Tuesday, November 13, 2007

தண்தமிழ் வாழ மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டு இரும்!!!
முதன்மை வைணவ ஆசாரியர்களில் ஒருவரும், இராமானுஜரின் மறுபிறப்பு என்று போற்றப்படுபவரும், தண்டமிழ் வேதமாம் திருவாய்மொழிக்குத் திருவரங்கன் திருமுன்பு விரிவுரை ஆற்றி அவனாலேயே குருவாகப் போற்றப்பட்டவரும் ஆன மணவாளமாமுனிகளின் பிறந்த நாள் இன்று (ஐப்பசி திருமூலம்) என்று நண்பர் இரவிசங்கர் உரைத்தார். மணவாளமாமுனிகளின் வாழ்க்கையைப் பற்றியும் அவர் தமிழுக்கும் வைணவத்திற்கும் ஆற்றிய தொண்டுகளைப் பற்றியும் அவர்தம் பெருமைகளைப் பற்றியும் பேசிக் கொண்டே செல்லலாம். வருங்காலத்தில் பெருமாள் திருவருளாலும் ஆசாரியன் திருவருளாலும் அவற்றைப் பேசும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டட்டும்.

செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடும் நாள்
மந்தமதிப் புவிமானிடர் தங்களை வானில் உயர்த்திடும் நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடும் நாள்
கந்தமலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடும் நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடும் நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப்பரன் அவதாரம் செய்திடும் நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனும் நாளே

செந்தமிழ் நாட்டு வேதியர்கள் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள்; பெருமை மிகு 'பிள்ளை லோகாசாரியர்' என்ற ஆசாரியர் செய்து அருளிய நூற்கள் எல்லாம் வெளிச்சம் பெற்றுப் பொலிந்திடும் நாள்; மந்த மதி கொண்ட புவி வாழ் மானிடர்கள் எல்லோரையும் வான நாட்டிற்கு உயர்த்திடும் நாள்; குற்றமில்லா ஞானியர் சேரும் எதிராசராம் இராமானுஜ முனிவர் மீண்டும் வாழ்வு கொள்ளும் நாள்; வாசம் மிகுந்த மலர் பூங்காக்கள் சூழ்ந்த குருகை என்னும் ஆழ்வார் திருநகரியில் பிறந்த அதன் தலைவனாம் மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் பாசுரங்கள் உலகத்தில் விளங்கிடும் நாள்; மேகம் போல் திருமேனி கொண்ட அரங்க நகரத்து இறைவனின் கண்கள் களித்திடும் நாள்; முடிவே இல்லாத பெரும் புகழ் கொண்ட மணவாள மாமுனிகள் அவதாரம் செய்திடும் நாள்; அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் வரும் திருமூலம் என்னும் நன்னாளே!

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்றும் வாழியே
எப்புவியும் சீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் என உதித்தோன் வாழியே
முப்புரி நூல் மணி வடமும் முக்கோல் தரித்தோன் வாழியே
மூதறிவன் மணவாள மாமுனிவன் வாழியே


இந்தப் புவியில் திருவரங்கத்திறைவனுக்கு 'ஈடு' என்னும் திருவாய்மொழியின் விரிவுரையை வழங்கியவன் வாழ்க! அழகு மிகும் திருவாய்மொழிப்பிள்ளை என்னும் ஆசாரியரின் திருவடிகளைத் தாங்குபவன் வாழ்க! ஐப்பசியில் திருமூலத்தில் அவதரித்தான் வாழ்க! பாம்பு அரசன் பெருஞ்சோதி வடிவான அனந்தன் ஆதிசேஷனின் திருவுருவமே வாழ்க! எல்லோரும் சீலைலம் என்று அரங்கன் பாடி அளித்தப் பாடலைப் பாடிப் போற்றும் படி வந்தவன் வாழ்க! இராமானுஜ மாமுனியின் மறுபிறப்பே எனும் படி உதித்தவன் வாழ்க! முப்புரி நூல், மணி வடம், முக்கோல் இவற்றைத் தரித்தவன் வாழ்க! மூதறிவுடைய மணவாள மாமுனிவன் வாழ்க வாழ்க!


திருவரங்கன் ஒரு சிறுவன் உருவில் வந்து திருவாய்மொழி விரிவுரையின் கடைசி நாளில் பாடி அளித்த பாடல் இதோ!

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்

ஸ்ரீசைலேசர் என்று போற்றப்படும் திருவாய்மொழிப்பிள்ளை என்னும் ஆசாரியரின் கருணைக்குப் பாத்திரமானவர்; அறிவு, அன்பு (பக்தி) போன்ற நற்குணங்களின் கடல்; இராமானுஜரின் வழியை பின்பற்றி அதனை எங்கும் பரவும் வகை செய்ததால் யதீந்த்ர பிரவணர் என்று போற்றப்படுபவர்; அப்படிப்பட்ட அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

இப்படி திருவரங்கனே தன் ஆசாரியனாக ஏற்றுப் போற்றும் பெருமை பெற்றவர் மணவாள மாமுனிகள்.

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.

39 comments:

கோவி.கண்ணன் said...

//இராமானுஜரின் மறுபிறப்பு என்று போற்றப்படுபவரும், தண்டமிழ் வேதமாம் திருவாய்மொழிக்குத் திருவரங்கன் திருமுன்பு விரிவுரை ஆற்றி அவனாலேயே குருவாகப் போற்றப்பட்டவரும் ஆன மணவாளமாமுனிகளின் //

குமரன்,
இராமானுஜர் முக்தி அடையவில்லையா ?

//(ஐப்பசி திருமூலம்) //

சிவனுக்கு திருவாதிரை என்றும் பெருமாளுக்கு திருவோணம் என்றும் சொல்லுவார்கள், வயிற்றில் பிறக்காத கடவுளுக்கு நட்சத்திரம் எப்படி வந்தது என்று புரியவில்லை.


//செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள்//

செந்தமிழ் நடையில் சிறப்பாக இருக்கிறது, பெருமாளுக்கு பிடிக்கவில்லையா ? பின்பு ஏன்

//ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்//

கடைசி நாளில் வந்து கவிழ்த்துவிட்டு போனார் ? திருஷ்டி பொட்டு மாதிரி ஆகிவிட்டது.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மிக மிக மிக மிக நன்றி குமரன்!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

சஷ்டிப் பதிவை எழுதி விட்டு, மாமுனிகள் பற்றி எழுத நேரம் இருக்குமோ-ன்னு நினைச்சித் தான் உங்களிடம் காலையில் பிறந்த நாள் விடயத்தைச் சொன்னேன்!

மாலையில் வீட்டுக்கு வந்து சஷ்டிப் பதிவு எழுதி விட்டுப் பார்த்தா உங்க பதிவு!
குமரன்-பெருமாளைக் கவனித்துக் கொள்ள
கண்ணபிரான்-கந்தனைக் கவனித்துக் கொண்டான்! :-)))

அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ,
வாழ்க சீரடியார் எல்லாம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஒரு காலத்தில் திருவரங்கத்தில், மொழியின் காரணமாகப் பெரும் சச்சரவு ஏற்பட்ட போது, தமிழை விட்டுக் கொடுக்கவே முடியாது என்றும்,
தமிழைப் பிரித்தால் அரங்கனே பிரிவான் என்று சொல்லிப் பெரும் புரட்சியைச் செய்தவர்! ஒரு கட்டத்தில் அதனால் மதமே பிளவுபடும் வரை போனது! அப்போதும் தமிழ் வேதத்தை விட்டாரில்லை இந்தப் பெரியவர்!
மணவாள மாமுனிகள்!

வைணவத்தில் இராமானுசருக்குப் பின் வந்த கடைசி ஆசார்யர்!

யாராய் இருந்தாலும், எந்த வைணவக் கோவிலிலும், கடவுளைப் பற்றிய பாட்டு முதலில் இருக்காது!

இவர் பெயரைச் சொல்லி,
சடகோபன் தண்
தமிழ் நூல் வாழ...
இன்னுமொரு நூற்றாண்டு இரும் என்று இவரை வாழ்த்தித் தான் முதல் பாட்டு! தனியன் என்று சொல்லப்படும் பா!

இதில் இருந்தே, நம்மாழ்வாரின் தமிழை எப்படித் தலை மேல் வைத்துக் காத்தார் என்பது புலனாகும்!

அரங்கத்தில் தமிழ் இன்றும் கோலோச்சக் காரணம் இரண்டு பேரின் இடைவிடாத முயற்சியும் பேராண்மையும் தான்!
இராமானுசர்! மணவாள மாமுனிகள்!!

தென்னரங்கன் செல்வம் திருத்தி வைத்தான் - இராமானுசன் வாழியே!
அவன் வழியில் தமிழ் வேதம் தலை காத்தான் - மணவாள மாமுனிவன் வாழியே! வாழியே!!

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன்.

//இராமானுஜர் முக்தி அடையவில்லையா ?//

வைணைவ விசிஷ்டாத்வைத மரபுப்படி (சம்பிரதாயப்படி) நித்யர்கள், முக்தர்கள், பத்தர்கள் என்று ஜீவர்களில் மூன்று வகை. நித்யர்கள் என்பவர்கள் பூமி, நீளா போன்ற திருத்தேவியர்கள், அனந்தன் (ஆதிசேஷன்), கருடன், விஷ்வக்சேனர் (சேனை முதலியார்), சக்கரத்தாழ்வார், சங்காழ்வார் போன்ற திருத்தொண்டர்கள் - நித்யர்கள் என்றுமே முக்தி நிலையில் இருப்பவர்கள். பத்தர்கள் என்பவர்கள் பந்தத்தில் இருக்கும் ஜீவர்கள். முக்தர்கள் என்பவர்கள் பந்தத்தில் இருந்து முக்தி பெற்றவர்கள். பத்தர்கள் தங்கள் கருமத்தின் வழி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் போது சுவாமியான (இறைவனான - ஏல்லாரையும் எல்லாவற்றையும் உடையவனான) பெருமாளும் நித்யர்களும் இறைவன் திருவுள்ள உகப்பிற்காகவும் பத்தர்களின் மேல் உள்ள கருணையாலும் (பெருமாள் இரண்டாவதற்காக மட்டும் - மேல் விவரத்திற்கு கீதையைப் பார்க்கலாம்)அவதாரம் செய்கிறார்கள் என்பது வைணவ மரபு/நம்பிக்கை.

இராமானுஜர் அனந்தனின் (ஆதிசேஷனின்) அவதாரம் - அவரே மீண்டும் மணவாள மாமுனிகளாய் அவதரித்தார். அனந்தன் நித்யர்களில் ஒருவர் என்பதால் அவர் இலக்குமணனாகவும், பலராமனாகவும், இராமானுஜனாகவும், மணவாளமாமுனிகளாகவும் அவதரித்தாலும் அவர் பத்தர்/முக்தர் என்ற நியதிகளைக் கடந்தவர். அதனால் இராமானுஜ முனி மணவாள மாமுனிகளாய் அவதரித்தார் என்பதில் முரண் இல்லை.

குமரன் (Kumaran) said...

//வயிற்றில் பிறக்காத கடவுளுக்கு நட்சத்திரம் எப்படி வந்தது என்று புரியவில்லை.
//

'பிறப்பில் பல்பிறவிப் பெருமான்' என்று தமிழிலும் 'அஜாயமானோ பஹுதா விஜாயதே - பிறப்பே இல்லாதவன் பல விதமாகப் பிறக்கிறான்' என்று வடமொழியிலும் அருளாளர்கள் கண்டு சொல்லியிருக்கிறார்கள். மேலே அவதாரத்தைப் பற்றி கொஞ்சம் சொன்னேன். அதனால் பெருமாளுக்குத் திருவோண நட்சத்திரம் என்பதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை என்றும் அதனால் அவனுக்குப் பெயர் ஆதிரையான் என்றும் படித்திருக்கிறேனே ஒழிய சிவன் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்று அருளாளர்கள் சொல்லிப் படித்ததாக நினைவில்லை. அப்படித் தான் என்றால் சைவ சிந்தாந்தத்தின் படி அதற்கு என்ன விளக்கம் என்று பார்க்க வேண்டும். அடியேனுக்கு இப்போது தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

//கடைசி நாளில் வந்து கவிழ்த்துவிட்டு போனார் ? திருஷ்டி பொட்டு மாதிரி ஆகிவிட்டது.//

பெருமாளுக்கு இரண்டு மொழிகளும் பிடிக்கும் போல. அதனால் தான் அவன் வடமொழியிலும் தமிழிலும் பாடி வைத்திருக்கிறான். இங்கே அவன் சொன்ன தனியன் வடமொழியில் இருந்தாலும் அவனது அடியார்கள் எல்லோரும் (இங்கே காட்டிய மூன்று பாடல்களும்) வடமொழியில் இல்லாமல் தமிழில் இருப்பதைப் பார்த்தாலே அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் தமிழ் உவக்கும் என்பது நன்கு தெரிகிறது.

நமக்குத் தான் வடமொழி என்றாலே கற்குவியலாகவும் திருஷ்டிப் பொட்டாகவும் தெரிகிறது. அரங்கனுக்கும் அடியவருக்கும் அப்படி இல்லை போலும்.

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர். களைப்பெல்லாம் தீர தூங்கி எழுந்தவுடன் கொஞ்சம் தெம்பாக இருந்தது. மாதவிப் பந்தலில் வந்து பார்த்தேன். நீங்கள் எழுதியதாகத் தெரியவில்லை. சரி வாழித் திருநாமங்களையும் பெருமாள் எழுதிய தனியனையும் மட்டும் எழுதுவோம். மற்றதெல்லாம் பின்னர் விரித்து நீங்கள் எழுதுவீர்கள் என்று எழுதி இட்டுவிட்டேன். :-)

//குமரன்-பெருமாளைக் கவனித்துக் கொள்ள
கண்ணபிரான்-கந்தனைக் கவனித்துக் கொண்டான்! :-)))
//

பரஸ்பரம் பாவயந்த என்று தானே கண்ணனும் கட்டளை இட்டிருக்கிறேன். மாற்றி மாற்றி அவன் பெயர்கள், குணங்கள், திருவுருவங்கள் என்று பேசிப் பொழுதைப் போக்குவோம்.

குமரன் (Kumaran) said...

திருவரங்கத்தில் மட்டுமில்லை இரவிசங்கர். மற்ற திவ்ய தேசங்களிலும் கருவறையில் தமிழ் வடமொழியுடன் கூடி முழங்குகின்றது. அந்த திவ்ய தேசம் மணவாள மாமுனிகள் வழி வந்தவர்கள் நிர்வாகத்தில் இருக்கும் கோவிலாகவும் இருக்கலாம்; ஆரண தேசிகன் வழி வந்தவர்கள் நிர்வாகத்தில் இருக்கும் கோவிலாகவும் இருக்கலாம் - வேறுபாடு இல்லை.

திருவரங்கத்திலும் மற்ற திவ்ய தேசங்களிலும் இருந்த மொழிப்பிரச்சனை தீர்ந்துவிட்டது. ஆனால் வேறு இடங்களில் தீர இறைவன் திருவுள்ளம் இன்னும் கனியவில்லை போலும்.

முதன்மை ஆசாரியர்களில் கடைசி என்று சொல்கிறீர்களா? இன்னும் தான் ஆண்டவன் சுவாமிகள், அழகிய சிங்கர் சுவாமிகள், ஜீயர்கள் என்று பல வைணவ ஆசாரியர்கள் இராமானுஜர் வழியில் வந்தவர்கள் இருக்கிறார்களே. நீங்கள் கூட திருக்கோவிலூரில் இருக்கும் திருமடத்தைப் பற்றி சொன்னீர்களே.

தி. ரா. ச.(T.R.C.) said...

மணவாள மாமுனியின் சிறப்பைப் பற்றிச் சொன்னதால் நீரும் சிறப்பு அடைகிறீர்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி தி.ரா.ச.

வவ்வால் said...

குமரன்,

உங்களுக்கு ஆன்மீக, வைணவப்பற்று இருக்கலாம், ஆனால் அதற்காக மணவாள முனியை தமிழ் பற்றாளர் என்று சொல்லிக்கொள்வதா? நீங்கள் சொன்னது போல ஒப்புக்கு எப்போதாவது தமிழ் வழிபாடு பற்றி அவர் சொல்லி இருக்கலாம்.

ஒன்றாக இருந்த மெட்ராஸ் மகாணத்தில் இருந்த திருப்பதி வெங்கடேசப்பெருமாளுக்கு பாடப்படும் சுப்ர பாதம் எப்படி எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது தெரியுமா?

இதே மணவாள முனிகளின் கட்டளைப்படி அவரது சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணன் என்பவரால் , கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்ததது..என துவங்கும் அந்த வெங்கடேச சுப்ரபாதம் வட மொழியில் எழுதப்பட்டது தான்,(பாடிபிரபல படுத்தியது எம்.எஸ்) ஏன் அதனை அப்போது தமிழில் எழுத சொல்லவில்லை அந்த மணவாள முனி!

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தில் ஏறி எல்லாரும் முக்தி பெற வேண்டும் என்று மந்திரத்தினை சொன்னவர் தான் இராமானுஜர், ஆனால் அவரே முக்தி பெற்றாலும் , அவர் மறு பிறவி என்று
தான் சொல்லிக்கொள்கிறீர்கள், ஏன் நேரடியாக ஆதி சேஷனின் மறு பிறவி என்று மணவாள முனிவரை சொல்லக்கூடாதா?

குமரன் (Kumaran) said...

வவ்வால்.

ஒருவர் தமிழ்ப்பற்று உடையவர், தமிழுக்குத் தொண்டு செய்தவர் என்பது அவர் தமிழுக்குச் செய்ததை வைத்துத் தான் நானெல்லாம் பார்க்கிறேன். அவர் வடமொழியின் மேல் வெறுப்பு கொண்டிருந்தால் தான், அவர் வடமொழியில் அவராகவோ அவர் சீடர் மூலமாகவோ எதுவும் எழுதவோ பேசவோ வைக்காமல் இருந்தால் தான் அவர் தமிழ்ப்பற்றாளர் என்ற வரைமுறை உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் சிலருக்கும் வேண்டுமானால் சரியாகத் தோன்றலாம்; அந்த வகையில் மணவாள மாமுனிகளை தமிழ்ப்பற்றாளர் இல்லை என்று சொல்லலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் தமிழ்ப்பற்றாளர் தான். அது கட்டாயம் எனது ஆன்மிக, வைணவப் பற்றால் சொல்லப்படுவது இல்லை. அவர் தமிழுக்குச் செய்ததை வைத்துச் சொல்லப்படுவது.

வைணவர்களுக்குத் தமிழும் வடமொழியும் இரண்டுமே முக்கியம். அதனால் தான் அவர்கள் உபய வேதாந்திகள் - இரு வேதங்கள் உடையவர்கள் (திவ்வியப் பிரபந்தங்கள், வடமொழி வேதங்கள்) என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். (இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். முருகனை குலதெய்வமாகக் கொண்டுள்ள எனக்கு வைணவப் பற்று சைவப் பற்று இரண்டுமே இருக்கிறது. அதனால் தமிழ்த் தொண்டு செய்த சைவப் பெருந்தகைகளையும் போற்றுவேன். அவர்களைப் பற்றியும் எழுதுவேன். எழுதியிருக்கிறேன்).

//ஒப்புக்கு எப்போதாவது தமிழ் வழிபாடு பற்றி அவர் சொல்லி இருக்கலாம்.
//

இடுகையில் சொன்னதைப் பாருங்கள். நம்மில் பலருக்கும் வைணவர்களின் தமிழ்ப்பற்றைப் பற்றி அறிந்ததை விட அறியாததே மிக அதிகம் என்று தோன்றுகிறது. அதனால் வைணவத்தில் தமிழ் என்று பேசப் புகும் போது அது ஏற்றத்தில் கைவண்டியை இழுப்பதைப் போல் கொஞ்சம் அதிக முயற்சி எடுத்துக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. அதில் தவறு இல்லை. இவற்றைப் பேசப் பேச எல்லோருக்கும் தெரியத் தொடங்கும். அப்புறம் அவ்வளவு முயன்று இதனைப் பற்றிப் பேச வேண்டியிருக்காது. ஒவ்வொன்றாக மணவாள மாமுனிகளின் தமிழ்த் தொண்டைப் பற்றிய செய்திகளைச் சொல்லி வருவோம் (பெரும்பாலும் இரவிசங்கர் அதனைச் செய்வார் என்று எண்ணுகிறேன். நான் வேறு புலனத்தில் இப்போது கவனத்தை வைத்திருக்கிறேன்). பின்னர் அது 'ஒப்புக்குச் சொல்லப்பட்டதா' அல்லது இன்றைக்கும் எல்லா வைணவ ஆலயங்களிலும் தமிழ் கருவறையில் இருக்கும் அளவிற்கு அழுத்தமாகச் சொல்லப்பட்டதா என்று பார்க்கலாம்.

ஒன்றாக இருந்த மெட்ராஸ் மாகாணத்திற்கும் மணவாள மாமுனிக்கும் என்ன தொடர்பு? மணவாள மாமுனிகள் வாழ்ந்த காலம் 'மெட்ராஸ் மாகாண' காலம் என்று நினைக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது தெலுங்கு தேசம்; அதனால் வடமொழியில் எழுதினார்கள் என்று நான் விடை சொல்லுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதற்காக அதனை முன்னாலேயே வெட்டிவிட சொல்லப்பட்டதா அது? மற்றபடி எந்தக் காரணமும் நீங்கள் 'மெட்ராஸ் மாகாணத்தை'ப் பற்றிச் சொல்லுவதற்கு தோன்றவில்லை எனக்கு. :-)

இரவிசங்கரின் மாதவிப் பந்தலைப் பாருங்கள். தமிழ்நாட்டின் வட எல்லையாக தொடக்கத்தில் இருந்து பின்னர் வடுக நாட்டின் பகுதியாகி அப்படி ஆன பின்னரும் இராமானுஜரின் வைணவ கோட்பாடுகளிலேயே இருக்கும் திருப்பதி/திருமலையில் எப்படி தமிழ் வேதமான திவ்விய பிரபந்த பாசுரங்கள் ஓதப்பெறுகின்றன என்று சொல்லியிருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.

நீங்கள் மாமுனியின் கட்டளையால் அவரது சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணரால் எழுதப்பட்ட வடமொழியில் இருக்கும் சுப்ரபாதத்தைப் பற்றிச் சொல்லிவிட்டீர்கள். சரி. மாமுனிகளே தமிழ் வேதங்களுக்கு உரையெழுதி இருக்கிறாரே. ஆர்த்தி பிரபந்தம், ஆசாரிய ஹிருதயம் போன்ற தமிழ் நூல்களை அவரும் அவரது சீடர்களும் உடன்பிறந்தவர்களும் எழுதியிருக்கிறார்களே. அவை அவரது தமிழ்ப்பற்றிற்கு ஆதாரம் ஆகக் கூடாதா? (முழுப்பட்டியலும் வேண்டுமென்றால் தேடித் தருகிறேன்). வடமொழியின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழை நிலை நாட்டிய அவரை தமிழ்ப்பற்றாளர் என்று சொன்னால் ஏன் அவர் வடமொழியை வெறுத்து ஒதுக்கவில்லை என்று கேட்கிறீர்கள். அப்படி ஒதுக்க வேண்டிய தேவை இல்லை என்பது என் எண்ணம்.

அடுத்த புலனம்:

மணவாள மாமுனிகளை நேரடியாக ஆதிசேஷனின் அவதாரம் என்றும் சொல்வது உண்டு. மேலே கொடுத்துள்ள, மாமுனிகளின் காலத்திலேயே இயற்றப்பட்டப் பாடல்களைப் பாருங்கள். தெளிவாக 'அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்றும் வாழியே' என்று மணவாள மாமுனிகளை ஆதிசேஷன் என்றே சொல்லி வாழ்த்தியிருக்கிறார்கள்.

எல்லோரும் முக்தி பெற வேண்டும் என்று திருக்கோஷ்டியூர் (வில்லிபுத்தூர் இல்லை) கோபுரத்தில் ஏறி திருமந்திரத்தின் பொருளைச் சொன்னவர் தான் இராமானுஜர். அவர் மற்றவருக்குச் சொன்னதால் அவரும் முக்தி பெற்றிருப்பார் என்ற ஏரணத்தை வைக்கிறீர்கள். சரி தான். அவர் அனந்தனின் அவதாரம் என்பதால் அவர் நித்யர்களில் ஒருவர்; மீண்டும் முக்தியடையத் தேவையில்லாதவர்; அப்படி நித்யராக இருந்தாலும் இறைவனின் திருவுள்ள உகப்பிற்காக அவதாரம் செய்தவர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனால் அவர் / அனந்தன் மீண்டும் மணவாள மாமுனிகளாகப் பிறந்தார் என்ற மரபில் (தொன்மத்தில்) முரண் இல்லை.

குமரன் (Kumaran) said...

வவ்வால். இடுகையில் இருக்கும் முதல் படத்தைப் பாருங்கள். அவர் ஆதிசேஷனின் அவதாரம் என்பதால் தான் அவர் உருவத்தில் ஐந்து தலை நாகம் இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

//அது தெலுங்கு தேசம்; அதனால் வடமொழியில் எழுதினார்கள் என்று நான் விடை சொல்லுவதற்கு வாய்ப்பு உண்டு //

எப்படி உண்டு ?

கோவில் பெயரே 'திரு'பதி - என்று வழக்கில் இருக்கிறது, தெலுங்கில் இருந்திருந்தால் 'ஸ்ரீ'பதி - என்று தானே பெயர் நிலை பெற்றிருக்கும் ?

குமரன் (Kumaran) said...

ஐயா ஐயா ஐயா.கோவி.கண்ணன் ஐயா. நான் எங்கே ஐயா அப்படி சொன்னேன்?

எதற்காக 'மெட்ராஸ் மாகாணத்தை'ப் பற்றி வவ்வால் பேசினார் என்று எனக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டில் என்றால் தமிழில் எழுதச் சொல்லியிருப்பார்; அது 'இப்போது' தெலுங்கு நாடாக இருப்பதால் வடமொழியில் எழுதச் சொன்னார் - என்று நான் 'சமாளிப்பதற்கு' வாய்ப்பு இருக்கலாம் என்று எண்ணி அவர் அப்படி சொன்னாரோ என்று தான் கேட்டேன்.

அதற்குள் திருப்பதி திருமலை என்று பெயர்களைச் சொல்கிறீர்களே? அதனை எப்போது நான் மறுத்தேன். தெலுங்கு நாடாக தொடக்கத்தில் இருந்ததாகச் சொன்னேனா? தமிழக எல்லை தான் தொடக்கத்தில், பின்னர் வடுக நாட்டின் பகுதி ஆனது; ஆனாலும் இராமானுஜரின் வழிமுறைப்படி தான் இன்றும் திருப்பதி/திருமலை இருக்கிறது என்று தான் சொன்னேன்.

selvanambi said...

mamuniyin innarulal innumoru nootrandirum.

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி செல்வநம்பி.

திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் போற்றும் செல்வநம்பி நினைவுக்கு வந்தார்.

selvanambi said...

"AL VAZHAKKU ONNUMILLA ANI KOTTIYAR KON ABIMANATHUNGAN SELVANAIPOLA"

NANDRI KUMARAN
SELVANAMBI PATRI MUDINTHAL EZUDHUNGAL.
ADIYEN

குமரன் (Kumaran) said...

செல்வநம்பி.

பெரியாழ்வார் சொல்லும் செல்வநம்பியைப் பற்றி அடியேன் அறிந்த வரை அடியேனின் 'விஷ்ணு சித்தன்' பதிவில் எழுதியிருக்கிறேன். பாருங்கள். பெரியாழ்வார் பாசுரங்களைப் பாடி குணானுபவம் செய்ய எப்போதோ தொடங்கிய பதிவு அது. அபிராமி அந்தாதி பொருள் எழுதி முடிந்த பிறகு திருப்பல்லாண்டில் இருந்து தொடங்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அந்தாதி நிறைவு பெறுவதற்கு முன்னரே கூட திருப்பல்லாண்டைத் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கோவி.கண்ணன் said...

திரு வவ்வாலின் கருத்தை நானும் பிடித்து தொங்குகிறேன்.

அதாவது முக்தி பெற்றவர்களை பின்னால் அவதாரமாக சொல்வது, அவர்களின் முக்தியை கொச்சை படுத்துவது போல்.

முக்தி அதாவது இரண்டர கலத்தல் என்றால் பிரித்தறிய முடியாதபடி ஒன்றிணைவது தானே ?

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன்.

இந்தியத் தத்துவமரபுகள் எல்லாமுமே முக்தி என்பதற்கு இரண்டறக்கலத்தல் என்ற வரையறையைத் தரவில்லை. ஆதிசங்கரரின் அத்வைதமும், அதனை ஒட்டிய தத்துவங்களும், சென்ற நூற்றாண்டில் அதற்கு மேலும் புதிய தத்துவ வலுவினைத் தந்த இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஞானானந்தகிரி சுவாமிகள், சிவானந்தர், சித்பவானந்தர், இரமணர் போன்ற மகான்களும் முக்தி என்பதற்கு குடத்தில் இருக்கும் ஆகாயம் குடம் உடைத்த பின் வெளியில் இருக்கும் ஆகாயத்தில் கலப்பது போல், அலையில் இருக்கும் நீர் அலை ஓய்ந்தபின் கடலில் கலந்தது போல் பெயர், உருவம், குணம் (நாம ரூப குணங்கள்) மூன்றையும் இழந்து ஜீவன் பரமனாகவே ஆகிவிடுவது; என்றும் பரமனாகவே இருந்த ஜீவன் தன்னை பரமனிடமிருந்து வேறுபாடாகக் காண வைத்த மாயை விடுபட்டு தான் பரமன் என்று உணர்ந்து காணாமல் போகும் நிலை என்று வரையறையைத் தருகிறது/தருகிறார்கள். இது ஏறக்குறைய பௌத்தம் சொல்லும் நிர்வாண நிலையை ஒத்தது என்று நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். பௌத்தத்தின் நிர்வாணத்திற்கும் (முக்திக்கும்) அத்வைத்தத்தின் ப்ரஹ்ம நிர்வாணத்திற்கும் (முக்திக்கும்) உள்ள ஒரே வேறுபாடு பௌத்தம் சொல்வது சூன்யம் (ஒன்றுமற்ற நிலை); அத்வைதம் சொல்வது அகண்ட பரிபூர்ண சச்சிதானந்தம் (இல்லாத இடமே இல்லாத, எல்லாமும் எல்லாரும் ஆன, உண்மை, அறிவு, அழிவற்ற மகிழ்ச்சி). நாம் இதனையும் ஏற்கனவே பேசியிருக்கிறோம்.

இப்போது மீண்டும் மேலே நான் சொல்லியிருக்கும் விளக்கங்களை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். தமிழக வைணவம் பின்பற்றும் தத்துவ மரபிற்கு விசிஷ்டாத்வைதம் என்று பெயர். அந்த தத்துவ மரபின் படி முக்தி என்பதற்கு 'என்றும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் நிலையே தனது உண்மையான நிலை என்று உணர்ந்து தனது மற்ற காமங்கள் எல்லாமும் போய் அவனுக்கே என்றும் தொண்டு செய்யும் நிலை' என்று வரையறை தந்திருக்கிறது. அப்போது தான் ஜீவர்களில் நித்யர் (என்றுமே பந்தத்தின் கட்டில் வராமல் எப்போதும் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள் - அனந்தன், கருடன் போன்றவர்கள்), முக்தர் (பந்தத்தின் பிடியில் இருந்து இறையருளால் தன் உண்மையான நிலையான இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்ற உண்மையை உணர்ந்து பந்தத்திலிருந்து விடுபட்டு பந்தம் இல்லாத இடமான பரமபதத்தில் இறைவனுக்குத் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள்), பத்தர் (பந்தத்தில் உழல்பவர்கள்) என்று மூன்று வகை உண்டு என்று சொல்கிறது. இந்த விளக்கத்திற்குப் பின்னர் மீண்டும் மேலே சொன்ன விளக்கங்களைப் படித்துப் பார்த்தீர்கள் என்றால் வைணவ விசிஷ்டாத்வைத மரபின் படி நித்யரான அனந்தன் மீண்டும் மீண்டும் இலக்குவனாக, பலராமனாக, இராமானுஜராக, மணவாள மாமுனிகளாக அவதாரம் செய்கிறார் என்ற கருத்து முரண் உடையது இல்லை.

விசிஷ்டாத்வைதம் சொல்லும் வரையறையை ஒட்டிய வரையறையையே த்வைதம், சைவசித்தாந்தம் போன்றவையும் தருகின்றன. சிவலோகத்தில் என்றும் நிலையாக வாழும் சிவயோகிகள் திருமூலர், சுந்தரர் போன்றவர்களாக பிறப்பதை சைவசித்தாந்தம் பேசும்.

வைணவ விசிஷ்டாத்வைத மரபின் படி முக்தி என்பது இரண்டறக் கலப்பது இல்லை என்பதால் முக்தர்களும் நித்யர்களும் மீண்டும் அவதாரம் செய்கிறார்க்ள் என்பது அவர்கள் பெற்ற முக்தியைக் கொச்சைப்படுத்துவதும் ஆகாது; முரணும் ஆகாது.

வவ்வால் said...

குமரன்,

//விசிஷ்டாத்வைதம் சொல்லும் வரையறையை ஒட்டிய வரையறையையே த்வைதம், சைவசித்தாந்தம் போன்றவையும் தருகின்றன. சிவலோகத்தில் என்றும் நிலையாக வாழும் சிவயோகிகள் திருமூலர், சுந்தரர் போன்றவர்களாக பிறப்பதை சைவசித்தாந்தம் பேசும்.//

அப்போ துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் எல்லாம் ஒன்றா? ஒன்றோடு ஒன்று முறன்பட்டு தானே அவை தோன்றின?

முரண்பாட்டுக்களஞ்சியம் தான் மதங்கள்!

மேலும் சைவ சித்தாந்தம் பிறப்பில்லா மோட்சம் என்பதில் நம்பிக்கை கொண்டது.

நீங்கள் சொன்னது போல திருமூலர், போன்ற யோகிகள் எல்லாம் பிறந்தது அவர்கள் செய்த தவறுக்காக மானிடப்பிறப்பு எடுத்ததாக வரும், பின்னர் முக்தி அடைந்தார்கள். நாயன்மார்கள் வரலாறு படித்தாலே தெரியுமே! நாயன்மார்கள் அனைவருமே மீண்டும் ஒரு பிறப்பு வேண்டாம் என்று உருகியவர்கள்.

கிருஷ்ணரை விஷ்ணு அவதாரமாக சொல்வார்கள், ஆனால் அவரை ஒரு போதும், ராமரின் மறு அவதாரம் என்று சொல்வதில்லை. அப்படி இருக்க மூலம் அனந்தன் இருக்க,ஏன் மணவாள முனிகளை மட்டும் இராமனுஜரின் மறு அவதாரம் என்று சொல்லிக்கொள்கிறார்கள், இதெல்லாம் ஒருவரை உயர்த்தி காட்ட அவரது சீடர்களே கொளுத்தி போட்டுக்கொள்வது தான்!

கோவி.கண்ணன் said...

//சிவலோகத்தில் என்றும் நிலையாக வாழும் சிவயோகிகள் திருமூலர், சுந்தரர் போன்றவர்களாக பிறப்பதை சைவசித்தாந்தம் பேசும்.
//

குமரன்,

இதெற்கெல்லாம் ஆதாரம், தரவுகள் இருக்கிறதா ? என்று நான் கேட்கமாட்டேன். நான் கேட்கமாட்டேன் என்பதற்காக, நான் எழுதும் போது நீங்கள் கேட்கக் கூடாது என்பதும் எனது எதிர்பார்பல்ல.

நண்பர் வவ்வால் இங்கு பணியை தொடர்வதால், நான் முடித்துக் கொள்கிறேன்.

:)

சிரிப்பான போடுவது நான் சீரியசாக கருத்து கூறவில்லை என்பதற்குத்தான்
:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இங்கு வவ்வால் மற்றும் கோவி ஆகியோரின் மறுமொழிகளையும் குமரனின் பதில்களையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்...உடனே வர முடியாத படி, எங்க ஊரில் கொஞ்சம் ஊர் வேலைகள்!

வவ்வால்
மணவாள மாமுனிகளின் தமிழ் நூல்களைத் தாங்கள் படித்துள்ளீர்களா?

திருவாய்மொழி நூற்றந்தாதி
உபதேச ரத்தின மாலை
இயற் சாற்று
ஆர்த்தி பிரபந்தம்
மற்றும்
பெரியாழ்வார் திருமொழிக்கும்
ராமானுச நூற்றந்தாதிக்கும் ஈடுகள்!

திருவரங்கத்தில் வடமொழி/தென்மொழிச் சண்டை மீண்டும் தலை தூக்கிய போது, ஒரு கட்டத்தில் பிளவு ஏற்படும் என்ற நிலையிலும் ஆழ்வார்கள் தீந்தமிழைத் தாங்கிப் பிடித்தவர் தான் மணவாள மாமுனிகள்.

அவர் பெயர் ஜாமாத்ரு முனி! ஆனா மணவாள மாமுனிகள் ன்னா தான் எல்லாருக்கும் தெரியுது!
பின்னாளில் வேதாசலம் மறைமலை அடிகள் ஆனார்!
சூரிய நாராயண சாஸ்திரி பரிதி மாற் கலைஞர் ஆனார்!
இவர்கள் எல்லாம் தமிழ்ப் பற்றாளர்கள் தானே?

ஆனா ஜாமாத்ரு முனி, மணவாள மாமுனி ஆனது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு! தனித் தமிழ் இயக்கம் எல்லாம் அப்போ வரவே இல்லை! ஏன் தான் அப்பவே பேரை மாத்திக்கிட்டாரோ தெரியலை!

இப்ப சொல்லுங்க:
மணவாள முனியைத் தமிழ் பற்றாளர் என்று குமரன் சொன்னது அபாண்டத்திலும் அபாண்டம் அல்லவா?
இப்ப சொல்லுங்க:
ஒப்புக்கு எப்போதாவது தமிழ் வழிபாடு பற்றி அவர் சொல்லி இருக்கலாம். அவ்வளவு தானே?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மேலும்....
நீங்கள் சொன்ன பிரதிவாதி பயங்கரம் அண்ணாவை விட்டு சுப்ரபாதம் செய்யச் சொன்னது சரியே! அது வடமொழியில் இருக்கு! ஆனா அதுக்குச் சாரம் எது தெரியுமா? ஆழ்வார் பாசுரங்கள். வெளிப்படையாக அதே கருத்துகள் அதே வரிசையில் வரும். சுப்ரபாதப் பதிவுகளில் பாருங்கள்!

அதை ஏன் வடமொழியில் செய்யச் சொல்ல வேண்டும்? தமிழிலேயே செய்யலாமே? அங்கு தான் இருக்கு பதில்! எதை எதைத் தமிழில் செய்யணும், எதை எதை வடமொழியில் செய்யணும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது!
ஆழ்வாரின் தமிழ்க் கருத்து மற்றவர்க்கும் போய்ச் சேர ஏற்பாடே சுப்ரபாதம்!

சுப்ரபாதம் அப்போதெல்லாம் பிரபலம் ஆகவில்லை! எம் எஸ் பாடிக் கொடுத்த பின் பிரபலமானதால், அது வடமொழி என்பது சற்று உறுத்தலாக இருக்கு!
ஆனா திருமலையப்பன் சந்நிதியில் வடமொழி சுப்ரபாதம், தொண்டரடிப்பொடியின் திருப்பள்ளி எழுச்சி இரண்டும் சொல்வது உங்களுக்குத் தெரியுமா?

மார்கழி மாதத்தில் கோதையின் தமிழுக்கு ஏற்றங் கொடுக்க, சுப்ரபாதத்தை ஒரு மாதம் முழுசும் நிறுத்தி விட்டு, திருப்பாவை மட்டுமே சொல்லப்படுகிறது என்பதைக் கண்டு கேட்டு உணர்ந்து மகிழ்ந்துள்ளீர்களா?
இப்படிச் செய்வித்த ஏற்பாடு இராமானுசரும், அதன் பின்னால் அதைத் தூக்கி நிறுத்தியவர் மாமுனிகள் என்பதும் தெரிந்து தான், அவரின் தமிழ்ப் பற்றைப் பற்றித் தாங்கள் பேசினீர்களா?

குமரன் (Kumaran) said...

வவ்வால். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் மூன்றும் ஒன்று என்று எப்போது சொன்னேன்?! அவற்றை நிலைநாட்டிய ஆசாரியர்களை வைத்து அவற்றின் காலத்தைச் சொல்லுவது மரபு. நானும் அந்த வரிசையில் தான் இந்த பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு பலகாலமாக இருக்கின்றன என்று தான் அந்த அந்த தத்துவ ஆசாரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். இன்றும் அவை முரண்பட்டுத் தான் இருக்கின்றன. அதனை இந்த விவாதத்தில் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை எனக்குப் புரியவில்லை. அவை முரண்பட்டு இருக்கின்றன என்பதால் வைணவ விசிஷ்டாத்வைத மரபின் படி மணவாள மாமுனிகள் அனந்தனின் அவதாரம் என்று சொல்வது தவறாகிவிடுமா? புரியவில்லை.

சைவ சித்தாந்தம் மட்டும் இல்லை; வைணவமும் பிறப்பில்லா மோட்சம் என்பதில் தான் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் அந்த மோட்சம் என்பதற்கு சைவ சித்தாந்தம் சொல்லும் விளக்கத்தைக் கண்டிருக்கிறீர்களா? நாயன்மார்களும் திருமூலர் போன்றவர்களும் சிவலோகத்திற்குச் செல்வதாக பெரிய புராணம் சொல்கிறதா? இறைவனுடன் இரண்டறக் கலந்து காணாமல் போய்விடுவதாகச் சொல்கிறதா?

கட்டாயம் வைணவம் சொல்லும் மோட்சத்திற்கும் சைவ சித்தாந்தம் சொல்லும் மோட்சத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. அவற்றை மறுக்கவில்லை. நான் சொன்னதைப் படித்துப் பாருங்கள். அவை ஒட்டிய வரையறையைத் தருவதாகச் சொன்னேன். அதே வரையறையைத் தருவதாகச் சொல்லவில்லை.

என்றும் சிவலோகத்தில் இருந்து சிவத்தொண்டு செய்துவரும் சிவயோகிகள் எப்படி தவறு செய்ய முடியும்? அப்படி அவர்கள் செய்வதும் அதன் பயனாகப் பிறந்து வருவதும் சிவபெருமானின் திருவுள்ளம் என்பது சைவசித்தாந்தம். அப்படி சிவபெருமானின் திருவுள்ள உகப்பிற்காக அவர்கள் பிறந்து வருவது எப்படி? சிவலோகத்தில் பிறப்பில்லா நிலை அடைந்த அவர்கள் எப்படி பிறக்க முடியும்? அங்கும் ஏறக்குறைய அனந்தனின் அவதாரத்திற்குச் சொல்லும் விளக்கம் தான் தரப்படுகிறது.

கிருஷ்ணனை இராமனின் மறு அவதாரம் என்று பல முறை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். விஷ்ணுவின் அவதாரம் என்றும் சொல்வதுண்டு. அனுமனுக்கு கிருஷ்ணன் இராமனாகக் காட்சி தருவது, கடைசியில் கண்ணனை வேடுவன் அம்பு விட்டுக் கொன்றதற்கு இராமாவதார நிகழ்வைக் காரணமாகக் காட்டுவது என்று பல இடங்களில் கண்ணனை இராமனின் அவதாரம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மணவாள மாமுனிகளை அனந்தனின் அவதாரம் என்றும் இராமானுஜமுனியின் அவதாரம் என்றும் அதே வகையில் சொல்கிறார்கள். மேலே நீங்கள் இதே கேள்வியைக் கேட்ட போது மணவாள மாமுனிகளின் காலத்தில் இயற்றப்பட்டப் பாடலிலேயே அவர் அனந்தன் என்ற வரி இருக்கிறது என்று காட்டினேன். நான் சொன்ன முகவுரையில் தான் அதனைக் குறிக்காமல் விட்டுவிட்டேன். அது பெரும் தவறாக எனக்குத் தெரியவில்லை. அப்படி உங்களுக்குத் தோன்றினால் என்னை மன்னியுங்கள். மணவாள மாமுனிகள் அனந்தனின் அவதாரம்; இராமனுஜரின் அவதாரமும்.

மணவாள மாமுனிகளை இராமானுஜரின் அவதாரம் என்று சொல்வது மட்டும் தான் அவரது சீடர்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டதா? மணவாள மாமுனிகளை அனந்தனின் அவதாரம் என்று சொன்னால் அது அவரது சீடர்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டதாகாதா? இரண்டு வகையிலுமே அவரது சீடர்கள் (என்னைப் போன்ற அபிமானிகளும்) மணவாள மாமுனிகளைப் பெருமைப்படுத்துவதற்காகச் சொன்னதாகவே இருக்கட்டும். அதனால் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோவி.கண்ணன் said...
அதாவது முக்தி பெற்றவர்களை பின்னால் அவதாரமாக சொல்வது, அவர்களின் முக்தியை கொச்சை படுத்துவது போல்//

கொச்சையா?
அதை எல்லாம் தாராளமாப் படுத்தலாம் கோவி அண்ணா! தப்பே இல்லை! :-)))

ஏன் என்றால் கொச்சையா, இறைவனின் இச்சையா என்று வரும் போது....இறைவனின் இச்சைக்காக, கொச்சைப்பட்டு போவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் தான் அவர்கள்! :-))

குமரன் தத்துவார்த்தமாகச் சொல்லி உள்ளார்.
நான் இங்கு கொஞ்சம் எளிமையாச் சொல்லி உள்ளேன் பாருங்க!
http://verygoodmorning.blogspot.com/2007/10/19.html

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கிருஷ்ணரை விஷ்ணு அவதாரமாக சொல்வார்கள், ஆனால் அவரை ஒரு போதும், ராமரின் மறு அவதாரம் என்று சொல்வதில்லை. அப்படி இருக்க மூலம் அனந்தன் இருக்க,ஏன் மணவாள முனிகளை மட்டும் இராமனுஜரின் மறு அவதாரம் என்று சொல்லிக்கொள்கிறார்கள், இதெல்லாம் ஒருவரை உயர்த்தி காட்ட அவரது சீடர்களே கொளுத்தி போட்டுக்கொள்வது தான்!//

ஹிஹி
உயர்வும் தாழ்ச்சியும் அவர்களிடத்தில் இல்லீங்க வவ்வால்!
கண்ணனை ராமனின் அவதாரம்-ன்னு நேரடியா சொல்றது இல்லை!
அவதாரக் குறிப்புகள் இருந்தாலும் கூட!
ஆனால் மாமுனியை ஏன் இராமானுசரின் அவதாரம்-னு சொல்றாங்க-ன்னா...

அதுக்கு இராமானுசரை உயர்த்திக் காட்ட அவங்க சிஷ்யர்கள் போட்ட மாஸ்டர் பிளான் எல்லாம் ஒன்னும் இல்லை! அவர் தான் காலத்தால் முந்தியவர் ஆயிற்றே! அப்பிடின்னா பின்னாடி வந்த இவரோட சீடர்கள், அசால்ட்டா மாத்தி இருக்கலாமே!

உண்மை என்னான்னா,
மாமுனிகள் இராமானுசரின் பணிகளிலும் தொண்டிலும் உள்ளம் பறி கொடுத்தவர்! அதனால் தான் செய்த திருப்பணிகளுக்கு எல்லாம் கூட இராமானுசர் பெயரையே வைத்தார்!
தாம் செய்த நூலில் எல்லாம் கூட, நொடிக்கு நொடி இராமானுசரின் புகழையும் தொண்டையும் பாடுவார்

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்....என்று தான் பாடுகிறார்

ஒவ்வொரு நூலை முடிக்கும் போதும்...அவர் பேரைச் சொல்லியே முடிக்கிறார்!
இந்த உபதேச ரத்தின மாலைதன்னை
சிந்தையில் நாளும் சிந்திப்பார் - எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி
சதிராக வாழ்ந்திடுவார் தாம்
என்று எதிராசரைத் (இராமானுசர்) தான் முன்னிறுத்துகிறார்!

இப்படி இராமானுசர் மேலிருந்த அதீத அன்பைப் பார்த்து தான், மாமுனிகள் சீடர்களே, அவரை அனந்தனின் அம்சமாய் உரக்கச் சொல்லாது, இராமானுசரின் அம்சமாய் உரக்க ஏத்துகிறார்கள்!

மற்றபடி இங்கே கொளுத்திப் போடறது, கிழித்துப் போடறது எல்லாம் ஒன்னும் இல்லை!
இனிமேல் வரும் காலங்களில் மற்றவரோ இல்லை குமரனோ இல்லை நானோ கொளுத்திப் போடாமல் இருந்தால் சரி! :-))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கடைசி நாளில் வந்து கவிழ்த்துவிட்டு போனார் ? திருஷ்டி பொட்டு மாதிரி ஆகிவிட்டது//

ஹிஹி
கோவி அண்ணா
இன்னொன்னு...இதுவும் திருஷ்டிப் பொட்டா-ன்னு நீங்க எனக்குச் சொல்லணும்!

வடமொழியில் தனியன் பாடி திருஷ்டி வச்ச பெருமாளு, இன்னொரு திருஷ்டி வேலையையும் செய்யறாரு!

மணவாள மாமுனிகளைச் சில வடமொழிப் பற்றாளர்கள் நைசா அவரோட பழைய பேருக்குத் திருப்பப் பாக்குறாங்க! வடமொழியில் தனியனைச் செய்துட்டாரு என்கிற ஒரே காரணத்துக்காக, ஜாமாத்ரு முனி என்ற சொல்லின் கூட ரம்ய என்னும் அடைமொழியைச் சேர்த்து, ரம்ய ஜாமாத்ரு முனி...வாழ்கன்னு சொல்லுறாங்க!
அப்போ அதே பெருமாளு இன்னோரு வேலை பண்ணுறாரு!

ரம்ய=அழகிய ன்னு தமிழாக்கி
ரம்ய ஜாமாத்ரு முனியை, மீண்டும்
அழகிய மணவாள ஜீயர்-ன்னு மாத்திக் கூப்பிடுமாறு அடியார்க்கு உத்தரவிட்டுச் சொல்றாரு!

பெருமாள் பேரு தான் அழகிய மணவாளன்! அதையே தன் அடியவனுக்கும் விட்டுக் கொடுத்து, அழகிய மணவாள ஜீயர்ன்னு தமிழைத் தாங்கிப் பிடிச்சாராம்!

இது கூட திருஷ்டிப் போட்டு தானே? :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கடைசியாத் தான் குமரன்!
இப்போ ஒங்க கேள்விக்கு வரேன் குமரன்!

//குமரன் (Kumaran) said...
திருவரங்கத்தில் மட்டுமில்லை இரவிசங்கர். மற்ற திவ்ய தேசங்களிலும் கருவறையில் தமிழ் வடமொழியுடன் கூடி முழங்குகின்றது//

உண்மை தான் குமரன்!
மிகவும் உண்மை! அடியேன் சொல்ல வந்தது...திருவரங்கத்தில் மாமுனிகள் நேரடியாத் தலையிட்டு, அவர் காலத்திலேயே, தமிழைக் காத்தது!

//முதன்மை ஆசாரியர்களில் கடைசி என்று சொல்கிறீர்களா?//

ஆமாம்! அந்தப் பொருளில் தான் சொன்னேன்!
முதன்மை ஆசாரியர்கள் மாலை மாமுனிகளோடு முழுதும் இணைந்து விடுகிறது!

அதன் பின் வந்து வழி வழி ஆட்செய்யும் ஆசாரிய சீலர்கள் - ஆண்டவன் சுவாமிகள், அழகிய சிங்கர் சுவாமிகள், திருக்கோவிலூர் ஜீயர், சின்ன நாராயண ஜீயர் என்று பல வைணவ ஆசாரியர்கள், முதன்மை ஆசாரியர்கள் வழியில் தொண்டினை விளம்பரங்களின்றி விருப்புடன் செய்து கொண்டு தான் உள்ளனர்!

வவ்வால் said...

கண்ணபிரான்,

விளக்கமாக சொல்லி இருக்கிங்க, நான் நீங்கள் சொன்னதை எல்லாம் படிக்கலை , கேள்விப்பட்டதை வைத்து தான் சொல்கிறேன்.

எதை தமிழில் சொல்லனும், எதை சமஸ்கிருதத்தில் சொல்லணும்னு அவருக்கு "தெரிந்தது" இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்!

சுப்ரபாதத்தின் முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்தில் , ராமனுக்கு விச்வாமித்திரர் பாடிய சுப்ரபாதத்திலிருந்தே உருவப்பட்டது, மேலும் பலவும் வடமொழி வழி வந்தவையே, ஆழ்வார்கள் பாடிதும் அதில் வந்து இருக்கலாம்.இல்லை என சொல்லவில்லை, ஆனால் அது ஆழ்வார்கள் பாடலை உலக அறிய செய்யும் முயற்சி என்பது தான் கொஞ்சம் உதைக்கிறது!

சமஸ்கிருதத்தில் சொன்னால் எல்லாருக்கும் தமிழில் உள்ள ஆழ்வாரின் கருத்து போய் சேரும் என்றால் , சமஸ்கிருதத்தை எல்லாரும் அறிந்து இருக்கிறார்கள் , கேட்டதும் புரிந்து விடும் என்று சொல்ல வருகிறீர்களா, அதை செத்த மொழி என்று உலகில் உள்ள மொழியாளர்கள் எல்லாம் சொல்வதை அறிவீர்களோ.

மேலும் நீங்களே சுப்ரபாத விளக்கம் என்று பதிவு போட்டதாக ஒரு நினைவு! தமிழில் இருப்பதற்கே விளக்க உரைத்தேவை, ஆனால் எல்லோராலும் படிக்க முடியும் அதை, ஒரு முறை விளக்கினால் எளிதில் மனதில் தங்கிவிடும். ஆனால் சமஸ்கிருதம் அப்படியா? என்ன விளக்கினாலும் புரியாதே,அப்போ யாருக்கும் புரியாம எழுத வைப்பது தான் அனைவருக்கும் சென்று சேர்க்க செய்யும் திருப்பணியா :-))

-----------
குமரன்,

ராமனையே கடவுள் இல்லை மனிதன் தான் என்று வால்மீகி சொல்லி இருக்கிறார் ,ராஜாஜி கூட அப்படி சொன்னதாக இப்போது கலைஞரே தரவாக சொல்லியுள்ளார். பின்னாளில் தான் அவரை கடவுளாக மாற்றி விட்டார்கள்.

அப்படி இருக்கும் போது ராமனின் அவதாரமாக கிருஷ்ணர் என்று எங்கே சொல்லிக்கொள்கிறார்கள். மேலும் ஹனுமார் மஹாபாரதத்தில் வருகிறாரா, சில கிளைக்கதைகள் உண்டு அதில் இப்படி பல கதாப்பாத்திரங்களும் மீண்டும் இங்கும் அங்கும் வரும், ஆனால் மூல நூலில் அவை எல்லாம் இருக்காது. எனவே எப்போது ஹனுமார் கிருஷ்ணரை சந்திக்க அப்பாயிண்மென்ட் வாங்கினார் என்பது புரியவில்லை :-))

//விசிஷ்டாத்வைதம் சொல்லும் வரையறையை ஒட்டிய வரையறையையே த்வைதம், சைவசித்தாந்தம் போன்றவையும் தருகின்றன.//

ஒட்டிய என்றால் அது ஒத்து போவதாக சொல்ல வருவது தானே, அதனால் தான் ஒன்றா என்றுக்கேட்டேன், ஆன்மா,கர்மா,மோட்சம் பற்றி அவை ஒட்டியே சொல்லவில்லை என்பதே உண்மை.

அந்தக்கருத்துக்களில் பிளவு வருவதே அதில் தான் நீங்களில் அதிலேயே ஒட்டி வருகிறது என்று குன்சாக சொல்லி போகிறீர்களே :-))

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன்.

நீங்கள் தரவுகள் கேட்டால் தேடி எடுத்துக் கொடுக்கிறேன். இல்லை அவை எங்கே இருக்கின்றன என்றாவது சுட்டிக் காட்டுகிறேன். இங்கே பேசிய கருத்துகளின் நடுவிலேயே அந்தத் தரவுகள் இருக்கும் இடங்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். நன்றிகள். சிரிப்பான்களுக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

ஊர் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்ததற்கு நன்றி இரவிசங்கர்.

மணவாள மாமுனிகளின் தமிழ் நூல்களைப் பட்டியல் இட்டதற்கு நன்றிகள். இவற்றில் திருவாய்மொழி நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை, ஆர்த்தி பிரபந்தம் மூன்றையும் சிறிதே பார்த்திருக்கிறேன். இராமானுஜ நூற்றந்தாதிக்குச் சொன்ன உரையையும் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். இணையத்தில் இவை இருக்கின்றன என்று நினைக்கிறேன். படித்துச் சுவைக்க வேண்டிய நூற்கள்.

ஆழ்வார்களின் கருத்துகள் 'மற்றவர்க்கும்' போய்ச் சேர என்று வடமொழியில் திவ்விய பிரபந்தங்களின் சாரமாக சுப்ரபாதத்தை எழுத வைத்ததைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். மற்றவர்கள் என்றது யாரை என்று விளக்கிச் சொல்லிவிடுங்கள். வவ்வால் கேட்கிறார் பாருங்கள்.

முக்தர்களும் நித்யர்களும் இறைவனின் இச்சைக்காக அவதாரம் செய்வதை நன்கு சொல்லியிருக்கிறீர்கள் இரவிசங்கர். நன்றி.

இராமானுஜரைப் பற்றி மட்டும் இல்லை இரவிசங்கர் வேதாந்த தேசிகரைப் பற்றியும் மிக மிக உயர்வாக மணவாள மாமுனிகள் பேசியிருக்கிறார். அதனைப் பற்றிப் பேச வேண்டிய புலனம் வேறு புலனம்.

அடியேன் கேள்விகளுக்கும் விடை சொன்னதற்கு நன்றி இரவிசங்கர்.

குமரன் (Kumaran) said...

வவ்வால், 'மற்றவருக்கு' என்று இரவிசங்கர் எந்த முறையில் சொன்னார் என்பதை நான் அறிந்திருந்தாலும் அவரே வந்து உங்களுக்கு விளக்கமாகச் சொல்லட்டும் என்று விட்டுவிடுகிறேன். அவருக்கு நேரம் இல்லாமல் போனால் எனக்குப் புரிந்ததைச் சொல்கிறேன்.

இராமனை மனிதனாகத் தான் வால்மீகியின் இராமாயணத்தில் பெரும்பாலும் சொல்லியிருக்கிறார்; ஆனால் அவனை அவதாரம் என்று சொல்லும் குறிப்பு வராமல் இல்லை. நீங்கள் கேள்விப்பட்டதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியும். இராமனை தேவர்கள் எல்லோரும் வந்து வணங்கி நீங்கள் இறையவதாரம் என்று சொல்லும் போது 'இல்லை நான் மனிதன்; தசரதன் மகன்' என்று அவன் மறுத்துக் கூறுவதாக வால்மீகத்தில் ஒரு இடத்தில் வருகிறது. இதற்கும் வேறு எங்கெல்லாம் இராமன் அவதாரம் என்று வால்மீகத்தில் கூறப்படுகிறான் என்பதற்கும் சரியான சுலோகங்கள் வேண்டுமெனில் தேடித் தரவேண்டும்.

அனுமன் மகாபாரதத்தில் வருகிறான். பார்த்தனின் கொடி எந்தக் கொடி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். எந்த நூல் மூல நூல் என்ற விவாதம் இருக்கிறது; அப்படியே இருந்தாலும் நீங்கள் எந்த நூல் மூல நூல் என்று நினைக்கிறீர்களோ அந்த மகாபாரத நூலிலும் அனுமன் வருவதைக் காட்ட முடியும்.

அனுமன் கிருஷ்ணனை இராமனாகப் பார்க்க எப்போது அப்பாயிண்மென்ட் வாங்கினார் என்பதை அறியும் ஆவல் இருந்தால் தேடிப் பாருங்கள்; கிடைக்கும். நான் சொன்னதை வைத்து நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை.

விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவசிந்தாந்தம் போன்றவற்றின் தத்துவ விசாரணையில் இறங்கினால் அவற்றிற்கிடையே ஆன ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் நன்கு காண முடியும் வவ்வால். அதனை இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம். மோட்சம் என்பதைப் பற்றிய கருத்துகள் அவற்றுள் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கின்றன என்பது என் புரிதல். 'ஆன்மா, கர்மா, மோட்சம் பற்றி அவை ஒட்டியே செல்லவில்லை' என்பது உண்மை என்பது உங்கள் புரிதல். இது இங்கு பேசத் தொடங்கிய பொருளைப் பற்றி இல்லாமல் 'நான் குன்சாகப் போகிற போக்கில் தரவுகளைத் தராமல் சொல்லிச் சென்றதாக' இருப்பதால் அவற்றின் தத்துவங்களைப் பற்றி இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வவ்வால் said...
கண்ணபிரான்,
விளக்கமாக சொல்லி இருக்கிங்க, நான் நீங்கள் சொன்னதை எல்லாம் படிக்கலை , கேள்விப்பட்டதை வைத்து தான் சொல்கிறேன்//

சரிங்க வவ்வால்...இப்போதாவது தான் சொல்லுங்களேன்...அதைச் சொல்லாமல் அடுத்த புலனத்துக்குச் சென்று விட்டீர்களே!
மணவாள முனியை "ஒப்புக்குத் தமிழ் வழிபாடு பற்றி அவர் சொல்லி இருக்கலாம்" ன்னு முடிந்த முடிபாகச் சொல்லி விடலாமா? நீங்க என்ன நினைக்கறீங்க?

//சுப்ரபாதத்தின் முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்தில் , ராமனுக்கு விச்வாமித்திரர் பாடிய சுப்ரபாதத்திலிருந்தே உருவப்பட்டது//

அது திருப்பதி சுப்ரபாதம்-னு இல்லை!
மற்ற பெருமாள் ஆலய சுப்ரபாதங்கள் எல்லாம் கூட பெரும்பாலும் "கெளசல்யா சுப்ரஜா"-ன்னு தான் தொடங்கும்! அது முதலடி மரபு! அந்த முதலடி மட்டும் தான் வால்மீகியில் இருந்து "உருவப்பட்டது"

மற்றவை எல்லாம் ஆழ்வார் தமிழில் இருந்து எப்படி எப்படி எங்கெங்கு "உருவினாங்க" -ன்னு வேணும்னா சொல்லுங்க!
தனி "உருவல்" பதிவா போடுறேன்:-)
சுப்ரபாதப் பதிவில் ஆங்காங்கே சொல்லி வருகிறேனும் கூட!

இப்ப செத்த மொழிக்கு வருவோம்!
//அது ஆழ்வார்கள் பாடலை உலக அறிய செய்யும் முயற்சி என்பது தான் கொஞ்சம் உதைக்கிறது!//

உலகமே அறிய வைக்கும் முயற்சி-ன்னு நான் சொன்னேனா? சரியாப் பாருங்க...
//ஆழ்வாரின் தமிழ்க் கருத்து மற்றவர்க்கும் போய்ச் சேர ஏற்பாடே சுப்ரபாதம்!//

மற்றவர், மற்ற மொழின்னா, தாய்த் தமிழ் மட்டும் அல்லாமல், அன்று பூசைகளில் புழங்கி வந்த மற்ற மொழி! - எது? வடமொழி!
பிற ஆலயங்களில் அது மட்டுமே அறிந்த "மற்றவர்க்கும்" ஆழ்வார் சொல்லமுதை உணரும் முகத்தான் செய்தது சுப்ரபாதம்.

திருவாய்மொழி என்னும் தமிழ் வேதம் தனக்கே உரிய சில அரும் பெரும் கருத்துகளைத் தமிழில் கொண்டுள்ளது. அதனால் தேசிகர் என்பவர் அதன் மையமான கருத்துக்களைப் பிரபந்த சாரம் என்று வடமொழியில் செய்து வைத்தார். இன்னிக்கி அதை காசி, பூரி, நேபாளம் கண்டகி-ன்னு பல ஆலயங்களில் சொல்கிறார்கள். அதில் ஆழ்வார்கள், திராவிடம், தமிழ்-னு நம் சொற்கள் வெளிப்படையா வரும்!
அதை அந்த அந்த ஆலயங்களில் சொல்லிக் கொண்டு தான் இருக்காங்க! இது போலத் தான் மாமுனிகளின் நோக்கமும்!

//சமஸ்கிருதத்தை எல்லாரும் அறிந்து இருக்கிறார்கள் , கேட்டதும் புரிந்து விடும் என்று சொல்ல வருகிறீர்களா//

அடேங்கப்பா! எப்படிங்க, எப்படி? :-)
நான் அப்படிச் சொல்லவில்லை என்று உமக்கே நன்றாகத் தெரியும்! :-)
இன்னொரு முறை என் மறுமொழியைப் படிங்க!

//சமஸ்கிருதம் அப்படியா? என்ன விளக்கினாலும் புரியாதே//

உமக்கும், எமக்கும், நமக்கும் புரியாது தான்! :-)
ஆனா அதை வைத்து வழிபாடு ஆலய வழிபாடு செய்யும் சிலருக்குப் புரியும் அல்லவா? அதனால் தான் அவர்கட்கு புரியும் மொழியிலும் ஆழ்வார் கருத்துக்களைக் கொண்டு சேர்த்தால்...உணரத் தலைப்படுவார்கள் என்று செய்து வைத்தார்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மார்கழி மாதத்தில் கோதையின் தமிழுக்கு ஏற்றங் கொடுக்க, சுப்ரபாதத்தை ஒரு மாதம் முழுசும் நிறுத்தி விட்டு, திருப்பாவை மட்டுமே சொல்லப்படுகிறது என்பதைக் கண்டு கேட்டு உணர்ந்து மகிழ்ந்துள்ளீர்களா?//

இதுக்கு உங்கள் கருத்து என்ன வவ்வால்?
செத்த மொழியைக் கொஞ்சம் தள்ளி வைப்போம்! இதுக்கு உங்கள் கருத்து என்னன்னு நீங்க சொல்லவே இல்லையே! அதையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்! :-)

selvanambi said...

Nandri Kumaran
Kathukondirukirom
adiyen

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
தலைப்புப்பற்றி எதுவுமே அறியேன். ஆனால் உங்கள் அனைவர் கருத்துப் பரிமாறல் ரசித்துப் படிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி யோகன் ஐயா.