ஒரு மனிதன் எந்த மதத்தினனாக இருந்தாலும் பக்தியுடன் எங்கும் இருக்கும் இறைவன் இந்தச் சிலையிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கோவிலுக்கு உள்ளே வந்து வணங்கும் போது மரபின் பெயரால் அதனை மறுப்பதும் மற்றவர் வற்புறுத்தலால் அனுமதித்துவிட்டுத் தீட்டு கழிப்பதும் மகா பாதகச் செயல்; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
'உன்னுடன் ஐவரானோம்' என்று குகனிடம் சொல்லி அவனைக் கட்டித் தழுவிய இராமன் இதனைக் கண்டிப்பான்.
'தந்தையின் நண்பன் நீயும் என் தந்தை' என்று சொல்லி பறவையான ஜடாயுவுக்கு தந்தைக்கு உரிய முறையில் இறுதிச்சடங்குகள் செய்த இராமன் இதனைக் கண்டிப்பான்.
'தீண்டத் தகாதவள்' என்று குமுகத்தால் வகைப்படுத்தப்பட்டவளாக இருந்தாலும் 'பக்தியுடன் கடித்துக் கொடுத்த' எச்சில் பழங்களை சபரியிடம் இருந்து பெற்று உண்டு மகிழ்ந்த இராமன் இதனைக் கண்டிப்பான்.
ஆயர் குலத்தவருடன் அனைத்து குறும்புகளும் செய்த கண்ணன் இதனைக் கண்டிப்பான்.
சமமான பார்வையுடைய அறிஞன் எல்லோரிடமும் என்னையே காண்கிறான் என்று கீதையில் சொன்ன கண்ணன் இதனைக் கண்டிப்பான்.
திருப்பாணாழ்வாரை கருவறையுள் தன்னருகிலேயே வைத்திருக்கும் அரங்கன் இதனைக் கண்டிப்பான்.
பக்தியுடன் வந்த துலுக்க நாச்சியாருக்காக தன் உணவையும் உடையையும் மாற்றிய அரங்கன் இதனைக் கண்டிப்பான்.
கனகதாசருக்காக தானே திரும்பிய கண்ணன் இதனைக் கண்டிப்பான்.
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று கொண்ட கந்தன் இதனைக் கண்டிப்பான்.
குல முதல்வன் என்று வைணவர்களால் போற்றிப் புகழப்படும் வேளாளர் திலகமான மாறன் சடகோபன் நம்மாழ்வார் இதனைக் கண்டிப்பார்.
பல்வேறு சாதிகளில் பிறந்து கண்ணனின் மேல் உள்ள காதலினால் அனைவரும் போற்றும் ஆழ்வார்களான பன்னிருவர் இதனைக் கண்டிப்பர்.
காதலினால் கண்ணையே எடுத்து ஒத்திய, செருப்புக்காலுடன் கண்ணை அடையாளமிட்ட, வாயினால் திருமுழுக்கு செய்த, தான் அணிந்த மலர்களை இறைவனுக்குச் சூட்டிய கண்ணப்ப நாயனார் முதலிய அனைத்துக் குல அறுபத்தி மூவர் இதனைக் கண்டிப்பர்.
திருக்குலத்தார் என்று அனைவரையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்ற நம்மை உடையவர் இராமனுஜர் இதனைக் கண்டிப்பார்.
இப்படி இதனைக் கண்டிக்கும் மக்களைப் பட்டியல் இட்டுக் கொண்டே செல்லலாம். ஆனால் இவர்கள் அனைவரும் இறைவனைச் சிலையில் காண்பவர்கள்; அதனைச் சிலை என்று சொல்பவர்கள் இல்லை. கோவிலுக்குள் இருப்பது சிலை என்பவர்கள் கொள்ளும் ஆவேசத்தை விட அதிக ஆவேசம் எங்கும் உள்ளவன் இங்கேயும் இருக்கிறான் என்ற நம்பிக்கை உடையவருக்கு வர வேண்டும். வரட்டும்.
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்; பக்தர்களே துயிலெழுப்ப வாரீரோ!!!
17 comments:
Sir,
Excellent Post!
இதே இராமன் தானே சீதையை தீக்குளிக்கச் சொன்னார், இதே இராமர் தானே
சீதையை காட்டுக்கு அனுப்பினார்.
அதே காரணத்திற்காகத் தானே இங்கும் பிராயச்சித்தம் செய்கிறார்கள்.
காரணமில்லாமல் காரியமில்லை காரியமில்லாமல் காரணமில்லை. எல்லாவற்றையும் எல்லாருக்கும் புரிய வைப்பது என்பது முடியாத விடயமாகும். புரிந்து கொள்ள முடியாத விசயங்களுமாகும்.
ஆண்டவன் கொடுத்த அறிவை துஷ்பிர்யோகம் செய்வது,
நிற்கும் கிளையையே வெட்டும் மடமை போன்றது. வெட்டுபவருக்குதானே அழிவு.
எல்லாம் நன்மைகே.
// மரபின் பெயரால் அதனை மறுப்பதும் மற்றவர் வற்புறுத்தலால் அனுமதித்துவிட்டுத் தீட்டு கழிப்பதும் மகா பாதகச் செயல் //
அபத்தத்திலும் அபத்தமான செயல்.
அவன் உறைவிடத்துக்குள் நுழைய உடல் தூய்மையும், உள்ளத் தூய்மையும் தவிர வேறென்ன தகுதி தேவை ?
நல்ல பதிவு குமரன்...
குருவாயூரில் நடந்த இந்த தீட்டுக்கழிப்பு...கொடூரத்தின் உச்சகட்டம் என்றே நான் சொல்வேன். இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். அப்படி இருக்கையில் வேற்று மதத்தவராக இருந்தாலும் வந்தவரை வரவேற்பதே மனிதப்பண்பு. அதைக்கூட மறந்த குருவாயூர் தேவஸ்தான நிர்வாகிகள் மூடர்கள்.
நன்றி நண்பர்களே.
இராமன் சீதையை நடத்திய விதத்தைச் சொன்ன அனானியாரே. நீங்கள் அதனைச் சொல்லி கோவிலில் செய்த பிராயச்சித்தம் சரி தான் என்கிறீர்கள். இரண்டிற்கும் என்ன தொடர்பு என்று எனது மந்தபுத்திக்கு எட்டவில்லை. மன்னிக்கவும்.
//இராமன் சீதையை நடத்திய விதத்தைச் சொன்ன அனானியாரே. நீங்கள் அதனைச் சொல்லி கோவிலில் செய்த பிராயச்சித்தம் சரி தான் என்கிறீர்கள். //
பல நூற்றாண்டுகளாக பலகோடி மக்களுக்கு அமைதியை, ஆனந்தத்தை. நிம்மதியயை அளித்துவரும் புனித ஸ்தலமாகும். அவரவர்கள் தங்கள் கட்டுக்கோப்புகுள் இருப்பவற்றை கடைப்பிடித்தால் தான் இதேபுனிதத்துடன்
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அமைதியை, ஆனந்தத்தை. நிம்மதியயை
கொடுக்க முடியும்.
செய்வது, செய்விப்பது எல்லாம் அவர்கள்தானே. இடையில் நாட்டாண்மை காட்டுவதற்கு நாம் எதற்கு.
அகங்காரத்தை போக்க வந்த நாம் மேலும் அழுக்குகளை அள்ளிக் கொள்ள வேண்டுமா?
சரணம் ஐயப்பா!
//என் சாயி அனுபவங்களை இந்தத் தமிழ்மணச் சூழலில் பகிர்ந்து கொள்ளும் மன வலிமை இன்னும் எனக்கு வரவில்லை. :-)//
பங்காளியின் பதிவில் உங்கள் வேதனைப் பினூட்டம் பார்த்தேன். மனதுக்குள் பாபா அவர்கள் இருக்கும் போது வலிமையைப் பற்றி வருந்துவது அவசியமில்லை. சாயிபாபாவின் அருளை எங்கும் நிறையச் செய்யுங்கள்.
பங்காளியும் அற்புதமாக எழுதி இருக்கிறார்.
நல்லதே நடக்கும்.
இவங்க என்னைக்கு தான் திருந்த போறாங்களோ?
இந்து மதத்தைப்பற்றிய அறிவோ அல்லது திருமாலைப்பற்றிய புரிதலோ இல்லாதவர்கள், இவர்களால் நன்மையைவிட தீமையே அதிகம் உண்டாகும்.
நாராயணா நாராயணா.
குமரன், 8 போட வாங்க... உங்களை அழைத்திருக்கிறேன்.
http://tcsprasan.blogspot.com/2007/06/8.html
குமரன் அவர்களுக்கு,
உங்கள் வலைப்பதிவின் நிறுத்தத்திற்கு
என்ன காரணம்?
அறியலாமா?
எனது பின்னூட்டம் தான் காரணமாயின்,
இனிமேல் உங்கள் பதிவுகளுக்கு
பின்னூட்டமிடுவதை நிறுத்தி விடுகிறேன்.
நன்றி.
ஐயா. நீங்கள் யாரென்று தெரியவில்லை. என்ன பின்னூட்டம் இட்டீர்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் நான் வலைப்பதிவதை நிறுத்தவில்லை. ஒரு மாத காலமாக இந்தியப் பயணத்தில் இருந்ததால் இடுகைகள் இடவில்லை. இன்று கூட 'கண்ணன் பாட்டு' குழுப்பதிவில் ஒரு இடுகை இட்டுள்ளேன். அதனால் தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள். உங்கள் பெயரையும் சொல்லி இட்டால் இன்னும் மகிழ்வேன். நன்றி.
குமரா!
இச்செய்தியை படித்துச் சிரித்தேன்.
இவ்வளவு பட்டியல் போட்டிருக்கிறீர்கள்.
அவர்கள் அறியாதவையா?
நான் எனும் வீம்புடன் கூடிய முட்டாள் தனம்.
அறிந்திருந்தாலும் சில நேரங்களில் அதுவும் மறக்கக்கூடாத நேரங்களில் அவை மறந்து போய்விடுகின்றன யோகன் ஐயா. அப்படி நினைவிலிருந்தும் சில நேரம் வீம்புடன் செய்வது உண்டு தான்.
அழைப்பிற்கு நன்றி ப்ரசன்னா. விரைவில் இடுகிறேன்.
Post a Comment