Friday, July 05, 2013

கோதை செய்தது சரியா?

'ஏனடி கோமளவல்லி. இந்த அநியாயத்தைக் கேட்டாயோ? கோதை பெருமாளுக்கு என்று தொடுத்து வைத்திருந்த மாலைகளை அவளே அணிந்து பார்த்தாளாமே?!'

'ஆமாம் கமலவல்லி. என்னவரும் சொன்னார்.'

'விஷ்ணுசித்தர் மிக மிக வருத்தப்பட்டாராம். மகள் செய்த தவற்றைக் கண்டிக்காமல் இருக்கவும் முடியவில்லை; திருமகளைப் போல் ஒரு மகள் பெற்றுளேன் என்று அவள் மேல் இருக்கும் பேரன்பால் கண்டிக்கவும் முடியவில்லை. சினந்து சில வார்த்தைகளை மட்டும் சொல்லிவிட்டு கோவிலுக்கு விரைந்து சென்றுவிட்டாராம்.'

'ஆமாம் கமலவல்லி. புதிதாக மலர்மாலைகளைத் தொடுத்துக் கொண்டு சென்றாராம். அப்படியும் பெருமாளின் திருமுகத்தில் இருந்த வாட்டம் நீங்கவில்லை என்று அர்ச்சகரும் பட்டர்பிரானும் பேசிக்கொண்டார்கள் என்று அப்போது திருக்கோவிலில் திருமஞ்சனத்தைத் தரிசிக்கச் சென்றிருந்த என்னவர் சொன்னார்'

'என்ன தான் அரசவைக்குச் சென்று எல்லா வேதங்களையும் ஓதி பொற்கிழி பரிசு பெற்றிருந்தாலும் பெண்ணைச் செல்லம் கொடுத்து வளர்த்தாலே இப்படித் தான். சொல் பேச்சு கேட்க மாட்டார்கள்.'

'என்ன இப்படி சொல்லிவிட்டாய் கமலவல்லி? கோதை சிறுமியாக இருக்கும் போது அவளின் அறிவையும் அழகையும் எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பாயே. இப்போது சொல் பேச்சு கேட்காதவள் என்று சொல்கிறாயே. பாவம் அவள். தந்தையார் சினந்ததற்காக ரொம்பவும் மனம் வருந்தியிருப்பாள்'

'கோமளவல்லி. காரணம் இல்லாமலா நான் அப்படி சொல்கிறேன். கோதை மனம் வருந்தினாள் என்றா நினைக்கிறாய். இல்லவே இல்லை. "நான் என்ன தவறு செய்தேன்? கண்ணாடியில் கண்ணன் தெரிந்தான். அவனுக்குரிய மாலையை அவனுக்குச் சூட்டினேன்" என்கிறாளாம். செய்யத் தகாததைச் செய்து விட்டுப் பின்னர் அதற்கு ஒரு காரணமும் சொல்கிறாளே?!'

'அப்படியா சொன்னாள்? சொல்லியிருப்பாள். அவள் தான் எப்போதும் கண்ணன் நினைவாகவே இருக்கிறாளே. என் மகள் கூடச் சொன்னாள். மாதவனுக்கே நான் உரியவள் என்று சொல்லிவிட்டாளாம்.'

'ஆமாம். நானும் கேள்விப்பட்டேன். மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று திமிராகவும் சொன்னாளாம். யார் மீதும் அவளுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. தந்தையாரிடமே அப்படிச் சொன்னாள் என்றால் அவளின் திமிரை என்ன சொல்வது? அதனால் தான் அவள் சொல் பேச்சு கேட்காதவள் என்றேன். இப்போது ஒத்துக் கொள்கிறாயா?'

'என்ன கமலவல்லி? இப்படி சொன்னால் எப்படி? காதல் கொண்ட யார் தான் பெரியவர் சொன்ன பேச்சைக் கேட்டிருக்கிறார்கள்? காதல் வந்தாலே பெற்றாரும் உற்றாரும் எதிரிகள் என்று தோன்றத் தொடங்கிவிடுமே. அது காதலர் குற்றமா? அது காதல் செய்யும் வேலை. இவளும் கண்ணன் மேல் காதல் நோய் கொண்டு நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வருகிறாளே. அந்த காதல் வேகத்தில் அப்படி சொல்லியிருப்பாள். அதனைப் போய் குற்றமாகச் சொல்லலாமா?'

'கோமளவல்லி. நீ என்ன தான் சொல். எனக்கு கோதையின் போக்கே பிடிக்கவில்லை. என் பெண்ணாய் இருந்தால் இதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டேன். இவள் செய்த செயலால் எங்கே தெய்வ குற்றமாக ஆகியிருக்குமோ என்று இப்போது எல்லோரும் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மண்டலமாய் இந்தத் தவற்றைச் செய்தாளாமே?! இது வரை நம் ஊரில் யாருக்கும் எந்த தீங்கும் வராமல் இருப்பதே பெரிய வியப்பு. இனி மேலும் எந்த தீங்கும் வந்துவிடக்கூடாது என்று ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று என்னவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்'

'கமலவல்லி. கோதை அறியாத பெண். அவள் செய்ததெல்லாம் பெரும் தவறே இல்லை. பெருமாளும் கருணைக்கடல். எந்தத் தீங்கும் நம் ஊருக்கு வராது. நீயும் வருந்தாதே. உன்னவரிடமும் வருந்த வேண்டாம் என்று சொல்லிவிடு. (மனத்தில் : இதற்கு மேல் இங்கிருந்தால் நமக்கும் கோதையின் மேல் வெறுப்பு வரும் படி செய்துவிடுவாள்.) எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. பின்னர் வருகிறேன்'

3 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

10 comments:

ENNAR said...
அம் மலர் மாலையில் முடியிருந்ததைக் கண்டு அதை வைத்து விட்டு வேறு மாலை தொடுத்துச் சென்றாராமே !! அப்பாடி குமரன்
February 17, 2007 8:38 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் என்னார் ஐயா. முதலில் தலைமுடியைக் கண்டு வேறு மாலைகளைத் தொடுத்துக் கொண்டு சென்றார். பின்னர் மகள் மாலைகளை அணிந்து கொள்வதைப் பார்த்து வேறு மாலைகளைத் தொடுத்துக் கொண்டு சென்றார். அப்பாடி என்று நீங்கள் சொல்வது எதனால் என்று புரியவில்லையே ஐயா?
February 17, 2007 9:09 PM
கீதா சாம்பசிவம் said...
இன்னிக்குத் தான் உங்க பதிவுக்கு வழி கிடைத்தது. கோதை சூடிய மாலை என்றால் ரங்கனுக்குப் பிரியம் என்று பெரியாழ்வாருக்குத் தெரியாமல் இருக்குமா? இருந்தாலும் ஊருக்காக இப்படி எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறதுன்னு செய்திருப்பார்.
February 18, 2007 3:44 AM
வல்லிசிம்ஹன் said...
உண்மைதானே குமரன்.அதுதானே நடந்தது.
மலையில் முடி இருந்தது இங்கேயும் உண்டு.
திருச்சேரை சௌரிராஜப் பெருமாள் தல புராணத்திலும் உண்டு என்று நினைக்கிறேன்.
கோதை செய்ததில் தவறேது?
அவள் தான் வேறு அவன் வேறு என்றே நினைக்கவில்லையே.அவன் உடைமையை அவன் இன்னும் கொள்ளாமல் போகின்றானே என்றுதானே வருந்துகிறாள்.
February 18, 2007 7:47 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்

//'என்ன தான் அரசவைக்குச் சென்று எல்லா வேதங்களையும் ஓதி பொற்கிழி பரிசு பெற்றிருந்தாலும் பெண்ணைச் செல்லம் கொடுத்து வளர்த்தாலே இப்படித் தான்.//

பக்தி என்னும் கடலில் ஆழ்ந்தவர்களைக் கடலின் கரையில் உள்ளவர்கள் உலக வழக்கமாக என்ன சொல்லுவார்களோ, அதைக் கோதையின் மேல் அழகாக ஏற்றிச் சொல்லி உள்ளீர்கள்!

மாலை மாற்றுதல் என்ற மரபைத் திருமணம் வரை காத்திராமல், முன்பே செய்து விட்டாள் கோதை!
மானுடர்க்கு என்று பேச்சுப்படின் வாழகில்லேன் என்பதால் உலகத்தார் கண்களுக்கு அவள் பேதை!

சபரியின் எச்சிற் பழம் நிவேதனம் ஆவதும்
அழுக்குத் துணி அவல் அள்ளி உண்பதும்
பழத்தை வீசி விட்டுத் தோலை உண்ணத் தருவதும்,
உலகத்தார்க்கு முதன் முதலில் அபசாரம் என்று தெரியலாம்.
உபசாரம் என்று பின்னர் தெளியலாம்!

வசவுகளுக்கு இடையே வளரும் காதல் தான் கெட்டிப்படும்; கோதை, நீ தொடர்ந்து மாலைகளை அப்படியே தந்து கொண்டிரு அம்மா!
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் - நீ
பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்!
February 18, 2007 10:16 PM
குமரன் (Kumaran) said...
கீதா அம்மா. கதையில் இந்த நேரத்தில் கோதை திருத்தேவியர்களில் ஒருவர் என்று பெரியாழ்வாருக்குத் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். அவர் கருடாழ்வாரின் அவதாரம் என்ற பார்வையில் பார்த்தால் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆழ்வார் என்று பார்த்தால் தெரிந்திருக்காது.
February 19, 2007 3:01 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் வல்லியம்மா. சௌரிராஜப் பெருமாள் திருக்கதையை நானும் படித்திருக்கிறேன்.

அவன் உடைமையை அவன் கொள்ளாமல் காலம் தாழ்த்துகிறான் என்று தானே திருப்பாவையில் தானே சென்று அவனை எழுப்பி ஏழேழ் பிறவிக்கும் பறை கேட்கிறாள். அவனும் ஆஆ என்று ஆராய்ந்து அருளுகிறான்.
February 19, 2007 3:03 PM
குமரன் (Kumaran) said...
நன்கு சொன்னீர்கள் இரவிசங்கர். அருமை.
February 19, 2007 3:05 PM
Mathuraiampathi said...
இன்றுதான் படிக்க நேரம் கிடைத்தது...அருமை குமரன், தங்கள் எழுத்தில் கோதை ஏதோ நமக்கு பக்கத்து வீட்டில் வசிப்பதொத்த உணர்வு. (உண்மையும் அதுதானே மதுரைக்கு பக்கத்தில் தானே அவள் வசிக்கிறாள், என்ன நாம் (நீங்களும் நானும்) மதுரையில் இல்லை.

பதிவுக்கு நன்றி...
February 23, 2007 4:56 AM
குமரன் (Kumaran) said...
தங்கள் பாராட்டிற்கு நன்றி மதுரையம்பதி மௌலி ஐயா. மதுரையில் இருந்தால் தான் மதுரை நினைவு இருக்குமா? எந்த ஊர் சென்றாலும் நம்மூரை நினைப்பது நம் இயற்கை அல்லவா?
February 23, 2007 6:20 AM

ராஜி said...

இதும் இறைவனின் திருவிளையாடலே!

இரவின் புன்னகை said...

யாவும் திருவிளையாடலே!!!