
பதிற்றுப்பத்தில் கடம்பினைக் கூறும் பாடல்களை எடுத்து இதற்கு முந்தைய கடம்பம் இடுகையில் சொல்லியிருந்தேன். அப்போது பாடல்களின் பொருள் முழுவதும் தெரியாததால் பொருள் சொல்லாமல் விடுத்திருந்தேன். அந்த இடுகையை இட்ட பின் நல்வினைப்பயனால் தமிழ் இணைய பல்கலைக்கழக நூலகத்தில் உரையுடன் கூடிய பதிற்றுப்பத்தினைக் கண்டேன். இங்கே கடம்பினைக்கூறும் பாடல்களில் முதல் பாடலைப் பொருளுடன் வழங்குகிறேன்.
இரண்டாம் பத்து:
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
வரை மருள் புணர் வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண் கொன்று
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்
போர் அடு தானைச் சேரலாத!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென் அம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே
வரை மருள் புணர் - மலையைப் போல் தோன்றும் அலைகளையும்
வான் பிசிர் உடைய - வானத்தைத் தொடும் நீர்த்துளிகளையும் உடைய
வளி பாய்ந்து அட்ட - அவ்வப்போது காற்று பாய்ந்து நீரைக் குறைக்க
துளங்கு இருங் கமஞ் சூல் - விளங்குகின்ற மிகுந்த நீரைத் தன் வயிற்றினில் உடைய
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி - மிகுந்த பரப்பினையுடைய பெருங்கடலை அடைந்து
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் - துன்பம் செய்யும் அரக்கர்கள் இரவு பகல் பாதுகாப்பாகக் காக்கும்
சூருடை முழுமுதல் தடிந்த - சூரனுடைய வீரத்தின் உருவான மாமரத்தை அறுத்த
பேர் இசை - பெரும் புகழையுடைய
கடுஞ் சின விறல் வேள் - கடும் கோபமும் வீரமும் கொண்ட முருகப்பெருமான்
களிறு ஊர்ந்தாங்கு - தன் வாகனமாகிய யானையில் ஏறி ஊர்ந்து வந்ததைப் போல
செவ்வாய் எஃகம் - சிவந்த முகத்தை உடைய உன் வேல்
விலங்குநர் அறுப்ப - எதிர்ப்பவரை அறுக்க
அருநிறம் திறந்த - அவர்களின் வலிமை வாய்ந்த மார்பினைப் பிளந்த
புண் உமிழ் குருதியின் - புண்ணிலிருந்து பெருகும் குருதியால்
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து - நீல மணி போல் நிறத்தை உடைய பெரும்பள்ளமாகிய கடல் நீர் தன் நிறம் மாறி
மனாலக் கலவை போல - குங்குமக் கலவை போல் ஆக
அரண் கொன்று - எதிரிகளின் பாதுகாவலை அழித்து
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை - வீரம் மிகுகின்ற சிறப்பில் உயர்ந்த ஊக்கம் உடையவனே!
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின் - எதிரி வீரர்கள் பலர் சுற்றி நின்று பாதுகாத்த பெரிய கடம்ப மரமெனும்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - பாதுகாவல் உடைய காவல் மரத்தை அழியும் படி உன் வீரர்களை ஏவி
வென்று - மரத்தை அழித்து
எறி முழங்கு பணை செய்த - அந்த மரத்தினைக் கொண்டு முழங்குகின்ற முரசினைச் செய்த
வெல் போர் - போரினை வெல்லுகின்ற
நார் அரி நறவின் - பல ஆடைகளால் வடித்து எடுக்கப் பட்ட கள்ளினைப் பெரிதும் உடைய
ஆர மார்பின் - சந்தன மாலைகள் அணிந்த மார்பினை உடைய
போர் அடு தானைச் சேரலாத! - போரினில் வரும் எதிரிகளை வெல்லும் படையினை உடைய சேரலாதனே!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும் - மார்பில் அணிந்திருக்கும் மாலைகள் கூட்டம் ஓடும் தேனுடன் விளங்கும்.
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் - வலிமையில் உயர்ந்த, மலைகளைப் பழிக்கும் பெரிய யானைகளின்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த - பல அணிகலன்கள் அணிந்த முதுகின் மேல் கொண்டு பொலிந்த
நின் - உன்னுடைய
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே - பலரும் புகழும் செல்வங்களை இனிமையுடன் கண்டோமே!
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி - அழகிய மரத்தின் நிழலில் உறங்கும் கவரி மான்
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் - பரந்து விளங்கும் அருவியையும் தேனையும் கனவில் காணும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் - ஆரியராகிய முனிவர்கள் நிறைந்து விளங்கும் பெரிய புகழையுடைய இமயம் முதல்
தென் அம் குமரியொடு - தென்னாட்டின் அழகாகிய குமரி வரை
ஆயிடை - இடையில் உள்ள எல்லா இடங்களிலும்
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே - மன்னர்களில் உயர்வாகக் கூறப்படுபவர்கள் எல்லோரிலும் பெருமை வாய்ந்தவனே!
***
'சூருடை முழுமுதல் தடிந்த' என்று கூறுகிறார் புலவர். மாமரம் என்று நேரடியாகக் கூறவில்லை. முழுமுதல் என்பதற்கு செல்வம், வீரம், உயிர் என்று பல பொருள் கூறலாம். ஆனால் பின்னால் இன்னொரு முறை முழுமுதல் என்று இந்தப் பாடலில் சொல்லும் போது அது 'காவல் மரம்' என்ற பொருளைத் தருகின்றது. அதனால் உரையாசிரியர்கள் இந்த இடத்திலும் 'மரம்' என்று பொருள் கொண்டு மாமரம் என்றனர் போலும். சூரனுடைய செல்வத்தை, வீரத்தை, உயிரை என்று எந்தப் பொருளைக் கூறினாலும் இந்த இடத்தில் பொருந்தும்.
சூரனை வதைக்கும் முன் யானை வாகனம் கொண்ட விறல் வேள் முருகவேள் சூரனை வதைத்தப் பின் மயில் வாகனம் கொண்டான் என்பது புராணம். அதற்கேற்ப இங்கே 'களிறு ஊர்ந்தாங்கு' என்றாரோ புலவர்? (வதைத்தார் என்றது பேச்சு வழக்கிற்காக. சூரனின் ஆணவத்தை மட்டுமே அழித்து அவனை மயிலும் சேவலுமாக ஏற்றுக் கொண்டார் என்பது புராணம்)
சங்ககாலத்தில் ஒவ்வொரு அரசனும் குறுநில மன்னனும் ஒரு மரத்தைப் புனிதமாகக் கொண்டு அதற்கு பலத்த காவல் இட்டுக் காத்து வந்தனர். அந்த மரத்திற்குக் காவல் மரம் என்று பெயர். ஒருவர் மேல் இன்னொருவர் படையெடுத்துப் போகும் போது அந்தக் காவல் மரத்தை அழித்து விட்டால் காவல் மரத்திற்கு உரியவர் தோற்றதாகக் கொண்டனர். அப்படி வெட்டப்பட்டக் காவல் மரத்தைக் கொண்டு முரசினை உருவாக்கி அதனை முழக்குதலும் வழக்கமாக இருந்திருக்கிறது.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பகையரசரில் ஒருவன் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்திருக்கிறான். அந்த கடம்ப மரத்தை அழித்து அதனிலிருந்து முரசு உருவாக்கி முழங்கிய செயலை இங்கே புலவர் பாடுகிறார்.
சங்க கால அரசர்கள் புலவர்களுக்கு மதுவினை மிகுதியாகக் கொடுத்து தாமும் உண்டனர் என்ற செய்தியை 'நார் அரி நறவின்' என்ற தொடர் மூலமாகக் குறிக்கிறார் புலவர். நறவு என்றால் தேன் என்றும் பொருள் உண்டு. இங்கே நார் அரி - நாரினால் அரிந்த - நார் ஆடையினால் வடித்தெடுக்கப்பட்ட என்றதால் கள் போன்ற ஒரு வகை மதுவைக் குறிக்கிறது.
ஆரியர் என்பதற்கு முனிவர் என்று பொருள் தருகிறார்கள் உரையாசிரியர்கள். ஆரியர் என்பதற்கு ஆசிரியர் என்ற பொருளும் உரையாசிரியர்கள் காலத்தில் இருந்தது என்பதை அறிவேன். ஆனால் சங்க காலத்தில் இந்த 'ஆரியர்' என்ற சொல்லுக்கு நாம் இப்போது பொருள் கொள்ளும் 'ஆரிய இனத்தவர்' என்ற பொருளா இல்லை 'ஆசிரியர்' என்ற பொருளா எந்த பொருள் இருந்தது என்பதை அறியேன். இரண்டு பொருளும் இங்கே பொருந்தும். ஆரிய இனத்தவர் நெருக்கமாக நிறைந்திருக்கும் இமயம் என்றும் பொருள் கொள்ளலாம்; இன்றைக்கும் முனிவர்கள் நிறைந்திருக்கும் இடமாதலின் முனிவர் நிறைந்திருக்கும் இமயம் என்றும் பொருள் கொள்ளலாம்.
இமயவரம்பன் என்ற பெயருக்கேற்ப 'இமயம் முதல் குமரி வரை' என்கிறார் புலவர்.