Thursday, July 12, 2007

கடம்பம் 4: அன்பே இலாதவர் செய்யும் கொடிய அவமதிப்பால்...

அன்பில்லாதவருடன் பழக வேண்டி வந்தால் எத்தனை துன்பம்? அன்பே இல்லாதவர் என்றால்? அவர் செய்யும் அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால்? அது பெருந்துன்பமே!





மதுரை நகராம் கடம்ப வனத்தில் வாழும் கடம்பவனவல்லி மீனாட்சி அம்மையைப் போற்றும் கடம்பவனவல்லி பதிகத்தில் வரும் பாடல்களில் ஒன்று இப்படி தொடங்குகின்றது.

அன்பே இலாதவர் செய்யும் கொடிய அவமதிப்பால்
துன்பே அடையும் மனத்தேனை ஆளத் தொடங்குவையோ
இன்பே செறி மதுராபுரி அன்பர் இதயமுற்றோய்
வன்பே சமை மணித்தீவக கடம்பவனவல்லியே (9ம் பாடல்)

அன்பு சிறிது கூட இல்லாதவர்கள் செய்யும் கொடிய அவமதிப்பால் துன்பங்களே அடையும் மனத்தை உடைய அடியேனை ஆளத் துவங்குவாயா? இன்பமே நிறைந்து நிற்கும் மதுரை வாழ் உன் அன்பராம் சொக்கரின் இதயத்தில் நின்றாய்! கடிய இதயமுள்ள மாணிக்க சிலையே! கடம்ப வன வல்லியே!

காணிக்கை வைத்து அமரேசர் வணங்கும் நின் கான்மலரை
பேணித் தொழுது நினைக்கவருள்செய் பெரியம்மையே
ஆணிப்பொன் வில்லி தனக்கு அமிழ்தே அகிலாண்டம் பெற்ற
மாணிக்கமே மணித்தீவக கடம்பவனவல்லியே (10ம் பாடல்)

காணிக்கை வைத்து தேவர் தலைவன் வணங்கும் உன் கால் மலரை என்றும் பற்றிப் பேணித் தொழுது நான் நினைக்க அருள் செய்வாய் பெரியம்மையே! ஆணிப்பொன்னால் செய்த வில்லையுடைய சொக்கர் தனக்கு அமிழ்தே! அகிலமெல்லாம் பெற்ற மாணிக்கமே! மாணிக்கத் திருமேனி கொண்டவளே! கடம்பவனவல்லியே!

கடம்பவனவல்லி பதிகத்தின் மற்ற பாடல்களை இந்தச் வலைப்பக்கத்தில் பார்க்கலாம்.

***

பிரமனும் இந்திரனும் மாலும் அறியா அரசன் கல்லால் அடியில் அமர்ந்திருக்கிறான். அவனைப் போற்றிப் பாடுகிறது திருக்காளத்தி இட்டகாமிய மாலை காப்பு.



தமரக் கடலைக் கடைந்த முகுந்தன் தனக்கும் மெய்க்கே
பமரக் கண்ணாயிரத்தாற்கும் எட்டாது பனிக்கதிர்வேல்
குமரக் கடம்பன் முன் அத்தியை ஈன்ற கொடியையும் கொண்டு
அமரர்க்கு அரசொரு கல்லால் அடியில் அமர்ந்ததுவே


பாற்கடலைக் கடைந்த முகுந்தன் தனக்கும், உடலெல்லாம் ஆயிரம் கண்கள் கொண்ட இந்திரனுக்கும் எட்டாமல், பனிக்கதிர் வேலையுடைய குமரக் கடம்பனையும் அவனுக்கு அண்ணனாம் யானைமுகனையும் ஈன்ற கொடி போன்ற அன்னையையும் கொண்டு, தேவர்களுக்கெல்லாம் அரசனான ஒருவன் கல்லால் அடியில் அமர்ந்தான்.

மாரக் கடம்பனைப் பெற்ற கண்ணா உனை வாழ்த்தும் என் மேல்
கோரப் பிணி கெடப் பார்த்தருள்வாய் நின் சொல் குற்றமென்ற
கீரற்கு நின் சொரூபம் காட்ட வேண்டிக் கிளைத்தெழுந்த
ஈரச் சடாமுடியாய் திருக்காளத்தி ஈச்சுரனே


மன்மதனைப் போன்ற கந்தக் கடம்பனை பெற்ற முக்கண்ணா! உன்னை வாழ்த்தும் என் மேல் கோரமான பிணிகள் எல்லாம் நீங்க கண் பார்த்து அருள்வாய். நின் பாடலைக் குற்றமென்று சொன்ன நக்கீரருக்கு உன் திருவுருவைக் காட்டவேண்டி கிளைத்து எழுந்த ஈரச் சடைமுடியாய்! திருக்காளத்தி ஈஸ்வரனே!

***

மேலும் சில பாடல்கள் அடுத்த இடுகையில் ...

7 comments:

வல்லிசிம்ஹன் said...

மாரக் கடம்பனைப் பெற்ற கண்ணா உனை வாழ்த்தும் என் மேல்
கோரப் பிணி கெடப் பார்த்தருள்வாய் நின் சொல் குற்றமென்ற
கீரற்கு நின் சொரூபம் காட்ட வேண்டிக் கிளைத்தெழுந்த
ஈரச் சடாமுடியாய் திருக்காளத்தி ஈச்சுரனே///

இந்தப் பாடல் ஏதாவது ஒரு நேரம் எல்லோருக்குமேபயன்படுமென நம்புகிறேன்.

நோய் வரும் நேரம் நம்மைக் காப்பாற்றிக் கடத்துவனைக் கருத்தில் இருத்தவும் அவன் கருணை வேண்டும்.
நன்றி குமரன்.

வெற்றி said...

குமரன்,
ஆகா! அருமை!
இதுவரை அறிந்திராத அற்புதமான பாடல்கள், அதற்கு உங்களின் எளிமையான விளக்கங்கள். நன்றி.

G.Ragavan said...

நல்ல பாடல்கள். கடம்பங்காட்டுக்காரியையும் அழைத்து வந்து விட்டீர்கள். அருமை. ஒன்று பார்த்தீர்களா...ஆத்தாளுக்கோ கடம்பவனக்காரி என்றுதான் பெயர். அப்பனுக்கோ கடம்பனைப் பெற்றவன் என்றுதான் பெயர். மகனுக்கு மட்டும் கடம்பன் என்றே பெயர். கடம்பும் முருகும் அந்த அளவிற்கு இயைந்தன போல.

குமரன் (Kumaran) said...

இராகவன். கடம்பங்காட்டுக்காரி போன (கடம்பம் - 3) இடுகையிலேயே வந்துவிட்டாளே. நீங்கள் அந்த இடுகையைப் படிக்கவில்லை. படித்துப் பாருங்கள்.

கடம்பன் என்றால் குமரன் தான். அதில் ஐயமே இல்லை. கடம்வனேசர் என்று சொக்கரைக் குறிக்கிறார்கள்; கடம்பவனவல்லி என்கிறார்கள் தடாதகைப் பிராட்டியை. ஆனால் கந்தக் கடம்பன் தான் கடம்பிற்கு முதல் உரிமை பெற்றவன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் வெற்றி. நானும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நானும் இதுவரை அறியாத பாடல்கள் தான் இவை. உங்களுக்காக கடம்பைத் தேடியதில் கிடைத்த முத்துகள் இவை.

குமரன் (Kumaran) said...

எனக்கும் அதே எண்ணம் தான் தோன்றியது வல்லியம்மா. கோரப்பிணி கெடப் பார்த்தருள்வாய் என்றதால் இந்தப் பாடலைப் பாடிப் பயன் பெறலாம் என்று தோன்றியது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.