Sunday, May 06, 2007

இருவகை மேலாளர்கள் - (ஒரு நிமிட மேலாளர் பகுதி 2)

இந்தத் தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

***

இந்த உலகில் இருக்கும் மேலாளர்கள் பெரும்பாலானவர்கள் இருவகையில் அடங்கிவிடுவார்கள். இரண்டு வகையான மேலாளர்களையும் நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்த்திருக்கலாம். நீங்கள் ஒரு மேலாளர் என்றால் நீங்கள் எந்த வகையில் வருபவர் என்பதை உங்களால் எளிதாகச் சொல்லிவிடமுடியும். ஒரு வகை மேலாளர் மற்றொரு வகை மேலாளர் செய்வது போல் செய்ய முயன்றிருக்கலாம்; ஆனால் இயற்கையாக வரும் வகையிலேயே செல்வது எளிதாக இருப்பதைக் காணலாம். இரண்டு வகைகளிலும் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. அதனால் நமக்கு எது எளிதாக வருகிறது என்று பார்த்து அதன் தீமைகளைக் குறைக்க முயலும் மேலாளர்களும் உண்டு; நானும் அப்படி முயன்றிருக்கிறேன்.

முதல் வகை மேலாளர்களை உலகம் முழுவதும் பரவலாகப் பார்க்கலாம். மேலை நாடுகளில் இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாசூக்காக நடந்து கொள்வார்கள்; நம் நாட்டில் இவர்கள் நேரடியாகவே நடந்து கொள்வார்கள். அதனால் முதலில் நம்மவர்கள் எல்லோரும் இந்த வகைதான் என்று தோன்றும். கவனித்துப் பார்த்தால் உலகில் பெரும்பாலும் இந்த வகையினர் தான் என்று புரியும். மேலே சொன்னது போல் மேலை நாட்டவர்கள் மென்மையாக மறைமுக வழிகளில் அதனைச் செயல்படுத்துவார்கள்.

இந்த வகை மேலாளர்களைப் பார்த்தால் அவர்கள் செய்யும் பணி எல்லாம் திறம்பட நிறைவேறும்; நேரத்தோடு (on time), செலவு ஒதுக்கிய பணத்தை மீறாமல் (on budget), சொன்னதைச் சொன்னபடி (on scope) எல்லாப் பணியையும் இவர்கள் நிறைவேற்றுவார்கள். இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு மிக மிக நல்ல பெயர் இருக்கும். சொன்னதை சொன்னபடி செய்து முடிக்க வல்லவர் என்ற பெயர் இருக்கும். இவர்களால் இவர்கள் பணி புரியும் நிறுவனங்கள் பயன்பெறும்.

அதே நேரத்தில் இவர்களிடம் பணி புரிந்தவர்களைப் போய்ப் பாருங்கள். அவர்களுக்கு இவர்களைப் பிடிக்காது; இவர்களிடம் வேலை செய்வதைப் பெரும் தண்டனையாகக் கருதுவார்கள். சிலர் வேறு பணியைத் தேடிச் சென்றிருப்பார்கள். எளிதாக வேலை கிடைக்காத துறையென்றால் பல்லைக் கடித்துக் கொண்டு தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள். நிறைய பேர் நோய்வாய்ப்படுவதற்குக் கூட அவர்களின் மேலாளர்கள் காரணமாக இருந்ததுண்டு.

இந்த முதல் வகை மேலாளர்கள் சர்வாதிகார மேலாண்மை வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களால் நிறுவனம் பயன்பெறலாம்; ஆனால் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பயன் அடைவதில்லை.

இரண்டாம் வகை மேலாளர்களையும் நீங்கள் நிறைய இடங்களில் பார்க்கலாம். ஆனால் என்ன அவர்கள் ரொம்ப நாள் ஒரு நிறுவனத்தில் தங்குவதில்லை. அதனால் அந்த வகையினரைப் பார்ப்பது அரிதாக இருப்பது போல் தோன்றும். ஆனால் சரி பாதி இந்த வகையினர் என்பது என் அனுபவம்.

இவர்களிடம் பணிபுரிந்தவர்களும் புரிபவர்களும் இவர்களை மிகவும் மெச்சுவார்கள். மீண்டும் இவர்களிடம் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னர் இவர்களிடம் பணி புரிந்தவர்களும் இவர்களைப் பற்றிப் பேசும் போது 'மிக நல்லவர்; மிகத் திறமையானவர்' என்றெல்லாம் பேசுவார்கள்.

ஆனால் இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு நல்ல பெயர் இருக்காது. இவர்கள் செய்யும் பணிகள் ஏதோ ஒரு வகையில் குறையுடையதாக இருக்கும் - ஒன்று நேரத்தோடு பணிகள் முடியாது; அல்லது ஒதுக்கிய பணத்தை விட அதிக செலவு பிடிக்கும்; அல்லது சொன்னதை சொன்னபடி செய்திருக்கமாட்டார்கள் - சில நேரங்களில் இவற்றில் ஒன்றிற்கும் மேற்பட்ட குறைகளும் இருக்கலாம். இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு நல்ல பெயர் இல்லாததால் இவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.

இந்த இரண்டாம் வகை மேலாளர்கள் மக்களாட்சி மேலாண்மை வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களால் மக்கள் பயன்பெறுவார்கள்; ஆனால் நிறுவனம் பயன்பெறுவதில்லை.

இப்படி இருக்கும் மேலாளர்கள் எல்லாம் 'பாதி மேலாண்மை' செய்பவர்கள் தான். பணியையும் மேலாண்மை செய்ய வேண்டும்; பணிபுரிபவர்களையும் மேலாண்மை செய்ய வேண்டும். மேலாண்மை என்றால் தகுந்த முறைப்படி எல்லாவற்றையும் செய்வது. அதனால் மக்களைக் கவனிக்காமல் பணியை மட்டுமே கவனிப்பதும் தவறு. பணியைக் கவனிக்காமல் மக்களை மட்டுமே கவனிப்பதும் தவறு.

நான் எந்த வகையாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் என்றும் சொல்லுங்கள். நான் இதில் ஒரு வகை என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் இருக்கும் தீமைகளைக் குறைக்க முயல்வதுண்டு. பல நேரம் வெற்றி பெற்றதுண்டு. சில நேரம் வெற்றி பெற்றதில்லை.

நீங்களும் இதில் எந்த வகை என்பதைச் சொல்லுங்கள்.

14 comments:

Unknown said...

குமரன்

participative management என்ற மூன்றாவது வகை நிர்வாகமும் உண்டு குமரன்.நீங்கள் அந்த வகை என்று யூகிக்கிறேன்,(நானும் தான்)

பொதுவாக ஹைஸ்கில் லேபரர்கள் கிடைத்தால் டெமாக்ரடிக் வகை நிர்வாகமும்,லோஸ்கில் லேபர் கிடைத்தால் அடாக்ரடிக் நிர்வாகமும் பயன் தரும் என்பார்கள்

குமரன் (Kumaran) said...

செல்வன். நீங்கள் சொல்லும் இணைந்தியங்கும் மேலாண்மையும் ஏறக்குறைய இரண்டாவது வகையைப் போன்றது தான் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்லும் ஹை ஸ்கில், லோ ஸ்கில் என்று சொல்வதை விட எக்ஸ்பிரியன்ஸ்ட் (அனுபவம் மிக்கவர்), ந்யூ (புதியவர்) என்ற பாகுபாடு சரி என்று தோன்றுகிறது. என் அனுபவத்திலும் அதனைக் கண்டிருக்கிறேன். ஆனால் என்னவோ இரண்டுவகை மேலாண்மையும் அரைகுறை என்று தான் என் எண்ணம்.

நன்மனம் said...

kumaran,

Neatly presented good informative post.

thanks.

மெளலி (மதுரையம்பதி) said...

இரண்டுவகையிலும் செயல்பட மேலாளருக்கு தெரிந்திருக்க வேண்டும் குமரன்.

எனது அனுபவத்தில், நான் பல PMPக்களைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல அவர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்களே, இல்லாவிடின், அவர்கள் இங்குமங்கும் அலைந்திட நேர்கிறது.

Participative management என்பது நமது சூழலில் (மென்பொருள் உற்பத்தி, ஏற்றுமதி) இன்னும் அதிகமாக பரவ வேண்டும். அதற்க்கான மெச்சூரிட்டி இன்னும் இந்தியன் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வரவில்லை. ஏனெனில் இங்கு விளையாட்டுத்தனமான இளைஞ்ர்கள் அதிகம். இவர்களை பார்டிசிபெட்டிவாகக் கொண்டு நாம் கஸ்டமர்களை டிலைட் செய்ய முடிவதில்லை. எனவே ஆடி கறக்க வேண்டிய நிலையில் ஆடியும், பாடிக் கறக்கவேண்டிய நிலையில் பாடியும்தான் வேலை வாங்க வேண்டியிருக்கிறது. டிசெஷன் மேக்கிங் என்பதை மேலாளர் தனது முடிவாக வைத்துக் கொள்ளுவதே நல்லது.

குமரன் (Kumaran) said...

நன்றி நன்மனம்.

குமரன் (Kumaran) said...

மௌலி ஐயா. நீங்கள் சொல்வது போல் ஒரு நல்ல மேலாளருக்கு இரண்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்தும்.

நீங்கள் சொல்வது போல் நமது மென்பொருள் நிறுவனங்களில் இணைந்தியங்கும் மேலாண்மை அலுவலக பண்பாடாக இல்லை என்பது உண்மை. விளையாட்டுத்தனமான இளைஞர்கள் அதிகம் என்பது உண்மை; ஆனால் அவர்கள் தொடக்கநிலையில் இருப்பவர்கள் மட்டுமே. கொஞ்சம் அனுபவம் பெற்றபின் இணைந்தியங்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனால் அது நடப்பதில்லை. கீழ்நிலை மேலாளர்களில் இருந்து தலைமை நிர்வாகி வரை எல்லோருமே முதல் வகை மேலாண்மை செய்வதையே காண்கிறோம். அவர்களுக்கு இரண்டாவது வகை மறந்து போய்விடுகிறதா அல்லது தங்கள் பதவியின் வலிமையைக் காண்பிப்பதற்கு முதல் வகை தான் பயன்படுகிறதா தெரியவில்லை. இணைந்தியங்கும் மேலாண்மை நம்மவர்களிடம் மிகக் குறைவே.

இணைந்தியங்கும் மேலாண்மையிலும் முடிவு எடுப்பது என்பது மேலாளருக்கே உரியது. அது மட்டுமே மேலாளரை மற்றவரிடம் இருந்து பிரித்துக் காண்பிப்பது - இறைவனும் முக்தர்களுக்கும் உரிய வேற்றுமையைப் போல - இறைவனுக்கு மட்டுமே படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்கள் உரியன; முக்தர்களுக்கு இந்த தொழில்கள் மட்டுமே இல்லை; மற்ற எல்லா வகையிலும் அவர்கள் இறைவனைப் போன்றவர்களே என்று நம் சமய நூல்களில் சொல்லப்படுவது போல். :-)

Unknown said...

Hi Kumaran,
You can call me as "Va See Kar" (Vaseegaran without "an" viguthi).

I hope, those who are directly becoming Managers after completing their MBA degree will fall in First Category.

If you start your career as Programmer and then if move up the ladder as Manager, You will fall into Second Category as you will know the Pain of people who works under you.

Regards, Vasikar N

குமரன் (Kumaran) said...

வசீகர். உங்கள் பெயரை எப்படி சொல்லவேண்டும் என்று சொன்னதற்கு நன்றி.

நான் இரண்டையும் பார்த்திருக்கிறேன். நேரடியாக படிப்பின் மூலம் மேலாளர்கள் ஆனவர்களில் பலர் இரண்டாம் வகையில் இருந்திருக்கிறார்கள்; படிப்படியாக உயர்ந்து மேலாளர்கள் ஆனவர்களில் பலர் முதல் வகையாக இருந்திருக்கிறார்கள். அதனால் நீங்கள் சொல்வது போலும் வகைப்படுத்த முடியாது.

ஒன்றை விளக்க வேண்டும். இருவகையிலும் மேலாளர்கள் இருக்கிறார்கள். இருவகையிலும் பயன்கள் உண்டு. ஒன்றைவிட மற்றொன்று நல்லது என்ற வேறுபாடு காட்ட விழையவில்லை; இரண்டிலும் இருக்கும் நிறை குறைகளை மட்டுமே சொல்ல விழைந்தேன்.

ப்ரசன்னா said...

குமரன், ஒரு மேலாளருக்கு இரண்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்தும். நீங்கள் சொல்வது போல இருவகையிலும் பயன்கள் உண்டு.

நல்ல சுவையான ஆக்கம் குமரன். நன்றி

குமரன் (Kumaran) said...

நன்றி ப்ரசன்னா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இணைந்தியங்கும் மேலாண்மையிலும் முடிவு எடுப்பது என்பது மேலாளருக்கே உரியது. அது மட்டுமே மேலாளரை மற்றவரிடம் இருந்து பிரித்துக் காண்பிப்பது - இறைவனும் முக்தர்களுக்கும் உரிய வேற்றுமையைப் போல//

அட, இங்கும் இப்படி ஒரு ஒப்புநோக்கா? :-)

//பணியையும் மேலாண்மை செய்ய வேண்டும்; பணிபுரிபவர்களையும் மேலாண்மை செய்ய வேண்டும். //

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தொடு
எய்த உணர்ந்து செயல்!

Machi said...

குமரன் நீங்கள் 2வது வகை என்பது என் ஊகம். எனக்கு 2வது வகை மேலாளரை தான் பிடிக்கும்.:-))

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். சொல்லிக் கொண்டே வரும் போது டக்கென்று அந்த ஒப்பார் மிக்கார் இல்லாதவனைப் பற்றிய ஒப்புநோக்கு நினைவில் வந்து நின்றது. அதனால் அதனையும் எழுதிவிட்டேன். :-)

நல்ல குறள். இதுவரை நான் அறியாத குறள். நன்றி.

குமரன் (Kumaran) said...

நல்ல ஊகம் குறும்பன். ஆனால் அந்த வகையினரால் என்ன தீமை என்பதையும் சொல்லியிருக்கிறேன் பாருங்கள். அந்தத் தீமைகளைக் குறைக்க முயல்கிறேன்.

நீங்க மேலாளர் ஆகலையா இன்னும்? அதான் இரண்டாவது வகை தான் பிடிக்கும் என்று சொல்கிறீர்கள்.