Thursday, July 04, 2013

அறியாத பெண் செய்த குற்றம்

என்ன குற்றம் செய்தோமோ தெரியவில்லையே. எம்பெருமான் திருமுக வாட்டம் கொண்டது ஏனோ? நம் பணியில் ஏதேனும் குறையோ? நேற்று திருக்கோவிலுக்குச் செல்லும் வழியில் தொடுத்த மாலையில் தலைமுடி இருந்ததைக் கண்டோமே. அவனுக்கெனத் தொடுத்த மாலையில் தலைமுடி படும் படி நாம் வைத்திருந்தது குற்றமோ? அதனால் தான் புதிதாக மலர் மாலைகள் தொடுத்துக் கொண்டு திருவடிகளில் சமர்ப்பித்தும் இறைவன் திருவுள்ளம் மகிழவில்லையோ? அறியோமே.

நேற்று இரவு முதல் எப்படி எப்படியோ எண்ணிப் பார்த்தாலும் ஒரு தெளிவு பிறக்கவில்லையே. கதிரவனும் குணதிசைச் சிகரம் நீங்கி எழும் நேரம் ஆகிவிட்டது போலிருக்கிறது. விடிவெள்ளியும் எழுந்து அதுவும் மறையும் நேரம் ஆகிவிட்டது. இன்றைக்காவது மலர்மாலைகளை இறைவன் திருவுள்ளம் உகக்கும் படியாகத் தொடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஹரி ஹரி ஹரி.

***

கீழ்வானம் வெளுத்துவிட்டது. மலர்மாலைகளும் தொடுத்தாகிவிட்டது. உடனே எடுத்துக் கொண்டு திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டியது தான்.

நல்லவேளை நினைவிற்கு வந்தது. கேசவன் திருமண்காப்பு வேண்டும் என்று கேட்டானே. இன்று திருக்கோவிலுக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு சொல்லியிருக்கிறேன். மறக்காமல் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும்.

***

திருமண் காப்பினை எடுத்துக் கொண்டு வர பெரியாழ்வார் அப்புறம் செல்கிறார். அவர் அப்புறம் சென்ற நேரம் கோதைத் திருமகள் வழக்கம் போல் மலர்மாலைகளை தான் அணிந்து கண்ணாடி முன் நின்று கண்ணனைக் காண்கிறாள். திரும்பி வந்த பட்டர் பிரான் கோதை மலர்மாலை சூடி நிற்பதைக் கண்டு பதறுகிறார்.

***



'கோதை. என்ன காரியம் செய்தாய்? எம்பெருமானுக்கென்றுத் தொடுத்து வைத்திருக்கும் மலர்மாலைகளை அவன் சூடிக் களையும் முன் அடியோங்கள் சூடலாமா? அது தவறல்லவா? இறைவன் சூடிக் கொடுத்ததை அணிந்து மகிழ்வதல்லவா மரபு? நாம் அணிந்ததை எம்பெருமானுக்குச் சூடலாமா? அது பெருந்தவறு அல்லவா?'

கோதை ஒன்றும் புரியாமல் திகைக்கிறாள். அவள் கிருஷ்ண தியானத்தில் இருப்பதால் தந்தையாரின் கேள்விகளுக்கு உடனே விடை சொல்ல இயலவில்லை.

'அடடா. இப்பெரும் பாவத்தை எப்படி தீர்க்கப் போகிறோம்? ஐயனே. அறியாத பெண் இவள். இவள் செய்த தவறை பொறுத்தருள வேண்டும். பொறுத்தருள வேண்டும்' கண்ணீருடன் பெருமாளை வேண்டுகிறார் பெரியாழ்வார்.

திடீரென முந்தைய நாள் மலர்மாலையில் தலைமுடி இருந்தது நினைவிற்கு வந்தது.

'கோதை. நேற்றும் நீ இப்படி மலர்மாலைகளைச் சூடிக் கொண்டாயா?'

'ஆம் அப்பா.' என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் குரல் கம்முகிறது.

'எவ்வளவு நாளாக இப்படி செய்கிறாய் கோதை? நேற்று தான் இந்தத் தவறைச் செய்யத் தொடங்கினாய் என்று சொல்லிவிடு'.

'இல்லை அப்பா. ஒரு மண்டலமாக மலர்மாலைகளைச் சூடிப் பார்க்கிறேன் அப்பா'.

'என்ன? ஒரு மண்டலமாகவா? ஆஆ. என்ன பிழை செய்தேன்? என்ன பிழை செய்தேன்? என் மகள் சூடிக் களைந்ததையா எம்பெருமான் சூடுவதற்குத் தந்தேன். இந்த மாபெரும் பிழையைப் பொறுக்காமல் தானா எம்பெருமானின் திருமுகம் வாடிவிட்டது?

எம்பெருமானே. கருணைக்கடலே. இவ்வளவு நாட்கள் எங்கள் பிழை பொறுத்தாயே. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாய். நாங்களும் அதே தவற்றைச் செய்தோம். கடைசியில் உன் திருவுள்ளத்தை நாங்கள் அறியும் வகையில் நேற்று உன் திருமுக வாட்டத்தைக் காட்டினாயே. என்னே உன் கருணை. என்னே உன் கருணை.

கோதை. பெருந்தவறு செய்திருக்கிறாய் அம்மா. எம்பெருமானுக்கென்றுத் தொடுத்த மாலைகளை மானிடர்கள் நாம் சூடுவது தவறு அம்மா. எம்பெருமான் திருவருளால் ஏதோ இன்றேனும் இந்தத் தவறு என் கண்களில் தென்பட்டதே. இனி இந்தத் தவற்றைச் செய்யாதே அம்மா'.

இப்படி சொல்லிவிட்டு விரைவில் மாற்று மலர் மாலைகளைத் தொடுத்துக் கொண்டு திருக்கோவிலுக்கு விரைந்தார் பட்டர்பிரான்.

***

அருஞ்சொற்பொருள்:

குணதிசைச் சிகரம்: குணதிசை என்றால் கிழக்குதிசை. கிழக்கில் இருக்கும் மலையில் இருந்து கதிரவன் உதிக்கின்றதைச் சொல்கிறார் பெரியாழ்வார்.

ஹரி ஹரி ஹரி: அதிகாலையில் துயில் எழும் போது ஹரி நாமத்தைச் சொல்லிக் கொண்டே எழுதல் மரபு. 'மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்' என்று கோதையும் திருப்பாவையில் சொல்லியிருக்கிறாள்.

2 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

7 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஹரி ஹரி ஹரி: அதிகாலையில் துயில் எழும் போது ஹரி நாமத்தைச் சொல்லிக் கொண்டே எழுதல் மரபு//

உண்மை குமரன்
துயில் எழும் போது ஹரி என்றும்
துயில் கொள்ளும் போது கோவிந்தா என்றும் சொல்லுதல் மரபு....

பெரியாழ்வார் தூங்கவே இல்லை போல் இருக்கிறதே! ஒரே சிந்தனைப் போராட்டமா இரவெல்லாம்...?
தூங்காமலேயே தூங்கி எழுந்தாலும், "ஹரி ஹரி ஹரி" என்பதை மட்டும் விடவில்லை போங்கள்!
February 10, 2007 5:42 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//வழக்கம் போல் மலர்மாலைகளை தான் அணிந்து கண்ணாடி முன் நின்று கண்ணனைக் காண்கிறாள். திரும்பி வந்த பட்டர் பிரான் கோதை மலர்மாலை சூடி நிற்பதைக் கண்டு பதறுகிறார்//

நீங்கள் சொல்வதும் அப்படியே தான் உள்ளது; படத்திலும் அப்படியே உள்ளதே!
ஓவியத்தில் எழுத்தா?
எழுத்தில் ஓவியமா?
February 10, 2007 5:44 PM
குமரன் (Kumaran) said...
இரவு முழுதும் தூங்காவிட்டால் என்ன இரவிசங்கர். ஆசார அனுஷ்டானங்களை பெரியவர்கள் அவர்களுக்காக மட்டுமா செய்கிறார்கள்? லோக கல்யாணத்திற்காக, மற்றவர்கள் நல்ல முறைகளைத் தவறாமல் பின்பற்றுவதற்காக வழிகாட்டிகளாகவும் தானே செய்கிறார்கள்.

நீங்கள் சொன்னது தான் இந்த ஓவியத்தை உங்கள் பதிவில் பார்த்த போது எனக்குத் தோன்றியது இரவிசங்கர். அடியேனின் மனத்தில் ஆண்டாளின் திருக்கதை எப்படி ஓடியதோ அதனைச் சிறுகுறிப்பாக எழுதி சேமித்து வைத்திருந்தேன். அதற்குப்பொருத்தமாக இந்த ஓவியம் இருக்கவே உங்களிடம் வேண்டி இந்தப்பதிவில் இட்டேன். நன்றி.
February 11, 2007 3:47 PM
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அன்புக் குமரன்!
சூடிக் கொடுத்த சுடர்க் கொடி கதை; நன்று!
எங்கள் வீட்டில் பெரியோர் விழிக்கும் போது;சிவ சிவ என்போரும்; அப்பனே முருகா என்போருமாகத் தான் கேட்டுள்ளேன்.
February 12, 2007 5:03 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
நன்றி யோகன் ஐயா. நீங்கள் சொல்வது சரி. சைவப்பெருமக்கள் 'சிவசிவ, முருகா' என்றும் வைணவப்பெரியோர்கள் 'ஹரிஹரி' என்றும் சைவ வைணவ பேதம் பார்க்காத வைதீகர்கள் 'ஹரி ஹரி' என்றும் துயில் நீங்கும் போது சொல்லுதல் மரபு. இதில் பகுதியை மட்டுமே சொல்லி மற்றதை விட்டுவிட்டேன்.

கோதைத் தமிழைப் பற்றிப் பேசும் போது வைணவ மரபைப் பற்றியே பெரும்பாலும் பேச்சு இருக்கும் என்பதால் எப்போதேனும் வெளிப்படையாக அது வைணவ மரபு என்று சொல்லாமல் அடியேன் விட்டுவிட்டாலும் அப்படியே பொருள் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
February 12, 2007 6:37 AM
G.Ragavan said...
கோதையின் வரலாறு உணர்த்துவது எது? அன்பு மட்டுமிருந்தால் போதும்...ஆண்டவனை அடைந்து விடலாம் என்பதுதான். ஆகையால்தான் ஆச்சாரங்களை அன்போடு செய்து வந்த பெரியாழ்வார்க்குக் கோதையினால் தரிசனம் கிடைத்தது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
February 14, 2007 12:25 PM
குமரன் (Kumaran) said...
உண்மை இராகவன். அன்பே சிவம்.
February 14, 2007 12:48 PM