**********
முதல் பாட்டு சிலப்பதிகாரத்தில் வருவது. இளங்கோவடிகள் எழுதியது. இளங்கோவடிகள் சைவர் என்றும் சமணர் என்றும் சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பாடலைப் படித்தவர்களும் கேட்டவர்களும் இவர் வைணவராய்த் தான் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். நாராயணன் புகழை அப்படிப் பாடுகிறார்.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல்வண்ணன் பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே
கலக்கிய கை அசோதையார் கடைக்கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே.
வடதிசையில் இருக்கும் மலையாகிய மேருவை மத்தாக்கி வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி (நாணாக்கி) கடல் போன்ற நிறத்தை உடைய இறைவா, நீ பழைய காலத்தில் ஒரு நாள் கடலைக் கடைந்து அமுதம் எடுக்க உதவினாய். அகில புவனங்களையும் படைக்கும் பிரம்மனை உன் தொப்புளில் வளரும் தாமரை மலரில் படைத்தாய். அப்படி மாபெரும் காரியங்களைச் செய்த நீயே யசோதையாரின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவரின் கயிற்றால் கட்டுண்டாய். இது என்ன மாயமோ. எங்களை மயக்கும் தன்மையாய் இருக்கிறதே.
அரும்பொருள் இவனென்றே அமரர்களும் தொழுதேத்த
உருப்பசி ஒன்றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினால் உறி வெண்ணை உண்டவாய்
வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே.
வலிமையின் வடிவான, துழாய் மாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய செல்வம் இவனென்று என்றும் வாழும் அமரர்களாலும் தொழுதேத்தப் படுபவன் நீ. பசியில்லாவிட்டாலும் உலகங்கள் அனைத்தையும் அழிக்கும் காலம் வந்த போது நீ அவற்றை எல்லாம் உண்டாய். அப்படி உண்ட அதே வாயினால் உறி வெண்ணையையும் களவு செய்து உண்டாயே. இது என்ன மாயமோ? எங்களை உன் செயல்கள் மருட்டுகின்றனவே.
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்! நின் செங்கமல
இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி
மடங்கலாய் மாறட்டாய்! மாயமோ மருட்கைத்தே.
நரசிம்மமாய் வந்து மாற்றானைக் கொன்றவனே! அமரர்கள் திரண்டு வந்து தொழுது ஏத்தும் திருமாலவனே! அன்று திரிவிக்கிரம அவதாரம் எடுத்தப் போது உன் செந்தாமரை அடிகளால் இரண்டு அடி எடுத்து மூவுலகங்களையும் அவைகளில் இருக்கும் மயக்க இருள் தீரும் படி அளந்து நடந்தாயே. அப்படி நடந்த திருவடிகளா பாண்டவர்களுக்காக தூதாகவும் நடந்தன? இது என்ன மாயமோ? எங்களை உன் செயல்கள் மருட்டுகின்றனவே.
மூவுலகும் ஈரடியால் முறைநிரம்ப வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே. திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே.
முறையற்று இருந்த நிலை மாற்றி மூவுலகும் இரண்டு அடிகளால் அளக்கத் தாவிய செம்மையுடைய திருவடிகள் மேலும் சிவப்பத் தன் தம்பியான இலக்குமணனோடு கானகம் வந்து, தங்கத்தால் அரண் (மதில்) அமைத்துப் பாதுகாக்கப் பட்ட தொன்மையான இலங்கையின் பாதுகாவலை அழித்த சிறந்தவனாம் இராமபிரானின் சிறப்புகளை மனம் உவந்து கேட்காத செவியென்ன செவிகள்? திருமால் சீர் கேட்காத செவியென்ன செவிகள்?
பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே
அவனை விட யாரும் பெரியவர் இல்லை எனும் படி நின்றவனை, மாயவனை, பெரிய உலகங்களை எல்லாம் தன் தொப்புளுள் மலரும் தாமரை மலரில் படைத்த விண்ணவனை, கண்களும் திருவடிகளும், கைகளும், திருவாயும் சிவந்த தாமரை மலரை போல் விளங்கும் கரிய திருமேனி கொண்டவனைக் காணாத கண் என்ன கண்ணே? அவன் அழகைக் கண்டபின்னும் அதனை கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே? (அவன் அழகைக் கண்டால் கண்ணைக் கூட இமைக்க முடியாமல் மெய் மறந்து போவோம் என்கிறார்).
மடந்தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்ற
படர்ந்தாரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே
மடமை ஆழ்ந்திருக்கும் நெஞ்சம் உடைய கம்சனின் வஞ்சங்களை எல்லாம் வெற்றிகொண்டு, கௌரவராம் நூற்றுவரை நோக்கி, எல்லாத் திசைகளும் போற்ற, வேதங்கள் எல்லா திசைகளிலும் முழங்க, பாண்டவராம் பஞ்சவர்க்காகத் தூது நடந்தானை போற்றிப் பாடாத நாவென்ன நாவே? நாராயணா என்று சொல்லாத நாவென்ன நாவே?
இந்தப் பாடலை எம்.எஸ். அருமையாகப் பாடியிருப்பார். முடிந்தால் கேட்டு அனுபவியுங்கள்.
**********
இரண்டாவது பாட்டு கருணையே உருவான இராமலிங்க வள்ளலார் பாடியது.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
தருமத்திலே சிறந்த சென்னை மாநகரிலே கந்தகோட்டத்துள் அமர்ந்தருளும் கந்தவேளே! குளிர்ந்த திருமுகம் கொண்ட தூய மணி போன்றவனே! உள் நோக்கி நிற்பார் தமை காத்தருளும் சைவ மணியே! ஆறுமுகத் தெய்வமணியே! ஒரே நோக்குடன் உனது மலர் போன்றத் திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு வேண்டும்! உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசுவார் உறவு கிடைக்காமல் இருக்க வேண்டும்! பெருமையுடன் கூடிய உனது புகழே பேச வேண்டும்! பொய்யானவை நான் பேசாதிருக்க வேண்டும்! நெறிகளிலே உயர்ந்த நெறியானதை நான் பின்பற்ற வேண்டும்! கர்வம் (மதம்) என்னும் பேய் எனக்குப் பிடிக்காமல் இருக்க வேண்டும்! தன் மனை தவிர வேறு பெண்ணை மருவும் ஆசை எனக்கு வராமல் இருக்கவேண்டும்! உனை நான் மறவாதிருக்க வேண்டும்! நல்ல அறிவு வேண்டும்! உனது கருணை என்னும் செல்வம் வேண்டும்! நோயில்லாத வாழ்வு நான் வாழ வேண்டும்!
**********
மூன்றாவது பாட்டு சிவனையும் விஷ்ணுவையும் ஓருருவாகப் பாடும் ஒரு கர்நாடக இசைப் பாடல். வார்த்தை விளையாட்டு இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது.
பல்லவி:
மா ரமணன் உமா ரமணன்
மலரடி பணி மனமே தினமே (மா ரமணன்)
அனுபல்லவி:
மார ஜனகன் குமார ஜனகன்
மலை மேல் உறைபவன் பாற்கடல்
அலை மேல் துயில்பவன் பாவன (மா ரமணன்)
சரணம்:
ஆயிரம் பெயரால் அழைப்பினும்
ஆயிரம் உரு மாறினும் உயர்
தாயினும் மிகு தயாபரன் பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும் (மா ரமணன்)
பல்லவி:
மா என்றால் திருமகள். மா ரமணன் என்றால் திருமகள் மணவாளன் திருமாலவன். உமா ரமணன் என்றால் உமையன்னையின் மணவாளன் சிவபெருமான். அவன்(அவர்கள்) மலரடி பணி மனமே. தினமே.
அனுபல்லவி:
மாரன் என்றால் மன்மதன். அவன் தந்தை கண்ணன். அதனால் மார ஜனகன் விஷ்ணு. குமார ஜனகன் குமரனின் தந்தையான நடராஜன். கைலாய மலை மேல் உறைபவன் முக்கண்ணன். பாற்கடல் அலை மேல் துயில்பவன் மாயவன். தூயவர்கள் இவர்கள்.
சரணம்:
ஆயிரம் பெயர் கொண்டு அழைத்தாலும், ஆயிரம் உருவங்களால் வழிபட்டாலும், உயர்ந்த தாயை விட கருணையுடைய தயாபரன் அவன். அவனுடைய திருவடிகளைத் தஞ்சம் என்று வந்தவர்களை அஞ்சேல் என்று அருளுபவன் அவன்.
52 comments:
Second song is somehting which I like the most. Mikka nandri athai pathivu seythathargaga. If all of us start praying like that, then the whole world will become a better place to live. Hmm...Aandavan thaan pathil soll aveendum.
Ungal irrai pani thodara vaazthukal.
Anbudan,
Natarajan
நன்றி நடராஜன். பாட்டு கேட்டிங்களா?
நம்ம சிவா தான் அந்தப் பாட்டை செட் பண்ணிக் குடுத்தார். நன்றி சொல்ல மறந்துட்டேன். மிக்க நன்றி சிவா.
குமரன், எனக்கு நீங்கள் குறிப்பிடும் முதலிரண்டு பாடல்களும் பிடிக்கும். மூன்றாவது பாடல் கேள்விப்பட்டதுண்டு கேட்டதில்லை. ஆனாலும் இரண்டாவது பாடல் மிகவும் பிடிக்கும். தொடர்வது முதல்பாட்டு.
எனக்கென்ன வருத்தமென்றால்...ஆய்ச்சியர் குரவை என்பது சிலப்பதிகாரத்தில் மிகவும் துன்பகரமான பொழுதில் வரும் (கோவலனைக் கொன்றதும்). அதில் வருகின்ற பாடலைத் தேடிப் பிடித்து பாடிப் புகழ் பரப்பிய பெரியவர்களுக்குக் சிலப்பதிகாரத்தின் மிகவும் மகிழ்ச்சியான பொழுதில் வரும் குன்றக் குரவையின் முருகன் பாடல்கள் தெரியாமல் போனதுதான். ஒவ்வொன்றும் அற்புதம். இத்தனைக்கும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பயன்படுத்திய முதல் கடவுள் பெயரே முருகனுடையதுதான். மேலும் கொற்றவை மீதான பாக்களும் உண்டு. இவைகளுக்கு விமோசனம் பிறக்கும் நாள் எந்நாளோ! எனக்குப் பாடும் வல்லமையும் புகழும் கொடுத்திருந்தால் நானே ஊரூராகச் சென்று பாடியிருப்பேன். அப்பா அருணகிரி ஒரு வழிகாட்டப்பா!
//மூன்றாவது பாடல் கேள்விப்பட்டதுண்டு கேட்டதில்லை. //
இராகவன்,
அப்ப உங்களுக்காகத் தான் நான் அந்தப் பாடலை இங்கே குடுத்திருக்கேன்னு நெனைச்சுக்கோங்க :-) பாட்டைக் கேட்டீங்களா?
குன்றக் குரவையையும் கொற்றவைப் பாடல்களையும் நீங்கள் ஏன் உங்கள் 'மகரந்தம்' பதிவில் போடக்கூடாது. நானெல்லாம் படிப்பேனல்லவா?
வேங்கடத்தில் பெருமாளை நின்ற வண்ணமும், அரங்கத்தில் படுத்த வண்ணமும் ஒரு சேரக் காணப்போவதாக கவுந்தியடிகள் சொல்லும் இடம்/பாடல் ஒன்றுள்ளது சிலம்பில். இக்காப்பியத்தில் எல்லாமே மூன்றுதான். காப்பிய நோக்கம் அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவது, உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுவது என மூன்று., தெய்வங்கள் அல்லது சமயங்கள் மூன்று சைவம், வைணவம் மற்றும் சமணம். ஊர்கள் மூன்று புகார், மதுரை, தொண்டி., மன்னர்கள் மூவர் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என அனைத்தும் மூன்றுதான். நதிகள் இரண்டைப் பற்றித் தெரியும் 'நட்ந்தாய் வாழி காவேரி..' ' வையை என்ற பொய்யாக் குலக்கொடி' என காவேரி, வைகை பற்றி மூன்றாவது நதியுள்ளதா? தெரிந்தவர் சொல்வீர்.
வள்ளலாரின் 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' க்கு நிகர் எவ்வரியும் இல்லை.
அப்டிபோடு அக்கா. முருகனருள் முன்னிற்கும் (இதற்கு முந்தையப் பதிவு) படிச்சீங்களா?
படிச்சுகிட்டே இருக்கோம்ல?
யோவ்! என்னைய்யா இது. புடிச்ச பாட்டுன்னவுடனே ரெண்டு இளையராஜா பாட்டு போட்டிருப்பியன்னு வந்தா இராமாயணம் சிலப்பதிகாரம்னு பாட்டு போட்டுகிட்டு இருக்கிய :-). மெதுவா பாட்ட படிச்சி பாக்கறேன். இப்போ தூங்க போறேன் :-)
குமரன்,
முதல் பாட்டு எம்.எஸ் பாடி கேட்க வேண்டும். தமிழ் பாட்டை எம்.எஸ் அப்படியே எடுத்து பாடிவிட மாட்டார். அந்த பாடல் பொருள், பாடப்பட்ட சூழ்நிலை என்று எல்லாம் தமிழ் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து பிறகு இசை அமைத்து பாடுவதால் தான் அதில் பாவம் இருக்கிறது.
நல்ல பதிவு குமரன். ( சினிமா பாடல் என்று நினைத்து உள்ளே வந்தேன் என்பது வேறு விஷயம் :-)
Dear Kumaran
Ramalinga Adikalar song sung by MS
http://nadopasana.blogspot.com/2006/01/blog-post_21.html
Bombay jayashree has also rendered this song.
"Vadavaraiyai"
=============
http://nadopasana.blogspot.com/2005/07/blog-post_13.html
பெரியவுங்க எல்லாமே சினிமா பாட்டுன்னு இங்க வந்திருக்கும்போது நான்மட்டும் இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க?!
ஹிஹி...
இருந்தாலும் உங்க நட்சத்திரப்பதிவுகளை முழுசா படிச்சுடறதுன்னு ஒரு முடிவோட இருக்கேன்!
ஆயிரம் பெயர் கொண்டு அழைத்தாலும், ஆயிரம் உருவங்களால் வழிபட்டாலும், உயர்ந்த தாயை விட கருணையுடைய தயாபரன் அவன். அவனுடைய திருவடிகளைத் தஞ்சம் என்று வந்தவர்களை அஞ்சேல் என்று அருளுபவன் அவன்.//
அதில் என்ன சந்தேகம். நீங்க சொன்ன எல்லா பாடல்களுமே அற்புதமா இருந்தது குமரன்..
அமெரிக்க சூழ்நிலையிலும் இறைவன்பால் இவ்வளவு பற்றுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..
இறைவன் உங்களுக்கு அருள்பாலிக்கட்டும்..
//யோவ்! என்னைய்யா இது. புடிச்ச பாட்டுன்னவுடனே ரெண்டு இளையராஜா பாட்டு போட்டிருப்பியன்னு வந்தா இராமாயணம் சிலப்பதிகாரம்னு பாட்டு போட்டுகிட்டு இருக்கிய :-). //
நானும் தலைப்ப பார்த்துட்டு வேக வேகமா ஒடியாந்தா குமரன் நல்லா கடுக்கா கொடுத்திட்டார். குமரன் எனக்கு நீங்கள் கொடுத்த மூன்று பாடலுமே புதியது. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி:-))
Why 'pidittap padalgal'?
Is it not 'piditta padalgal'?
Pathy.
//ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் //
ஒளவையார் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
என வேண்டாம் வேண்டாம் என படியதால்
வள்ளல் வேண்டும் வேண்டும் என படினார்.
அன்பு குமரன்,
அனைவரும் பாராட்டும்பொழுது நான் மட்டும் ஏதாவது சொல்லி என்பெயரைக் கெடுத்துக்கொள்வதா? என வாளாவிருக்க இயலவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்ததையும் உளறி வைக்கிறேன்.
1.குமரனும், திருமாலும் இல்லையெனில் சிவத்தை அடைய இயலாது. இது என்னடா? இங்கேயே இரண்டு சாமிகளும் முட்டிக்கிட்டு நிற்கிறார்கள். இதுல சிவன்வேறு புகுந்துகொண்டானே? எனத்தானே சிந்திக்கின்றீர்கள்.
இவ்வளவு, தத்துவங்கள் பேசும் நீங்கள் அனைவரும் ஒருபடி மேலே சென்று உருவத்தை விட்டு அருவத்தைச் சிந்திக்க வேண்டுமெனவேண்டுகிறேன்.
முருகன் = அறிவு
மால் = உணர்வு
சிவன் = சீவன்
அறிவும் உணர்வும் ஒன்றினால்தான் சீவன் நிலைக்கும். இல்லையில்ல. அறிவுதான் இன்றியமையாதது எனவெல்லாம் சண்டையிடாது, தங்களின் அறிவு, உணர்வு, சீவன் ஆகிய மூன்றையும் ஒன்று சேர்க்க முயலுங்கள்.
முதல் பாடல்
**********
"மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே."
ஈண்டு, என் மலர்க்கமலமாம் இரு விழிகளில் உன் + தீயாய்(உந்தி) உதித்து நீ செய்த மாயமோ! எனக்கு மருள்(அறியாமை, மும்மலங்கள்) கைத்தே(கசந்ததே, வெறுத்ததே) எனக் கொள்ளல் வேண்டும்.
மூன்றாம் பாடல்
************
"நின் செங்கமல இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே"
வாமன அவதாரத்தில், "ஆண்வம், மாயை, கன்மா ஆகிய மூன்றையும்" தன் செங்கமல இரண்டடியால்( இரு கண்களால்) தாண்டி நடந்தனையே!
"நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி"
ஐந்து இந்திரி்யங்களாம் பஞ்ச பாண்டவர்க்குத் தூதாய்ச் சென்றவனே!
குமரன்,
நானுமே ஏதாவது இளையராஜா பாட்டாகத்தான் இருக்கும்னு நினைத்தேன். ரெண்டாவது பாடல் மட்டும்தான் ரொம்ப பரிச்சியம். அதிலும் இன்று `உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்’ ஒருவரின் நடத்தையால் மனம் தளர்ந்திருந்தபோது உங்க பாடல் பார்த்தேன். மனம் லேசாகிறது. நன்றி
// இராகவன்,அப்ப உங்களுக்காகத் தான் நான் அந்தப் பாடலை இங்கே குடுத்திருக்கேன்னு நெனைச்சுக்கோங்க :-) பாட்டைக் கேட்டீங்களா? //
நன்றி குமரன். இன்னும் கேக்கலை. இன்னைக்கு சாந்தரம் வீட்டுக்குப் போய் கேக்குறேன்.
// குன்றக் குரவையையும் கொற்றவைப் பாடல்களையும் நீங்கள் ஏன் உங்கள் 'மகரந்தம்' பதிவில் போடக்கூடாது. நானெல்லாம் படிப்பேனல்லவா? //
இல்லையில்லை. சிலப்பதிகாரம் பற்றிச் சொல்ல பல விஷயங்கள் உள்ளன. எக்கச்சக்கமாக...ஆனால் சொல்லப் போவதில்லை. அதற்கு வேறொரு திட்டம் இருக்கிறது.
// நதிகள் இரண்டைப் பற்றித் தெரியும் 'நட்ந்தாய் வாழி காவேரி..' ' வையை என்ற பொய்யாக் குலக்கொடி' என காவேரி, வைகை பற்றி மூன்றாவது நதியுள்ளதா? தெரிந்தவர் சொல்வீர். //
என்ன அக்கா....பேரியாறு மறந்து விட்டதா? காவிரி புகார்க்காண்டத்தில். வையை மதுரைக்காண்டத்தில். பேரியாறு வஞ்சிக்க்காண்டத்தில். செங்குட்டுவனும் வேண்மாளும் வனவளம் காணப் போகிறார்களே!
நீங்கள் சொல்வது போல சிலப்பதிகாரத்தில் எல்லாமே மூன்றுதான்.
// அன்பு குமரன்,
அனைவரும் பாராட்டும்பொழுது நான் மட்டும் ஏதாவது சொல்லி என்பெயரைக் கெடுத்துக்கொள்வதா? என வாளாவிருக்க இயலவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்ததையும் உளறி வைக்கிறேன். //
ஐயா இப்படி ஏதேனும் நீங்கள் உளறிக் கொண்டே இருங்கள். அதில் எங்களுக்குத் தேவையான பல விஷயங்கள் கிடைக்கின்றன. மிக்க நன்றி. பாடல் வரிகளுக்குத் தேவையான புதிய கோணங்களைக் கொடுத்திருக்கின்றீர்கள்.
அப்டிப் போடு அக்கா. நீங்கள் சொன்னதை எல்லாம் படித்த மாதிரி நினைவில் இருக்கிறது. ஆனால் எதுவும் தெளிவாக நினைவில் இல்லை. சிலப்பதிகாரத்தை இன்னும் நான் ஊன்றிப் படிக்கவில்லை போல. நீங்கள் சொன்ன மும்மூன்றுக்களைப் பார்த்தால் சீக்கிரம் படிக்க வேண்டும் போலிருக்கிறது. இப்போது தான் கம்பரின் இராம கதையைத் தொடங்கினேன். அதனை மூடி வைத்துச் சிலப்பதிகாரம் தொடங்கலாம் போலிருக்கிறது.
ஆமாம் அக்கா. வள்ளலாரின் அந்த வரி அற்புதமானது. நான் பதிவில் 'கருணையே உருவான இராமலிங்க வள்ளலார்' என்று சொன்னது இந்த வரிகளையும் அந்த வரிகளில் சொன்ன வண்ணம் செய்த அவர் வாழ்க்கையையும் எண்ணியே. ஜீவ காருண்யமே சிறந்த மதம் என்றவராயிற்றே அவர்.
சிவா, காலையில எழுந்து படிச்சீங்களா? இனி மேல் தான் எழுந்திருக்கணுமா? சீக்கிரம் எழுந்து படிச்சு பாட்டைக் கேட்டு (உங்கள் உதவிக்கு நன்றி) இன்னும் இதே மாதிரி ஏதாவது சொல்லுங்கள் :-)
நீங்க எடுத்துக் கொடுத்தீங்க. எல்லாரும் அதையே புடிச்சிக்கிட்டாங்க போல இருக்கு. பாருங்க எத்தனைப் பேரு சினிமா பாட்டுன்னு நினைச்சுக்கிட்டு வந்துருக்காங்க. :-)
தேசிகன், நீங்க சொன்ன மாதிரி முதல் பாட்டு எம்.எஸ். பாடித் தான் எனக்கு பழக்கம். அருமையாகப் பாடியிருப்பார். இணையத்தில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. நல்ல வேளை நாதோபஸனா இங்கே வந்து அந்தப் பாடல்களுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார்.
தலைப்புல தப்புன்னு நெனைக்கிறேன். அதான் நீங்களும் சினிமா பாட்டுன்னு ஏமாந்துட்டீங்க. அதுக்கும் ஒரு பதிவு இருக்கு. வரும்.
ரொம்ப நன்றி நாதோபஸனா. இந்தப் பாடல்களைப் பற்றி எழுதும் போது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். நீங்கள் வந்து பின்னூட்டத்தில் இந்தப் பாடல்களின் சுட்டியைக் கொடுக்க வாய்ப்புள்ளது என்று எண்ணினேன். அதே மாதிரி செய்துள்ளீர்கள். மிக்க நன்றி.
அப்ப நீங்க என் பதிவுகளைப் படிக்கிறீர்கள். சொல்லக் கருத்து எதுவும் இல்லாததால் பின்னூட்டம் இடுவதில்லை. சரியா? :-)
ரொம்ப நன்றி இளவஞ்சி. நட்சத்திரப் பதிவுகள் மட்டுமின்றி என் எல்லாப் பதிவுகளையும் படித்து உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்று மிக்கத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
படித்தப் பிறகு இன்று நீங்கள் எழுதிய 'பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்' போன்ற பேரிலக்கியங்களை நிறைய படைக்கவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். :-)
இராகவன்., ஆமாம்!. நன்றி. நான் முன்பு கேட்ட கெள்விதான் இது இருப்பினும் உங்களிடம் கேட்கிறேன். கோவலனும், கண்ணகியும் நாட்டார் மரபு என்ற குறிப்பு சிலம்பில் உள்ளதா?. வாணிபம் செய்வதால் அப்படியானார்களா?. மணம் செய்யும் போது மணமக்கள் தீவலம் வருதல் நாட்டாரிடம் இன்று இல்லை. ஆனால் சிலம்பில் அப்படியுள்ளது (காண்பவர் கண் களிக்க தீவலம் வருவதாக).
பாண்டியன் அவையில்., பெண் விடுதலைக்கு முதல் வித்திட்டவள் கண்ணகியாய் இருப்பாளோ?. ஆனால் வாழ்க்கை முழுவதும் கணவனால் நேர்ந்த அநீதியை பொறுத்தாள். பெண்களின் முரண்பட்ட இந்த நிலை இன்றும் மாறவில்லை.
சிலம்பை சிலாகிக்கும் எவரும் ஏனோ மணிமேகலையை அவ்வளவு சிலாகிப்பதில்லை. கதையமைப்பு எப்படியோ... ஆனால் அதில் வரும் வரிகள் அப்படியே காட்சியை கண்முன் நிறுத்தும். உதாரணமாக முதன்முதலில் மணிமேகலையில் மாதவியை காட்டும் போது அவள் தோழி வயந்த மாலையை காட்டுவார் "ஆடிய சாயல் ஆயிழை மடந்தை., வாடிய மேனி கண்டுளம் வருந்தி' என மாதவியைப் பார்த்து வருந்தும் தோழி அப்படியே தெரியவில்லை?. பசி பற்றி முதலில் சொன்னது மணிமேகலை. அட்சயபாத்திரம் போன்ற கற்பனைகள் அதிகம் என்பதால் மணிமேகலை அவ்வளவாக பேசப்படுவதில்லை போலும்.
அந்தக்காலத்திலேயே நல்ல கதையத்தான் நம்ம மக்கள் ஓட விட்டுருக்காங்க போல. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிருச்சு. இந்தக் காப்பியங்கள் மீதும்., அதன் மீதான அழகிலும் மனம் கொடுத்தவர்கள் அதை மறுக்க இயலாமல்தான் 'ஒன்றே குலம்., ஒருவனே தேவன் என இறங்கி வந்தார்கள்' என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கையுண்டு.
// இராகவன்., ஆமாம்!. நன்றி. நான் முன்பு கேட்ட கெள்விதான் இது இருப்பினும் உங்களிடம் கேட்கிறேன். கோவலனும், கண்ணகியும் நாட்டார் மரபு என்ற குறிப்பு சிலம்பில் உள்ளதா?. வாணிபம் செய்வதால் அப்படியானார்களா?. மணம் செய்யும் போது மணமக்கள் தீவலம் வருதல் நாட்டாரிடம் இன்று இல்லை. ஆனால் சிலம்பில் அப்படியுள்ளது (காண்பவர் கண் களிக்க தீவலம் வருவதாக). //
இது குறித்து இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். நாட்டார் என்ற குறிப்பு இதுவரை என் கண்ணில் தட்டுப்படவில்லை. வணிகர் என்ற நோக்கில் எழுந்திருக்க வாய்ப்புண்டு. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இது ஆராய்ச்சிக்குரிய கேள்வி.
// பாண்டியன் அவையில்., பெண் விடுதலைக்கு முதல் வித்திட்டவள் கண்ணகியாய் இருப்பாளோ?. ஆனால் வாழ்க்கை முழுவதும் கணவனால் நேர்ந்த அநீதியை பொறுத்தாள். பெண்களின் முரண்பட்ட இந்த நிலை இன்றும் மாறவில்லை. //
கண்ணகியைத் தமிழர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கோவலன் செய்தது சரியென்றும் சொல்லவில்லை. மேலோட்டமாக மக்கள் முடிவெடுத்து கண்ணகியை பெண்ணடிமைப் பிரதிநிதி என்று தவறான முத்திரை குத்துகிறார்கள். இது குறித்து நான் நிறைய எழுத வேண்டும். இங்கு அல்ல. இந்த பொழுதில் அல்ல.
// சிலம்பை சிலாகிக்கும் எவரும் ஏனோ மணிமேகலையை அவ்வளவு சிலாகிப்பதில்லை. கதையமைப்பு எப்படியோ... ஆனால் அதில் வரும் வரிகள் அப்படியே காட்சியை கண்முன் நிறுத்தும். உதாரணமாக முதன்முதலில் மணிமேகலையில் மாதவியை காட்டும் போது அவள் தோழி வயந்த மாலையை காட்டுவார் "ஆடிய சாயல் ஆயிழை மடந்தை., வாடிய மேனி கண்டுளம் வருந்தி' என மாதவியைப் பார்த்து வருந்தும் தோழி அப்படியே தெரியவில்லை?. பசி பற்றி முதலில் சொன்னது மணிமேகலை. அட்சயபாத்திரம் போன்ற கற்பனைகள் அதிகம் என்பதால் மணிமேகலை அவ்வளவாக பேசப்படுவதில்லை போலும். //
அதுமட்டுமல்ல....சிலப்பதிகாரம் என்பது தமிழகத்தின் கதை. வரலாறு. ஆனால் மணிமேகலை முதற்கொண்ட மற்ற எந்த காப்பியங்களும் தமிழர் வாழ்க்கையோடும் பண்பாட்டோடும் தொடர்புடையன அன்று. அதனால்தான் அவைகள் நீண்டு நிலைக்கவில்லை.
மேலும் சிலப்பதிகாரம் ஒரு மிகச்சிறந்த மதநடுநிலையான நூல். ஆனால் சிலப்பதிகாரம் தவிர்த்த அனைத்துக் காப்பியங்களும் மதப்பிரச்சாரம் செய்த நூல்கள். ஆகையாலும் அவைகள் தமிழரிடத்தில் நிலைத்திருக்கவில்லை.
// அந்தக்காலத்திலேயே நல்ல கதையத்தான் நம்ம மக்கள் ஓட விட்டுருக்காங்க போல. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிருச்சு. இந்தக் காப்பியங்கள் மீதும்., அதன் மீதான அழகிலும் மனம் கொடுத்தவர்கள் அதை மறுக்க இயலாமல்தான் 'ஒன்றே குலம்., ஒருவனே தேவன் என இறங்கி வந்தார்கள்' என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கையுண்டு.//
உண்மை. உண்மை. உண்மை.
உண்மையில் நானும் சினிமா பாடல்தான் இருக்குமென்று வந்தேன்..(அதெப்படி குமரன் சினிமா பாடல் போடுவார்ணு உள்ளுக்குள்ள ஒரு குரல் எழுந்ததையும் அலட்சியம் செய்துட்டு)
மூன்றாவது பாடல் பற்றி என் கணவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதுதான் பாடலை கேட்கிறேன். அருமையான பாடல்.
அன்புடன்
கீதா
Ellorum sonna mathiri, neenga cinema padalgalukkunu oru puthu pathivu arambichiteengalonnu vanthu parthen. Ethukkum 'prepared'a irukkalamennu, raaga.com, thenisai.com ellam poi "top 10" pathu vechu vanthu pathen.
Enakku 2nd pattu mattum theriyum - pidikkum too.
Kumaresh
//தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
//
என்னவோ ஒரு இனம்புரியா உணர்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வார்த்தைகள் இவையெனக்கு!
அதனாலேயே நேற்றைக்கு ஈயென்று திருவருட்பாவை இட்டேன். அதை விஜய் பாடி என்னிடம் இருக்கிறது. முடிந்தால் கூடிய சீக்கிரம் வலையேற்றுகிறேன்.
வடவரையை மத்தாக்கியும் நல்ல பாடல்தான். ஆனால் அதைவிட எனக்கு பிடித்த இராமலிங்க அடிகளாரின் பாடல்.
"வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்". இதுவும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்டால் அமிர்தம். அவராலேயே ஜனரஞ்சகமாக புகழ்பெற்றது.
ஜோசஃப் சார். அப்டிபோடு அக்கா இன்னொரு இடத்துல சொன்ன மாதிரி மதுரையில பிறந்து வளர்ந்தாலும் மதுரையின் வேறு சுற்றுப்புற சூழ்நிலை தாக்காமல் வளர்ந்துவிட்டேன். அது போல அமெரிக்காவில் இருந்தாலும் வீட்டில் வாழ்வது இந்தியனாகத் தானே. அதனால் அமெரிக்கச் சூழ்நிலை அவ்வளவாகத் தாக்குவதில்லை. அமெரிக்காவைப் பற்றி எழுதுவதென்றால் அதற்கும் ஒரு தனி வலைப்பூ தொடங்கி எழுதலாம். அடுத்த வருடம் பார்க்கலாம் என்று இருக்கிறேன். :-)
ஜோசஃப் சார். தங்கள் ஆசிகளுக்கு நன்றி.
நல்ல தமிழ்ப்பாடல்கள் அறிமுகம் ஆனதா முத்துக்குமரன். மிக்க மகிழ்ச்சி. கடுக்காய் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தத் தலைப்பைக் கொடுக்கவில்லை. தானாய் அமைந்தது. அது இத்தனைப் பேரை ஏமாற்றியிருக்கிறது. ஆனாலும் என்ன. வழக்கமா பின்னூட்டம் போடுபவர்கள் தானே போட்டிருக்கிறார்கள். ஏமாந்து எந்த புதியவர்களும் வந்த மாதிரியும் பின்னூட்டம் போட்ட மாதிரியும் தெரியவில்லையே :-)
தெரியலையே பதி ஐயா. எங்கு ஒற்று மிகும்; எங்கு மிகாது என்பது எனக்கு இன்னும் குழப்பம் தான். ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொள்வேன். அப்போது ஒற்று வந்தால் அதைப் போட்டு விடுவேன். அப்படித் தான் 'எனக்குப் பிடித்தப் பாடல்கள்' என்று வந்தது. அதனையே போட்டுவிட்டேன்.
சரியாகச் சொன்னீர்கள் என்னார் ஐயா. நீங்கள் சொன்ன நிகழ்ச்சி வள்ளலாரின் சிறு வயதில் நிகழ்ந்தது என்று படித்திருக்கிறேன். வகுப்பில் ஆசிரியர் 'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்' என்று தொடங்கி எல்லா வரிகளிலும் வேண்டாம் என்று முடியும் பாடத்தைச் சொல்லிக் கொடுத்த போது இராமலிங்கம் எழுந்து 'ஏன் வேண்டாம் வேண்டாம் என்று பாடவேண்டும். வேண்டும் வேண்டும் என்று பாடினால் நல்லதல்லவா' என்று கேட்டாராம். ஆசிரியர் வியக்கும் படி அப்போது இந்தப் பாடலைப் பாடியதாகப் படித்திருக்கிறேன். இந்தப் பாடலில் வரும் எதிர்மறைக் கருத்துக்களையும் கூட வேண்டும் என்று தான் முடித்திருப்பார். எடுத்துக்காட்டு: உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.
குமரன் உங்களை மறக்கவில்லை. நட்சத்திரவரிசை பின்னுட்டத்தில் நானும் வாழ்த்தினேன்.அது தங்கள் பார்வையில் படவில்லை. என்ன பண்ணுவது கூட்டம் அதிகம்.சிறியவன் சொல் அம்பலம் ஏறவில்லை.வள்ளாரை பிடிக்காதவர்கள் இருக்கமுடியது. நானும் அதில் சேர்ந்தவந்தான். இதோ எனக்கு பிடித்த பாடல்.தி.ரா. ச
நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
நிலன்உண்டு பலனும்உண்டு
நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
நெறிஉண்டு நிலையும் உண்டு
ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு
உடைஉண்டு கொடையும்உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
உளம்உண்டு வளமும்உண்டு
தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும்உண்டு
தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியானமுண் டாயில்அரசே
தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
ஞானவெட்டியான் ஐயா. உங்கள் உளறல்கள் அத்தனையும் அற்புதம். நான் மரபின் வழி வரும் பொருளைக் கூறினேன். நீங்கள் இன்னும் தோண்டி இனிக்கும் சுவையான நீரைக் கொடுக்கிறீர்கள்.
ஏற்கனவே இந்த அருவம் உருவம் பற்றி நாம் பேசிவிட்டோம். உருவத்தைத் தாண்டி ஒரு படி மேலே அருவமா, இல்லை அருவத்தைத் தாண்டி நிலைக்கும் நிலையில் இருப்பது உருவமா, இல்லை அருவமும் உருவமும் ஒரு படியே தானா என்பதில் கருத்து வேறுபாடுகள் நிறைய உண்டு. அவன் அருளால் என்று அந்த ஞானம் வருகிறதோ அப்போது வரட்டும். அது வரை எனக்கு உருவத்தில் தான் ஈடுபாடும் சுவையும் உண்டாகிறது. அதிலேயே அனுபவிக்க வேண்டியது எத்தனையோ இருக்கிறது. அதற்கு இன்னும் ஆயிரம் பிறவி எடுக்க வேண்டும் என்றாலும் சரியே.
குனித்தப் புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்தச் சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்தப் பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.
நன்றி தாணு அக்கா. தலைப்பு ஏமாற்றியதற்கு மன்னிப்புக்கள். :-)
அப்டிப் போடு அக்கா. எனக்கு சிலம்பும் தெரியாது. மணிமேகலையும் தெரியாது. அதனால் நீங்களும் இராகவனும் பேசுவதை வாய் மூடிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் :-)
//அதுமட்டுமல்ல....சிலப்பதிகாரம் என்பது தமிழகத்தின் கதை. வரலாறு. ஆனால் மணிமேகலை முதற்கொண்ட மற்ற எந்த காப்பியங்களும் தமிழர் வாழ்க்கையோடும் பண்பாட்டோடும் தொடர்புடையன அன்று. அதனால்தான் அவைகள் நீண்டு நிலைக்கவில்லை. //
இராகவன். இதென்ன புதுசாக் குண்டு போடறீங்க. விளக்கம் தேவை.
கீதா. ஏமாற்றத்திற்கு மன்னியுங்கள். பாடலைக் கேட்டு ரசித்தீர்களா? உங்கள் கணவரும் கேட்டாரா?
நன்றி குமரேஷ்.
ஆமாம் இராமநாதன். வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் பாடல் எனக்கும் பிடிக்கும். ஆனால் பொருள் தான் அவ்வளவாய் விளங்குவதில்லை. யாராவது அந்தப் பாட்டுக்குப் பொருள் சொன்னால் நன்றாய் இருக்கும்.
தி.ரா.ச. சார். நீங்கள் வந்திருந்தால் என் கண்ணில் படாமல் போயிருக்காது. எத்தனைக் கூட்டம் இருந்தால் தான் என்ன? அத்தனைப் பாராமல் இருக்கமாட்டேன். :-)
நீங்கள் தந்துள்ள திருவருட்பா பாடலும் அருமையான பாடல்.
இனிமேல் ஒரு விதி வைத்துக் கொள்வோம். யாராவது செய்யுள் சொன்னால் உடனே அவரோ இல்லை வேறு யாரோ அதற்குப் பொருளும் சொல்லிவிட வேண்டும். என்ன? :-)
Kumaran, please enna maadhiri C-Class audience kku oru padhivu poduveengala, when you are a STAR, please!!! :)
Kumara;
Ilankovadikal,ippadal moolam narayanan, pugal paduvathal ,avar visnavaraga irukka vendum enkureerkal. appo KANADASAN kooda kanan pukal thaanee athikam padinar ,than peeraikooda KANNATHASAN enru marrinar avar VASNAVARA!!!!
Ithu pirasanai illa;Pirasanayum akki vida vendam. Thodarnthu pidiththathai rasiththtai eluthungal.
EPPORUL YAR VAI KEEDPINUM; MEIPPORUL KANPOM.
Americavil irunthu ,ivvalavu THAMIL arvam, piramippaka irukuthappa
Thodarungal
Anpoodu
Johan-Paris
Kay.Yes. C Class Audienceஆ? அப்படின்னா என்னாங்கோ? :-)
எனக்கு இன்னும் ரெண்டு நாட்கள் இருக்கு நட்சத்திர வாரத்துல. இனி வர்ற பதிவுகள் உங்களூக்குப் பிடிக்குதா பாருங்க. :-)
ஜோஹன்,
நிச்சயமாக நான் இளங்கோவடிகள் வைணவர் தான் என்று கூறவில்லை. என்ன சொல்கிறேன் என்றால் அவர் பல கடவுள்களையும் போற்றிப் பாடியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அவர் சமணர் என்றோ, சைவர் என்றோ, வைணவர் என்றோ சாதிக்கிறார்களே அவர்களுக்காகச் சொன்னது. அவர் எந்த சமயத்தவராக இருந்தார் என்றோ இல்லை எம்மதமும் சம்மதம் என இருந்தார் என்றோ அறுதியிட்டுக் கூற முடியாது; தேவையும் இல்லை என்பதே என் கருத்தும். இது திருவள்ளுவருக்கும் பொருந்தும். :-)
அமெரிக்காவில் இருந்தால் என்னங்க. பிறந்து வளர்ந்தது தங்கத் தமிழ் நாட்டில் தானே? அப்போது படித்ததெல்லாம் மறந்து போய்விடுமா என்ன? எனினும் உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
மற்ற பதிவுகளையும் படித்து உங்கள் பொன்னான கருத்துக்களைக் கூறுங்கள். 'பொன்னான' என்று சொன்னவுடன் என்ன நினைவிற்கு வருகிறது? அதனையும் மறந்து விட வேண்டாம். :-)
குமரன்,
"மா ரமணன்" என்ற அந்த கடைசி பாடல் பற்றி நீங்களோ பின்னூட்டம் இட்டவர்களோ ஏதும் சொல்லாததால் இந்த பின்னூட்டம். தெரிந்த தகவல் என்றால் உதாசீனப்படுத்தவும். :)
இது பாபநாசம் சிவன் அவர்களின் பாடல். ஹிந்தோள ராகத்தில் அமைந்தது. இதனை M.S அவர்கள் மிக அற்புதமாக பாடி இருப்பார்கள். "சாவித்திரி சேவாசதனம்" என்றொரு album உள்ளது. (மீரா படத்திற்கு முந்தைய காலக் கட்டம்.) செவிக்குத் தேன் என்றால் மிகையாகாது.
~
ராதா
எம்.எஸ். இந்தப் பாடலைப் பாடிக் கேட்டிருக்கிறேன் இராதா. அண்மைக்காலத்தில் உன்னிகிருஷ்ணனும் இந்தப் பாடலைப் பாடிக் கேட்டிருக்கிறேன். இராகம் ஹிந்தோளம் என்பதும் தமிழ் தியாகராசர் இயற்றிய பாடல் என்பதும் இன்று அறிந்தேன். நன்றி.
Post a Comment