Wednesday, May 02, 2007

கை வை தான் வைகையா?

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு இருக்கும் இன்னொரு பெருமை வைகை நதி. கூடல் மாநகரின் பெயர் இலக்கியங்களில் எத்தனை முறை வந்துள்ளதோ அத்தனை முறை வைகை நதியின் பெயரும் வந்திருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் மட்டுமில்லாமல் தற்காலத் திரைப்படப் பாடல்களிலும் வைகையைப் பாடும் பாடல்கள் எத்தனை எத்தனை?!

வைகை நதிக்கு பெயர் வந்ததற்குத் திருவிளையாடல் புராணம் சொல்லும் காரணம் பலருக்குத் தெரிந்திருக்கும். அன்னை மீனாட்சி சிவபெருமானின் பூத கணங்களில் ஒருவரான குண்டோதரனுக்கு (பானை வயிறனுக்கு) விருந்து படைத்த போது அவரது தாகம் தீர்க்க சிவபெருமானின் திருவருளால் உண்டான ஆறே வைகை ஆறு என்று புராணம் சொல்லும். 'குண்டோதரா; உன் கையை வை; வை கை' என்ற பெருமானின் ஆணைப்படி குண்டோதரன் கை வைத்த இடத்திலிருந்து பெருகிய ஆறு என்பதால் 'வைகை' என்று பெயர் பெற்றது என்று சொல்வார்கள்.

இராம நாமத்தின் பெருமையைச் சொல்லும் போது நாராயண நாமத்தின் முக்கிய எழுத்தான 'ரா'வும் நமசிவாய நாமத்தின் முக்கிய எழுத்தான 'ம'வும் சேர்ந்தது தான் இராம நாமம் என்று சொல்வார்கள். அதனால் சைவ வைணவ மந்திரங்களின் மொத்த உருவம் இந்தத் தாரக மந்திரமான இராம நாமம் என்பது ஆன்றோர் அருள் வாக்கு.

அதே போன்ற பெருமை வைகை ஆற்றிற்கும் உண்டு. திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் 'வை'யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் 'கை'யும் இணைந்து சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக 'வைகை' அமைந்திருக்கிறது.

இந்த வைகை நதி சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்தக் காலத்திலும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்வதைச் சித்திரைத் திருவிழாவின் போது பார்க்கலாம். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பெருவிழாவைக் கண்டு தரிசித்து மறு நாள் பெருந்தேர் பவனியைக் கண்டு களித்து அப்படியே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருவிழாவையும் கண்டு மக்கள் சைவ வைணவ பேதமின்றி இந்த வைகைக்கரையில் பவனி வருகிறார்கள். திருமண் இட்ட அடியவர்கள் பெரும் விசிறி கொண்டு மீனாட்சித் திருக்கல்யாணத்திலும் பெருந்தேர் விழாவிலும் விசிறுவதையும் திருநீறு அணிந்த அடியவர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து எதிர்சேவை காண்பதையும் இந்த வைகைக்கரையிலே கண்டு மகிழலாம்.

அன்பும் அருளும் மக்கள் நடுவில் பெருகும் வகையில் தான் சுருங்கி தன் மக்கள் தன்னுள் இறங்கித் திருவிழா காணும் படி செய்யும் வைகைத் தாயே உனக்கு ஆயிரம் கோடி வணக்கம்.

19 comments:

வெட்டிப்பயல் said...

இது அருமையா இருக்கே!!!

வெற்றி said...

குமரன்,
நல்ல பதிவு.

/* வைகை நதிக்கு பெயர் வந்ததற்குத் திருவிளையாடல் புராணம் சொல்லும் காரணம் பலருக்குத் தெரிந்திருக்கும். */

இல்லையே! :-) எனக்கு இப்போது உங்களின் பதிவைப் படித்த பின்னர்தான் வைகை காரணப்பெயர் என்பதும் எக் காரணத்தால் அப் பெயர் வந்தது என்பதும் தெரிய வந்தது.

/* 'குண்டோதரா; உன் கையை வை; வை கை' என்ற */

ஆகா! தமிழ் சொற்களுடனான ஜாலம் !

நன்றி.

Unknown said...

குமரன்,

திருவிளையாடற் புராணமும், அழகர் வரலாறும் எத்தனை தரம் கேட்டாலும் தெவிட்டாது. சைவமும், வைணவமும் செழித்தோங்கி வளர்ந்த மண் மதுரை.மதுரை எனும் பெயரே கண்ணன் பிறந்த மதுரையின் பெயரில் அமைக்கப்பட்டு தென்மதுரை என சிறப்பிக்கப்படுகிறது. கண்ணன் பிறந்த ஊரில் அவன் சகோதரி தடாதகை நாட்டை ஆண்டு அவளை சிவனுக்கு மணமுடித்து அதன்பின் உருத்திரகுமாரன் எனும் பெயரில் குமரன் (முருகன்) மதுரையை ஆண்டது..பக்கத்து பழனிக்கு கோபித்து கோவணாண்டியாக சென்றது.....


தமிழும், மதுரையும், முருகனும், அழகனும் பிரிக்க முடியாதவர்கள் என்பதை சொல்லும் வரலாறு இது எல்லாம்.

(ஆனால் மதுரையை பற்றி உங்களிடமே சொல்லுவது திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதைதான்:-))

மெளலி (மதுரையம்பதி) said...

இன்னும் ஒரு விஷயம்,

தேர் முடிந்த மறுநாள் மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் வைகை ஆற்றுக்கு வருவார்கள் தீர்த்தவாரிக்காக, அன்று மாலைதான் எதிர்சேவை. எனவே, குண்டோதரனுக்கான வைகையில் தானும் தீர்த்தமாடுகிறார் சொக்கநாதர்.

தீர்த்தவாரியன்றுதான் அழகர் மலையிலிருந்து கிளம்பி வருகிறார், வழியெங்கும் மக்கள் சுக்கு வெல்லமும், தீபமும் படைத்து வரவேற்பார்கள்.....

சிவமுருகன் said...

அண்ணா,

நல்ல பதிவு.

வைகுண்டம், கைலாயம் என்பது ஒரு புதிய கோணம்.

நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு.

குமரன் (Kumaran) said...

இதுவாவது பிடிச்சதே. மகிழ்ச்சி பாலாஜி. :-) (ச்ச்சும்மா).

நன்றி பாலாஜி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் வெற்றி. வைகை என்னும் பெயருக்கான காரணத்தைப் புராணம் சொல்லும் போது இந்த ஜாலத்தைக் காட்டுகிறது. நன்றி.

குமரன் (Kumaran) said...

செல்வன்,

பல கதைகளை சுவையாரமாக இணைத்துக் கூறிவிட்டீர்கள்.

நன்றி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் மௌலி ஐயா. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீர்த்தவாரிக்கு இதுவரை செல்லாததால் அது நினைவில் நிற்காமல் போனது. திருத்தேர் விழா முடிந்ததும் கவனம் எல்லாம் கள்ளழகர் பக்கம் திரும்பிவிடுகிறதே.

ஆமாம். எங்கள் வீட்டிலும் சுக்கு வெல்ல நாட்டுச்சர்க்கரைத் தீபம் ஏற்றி எதிர்சேவை காண்போம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வைகுதல்=தங்குதல், நிலைபெறுத்தல் என்ற ஒரு பொருளும் உண்டு குமரன்.

புராணக் கதையாகக் கேட்கச் சிலர் விரும்புவதில்லை.
பொதுவாக ஆறு ஓடிக் கொண்டே இருப்பது. தங்குவதில்லை. ஆனால் இங்கு வைகை, சமயமும் தமிழும் சேர்ந்து தங்குகிறாள். என்றும் நிலைபெறுகிறாள்.
அவள் வைகுவதால், வைகையும் ஆகிறாள்!

வையை என்று ஒரு பெயர் மருவியும் வருகிறதே.
வேகவதி என்று பெயரும் வைகைக்குக் கேள்விப்பட்டுள்ளேன்!

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். வைகுதல் என்ற பொருளிலும் வைகை என்ற பெயர் அமைந்துள்ளது.

இலக்கியங்களில் பல இடங்களில் வையை என்ற பெயர் தான் இருக்கிறது.

வேகவதி என்ற பெயர் புராணங்களில் தான் பெரும்பாலும் உள்ளது. தமிழிலக்கியங்களில் பார்த்ததாக நினைவில்லை.

கோவி.கண்ணன் said...

//வைகுண்டத்தின் 'வை'யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் 'கை'யும் இணைந்து சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக 'வைகை' அமைந்திருக்கிறது. //

புதிய தகவல் குமரன்...நன்றி !

...ம் நம்ம அரசியலில் 'வை' யை கையும் சேர்ந்து கழட்டிவிட்டு 'கோ' சொல்லிடுச்சு... !
பதிவுக்கு தொடர்பு இல்லை...நகைச்சுவைக்குத் தான் !
:) குமரன் குன்றேரமாட்டார் என்ற நம்பிக்கையில்.
:))))))000

குமரன் (Kumaran) said...

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்.

குமரன் இருக்கும் இடமெல்லாம் பரங்குன்றமே.

அப்புறம் என்ன தனியாகக் குமரன் குன்றேறுவது கோவியாரே?! அப்படியே குன்றேறினாலும் நீர் கோவியார் என்று அறியேனா? :-)

கோவி.கண்ணன் said...

//கோவியாரே?! அப்படியே குன்றேறினாலும் நீர் கோவியார் என்று அறியேனா? :-)//

:))

சரியான சொல்விளையாட்டு !
ரசித்தேன்...!

கண்ணனுக்கே வெண்ணையா ?
:)

இராம்/Raam said...

ததா,

அழகா சொல்லியிருக்கீங்க.... நன்றி :)

//அன்பும் அருளும் மக்கள் நடுவில் பெருகும் வகையில் தான் சுருங்கி தன் மக்கள் தன்னுள் இறங்கித் திருவிழா காணும் படி செய்யும் வைகைத் தாயே உனக்கு ஆயிரம் கோடி வணக்கம்.//

இதே நானும் நானும் சொல்லிக்கிறேன் :)

Geetha Sambasivam said...

veekavathi enra peyar "vaigai" nathikku cholli kettathillai. aanal innoru sirappum undu vaigai nathikku. ella nathiyum kadalil poy than vizhum. vaigai mattum Ramanathapuram DT. Mukkudalil ulla oru eeriyil (lake) poy kalakkum. ithuvum Vaigaiyin thani sirappu.

குமரன் (Kumaran) said...

நன்றி பபு இராமசந்திரமூர்த்தி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் கீதாம்மா. கடலில் கலப்பதில்லை வைகை. ஓர் ஏரியில் தான் சென்று கலக்கிறது. ஆனால் இப்போவெல்லாம் அப்படி சொல்ல முடியாது. எங்கே வைகையில தண்ணி ஓடுது? ஆறுங்கற சொல்லுக்கு இன்னொரு பொருளான வழின்னு சொல்லலாம் போல இருக்கு.

Unknown said...

சிலப்பதிகாரத்தில் வைகை நதியின் பெயர் என்ன?