Thursday, November 29, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 3

முந்தைய அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.

பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு 'மோகன். வருடத்திற்கு எத்தனை தடவை இந்த மாதிரி எனக்குப் பணம் தருவ?' என்று கேட்டார் தாத்தா. கந்தனுக்கு திக்கென்றது. 'ஒரு தடவை ஐநூறு ரூபாய் கொடுத்தால் இன்னும் எத்தனை தடவை கொடுப்பாய் என்று கேட்கிறாரே இந்தத் தாத்தா? சரியான பணத்தாசை பிடித்தவராய் இருப்பார் போலிருக்கிறது.' ஒரு நொடியில் பலவிதமான சிந்தனைகள் ஓடின கந்தனின் மனத்தில். மென்று முழுங்கி 'நீங்களே சொல்லுங்க தாத்தா' என்றான். 'எனக்கு மாசாமாசம் கொடு. ஆனா ஐநூறு ரூபாயில்லை. உன்னால முடிஞ்சது கொடு' என்றார். 'அப்பாடா. அம்பதோ நூறோ கொடுத்துக்கலாம்' என்று நினைத்துக் கொண்டு 'சரி தாத்தா' என்றான் கந்தன்.

'கேசவா. நீ மாசாமாசம் அன்னதானம் செய்யுற இல்லை? எப்படி நடக்குது அது?' என்று கேசவனிடம் தாத்தா கேட்க, அவனும் 'ஆமாம் தாத்தா. இருபத்தஞ்சு பொட்டலம் புளியோதரையோ சாம்பார் சாதமோ செஞ்சு பஸ் ஸ்டாண்ட், கோவில்ன்னு போயி அவங்க கையில கொடுக்குறேன் தாத்தா' என்றான். 'கொஞ்சம் தயிர் சாதமும் கொண்டு போ. யாருக்கு எது வேணும்னு கேட்டுக் குடு. இந்தா இந்த ஐநூறு ரூபாயை அதுக்கு வச்சுக்கோ. மோகனும் இனிமே மாசாமாசம் உன்னோட சேர்ந்துக்குவான். மோகன். எனக்கு நீ கொடுக்குறேன்னு சொன்ன பணத்துல நீயும் கேசவனும் சேர்ந்து அன்னதானம் பண்ணுங்க' என்றார் தாத்தா. கந்தனும் தலையாட்டினான்.

'சரி வாங்க உள்ள போகலாம்' என்று அவர்களை அழைத்துக் கொண்டு பனையோலைகளாலும் தென்னங்கீற்றுகளாலும் ஆன வீட்டிற்குள் கூட்டிச் சென்றார். நீள் சதுரமாக இருந்தது அந்த அறை. ஒரே அறை தான். அங்கேயே ஓரத்தில் ஒரு சின்ன மண்ணெண்ணெய் அடுப்பு இருந்தது. ஒரு சின்ன டேப்ரிகார்டரும் சில காஸெட்டுகளும் கிடந்தன. ஒரு கயிற்றுக் கட்டில் சுவரோரமாக இருந்தது. இரண்டு மூன்று பாய்களும் இரு தலையணையும் இன்னொரு ஓரத்தில் கிடந்தன.



கோவில் என்று மணிகண்டன் சொன்னானே என்று கந்தன் எண்ணிக் கொண்டே இருக்கும் போதே 'மோகன். இதோ இந்த படியில ஏறி உள்ளே பாரு. இது தான் கோவில்' என்று சொன்னார் தாத்தா. அவனும் உள்ளே போய் பார்க்க ஒரே இருட்டாக இருந்தது. கருவறை போல் இருந்த ஒரு அறையில் ஒரு நட்டு வைத்தக் கல் இருந்தது. சிவலிங்கமா ஏதாவது சிலையா என்று தெரியவில்லை. மணிகண்டன் வந்து தீபத்தை ஏற்றிய பிறகு தான் அது லிங்கோத்பவர் சிலை என்று தெரிந்தது. சிவலிங்கம் போன்ற கல்லில் முன் பகுதியில் சிவபெருமானின் திருமுடியும் திருவடிகளும் கொஞ்சமே மறைந்திருக்க ஒரு அன்னப்பறவை திருமுடி பக்கத்திலும் ஒரு பன்றி திருவடிகள் பக்கத்திலும் இருந்தன. பார்த்துவிட்டு கை கூப்பி வேக வேகமாகக் கும்பிட்டுவிட்டு திரும்பி வந்தான் கந்தன். கேசவன் வெளியில் இருந்தே கைகூப்பி கும்பிட்டுவிட்டான்.

'உள்ளே என்ன இருக்கு?' என்று தாத்தா கேட்டவுடன் 'லிங்கோத்பவர்' என்று சொன்னான் கந்தன். 'கேசவா. லிங்கோத்பவர்ன்னா என்னன்னு தெரியுமா?' என்று தாத்தா கேட்க கேசவன் தெரியாது என்று தலையாட்டினான். தாத்தா கந்தனைப் பார்க்க 'பிரம்மாவும் விஷ்ணுவும் ஜோதி ரூபமா நின்ன சிவனோட அடியையும் முடியையும் பார்க்க ட்ரை பண்ற மாதிரி இருக்கிறது தான் லிங்கோத்பவர்' என்றான் கந்தன். புன்சிரிப்போடு 'அவ்வளவு தானா?' என்று தாத்தா கேட்க 'இவர் என்ன இப்படி கேட்கிறாரே? இன்னும் என்ன சொல்ல?' என்று ஒரு நிமிடம் திகைத்துவிட்டு திடீரென நினைவு வந்தவன் போல் கந்தன் 'அப்படி ஜோதி உருவமா சிவன் நின்ற இடம் தான் இந்த மலை. அந்த தீயே இப்ப மலையா நிக்குது. அதனால தான் இந்த மலையே சிவன்னு சொல்லுவாங்க' என்றான். தாத்தா ஆமோதிப்பதைப் போல் தலையாட்டிவிட்டு மீண்டும் 'அவ்வளவு தானா?' என்றார். கந்தனுக்கு அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. 'ஆமாம் தாத்தா' என்றான். தாத்தாவும் 'சரி போதும்' என்று சொல்லிவிட்டு 'எப்ப கோவிலுக்குப் போறீங்க?' என்று கேட்டார். கேசவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலோடு பார்த்தான் கந்தன்.

அடுத்த அத்தியாயம் இங்கே

37 comments:

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. நீங்க சுட்டிக்காட்டிய தவறைச் சரி செய்துவிட்டேன். மிக்க நன்றி. :-) (நீங்க எந்தத் தவற்றைச் சுட்டிக் காட்டினீர்கள் என்பதைச் சொன்னால் கதையில் குழப்பம் வரலாம் என்பதால் அந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. மன்னிக்கவும். :-) )

இந்தப் படம் கூகிளார் தந்த படம் தான்.

இலவசக்கொத்தனார் said...

சரி. தாத்தா கந்தனுக்கு பெரிய பெரிய வேலை எல்லாம் வெச்சி இருக்கார் போல. கதை நிதானமாப் போகும் போது நாம அவசரப்படக் கூடாது. ஐயாம் தி வெயிட்டிங்.

குமரன் (Kumaran) said...

கதை மெதுவாகப் போகிறதா கொத்ஸ்? எனக்கும் இந்த அத்தியாயத்தை எழுதி முடித்த பின்னர் அப்படித் தான் தோன்றியது. அடுத்த அத்தியாயத்தை திங்கள் வரை காத்திருக்காமல் நாளைக்கே போடலாமா அல்லது திட்டத்தின் படி திங்களே போடலாம்; அத்தியாயத்தின் அளவை மட்டும் பெரிதாக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Geetha Sambasivam said...

பரவாயில்லை, என் கண்ணில் முதலில் பட்டதே அந்தத் தவறுதான். :))))) மற்றபடி கதைஓட்டம் நல்லாவே இருக்கு, மாற்றம் செய்திருப்பதையும் கவனித்தேன். :D

Unknown said...

Please write more in each part or write whenever you have time. Thanks.

G.Ragavan said...

ம்ம்ம்ம்.... அன்னதானத்துக்கு ஐநூறு ரூவாயா. சரிதான்.

அடிமுடியறியவொண்ணா அண்ணாமலையோனே.....அருணாச்சலர்க்கு அருளியவா...

அது சரி...இது திருவண்ணாமலைல வருதே கதை....எங்க அருணகிரி வருவாரா?

இலவசக்கொத்தனார் said...

என்னைக் கேட்டால் வாரம் இரு முறை என்றே வைத்துக் கொண்டு அத்தியாயத்தின் அளவை சற்றே பெரிது செய்யலாம். ஆனால் எங்கே நிறுத்த முடியும் என்பது உங்களுக்குத்தான் தெரியும். என்னைக் கேட்டதால் சொன்னேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கதையின் நீளத்தைக் கூட்டி வாரம் இரு முறை என்றே வைத்துக் கொள்ளுங்கள் குமரன்! சுவா ரசியமும் வசியமும் அப்போ தான் தூக்கலா இருக்கும்! :-)

//'கொஞ்சம் தயிர் சாதமும் கொண்டு போ. யாருக்கு எது வேணும்னு கேட்டுக் குடு//

தானம் தானே தரோம்...நம்ம இஷ்டம் தானே-ன்னு எண்ணம் வராது...யாருக்கு எது வேணுமோ அது கேட்டு கொடுக்கும் போது தான்...வாங்கிக் கொள்பவனும் சிரிக்கிறான், கொடுப்பவனும் சிரிக்கிறான்!
இந்தச் சிரிப்பில் தான் இறைவனைக் காண முடியும்!

//அது சரி...இது திருவண்ணாமலைல வருதே கதை....எங்க அருணகிரி வருவாரா?//

அலோ ஜிரா...அது என்ன எங்க அருணகிரி? நம்ம அருணகிரின்னு சொல்லுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'அவ்வளவு தானா’?//

தாத்தா இப்படிக் கேட்க, கேட்க
கந்தன் லேசா கலவரப்படறானோ? :-)

சரி, பரவாயில்லை! எல்லாம் விசயமாத் தான் இருக்கும்! லிங்கோத்பவரின் கீழே தோண்டித் துருவும் பன்றியைப் போல், தோண்டத் தோண்டத் தான் அற்புதம் தெரியும்-னு கந்தனுக்குப் புரியத் தானே போகிறது! :-)

jeevagv said...

வீடு போல இருக்கும் இடத்தின் மாடியில் கோவிலா? இப்படியும் இடங்கள் நிஜமாகவே உண்டா?

jeevagv said...

லிங்கேத்பவர் பற்றி மேலும் சொல்லி இருக்கலாம் என்று பட்டது - நெருப்புத்தூணில் இருந்து ஓம் - பிரணவ மந்திரம் வெளிப்பட்டது, தாழம்பூ வெளிப்பட்டது போல - அல்லது பின்னால் வருமோ!



தாத்தா வேறு என்ன கந்தனிடம் எதிர்பார்த்திருப்பார் என யோசித்ததில் - லிங்கேத்பவர் ஒரே சமயத்தில் ரூபமாகவும், அரூபமாகவும் இருப்பதை உணர்த்துவதைப் பற்றியோ? - எனத் தோன்றியது.

குமரன் (Kumaran) said...

கட்டாயம் அந்தத் தவறு கண்ணில் பட்டிருக்க வேண்டும் கீதாம்மா. அதற்கு நான் முதல் இரு இடுகைகளிலும் கொஞ்சம் அழுத்தம் அதிகம் கொடுத்துவிட்டுப் பின்னர் அந்த தவறு செய்திருக்கக் கூடாது. நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி நடராஜன். அடுத்த அத்தியாயத்திலிருந்து அதிகமாக எழுதுகிறேன்.

குமரன் (Kumaran) said...

இராகவன். அன்னதானத்திற்கு ஐநூறு ரூபாய் சரி தான் என்று ஆமோதிக்கிறீர்களா ஐநூறு ரூபாய் அதிகம் என்று சொல்கிறீர்களா?

அடிமுடியறியவொண்ணா அண்ணாமலையானே
அருணாச்சலக் குமரா அருணகிரிக்கருளியவா

நம்ம அருணகிரிக்கு அருளிய குமரனைப் பற்றியும் வரும்.

குமரன் (Kumaran) said...

ஆலோசனைக்கு நன்றி கொத்ஸ். அப்படியே செய்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் எப்போது நிறுத்தலாம் என்று தோன்றுகிறதோ அப்போது நிறுத்திவிடுகிறேன். :-)

குமரன் (Kumaran) said...

சுவாரசியமும் வசியமும் குறையாமல் கொண்டு போக வேண்டும் என்பதும் ஒரு எண்ணம் இரவிசங்கர். நீங்கள் சொல்கின்ற படியே செய்ய முயல்கிறேன்.

எத்தனை முறை இந்த மாதிரி புளியோதரையும் சாம்பார் சாதமும் கொண்டு சென்ற போது 'வெயிலா இருக்கே. தயிர்சாதம் இல்லையா?' என்று கேட்டவர்களையும் 'தயிர்சாதம் இல்லைன்னா வேணாம்' என்று வாங்க மறுத்தவர்களையும் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவம் தான் தாத்தா மூலம் அந்தக் கருத்தைச் சொல்ல வைத்தது என்று நினைக்கிறேன்.

அதானே நம்ம அருணகிரியை அவர் 'எங்க அருணகிரி'ன்னு அவரு மட்டும் சொந்தம் கொண்டாடிக்கிறாரு?!

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். தாத்தா இப்படி திரும்பத் திரும்பக் கேட்டா கலவரப்படாம எப்படி?! தாத்தா இப்படி கலவரப்படுத்திட்டு அப்புறம் சட்டுன்னு பரவாயில்லை போதும்ன்னு முடித்துவிடுகிறார். :-)

புல் பூண்டு என்றால் தோண்டத் தானே வேண்டும்? :-)

சிவமுருகன் said...

அண்ணா,

//மோகன்,//இந்த மாதிரி எனக்குப் பணம் தருவ//
பல இடங்களை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டுபோல் தெரிகிறது.

ஞாபகம் வைத்து கொள்கிறேன்.

வாரத்தில் இருநாட்கள் கொஞ்சம் அதிகமா எழுதுங்க அதுவே போதும்.

மெளலி (மதுரையம்பதி) said...

அத்தியாயம் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருக்கலாம்.

குமரன் (Kumaran) said...

ஜீவா, சொன்னதை நான் சரியாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். ஊரில் எல்லாம் இருக்கும் சிறிய பிள்ளையார் கோவிலையோ மாரியம்மன் கோவிலையோ எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று நான்கு படிகள் ஏறி ஒரு சின்ன முன் மண்டபம்; அதற்கடுத்துச் சின்ன கருவறை என்று இருக்கும் கோவில் அது. அந்தக் கோவிலுக்கு முன் ஒரு நீண்ட நீள்சதுர அறை ஓலைகளாலும் கீற்றுக்களாலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த நீள் சதுரத்தின் நீளமான பக்கங்களில் ஒன்று அந்த சிறு கோவிலின் படிக்கட்டுகளை ஒட்டி இருக்கிறது. இப்போது ஒரு வடிவம் கிடைக்கிறதா? அது போல் தான் இருக்கிறது இங்கே விவரித்ததும்.

நான் சரியாக இடுகையில் விவரிக்காத போது உங்களுக்குத் தோன்றிய தோற்றமான 'வீட்டின் மாடியில் கோவில்' என்ற அமைப்பு தென்னாட்டில் அவ்வளவாக இல்லாவிட்டாலும் (முற்றிலும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு உறுதியாகத் தெரியாது) வடநாட்டில் நிறைய உண்டு. அங்கே பல கோவில்கள் வீடுகளைப் போல் தான் இருக்கின்றன என்பதை பரணிதரனின் யாத்திரைக்கட்டுரைகளின் மூலம் படித்து அறிந்துள்ளேன். சென்றதில்லை. நான் இங்கே கதையில் சொல்வது அப்படிப்பட்ட ஒரு வீடு + கோவில் இணைந்து இருக்கும் அமைப்பை இல்லை.

குமரன் (Kumaran) said...

ஜீவா,

லிங்கோத்பவரைப் பற்றி கந்தனே சொல்லிவிட்டால் நீங்கள் வந்து சொல்ல வேண்டாமா? அதற்காகத் தான் தாத்தா 'சரி போதும்' என்று விட்டுவிட்டார் போலும். :-)

லிங்க தத்துவத்தைப் பற்றி பேசும் போது தாத்தா 'சிவலிங்கம் ஒரே நேரத்தில் ரூப அரூபமாக இருப்பதை'ப் பற்றிச் சொல்லுவாரோ என்னவோ?

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்.

நீங்கள் ஒரு நாவலைப் படித்தால் எப்படி படிப்பீர்களோ அதே போல் இந்தத் தொடர் கதையையும் படித்து வாருங்கள். எது மனத்தைக் கவர்கிறதோ அது தானே நினைவில் நிற்கும். தனியாக நினைவில் நிறுத்த முயலவேண்டாம். தேவையும் இல்லை. இந்தத் தொடர்கதை கட்டாயம் திருக்குறளோ கீதையோ இல்லை - படித்துப் புரிந்து கொண்டு நினைவில் நிறுத்த.

நீங்கள் சொன்னது போலவே வாரத்திற்கு இரு நாட்கள் மட்டும் எழுதி ஆனால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொஞ்சம் அதிகமாக எழுதுகிறேன். அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கிவிட்டேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. அப்படியே செய்கிறேன்.

jeevagv said...

//இந்த நீள் சதுரத்தின் நீளமான பக்கங்களில் ஒன்று அந்த சிறு கோவிலின் படிக்கட்டுகளை ஒட்டி இருக்கிறது. இப்போது ஒரு வடிவம் கிடைக்கிறதா?// இப்போது புரிந்து விட்டது! நான் தான் அதீதமாக கற்பனை செய்துவிட்டேன்.

VSK said...

கதையின் போக்கு இன்னமும் பிடிபடவில்லை.

நானும் கொத்ஸ் போலவே வெயிட்டிங்!

வாரம் இருமுறை என்னும் போது, இப்போது நீங்கள் எடுத்திருக்கும் முடிவு[நீளத்தை அதிகப்படுத்துவது] சரியே!

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. உங்கள் கதையைப் போல் ஒரு நோக்கத்தை முதல் அத்தியாயத்திலேயே சொல்லி அந்த நோக்கத்தை நோக்கி கதை நகர்த்துவதைப் போல் இங்கே செய்ய முடியவில்லை. அதனால் போக்கு இன்னும் பிடிபடாமல் இருக்கிறது. கதையின் தலைப்பில் இருக்கிறது செய்தி. அதனைக் கவனித்தீர்கள் என்றால் கதையின் போக்கு கொஞ்சம் புரியும். தலைப்பை ஆறாம் அல்லது ஏழாம் அத்தியாயத்தில் தொட்டுவிடுவேன். மொத்தம் பதினைந்து அத்தியாயம் வரும் போல இருக்கிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா மதுரைக்காரர் நம்ப ஊருக்குவட ஆற்காடு திருவண்ணாமலைக்கு கதை எழுத வந்தூட்டாரே இனி கதை சூப்பராபோகும்.மதுரையில்பிறந்தாலும்
ஸித்தியும் முக்தியும் பெறவேண்டுமானால் திருவண்ணாமலைக்கு வந்துதான் ஆகவேண்டும்.நான் சொல்வதுபகவான் ரமண மகரிஷியை
நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஐய்யா

cheena (சீனா) said...

தானம் செய்வதில் கூட வேண்டியதை, அவர்கள் விரும்புவதைக்க் கொடுக்க வேண்டும். அதில் தான் கொடுப்பவர்க்கும் பெறுபவர்க்கும் இன்பம். சிறு செய்தி யானாலும், கதைப் போக்கிலே சாதாரணமாக வந்து போகிற வரியானாலும், மனதில் சட்டெனப் பதிந்த செய்தி. கொடுப்பவர்களின் கருவம் சற்றே அடங்க - சரியான செய்தி.

நன்றி குமர, வாழ்த்துகள், தொடர்க

குமரன் (Kumaran) said...

இரமண மகரிஷியைப் பத்தி விரைவில் இந்த கதையில் வரும் திராச. நான் அந்தப் பகுதியை எழுதும் போது கூட மதுரையிலிருந்து சிறுவனாக வந்தார் இரமணர் என்று தான் எழுதியிருக்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி சீனா ஐயா.

வெற்றி said...

குமரன்,
நீங்கள் கதை சொல்லும் விதம் ஆவலைத் தூண்ட ஒரே எடுப்பிலேயே மூன்று பாகத்தையும் வாசிச்சு முடிச்சாச்சு.

அடுத்த பாகத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடருங்கள்.

/* கருவறை போல் இருந்த ஒரு அறையில் ஒரு நட்டு வைத்தக் கல் இருந்தது. */

கோயிலின் முக்கிய பகுதியைத் தமிழகத்தில் கருவறை என்றா சொல்வார்கள்?... எனது ஊரில் கருவறையை ஆதிமூலம் என்று சொல்வதுதான் வழக்கம். அதனால் கேட்டேன்.

குமரன் (Kumaran) said...

நடுவே சில காரணங்களால் ஒரு வாரம் இந்தக் கதையைத் தொடர முடியவில்லை. வரும் திங்கள் அடுத்த அத்தியாயத்தை இடுகிறேன்.

ஆமாம் வெற்றி. மூலஸ்தானம், கர்ப்பகிருகம் என்றும் சொல்வதுண்டு. அவை வடமொழிச் சொற்கள். கருவறை என்பதன் வடமொழி நேர்ச்சொல் கர்ப்பக்ருஹம். ஆதிமூலம் என்பது வடசொல் - மூலஸ்தானம் என்னும் பொருளை ஒட்டி வருகிறது என்று நினைக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//மதுரையில்பிறந்தாலும்
ஸித்தியும் முக்தியும் பெறவேண்டுமானால் திருவண்ணாமலைக்கு வந்துதான் ஆகவேண்டும்.நான் சொல்வதுபகவான் ரமண மகரிஷியை
நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஐய்யா//

அதல்லாம் தப்பாத்தான் எடுப்போம் டி.ஆர்.சி சார்......மதுரை நகர்ல ஒரு முறை நடந்தாலே முக்தின்னுதான் சொல்லியிருக்கு....ஹிஹிஹி

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌளி நான் மதுரையில் 2 வருடம் வேலை பார்த்தவன். இப்போழுதும் மதுரைக்கு மீனாக்ஷி அம்மனை பார்பதற்காகவே செல்லுகிறென்.எனக்கு நிறைய நண்பர்கள் மதுரையில் உண்டு மதுரஒயின் மீது பெருமதிப்பு வைத்துள்ளேன்.சும்மாத்தான் சொன்னேன்.என்ன இருந்தாலும் மதுரையில் நடந்தால் முக்தி ஆனால் திடுவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.திருவண்ணாமலைக்கு வந்த ஆதிசங்கரர் மலையோடு சேர்ந்த ஊரையே சிவலிங்கமாக வணங்கினார்

RATHNESH said...

எனக்குப் பிடித்த வரிகள்:

// 'கொஞ்சம் தயிர் சாதமும் கொண்டு போ. யாருக்கு எது வேணும்னு கேட்டுக் குடு. //

கதை என்று நினைக்க முடியவில்லை. திருவண்ணாமலைப் பயணம் நன்றாக இருக்கிறது.

RATHNESH said...

// மதுரையில் நடந்தால் முக்தி ஆனால் திடுவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.//

மதுரையில் நடந்துக்கிட்டே திருவண்ணாமலையை நினைத்தால்?

இப்படித்தான் "காசியில் செய்த பாவம் மாயூரத்தில் தீரும்; மாயூரத்தில் செய்த பாவம் கும்பகோணத்தில் தீரும்; கும்பகோணத்தில் செய்த பாவம் கும்பகோணத்திலேயே தீரும்" என்றெல்லாம் பாவ விமோசனங்களையும் முக்தியையும் அளவுக்கு மீறி SIMPLIFY செய்து நன்னெறிகளை அலட்சியம் செய்து விட்டார்களோ என்று கூட எனக்கொரு தார்மீகக் கோபம் உண்டு.

குமரன் (Kumaran) said...

இரத்னேஷ். நீங்கள் கதை என்று நினைக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டீர்கள். மற்ற நண்பர்கள் கதை மெதுவாகப் போகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இது பயணக்கதை போல் தான் அமைந்து வருகிறது இதுவரை. :-)