பாடல் 26
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே
அன்னையே. உன்னைப் போற்றிப் பணிபவர்கள் பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் முத்தொழில் புரியும் முப்பெரும்தேவர்கள். அப்படிப்பட்ட பெருமை கொண்ட, மணம் கமழும் கடம்ப மலரை குழலில் அணிந்திருக்கும் தெய்வப்பெண்ணே! நறுமணம் கமழும் உன் திருவடி இணைகளுக்கு என் நாவில் நீங்காது நிற்கும் புன்மொழிகள் புகழ்மொழிகளாக (கடம்ப மலர்களுக்கு இணையாக) அமைந்தது பெரும் வியப்பாக இருக்கிறது. (உன் எளிமையே எளிமை).
***

பாடல் 70
கண் களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே.
கடம்ப வனமாம் மதுரையில் பல பாடல்களைப் பாடிக் களிக்கும் வீணை போன்ற குரலையும், அழகிய திருக்கைகளையும், திருமார்பினையும், மண்ணில் வளத்தைக் காட்டி நிற்கும் பச்சை வண்ணத்தைப் போல் வண்ணம் கொண்ட திருமேனையையும் கொண்டு மதங்கர் குலப் பெண்களில் ஒருவளாகத் தோன்றிய எம் தலைவியின் பேரழகை என் கண் களிக்கும் படி கண்டு கொண்டேன்.
***

பாடல் 73
தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றொடு இரண்டு நயனங்களே
அன்னையே! உன் மாலை கடம்பமாலை. உன்னுடைய படைகள் ஐந்து மலர்க்கணைகள். உன்னுடைய வில் கரும்பு வில். உன்னைத் தொழும் பொழுது வயிரவர்கள் தொழும் நள்ளிரவு. எமக்கு என்று இந்த உலகத்தில் இருக்கும் ஒரே பற்றுக்கோடு (வங்கியில் இருக்கும் பணம்) உன் திருவடிகள். உன்னுடைய நான்குத் திருக்கரங்கள் செம்மையானவை. உன்னைச் சுற்றி சிவந்த ஒளி. அம்மை உன் திருநாமமோ திரிபுரை. உனக்கு எல்லோருக்கும் இருக்கும் இரண்டு கண்களுடன் மூன்றாவதாக நெற்றிக் கண்ணும் உண்டு.
***

பாடல் 99:
குயிலாய் இருக்கும் கடம்பாடவியில் கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
கயிலாயநாதருக்கு அன்று இமயமலைக்கரசன் கொடுத்த அழகிய பார்வதி தேவி கடம்பவனத்தில் குயிலாய் இருப்பாள். இமய மலையில் அழகிய மயிலாய் இருப்பாள். வான வெளியில் வெயிலாய் இருப்பாள். தாமரையில் அன்னமாய் இருப்பாள்.
***
1. கடம்பாடவியில் வாழும் குயில்
2. கடம்ப மலர்கள்
3. கடம்ப மரம்
மேலும் சில பாடல்கள் அடுத்த இடுகையில்...
9 comments:
அடடா, இரண்டாவது பகுதியைப் படிச்ச கையோடு மூன்றாவது பகுதியையும் படிக்கக் கூடிய வகையில் தந்தமைக்கு மிக்க நன்றி.
இந்தப் பகுதியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் அனைத்தையும் இப்போதுதான் முதற் தடவையாக அறிகிறேன்.
அடுத்த பகுதியும் விரைவில் வரும் வெற்றி. நாளையோ மறுநாளோ இடுகிறேன்.
குமரன் மீண்டும் அன்னையைப் பார்க்கக் கொடுத்தமைக்கு நன்றி.
பதிவுக்கு நன்றி குமரன்.....
கடம்பு பற்றிய எல்லா தகவல்களும் ஓரிடத்தில் படிப்பது அருமையாக இருக்கிறது.
குமரன்!
பாடல்கள் கேட்டுள்ளேன். படங்கள் முதற்தடவை பார்க்கிறேன். மறுமுறை செல்லக் கிடைத்தால் மரத்தை நேரே பார்க்க ஆசை
வருகைக்கு நன்றி வல்லியம்மா.
நன்றி மௌலி ஐயா.
எனக்கும் தான் யோகன் ஐயா. இந்த முறை தமிழகம் சென்ற போது பழனிக்குச் செல்ல இயலவில்லை. மீண்டும் விரைவின் அவனைக் காண அவன் அருள் வேண்டும். அப்போது கடம்பனோடு கடம்ப மரத்தையும் காண வேண்டும்.
Post a Comment