Tuesday, July 09, 2013

பாவமா? எது பாவம்?

கோகுலத்தில் வழக்கம் போல் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. கண்ணன் இருந்த நாட்களை நினைவில் கொண்டு 'அந்த நாளும் வந்திடாதோ?' என்று ஏங்கிக் கொண்டு கோபர்களும் கோபியர்களும் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். கண்ணனைக் குழந்தையாகவும் சிறுவனாகவும் இடர்களிலிருந்து காப்போனாகவும் கண்டு மகிழ்ந்திருந்த நாட்களை வயதில் மூத்த ஆயர்களும் ஆய்ச்சியர்களும் தங்களுக்குள்ளும் மற்றவர்களிடமும் சொல்லிச் சொல்லிப் பெருமிதமும் ஆற்றாமையும் இன்பமும் துன்பமும் என மாறுபாடான உணர்ச்சிகளை ஒருங்கே அனுபவித்துக் கொண்டிருந்தனர். இளைய ஆயர்கள் கண்ணனின் கூட்டாளிகளாகக் கானகத்திற்குப் பசுக்களையும் கன்றுகளையும் எருதுகளையும் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்ற அந்த நாட்களை நினைத்துக் கொண்டு, அந்த நாட்களில் தாங்களும் கண்ணனும் பலதேவனும் செய்த குறும்புகளையும் நினைத்துக் கொண்டு, அடிக்கடி அவற்றை மீண்டும் நடித்துக் கொண்டு, தங்களுக்குள் கண்ணனைப் பிரிந்த துக்கத்தை மறக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.

கன்னியரின் நிலையோ இன்னும் பரிதாபம். புழக்கடையில் வளர்ந்து நிற்கும் மூங்கில்களில் தானே காற்று புகுந்து எப்போதாவது இசை கேட்டால் அது கண்ணனின் குழலோசை என்றே மயங்கி, போட்டது போட்டபடியே விட்டுவிட்டு காற்றினிலே வரும் கீதத்தின் திசை நோக்கி ஓடிச் சென்று அது தானே எழும் ஓசை என்று கண்டு வருந்தி நிற்பதும் உண்டு. கருத்த மேகங்களைக் கண்டாலும் சரி; வண்டுகளின் ரீங்காரங்களைக் கேட்டாலும் சரி; மேய்ச்சலுக்குக் கறவைகள் செல்லும் போதும் சென்று வரும் போதும் அவற்றின் கழுத்து மணி ஓசையைக் கேட்டாலும் சரி; இப்படியே எவை எல்லாம் கண்ணனை நினைவூட்டுகிறதோ அவை எல்லாம் நிகழும் போது கண்ணனைக் காண ஓடி வந்து கண்ணனைக் காணாமல் மனம் வருந்தி செயல் மறந்து வருந்தியே காலம் கழிந்து கொண்டிருக்கிறது. ஆயர்களைப் போல் தங்களுள் ஒருத்தியைக் கண்ணனாக நடிக்கச் செய்து பார்ப்பதும் உண்டு. என்ன செய்து என்ன பயன்? கண்ணன் எனும் கருந்தெய்வம் கறுத்த மனம் கொண்டவனாக இருக்கிறானே. தானும் வருவதில்லை. தன்னைப் பற்றியச் செய்தியையும் அனுப்புவதில்லை. அடியாரைக் கடைசி வரை துன்புறச் செய்துவிட்டு கடைசியில் வருவது தானே அவன் கருத்தாக இருக்கிறது.

***

'நீளா. அங்கே வருவது யார்? முன்பு ஒரு முறை பார்த்தது போல் இருக்கிறதே'

'அவர் நாரத மகரிஷி மாலதி. முன்பொரு முறை கண்ணனைக் காண வந்திருக்கிறார் இங்கே'

'வாருங்கள் மகரிஷியே. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.'

'பெண்களே. நீங்கள் யார்?'

'சுவாமி. நாங்கள் கோகுலவாசிகள். என் பெயர் மாலதி. இவர்கள் என் நண்பர்கள் நீளா, மாதவி, சந்திரரேகா, நிர்விதந்திகா, புண்டரிகா, சிதாகந்தி, சாருலேகா, சுதந்திகா, ஸ்ரவந்திதா, ஹரிமித்ரா, கௌரி, சாருசண்டி, குந்தி, வருணா, சுந்தரி, சிவா, ரத்னப்ரபா, ரதிகலா, சுபத்ரா, ரதிகா, சுமுகி, தனிஷ்டா, காலஹம்ஸி, கலாபினி, குஞ்சரி, ஹரிணி, சாபலா, தாமினி, சுரபி, சுபானனா, சுசரித்ரா, மண்டலி, மணிகுண்டலா, சந்திரிகா, சந்த்ரலதிகா, தேஜஸ்வினி, பங்கஜாக்ஷி, சுமந்திரா, திலகினி, சௌரசேனி, சுகந்திகா, ரமணி, காமநகரி, நாகரி, நாகவேணிகா, கமலவேணி, சுமதுரா, சுமத்யா, மதுரேக்ஷணா, தனுமத்யா, மதுஸ்பந்தா, குணசூடா, வராங்கதா, துங்கபத்ரா, காவேரி, ரங்கவதி, யமுனா, சரஸ்வதி, சித்ரரேகா, விசித்ராங்கி, சசிகலா, கமலா, கங்கா, மதுரேந்திரா, கந்தர்ப்ப சுந்தரி, பிரேம மஞ்சரி, சாருசீலா, சுகேசி, மஞ்சுகேசி, மனோஹரா, வ்ருந்தா, குணமாலா, மஞ்சுளா, நந்திமுகி, பிந்துமதி, சந்த்ராவளி, சுகந்தி, நர்மதா, குஸுமப்ரியா, நளினி, காத்யாயணி, மந்த்ரிகா, சுபலா, உஜ்வலா, பாக்யவதி, கார்க்கி, விஜயா, கந்தர்வா, ம்ருதுளா, லலிதா, விஷாகா, சித்ரா, இந்துலேகா, துங்கவித்யா, ரங்கதேவி, சுதேவி. இவள் எங்களுக்கெல்லாம் நாயகப் பெண்பிள்ளையான ராதிகா. நாங்கள் எல்லோரும் வணங்குகிறோம். விரைவில் கண்ணனின் தரிசனம் எங்களுக்குக் கிடைக்க ஆசி கூறுங்கள்'.

'கண்ணனின் தரிசனமா? விரைவில் உங்களுக்கு கண்ணனின் தரிசனம் கிட்டட்டும். நான் இப்போது தான் பகவானின் தரிசன சௌபாக்கியத்தைப் பெற்று வந்து கொண்டிருக்கிறேன்'.

'கண்ணனைக் கண்டீர்களா? எப்படி இருக்கிறான் கண்ணன்?'

'நேரத்திற்கு உண்கிறானா?'

'இன்னும் அதே குறும்பு தானா?'

'எங்கள் நினைவு இருக்கிறதா?'

'உங்களை அவன் தான் அனுப்பினானா?'

'எங்களுக்கு ஏதாவது செய்தி சொன்னானா?'

'மெலிந்தான் என்று சொன்னார்களே. மெலிந்துவிட்டானா?'

'அவனுக்கென்ன உண்டு உறங்கி நலமாக இருப்பான். நாம் தான் மெலிவோம். மெலிவொன்றும் இல்லாதவன் அவன்'.

இப்படியே பற்பல கேள்விக்கணைகள் எல்லா திசைகளிலும் இருந்து வரவே நாரத முனிவரால் எல்லாவற்றிற்கும் விடை கூற இயலவில்லை.

'பொறுங்கள் பெண்மணிகளே. ஒரே நேரத்தில் எல்லோரும் இப்படி கேள்விகளைக் கேட்டால் எப்படி? கண்ணன் தான் இங்கே என்னை அனுப்பினான். அவன் உடல் நலம் இப்போது அவ்வளவு நன்றாக இல்லை'.

இந்தச் செய்தியைக் கேட்டதும் எல்லா கோபியர்களுக்கும் ஒரே நேரத்தில் பனியும் பெய்து வெயிலும் கொளுத்தியதைப் போன்று இருந்தது.

'சுவாமி. எங்கள் கண்ணனுக்கு உடல் நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று சுவாமி? விரைவில் சொல்லுங்கள்' என்று பதைபதைத்துக் கேட்டனர்.

'கண்ணனுக்குக் கடுமையான தலைவலி நங்கையர்களே. ஒரு விசித்திரமான மருந்து மட்டுமே அந்தத் தலைவேதனையை நீக்கும் என்று சொல்லிவிட்டான் கண்ணன். அதைத் தேடித் தான் இங்கே வந்திருக்கிறேன்'.

'கண்ணன் தலைவலிக்கு மருந்து கோகுலத்திலா? உடனே சொல்லுங்கள் மகரிஷியே. நாங்கள் எப்பாடு பட்டேனும் அந்த மருந்தைக் கொண்டு வந்து தருகிறோம்'.

'பெண்களே. அது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. கண்ணனின் மேல் மிக அந்தரங்கமான அன்பு உடைய பக்தரின் திருவடித் துகள்கள் வேண்டும். அதனை கண்ணன் தன் தலையில் தடவிக் கொண்டால் அவன் தலைவலி நீங்கிவிடுமாம்'.

நாரதர் முழுமையாகச் சொல்லி முடிக்கவில்லை. ஒரு பெண் தன்னுடைய மேலாடையைத் தரையில் விரித்தாள். எல்லா பெண்களும் அதில் ஏறிக் குதித்துத் தங்கள் காலடி மண்ணைக் கைகளால் தடவி எடுத்து ஒரு சிறு மூட்டையாக்கி நாரதரின் கைகளில் கொடுத்தார்கள். நாரதருக்கோ ஒன்றுமே புரியவில்லை. திகைத்து நிற்கிறார். கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பின்னர் அந்தப் பெண்களைப் பார்த்து கேட்டார்.

'என்ன செய்கிறீர்கள் நீங்கள்? ஏன் இப்படி உங்கள் காலடி மண்ணை மூட்டை கட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்?'

'சுவாமி. கண்ணனுக்கு தலைவலி என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே. விரைவில் இதனை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். அவன் தலைவலி நீங்க வேண்டும் என்பதே எங்கள் முதல் கவலை. அது நீங்கிய பின் உங்களுக்கு விளக்கம் சொல்கிறோம். தயைசெய்து விரைவில் இதனை எடுத்துக் கொண்டு சென்று கண்ணனின் தலைவலி தீர வழி செய்யுங்கள்'.

'என்ன சொல்கிறீர்கள் பெண்களே? உங்கள் காலடி மண் கண்ணனின் தலைவலியைத் தீர்த்துவிடுமா? நீங்கள் அவ்வளவு பெரிய பக்தர்களா?'

'சுவாமி. நேரம் ஆகிறது. விரைந்து எடுத்துக் கொண்டு செல்லுங்கள். பின்னர் தங்கள் கேள்விகளுக்கு விடை சொல்கிறோம்'.

'பெண்களே. என் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். அப்போது தான் நான் திரும்பிச் செல்வேன்'.

'ஆகட்டும் சுவாமி. உங்கள் கேள்விகளுக்கு விடை சொல்கிறோம். எங்களில் யார் பக்தர் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் கண்ணன் எங்களிடம் உங்களை அனுப்பியதால் எங்களில் ஒருவர் பக்தர் என்பது நன்கு தெரிகிறது. அந்த பக்தரைத் தேடிப் பிடிக்க இப்போது நேரம் இல்லை. அதனால் தான் நாங்கள் எல்லோருமே எங்கள் காலடி மண்ணைத் தந்தோம்'

'நீங்கள் சொல்வது சரி தான். இங்கே சிறந்த பக்தர் இருக்கிறார் என்று தான் என்னை இங்கே அனுப்பினான் கேசவன். ஆனால் அவன் சொன்ன பக்தரை எளிதாகக் கண்டு கொள்ளலாம் என்றல்லவா எண்ணினேன். நீங்கள் இப்படி சொல்கிறீர்களே?!'

'சுவாமி. எங்களுக்கு பக்தி என்றால் என்ன என்றெல்லாம் தெரியாது. அதனால் நாங்கள் பக்தர்களா என்று தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கண்ணன் மட்டுமே. உண்ணும் சோறு, பருகும் நீர், உடுக்கும் உடை என்று எல்லாமுமே கண்ணன் என்று இருக்கும் படி கண்ணன் கருணை செய்திருக்கிறான். அவன் எங்களுள் பக்தர் இருக்கிறார் என்று சொன்னதால் அது அப்படித் தான் இருக்கும் என்று எண்ணிக் கொள்கிறோம்'.

'சரி. உங்களில் யார் பக்தர் என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் எல்லோருமே சேர்ந்து இந்த மருந்தைத் தந்தீர்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இறைவனான கண்ணனின் தலையில் உங்கள் காலடி மண் படுமே?! அது பெரும் பாவமாயிற்றே? அதனைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லையா? பேதைப் பெண்களாய் அல்லவா இருக்கிறீர்கள்?'

'சுவாமி. கண்ணன் இறைவனா? இருக்கலாம். நீங்கள் பெரிய அறிவாளி. நீங்கள் சொல்வதால் அது உண்மையாக இருக்கலாம். அவன் தலை மேல் எங்கள் காலடி மண் பட்டால் எங்களுக்குப் பெரும் பாவம் வரலாம். அதுவும் நீங்கள் சொல்வதால் உண்மையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு பாவம் வந்தாலும் பரவாயில்லை சுவாமி. கண்ணனின் தலைவலி உடனே நீங்க வேண்டும். அது தான் முதன்மையானது. மற்றதெல்லாம் அதற்குப் பின்னர் தான்'.

'பெண்களே. நீங்கள் பெரும்பாவம் செய்கிறீர்கள். இது சரியன்று. ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்துக் காத்து அழித்துக் கொண்டிருக்கும் பரம்பொருள் கண்ணன். அவன் தலையில் உங்கள் காலடி மண் படுவது சரியன்று. வேண்டாம் இந்த அபராதம்'.

'சுவாமி. எங்களுக்கு வரும் பாவத்தைப் பற்றி பின்னர் பேசலாம். ஒவ்வொரு நொடியும் கண்ணன் தலைவலியால் அவதிப்படுகிறானே என்று எண்ணினால் ஒவ்வொரு நரம்பும் வேதனையால் துடிக்கிறது. விரைவில் செல்லுங்கள். கண்ணனின் தலைவலி தீரும் வழியைச் செய்யுங்கள்'.

ஒன்றுமே புரியாமல் கோபியர்கள் முதுகைப் பிடித்துத் தள்ள அந்த வற்புறுத்தலால் அவர்கள் கொடுத்த சிறு மூட்டையுடன் அங்கிருந்து கிளம்பினார் நாரதர்.


***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

5 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

மங்கை said...
தன்னலம் அற்ற பக்தி... இறைவனிடம்
தங்கள் அன்பின் மூலமாக முழுவதுமாக சரணாகதி அடைந்தவர்களின் மனநிலை..
பக்தி என்பது என்ன என்பதை உணர்த்தும் கதை இல்லையா?...ம்ம்..
March 10, 2007 8:19 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் மங்கை. இந்த இடுகை நீண்டு விட்டது. நீண்ட இடுகையையும் படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

போன இடுகையில் உங்கள் கேள்விக்கு விடை சொல்லியிருக்கிறேன். பார்த்தீர்களா?
March 10, 2007 9:41 PM
மங்கை said...
விடையை படித்தேன் குமரன்..நன்றி
March 10, 2007 9:50 PM
வடுவூர் குமார் said...
இடுகை நீண்டால் என்ன? எழுத்தில் சுவாரஸ்யம் இருக்கும் போது அதைப்பற்றி கவலையில்லை.
தனக்கு பாபம் வந்தாலும் பரவாயில்லை,கண்ணன் தலைவலி போனால் போகும் என்று நினைக்கும் கோபியரின் உணர்வு-பக்த்தியின் உயர்நிலை.
March 10, 2007 11:30 PM
குமரன் (Kumaran) said...
நன்றி வடுவூர் குமார். தொடர்ந்து படித்துத் தங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.
March 11, 2007 7:39 AM
மதுரையம்பதி said...
இது அல்லவோ பக்தி.....நன்றி குமரன்.
March 12, 2007 4:59 AM
குமரன் (Kumaran) said...
ஆம் ஐயா. இதுவே பக்தி.
March 12, 2007 6:30 AM
வல்லிசிம்ஹன் said...
கோபிகளின் பக்திக்கு ஏது அளவு.

அவார்கள் தன்வசம் என்று ஒன்றுவைத்தால்தானெ கண்ணனுக்கும் மறுப்பார்கள்.

இத்தனை பெண்கள் பெயரை இப்போதுதான் பார்க்கிறேன்,.
மீண்டும் பாகவதம் படிப்பதுபோல் இருந்தது குமரன்.
நன்றி.
March 12, 2007 6:54 AM
குமரன் (Kumaran) said...
உண்மை வல்லியம்மா. எல்லாம் கண்ணன் என்று இருக்கிறார்கள்.

ஆய்ச்சியர்களின் பெயர்களைக் கண்ணனை வேண்டிக் கொண்டு எழுதத் தொடங்கினேன். பலமுறை சொற்பொழிவுகளில் கேட்ட பெயர்கள், பாகவதம், கண்ணன் கதைகள் படித்த போது படித்த பெயர்கள் என்று நினைவில் வந்த பெயர்களை எல்லாம் எழுதியிருக்கிறேன்.
March 12, 2007 7:07 AM

கவிநயா said...
அடேங்கப்பா. இவ்ளோ பெயர்களையும் எப்படி எழுதினீங்க குமரன்? கோபியர்களைப் போன்ற தூய்மையான அன்பு இறைவனிடம் எப்போது வாய்க்குமோ? கோதைத் தமிழைக் குமரன் சொல்லித்தான் கேட்க வேண்டும்! என்ன அருமையாகக் கதை சொல்கிறீர்கள்! தமிழும் பக்தியும் கலந்து மணக்கிறது. பதிவுகளை விடாது படித்ததால் தனித் தனியே பின்னூட்டம் இடவில்லை. மிகுந்த நன்றிகள் உங்களுக்கு!
May 31, 2008 9:38 PM
குமரன் (Kumaran) said...
நன்றி அக்கா.
June 12, 2008 12:06 PM

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மனமே முருகனின் மயில் வாகனம்!

மனத்தின் பாவனையே
குணத்தின் பாவனை

சரணாகதி என்பது மனத்தின் பாவனையே!
சமாஸ்ரயணச் சடங்கு அல்ல!

"பாவனை" அதனைக் கூடில்
"அவனையும்" கூட லாமே!!
--

//எங்களில் யார் பக்தர் என்று எங்களுக்குத் தெரியாது//

இதுவே "அடியவர்"!

//கண்ணன் இறைவனா? இருக்கலாம். நீங்கள் பெரிய அறிவாளி. நீங்கள் சொல்வதால் அது உண்மையாக இருக்கலாம்//

இதுவே "கூடி"

//எங்களுக்கு பாவம் வந்தாலும் பரவாயில்லை சுவாமி. கண்ணனின் தலைவலி உடனே நீங்க வேண்டும்//

இதுவே "அந்தமில் பேரின்பம்"
---

அந்தமில் பேரின்பத்து
அடியவர்களுடன் கூடி
= இதுவே மோட்சம் (எ) வாய்மொழி

வாழ்க்கையே போனாலும்
பாவமே வந்தாலும்
இந்தப் பாவனையிலேயே இருத்தி விடு முருகா!
மனமே முருகனின் மயில் வாகனம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கோகுலவாசி
1. மாலதி
2. நீளா
3. மாதவி
4. சந்திரரேகா
5. நிர்விதந்திகா

6. புண்டரிகா
7. சிதாகந்தி
8. சாருலேகா
9. சுதந்திகா
10. ஸ்ரவந்திதா

11. ஹரிமித்ரா
12. கௌரி
13. சாருசண்டி
14. குந்தி
15. வருணா

16. சுந்தரி
17. சிவா
18. ரத்னப்ரபா
19. ரதிகலா
20. சுபத்ரா

21. ரதிகா
22. சுமுகி
23. தனிஷ்டா
24. காலஹம்ஸி
25. கலாபினி

26. குஞ்சரி
27. ஹரிணி
28. சாபலா
29. தாமினி
30. சுரபி

31. சுபானனா
32. சுசரித்ரா
33. மண்டலி
34. மணிகுண்டலா
35. சந்திரிகா

36. சந்த்ரலதிகா
37. தேஜஸ்வினி
38. பங்கஜாக்ஷி
39. சுமந்திரா
40. திலகினி

41. சௌரசேனி
42. சுகந்திகா
43. ரமணி
44. காமநகரி
45. நாகரி

46. நாகவேணிகா
47. கமலவேணி
48. சுமதுரா
49. சுமத்யா
50. மதுரேக்ஷணா

51. தனுமத்யா
52. மதுஸ்பந்தா
53. குணசூடா
54. வராங்கதா
55. துங்கபத்ரா

56. காவேரி
57. ரங்கவதி
58. யமுனா
59. சரஸ்வதி
60. சித்ரரேகா

61. விசித்ராங்கி
62. சசிகலா
63. கமலா
64. கங்கா
65. மதுரேந்திரா

66. கந்தர்ப்ப சுந்தரி
67. பிரேம மஞ்சரி
68. சாருசீலா
69. சுகேசி
70. மஞ்சுகேசி

71. மனோஹரா
72. வ்ருந்தா
73. குணமாலா
74. மஞ்சுளா
75. நந்திமுகி

76. பிந்துமதி
77. சந்த்ராவளி
78. சுகந்தி
79. நர்மதா
80. குஸுமப்ரியா

81. நளினி
82. காத்யாயணி
83. மந்த்ரிகா
84. சுபலா
85. உஜ்வலா

86. பாக்யவதி
87. கார்க்கி
88. விஜயா
89. கந்தர்வா
90. ம்ருதுளா

91. லலிதா
92. விஷாகா
93. சித்ரா
94. இந்துலேகா
95. துங்கவித்யா

96. ரங்கதேவி
97. சுதேவி
98. ராதிகா
---

99. ராகவி
100. சங்கரி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒன்னுமில்ல குமரன்...

இந்தப் பெண்களின் பெயரை வாய் விட்டுச் சொல்லிப் பாக்கணும் போல இருந்துச்சி... அதான்!

அவன் சகஸ்ரநாமமோ, கோடி அர்ச்சனையோ இனிக்கவில்லை..

இவர்களின் பேர்-அர்ச்சனை இனிக்கிறது!

உங்கள் அனுமதி இன்றி,
பூர்த்திக்காகச் சேர்த்த கடைசி இரு பெயர்களுக்கு, என்னை மன்னிக்கவும்!

மனமே மயில் வாகன, கோகுலவாசி அர்ச்சனை சம்பூர்ணம்!

குமரன் (Kumaran) said...

இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

101. மீனா
102. மௌலினி
103. கீதா
104. சந்திரசேகரி
105. யோகினி
106. பாலா
107. ஷைலஜா
108. குமரி