Sunday, July 07, 2013

சூடிக் கொடுத்த சுடர்கொடி!!!



'அம்மா கோதை. மலர்மாலைகளைத் தொடுத்துவிட்டேன். இந்த மலர் மாலைகளைச் சூடிக் கொடுப்பாய் அம்மா. அதனை விரைந்து எடுத்துக் கொண்டு சென்று வடபெருங்கோவிலுடையான் திருமேனியை அலங்கரித்து அவன் திருமுக மலர்ச்சியைக் காண வேண்டும் அம்மா.'

'அப்பா. தங்கள் கட்டளைப் படியே செய்கிறேன். நெருநல் நான் செய்ததைக் கண்டித்து அது தவறென்று சொல்லி வருந்தினீர்களே அப்பா. இப்போது அதனையே நீங்களும் செய்யச் சொல்கிறீர்களே. பெருமாளுக்கென்று தொடுத்து வைத்த மலர் மாலைகளை எம்பெருமான் சூடிக் களைவதற்கு முன்பே நாம் சூடுவது பாவமா அப்பா?'

'மகளே. நல்ல கேள்வியை கேட்டாய். எம்பெருமான் விருப்பம் எதுவோ அதனைச் செய்வதே நம் கடமை. எம்பெருமான் சூடிக் களைந்ததைச் சூடுவதே அடியார்களின் மரபு. அதனை மாறிச் செய்வது பாவம். ஆனால் அதே பாவத்தை அவன் விருப்பம் என்றால் அதனைச் செய்வதே நம் கடமை. கோபியர்கள் செய்ததைப் போல'.

'கோபியர்கள் செய்ததைப் போன்றா? அந்தக் கதையைச் சொல்லுங்கள் அப்பா'.

'கோதை. இன்று பொழுது சாய்ந்து முதல் நாழிகையில் அந்தக் கதையைச் சொல்கிறேன் அம்மா. இப்போது சிறிதும் காலம் தாழ்த்தாது மாலைகளைச் சூடிக் கொடு. எம்பெருமான் காத்துக் கொண்டிருக்கிறான். அவனைக் காக்க வைப்பது நமக்கு அழகில்லை'.

'அப்படியே அப்பா. இதோ மாலைகளைச் சூடிக் கொண்டேன்'.

சரிந்த கொண்டையிலும் தலையிலும் கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் என எம்பெருமான் எந்தெந்த இடங்களில் எந்தெந்த மலர் மாலைகளைச் சூடுவானோ அவற்றை அந்த அந்த இடங்களில் சூடிக் கொண்டாள் கோதை.

பெரியாழ்வார் அந்த மாலைகளை தலை மேல் ஏந்திக் கொண்டு திருக்கோவிலுக்கு விரைகிறார்.

***

'அதோ பட்டர்பிரான் கோதை சூடித்தந்த மாலைகளுடன் திருக்கோவிலுக்கு விரைகிறார். வாருங்கள். நாமும் சென்று பெருமாளைச் சேவித்து வரலாம்'.

'ஆகா. அப்படியே செய்வோம். வாருங்கள். வாருங்கள்.'

***

திருக்கோவிலில் இந்த தெய்வீகமான திருக்காட்சியைக் காண பெருந்திரளாக மக்கள் கூடியிருக்கிறார்கள்.

'அர்ச்சகர் பெருமானே. இதோ எம்பெருமான் விருப்பப்படி கோதை சூடிக் கொடுத்த மாலைகளை ஏந்தி வந்திருக்கிறேன். விரைவில் எம்பெருமான் திருமேனியில் இவற்றைச் சாற்றுங்கள்.'

'அடியேன். அப்படியே செய்கிறேன் பட்டர்பிரானே'.

அர்ச்சகர் பெருமாளின் திருமேனி முழுக்க கோதை சூடிக் கொடுத்த மாலைகளைச் சூட்டுகிறார். எம்பெருமானின் திருமுக மண்டலம் வாட்டத்தை நீக்கி மலர்ச்சி அடைகிறது. அந்தத் திருக்காட்சியைக் கண்டு பெரியாழ்வாரும் அர்ச்சகரும் அங்கே குழுமியிருக்கும் மக்களும் மகிழ்ச்சிக் கண்ணீர் சொரிந்து ஆரவாரிக்கின்றனர்.

'பட்டர்பிரானே. பார்த்தீர்களா எம்பெருமான் முகமலர்ச்சியை?! இதனைப் போன்று ஒரு அதிசயம் பார்த்திருக்கிறோமா இதுவரை? மாலவன் துழாய் மாலையின் மேல் மால் கொண்டவன் என்று அறிவோம். மாலவன் திருவின் மேல் மால் கொண்டு திருமாலவன் எனப்படுவான் என்றும் அறிவோம். கோதை சூடிக் கொடுத்த மாலைகளின் மேலும் மால் கொண்டானே இந்த மாலவன். வியப்பிலும் வியப்பு. எம்பெருமானின் நீர்மையைப் போற்றுவோமா? கோதையின் ஏற்றத்தைப் போற்றுவோமா?

பெருங்குடி மக்களே. எம்பெருமான் விருப்பத்திற்கு ஏற்ப மலர் மாலைகளைச் சூடி கொடுத்த நம் கோதையை இன்று முதல் நாம் சூடிக் கொடுத்த சுடர்கொடி என்று அழைப்போம்'

மக்கள் 'சூடிக் கொடுத்த சுடர்கொடி வாழ்க வாழ்க' என்று வாழ்த்துகின்றனர்.

'பொருத்தமான திருப்பெயர் அர்ச்சகரே பொருத்தமான திருப்பெயர். பட்டர்பிரான் திருமகளார் நம் எல்லோரையும் உய்விக்க வந்த திருமகள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடியே தான்'

திருத்தலத்தார் இப்படி சொல்லவும் மக்கள் மீண்டும் 'சூடிக் கொடுத்த சுடர்கொடி வாழ்க வாழ்க' என்று வாழ்த்துகின்றனர்.

***

அருஞ்சொற்பொருள்:

நெருநல்: நேற்று

மால்: மயக்கம்; காதல்

திரு: திருமகள்; இலக்குமி; லக்ஷ்மி தேவி

நீர்மை: பலவகையாலும் பெருமை உடைய பெரியவர் தம் பெருமையைப் பொருட்படுத்தாமல் எளியோர்களிடம் கலந்து பழகும் குணத்தை நீர்மை குணம் என்பார்கள். எம்பெருமான் எல்லாரையும் விட உயர்ந்தவன்; அவனை விட உயர்ந்தவர் இல்லாத அளவிற்கு உயர்ந்தவன். ஆனாலும் அவனின் பெருமை அந்த உயர்வற உயர்நலம் உடைமையை விட அப்பெருமையை எண்ணாமல் காதலாகிக் கசிந்து உருகி கண்ணீர் மல்க நிற்கும் அடியாரிடம் தாழ்ந்து வருகிறானே அந்த நீர்மைக் குணமே அவனுக்குப் பெருமை என்பர் பெரியோர்.

***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Where are the old comments?
Kothai should not go without one; So lemme write this..

//'மகளே. நல்ல கேள்வியை கேட்டாய். எம்பெருமான் விருப்பம் எதுவோ அதனைச் செய்வதே நம் கடமை//

true!

//எம்பெருமான் சூடிக் களைந்ததைச் சூடுவதே அடியார்களின் மரபு//

true!

//அதனை மாறிச் செய்வது பாவம்//

:)
false!

//ஆனால் அதே பாவத்தை அவன் விருப்பம் என்றால் அதனைச் செய்வதே நம் கடமை//

true!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மரபை மாறிச் செய்தல் "பாவம்" அல்ல! அது ஒரு "மரபு மீறல்"; அவ்வளவே!

ஏன் மரபை மீறணும்? -ன்னு எண்ணும் போது,
அவரவர் மனசின் நியாயத்தை அவரவர்களே கண்டடைகிறார்கள்!

அவரவர் மனசின் நியாயங்களை விட,
எம்பெருமான் மனசின் உகப்பை எண்ணும் போது...
மரபோ/ மரபு மீறலோ.. அவன் உள்ள உகப்பே, தன் உகப்பும் ஆகின்றது!

புண்ணியம்-பாவம், இந்த உகப்பை அண்டுவதில்லை! அப்பாற்பட்டது!

ஏன்டீ கோதை, இதான்டி உன்கிட்ட கத்துக்கிட்டது;
சொன்னது சரியா? -ன்னும் நீயே சொல்லிருடீ!
என் முருகவன் கிட்டேயும், நீ சொன்னதைச் சொல்லித் தான் உயிர் வாழுறேன்!

குமரன் (Kumaran) said...

Comments from original post:

11 comments:

MeenaArun said...
குமரன்,மிகவும் அருமை
கோதையுடன் நாங்களூம் கேட்க தயாராக உள்ளோம்

மீனாஅருண்
March 03, 2007 9:30 PM
Sridhar said...
Very simple, effective presentation. Nice job Kumaran. Sridhar 03/03/07 11:28 PM
March 04, 2007 1:29 AM
Sridhar said...
Very impressive. Good.
March 04, 2007 1:30 AM
குமரன் (Kumaran) said...
நன்றி மீனா அருண். உங்கள் ஆர்வத்தைப் பார்த்தால் வாரத்திற்கு ஒரு இடுகை என்று இந்தப் பதிவில் எழுதிக் கொண்டிருப்பதை வாரத்திற்கு இரண்டு இடுகைகள் என்று மாற்ற வேண்டும் போலிருக்கிறது. :-) ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
March 04, 2007 4:58 PM
குமரன் (Kumaran) said...
ஒரு முறைக்கு இருமுறை பாராட்டியதற்கு நன்றி ஸ்ரீதர். எளிதாகவும் அதே நேரத்தில் ஆழமாகவும் எழுதத் தான் முயல்கிறேன். நன்றி.
March 04, 2007 5:01 PM

G.Ragavan said...
சூடிக்கொடுத்தாள் சுடர்கொடி
அதை
நாடிப் பிடித்தான் பரந்தாமன்
தேடிக் கொடுக்க எத்தனையோ
இருப்பினும்
பாடிக் கொடுத்து அவனையே பெற்றாள்
வாழி வாழி வாழியவே

நெருநல் என்பதுதான் நென்னல் என்றாகி நென்னே என்றும் ஆகி...தமிழில் மறைந்து கன்னடத்தில் நின்னா என்றும் தெலுங்கில் நின்னே என்றும் வழங்கப்படுகிறது என்று நினைக்கிறேன். வதுவை கன்னடத்தில் மதுவே ஆனது போல.
September 29, 2007 5:24 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் இராகவன். நென்னலே வாய் நேர்ந்தான் என்று கோதையும் திருப்பாவையில் சொல்கிறாளே.
September 29, 2007 10:33 AM