Friday, July 12, 2013

மாதங்களில் நான் மார்கழி


'அப்பா. நன்கு சொன்னீர்கள். பாவை நோன்பு நோற்று கண்ணனை கோபியர் அடைந்ததைப் போல் அடியேனும் அவன் அருள் பெற ஒரு நல்ல வழி காட்டினீர்கள். பக்தியால் மட்டுமே வசப்படுபவன் அவன். அவனை நோற்றுத் தான் அடைய முடியும். அந்த நோன்பினை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அப்பா'.

'கோதை. நீ சொல்வது உண்மை தான் அம்மா. பக்தியுடையவர்களுக்கு எளியவன் கண்ணன்; மற்றவர்களுக்கு அரியவன். இந்த பாவை நோன்பினை நோற்கும் முறையினைச் சொல்கிறேன் கேள்.

மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னான் கீதாசார்யன். அந்தப் புனிதமான மார்கழி மாதம் முழுக்க கடைபிடிக்க வேண்டிய நோன்பு இது'.

'மாதங்களில் நான் மார்கழி என்று மாதவன் சொல்லும் அளவிற்கு உயர்ந்ததா மார்கழி? அதன் பெருமைகளைச் சொல்லுங்கள் அப்பா'.

'நல்ல கேள்வி கேட்டாய் மகளே. ஒரு நாளில் எல்லா காலங்களும் நல்ல காலம் என்பதைப் போல் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறந்தவையே. ஒரு நாளில் எல்லா நேரமும் நல்ல நேரம் ஆனாலும் இறை வழிபாட்டிற்கு பகலவன் உதிப்பதற்கு முன் இருக்கும் ஐந்து நாழிகைகளும் (இரண்டு மணி நேரம்) (காலை 4 முதல் 6 வரை) மாலை கதிரவன் மறையும் நேரத்தை ஒட்டிய ஐந்து நாழிகைகளும் (மாலை 6 முதல் 8 வரை) ஏற்றவை என்பது உலக வழக்கு. மற்ற நேரங்களை விட அந்த நேரத்தில் மனம் இறைவழிபாட்டில் ஒன்று படுவதை நன்கு காணலாம். அந்த இரண்டு நேரங்களிலும் அதிகாலை நேரம் மிக உயர்ந்தது. அந்த நேரத்திற்கு பிரம்ம முஹூர்த்தம் என்றே பெரியோர் பெயர் இட்டிருக்கின்றனர். அந்த அதிகாலை நேரத்தில் இறை வழிபாடு செய்தல் மிக மிக உகந்தது.

காலக் கணக்கில் நம் ஒரு வருட காலம் தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களின் பகல்; ஆடி தொடங்கி மார்கழி வரை அவர்களின் இரவு. ஆக மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம்; ஆடி மாதம் தேவர்களின் மாலை நேரம். தேவர்களுக்குப் புனிதமான இந்த காலங்களில் இறைவழிபாடு செய்தால் மனிதர்களுக்கும் நலம் என்பதால் அவ்விரண்டு மாதங்களையும் தெய்வ வழிபாட்டிற்காக என்று சிறப்பாக வைத்தார்கள் நம் முன்னோர்.

மார்கழி, ஆடி இவ்விரண்டு மாதங்களிலும் தேவர்களின் பிரம்ம முஹூர்த்தமான மார்கழி மாதம் மிகச் சிறப்பானது. ஒரு குழுவில் எதுவெல்லாம் சிறப்பானவையோ அவற்றை எல்லாம் தன் வடிவாக கண்ணன் கீதையில் சொல்லிக் கொண்டு வரும் போது தான் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்கிறான். இப்போது மார்கழியின் பெருமை புரிந்திருக்குமே'.

'புரிந்தது அப்பா. இனி நோன்பு செய்யும் முறையைச் சொல்லுங்கள்'.

'அம்மா. மறந்தும் புறந்தொழாத நாம் இந்த நோன்பையும் கண்ணனை முன்னிட்டே செய்ய வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் அதிகாலையில் பகலவன் தோன்றுவதற்கு முன் எழுந்து நன்னீராடி தூய உடை அணிந்து கொண்டு இறைவன் நாமங்களைப் பாடி பாவை நோன்பு நோற்பதற்கு ஏற்பட்டுள்ள பாவைக்களத்திற்குச் சென்று அவன் திருவருளை எண்ணி வணங்க வேண்டும். இந்த நோன்பை தனியாக செய்தாலே சிறப்பு தான். ஆனால் அனைவரும் கூடியிருந்து இந்த நோன்பை நோற்றால் இன்னும் மிகச் சிறப்பு. அதிலும் ஒத்த எண்ணமுடையவர்கள் சேர்ந்து செய்தால் இன்னும் பல மடங்கு சிறப்பு'

'அப்பா. நீங்கள் சொன்ன படியே இந்த நோன்பை நோற்கிறேன். நான் மட்டும் இன்றி என் தோழியர் அனைவரையும் சேர்த்துக் கொண்டு நாங்கள் எல்லோருமே இந்த நோன்பை நோற்கிறோம் அப்பா'

'அப்படியே செய்வாய் மகளே. மாயவன் திருவருள் முன்னின்று காக்கட்டும்'.

***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

5 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

G.Ragavan said...
குமரன்...எனக்கு உண்மையிலேயே ஒரு ஐயம். மாதங்களில் மார்கழி என்றா கண்ணன் கீதையில் சொல்லியிருக்கின்றான்? அதற்கு இணையான மாதம் தனுர் என்று நினைக்கிறேன். அந்தத் தனுர் என்னும் பெயர் கீதையில் பயன்படுத்தப்பட்டிருகிறதா? அந்தத் தனுர் மாதம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் நமக்கு பதினைந்து இருவது நாட்களுக்கு முன்னமே வந்து விடுகிறது. அப்படியிருக்கையில் அது மார்கழிதான் என்று எப்படி சொல்லப்படுகிறது?

மார்கழி காலை....ஆடி மாலை என்று சொல்லியிருப்பது அழகாக இருக்கிறது.
April 21, 2007 10:16 PM
குமரன் (Kumaran) said...
இராகவன்.

கண்ணன் 'மாஸானாம் மார்கசீர்ஸோஹம்' என்கிறான். மாஸானாம் - மாதங்களில், மார்கசீர்ஸ - மார்கழி; அஹம் - நான்.

மார்கழிக்கு நேரான மாதம் தனுர் மாதம் இல்லை; மார்கசீர்ஸம். ம்ருகசீருசம் என்ற நட்சத்திரத்தில் நிறைமதி நாள் அமையும் மாதம் மார்கசீருஷம் - தமிழில் அதற்கு நேரான மாதம் மார்கழி - மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள் மிருகசீருஷ நட்சத்திரத்தில் அமையும்.

சித்திரையில் நிறைமதி நாள் அமையும் மாதம் சித்திரை; விசாகத்தில் நிறைமதி அமையும் மாதம் வைசாகம் - தமிழில் வைகாசி; இப்படியே மற்ற மாதங்களுக்கும் அமையும்.
April 21, 2007 10:33 PM
குமரன் (Kumaran) said...
மார்கழி அதிகாலை நேரம் என்பது பெரியவர்கள் சொன்னது. இந்த இடுகை எழுதும் போது தோன்றியது ஆடி மாலை நேரம் என்பது. பெரியவர்கள் சொன்னதையே அடிப்படையாக வைத்து ஆங்காங்கே கற்பனையையும் கொண்டு இந்தப் பதிவில் எழுதி வருகிறேன். பெரியவர்கள் சொன்னதற்கு மாறாக அமையாத படி பார்த்துக் கொள்கிறேன். அவன் அருள் முன்னின்று காக்கட்டும்.
April 21, 2007 10:35 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா

தனுர் மாதம் என்பது, சூரியன் விருச்சிகத்தில் இருந்து தனுசு (வில்) ராசிக்கும் மாறும் கால கட்டம்.

பொதுவாக ராசிகளை மாதங்களுக்குச் சொல்லும் வழக்கம் சூர்யமானம் முறை, ஜோதிடத்தில்.
நட்சத்திரங்களைச் சொல்வது சந்திரமான முறை.
மிருகசீரிஷம் = மார்கழி
புஷ்யம்/பூசம் = தை
மகம்=மாசி
ஷ்ரவணம்/திருவோணம் = ஆவணி
இப்படி...

//அந்தத் தனுர் மாதம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் நமக்கு பதினைந்து இருவது நாட்களுக்கு முன்னமே வந்து விடுகிறது.//

ஆனாப் பாருங்க, சங்கராந்தி மட்டும் எல்லாருக்கும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் தான் - தைப் பொங்கல் போது தான்! இதுவும் ஒரு வியப்பே!
April 22, 2007 10:07 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//மார்கழி அதிகாலை நேரம் என்பது பெரியவர்கள் சொன்னது.//
உத்தராயணப் புண்ய காலத்துக்குச் சற்று முன் = காலைச் சந்தி

//ஆடி மாலை நேரம் என்பது//
இதுவும் பெரியவர்கள் சொல்லி இருக்காங்க குமரன்
தட்சிணாயணப் புண்ய காலத்துக்குச் சற்று பின் = மாலைச் சந்தி

அதனால் தான் திருமணங்களுக்கு இவ்விரு மாதமும் விலக்கி, நோன்புக்கு முதன்மை தந்தார்கள் இம்மாதங்களில்! நாம் நோன்பை விட்டு விட்டோம். கல்யாணம் கூடாது என்ற சம்பிரதாயம் மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம் :-)
April 22, 2007 10:23 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//தனியாக செய்தாலே சிறப்பு தான். ஆனால் அனைவரும் கூடியிருந்து//

கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாளும் வந்தேன், தந்தேன் என்னாது வந்தோம், தந்தோம் என்று கூட்டாகத் தான் பாடுகிறாள்.
அதனால் தான் மற்ற பிரபந்தங்களைக் காட்டிலும் திருப்பாவையில் இராமானுசருக்கு ஈடுபாடு என்பார்கள்!
அடியவரை அரவணைத்துச் செல்லல் மிளிர்கிறது அல்லவா?

அழகாச் சொல்லியிருக்கீங்க குமரன்!
தொடருங்கள், நோன்பையும் , நோன்பு முறைகளையும்.....
April 22, 2007 10:23 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
//ஆனாப் பாருங்க, சங்கராந்தி மட்டும் எல்லாருக்கும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் தான் - தைப் பொங்கல் போது தான்! இதுவும் ஒரு வியப்பே!
//

இரவிசங்கர். சங்கராந்தி என்பது ஒரு ராசியிலிருந்து மறு ராசிக்கு சூரியன் செல்லும் நாள். தமிழ் மாதங்களின் முதல் நாளும் அதுவே. தெலுங்கர்களும் கன்னடர்கள் வடக்கத்தியரும் அந்த நாளில் தங்கள் மாதங்களைத் தொடங்குவதில்லை என்று நினைக்கிறேன். சங்கராந்தியை மட்டும் உத்திராயண புண்யகாலம் என்ற முறையில் அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த வகையில் எப்போதும் சங்கராந்தி தை முதல் நாளில் தான் வரும்.

இராம.கி. ஐயாவின் காலக்குறிப்புகளைப் பற்றிய இடுகைகளைப் படித்தால் இன்னும் தெளிவாக இந்த சூரியமானம், சந்திரமானம், சூரியசந்திர மானங்கள் புரியும் என்று நினைக்கிறேன். தமிழர்களின் முறை சூரியசந்திரமானம் என்று அவர் சொன்னதாக நினைவு - மாதங்கள் சூரிய மானத்தின் படி (இராசிகளின் படி); பெயர்கள் சந்திரமானத்தின் படி (முழுநிலவின் போது அமையும் நட்சத்திரங்களின் பெயர்கள்).
May 03, 2007 10:14 AM
கவிநயா said...
//நாம் நோன்பை விட்டு விட்டோம். கல்யாணம் கூடாது என்ற சம்பிரதாயம் மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம் :-)//

ஆமாம்; சரியா சொன்னீங்க கண்ணா.

குமரன், ஒரு வழியா நானும் உங்களப் பிடிச்சுட்டேன். கோதைப் பதிவெல்லாம் படிச்சுட்டேன். இனி கோதைத் தமிழ் தொடர்வதை எதிர்பார்த்து...
May 31, 2008 9:50 PM
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
June 09, 2008 2:26 AM
குமரன் (Kumaran) said...
நானும் அந்த நல்ல நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் அக்கா. :-)

நேரம் தான் கிடைப்பதில்லை. தனியாக அமர்ந்து சிந்திக்க வேண்டும். இந்த இடுகைகளை எழுதும் போதெல்லாம் காலை 4, 4:30க்கு எழுந்து எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் அப்படி செய்ய இயலுவதில்லை. அப்படிச் செய்தால் நாள் முழுக்க ஒரு சோர்வு இருக்கிறது; அலுவலில் ஈடுபட இயலவில்லை. வயதாகிக் கொண்டிருக்கிறது போலும். :-)
June 12, 2008 12:08 PM
Vijay said...
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை
June 18, 2008 8:35 AM
குமரன் (Kumaran) said...
விஜய். வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி. விரைவில் வந்து பார்க்கிறேன்.
June 18, 2008 9:48 AM
Tamil Paiyan said...
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்
July 05, 2008 11:20 AM

குமரன் (Kumaran) said...

sury said...
// மாயவன் திருவருள் முன்னின்று காக்கட்டும்'. //

புத்தாண்டு முதல் நாளில் இவ்வார்த்தைகளுக்கீடாக‌
வேறு எவ்வாழ்த்து வார்த்தைகளும் உண்டோ !!

வாழ்த்துக்கள். நற்பணி தொடர எமது ஆசிகள்.

உங்கள் ப்ரொஃபைலில் வயது 1036 எனக்குறிப்பிட்டது போல‌
அத்திங்களோனருளில்
ஆயிரம் ஆண்டுகள் வாழ்க ! வளர்க !!


சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
December 31, 2008 9:22 PM
குமரன் (Kumaran) said...
தங்கள் ஆசிகளுக்கு நன்றி ஐயா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
January 01, 2009 6:29 AM
jeevaflora said...
இவ்வளவு அழகான ஒரு blog இருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி. இந்துத்துவத்தை நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற என்னுடைய ஆவல் தீரும் என கினைக்கிறேன்.
மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.நன்றி.வாழ்த்துக்கள்.
jeevaflora
April 20, 2009 4:03 AM
குமரன் (Kumaran) said...
நன்றி ஜீவாப்ளோரா. என்னுடைய மற்ற பதிவுகளை என்னுடைய ப்ரொபைலில் பாருங்கள். நன்றி.
April 20, 2009 6:30 AM
முனைவர் சே.கல்பனா said...
வணக்கம் உங்கள் பக்கம் கண்டேன் நன்று......தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.......
August 07, 2009 10:17 PM
குமரன் (Kumaran) said...
வணக்கம் முனைவர் கல்பனா. நிறைய பக்கங்களில் தொடர்ந்து எழுதி வருகிறேன். அந்தப் பக்கங்களையும் இயன்றால் படித்துப் பாருங்கள். நன்றி.
August 10, 2009 9:13 PM
Hindu Marriages In India said...
நல்ல பதிவு
August 24, 2009 10:31 PM
குமரன் (Kumaran) said...
நன்றி.
August 25, 2009 6:08 AM
அப்பாதுரை said...
அருமை, அருமை. மாதங்களில் அவள் மார்கழி சினிமா பாட்டுனு நெனச்சேன் சார்! கண்ணன் சொன்னதைத் தான் தாசன் சொன்னாரா?
June 23, 2010 4:38 PM
குமரன் (Kumaran) said...
கண்ணதாசனும் வாலியும் வைரமுத்துவும் இப்படி நிறைய செஞ்சிருக்காங்க. திருக்குறள், சங்க பாடல்கள்ன்னு நிறைய கருத்துகளை அங்கேயிருந்து எடுத்தாண்டிருக்காங்க.
July 01, 2010 9:20 AM

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

I am not a robot
I am your old friend krs:)

வணக்கம் குமரன் அண்ணா, நலமா?
நான் தான் தோழி கோதையைக் கைவிட்டேன், என்பதற்காக நீங்களும் விடலாமா?

அவள் மார்கழியில், கூடலில் ஒன்றுமில்லையா?:)

குமரன் (Kumaran) said...

முதிய நண்ப (old friend) இரவி! :)

கோதை முகநூலுக்கு குடிபெயர்ந்தாள். அங்கே கூடல் இழைத்துக் கொண்டிருக்கிறாள்.