Tuesday, July 02, 2013

தீர்ந்தது திருமுக வாட்டம்!

'வாருங்கள் பட்டர்பிரானே. தங்களுக்காகத் தான் காத்திருக்கிறேன். திருமுழுக்காட்டும் இப்போது தான் நிறைவு பெற்றது. எம்பெருமான் பீதகவாடை அணிந்து கொண்டு தேவரீர் கொண்டு வரும் திருத்துழாய் மாலைகளுக்காகவும் பல்வகை பூமாலைகளுக்காகவும் காத்திருக்கிறான்'.

'திருமுழுக்காட்டு ஆகிவிட்டதா? அடடா! என்றும் திருமுழுக்காட்டு காண வந்துவிடுவேனே. இன்று திருத்துழாய் சிறிது குறைந்தது என்று இரண்டாவது முறை சென்றுப் பறித்து வந்து மாலையைத் தொடுத்ததால் சற்று நேரமாகிவிட்டது பட்டரே. எப்படியோ பெருமானை வெகு நேரம் காக்க வைக்காமல் நேரத்திற்கு வந்தேனே. இதோ மலர் மாலைகளும் திருத்துழாய் மாலைகளும். ஆலிலைப்பள்ளியானுக்குச் சாற்றுங்கள்'.

'விட்டுசித்தரே. திருமுழுக்காட்டு நடக்கும் போதெல்லாம் எம்பெருமான் திருமுகமண்டலத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் சிறிது நேரமாக அவன் திருமுகத்தில் வாட்டம் தெரிவதாக அடியேனுக்குத் தோன்றுகிறது. தேவரீர் கொஞ்சம் பார்த்துச் சொல்ல வேண்டும்'.

'ஆமாம் பட்டரே. அடியேனுக்கும் அப்படியே தோன்றுகிறது. தாங்கள் நேற்று சூட்டிய திருத்துழாயைக் களைந்து வெகு நேரம் ஆகிவிட்டதா என்ன?'

'இல்லை விட்டுசித்தரே. சிறிதே நேரம் தான் ஆகியது. நமக்குத் தான் திருமாலவன் திருவிடம் மட்டுமின்றி திருத்துழாயிடமும் மால் கொண்டவன் என்று தெரியுமே. திருமுழுக்காட்டின் போதும் திருத்துழாய் மாலையை அணிவித்துத் தானே திருமுழுக்காட்டுவோம். புதிய ஆடையை இப்போது தான் அணிவித்தேன். அதற்குள் தாங்கள் வந்துவிட்டீர்கள். எம்பெருமானால் அந்த சிறிது நேரத்திற்குக் கூட திருத்துழாயைப் பிரிந்து இருக்க முடியவில்லையா? வியப்பு தான்'.

'பட்டரே. காலம் தாழ்த்தாமல் எம்பெருமானுக்குத் திருத்துழாய் மாலையைச் சூட்டுங்கள். அவன் திருமுகம் மேகம் சூழ்ந்த நிலவு போல் இருப்பதைக் காண இயலவில்லை'.

'இதோ சூட்டிவிட்டேன் பெருமானே. கொஞ்சம் பொறுத்தருளுங்கள்'.

'வடபெருங்கோயிலுடையானே. இதென்ன விந்தை?! திருத்துழாயை அணிந்த பின்னும் உன் திருமுகவாட்டம் மறையவில்லையே. பட்டரே. அனைத்து மலர்மாலைகளையும் சூட்டுங்கள். மாலவன் மனம் அப்போதாவது குளிர்கிறதா பார்ப்போம்'.

'இதோ சூட்டிவிட்டேன் பட்டர்பிரானே. இதோ சூட்டிவிட்டேன்'.

'என்ன விந்தை இது? திருத்துழாயை அணிந்த பின்னும் மாறாத திருமுகவாட்டம் மலர்மாலைகளைச் சூட்டியவுடன் மாறிவிட்டதே. என்ன வியப்பு? ஆகா. இப்போது சுவாமியின் திருமுகம் முழு மதியைப் போல் விளங்குகிறதே. ஆயிரம் கண் போதாதே. ஆயிரம் கண் போதாதே. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு'.

'ஆமாம் விட்டுசித்தரே. உண்மை தான். மாயவன் மிகுந்த மாயைகள் புரிகிறான். திருத்துழாய் அணிந்த பின்னும் மாறாத திருமுகவாட்டம் மற்ற மலர் மாலைகளைச் சூட்டியதும் மாறிவிட்டதே. வியப்பிது காண்.'

***

விஷ்ணுசித்தரும் மற்றவர்களும் எம்பெருமானைப் பணிந்து இல்லம் திரும்புகின்றனர். இதே போல பல நாட்கள் கோதை சூட்டிக் கொடுத்த மலர்மாலைகளை அணிந்து கோவிந்தன் மன மகிழ்ந்து அடியவர்களுக்கு அருள் சொரிந்து கொண்டிருக்கிறான். அவனின் திருமுக மணடலத்தில் தோன்றும் பெருமகிழ்ச்சியையும் அவன் கரியவாய திருக்கண்களையும் காண வேண்டுமா? இதோ...



***

அருஞ்சொற்பொருள்:

பட்டர்பிரான் - பாண்டியன் சபையில் பரம்பொருளை அறுதியிட்டுக் கூறியதற்காக பாண்டியன் அவையில் பெரியாழ்வாருக்குக் கொடுக்கப் பட்ட பட்டம். பட்டர்பிரான் திருக்கதையைப் படிக்க 'விஷ்ணு சித்தன்' வலைப்பூவைப் பாருங்கள்.

திருமுழுக்காட்டு - அபிஷேகத்திற்கான தமிழ்ச்சொல். வைணவர்கள் அன்று முதல் இன்று வரை அபிஷேகத்திற்குச் சொல்லும் சொல்.

பீதகவாடை - மஞ்சள் ஆடை. பீதாம்பரம் என்று வடமொழியில் சொல்லப்படுவது.

திருத்துழாய் - துளசி.

பட்டர் - அர்ச்சகர். பெருமாள் கோயில் அர்ச்சகரை பட்டர் என்றும் பட்டாச்சாரியர் என்றும் அழைப்பார்கள்.

ஆலிலைப்பள்ளியான் - எல்லா உலகங்களும் தோன்றும் முன் ஒரு குழந்தை வடிவில் ஆலிலை மேல் பள்ளி கொள்வான் பரந்தாமன். அதனால் அவனுக்கு ஆலிலைப்பள்ளியான் என்று பெயர். அது வடமொழியில் வ்டபத்ரசாயி என்று பெயர்ப்பாகும். அதுவே வில்லிபுத்தூரில் வாழும் இறைவனின் திருப்பெயர்.

விட்டுசித்தர் - விஷ்ணு சித்தர் என்னும் திருப்பெயர் தமிழில் விட்டுசித்தர் ஆகிவிடுகிறது. பெரியாழ்வாரே தன் பாடல்களில் தன்னை விட்டுசித்தன் என்றே குறித்துக் கொள்கிறார். விஷ்ணு சித்தன் பெயர் விளக்கம் 'விஷ்ணு சித்தன்' வலைப்பூவில் காண்க.

திருமுகமண்டலம் - இறைவனின் முகம். இறைவனையும் அடியார்களையும் சேர்ந்த எதனையும் திரு என்ற அடைமொழியுடன் சொல்வது வைணவ மரபு.

தேவரீர் - தெய்வத்திற்கு சமமான தாங்கள். பெரியவர்களையும் மதிக்கத் தகுந்தவர்களையும் வைணவர் அழைக்கும் சொல்.

அடியேன் - தன்னைக் குறித்துக் கொள்ள வைணவர் சொல்லும் சொல். ஒருவர் மாற்றி ஒருவர் அடியேன் என்று சொல்லிக் கொண்டு பேசுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

மால் - மயக்கம்; திருமால் - திருவிடம் மயங்கியவன்; மயக்குபவன்.

வடபெருங்கோயிலுடையான் - வில்லிபுத்தூர் பெருமானின் திருப்பெயர்.

முடிந்தவரை கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று எண்ணும் சொற்களுக்கு அருஞ்சொற்பொருள் கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். அதனால் பதிவைப் படிக்கும் போது ஏதாவது சொல் புரியவில்லை என்றால் பதிவின் இறுதியில் பாருங்கள். பெரும்பாலும் அந்த சொற்களுக்குப் பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி அடியேன் ஏதேனும் சொல்லுக்குப் பொருள் சொல்லாமல் விட்டிருந்தால் கேளுங்கள். அவற்றையும் பட்டியலில் பொருளுடன் சேர்த்துவிடுகிறேன்.

***

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

3 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

16 comments:

ஞானவெட்டியான் said...
2007 வருட ஆரம்பமே மாயவன் வந்துவிட்டான். இனிக் கவலையில்லை.
அருமை குமரன்.
December 31, 2006 8:12 PM
SK said...
அப்படியே ஒரு நிமிடம் வில்லிபுத்தூரில் இருந்த உணர்வைக் கொடுத்தது இப்பதிவு.

சொற்களுக்கான விளக்கமும் நன்று!

புத்தாண்டு புனிதமாய்ப் பிறந்தது!
January 01, 2007 12:32 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
நல்ல ஆரம்பம் நல்லதற்கு அறிகுறி.புது வருடத்தன்று கண்ணனின் நேத்ர தரிசனத்தை காட்டியதற்கு நன்றி.
January 01, 2007 6:39 AM
K.V.Pathy said...
adyEn 'nUrAyiram' enbaDu 'nURAyiram' enRu irukkavENDum ena ninaikkiREn.
Pathy.
January 01, 2007 10:38 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வைணவ அகராதிக்கு நன்றி குமரன்!
பேசாமல், இதற்கு ஒரு வலைப்பூ தொடங்கி விடலாம் போல் உள்ளதே!
January 02, 2007 12:45 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
தங்கள் மடல் கண்டு உடனே வடபெருங்கோவிலான் திருக்கண்ணழகு கண்டேன்! ஆனால் உடனே பின்னூட்ட முடியவில்லை!

புதுவருட நண்பர்கள் அழைப்பு, பல இடங்களுக்கு ஓட்டம்! இல்லை என்றால் நம்மை தமிழ்மணத் தம்பி என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்! :-)
January 02, 2007 12:48 AM

குமரன் (Kumaran) said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வடபெருங்கோவிலுடையான் சுதைச் சிற்பம் அல்லவா குமரன்? புனுகும் சாந்தமும் சார்த்துவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்!

திருமுழுக்காட்டு = திருமஞ்சனம் என்பதையும் அகராதியில் சேர்த்து விடுங்கள்!

எம்பெருமான் திருமுக வாட்டம் காணும் பட்டர்களும் பட்டர் பிரானும் எவ்வளவு அன்புடையவர்கள்! இன்று அப்படி எல்லாரும் இருந்தால் ஆலயங்களில் அருட் கொடி அல்லவா பட்டொளி வீசி பறக்கும்!

ஆனாலும் நல்லன்பர் நாலு பேர் உள்ளதால் தான் அருள் மழை பொழிகிறது போலும்!

//திருத்துழாய் மாலையை அணிவித்துத் தானே திருமுழுக்காட்டுவோம்//

அருமையான தகவலையும் சொல்லி உள்ளீர்கள்! திருமஞ்சனம் முடிந்த பின்னும் புதிய துழாய்த் தளங்களை அவன் திருவடியில் சமர்பித்து பின்னர் தான் பழைய மாலையைக் களைவார்கள்! அகலகில்லேன் என்று துழாயும் அவன் உடனுறையும்!

அலங்காரம் முடிந்த பின்னர், முதலில் துழாய் சார்த்தி, பின்னர் திருமறு மார்புக்கும், அவன் திருப்படைகளுக்கு மலர்கள் சார்த்தி, அதன் பின்னரே அவனுக்கு சார்த்துவது வழக்கம்!
January 02, 2007 12:58 AM
குமரன் (Kumaran) said...
உண்மை தான் ஞானவெட்டியான் ஐயா. எங்கள் இல்லத்தில் மாயவன் மருகனும் வந்துவிட்டான். இனிக் கவலையில்லை. மாயவனும் அவன் மருகனும் என்றென்றும் நம்மைக் காப்பர்.
January 25, 2007 8:38 PM
குமரன் (Kumaran) said...
தங்களின் அன்பான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி எஸ்.கே. எழுதும் போது அடியேனுக்கும் அப்படியே ஒரு உணர்வு தோன்றியது.
January 25, 2007 8:39 PM
குமரன் (Kumaran) said...
கண்ணுக்கினியன காண்பதில் தானே இன்பம் தி.ரா.ச. மிக்க நன்றி.
January 25, 2007 8:39 PM
குமரன் (Kumaran) said...
பதி ஐயா. நீங்கள் சொன்ன பிழை திருத்தத்தைச் செய்து விட்டேன். மிக்க நன்றி.
January 25, 2007 8:40 PM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். எடுத்ததற்கெல்லாம் வலைப்பூ துவங்கி நான் படுவது போதும். நீங்களும் எல்லாவற்றிற்கும் வலைப்பூ புதிது புதிதாகத் துவங்காதீர்கள். :-)
January 25, 2007 8:41 PM
குமரன் (Kumaran) said...
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாமெல்லாம் தமிழ் வலைப்பூ தம்பிகள் தானே இரவிசங்கர். :-)
January 25, 2007 8:42 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் இரவி. மூலவர் சுதைச் சிற்பம். திருமுழுக்காட்டு உற்சவருக்கு. திருமாலைகள் இருவருக்கும்.

நீங்கள் சொன்னதை நானும் திருவரங்கத்தில் கண்டிருக்கிறேன். திருப்பாதங்களில் திருத்துழாயை அணிவித்துவிட்டே துழாய் மாலையை களைவதை.

மலர் மாலை சூட்டும் முறையை இதுவரை அறிந்திலேன். இன்று அறிந்தேன். மிக்க நன்றி.
January 25, 2007 8:44 PM
Radha said...
குமரன்,
"அரங்கத் தமலன் முகத்து கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்பெரியவாய கண்கள்" என்பதற்கு ஏற்றார் போல இந்த இடுகையில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கனின் கண் உள்ளது. நான் இந்த படத்தை சுட்டு விட்டேன். :-) தங்கள் அனுமதிக்கு நன்றி. :-)
~
ராதா
July 11, 2009 7:46 AM
குமரன் (Kumaran) said...
சுட்டு விட்டு அதன் பின்னர் அனுமதி பெற்றதற்கு நன்றி இராதா. நான் சுட மட்டும் செய்தேன்; அனுமதி யாரிடமும் பெறவில்லை. அதனால் என்னை விட நீங்கள் மேல். :-)
August 14, 2009 1:10 PM