Friday, February 02, 2024

பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே! பாகம் 2



வி: அந்த வீடு என்பது என்ன? சுவர்க்கமா?

கு: சுவர்க்கம், செய்த புண்ணியம் தீரும் வரை இருக்கும் நிலை ஆயிற்றே. அது வீடாகுமா?

வி: அப்படியென்றால் சுவர்க்கம் வேண்டி செய்யும் புண்ணிய காரியங்கள் பயன் அற்றவையோ?

கு: அப்படித் தான் தோன்றுகிறது. நிலையாக என்றும் மாறாத விடுதலை நிலையே வீடு ஆகும். வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்றாரே வகுளாபரணர் மாறன் சடகோபனான நம்மாழ்வார்!

வி: சரி தான். வைகுந்தம் புகுவதையோ பயன் உள்ளது என்கிறார் ஆழ்வார்?!

கு: அது தானே வீடு. அதனால் அது தவிர வேறு எது செய்வதும் பயன் அல்ல என்கிறார் போலும்.

வி: சரி. இன்னும் கொஞ்சம் நுணுகிப் பார்ப்போம்.

வீடு தருவது யார்?

கு: வைகுந்தமாம் பரமபதத்தில் இருக்கும் பரவாஸுதேவன் தான்.

வி: அந்த பரமனை நாம் மனிதர்கள் பற்ற இயலுமோ?

கு: அது எப்படி?! அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனன் போன்ற நித்யஸூரிகளுக்கும், வீடு பெற்று வைகுந்தம் புகுந்த முக்தர்களுக்கும் மட்டுமே அவன் பற்றத்தக்கவன்.

வி: அப்படி என்றால் பரமபதநாதனைப் பற்றுவதும் பயன் அல்ல தானே?!

கு: ஆமாம். உண்மை தான்.

வி: ஒரு வேளை திருப்பாற்கடலில் இருக்கும் வ்யூஹ வாஸுதேவனைப் பற்றுவது பயன் உள்ளதோ?

கு: அங்கும் பிரமனும், ருத்ரனும் முதலாகக் கொண்ட தேவர்கள் மட்டுமே பற்ற இயலும். மானிடர்களான நம்மால் பற்ற இயலாது.

வி: ஆக வியூஹ நிலையும் பயன் அல்ல என்ற வகையில் சேர்ந்து விடுகிறது.

ஒரு வேளை இராம கிருஷ்ணாதி அவதாரங்களைப் பற்றுவது பயன் உள்ளதோ?

கு: அந்த விபவ அவதாரங்கள் நிகழும் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு வேண்டுமானால் அது பயன் உள்ளதாக இருந்திருக்கலாம். நமக்கு அதுவும் பயனில்லை.

வி: ம்ம்ம். ஒருவேளை நம் உள்ளேயே இருக்கும் அந்தர்யாமியை பற்றலாமோ?

கு: அதுவும் நம் போன்ற சாதாரணர்க்கு இயலுமோ? உள்ளிருக்கும் அவனை யோகியரும் ஞானியருமே அறிவர்; அறிந்து பற்ற இயலும். நமக்கு அந்தர்யாமியை பற்றுதலும் பயன் இல்லை.

வி: பின் இருப்பது ஒன்றே ஒன்று தான்! விக்ரஹ ரூபமாய் இருக்கும் அர்ச்சாவதாரமே கதி!

கு: ஆழ்வார் சொல்வதும் அது தான் போலும்.

பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே என்ற போது, இம்மையில் சுகமும் மறுமையில் சுவர்க்கமும் வேண்டி செய்யும் செயல் எதுவும் பயன் இல்லை!

அதே போல், வீடு பெற வேண்டி, இறைவனின் ஐந்து நிலைகளில் பரம் (வைகுந்தம்), வ்யூஹம் (திருப்பாற்கடல்), விபவம் (ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்), அந்தர்யாமி - இந்த நான்கு நிலைகளைப் பற்றுவது பயன் அற்றவை என்கிறார் போலும்.

வி: இந்த பாசுரத்தில் அடுத்த வரிகளைப் பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது.

புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல் மலை அடைவது அது கருமமே!


கு: ஆமாம். இறைவனின் ஐந்து நிலைகளில் ஐந்தாம் நிலையான அர்ச்சை (விக்ரஹ ரூபி) இருக்கும் இடம் கோவில்கள். அதிலும் இங்கே திருமாலிருஞ்சோலை ஆன அழகர் கோவிலில் இருக்கும் புயல் மழை வண்ணராம் சுந்தரத்தோளுடையானை அடைவதே பயன் உள்ளது என்கிறார்.

வி: எங்கே அப்படி சொல்கிறார் என்று விளக்குவாயா?

(தொடரும்)

No comments: