Wednesday, January 25, 2006

130: *நட்சத்திரம்* - ஜன கன மன

இன்றைக்குக் குடியரசுத் தினம். குடியரசு முறை நம் நாட்டிற்குப் புதியதன்று. தமிழகத்தில் மன்னர் ஆட்சியே இருந்திருந்தாலும் குடவோலை முறையில் ஊர்ச்சபையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்ததாகவும், வட நாட்டில் மௌரியர் காலத்திற்கு முன் 'கண ராஜ்யம்' என்னும் சிறு சிறு குழு குடியரசுகள் இருந்ததாகவும் படித்திருக்கிறேன்.

நம் தேசிய கீதம் எந்தத் தருணத்தில் இயற்றப்பட்டது என்பது ஒரு விவாதமாகவே இருக்கிறது. கவிகுரு இரவீந்திர நாத் தாகூர் அதனை ஆங்கில (வேல்ஸ்?) இளவரசர் பாரதத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்கும் முகமாக எழுதியது என்ற ஒரு கருத்து வலுவுடன் வலம் வருகிறது . இருக்கலாம். அதனை மறுத்துக் கூறவோ ஆதரித்துக் கூறவோ என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. இது அரசியல்வாதிகளின் வெறும் கூச்சலாக இருக்கலாம். இல்லை அதில் உண்மையும் இருக்கலாம்.

ஆனால் நம் தேசிய கீதத்தின் பொருளைப் பார்க்கும் போது அது நம் நாட்டின் பெருமையை மிக நன்றாகப் பாடுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் இந்தப் பாடலைப் புறக்கணித்து விட்டு இன்னொரு பாடலை நாம் நம் நாட்டுப் பண்ணாகக் கொண்டுவரத் தேவையில்லை என்று தான் சொல்வேன். நீங்களே படித்துப் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் - பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் - சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் - குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் - மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் - திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் - உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் - பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்த்ய ஹிமாசல

யமுனா கங்கா

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் - விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் - இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் - கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா - மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாஹே - உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஷ மாஹே - உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா - உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே - இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! - வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!

***
நண்பர் சந்தோஷ் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு பதிவு இட்டிருந்தார். அதில் மிக நல்ல முறையில் நம் நாட்டுப் பண் பல இசைவாணர்களால் இசைத்துப் பாடப்பட்டு எடுக்கப் பட்டப் படத்தை இட்டிருந்தார். அதனை இந்தப் பதிவிலும் இடவேண்டும் என்று எண்ணி அவரிடம் கேட்டேன். அவர் சொன்ன முறையில் கூகிள் கொடுத்த இந்தப் படத்தை இங்கே தருகிறேன். பார்த்துக் கேட்டு மகிழுங்கள். முடிந்தால் எழுந்து நின்று நாட்டுப் பண்ணுக்கு மரியாதை செய்யுங்கள்.




50 comments:

ENNAR said...

குமரன்
இதைத்தான் நீண்ட நாட்களாக தேடினேன்
வழங்கிய உங்களுக்கு வாழ்த்து நன்றி
பாலகள் சரியாக வரவில்லை. பாருங்கள்

Santhosh said...

குமரன் ரொம்ப நல்ல முறையில் விளக்கம் குடுத்து அசத்தி இருக்கிங்க. வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

Enjoyed reading.. Good piece. I agree with you that it does not matter when it was written as long as it holds relevance today.

Unknown said...

Nandri Kumaran. Inniya Kudiarasu Thinna Vaazthukal.

Anbudan,
Natarajan.

குமரன் (Kumaran) said...

நன்றி என்னார் ஐயா. நீங்கள் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்ததை இன்று எழுதிப் பதிக்க முடிந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. எது சரியாக வரவில்லை என்று சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. கொஞ்சம் சொல்கிறீர்களா?

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சந்தோஷ். உங்களுக்கும் என் நன்றி. எதற்கு என்று தான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே :-)

குமரன் (Kumaran) said...

நன்றி சிறில் அலெக்ஸ். உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நடராஜன்.

Karthik Jayanth said...

kumaran ,

congrats for being a star of the week.(yeah its kind of late. was held back in work).
Expecting more and more nice posts from you.

fellow maduraite
karthik

குமரன் (Kumaran) said...

நன்றி கார்த்திக் ஜெயந்த். தருமி ஐயா மதுரைக்காரங்க வலைப்பதிவுல இருக்காங்களான்னு தேடறதாக் கேள்வி. அவருக்கும் அட்டென்டன்ஸ் குடுத்திட்டீங்களா? :-)

Karthik Jayanth said...

kumaran ,

I havent read dharumi sir's blog.I am pretty new to thamizmanam.If u can give his blog link, i would be happy to know him and read his blogs.

karthikjayanth

குமரன் (Kumaran) said...

கார்த்திக் ஜெயந்த். http://www.thamizmanam.com/star_post.php
இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லுங்கள். இடது புறம் இதுவரை தமிழ்மண நட்சத்திரங்களாய் இருந்தவர்கள் பெயர்ப் பட்டியல் இருக்கும். அதில் தருமி ஐயா பெயரும் இருக்கும். அங்கிருந்து நீங்கள் அவருடைய வலைப்பக்கத்திற்குச் செல்லலாம்.

Karthik Jayanth said...

thanks kumaran i did visit his blog, oh boy its a sea .i would give my attendence soon.

karthikjayanth

ஜோ/Joe said...

விளக்கத்திற்கும் ,இணைத்த பாடலுக்கும் நன்றி!

ஜோ/Joe said...
This comment has been removed by a blog administrator.
ஜோ/Joe said...

தர்மச்சக்கரம் -வீடியோ

தி. ரா. ச.(T.R.C.) said...

தேசிய கீதத்திற்கு புதுமையான விளக்கம். பள்ளிக்கூட புத்தகத்தில் இருப்பதைவிட நன்றாக இருக்கிறது.நின்று வணக்கம் செய்துவிட்டேன். நன்றி குமரன் குடியரசு வழ்த்துக்கள்

பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே. மாரத வீரர் மலிந்தநன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.

மணியன் said...

குடியரசு தின வாழ்த்துக்கள் !

பரஞ்சோதி said...

குமரன்,

உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும்

குடியரசு தின வாழ்த்துகள்.

G.Ragavan said...

குமரன், ரிஷிமூலமும் நதிமூலமும் பார்க்கக்கூடாது என்பார்கள். அதே போல தேசியப் பண்ணிற்கும் மூலம் பார்க்கக் கூடது போல.

இந்தப் பிரச்சனை குறித்து ஒரு வங்க நண்பரிடம் கேட்ட பொழுது, அவர் இதை உண்மை என்று ஒத்துக் கொண்டார்.

இருக்கட்டும். இப்பொழுது நாட்டுப்பண் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. இந்த வரிகளின் பொருளைப் பார்த்தால் சிறப்பாகவும் இருக்கிறது. இருக்கட்டுமே. விவாதம் தேவையே இல்லை.

சிங். செயகுமார். said...

ஆர்,எஸ் .எஸ் கூட்டதில் இந்த தகவல் கேட்டு இருக்கேன். நீண்ட விளக்கத்திற்கு சந்தோஷம் நண்பரே!

குமரன் (Kumaran) said...

நன்றி ஜோ. தர்மசக்கரம் படத்திற்குச் சுட்டி கொடுத்ததற்கும் மிக்க நன்றி. அருமையாக இருந்தது அந்தப் படமும்.

குமரன் (Kumaran) said...

நன்றி தி.ரா.ச. பள்ளிக் கூட புத்தகத்தில் நாங்களெல்லாம் நாட்டுப் பண்ணுக்குப் பொருள் படிக்கவில்லை. இந்தக் கால இளைஞர்கள் யாருக்குமே (சரி யாரும் சண்டைக்கு வராதீங்க...பெரும்பாலோனோருக்கு) தேசிய கீதத்தின் பொருள் தெரியாது.

குடியரசு தின வாழ்த்துக்களுக்கும் நன்றி தி.ரா.ச. தங்களுக்கும் அதே.

பாடலுக்குப் பொருளும் சொல்லுங்கள். சரி. சரி. இது பாரதியின் பாடல் என்பதால் பொருள் தேவையில்லை என்று எண்ணுகிறேன். :-)

குமரன் (Kumaran) said...

குடியரசு தின வாழ்த்துக்களுக்கும் நன்றி மணியன். தங்களுக்கும் அதே.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவன். ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக் கூடாது தான். உங்கள் வங்க நண்பரும் சரியானத் தகவல் இல்லாமல் அரசியல்வாதிகள் சொல்வதை வைத்துச் சொல்கிறாரோ என்னவோ. இந்தப் பாடல் தாகூர் எழுதி இளவரசர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பாடப்பட்டது என்பது உண்மைதான் என்றாலும் அது அவருக்குக் கொடுத்த வரவேற்பாகப் பாடப்படவில்லை என்று செய்தித்தாள் செய்தியுடன் ஒரு கட்டுரையைப் படித்திருக்கிறேன். அந்தச் செய்திக் குறிப்பின் படி இந்தப் பாடல் பாரத மாதாவின் பெருமையைப் பாடிய பாடல் என்பதும் இது இளவரசர் முன்னால் பாடப்பட்டது தற்செயல் என்றும் உள்ளது. யாருக்குத் தெரியும்? தாகூரைத் தான் கேட்கவேண்டும். :-)

நிச்சயமாக இந்தப் பாடலில் பொருளை இளவரசரைப் புகழ்வதாக மாற்றி எழுதலாம். அதே மாதிரி இது காந்தியையோ, நேருவையோ, அப்துல் கலாமையோ புகழ்வதாகக் கூடப் பொருள் எழுதலாம். :-)

குமரன் (Kumaran) said...

சிங். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் என்ன தகவல் கேட்டிருக்கிறீர்கள்? இது பாரத அன்னையின் மேல் பாடப்பட்டப் பாடல் இல்லையென்றா? அப்படி என்றால் மேலே இராகவனுக்குக் கொடுத்த பதிலைப் பாருங்கள்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி பரஞ்சோதி. உங்களுக்கும் குடியரசுத் திருநாள் வாழ்த்துக்கள்.

Amar said...

//தாகூரைத் தான் கேட்கவேண்டும்.:-) //

கெட்டுவிட்டேன் மக்களே!

அவரை ஒரு நன்பர் Prince of Walesஐ பாராட்டி/புகழ்ந்து ஒரு கவிதை/பாடல் எழுத சொல்லி கெட்டுகொண்டாராம்.

டாகூர் விவரமாக இந்திய அன்னை,பாரத பாகயவிதாதா(Collective Consciouness of the Indian people) மீது பாடலை இயற்றிவிட்டார்!

இதை அவரே ஒரு கடிததில் சொல்லியுள்ளார்.

இதொ :

In a letter to Pulin Behari Sen, Tagore later wrote, "A certain high official in His Majesty's service, who was also my friend, had requested that I write a song of felicitation towards the Emperor. The request simply amazed me. It caused a great stir in my heart. In response to that great mental turmoil, I pronounced the victory in Jana Gana Mana of that Bhagya Vidhata [ed. God of Destiny] of India who has from age after age held steadfast the reins of India's chariot through rise and fall, through the straight path and the curved. That Lord of Destiny, that Reader of the Collective Mind of India, that Perennial Guide, could never be George V, George VI, or any other George. Even my official friend understood this about the song. After all, even if his admiration for the crown was excessive, he was not lacking in simple common sense."

நன்றி.

சிவா said...

குடியரசு தின வாழ்த்துக்கள் குமரன். நல்ல நாளில் தேசிய கீதம் பொருள் கொடுத்தீர்கள் நன்றி. வீடியோ கொடுத்த சந்தோஷுக்கும் நன்றி

நாமக்கல் சிபி said...

அருமையாக விளக்கியுள்ளீர்கள் குமரன்.
பாராட்டுக்கள்.

Anonymous said...

குடியரசு தின வாழ்த்துக்கள் குமரன்

அருமையான பாடலை கேட்கவும், பார்க்கவும் கொடுத்தமைக்கு நன்றி

அழகான பாடல்.. எல்லாரும் அவங்க அவங்க ஸ்டைல்ல பாடினாங்க.. எல்லாமும் மொத்தமா ஒரே பாட்டா கேட்க.. இங்கயும் "Unity in Diversity". கொஞ்சம் நெகிழ்வா இருந்தது.

நன்றி

அன்புடன்
கீதா

Sundar Padmanaban said...

வந்தே மாதரம்

ஜெய்ஹிந்த்

பதிவுக்கு நன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

தாகூரின் கடிதத்திற்கு மிக்க நன்றி சமுத்ரா.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவா, சிபி, கீதா, சுந்தர்.

கைப்புள்ள said...

முதற்கண் நட்சத்திரமாக இவ்வாரம் நீங்கள் மின்னி கொண்டு இருப்பதற்கு என் வாழ்த்துகள். வேல்ஸ் அரச குடும்பத்தினரை வரவேற்க எழுதப்பட்ட கீதம் என்பது உண்மை. எனினும் இம்மாதிரி விஷயங்களை திரும்பவும் ஆய்வு செய்வதில் பயன் ஏதும் இல்லை என்பது என் கருத்து. எல்லோரும் ஏற்றுக் கொண்டபின் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதும் தேவையில்லாதது.

குமரன் (Kumaran) said...

கைப்புள்ள. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. மேலே சமுத்திரா தாகூர் தன் நண்பருக்கு எழுதிய கடிதம் என்று ஒன்று கொடுத்திருக்கிறாரே. அதில் என்ன சொல்லியிருக்கிறது? வேல்ஸ் அரச குடும்பத்தினரை வரவேற்க இந்தப் பாடலை எழுதியதாகவா சொல்லியிருக்கிறது? எனக்கு அப்படித் தோன்றவில்லையே?

சரி. நீங்கள் ஆய்வு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். அதனால் விட்டுவிடுவோம். அதனை ஆய்வதால் எந்தப் பயனும் இல்லை. தேசிய கீதமாய் ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்தப் பாடலை மறு பரிசீலனை செய்யாமல் தொடர்ந்து அதற்குரிய மரியாதையைக் கொடுத்து வருவோம். :-)

Anonymous said...

Mei silirkkira vaikkirathu Kumaran. Nanri, Nanri. Arumaiyana vilakkam.

Intha padalai download seyya mudiyuma. Cassette/CD kidaithalum okay.

Anbudan,
Kumaresh

குமரன் (Kumaran) said...

குமரேஷ். மெய் சிலிர்க்க வைத்தது வீடியோவா விளக்கமா? விளக்கம் என்றால் நன்றி. வீடியோ என்றால் ரஹ்மான் தான் நன்றி சொல்லவேண்டும்.

இது CD வடிவில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை குமரேஷ். நிச்சயம் கிடைக்கும் என்று தான் தோன்றுகிறது.

குமரன் (Kumaran) said...

வாழிய பாரத மணித்திருநாடு. எல்லோருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள்.

Anonymous said...

சுதந்திர தின நல்வாழ்த்துகள் குமரன்.

கிஷோர்.

இலவசக்கொத்தனார் said...

குமரன்,

ஒரு கேள்வி - நீங்கள் மங்கலகரமான என்ற சொல்லை உபயோகித்துள்ளீர்கள். அது சரியா? அல்லது மங்களகரமான என்பது சரியா?

குமரன் (Kumaran) said...

நன்றி கிஷோர்.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். எனக்குத் தெரிந்தவரை மங்கலம் என்பது வடமொழிச் சொல். சுபம் என்பதை மங்கலம் என்று மொழிபெயர்த்துள்ளேன். தமிழில் மங்களம் என்று எழுதுகிறோம். வடமொழியில் ல, ள என்று இரு எழுத்துகள் இல்லை. அதனால் வடமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும் போது மங்கலம் என்றோ மங்களம் என்றோ எழுதலாம். இரண்டுமே சரி தான்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! ஈழத்தவருக்கு பாரத மாதா "பாட்டி" தானே! ; யாரும் மறுக்கலாம் . என் எண்ணத்தை மாற்றும் நோக்கம் எனக்கில்லை. அந்தச் சுதந்திரம் தான் எங்களுக்கும் சுதந்திரமானது. ரவீந்திரநாத் தாகூர் அழகாகத்தானே சொல்லியுள்ளார்.தங்கள் மொழிபெயர்ப்பு இலகுவாக அமைந்துள்ளது.
மேலதிக தகவல் எங்கள் இலங்கையின் தேசிய கீதம் எழுதி,இசையமைத்த ஆனந்த சமரக்கோன் ;ரவீந்திரநாத் தாகூரின் மாணாக்கர்.
யோகன் பாரிஸ்

சிவமுருகன் said...

வந்தே மாதரம்

ரங்கா - Ranga said...

குமரன்,

முன்னமேயே படித்திருந்தாலும், சமயம் பார்த்து மறுமுறை நினைவு படுத்தியதற்கு நன்றி. ஒரு சிறு தகவல்: இந்தப் பாடலின் ராகம் பிலாவால்தாட்.

ரங்கா.

Amar said...

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்

நமது பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!

குமரன் (Kumaran) said...

தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி யோகன் ஐயா. இலங்கையில் தேசிய கீதத்தைப் பற்றிய மேலதிகத் தகவலுக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

ரங்கா அண்ணா. பிலாவால்தாட் என்பது ஹிந்துஸ்தானி இராகமா? கர்நாடக இசை இராகம் மாதிரி தெரியவில்லையே?!

குமரன் (Kumaran) said...

சமுத்ரா,

வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்! அந்த
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்!
பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்! எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!

பாரதியின் வரிகளை இட்டதற்கு மிக்க நன்றி.