Thursday, July 19, 2007

ஈசன் உவக்கும் இன்மலர்கள்

அருள்திரு. விபுலானந்த அடிகளாரைப் பற்றிய இனிய இடுகை ஒன்றை கானா பிரபா இட்டிருக்கிறார். அடிகளாரின் கட்டுரைகள் சிலவற்றை இராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் படித்த நினைவு இருக்கிறது. அவரைப் பற்றி மேலும் அறிய கானா பிரபாவின் இடுகை மிக்கத் துணை செய்தது.

அந்த இடுகையின் தொடக்கத்தில் அடிகளாரின் பாடல்கள் மூன்றை கொடுத்திருந்தார். அவை சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் அருமையாக இருந்தன. அடியேன் பெற்ற இன்பம் நண்பர்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை இங்கே இடுகிறேன்.

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?
உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.


பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா? உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது.

17 comments:

கானா பிரபா said...

வணக்கம் குமரன்

அடிகளாரின் நினைவு நாளில் இப்பாடலை இன்னும் இலகுவாகப் புரியும்படி விளக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள். பாடல் வரிகளை வாசிக்கும் போதே மெய்சிலிர்த்து இறையுணர்வு வருகின்றது இல்லையா?

வெற்றி said...

குமரன்,
விபுலானந்த அடிகளார் பற்றிய கானா பிரபாவின் பதிவைப் பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். இந்த வார இறுதியில்தான் வாசிக்க வேணும்.

எளிமையான தமிழில், அழகாகப் பொழிப்புக் கூறியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. உண்மையில் சொல்கிறேன், உங்களின் விளக்கம் இல்லாமல் இந்தப் பாட்டை புரிந்து கொள்ள சிரமப்பட்டிருப்பேன். உங்களின் இந்தச் சீரிய பணிக்கு நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் பிரபா. உங்கள் இடுகையைத் தாள் பிரதி எடுத்துப் படிக்கத் தொடங்கிய போது இந்தப் பாடல்களைப் படித்தவுடன் உள்ளம் உருகி விட்டது. அதிலும் முதல் பாடல் மிக மிக அருமை. இடுகையின் இறுதியில் இன்று அடிகளாரின் நினைவு நாள் என்ற குறிப்பைப் பார்த்ததும் வீட்டிற்கு வந்ததும் இந்த இடுகையை இட்டேன்.

குமரன் (Kumaran) said...

தங்களின் இன்சொற்களுக்கு நன்றி வெற்றி. விரைவில் கானா.பிரபாவின் இடுகையைப் படியுங்கள். நல்லதொரு இடுகை அது.

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடல்கள் எந்த தலைப்பில் வந்தன என்று சொன்ன யோகன் ஐயாவிற்கு நன்றி. அந்தத் தலைப்பை இந்த இடுகைக்குத் தலைப்பாக வைத்திருக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

எளிமையான, அழகான தமிழ்.....

நன்றி குமரன்/ பிரபா.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி ஐயா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

"உள்ளக் கமலம்" என்று எல்லாரும் சொல்வது தான்!
ஆனால் பாருங்கள்..
கைக் காந்தள்
விழி நெய்தல்
வித்தியாசமான அருமையான உருவகங்கள்!

இலக்கியத்தில் விரலைக் காந்தள் என்று சொல்லுவர்கள்...மெல்லிய நீண்ட தன்மைக்கு...அதை கைகளுக்கே அருமையா எடுத்தாளும் அடிகளார்!

விழி நெய்தல்...நெய்தல் மலர் தான் என்றாலும்...விழியால் உள்ளங்களை ஆடை நெய்தது போல் நெய்து ஒன்று சேர்த்ததுவோ? - என்ன ஒரு உவமானம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

"உள்ளக் கமலம்" என்று எல்லாரும் சொல்வது தான்!
ஆனால் பாருங்கள்..
கைக் காந்தள்
விழி நெய்தல்
வித்தியாசமான அருமையான உருவகங்கள்!

இலக்கியத்தில் விரலைக் காந்தள் என்று சொல்லுவர்கள்...மெல்லிய நீண்ட தன்மைக்கு...அதை கைகளுக்கே அருமையா எடுத்தாளும் அடிகளார்!

விழி நெய்தல்...நெய்தல் மலர் தான் என்றாலும்...விழியால் உள்ளங்களை ஆடை நெய்தது போல் நெய்து ஒன்று சேர்த்ததுவோ? - என்ன ஒரு உவமானம்!

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். கைக் காந்தள், விழி நெய்தல் போன்றவைகளும் என்னைக் கவர்ந்தன. விரல்களைக் காந்தள் மலர்கள் என்று சொல்வதைப் படித்திருக்கிறேன். இங்கே கூப்பிய கைகளை அப்படி சொல்கிறார் அடிகளார். நெய்தல் நிலம் என்றால் கடலும் கடல் சார்ந்த இடமும் தானே. அது அன்பினால் கலங்கிய கண்களுக்கு எவ்வளவு பொருத்தமான உவமை. நெய்தல் மலர் வெண்மையான மலர் என்று நினைக்கிறேன். அந்த வகையிலும் கண்களுக்குப் பொருத்தமான உவமை.

G.Ragavan said...

அருமை...அருமை. நன்றி.

காப்பவிழ்ந்த தாமரை...ஆகா என்ன அழகான சொல்லாடல். காப்பு அவிழ்வதே மலர்தல் என்று கற்பனை செய்யவே அழகாக இருக்கிறதே. அருமை. அருமை.

பின்னூட்டம் போட யோசிக்க விடாமல் மனது பாட்டாய்கிறதே!

விபுலானந்தரை ஒருகை பார்க்க வேண்டும். :)

குமரன் (Kumaran) said...

இதே மாதிரி உணர்வுகள் தான் இராகவன் இந்தப் பாடல்களைப் படித்தவுடன் எனக்கும் தோன்றின. உடனே பரபரவென்று இந்த இடுகையை இட்டுவிட்டேன். :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரா!
விபுலாநந்தர் தரிசனம் கிட்டியுள்ளது.
இத்துடன் தமிழ்மணத்தில் 3 பதிவுகள்.
பொழிப்புச் சிறப்பாக உள்ளது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரா!
சொல்ல வேண்டுமென நினைத்து தவற விட்டு விட்டேன்.
3 ம் பாடல் '' பாட்டாளி சேர் பொற்கொன்றையோ''...என்பதல்ல, பாட்டளி சேர்...என்பதே மூலம்...அதாவது...பாட்டு=பாடும்,ரீங்காரமிடும், அளி= வண்டு .பாட்டு+அளி=பாட்டளி,
வண்டு சேரும் பூ...என்பது தான் பொருத்தம் எனக் கருதுவது மாத்திரமல்ல. அப்படியே என் இளமையில் படித்தது. நினைவில் உள்ளது.
சரி பார்க்கவும்.

குமரன் (Kumaran) said...

பிழை திருத்தம் சொன்னதற்கு மிக்க நன்றி யோகன் ஐயா. பாட்டளி சேர் என்பது மிக இயற்கையாக இருக்கிறது. பாட்டாளி சேர் என்று படித்த போது என்ன சொல்ல வருகிறார் என்று ஒரு நொடி சிந்திக்க வேண்டியிருந்தது. பாட்டாளி என்று பாடல் எழுதுபவரைச் சொல்வதில்லையே. அதனால். இப்போது தெளிவாகப் புரிகிறது.

இடுகையிலும் பாட்டளி என்று மாற்றிப் பொருளுரையையும் மாற்றிவிட்டேன். நன்றிகள்.

Kanags said...

சுவாமிகளின் பாடலுக்கு மிக அருமையாகப் பொழிப்புரை தந்தமைக்கு நன்றிகள் குமரன்.

குமரன் (Kumaran) said...

சுவாமிகளின் பாடல்களைப் படிக்கக் கொடுத்துவைத்திருக்கிறோம் கனக்ஸ். என்ன ஒரு சொல்லாற்றல்; பொருளாற்றல்; இறையன்பு?!!!