Saturday, November 17, 2007

பரிமேலழகரைப் பற்றி தேவநேயப் பாவாணர்...

வள்ளுவப் பெருந்தகையின் இன்பத்துப் பால் குறட்பாக்களுக்கு விளக்கம் எழுதத் தொடங்கிய போது பல நேரங்களில் புரியாத சொற்கள் வரும் போது உரை நூலைப் பக்கத்தில் வைத்திருக்காத குறை பெரிதும் உணர்ந்திருக்கிறேன். இந்தக் காரணத்தால் சில நாட்கள் எந்த இடுகையும் அந்தப் பதிவில் இடாமலும் இருந்திருக்கிறேன். அண்மையில் தமிழ் இணைய பல்கலைக்கழக நூலகம் கண்ணில் தட்டுப்பட்டது. ஒரு பெரும் இலக்கியச் சுரங்கமாக அது அமைந்திருக்கிறது. அங்கு பல நூற்களுக்கு உரை நூற்களும் இருக்கின்றன. திருக்குறளுக்கும் பல உரைகள் அங்கே கிடைக்கின்றன. பரிமேலழகர் உரை, கலைஞர் உரை, தேவநேயப் பாவாணர் உரை என்று பல உரைகள் இருப்பதால் இப்போதெல்லாம் இன்பத்துப் பால் குறட்பாக்களுக்கு ஒவ்வொருவரும் எந்த வகையில் பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்று படித்துப் பின்னர் இடுகையில் எழுதுவது ஒரு சுவையான பயிற்சியாக இருக்கிறது.

தவறான பொருளுடன் கூடிய ஒரு உரை நூல் வெளிநாட்டவர் ஒருவரால் திருக்குறளுக்கு எழுதப்பட்டு அது மதுரையில் பாண்டித்துரையாரின் கண்ணில் பட அவர் அந்த உரை நூலின் எல்லா பிரதிகளையும் வாங்கி கொளுத்திவிட்டார் என்ற நிகழ்ச்சியைப் பற்றி அண்மையில் ஒரு இடுகையில் எழுதியிருந்தேன். அப்போது பின்னூட்டம் இட்ட நண்பர் ஒருவர் பாண்டித்துரையார் போன்ற ஒருவர் பரிமேலழகர் உரையை எரிக்க இல்லாமல் போய்விட்டார் என்று சொன்னார். நானும் அப்போது அந்த அளவிற்கு பரிமேலழகர் உரையை வெறுக்க வேண்டிய காரணம் என்னவோ என்று மனத்தில் வியந்தேன்.

அப்புறம் தான் தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் தேவநேயப் பாவாணரின் திருக்குறள் உரையைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவரது உரை நூலின் முன்னுரையைப் படித்துக் கொண்டு வரும் போது அவர் பரிமேலழகரைப் பற்றி சொல்கிறார். அவர் சொன்னதை இங்கே எடுத்து எழுதுகிறேன்.

'திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறு உள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழகர் உரையே தலை சிறந்ததெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாதது எனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லாவற்றினும் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனைய உரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேல் அழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும் உண்மையே.'

இப்படிச் சொன்னவர் நடுநிலைமையோடு காண்பவர்கள் என்ன என்ன குறைகளை பரிமேலழகர் உரையில் காண்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் தருகிறார்.

'பரிமேலழகர் வழுவியுள்ள வழிகள்:

1. ஆரிய வழி காட்டல்: எ-டு: 'தத்துவம் இருபத்தைந்தினையும் தெரிதலாவது...சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல்'; 'இவர் பொருட்பாகுபாட்டினை அறம் பொருள் இன்பமென வடநூல் வழக்குப்பற்றி ஓதுதலான்'

2. பொருளிலக்கணத் திரிப்பு: எ-டு: 'வடநூலுட் போசராசனும்...யாம் கூறுவதின் இன்பச்சுவை ஒன்றனையுமே என இதனையே மிகுத்துக் கூறினான். இது புணர்ச்சி பிரிவென இருவகைப்படும்'. தமிழ் அகப்பொருள் நூல்களும் திருக்குறள் இன்பத்துப்பாலும் கூறுவது இன்ப வாழ்க்கையே அன்றி இன்பச்சுவை மட்டுமன்று. இவ்வாழ்க்கை களவு கற்பு என்றே இருவகைப்படும்.

3. ஆரியவழிப் பொருள் கூறல்: எ-டு: 'பிதிரராவார் படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி'

4. ஆரியக் கருத்தைப் புகுத்துதல்: எ-டு: 'இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட பெயலும் விளையுளும் தொக்கு (குறள் 545), முறைகோடி மன்னவன் செய்யின் உறை கோடி ஒல்லாது வானம் பெயல் (குறள் 559) என்று உடன்பாட்டு வடிவிலும் எதிர்மறை வடிவிலும் செங்கோலே மழை வருவிக்கும் என்று ஆசிரியர் கூறியிருப்பவும், பசுக்கள் பால் குன்றிய வழி அவியின்மையாலும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பமென்பன ஓதாமையாலும் வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயல் ஒல்லாதென்பதாயிற்று என்று பரிமேலழகர் 'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்' என்னும் குறளுரையில் தலைகீழாய்க் கருமகத்தைக் கரணமெனக் கூறியிருத்தல் காண்க.

5. தென்சொல்லை வடசொல் மொழிபெயர்ப்பெனல்: எ-டு: 'உழையிருந்தான்' எனப்பெயர் கொடுத்தார், அமாத்தியர் என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். குடங்கர் என்பது குடங்கமென்னும் வடசொற் திரிபு.

6. தென்சொற்கு வடமொழிப் பொருள் கூறல்: எ-டு: அங்கணம் = முற்றம்

7. சொற்பகுப்புத் தவறு: எ-டு: பெற்றத்தால் - 'பெற்ற' என்பதனுள் அகரமும் அதனால் என்பதனுள் அன் சாரியையும் தொடை நோக்கி விகாரத்தால் தொக்கன

8. சொல் வரலாற்றுத் தவறு: எ-டு: அழுக்காறென்பது ஒரு சொல் - அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர வைகார விகுதியும் பெற்று அழுக்காறாமையென நின்றது.

9. சொற்பொருள் தவறு: எ-டு: இனிது = எளிது.

10. அதிகாரப் பெயர் மாற்று: எ-டு: மக்கட்பேறு = புதல்வரைப் பெறுதல்

11. சுட்டுமரபறியாமை: எ-டு: அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும். அஃதும் = ஏனைத் துறவறமோ எனின்.

12. இருகுறளைச் செயற்கையாக இணைத்தல்: எ-டு: 631, 632ம் குறட்பாக்கள்.

ஆயின், பரிமேலழகர் உரையால் ஒரு பெருநன்மையும் இல்லையோ எனில், உண்டு. அது எதுவெனில் அவர் உரைத் தொடர்பால் திருக்குறள் இதுவரை அழிக்கபடாதிருந்ததே என்க. '


தேவநேயப் பாவாணர் சொன்னவற்றை பச்சை நிறத்திலும் பரிமேலழகர் சொன்னவை என்று எனக்குத் தோன்றுபவற்றை நீலத்திலும் குறித்துள்ளேன்.

21 comments:

கோவி.கண்ணன் said...

//ஆயின், பரிமேலழகர் உரையால் ஒரு பெருநன்மையும் இல்லையோ எனில், உண்டு. அது எதுவெனில் அவர் உரைத் தொடர்பால் திருக்குறள் இதுவரை அழிக்கபடாதிருந்ததே என்க. '//

சரிதான், சிவனும், சைவமும், முருகனும், திருமாலும் கூட ஆரியமயமாக்கப்படவில்லை என்றால் மாஜி கடவுள் ஆகி இருப்பார்கள்.

//தேவநேயப் பாவாணர் சொன்னவற்றை பச்சை நிறத்திலும் பரிமேலழகர் சொன்னவை என்று எனக்குத் தோன்றுபவற்றை நீலத்திலும் குறித்துள்ளேன்.//

குமரன்,
தேவநேயப்பாவாணரை படிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி !

கோவி.கண்ணன் said...

//அப்போது பின்னூட்டம் இட்ட நண்பர் ஒருவர் பாண்டித்துரையார் போன்ற ஒருவர் பரிமேலழகர் உரையை எரிக்க இல்லாமல் போய்விட்டார் என்று சொன்னார். //

குமரன்,

பெயரை குறிப்பிட்டே, சுட்டியுடன் சொல்லலாமே, நான் அனானியாக அங்கெ பின்னூட்டம் போடவில்லையே.

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன். தேவநேயப் பாவாணர் முடிவில் ஒரு முத்தாய்ப்பாகச் சொல்வதை நீங்கள் அப்படித் தான் புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்தேன். உறுதி செய்துவிட்டீர்கள். :-)

தேவநேயப் பாவாணரை முன்பே படித்திருக்கிறேன் கோவி.கண்ணன். மறைமலையடிகளாரின் நூற்களையும் படித்திருக்கிறேன். ஆய்வு நோக்கில் படிப்பது இப்போது தான்.

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன். உங்கள் கருத்தைச் சொல்லத் தோன்றிய எனக்கு உங்கள் பெயரைச் சொல்ல வேண்டிய தேவை தோன்றவில்லை. அதனால் பெயரையும் சொல்லாமல் சுட்டியையும் தராமல் விட்டேன். இந்த இடுகை உங்கள் பின்னூட்டத்திற்கான பதில் இல்லை. நான் படித்ததைப் பகிர்ந்து கொண்டேன். இங்கே தேவநேயப் பாவாணர் சொன்னதில் எனக்கு ஏற்புடையன எவை; ஏற்பில்லாதவை எவை என்றும் பேசவில்லை. அது இடுகையின் நோக்கம் இல்லை.

செல்விஷங்கர் said...

பரிமேலழகர் உரை காலத்தால் அழியாததும் உயர்ந்ததும் ஆகும். இலக்கணத்தில் உயர்வுசிறப்பு என்பார்களே - அது போன்றது பரிமேலழகர் உரை. பிற்காலத்தில் தோன்றி, காலத்துக்கு ஏற்பக் கருத்துகளைப் பின்னியது தேவநேயப் பாவாணர் உரை. சங்கப் புலவர் பதின்மரிலும், பரிமேலழகர் உயர்ந்தாரெனில், அது சாதாரணச் செயலன்று. ஆற்றலும் அறிவும் மிக்க ஆளுமைப் பண்பாகும் என்பது என் எண்ணம்.

G.Ragavan said...

இப்ப என்ன சொல்ல வர்ரீங்க? இந்தத் திருத்தங்களைத் தவிர...பரிமேலழகரோட மத்ததப் படிக்கலாமா?

பரிமேலழகர் எந்த ஊரு? எந்தக் காலம்? அந்த விவரங்களையும் குடுங்களேன்.

குமரன் (Kumaran) said...

செல்விஷங்கர்.

தங்கள் எண்ணத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி. சங்கப்புலவர்கள் பதின்மர் என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர்கள் யார் யார் என்று சொல்லுங்கள். எனக்குத் தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

இராகவன். இந்தத் திருத்தங்கள் என் கருத்து இல்லை. தேவநேயப் பாவாணர் சொன்னவை இவை. இவற்றைத் தவிர்த்து பரிமேலழகர் உரையில் இருக்கும் மற்றவற்றைப் படிக்கலாமா என்று அவரைத் தான் கேட்கவேண்டும். வேறு எங்காவது பாவாணர் ஐயா பரிமேலழகரைப் பற்றிச் சொல்லியிருந்தால் அவற்றையும் உங்களுக்குச் சொல்கிறேன். அவருடைய கருத்து எதுவாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அதனை எடுத்துக் கொள்ளலாம்.

பரிமேலழகர் எந்த ஊரு, எந்தக் காலம் என்பவற்றைப் பற்றி எனக்கு தெரியவில்லை. இணையத்தில் தேடினால் கிடைக்கலாம். தேடிக் கிடைத்தால் சொல்கிறேன். இப்போதே தேடுகிறேன். :-)

குமரன் (Kumaran) said...

விக்கிபீடியா சொல்வது:

பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் முதன்மையானவர் ஆவார். இவர் பிறந்த இடமாகக் காஞ்சீபுரம், மதுரை, ஒக்கூர் போன்ற வெவ்வேறு இடங்களைப் பலர் குறிப்பிட்டுள்ளனர் எனினும் இது குறித்துச் சரியான தகவல்கள் கிடையா. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் பிற்பட்டவர் இவரே. இதனால் இவரது உரையில் முன்னவர்களது உரைகள் தொடர்பான குறிப்புக்களும் காணப்படுகின்றன.

-----

பரிமேலழகருக்குப் பின்னர் நிறைய பேர் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள். தேவநேயப்பாவாணர், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் எடுத்துக்காட்டுகள். விக்கிபீடியா குறிப்பது முற்கால உரைகளில் காலத்தால் பிந்தியது பரிமேலழகர் உரை என்று சொல்வதாக நினைக்கிறேன்.

செல்விஷங்கர் said...

//சங்கப்புலவர்கள் பதின்மர் என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர்கள் யார் யார் என்று சொல்லுங்கள். எனக்குத் தெரியவில்லை.//

தருமர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் முதலானோர்

குமரன் (Kumaran) said...

செல்விஷங்கர்.

இந்தப் பதின்மரும் சங்கப் புலவர்களா? இவர்களில் சிலர் (பரிதி, மணக்குடவர், காலிங்கர்) திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் சங்க கால புலவர்கள் என்று அறியவில்லை. அவர்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவர்கள்?

செல்விஷங்கர் said...

இவர்கள் அனைவரும் கடைச்சங்க காலப் புலவர்கள். நேரமிருப்பின் வாருங்களேன்.

http://pattarivumpaadamum.blogspot.com
http://ennassiraku.blogspot.com

குமரன் (Kumaran) said...

உங்களின் மூன்று பதிவுகளையும் ஏற்கனவே பார்த்துவிட்டேன் செல்விஷங்கர். சீனா ஐயா முன்பொரு முறை உங்களது 'கேட்டதில் பிடித்தது' பதிவின் சுட்டியைத் தந்த போது தான் பார்த்தேன். தொடர்ந்து எழுதி வாருங்கள். எனக்கு கேள்விகளோ கருத்துகளோ இருக்கும் போது பின்னூட்டத்தில் சொல்கிறேன்.

RATHNESH said...

"திருக்குறளைக் கட்டமைப்பதில் பரிமேலழகரின் வடமொழி சார்ந்த பார்வையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. வடமொழியின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்த அந்தக் காலத்தில் வடமொழி நூல்களான அர்த்த சாஸ்திரம் தம்மபதம் போன்றவைகளை மிஞ்சக் கூடிய ஒரு நூல் தமிழிலும் இருக்கிறது என்று காட்டும் ஆர்வம் தான் பரிமேலழகரைச் செலுத்தி இருக்க வேண்டும். அவருக்கு மற்ற உள்நோக்கங்கள் கற்பிப்பது அவர் கால சமூகத்தை முழுவதும் ஆராயாது செய்யும் தவறு என்று தான் தோன்றுகிறது. . . . . . . . . .இவ்வளவு சந்தேகங்கள் இருந்தும் மூலநூலின் உண்மை வடிவம் கிடைக்காத நிலையில் பரிமேலழகரின் பகுப்பைத் தற்காலத்தில் எல்லோரும் ஏற்றுக் கொண்டிருப்பது நல்ல விஷயமே. இல்லையேல் குறள் பேருக்குப் பேர் வேறுபட்டு ச்தறிப் போயிருக்கும். அதற்காகவாவது நாம் பரிமேலழகருக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்பவை சுஜாதா எழுதியுள்ள முன்னுரையின் சில வரிகள்.

இதன் உண்மையை உணர வேண்டுமானால் சாலமன் பாப்பையா எழுதியுள்ள திருக்குறள் உரையைப் படித்துப் பாருங்கள். குறள்களையும், அதிகார வரிசையையும் தன் நோக்கில் மாற்றி அமைத்திருக்கும் அவருடைய பாங்கு நல்ல வேளையாக வரவேற்புப் பெறவில்லை. இத்தகைய முயற்சிகள் அந்தக் காலத்திலேயே தொடங்கி இருந்தால் இன்று நம் கையில் திருக்குறள் இல்லை.

ராகவன் சார் சும்மாவே கேட்டிருந்தாலும் நான் சொல்ல விரும்புவது: பரிமேலழகர் உரை பலப்பல குறள்களில் 'கேனத்தனமாக' இருக்கும். மொத்தமாகவே தவிர்த்து விடலாம். ஒரே ஒரு உதாரணம்: "தோன்றிற் புகழொடு தோன்றுக" என்கிற குறள். அதற்கு அவர் தந்துள்ள விளக்கம்: "மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று". (பிறப்பு நம் கையிலா இருக்கிறது? குறளில் விலங்கு எங்கிருந்து வந்தது?). அவர் சரியாகப் பொருள் எழுதி இருப்பவற்றைப் பிற்காலத்தைய உரையாசிரியர்கள் கைக் கொண்டு விட்டார்கள்.

செல்வி ஷங்கர் மேடம், திருக்குறள் உரைகளில் மணக்குடவர் உரை தான் பழமையானது என்றும் அவர் காலம் பத்தாம் நூற்றாண்டு என்றும் படித்த ஞாபகம் இருக்கிறது.

குமரன், நீங்கள் தேவநேயப் பாவாணரின் வரிகளுக்கும் உரை இன்னொரு நிறத்தில் எங்களுக்குப் புரியும் தமிழில் தந்திருக்கலாம்.

Zrix said...

தருமர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் முதலானோர்..........இவர்கள் எல்லாம் கடைச்சங்கப் புலவர்கள் அல்லர். தெரியாவிட்டால் அமைதியாக இருக்காமல் தவறான தகவல்களைத் தருவோர் திருந்துவது எப்போது?

குமரன் (Kumaran) said...

இவர்கள் எல்லாம் யாரென்று நீங்களாவது சொல்லியிருக்கலாமே Zrix?! ஒருவர் சொல்வது தவறென்று மறுப்பவர்கள் சரியானது எது என்றும் சொன்னால் உதவியாக இருக்கும். அவரவர் அவரவர்களுக்குத் தெரிந்த/புரிந்த தகவல்களைத் தான் தருகிறார்கள். அதனால் 'தெரியாவிட்டால் அமைதியாக இருக்காமல் தவறான தகவல்களைத் தருவோர் திருந்துவது எப்போது?' போன்ற சொற்கள் தேவையா? அப்படிச் சொல்லும் நீங்கள் சரியானது எது என்றாவது சொல்லியிருக்கலாமே?!

குமரன் (Kumaran) said...

இரத்னேஷ்.

உங்கள் பின்னூட்டத்தில் இருந்து உங்கள் கருத்துகள் என்று நான் புரிந்து கொள்பவை இவை. சரிதானா என்று சொல்லுங்கள்.

1. பரிமேலழகர் உரை திருக்குறளை அதே வடிவத்தில் நமக்கு இன்று தந்தது. அதனால் தேவநேயர் சொல்வது போல் பரிமேலழகர் உரையால் இந்த நன்மை விளைந்திருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
2. பரிமேலழகர் உரையில் சரியாக இருப்பவற்றை மற்ற உரையாசிரியர்கள் ஏற்றுக் கொண்டு சொல்லிவிட்டார்கள்; அல்லாதவற்றைக் கொள்ளத் தேவையில்லை. அதனால் மொத்தமாக பரிமேலழகர் உரையைப் படிப்பதால் எந்த அதிகப்படியான நன்மையும் இல்லை.

இவை சரிதானா என்று சொல்லுங்கள். இங்கேயும் உங்கள் கருத்துகளை ஒட்டியும் வெட்டியும் சொல்ல வேண்டியவை நிறைய இருக்கின்றன. :-)

RATHNESH said...

குமரன்,

1. // பரிமேலழகர் உரை திருக்குறளை அதே வடிவத்தில் நமக்கு இன்று தந்தது. அதனால் தேவநேயர் சொல்வது போல் பரிமேலழகர் உரையால் இந்த நன்மை விளைந்திருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்//.

ஆம்

2. // பரிமேலழகர் உரையில் சரியாக இருப்பவற்றை மற்ற உரையாசிரியர்கள் ஏற்றுக் கொண்டு சொல்லிவிட்டார்கள்; அல்லாதவற்றைக் கொள்ளத் தேவையில்லை. அதனால் மொத்தமாக பரிமேலழகர் உரையைப் படிப்பதால் எந்த அதிகப்படியான நன்மையும் இல்லை//.

நம்முடைய நோக்கம் திருக்குறளின் கருத்தினை மட்டுமே அறிவது எனில் ஆம். குறைந்த பட்சம் எது பொருத்தமான கருத்து எது பிறழ்ந்த கருத்து என்கிற ஆராய்ச்சியில் செலவழியும் நேரம் மிச்சமாகும்.வேறு வகையான ஆராய்ச்சிகள் (திருவள்ளுவரின் சாதி எது மதம் எது என்ன சாப்பிட்டார், எந்தக் கடவுளைக் கும்பிட்டார் என்பது போன்ற விஷயங்களுக்காக) என்றால் படிப்போர் இஷ்டம்.

இனி ஒட்டியும் வெட்டியும் வாருங்கள். புதியன தெரிந்து கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இரத்னேஷ்.

சுஜாதாவின் முன்னுரை வரிகளைத் தந்ததற்கு நன்றிகள். நீங்கள் எடுத்துத் தந்திருக்கும் வரிகளைப் பொறுத்த மட்டிலும் அவர் கருத்து ஏற்றுக் கொள்ளலாம் படியாக இருப்பதாகத் தோன்றுகிறது (சுஜாதாவின் உரையை நான் படித்ததில்லை. ஆனால் அவர் உரையைப் பற்றி நண்பர்கள் சிலர் கொடுத்த சூடான மறுவினையை நினைத்தால் அப்படியே அவர் கருத்தை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது. :-) அதனால் தான் நீங்கள் கொடுத்துள்ள வரிகளை மட்டும் என்ற டிஸ்கி).

குறள்களையும் அதிகார வரிசைகளையும் மாற்றி உரை எழுதுவது சாலமன் பாப்பையா ஐயா மட்டும் செய்யவில்லை. மணக்குடவர் உரையிலும் குறள் வரிசை நான் படிக்கும் மற்ற இரு உரைகளில் (பரிமேலழகர், தேவநேயப் பாவாணர்) இருக்கும் வரிசையில் இல்லை. இது வரை படித்க இன்பத்துப் பால் அதிகாரங்களில் எல்லாம் இதைக் காண்கிறேன். என்ன காரணமோ தெரியவில்லை.

அப்படி மாற்றி எழுதினால் அது தவறா என்று கேட்டால் என்னால் ஆம்/இல்லை என்று உறுதியாகச் சொல்ல இயலாது. அப்படிப்பட்ட முயற்சிகள் இருக்கத் தான் செய்யும். காலத்தில் சில நிலைத்து நிற்கும்; சில நிற்கா.

'தோன்றிற் புகழொடு தோன்றுக' குறட்பாவின் உண்மைப் பொருள் என்ன என்ற குழப்பம் எனக்கு அந்தக் குறளைப் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து இருக்கிறது. பரிமேலழகர் என்ன சொல்லியிருக்கிறார் என்று இங்கே சொல்லியிருக்கிறீர்கள். அது எந்த வகையில் 'கேனத்தனமான' உரை என்பதையும் சொல்லியிருக்கிறீர்கள். உரைகளைப் பார்த்து மற்றவர்கள் இதற்கு என்ன பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

மேலே சொன்னது போல் மணக்குடவர் உரையில் இருக்கும் குறள் வரிசைகள் மாறி இருக்கின்றன. அவர் தான் திருக்குறள் உரை எழுதியவர்களிலேயே பழமையானவர் என்றால் அவர் சொல்லும் வரிசை சரியானதாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது. தரவுகளைப் பார்க்க வேண்டும்.

தேவநேயப் பாவாணரின் வரிகளுக்கு இந்தக் காலத் தமிழில் இன்னொரு நிறத்தில் சொல்லியிருக்கலாம் தான். ஆனால் என் நோக்கம் என் கருத்தாக எதையும் இடுகையில் சொல்லாமல் அவர் சொன்னதை மட்டுமே பலரும் படிக்கத் தரவேண்டும் என்பதால் தான். அதனால் அவர் சொன்னதைச் சொன்ன பிறகு இடுகையில் என் கருத்தினைச் சொல்வதைத் தவிர்த்தேன்.

குமரன் (Kumaran) said...

\\1. // பரிமேலழகர் உரை திருக்குறளை அதே வடிவத்தில் நமக்கு இன்று தந்தது. அதனால் தேவநேயர் சொல்வது போல் பரிமேலழகர் உரையால் இந்த நன்மை விளைந்திருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்//.

ஆம்

\\

இரத்னேஷ். நீங்கள் மணக்குடவரைப் பற்றி தந்திருக்கும் தகவலையும் (காலம்) அவர் உரையில் குறள் வரிசை மாறி இருப்பதையும் பார்த்தால் பரிமேலழகரோ அவருக்கும் முன் மற்ற யாரோ அந்த வரிசையை மாற்றி இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அதனால் திருக்குறளின் உண்மை வடிவம் (அதிகார வரிசை, குறள் வரிசை போன்றவற்றில்) எது என்பதில் எனக்கு இப்போது குழப்பம் வந்துவிட்டது. :-)

தரவுகள் கிடைக்கும் வரை இந்தக் குழப்பம் தீராது.

குமரன் (Kumaran) said...

\\நம்முடைய நோக்கம் திருக்குறளின் கருத்தினை மட்டுமே அறிவது எனில் ஆம். குறைந்த பட்சம் எது பொருத்தமான கருத்து எது பிறழ்ந்த கருத்து என்கிற ஆராய்ச்சியில் செலவழியும் நேரம் மிச்சமாகும்.வேறு வகையான ஆராய்ச்சிகள் (திருவள்ளுவரின் சாதி எது மதம் எது என்ன சாப்பிட்டார், எந்தக் கடவுளைக் கும்பிட்டார் என்பது போன்ற விஷயங்களுக்காக) என்றால் படிப்போர் இஷ்டம்.
//

திருக்குறளின் கருத்தினை மட்டும் தெரிந்து கொள்ள நீங்கள் சொல்வது போல் தற்காலத் தமிழில் எழுதப்பட்ட உரைகளே போதும். தேவநேயப் பாவாணரையும் பரிமேலழகரையும் மணக்குடவரையும் பார்ப்பவர்களுக்குக் கட்டாயம் ஆய்வு நோக்கம் இருக்கும். அப்போது அவர்கள் எல்லா உரைகளையும் படிக்க வேண்டிய தேவை இருக்கும். திருவள்ளுவரின் .... என்று நீங்கள் அடைப்புக் குறிக்குள் போட்டிருக்கும் செய்திகளில் மட்டும் தான் பரிமேலழகரிலிருந்து மற்ற உரையாசிரியர்கள் மாறுபடுகிறார்களா என்ன? வேறு எதுவுமே இல்லையா என்ன? அந்த அந்தக் கால கட்டத்தில் 'சரி' என்று கருதப்படும் கருத்துகளின் அடிப்படையில் ஒவ்வொரு உரையாசிரியரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பதும் நல்லது தானே.

அண்மையில் தொல்காப்பியத்தை இளம்பூரணர் உரையுடன் படிக்கத் தொடங்கினேன். தொல்காப்பியத்தில் முதல் அதிகாரமான எழுத்ததிகாரத்திற்கு (எழுத்துப்பாலுக்கு) இளம்பூரணர் உரை எழுதியிருக்கிறார். படித்துக் கொண்டு வரும் போது 'அகரம் முதல் னகரம் வரை எழுத்துகள் முப்பது' என்றிருக்கும் பகுதிக்கான உரையைப் படித்தேன். அகரத்தின் பெருமைகளைச் சொல்லிவிட்டு னகரத்தின் பெருமையாக ஒன்றைச் சொன்னார் - 'முக்திக்கு உரியவனான ஆண்பாலைச் சுட்டும் விகுதி என்பதால்
னகரத்தைக் குறித்தார்'. முக்திக்கு ஆண் மட்டுமே தகுதியுடையவன்; பெண் தகுதியில்லாதவள் என்ற கருத்து சமணக் கருத்து (அல்லது சமணத்தின் ஒரு பிரிவின் கருத்து) என்று அறிந்திருந்தேன். அதனால் இந்தப் பகுதியைப் படித்தவுடன் 'அடடா. அவர் காலத்தில் நிலவிய கருத்தைச் சொல்லியிருக்கிறாரா? அன்றி அவர் சமயத்தின் கருத்தைச் சொல்லியிருக்கிறாரா?' என்ற கேள்வி எழுந்தது. உடனே கூகிளாண்டவரைக் கேட்டேன். இளம்பூரணர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். இனி பல காலத்திற்கும் இளம்பூரணர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் மறக்காது. இது போன்ற ஆய்வு நோக்கில் இருப்பவர்களுக்கு எல்லா உரைகளையும் படிப்பது மிக்க பயன் அளிக்கும் என்றே நினைக்கிறேன்.