிருந்தார். இதற்குப் பதில் சொல்வதென்றால் நெடிய பின்னூட்டம் ஆகிவிடும் என்பதால் இடுகையாக இடுகிறேன்.

***

'தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடப்பா' என்று கந்த குரு கவசத்தில் ஒரு வரி வரும். இராமகிருஷ்ண பரமஹம்சரும் ஒரு முறை அவரிடம் வந்து உலகின் தோற்றத்தைப் பற்றிக் கேட்ட ஒரு பண்டிதரிடம் 'மரத்தின் பழத்தைப் பறித்துச் சுவைக்காமல் இந்த மரத்தில் எத்தனை இலைகள், எத்தனை காம்புகள், எத்தனை பிஞ்சுகள் என்று கணக்கெடுக்கும் வீண் வேலை எதற்கு?' என்று பதில் சொன்னார் என்றும் படித்திருக்கிறேன். ஆனாலும் தத்துவம் என்பது ஒரு போதை போல் தள்ளாட வைக்கிறது. புரிகிறதோ இல்லையோ படிக்கவும் பேசவும் எழுதவும் 'தத்துவம்' என்ற துறை ஒரு நல்ல ஊக்கத்தைத் தருகிறது. தத்துவத்தைப் பற்றி நீட்டி முழக்காமல் கோவி.கண்ணனின் கேள்விக்கு வேண்டிய அளவு மட்டும் பேசி முடிக்கலாம் என்று இருக்கிறேன். அதனால் புரிந்தும் புரியாமலும் இருப்பது போல் தோன்றலாம். பாற்கடலை நக்கிக் குடித்துத் தீர்க்க நினைத்தப் பூனையை நினைத்துக் கொள்ளவும் (இது கம்பனின் உவமை). அந்தப் பூனையே அடியேன்.

***

இல்லாமை என்ற ஒன்றை கோவி.கண்ணன் சொல்கிறார். முக்தி, மோக்ஷம், வீடுபேறு போன்றவை குறிக்கும் ஒரு நிலையை இங்கே இல்லாமை என்ற சொல்லால் சொல்கிறார். அந்த நிலை 'எதுவுமற்ற நிலை' என்பது பௌத்தமும் அத்வைதமும் சொல்லும் நிலை. மற்ற இந்தியத் தத்துவங்கள் அந்த நிலையை இல்லாமை என்று சொல்லவில்லை. கோவி.கண்ணனுக்கு பௌத்தத் தத்துவம் பிடிக்கும் என்று தெரியும்; அதனால் அவர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்று புரிந்து கொள்கிறேன்.

***

இந்தியத் தத்துவங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு கோவி.கண்ணனின் கேள்விக்குப் பதில் தேடலாம். ஆனால் அவை நிறைய இருக்கின்றன. அதனால் பௌத்தம், அத்வைதம், சைவ சிந்தாந்தம், விசிஷ்டாத்வைதம் (தமிழக வைணவம்), த்வைதம் - இந்தத் தத்துவங்களை மட்டும் இங்கே எடுக்கிறேன் - எனக்கு இவற்றில் மட்டுமே கொஞ்சம் பழக்கம் உண்டு. சமணம், காஷ்மீரச் சைவம், லிங்காயதம் (வீர சைவம்), நிம்பார்க்கரின் வைணவம், துளசிதாசரின் வைணவம், சைதன்யரின் கௌட வைணவம் (அசிந்த்ய பேத-அபேதம்), பாஸ்கரம், சைவாத்வைதம், சார்வாகம் போன்ற பல தத்துவங்களைப் பற்றிப் பேசவில்லை.

***

பௌத்தம்:

முதலும் முடிவும் ஆன நிலை சூன்யம் - எதுவும் இல்லாதது - இல்லாமை. இங்கே நான், எனது, உலகம், இன்பம், துன்பம் என்று தோன்றி நிற்பவை எல்லாமே கணப்பொழுதில் தோன்றி மறைபவை. எதுவுமே உண்மையில்லை. இது பௌத்தத் தத்துவத்தின் சுருக்கம்.

இந்தத் தத்துவத்தின் படி - ஏற்படும் பிறவித்தொடரும் அந்தத் தொடரைத் பிணைத்து வைக்கும் வினைப்பயன்களும் இல்லாமையிலிருந்து ஏதோ ஒரு நொடியில் தோன்றியது. தோன்றிய காரணம் - தெரியாது; தெரிந்து கொள்ளவும் முடியாது. அந்த பிறவித் தொடரைப் பிணைக்கும் வினைப்பயன்களைத் தொலைத்தவுடன், பிணை அறுந்து, பிறவித் தொடர் முறிந்து இல்லாமையில் சேர்ந்துவிடுகிறோம். இது நிர்வாணம் என்றும் சொல்லப்படும்.

இதோடு பௌத்தம் நின்றுவிடுகிறது. இங்கே அடுத்த நிலையை எடுத்து, அப்படி இல்லாமையில் சேர்ந்த பின் மீண்டும் அந்த இல்லாமையிலிருந்து பிறவி ஏற்படலாம் அல்லவா என்ற கேள்வியைக் கேட்டால் இந்தத் தத்துவப்படி - ஆமாம் - என்பதே பதில்.

***

அத்வைதம்:

பெயர், உருவம், குணம் என்று ஒன்றுமே இல்லாத இறைச்சக்தி ஒன்று மட்டுமே உண்டு. இங்கே நான், எனது, உலகம், இன்பம், துன்பம் என்று தோன்றும் எல்லாமே அந்த இறைச்சக்தியே. வேறொன்றும் இல்லை. இரண்டாவதாக மற்றொன்று இல்லை என்றதால் இந்தத் தத்துவத்திற்கு அத்வைதம் - இரண்டில்லாதது என்று பெயர். உண்மையான அந்த இறைச்சக்தியைத் தவிர்த்து மற்றவை எல்லாம் பொய். பழுதையில் தோன்றும் பாம்பு போல், சிப்பியில் தோன்றும் வெள்ளியைப் போல், கானலில் தோன்றும் நீரைப் போல் இவை எல்லாம் இறைவனில் தோன்றும் பொய்த் தோற்றங்கள்.

இந்தப் பொய்த் தோற்றங்கள் ஏதோ ஒரு நொடியில் எழுந்தது - எழுந்த காரணம் தெரியாது; தெரிந்து கொள்ளவும் இயலாது. பொய்த் தோற்றங்கள் தோன்றியவுடன் பிறவியும் பிறவித்தொடரும் அந்தத் தொடரைப் பிணைக்கும் வினைப்பயன்களும் தோன்றின. உண்மையை உணர்ந்த ஞானத்தால் இந்தப் பொய்த் தோற்றங்கள் தொலையும்; அப்போது அந்த ஞானத்தீயில் கரும வினைப்பயன்கள் தூசாகும்; உண்மை நிலையான இறை நிலை தோன்றும்; அதற்கு ஜீவன் முக்தி, பிரம்ம நிர்வாணம் என்றும் பெயர்.

இங்கே இல்லாமை என்று சொல்லவில்லை. பௌத்தத்தில் 'ஒன்றுமே இல்லை' என்ற சூனிய வாதம் இருக்கும் போது இங்கே' இறைச்சக்தி ஒன்று உண்டு' என்ற ஏகத்துவ வாதம் இருக்கிறது. ஆனால் 'உருவம், பெயர், குணம் இல்லாமை' என்ற நிலையே இறை நிலை; அதுவே முக்தி என்று சொல்கிறது. அதனால் இங்கேயும் இல்லாமை பேசப்பட்டதாகச் சொல்லலாம்.

இந்த இல்லாமையை அடைந்த பின் மீண்டும் அந்த இல்லாமையிலிருந்து பிறவி தோன்றாமல் போகுமா? என்ற கேள்வி கேட்டால், இந்தத் தத்துவத்தில் அதற்கு விடை சொல்லவில்லை - பிறவி எப்படி தோன்றியது என்பதற்கு விடை இல்லாததால் 'ஆமாம்', 'இல்லை' என்ற பதில் சொல்ல முடியாது. உதட்டைப் பிதுக்கவேண்டியது தான்.

***

சைவ சிந்தாந்தம்:

பசு (உயிர்), பதி (இறைவன்), பாசம் (கருமவினை, உலகங்கள்) என்று மூன்றுமே உண்மை. பசுவும் பாசமும் பதிக்கு அடங்கியவை. பதியின்றிப் பசுவும் பாசமும் இருக்க இயலாது. பசு பதியுடன் சேர்ந்து இருக்கும் நிலை முக்தி. பசு பாசத்துடன் சேர்ந்து இருக்கும் நிலை பிறவிப் பெருங்கடல்.

பதியின் இச்சைப்படி பசு பாசத்துடன் இணைந்து பிறவி எடுத்தது. பதியை மறந்தது. கரும வினைப் பிணையினால் பிறவித் தொடர் ஏற்பட்டது. இறையருளால் அவனே குருவாக வந்து அருளும் போது பதியுடன் சேர்ந்து இருப்பதே பசுவின் இயற்கை என்று உணர்ந்த பசுவின் கருமவினைப்பயன்கள் பதியின் அருளால் கருகி பதியுடன் பசு சேர்கிறது.

இங்கே இல்லாமை என்ற நிலையே இல்லை. என்றும் உள்ளவன் ஈசன். அவனுடன் உயிர் சேர்ந்து இருப்பது மரணமிலாப் பெருநிலை. அந்த நிலையை அடைந்த பின் மீண்டும் பிறவி ஏற்படுமா என்றால் 'பதியின் இச்சைப்படி ஏற்படலாம்' என்பதே பதில்.

***

விசிஷ்டாத்வைதம்:

அறிவுள்ளது (உயிர்), அறிவில்லாதது (உலகம்), இறை என்று மூன்றுமே உண்மை. உயிரும் உலகமும் இறையின் உடலாக இருக்கின்றன. உயிர் இன்றி உடல் எப்படி இயங்க முடியாதோ அது போல் இறையின்றி உயிரும் உலகமும் இயங்காது. உயிருக்கு அடங்கியது உடல்; அது போல் இறைக்கு அடங்கியவை உயிரும் உலகமும். உயிரும் உலகமும் இறையிலே இருப்பதால் 'ஒன்றே உள்ளது' என்று சொல்லும் போது 'உயிரையும் உலகையும் உடலாகக் - விசிஷ்டமாகக் - கொண்ட இறை ஒன்றே உள்ளது' என்று பொருள். அதனால் இதற்கு 'விசிஷ்ட அத்வைதம்' என்று பெயர். உண்மைப் பொருள் ஒன்று என்றாலும் சரியே; மூன்று என்றாலும் சரியே.

இறையின் இச்சைப்படி உயிரும் உலகமும் இணைந்தது. பிறவியும் வினைப்பயன்களும் பிறவித் தொடரும் ஏற்பட்டது. இறையருளால் இறைவனுக்கு அடங்கி இருப்பதே தன் இயற்கை நிலை என்று உயிர் உணர்ந்து அவனை அன்புடன் தொழும் போது அவன் அருளால் பிறவித் தொடர் நீங்கி அவனுடன் இணைகிறது. இணைகிறது என்றால் உப்பு கடலுள் கரைந்து காணாமல் போவது போல் இல்லை. தனி உயிராக அந்த நிலையிலும் இறைவனுடன் இணைந்து இருக்கிறது (சைவ சிந்தாந்தத்திலும் அப்படியே).

இங்கேயும் இல்லாமை என்ற நிலையே இல்லை. இறைவனுடன் உயிர் இணைந்து நிற்பதே முக்தி. அந்நிலையை அடைந்த பின் பிறவி ஏற்படுமா என்றால் 'இறைவனின் திருவுள்ளத்தின் படி ஏற்படலாம்' என்பதே பதில்.

***

த்வைதம்:

அறிவுள்ளது, அறிவில்லாதது, இறைவன் என்ற மூன்றுமே உண்மை. அறிவுள்ளவைகளிலேயே பல வகை உண்டு. அறிவில்லாதவைகளிலேயே பல வகை உண்டு. இறைவன் ஒருவனே. இவற்றில் எந்த இரண்டை எடுத்துக் கொண்டாலும் அவை நடுவே பல வேறுபாடுகளைக் காணலாம். இறைவனுக்கும் உயிருக்கும் வேறுபாடுகள் உண்டு; இறைவன் - உலகம், உலகம் - உயிர், ஒரு உயிர் - மற்றொரு உயிர், ஒரு அறிவில்லாத பொருள் - மற்றொரு அறிவில்லாத பொருள் - இப்படி எந்த இரட்டையை எடுத்தாலும் அவை நடுவே வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகளைப் பேசுவதால் இந்தத் தத்துவத்திற்கு த்வைதம் - இரண்டைப் பேசுவது என்று பெயர்.

இறைவன் மேலானவன். எல்லாவற்றையும் உடையவன். எல்லாமே அவனுக்கு உடைமை; அவனுக்கு அடங்கியவை. என்றுமே அவை இறைவனுடன் கூடி நிற்க முடியாது. அவனுடைய இச்சைப்படி எல்லாம் நிகழ்கிறது. அவனுடைய இச்சைப்படி உயிரின் பிறப்பு, வினைப்பயன், பிறவித்தொடர் தோன்றுகின்றன. அவனின் இச்சைப்படி அவனிடம் பக்தி ஏற்படுகிறது. அவனுடைய இச்சைப்படி அந்தப் பக்தியின் பயனாக பிறவித்தொடர் அறுகிறது.

இங்கும் இல்லாமை இல்லை. அப்படி அறுந்த பிறவித்தொடர் மீண்டும் தோன்றுமா என்ற கேள்வி எழுந்தால் 'அவனுடைய இச்சை அதுவானால் தோன்றும்' என்பதே விடை.

***

பிறவி எப்படி முதலில் வந்தது, வினைப்பயன் எப்படி முதலில் வந்தது என்ற கேள்வியை நம் தத்துவங்கள் ஆராயவில்லை. பிறவியை எப்படி அறுப்பது, வினைப்பயனை எப்படி நீக்குவது, வினைப்பயனில் எத்தனை வகை, முக்தி நிலை என்றால் என்ன, போன்றவைகளையே அவை அதிகம் பேசுகின்றன. அதனால் கோவி.கண்ணன் கேட்டது போல் ஒரு கேள்வி எழும் போது முதலில் உதட்டைப் பிதுக்குவதே பதிலாக அமைகிறது. நானும் அதனையே செய்தேன். செய்யும் போதே தோன்றிய பதிலை இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தத் தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவன் இல்லை அடியேன். அரைகுறை அறிவு அபாயம் என்பார்கள். என் அரைகுறை அறிவு இந்த இடுகையில் நன்கு தென்படும். குறை பொறுத்தருளுங்கள்.

36 comments:

கோவி.கண்ணன் said...

குமரன்,

சிறப்பான விளக்கம்...நன்றாக இருந்தது.

என் புரிதலையும், கேள்வி எழுந்தற்கான எனது புரிதல்களை சொல்கிறேன்

**************

நிர்வாணம் பிரம்மம் - இரண்டுக்கும் ஒரே ஒரு வேறுபாட்டை சொல்கிறார்கள்.
நிர்வாணம் எதுவுமற்றது.... பிரம்மம் எல்லாமுமாக இருப்பது அல்லது எங்கும் நிறைந்திருப்பது.

நிர்வாணம், பிரம்மம் எதுவாக இருந்தாலும் அதை அடைந்தவர்கள் அதுவாகவே ஆகிபோவதாக சொல்லுவதால் என்னைப் பொருத்து இரண்டு தத்துவங்களும் ஒன்று போல் தான் தோன்றுகின்றன.

பிறவி என்பது அசைவு நிலையாகவும், பிறவியற்ற அல்லது பிரம்மம் நிலையென்பது அசைவற்ற நிலையாகவும் தெரிகிறது.

அமைதியான கடல் அசைவிற்கு தூண்டப்பட்டு அலை ஏற்படுவது போல் அமிழ்ந்திருக்கும் 'ஆன்மா' தூண்டப்படுகிறது...பிறவி ஏற்படுகிறது...அதை தூண்டுவது 'இறை' என்ற சக்தி என்று சொல்லுவதை விட 'காலம்' (டைம் சைக்கிள்) என்று சொல்ல எனக்கு பிடிக்கும்.

அதாவது சுழற்சி என்று சொல்லலாம். எல்லையற்ற நிகழ்வு ஒன்று எல்லைக்குள் வரவேண்டுமானால் காலம் அங்கு பங்களிக்கிறது. மழை நீர் - நீராவி - மேகம்...மீண்டும் மழைநீர் - இது ஒரு சுழற்சி இதில் இயற்பியல் விதியுடன் காலமும் இணைந்து சுழற்சியை ஏற்படுத்துக்கிறது. மாற்றம் எனப்படுவது ஒன்று மற்றொண்டுடன் சேரும் போது தண்மை மாறாமல் பிரிதொன்றாக மாறிப்போவதே மாற்றம் ...இப்படி பட்ட தொடர் மாற்றம் நிகழும் போது முடிவில் முதல் நிலையை அது தானாகவே எட்டிவிடும் ( நீர் - மேகம்)

அசைவற்ற நிலையில் இருக்கும் போது காலம் (Time) உணரப்படாது...காலம் உணரப்பட அசைவு இருக்க வேண்டும். அசைவற்ற நிலையோ, அசையும் நிலையோ எதுவாக இருந்தாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அந்த நிலை. அசைவு அசைவற்ற தன்மை மாறி மாறி நடக்கின்றன. அசைவின் போது பிறவிகள் ஏற்படுகின்றன. அசைவற்ற தன்மை (முக்தி)யில் பிறவி அற்ற தன்மையாக சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.

இயற்கையில் கால சுழற்சியை பார்க்கிறோம். 365 நாட்கள் என ஒரு கால எல்லைக்குள் பூமி சுற்றுகிறது...சூரியன் ஒரு கால எல்லைக்குள் தம் கோள்களுடன் சேர்ந்தே பால்வெளி திரளை சுற்றிவருகிறது. தோற்றம் என்பது உண்மையானல் மறைவு என்பதும் உண்மையே...நாம் வாழும் பூமி தோன்றியதென்றால்...அதன் மறைவும் நிச்சயம். தோற்றமும் மறைவும் பிரம்பஞ்சத்துகே உண்டு. தோன்றுவதற்கு என்ன காரணம் இருந்ததோ அல்லது காரணமே இல்லையோ, அதுவே மறைவிற்கும் (அழிவல்ல - உருமாற்றம்) பொருந்தும். திடப்பொருளாக இருந்தாலும் சரி ஆன்மாவாக இருந்தாலும் சரி...ஏற்படுவது உருமாற்றங்கள்.

எதையுமே தோன்றுவது மறைவது என்று சொல்வதை விட உருமாற்றம் நிகழ்கிறது என்று சொல்வது எனக்கு பொருத்தமாக தெரிகிறது. முன்பு சொல்லியது போல் இயற்பியல் விசை அல்லது காலம் என்பதன் மூலம் தொடர் மாற்றம் நிகழும் போது முன்பு இருந்த நிலையையே பல மாற்றங்களுக்கு பிறகு மீண்டும் அடையும்.

எனவே தான் முக்தி என்பது பலபிறவிகள் உள்ள ஒரு சுழற்சியில் ஏற்படும் அசைவற்ற இறுதி நிலை. அடுத்த சுழற்சியில் அது மீண்டும் பிறவி தொடர்சியின் முதல் பிறவிக்கு வந்துவிடும். அடுத்த சுழற்சி என்பது எப்போது ? பிரபஞ்சம் (சுருங்கி) அமிழ்ந்து மீண்டும் எழும் (விரியும்) போது என நினைக்கிறேன்.


இயக்கம் ஏற்படுவதற்கு இறைவனின் பங்கு என்ன ? ஒன்றுமே இல்லை அப்படி ஒன்று இருந்தாலும் அது சாட்சி நிலையில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியும். இறை சக்தியால் காலசுழற்சியை கட்டுப்படுத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது என்றே நினைக்கிறேன்.

பிறவி பெருங்கடலை நீந்தி கடந்தவடன்...எதிரே அதே கடல் முன்பு இருந்தது போலவே ஆர்பரித்துக் கொண்டிருக்கிறது இருக்கிறது. அதன் கரையில் இருந்து மீண்டும் நீச்சல்...

- இவை எல்லாம் பல்வேறு தத்துவங்களை ஊன்றிப்படித்ததில் இறுதியாக்கிக் கொண்ட என்னுடைய புரிதல்.***************

உங்களுடைய விளக்கங்கள் மிக அருமையாக இருந்தது. பல்வேறு கோட்பாடுகளில் இருந்து சிறப்பாகவும், சுறுக்கமாகவும் விளக்கி இருந்தீர்கள். பாராட்டுக்கள் மற்றும் நன்றி.

சதுக்க பூதம் said...

Really good post

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரன்

பல்வேறு தத்துவங்களின் ரத்தினச் சுருக்கம் அருமை. ஆனால் அப்படி சுருக்கும் போது வார்த்தைகளின் சக்தி அதிகம் வெளிப்பட்டு, தத்துவச் சக்தி பின்னுக்குப் போய் விடும்!

அதற்குத் தானே இத்தனை நீண்ட நெடிய விசாரங்களும் விசாரணைகளும்!

இதற்கான விடையை ஒரு பதிவில் தெரிந்து கொள்ள முடிந்து விட்டால், பதிவே சித்தர் பீடம் ஆகி விடாதா? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

GK-யிடம் ஒரு thought to ponder!
//முக்தியில் இருந்து தானே முதல் பிறவி ஏற்பட்டு இருக்க வேண்டும்//

இங்கே முதலாம், இரண்டாம் என்று time dimensionஇல் பார்க்கவே முடியாது. குழப்பம் தான் மிஞ்சும். காலத்தைக் கடந்து நிற்பதுவே கட-வுள் (அச்சோ...காலம்-ன்னு ஒங்க பதிவைச் சொல்லலீங்க :-)

//எனக்கென்னமோ பிறவு அறுப்பது என்பது சாத்தியமே இல்லை ... அது ஒரு கோட்பாடு மட்டுமே எனத் தெரிகிறது...//

பிறப்பு அறுத்தல் என்பது மேலோட்டமாகப் பார்க்கும் போது பிறப்பிறப்பு சுழற்சிகளை அறுத்தல் என்று தான் பொருள்படும். ஆனால் அதுவல்ல! பிறப்பிறப்புக்கு உண்டான காரணங்களை அறிந்து அவற்றை அறுத்தல் என்பதே சூட்சுமம் என்று ரமணர் சொல்லுவார்!

//அந்நிலையை அடைந்த பின் பிறவி ஏற்படுமா என்றால் 'இறைவனின் திருவுள்ளத்தின் படி ஏற்படலாம்' என்பதே பதில்//

பிறப்பு அறுத்த முக்தர்கள், ஆழ்வார்கள் எல்லாம் ஏன் மீண்டும் வந்து பிறக்க வேண்டும்?

//அந்நிலையை அடைந்த பின் பிறவி ஏற்படுமா என்றால் 'இறைவனின் திருவுள்ளத்தின் படி ஏற்படலாம்' என்பதே பதில்//

குமரன் எடுத்துச் சொன்னது முற்றிலும் சரி. இதில் பாருங்க சைவ சித்தாந்தமும் வைணவமும் நன்கு ஒத்துப் போகின்றன!

//நான் பலரையும் கேட்டுப் பார்த்தேன்...உதட்டை பிதுக்குகிறார்கள்//

முன்பெல்லாம் நல்ல குருமார்கள் இருந்தார்கள். சத்குருவா இருந்ததால், குருவை ஆச்ரயித்து, கடைத்தேறினார்கள். ஆனா இப்பல்லாம் குரு-ன்னாலே பயப்படற காலமா ஆயிடுச்சு :-)

பாவம் - வைச்சிக்கிட்டா அவங்க வஞ்சனை பண்ணறாங்க? :-)
பலரைக் கேட்டால் விடை கிடைக்கவே கிடைக்காது!
உங்களைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்!

அதற்கு, முதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்னன்னா
1. எதுக்கு இந்தக் கேள்வியைக் கேட்கறீங்க?
2. இதற்கு விடை கிடைத்தப்புறம், கிடைத்த விடையை வைச்சிக்கிட்டு என்ன பண்ணுவீங்க?
முதலில் இந்த இரண்டு கேள்விக்கும் விடையை உங்கள் மனம் சிந்திக்கத் துவங்கினால் தான், அந்தக் கேள்விக்கும் விடை பிடிபட ஆரம்பிக்கும்!

சும்மானாங்காட்டியும் தெரிஞ்சிக்க தான் கேட்டேன் என்பது இங்கு வராது! :-) தகவல் அறியும் சட்டம் இன்னும் செந்தில்நாதன் அரசாங்கத்தில் இயற்றப்படலை போலும் :-))))

குமரன் (Kumaran) said...

நன்றி கோவி.கண்ணன். தத்துவங்களை அலசத் தொடங்கினால் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். அது மட்டும் இல்லாமல் என்னைப் போல் 'படிப்பு அறிவு' மட்டுமே கொண்டு 'அனுபவ அறிவு' இல்லாமல் தத்துவம் பேசிக் கொண்டிருந்தால் அது சரியில்லை. உணர்வில் அறியாத எதுவுமே மேலோட்டமான புரிதல்கள் தான். அதனால் தத்துவ அலசலை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதற்கு காலரூபியான இறைவன் அருள் புரியட்டும்.

குமரன் (Kumaran) said...

நன்றி சதுக்க பூதம். அண்மைக்காலமாக உங்கள் இடுகைகள் வருவதில்லையே?! ஏன்?

ஜெயஸ்ரீ said...

குமரன்,
ஒவ்வொரு தத்துவம் கூறுவதையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைத்திருக்கிறீர்கள்.

கோவி.கண்ணனின் பின்னூட்டம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
//எனவே தான் முக்தி என்பது பலபிறவிகள் உள்ள ஒரு சுழற்சியில் ஏற்படும் அசைவற்ற இறுதி நிலை. அடுத்த சுழற்சியில் அது மீண்டும் பிறவி தொடர்சியின் முதல் பிறவிக்கு வந்துவிடும். அடுத்த சுழற்சி என்பது எப்போது ? பிரபஞ்சம் (சுருங்கி) அமிழ்ந்து மீண்டும் எழும் (விரியும்) போது என நினைக்கிறேன் //

நானும் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறேன். சுழற்சி முடிவுக்கு வருவது எப்போது ? பிரபஞ்சம் அமிழும் போதா ? பிரளயம் என்பது இதைத்தான் குறிக்கிறதா?

கோவி.கண்ணன் said...

//நானும் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறேன். சுழற்சி முடிவுக்கு வருவது எப்போது ? பிரபஞ்சம் அமிழும் போதா ? பிரளயம் என்பது இதைத்தான் குறிக்கிறதா?//

ஜெய ஸ்ரீ அவர்களே,

அறிவியலின் வேதியல் தத்துவபடி 'எந்த ஒரு பொருளையும் ஆக்கவோ, அழிக்கவோ முடியாது' என்பது நிரூபணம். இது திடப்பொருள் வடிவத்தில் இருக்கும் முழுபிரபஞ்சத்துக்கும் பொருந்தும். மரத்தின் முழுத்தண்மையும் ஒரு சிறிய விதையில் அடங்கி இருந்து சூழல் இருக்கும் போது விதை மரமாக மாறுகிறது. அதுபோல் பிரபஞ்சம் சுருங்கி விரிகிறது. இது சுழற்சியாகவே கால இடைவெளியில் நிகழ்கிறது. ஒவ்வொருமுறை விரியும் போதும் அமிழ்ந்து இருந்தவை வடிவத்துற்குள் வருகிறது. இவை எல்லையற்ற சுழற்சி. ஒவ்வெரு சுழற்சியின் போதும் நடந்தவை மீண்டும் நிகழ்கின்றன. தோன்றுதல் - அழிவு என்று சொல்வதவைவிட ஒன்று பிரிதொன்றாக மாறிபோகுதல் என்பது சரி என்று நினைக்கிறேன். 'நான் அழிவற்றவன்' என்று சிலருக்கு இருக்கும் உணர்விக்குக் காரணம் என்றுமே நிகழும் இந்த சுழற்சியும் அதனுடனே மீண்டும் மீண்டும் 'அதே போன்று' பிறந்ததில் இருக்கும் தன்உணர்வு சுவடுகளின் உணர்வு என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் சுருக்கமாக சொல்லப்போனால் அதாவது எந்த சுழற்சியிலும் 'இந்த நிமிடத்தில் நிகழ்ந்தவை' அப்படியே மீண்டும் நடக்கும்.

சுழற்சி முடிவுக்கு வருமா ? முடிவுக்கு செல்ல வேண்டுமென்றால் தோன்றுதல் என்பதை ஏற்கவேண்டும். அதனால் தோற்றமோ, முடிவோ இல்லை என நினைக்கிறேன்.

- இது முழுக்க எனது புரிதல் தான் ... இது சரியென்று சொல்லவில்லை

வெட்டிப்பயல் said...

கோவி,
உங்க விளக்கம் சரியோ தப்போ. ஆனா கேக்க நல்லா இருக்கு... கொஞ்சம் லாஜிக்காகவும் இருக்கு. (என்னை பொருத்த வரை)

குமரன் (Kumaran) said...

பாலாஜி. இடுகையையும் படிச்சீங்களா? எனக்கெல்லாம் புரியாதுன்னு சொல்லித் தப்பிக்கக் கூடாது. :-)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

பாலாஜி. இடுகையையும் படிச்சீங்களா? எனக்கெல்லாம் புரியாதுன்னு சொல்லித் தப்பிக்கக் கூடாது. :-) //

குமரன்,
நெருப்பை தொட்டால் சுடும்.


(இது நான் ஏன் சொன்னேனு சொல்லுங்க... இந்த இடுகையை பத்தி நான் சொல்றேன்)

குமரன் (Kumaran) said...

தெரியலைங்க பாலாஜி. சுப்ரபாதப் பதிவில் நடந்த சூடான உரையாடல்களைச் சொல்கிறீர்களோ என்று தோன்றுகிறது. ஆனால் 'நெருப்பைச் சுட்டால்...' என்பது புரியவில்லை. :-)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

தெரியலைங்க பாலாஜி. சுப்ரபாதப் பதிவில் நடந்த சூடான உரையாடல்களைச் சொல்கிறீர்களோ என்று தோன்றுகிறது. ஆனால் 'நெருப்பைச் சுட்டால்...' என்பது புரியவில்லை. :-) //

ஆஹா.. அதெல்லாம் இல்லைங்க...

ஒரு சிலதை எல்லாம் படிச்சி தெரிஞ்சிக்க முடியாதுனு அர்த்தம். சூடுனா என்னனு யாரும் விளக்கம் தர முடியாது. அதை உணர வேண்டும்.

அதை உணர்ந்த பிறகும் அதை மற்றவருக்கு விளக்க முடியாது. விளக்கினாலும் புரிந்து கொள்வதை போல மற்றவர்கள் தலையாட்டினாலும் உண்மை என்ன என்பது நமக்கு தெரியும் :-)

அதே மாதிரி இவ்வளவு விளக்கங்களும் படித்து தெரிந்து கொள்ள கூடியதில்லை. தானாகவே தெரிந்து கொள்ள வேண்டியவை...

இறையருள் கிடைக்கும் போது தானாக தெரிந்து கொள்வோம் :-)

CVR said...

அட்டகாசமான பதிவு!!
கோவியாரின் பின்னூட்டமும் அருமை!!

என் மனதில் பல வருடங்களாக நமைத்து கொண்டிருக்கும் கேள்வி WHY

வெட்டிப்பயல் சொல்வது போல் சில விஷயங்களை எல்லாம் பிறர் கேட்டு புரிந்துக்கொள்ள முடியாது,அனுபவம் மற்றும் சுயசிந்தனை மட்டுமே வழி காட்டும் என்று தோன்றுகிறது!!!
எல்லாம் இறைவன் செயல்!

வாழ்த்துக்கள்!! :-)

குமரன் (Kumaran) said...

தத்துவம் பேசாமல் இருக்கலாம் என்றால் முடியவில்லையே. நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சொல்லும் போது அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகவாவது தத்துவம் பேசவேண்டும் போலிருக்கிறது. ;-)

குமரன் (Kumaran) said...

CVR நீங்கள் தந்திருக்கும் சுட்டியிலிருக்கும் கதையைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். பாதி முடித்துவிட்டேன். முழுவதும் படித்து முடித்தவுடன் வந்து உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் சொல்கிறேன். :-)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

தத்துவம் பேசாமல் இருக்கலாம் என்றால் முடியவில்லையே. நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சொல்லும் போது அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகவாவது தத்துவம் பேசவேண்டும் போலிருக்கிறது. ;-) //

சொல்லுங்க குமரன்...

கேக்கறதுக்கு ஆர்வமா இருக்கோம் ;)

குமரன் (Kumaran) said...

//நிர்வாணம் பிரம்மம் - இரண்டுக்கும் ஒரே ஒரு வேறுபாட்டை சொல்கிறார்கள்.
நிர்வாணம் எதுவுமற்றது.... பிரம்மம் எல்லாமுமாக இருப்பது அல்லது எங்கும் நிறைந்திருப்பது.

நிர்வாணம், பிரம்மம் எதுவாக இருந்தாலும் அதை அடைந்தவர்கள் அதுவாகவே ஆகிபோவதாக சொல்லுவதால் என்னைப் பொருத்து இரண்டு தத்துவங்களும் ஒன்று போல் தான் தோன்றுகின்றன.
//

கோவி.கண்ணன்,

இப்படி நினைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வேதமறுப்பு இயக்கமான பௌத்தத்தை வேதங்களை வழிபடும் தத்துவக்காரர்கள் எத்தனை கீழாக நினைத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அத்வைதத்தை மறுக்கும் மற்ற தத்துவ ஆசாரியர்கள் ஆதிசங்கரரை 'ப்ராசீன பௌத்தர்' என்று கிண்டலாகக் குறிப்பார்கள் - அதாவது வேதத்தை ஏற்றிவைப்பது போல் மாறுவேடத்தில் வந்திருக்கும் பௌத்தராம் ஆதிசங்கரர். ஆனால் பௌத்தத்தையும் அல்லிருமையையும் (அத்வைதத்தையும்) கொஞ்சம் ஊன்றிப் படித்தவர்களுக்கு இரண்டிற்கும் இருக்கும் வேறுபாடுகள் நன்கு விளங்கும். அறிவில்லாத ஒன்றுமில்லாத நிலையை நிலைபெற்றதாகச் சொல்லும் சூன்யவாதம் (பௌத்தம்); அறிவுள்ள - சத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம: என்ற வேத வாக்கியத்தில் சொல்லப்பட்ட - என்றும் உள்ள, அறிவுருவான, எல்லையற்ற இறைநிலை - என்ற ஒன்றைப் பேசும் பிரம்மவாதம் (அத்வைதம்).

என் தனிப்பட்ட எண்ணம்: பௌத்தத்தின் தத்துவக் கட்டில் இருந்து வெகுதூரம் செல்லமுடியாமல் தான் வேத அடிப்படையில் தத்துவம் பேசவந்த ஆதிசங்கரர் மாயாவாதத்தைப் பேசினாரோ? அப்படி மாயையுடன் கூடிய பிரம்மத்தைப் பற்றிப் பேசியதால் தான் முழுக்க முழுக்க ஒன்றுமில்லாத நிலையைப் பேசிய சூன்யவாதமும் பெயர், உரு, குணம் ஒன்றுமில்லாத நிலையைப் பேசிய பிரம்மவாதமும் ஏறக்குறைய ஒன்று போல் தோன்றுகிறதோ?

குமரன் (Kumaran) said...

காலமே சுழற்சியின் காரணம் என்ற தங்கள் கருத்தைக் கூறியிருக்கிறீர்கள் கோவி.கண்ணன். மறுக்க இயலாது. நண்பர்கள் சொன்னது போல் ஏரணத்திற்கு (தருக்கத்திற்கு, லாஜிக்குக்கு) ஏற்ற கருத்து. தத்துவ ஆசிரியர்களும் காலமே காரணம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் அடுத்த கேள்விக்குச் சென்றிருக்கிறார்கள். நேரில் பார்க்கும் எந்தப் பொருளும் அறிவில்லாததாக (Insentient) இருந்தால் தானாக இயங்க முடியாமலும் மற்ற எதையும் இயக்க முடியாமலும் இருப்பதைக் காண்கிறோம்; அறிவுள்ள (Sentient) பொருள் மட்டுமே தன்னையே இயக்கிக் கொண்டும் மற்றவற்றை இயக்கத்தில் இட்டுக்கொண்டும் இருப்பதைப் பார்க்கிறோம். அறிவில்லாத ஒன்று தானாக இயங்குவது போல் தோன்றினால் அதன் பின்னால் அறிவுள்ள ஒன்று அதனை இயக்கத்தில் இட்டிருப்பதைப் பார்க்கிறோம். அதே போல் காலமே எல்லாவற்றையும் இயக்குவது போல் காணப்பட்டாலும் அறிவில்லாத காலத்தால் தானாக இயங்கவோ மற்றவற்றை இயக்கவோ முடியாது; ஒன்று அந்த உருவில் அறிவுள்ள இறைவன் இருக்க வேண்டும்; அல்லது அறிவில்லா காலத்தை அறிவுள்ள இறைவன் பின்னாலிருந்து இயக்கவேண்டும். இதனைக் குறிப்பாக முன்னர் 'காலரூபியான இறைவன்' என்ற சொற்றொடரால் குறித்தேன்.

குமரன் (Kumaran) said...

//பிறவி என்பது அசைவு நிலையாகவும், பிறவியற்ற அல்லது பிரம்மம் நிலையென்பது அசைவற்ற நிலையாகவும் தெரிகிறது.
//

சரி.

//அமைதியான கடல் அசைவிற்கு தூண்டப்பட்டு அலை ஏற்படுவது போல் அமிழ்ந்திருக்கும் 'ஆன்மா' தூண்டப்படுகிறது...பிறவி ஏற்படுகிறது...அதை தூண்டுவது 'இறை' என்ற சக்தி என்று சொல்லுவதை விட 'காலம்' (டைம் சைக்கிள்) என்று சொல்ல எனக்கு பிடிக்கும்.
//

காலத்தின் பின்னால் இறை இருக்கிறது என்பது எப்படி ஏரணத்திற்கு உகந்தது என்பதை மேலே சொல்லியிருக்கிறேன்.

//அதாவது சுழற்சி என்று சொல்லலாம். எல்லையற்ற நிகழ்வு ஒன்று எல்லைக்குள் வரவேண்டுமானால் காலம் அங்கு பங்களிக்கிறது. மழை நீர் - நீராவி - மேகம்...மீண்டும் மழைநீர் - இது ஒரு சுழற்சி இதில் இயற்பியல் விதியுடன் காலமும் இணைந்து சுழற்சியை ஏற்படுத்துக்கிறது. மாற்றம் எனப்படுவது ஒன்று மற்றொண்டுடன் சேரும் போது தண்மை மாறாமல் பிரிதொன்றாக மாறிப்போவதே மாற்றம் ...இப்படி பட்ட தொடர் மாற்றம் நிகழும் போது முடிவில் முதல் நிலையை அது தானாகவே எட்டிவிடும் ( நீர் - மேகம்)
//

இதனைத் தத்துவங்கள் ஒத்துக் கொள்கின்றன.

//அசைவற்ற நிலையில் இருக்கும் போது காலம் (Tஇமெ) உணரப்படாது...காலம் உணரப்பட அசைவு இருக்க வேண்டும். //

காலம் நடையாடாத தேசம் என்று வைகுண்டத்திற்கு ஒரு பெயருண்டு. வைகுண்டம் என்பது முக்தி நிலையாகக் கூறப்படுகிறது.

//இயக்கம் ஏற்படுவதற்கு இறைவனின் பங்கு என்ன ? ஒன்றுமே இல்லை அப்படி ஒன்று இருந்தாலும் அது சாட்சி நிலையில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியும். இறை சக்தியால் காலசுழற்சியை கட்டுப்படுத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது என்றே நினைக்கிறேன்.
//

இங்கு தான் மாற்று கருத்துகள் உதிக்கின்றன. நீங்கள் காலம் என்கிறீர்கள்; சிலர் இயற்கை என்கிறார்கள். ஏரணத்தின் படி இறைவனின் தேவை இல்லை என்று நீங்களும் அவர்களும் நினைக்கிறீர்கள். ஆனால் வேறு சில காரணங்களைக் காட்டி ஏரணத்தின் படி ஏன் இறைவனின் தேவை இருக்கிறது என்று தத்துவ ஆசிரியர்கள் காட்டுகிறார்கள்.

குமரன் (Kumaran) said...

உண்மை இரவிசங்கர். அதனால தானே பாற்கடல் பூனை உவமையைச் சொன்னேன்.

நீங்கள் சொல்வது சுருக்கமாகச் சொல்ல முயலும் போது தத்துவத்தின் வீச்சினை விட சொற்களின் வீச்சு அதிகமாகவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

குமரன் (Kumaran) said...

ஜெயஸ்ரீ,

சரியாத் தான் சொல்லியிருக்கேனா? சுருக்கமாகச் சொல்வதாக எண்ணிக்கொண்டு தப்பாக எதுவும் சொல்லிவிடவில்லையே?

சுழற்சி முடிவுக்கு வரும் என்று எந்தத் தத்துவமும் கூறியதாகத் தெரியவில்லை. பிரளயம் என்பதும் பிரபஞ்சம் இறையில் அடங்கி பிரளய காலம் முடிந்த பின்னர் அடுத்த மன்வந்திரத்தில் மீண்டும் தோன்றும் என்று தான் சொல்லப்படுகிறது. அப்படி பல முறை நடந்து முடிந்துவிட்டதாகவும் இந்தியத் தத்துவங்கள் சொல்கின்றன. கருமத் தொடர்பு அறுபடாத உயிர்கள் அந்தப் பிரளய காலத்தில் பிரகிருதியுடன் சேர்ந்து உருவிழந்து அடங்கி இருந்து மீண்டும் பிரபஞ்சங்கள் தோன்றும் போது தங்கள் தங்கள் கருமத் தொடர்புகளுக்கு ஏற்ப பிறவிகள் பெற்று மீண்டும் சுழல்கின்றன என்று தத்துவங்கள் பேசுகின்றன.

குமரன் (Kumaran) said...

//ஒவ்வெரு சுழற்சியின் போதும் நடந்தவை மீண்டும் நிகழ்கின்றன.//

//இன்னும் கொஞ்சம் சுருக்கமாக சொல்லப்போனால் அதாவது எந்த சுழற்சியிலும் 'இந்த நிமிடத்தில் நிகழ்ந்தவை' அப்படியே மீண்டும் நடக்கும்.
//

இதனை இந்தியத் தத்துவங்களும் பேசுகின்றன. ஒரே மாதிரியான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு கல்பத்திலும் (பிரபஞ்சம் தோன்றுவதற்கும் பிரளயத்திற்கும் இடைப்பட்ட காலம்) நிகழ்கின்றன என்று புராணங்கள் சொல்கின்றன. குறிப்பாக விஷ்ணு புராணம்.

குமரன் (Kumaran) said...

//ஆஹா.. அதெல்லாம் இல்லைங்க...

ஒரு சிலதை எல்லாம் படிச்சி தெரிஞ்சிக்க முடியாதுனு அர்த்தம். சூடுனா என்னனு யாரும் விளக்கம் தர முடியாது. அதை உணர வேண்டும்.

அதை உணர்ந்த பிறகும் அதை மற்றவருக்கு விளக்க முடியாது. விளக்கினாலும் புரிந்து கொள்வதை போல மற்றவர்கள் தலையாட்டினாலும் உண்மை என்ன என்பது நமக்கு தெரியும் :-)

அதே மாதிரி இவ்வளவு விளக்கங்களும் படித்து தெரிந்து கொள்ள கூடியதில்லை. தானாகவே தெரிந்து கொள்ள வேண்டியவை...

இறையருள் கிடைக்கும் போது தானாக தெரிந்து கொள்வோம் :-)
//

கீதையில் கண்ணன் சொல்வதைப் போல் இருக்கிறது பாலாஜி. :-)

ஆத்மாவைப் பற்றி கோடியில் ஒருவர் தான் கேள்விப்படுகிறார். அப்படிக் கேள்விப்பட்டவர்களில் கோடியில் ஒருவருக்குத் தான் அதில் ஆர்வம் வருகிறது. அப்படி ஆர்வம் கொண்டவர்களில் கோடியில் ஒருவர் தான் அதனைப் பற்றிப் பேசுகிறார். அப்படிப் பேசுபவர்களில் கோடியில் ஒருவருக்குத் தான் சிறிதாவது ஆன்ம அனுபவம் கிடைக்கிறது. அப்படிக் கிடைத்தவர்களில் கோடியில் ஒருவருக்குத் தான் ஆத்மாவை முழுவதும் அறிவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

:-)

குமரன் (Kumaran) said...

//சொல்லுங்க குமரன்...

கேக்கறதுக்கு ஆர்வமா இருக்கோம் ;) //

சொல்லிட்டேன் பாலாஜி. ஆர்வமா படிச்சீங்களா? :-)

கோவி.கண்ணன் said...

//அறிவுள்ள (Sentient) பொருள் மட்டுமே தன்னையே இயக்கிக் கொண்டும் மற்றவற்றை இயக்கத்தில் இட்டுக்கொண்டும் இருப்பதைப் பார்க்கிறோம். அறிவில்லாத ஒன்று தானாக இயங்குவது போல் தோன்றினால் அதன் பின்னால் அறிவுள்ள ஒன்று அதனை இயக்கத்தில் இட்டிருப்பதைப் பார்க்கிறோம். அதே போல் காலமே எல்லாவற்றையும் இயக்குவது போல் காணப்பட்டாலும் அறிவில்லாத காலத்தால் தானாக இயங்கவோ மற்றவற்றை இயக்கவோ முடியாது; //

எனக்கு முழுபிரபஞ்சத்தின் இயக்கமும் எல்லையற்ற அறிவின் ஆற்றலாகத் தெரிகிறது. இதை நாம் கண்டுக்கொள்வது என்பது எதனால் என்று பார்க்கும் போது அதன் அறிவு துளிகளை ஒரு எல்லைக் கட்டிப் போட்டு அல்லது அறிவாற்றலின் எல்லைக்குள் நாம் இருப்பதால் (புலன்கள் எல்லைக் குட்பட்டவை, அதைத் தாண்டி நம்மால் சிந்திக்கவோ, செயல்படவோ முடியாது) ஒப்பீடு செய்வதால் நம்மால் அதன் இயக்கத்தை 'அறிவு' என்று நினைக்கிறோம். தற்சுழற்சி என்பதில் அறிவு என்பதை புதைத்து அதை இறைவன் செய்வதாக நம்புகிறோம். ஆனால் நடைமுறையில் இவையும் இவையும் சேரும் போது இயக்கம் என்பது நிருபணம். இதற்கு நல்ல உதாரணம் காந்த புலன். காந்தவிசையால் அல்லது இயற்பியல் சேர்கை அல்லது பிரிவில் எல்லாம் நடக்கிறது என்பதை அறிவியல் ஏற்றுக் கொள்ளும் கருத்து. ஆனால் பக்தியாளர்கள் சொல்வது அந்த காந்தவிசைக்கும், இயற்பியல் மாற்றத்திற்கும் காரணம் 'இறைவன்' என்று சொல்வதைத்தான். இங்குதான் அறிவியல் வேறுபாடுகிறது. இதை அறிவியல் என்று சொல்வதைவிட தத்துவியல் என்று சொல்வது எனக்கு பிடிக்கும்.

மேலை நாட்டு மதங்களைப் போன்று அல்லாமால் இந்திய மதங்கள் 100 விழுக்காடு த்துவங்களின் கட்டமைப்பில் கட்டப்பட்டுள்ளன என்பதை ஆழ்ந்துபடித்தவர்களுக்கு புரியும். சமணத்த்துவமான சாங்கியங்கள் பரிணாம வளர்ச்சியையும், பிரபஞ்ச பெருவெடிப்பைப் பேசுகின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இந்துவ மதங்கள் அனைத்தும் இறைசார்பு என்பதைவிட தத்துவசார்பு என்பதே பொருத்தமானது. பின்னாளில் தத்துவமதங்கள் 'இறையியல்' என்ற மயக்கத்துக்கு அல்லது போதைக்கு அடிமையானதால் மொய்பொருள் மறைந்துவிட்டது என்பதை சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. தத்துவங்களின் உண்மையையும், பிரபஞ்ச பேராற்றலையும் வியப்பாக பார்த்து அவற்றின் பின்னால் இறைவன் இருப்பதாக சொல்வது கூட தவறே இல்லை. ஆனால் இறைவன் என்ற சொல்லில் எந்த அளவுக்கு பேரின்பத்தை உணர்கிறீர்களோ, அதே அளவுக்கு அவை மூட நம்பிக்கையின் ஊற்றாக மாறி தத்துவங்கள் சாகடிக்கப்பட்டுவிட்டது என்பதையும் ஒப்புக் கொள்ளவே வேண்டும்.

நான் சொல்லவருவது இதுதான் பிரபஞ்ச பேரியக்கத்தை 'இறைவனின் செயல்' என்று உருவகப்படுத்துவதால் எந்த அளவுக்கு நன்மை என்று நினைக்கிறீர்களோ அப்படி செய்யாவிடினும் அது தவறல்ல. ஏனென்றால் நம்பும் எல்லையற்ற இறையென்பது மனித முகஸ்துதிக்கு மயங்கிவிடாது என்றே நம்புகிறேன். அல்லது 'அது' தன்னை இறையென்று சொல்லிக் கொள்பவர்கள்தான் துன்பப்படாமல் இருப்பார்கள் என்றோ மற்றவர்கள் அழிவார்கள் என்ற 'குறுகிய' மனப்பக்குவத்தில் நிச்சயம் இருக்காது. ஏனென்றால் எந்த பிரதிபலனையும் பார்த்து இறைவனோ, இயற்கையோ இயங்குவதில்லை என்பது எனது தின்னமான எண்ணம். சிலைவழிபாடு என்ற மயக்கத்தில் இருப்பதால் ( மயக்கத்தில் இருக்கிறோம் என்றே தெரியாமல் இருப்பதையும் சேர்த்தே) தத்துவங்கள் நாத்திகம் என்பது போல் தெரியும் ( உங்களைச் சொல்லவில்லை). தத்துவங்கள் ஆத்திக நாத்திக எல்லைக்குள் வராது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

கடைசியாக நிர்வாணத்துவமோ, அத்வைதமோ இரண்டுமே இறைவன் என்பவன் தனியாக இருப்பதாக சொல்லவில்லை. ஒன்று 'ஏதுமற்றது', மற்றது 'எல்லாமுமாக' இருப்பது இவற்றிற்கான வேறுபாடாக எனக்கு தெரிவதும் ஒன்று வெறும் 'பினம்'. மற்றொன்று அலங்கரிக்கப்பட்ட 'பினம்' இரண்டுமே பிறவிகளற்ற கொள்கை என்ற தத்துவத்தில் கட்டப்பட்டவை என்பதால் இந்த ஒப்பீடு. தத்வைத்தம் வாழ்வியலை டேமேஜ் செய்த அளவுக்கு 'நிருவானம்' செய்யவில்லை - அதுபற்றிய இடுகை ஒன்றை இட இருக்கிறேன்.

இன்னும் கூட பேச தயராகவே இருக்கிறேன். எனக்கு 'தத்துவ' மயக்கம் எப்போதும் இருக்கிறது


--
அன்புடன்,

கோவி.கண்ணன்

குமரன் (Kumaran) said...

கோவி. கண்ணன். தங்கள் எண்ணங்களைத் தொடர்ந்து உங்கள் பதிவில் எழுதி வாருங்கள்.

வெட்டிப்பயல் said...

//காலமே சுழற்சியின் காரணம் என்ற தங்கள் கருத்தைக் கூறியிருக்கிறீர்கள் கோவி.கண்ணன். மறுக்க இயலாது. நண்பர்கள் சொன்னது போல் ஏரணத்திற்கு (தருக்கத்திற்கு, லாஜிக்குக்கு) ஏற்ற கருத்து. தத்துவ ஆசிரியர்களும் காலமே காரணம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் அடுத்த கேள்விக்குச் சென்றிருக்கிறார்கள். நேரில் பார்க்கும் எந்தப் பொருளும் அறிவில்லாததாக (Insentient) இருந்தால் தானாக இயங்க முடியாமலும் மற்ற எதையும் இயக்க முடியாமலும் இருப்பதைக் காண்கிறோம்; அறிவுள்ள (Sentient) பொருள் மட்டுமே தன்னையே இயக்கிக் கொண்டும் மற்றவற்றை இயக்கத்தில் இட்டுக்கொண்டும் இருப்பதைப் பார்க்கிறோம். அறிவில்லாத ஒன்று தானாக இயங்குவது போல் தோன்றினால் அதன் பின்னால் அறிவுள்ள ஒன்று அதனை இயக்கத்தில் இட்டிருப்பதைப் பார்க்கிறோம். அதே போல் காலமே எல்லாவற்றையும் இயக்குவது போல் காணப்பட்டாலும் அறிவில்லாத காலத்தால் தானாக இயங்கவோ மற்றவற்றை இயக்கவோ முடியாது; ஒன்று அந்த உருவில் அறிவுள்ள இறைவன் இருக்க வேண்டும்; அல்லது அறிவில்லா காலத்தை அறிவுள்ள இறைவன் பின்னாலிருந்து இயக்கவேண்டும். இதனைக் குறிப்பாக முன்னர் 'காலரூபியான இறைவன்' என்ற சொற்றொடரால் குறித்தேன்.//

இதுவும் நல்லா இருக்கு...

நம்ம டீவி மகாபாரதத்துல காலம்னு ஒண்ணு காட்டுவாங்களே! அந்த மாதிரி :-) (பின்னாடி ஈசனோட உருவம் மாதிரி இருக்கும்)

வெட்டிப்பயல் said...

//
ஆத்மாவைப் பற்றி கோடியில் ஒருவர் தான் கேள்விப்படுகிறார். அப்படிக் கேள்விப்பட்டவர்களில் கோடியில் ஒருவருக்குத் தான் அதில் ஆர்வம் வருகிறது. அப்படி ஆர்வம் கொண்டவர்களில் கோடியில் ஒருவர் தான் அதனைப் பற்றிப் பேசுகிறார். அப்படிப் பேசுபவர்களில் கோடியில் ஒருவருக்குத் தான் சிறிதாவது ஆன்ம அனுபவம் கிடைக்கிறது. அப்படிக் கிடைத்தவர்களில் கோடியில் ஒருவருக்குத் தான் ஆத்மாவை முழுவதும் அறிவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.//

ஆஹா... அப்ப சில கோடிகளை தாண்டியாச்சினு சொல்லுங்க :-)

இன்னும் கொஞ்சம் இருக்கு. அதுவும் இறையருளிருந்தால் சுலபமாக தாண்டுவோம் :-)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

//ஒவ்வெரு சுழற்சியின் போதும் நடந்தவை மீண்டும் நிகழ்கின்றன.//

//இன்னும் கொஞ்சம் சுருக்கமாக சொல்லப்போனால் அதாவது எந்த சுழற்சியிலும் 'இந்த நிமிடத்தில் நிகழ்ந்தவை' அப்படியே மீண்டும் நடக்கும்.
//

இதனை இந்தியத் தத்துவங்களும் பேசுகின்றன. ஒரே மாதிரியான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு கல்பத்திலும் (பிரபஞ்சம் தோன்றுவதற்கும் பிரளயத்திற்கும் இடைப்பட்ட காலம்) நிகழ்கின்றன என்று புராணங்கள் சொல்கின்றன. குறிப்பாக விஷ்ணு புராணம். //

ஓ! அதான் சில காரியங்கள் செய்யும் போது இது ஏற்கனவே எப்பவோ செஞ்ச மாதிரி இருக்குதா? இல்லை அது மனோவியாதியா?

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

//சொல்லுங்க குமரன்...

கேக்கறதுக்கு ஆர்வமா இருக்கோம் ;) //

சொல்லிட்டேன் பாலாஜி. ஆர்வமா படிச்சீங்களா? :-) //

படிச்சாச்சி...

குமரன் (Kumaran) said...

http://en.wikipedia.org/wiki/D%C3%A9j%C3%A0_vu

பாலாஜி, உங்க கேள்விக்கான பதிலை இந்த விக்கிபீடியாவுல படிங்க. :-)

ஆர்வமா படிச்சதுக்கு நன்றி பாலாஜி. :-)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

http://en.wikipedia.org/wiki/D%C3%A9j%C3%A0_vu

பாலாஜி, உங்க கேள்விக்கான பதிலை இந்த விக்கிபீடியாவுல படிங்க. :-)//

ஓ...
நம்ம அடுத்த பதிவு Deja Vu தான்...

Anonymous said...

http://www.kamakoti.org இங்கு

மகா பெரியவர் அவர்களின் அருமையான விளக்கங்கள்
"தெய்வத்தின் குரல்" புத்தகங்களாக வீற்றிருக்கின்றன.

குமரன் (Kumaran) said...

சுட்டிக்கு நன்றி அனானி நண்பரே. தெய்வத்தின் குரல் சில பாகங்கள் படித்திருக்கிறேன் கல்லூரிக்காலத்தில்.

கோவி.கண்ணன் said...

//குமரன் (Kumaran) said...
கோவி. கண்ணன். தங்கள் எண்ணங்களைத் தொடர்ந்து உங்கள் பதிவில் எழுதி வாருங்கள்.
//

புரிகிறது,

நிறுத்திக் கொள்கிறேன். வெளிப்படையாக சொல்லுவது நல்லதுதான் !

நன்றி !