Friday, August 23, 2013

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
தீதும், நன்றும், பிறர் தர வாரா!
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன!
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

எல்லா ஊரும் எங்கள் ஊர்; எல்லாரும் நண்பர்கள், உறவினர்கள்! தீமையும் நன்மையும் பிறர் தந்து வருபவை இல்லை - நாம் செய்த செயல்களின் பயன்களாக வருபவை! 

அதே போல் தான் மற்றவர் அவமானப்படுத்திவிட்டார்கள் என்று மனம் நொந்து போவதும், சில நாட்கள் பின்னர் நோவு தணிந்து போவதும் (அதாவது நாமே நினைத்துக் கொள்வது தான்)! 

சாவது புதியது இல்லை; உலகம் தோன்றிய நாள் முதல் அது இருக்கிறது!

என்றும் வாழ்வதே இனியது என்று மகிழ்ந்தும் இருப்பதில்லை; ஏனெனில் வாழ்வது சில நேரம் கடினமானது. 

சினம் கொள்வதைப் போல் இனிமையில்லாதது எதுவும் என்றுமே இருந்ததில்லை! 

மின்னலுடன் வான்மழை பெய்து கல்லும் மண்ணும் அடித்துச் செல்லும் பேராற்றின் நீரில் செல்லும் சிறு படகு நீர் செல்லும் வழியில் செல்வதைப் போல் உயிரின் வாழ்க்கையும் தம் தம் இயல்பிற்கு ஏற்ப செல்கிறது என்று அறிந்தவர் சொன்னதை கேட்டுத் தெளிந்தோம்!

ஆதலால் அறிவில், அன்பில், வலிமையில், செல்வத்தில், அதிகாரத்தில் பெரியவர்களை வியந்து போற்றுவதும் இல்லை! 

அவ்வாறு பெரியவரைப் போற்றுவது கூட சில நேரம் செய்வது உண்டு! எப்போதும் அறிவில், அன்பில், வலிமையில், செல்வத்தில், அதிகாரத்தில் குறைந்தவர்களை இகழ்வது என்பது கிடையவே கிடையாது!

3 comments:

RajalakshmiParamasivam said...

Nice presentation.
N.Paramasivam

வெற்றி said...

குமரன்,
பதிவுக்கு மிக்க நன்றி. இப் பாடலின் முதல் இரு வரிகள் மட்டும் கேட்டிருக்கிறேன். இன்று உங்கள் பதிவின் மூலம் முழுப் பாடலையும் அறிந்து கொண்டேன்.

மிகவும் எளிமையான விளக்கம்.

நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி வெற்றி.