Sunday, December 09, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 4


முந்தைய அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.

'இப்ப கோவில் திறந்திருக்குமா தாத்தா?' என்று கேசவன் கேட்டான். அதற்கு மணிகண்டன் 'இப்ப நடை சாத்தியிருக்கும். நாலு மணிக்குத் திறப்பாங்க' என்று சொல்லிவிட்டு 'அண்ணா. நீங்க கிரிவலம் போகணும்ன்னு சொன்னீங்கள்ல. மூன்றரை மணி போல கிளம்பி கிரிவலம் போயிட்டு வந்து அப்புறம் கோவிலுக்குப் போகலாம். அப்பத் தான் இருட்டுறதுக்கு முன்னாடி கிரிவலம் போயிட்டு வர முடியும்.' என்றான். தாத்தாவும் 'அப்படியே செய்யுங்க' என்று சொல்ல கேசவனும் சரி என்று தலையாட்டினான். கந்தனுக்குக் கொஞ்சம் வருத்தம் தான். 'தனியா வந்திருந்தா இன்னேரம் கோவிலுக்குப் போயிட்டு வந்திருக்கலாம். கேசவனோட வந்ததால அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் போக வேண்டியிருக்கு. அவன் என்னடான்னா இந்த தாத்தா சொல்றதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுறான்' என்று எண்ணிக் கொண்டான்.

மணிகண்டன் மீண்டும் 'இப்ப மணி ரெண்டரை ஆச்சு. இப்ப கிளம்புனாத் தான் வீட்டுக்குப் போய் சாப்புட்டுட்டு கிரிவலம் கிளம்ப முடியும்' என்று சொல்ல, கேசவன் 'சாப்புட்டுட்டு அப்புறம் கிரிவலம் போகலாமா?' என்று தயங்கினான். 'சரியான ஆளா இருக்கான் இவன். சாப்புடாம கிரிவலம் போனா மயங்கி விழவா?' என்று கந்தன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே 'அதெல்லாம் ஒன்னும் தப்பில்லை' என்று தாத்தா சொன்னார். கந்தனுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி ஒரு பக்கம் வியப்பு.

மூவரும் தாத்தாவிடம் சொல்லிவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்கள். வீட்டில் சாப்பாடு தயாராக இருந்தது. நன்றாக வயிறார உண்டு விட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மூன்றரை மூன்றேமுக்கால் போல் கிளம்பி மலையைச் சுற்றி வரக் கிளம்பினார்கள்.

கோவில் வாசலில் வந்து வாசலில் இருந்த படியே கைகூப்பி வணங்கிவிட்டு சுற்றி வரத் தொடங்கினார்கள். வெயிலின் கடுமை குறையத் தொடங்கியிருந்தது. கொஞ்ச தூரம் வரை நகரத்தின் சலசலப்பு தொடர்ந்து வந்தது. மூலைக்கு ஒரு சிவலிங்கம் என்று இருக்கும் எட்டு திசை சிவலிங்கங்களைப் பற்றி மணிகண்டன் சொல்லிக் கொண்டே வந்தான்.


மலையைச் சுற்றி வரும் வழியில் இருக்கும் இரமணாசிரமம், சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், யோகி இராம்சுரத்குமார் ஆசிரமம் எல்லாவற்றையும் காட்டிக் கொண்டு வந்தான். இப்பவே இரமணாசிரமம் பார்த்துவிட்டுப் போய்விடலாமே என்று கந்தன் சொல்ல மறுநாள் வரலாம் என்று மணிகண்டன் சொல்லிவிட்டான்.

நகர எல்லை முடிந்த பின் மலைக்காட்சி மிக நன்றாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தான் மணிகண்டன். இந்த இடத்தில் தான் முதன் முதலில் தாத்தாவை பார்த்தோம்; இந்த இடத்தில் தான் தாத்தா தனியே கிரிவலம் வந்துக் கொண்டிருந்த தன் அண்ணனைப் பார்த்துப் பேசினார், குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்த தன் அண்ணன் முன் திடீரென்று எங்கிருந்தோ வந்து 'என்னைத் தேடி அலைகிறாயா?' என்று கேட்டதும் அதே இடத்தில் தான் என்று சொல்லிக் கொண்டே வந்தான்.

அவ்வப்போது கந்தனிடம் திருவண்ணாமலையைப் பற்றிய திருப்புகழ், திருவாசகம், திருவெம்பாவை என்று சாமி பாட்டுகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு வந்தான். அப்படி அவன் கேட்கும் போதெல்லாம் ரொம்பப் பெருமையாகத் தனக்குத் தெரிந்ததைக் காட்டிக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது என்று கந்தனும் சொல்லி வந்தான். நடுநடுவே பாட்டுகளையும் பாடிக் காண்பித்தான். மணிகண்டனை கந்தனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. வீட்டில் மணிகண்டனின் அம்மா திருப்புகழ் பாடச் சொல்லிவிடுவார்களோ என்று பயந்த கந்தன் மணிகண்டன் கேட்ட போது தயங்காமல் பாடினான். அதற்குக் காரணம் சுற்றிலும் இருந்த இயற்கைச் சூழ்நிலையா மணிகண்டனைக் கந்தனுக்குப் பிடித்துப் போய்விட்டதா என்று தெரியவில்லை. பல முறை தனியாக மொட்டை மாடிக்குச் சென்று இயற்கையை இரசித்தபடியே பாடுவது கந்தனின் வழக்கம் என்பதால் இயற்கை சூழ்நிலை தான் கந்தனை இங்கேயும் உற்சாகமாகப் பாடவைத்தது என்று நாம் நம்புவோம்.

கேசவன் நிலையைப் பற்றி எப்படி சொல்வது என்று தெரியவில்லை. மற்ற இருவர் சொல்வதைக் கேட்பதே தான் பிறவி பெற்றதன் பயன் என்பதைப் போல் நடந்து கொண்டான். கந்தனின் சில கிறுக்குத்தனங்கள் பிடிக்காவிட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேசவன் அவனுடன் நட்புடன் இருப்பதே இந்த மாதிரி நேரங்களில் கிடைக்கும் சத்சங்கத்திற்காகத் தானே. மூன்று நண்பர்களும் இப்படி தலத்தைப் பற்றியும் கோவிலைப் பற்றியும் தெய்வீகப் பாடல்கள் பற்றியும் பேசிக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் மிக்க மகிழ்ச்சியும் நட்பும் கொண்டு ஆனந்தமாக நடந்து கொண்டிருந்தனர்.

அப்படியே சுற்றி மலைக்குப் பின்னால் வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு கோவில் இருந்தது. அந்தக் கோவிலுக்குள் சென்று மாதொருபாகனை (அர்த்தநாரீஸ்வரர்) வணங்கிக் கொண்டார்கள். அந்தக் கோவிலைப் பற்றியும் ஒரு நல்ல கதையை மணிகண்டன் சொன்னான். இதற்குள் கந்தனுக்கு நடந்த களைப்பு தெரியத் தொடங்கிவிட்டது. தொடர்ந்து பேசிக் கொண்டே வந்ததும் காரணம். இன்னும் பாதி தூரம் போக வேண்டுமே என்ற கவலை இருந்ததால் கதையைக் கவனிக்கவில்லை. ஏற்கனவே நமக்குத் தெரிந்த கதையாய் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் காரணம்.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்து மலையின் இடப்பக்கம் வந்த போது ஒரு இடத்தில் ஒரு சிறிய கூட்டம் இருந்தது. ஒரு சின்ன சதுரக் குகை போன்ற ஒன்று இருந்தது. இயற்கையாக ஏற்பட்டதில்லை. சிமிண்டு மேடையின் மேல் அண்மையில் கட்டியது போல் இருந்தது. இடுக்குப் பிள்ளையார் என்று பெயர் சொன்னான் மணிகண்டன். அங்கிருந்தவர்களில் சிலர் மட்டும் அந்த சின்ன குகைக்குள் ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு பக்கத்தில் இருந்து நுழைந்து மறுபக்கம் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி ஒவ்வொரு முறை செய்யும் போதும் அவர்கள் கணக்கில் இருந்து ஒரு பிறவி குறைகிறது என்று சொன்னான் மணிகண்டன். இந்த நம்பிக்கையைக் கேட்டு உள்ளூரச் சிரித்துக் கொண்டாலும் நாமும் நுழைந்து வந்தால் என்ன என்று பக்கத்தில் சென்று ஆராய்ந்தான் கந்தன். 'அண்ணா. நீங்க நுழைஞ்சு வர்றீங்களா?' என்று கேசவனிடம் மணிகண்டன் கேட்க அவன் புன்சிரிப்புடன் வேகமாகப் போய் நுழைந்து வெளியே வந்துவிட்டான். கேசவன் செய்ததைப் பார்த்தவுடன் தனக்கும் ஒரு பிறவி குறையட்டும் என்று கந்தனும் உள்ளே நுழைந்தான். கேசவனை விட கொஞ்சம் குண்டாக இருக்கும் கந்தனால் அவ்வளவு எளிதாக உள் நுழைந்து வெளி வர முடியவில்லை. கஷ்டப்பட்டு வயிறு பிதுங்கி கைகால் வலிக்க வெளியே வந்து சேர்ந்தான்.

அப்போது தான் அவனுக்கு ஏன் இதில் நுழைந்து வந்தால் ஒரு பிறவி குறையும் என்று சொல்கிறார்கள் என்று புரிந்தது. ஒரு குழந்தை தாய் வயிற்றில் இருந்து வருவது போன்று கடினமாக இது இருப்பதால் அப்படி சொல்கிறார்கள் என்று கேசவனிடம் சொன்னான். 'ஆமாம் அண்ணா. தாத்தாவும் அப்படித் தான் சொன்னாரு' என்றான் மணிகண்டன். தாத்தாவும் அவன் சொன்னதைத் தான் சொல்லியிருக்கிறார் என்றவுடன் கந்தனுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. கந்தன் சொன்னதைக் கேட்டதும் கேசவன் இன்னொரு முறையும் மணிகண்டன் ஒரு முறையும் நுழைந்து வெளியே வந்தார்கள். கந்தன் 'என்னால் இன்னொரு முறை முடியாது' என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டான்.

அப்படியே சுற்றி ஈசான்ய மூலைக்கு வந்தார்கள். அங்கிருக்கும் ஈசான்ய லிங்கம் தான் எட்டுத் திசை லிங்கங்களில் கடைசி லிங்கம். இந்த லிங்கத்தை வணங்கியதும் கிரிவலம் நிறைவு பெறுகிறது என்று சொல்லியிருந்தான் மணிகண்டன். கோவில் கொஞ்சம் தூரத்தில் வரும் போதே தெரிந்தது. மற்ற திசைக் கோவில்கள் எல்லாம் ஒரு சின்ன மண்டபமாக இருக்க இந்தக் கோவில் மட்டும் கொஞ்சம் பெரிதாக இருந்தது.
ஈசானன் என்பதே சிவபெருமானின் பெயர் என்பதாலும் எண்திசைக்காவலர்களில் ஈசானன் வடகிழக்குத் திசைக்கு அதிகாரி என்பதாலும் இந்த ஈசான்ய லிங்கத்திற்கு மட்டும் கோவில் கொஞ்சம் பெரிதாக இருக்கிறது போலும் என்று கந்தன் சொல்ல மணிகண்டனும் கேசவனும் கேட்டுக் கொண்டு வந்தார்கள். கோவில் அருகில் வந்தவுடன் அங்கிருந்த காட்சியைக் கண்டு கந்தன் அதிர்ந்து நின்றுவிட்டான்.
அடுத்த அத்தியாயம் இங்கே

27 comments:

VSK said...

சட்ட்டுன்னு ஒரே பதிவில் கிரிவலம் வரச் செய்து விட்டீர்களே!

நன்றி, குமரன்!

இதில் சொல்லியிருக்கும் கதைகள் பதிவுக்குச் சம்பந்தம் இல்லையென விரிட்த்துக் கூறவில்லையோ!?

குமரன் (Kumaran) said...

ஆமாம் எஸ்.கே. ஒரே இடுகையில் கிரிவலம் ஏறக்குறைய நிறைவிற்கு வந்துவிட்டது. அடுத்த இடுகையில் நிறைவு பெற்றுவிடும்.

கதைக்குத் தேவையானவற்றை மட்டும் சொல்லிச் சென்றிருக்கிறேன். கதைகளைச் சொல்லத் தொடங்கினால் திருவண்ணாமலையைப் பற்றிய தனித் தொடர் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான் கதைகளும் பாடல்களும் கந்தனுக்குத் தெரியும் என்ற செய்தியை மட்டும் சொல்லிவிட்டுவிட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

இந்த கதை முடிந்த பின்பு கந்தன் தெரியும் என சாய்ஸில் விட்ட கதைகளை தெரியாத எங்களுக்குக்காகச் சொல்லுங்கள் குமரன்.

கீதா சாம்பசிவம் said...

அட, போட ஆரம்பிச்சாச்சா? நல்ல இடத்தில் நிறுத்திட்டீங்க, கதைகளையும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமோ? தெரியாதவங்க தெரிஞ்சுப்போம் இல்லையா?

கீதா சாம்பசிவம் said...

டாக்டருக்கு, நீங்க கொடுத்த பதிலை இப்போத் தான் பார்த்தேன். :D

இராமநாதன் said...

என்னப்பா அதிர்ச்சி? வெயிட்டிங்.

இதையும் பாருங்க.

some nice shots of the annamalai jothi utsavam.

குமரன் (Kumaran) said...

கந்தனுக்குத் தெரியும்ன்னு விட்ட கதையெல்லாம் எனக்கு எப்படி தெரியும் கொத்ஸ்? :-)

ச்சும்மா. முடிஞ்சா சொல்றேன் கொத்ஸ்.

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. ஏற்கனவே தலைப்புக்குத் தொடர்பா இன்னும் வரலை; கதையின் போக்கு புரியலைன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். அதான். கதைகளை விவரிக்காம விட்டுட்டேன். உங்களுக்கு கட்டாயம் அந்த கதையெல்லாம் தெரிஞ்சிருக்கும்.

குமரன் (Kumaran) said...

இராம்ஸ். அதிர்ச்சி என்னன்னு வியாழன் அன்று தெரிஞ்சுக்கலாம். நீங்க கொடுத்த யூ ட்யூப்பை வீட்டுல போய் பாக்குறேன்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

நல்லது குமரன் - ஆக, ஏறக்குறைய கிரிவலம் நாமும் முடிச்சாச்சு.
சென்ற பதிவில் பார்த்த லிங்கோத்பவர் பெரிய நெருப்புத் தூணாக எழுந்து நின்றபோது, பிரம்மனுக்காக தாழம்பூ பொய் சொன்னது. அதனால் கோபமுற்ற சிவபெருமான் அக்னிப் பிழம்பாக மாறினார். சிவனின் உடம்பில் குடிகொண்டிருந்த இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட அஷ்டதிக்கு பாலர்கர்களும் வெப்பம் தாங்காமல் வெளியே வந்து விழுந்ததுதான் இந்தப் பதிவில் பார்த்த எட்டு சிவலிங்கங்களும் என்று புராணம் சொல்கிறதல்லவா?

G.Ragavan said...

ம்ம்ம்ம்..... படித்தேன் குமரன். இந்தப் பகுதியில் சொல்லப்பட்டவையனைத்தும் கதைக்குத் தேவையானவைகளா? ரொம்ப படிப்பது போல இருந்ததால் கேட்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஜீவா. எண்திசை லிங்கங்களைப் பற்றி சொன்னதற்கு நன்றி. நான் அறியாதது அது.

குமரன் (Kumaran) said...

இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் கதைக்குத் தேவையானது தானா? நல்ல கேள்வி இராகவன். நிறைய சொல்வது என் இயற்கை என்று நினைக்கிறேன். அதனால் சில இடங்களில் 'இது வேண்டாம்; இது வேண்டாம்' என்று செயற்கையாகக் கத்தரித்தேன். கதையினைச் சொல்லும் போது வந்து விழுவதை எல்லாம் எழுதாமல் முடிந்த வரை இப்படி வெட்டுவதைச் செய்து கொண்டிருக்கிறேன். இது வரை இரண்டு மூன்று பேர் கேட்டுவிட்டார்களே; வெட்டியவைகளையும் சொல்லியிருக்கலாமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நீங்கள் வந்து இதில் சொன்ன இவையும் கதைக்குத் தேவையா என்று கேட்டு அந்த எண்ணத்தைச் சமன் செய்துவிட்டீர்கள்.

சுருக்கமாக உங்கள் கேள்விக்கு விடை 'தெரியாது' என்பது தான். முழுதும் எழுதி முடித்த பின்னர் பார்த்தால் வெட்டவும் விரிக்கவும் நிறைய இருக்கும் என்று தான் நினைக்கிறேன். முதல் முயற்சி தானே. :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கந்தனின் சில கிறுக்குத்தனங்கள் பிடிக்காவிட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேசவன் அவனுடன் நட்புடன் இருப்பதே இந்த மாதிரி நேரங்களில் கிடைக்கும் சத்சங்கத்திற்காகத் தானே//

குமரன்...
நான் என் நண்பனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டீங்களா என்ன? :-)

கதைக்குள் கதை வச்சா மகாபாரதம் மாதிரி நீண்டு விடும் அபாயம் இருக்கு குமரன்.

இந்த விறுவிறு கிரிவல நடையே போதுமானதா இருக்கு!

//மூன்றரை மூன்றேமுக்கால் போல் கிளம்பி மலையைச் சுற்றி வரக் கிளம்பினார்கள்//

இது தான் கிரிவலம் வர உகந்த நேரமா குமரன்?
பலர் இரவு நேரம் வலம் வருவதையும் பார்த்து இருக்கேன்!

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். நிறைய பேர் இரவு நேரம் தான் கிரிவலம் வருகிறார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சூப்பர் ஸ்டாரும் கிரிவல வீதி முழுக்க மின்விளக்கு அமைத்துத் தந்திருக்கிறார் என்றும் அண்மையில் படித்தேன்.

நான் கிரிவலம் சென்றது ஒரே ஒரு முறை தான். அது அதிகாலையில் தொடங்கி வெயில் வரும் முன் நிறைவு பெற்றுவிட்டது. அதனால் மாலை தான் உகந்த நேரமா என்று தெரியாது. இந்தக் கதையின் படி நண்பர்கள் மூவரும் மாலை நேரத்தில் வலம் வந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு மட்டுமா கந்தனைப் போன்ற நண்பர்கள் இருப்பார்கள்? எனக்கும் இருக்கிறார்களே?! ;-)

உண்மை தான். கதைக்குள் கதை வச்சா ரொம்ப நீண்டு போய்விடும் தான்.

Natarajan said...

Very interesting Kumaran. Waiting for next update.

Anbudan,
Natarajan

குமரன் (Kumaran) said...

Thanks Natarajan. Next part has been posted now.

RATHNESH said...

கிரிவலம் மற்றும் எண்திசை லிங்கங்கள் பற்றிய தகவல்கள் நன்றாக இருக்கின்றன.

ஆளாளுக்கு உங்களை இழுப்பதைப் பார்த்தால் முதலில் பிள்ளை உண்டாகி இருக்கும் பெண்ணுக்கு போறவர் வர்றவர் எல்லாம் அறிவுரை என்கிற பெயரில் 'படுத்துகின்ற' பாடுகள் ஞாபகம் வருகின்றன.

பத்திரமாய்ப் பெற்றுத் தேறுங்கள் என்று வாழ்த்துகிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி இரத்னேஷ். (ஏன் உங்களை சிலர் ரத்னேஷ் அப்பா என்று அழைக்கிறார்கள் என்று அறிய ஆவல்).

அன்புடன் வரும் விமரிசனங்கள் தானே இரத்னேஷ். அவை நல்லவை தான்.

cheena (சீனா) said...

ஒரு கிரிவலம் சென்று வந்த நிறைவு ஏற்படுகிறது.

குமரன் (Kumaran) said...

நன்றி சீனா ஐயா.

கோவி.கண்ணன் said...

குமரன்,

படங்களெல்லாம் சூப்பரோ சூப்பர்...தெளிவாக எல்லா ஏற்பாட்டுடன் பொறுப்பாகவே எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள் !

குமரன் (Kumaran) said...

நன்றி கோவி.கண்ணன்.

கோவி.கண்ணன் said...

//அப்போது தான் அவனுக்கு ஏன் இதில் நுழைந்து வந்தால் ஒரு பிறவி குறையும் என்று சொல்கிறார்கள் என்று புரிந்தது.//

குமரன் நல்லது.

இதுதான் கடைசி பிறவி என்று அறியாமல் பிறவியை குறைக்கிறேன் என்று உள்ளே நுழைந்தால் வெளியே வந்த உடனே நேராக சொர்கம் தானா ?

பக்தர்களுக்கு ஒரு எச்சரிக்கை பலகை அங்கே வைத்து இருக்க வேண்டும்.

வெற்றிகரமாக வெளியே வந்தவர்களுக்கு குறைந்த பட்சம் இன்னும் ஒரு பிறவியாவது இருக்கு என்று தானே பொருள் ?

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன்.

லாஜிக் கொஞ்சம் இடிக்குதே. தாயின் வயிற்றிலிருந்து பிறந்து வரும் அனுபவத்தை ஒத்து இருக்கிறது இந்த இடுக்குப் பிள்ளையார் அனுபவம். அதனால் அதில் நுழைந்து வந்தால் இனி வரப்போகும் ஒரு பிறவி/ஒரு முறை தாயின் வயிற்றிலிருந்து பிறந்து வரும் அனுபவம் குறையும் என்பது தான் நம்பிக்கை. இப்போது இருக்கும் பிறவி அதன் காலம் முடியும் வரை இருக்கத் தான் செய்யும்.

இதுவே கடைசிப் பிறவி என்றால் அந்த நிலையில் இருப்பவர்களுக்கு இடுக்குப் பிள்ளையார் தேவையிருக்காது. இன்னும் ஒரு பிறவி தான் பாக்கி என்றால் அந்த நிலையில் இருப்பவர்களுக்கும் தேவையிருக்காது; அப்படியே அவர்கள் நுழைந்து வந்தால் இனி வர வேண்டிய அந்த ஒரு பிறவி வராது; இப்போது இருக்கும் பிறவியில் காலம் முடிந்த பின் முக்தி (சொர்க்கம் இல்லை; மோட்சம் - முக்தி - வீடுபேறு).

லாஜிக் பேசினீர்களே; அதற்காக லாஜிக் படி பதில் சொல்ல முயன்றேன். அவ்வளவு தான். :-) இப்படி சிலவற்றில் தான் லாஜிக் படி பதில் சொல்ல முடிகிறது. அப்படி இருக்கும் போது வாய்ப்பை விடலாமா? :-)

வெற்றி said...

நன்றி குமரன். மிகவும் அழகாகவும், ஆர்வாத்தைத் தூண்டும் வகையிலும் சொல்லியிருக்கிறீங்கள்.

குமரன் (Kumaran) said...

வாங்க வெற்றி. கொஞ்ச நாளா ஆளைக்காணலியேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இன்னும் நிறைய அத்தியாயங்களை இட்டுவிட்டு இப்ப அடுத்தத் தொடர்கதையையும் தொடங்கிவிட்டேன். அதுவும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.