Saturday, July 24, 2010

கண்ணிழந்தார்க்கு ஒரு கைவிளக்கு...

சீனா ஐயாவின் வழிகாட்டுதலுடன் இன்னொரு நற்செயலை நேற்று (ஜுலை 24) செய்தோம். இரண்டு கண்களும் இருந்தாலே நாமெல்லாம் பல முறை குருடர்களாக இருக்கிறோம். முன்பொரு முறை ஆழிப்பேரலையால் விளைந்த பேரழிவின் போது ஒரு கட்டுரை எழுதினேன். நம்மைச் சுற்றி அவலங்கள் எப்போதும் இருக்கின்றன. ஆனால் அவை நம் கண்களில் படுவதில்லை. எப்போதாவது ஒரு பேரழிவு ஏற்படும் போது மட்டுமே நம் கண்களில் அவை தென்படுகின்றது. அதுவும் நமக்கு எந்த விதத்திலோ தொடர்புடையவர் அவதிப்பட்டால் மட்டுமே நமக்கு அது உறுத்துகிறது. இப்படி கண்ணிருந்தும் குருடாய் நாம் வாழப் பழகிக் கொண்டோம்.

காண்பதற்கு உலகில் எத்தனையோ நல்லவைகள் இருக்கின்றன. ஐந்து புலன்களாலும் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிய இந்த உலகத்தில் எத்தனையோ அற்புதங்கள் உண்டு. நாமோ அவற்றை விடுத்து தீயவைகளில் மனத்தைச் செலுத்துவதிலேயே பெரும் காலத்தைப் போக்குகின்றோம்.

இரு கண்களும் நன்றாக அமைந்து நாம் விரும்பியபடி இவ்வுலக இன்பங்களை எல்லாம் கண்டு களிக்க நமக்கு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கும் போது நாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை; ஆனால் கண்களில் ஏதேனும் குறை இருப்பதால் நம்மைப் போல் இயல்பான வாழ்க்கை வாழ இயலாதவர்கள் பலர் நுட்பியலின் (டெக்னாலஜி) துணை கொண்டு வாழ்க்கையில் முன்னேற ஒரு வழிவகை செய்கிறது மதுரைக்கு அருகில் அழகர் கோவில் செல்லும் வழியில் இருக்கும் சுந்தரராஜன்பட்டி என்ற ஊரில் இருக்கும் ஒரு நிறுவனம்.



'Indian Association for the blind' என்ற இந்த நிறுவனத்தை நிறுவியவர் திரு. எஸ்.எம்.ஏ. ஜின்னா. நேற்று இந்த நிறுவனத்திற்குச் செல்வதற்கு முன் இவரும் ஒரு கண்பார்வையற்றவர் என்பது தெரியாது. அதனால் அங்கே சென்று இவரை முதலில் பார்க்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. கண்பார்வையில்லாமலேயே இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறாரே என்ற வியப்பு ஏற்பட்டது. கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்திருந்தோம்.

அழகர் கோவில் போகும் வழியில் இருப்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு குடும்பத்தினர் அனைவரும் (நாங்கள் நால்வர், என் மாமியார் மாமனார், என் தம்பி அவர் மனைவி) அழகர் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின்னர் இங்கே சென்றோம். நாங்கள் சென்று அடையும் சிறிது நேரத்திற்கு முன்னர் சீனா ஐயா, அவர் துணைவியார், திருஞானம் பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் மூவரும் அங்கே வந்து காத்திருந்தனர்.

இந்த நிறுவனம் இருபத்தைந்து வருடங்களாக நடந்து வருகின்றது. பலருடைய நன்கொடைகளின் பயனாகச் சிறிது சிறிதாக வளர்ந்து இன்று நல்ல கட்டிடங்களுடன் பார்வைக்குறைவுடையோர் தங்கிப் படித்து முன்னேறும் வகையில் அமைந்திருக்கிறது. நாங்கள் சென்று இறங்கிய போது சில பார்வையற்ற சிறுவர்கள் பார்வையுள்ள சிறுவர்களுடன் பந்து எறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்வையற்ற சிறுவர்கள் எப்படி பந்து தங்களிடம் வருவதை அறிந்து அதனைப் பிடித்துப் பின் எறிந்து விளையாடுகிறார்கள் என்று புரியாமல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதனை வாய் விட்டுச் சொல்லவும் செய்தேன். என் அருகில் இருந்த மகள் கொஞ்ச நேரம் அவர்கள் விளையாடுவதைப் பார்த்துவிட்டு, அந்தச் சிறு பந்து ஒலியெழுப்பும் வகையில் அதில் சிறு கற்களை இட்டிருக்கிறார்கள்; அந்த ஒலியின் மூலம் பந்து வரும் திக்கை உணர்ந்து பார்வையற்ற சிறுவர்கள் விளையாடுகிறார்கள் என்று சொன்னாள். கண்ணில்லாததால் இவர்களுக்குக் காது நன்கு செயல்படுகிறது என்றும் சொன்னாள். உண்மை தானே. கண்ணால் நாம் செய்யும் பல செயல்களைக் காதுகளால் கேட்டும், கைகளால் உணர்ந்தும் தான் இவர்கள் செய்கிறார்கள் என்பதைப் பின்னர் இவர்களைப் பற்றி மேலும் கேட்டு அறிந்ததில் உணர்ந்தேன்.



பள்ளியின் நிறுவனருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அப்பள்ளியில் படித்து நுட்பவியலாகராக இருக்கும் பார்வைக்குறைவுள்ள (பார்வை உண்டு; ஆனால் அது முழு அளவில் இல்லை) ஒரு இளம்பெண் நாங்கள் பள்ளிக்கு வாங்கித் தந்த இரு கைக்கணினிகளுடன் வந்தார். அவற்றை இயக்கி அவை எப்படி பார்வையற்றவர்களுக்குப் பயனாக இருக்கிறது என்று செய்து காண்பித்தார். விசைப்பலகையின் மேல் ப்ரெய்ல் குறிகளை ஒட்டியிருக்கிறார்கள். ஒரு மென்பொருள் திரையில் இருப்பதைப் படித்துக் காட்டுகிறது. இவ்விரண்டின் துணை கொண்டு நாம் என்ன என்ன கணினியில் செய்வோமோ அத்தனையும் பார்வையற்றோரும் பார்வைக்குறையுள்ளோரும் செய்யமுடியும் என்பதைச் செய்து காட்டினார்.

அந்த செயல்முறை விளக்கத்திற்குப் பின்னர் அக்கணினிகளை நாங்கள் வழங்குவது போல் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று நிறுவனர் சொன்னதை ஒட்டி அப்படியே செய்தோம்.




மாணவ மாணவியர் மதிய உணவு உண்ண ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். உடனே உணவுண்ணும் அறைக்கு எல்லோரும் சென்றோம். மதுரை அன்பகத்தில் சொல்லி ஆயத்தப்படுத்தியிருந்த ஆட்டுக்கறி பிரியாணி, காய்கறி பிரியாணி, தயிர்சாதம், அவித்த முட்டை, தயிர் வெங்காயம், இருவகை குழம்புகள், உருளைக்கிழங்கு வறுவல் அங்கே காத்திருந்தன.









முன்னூறு மாணவ மாணவியர் அங்கே தங்கிப் படிப்பதாக சீனா ஐயா சொல்லியிருந்ததால் அவர்களுக்கும் அங்கே பணிபுரியும் மற்றவர்களுக்கும் எங்களுக்கும் என்று பதினைந்து படி மட்டன் பிரியாணியும் இரண்டு படி வெஜிடபிள் பிரியாணியும் ஒரு படி தயிர்சாதமும் செய்திருந்தோம். அந்த உணவறையில் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ண இயலாது என்பதால் வயதில் சிறியவர்கள் ஒரு நூறு பேர் மட்டும் வந்து அமர்ந்தார்கள். இறைவணக்கத்தின் பிறகு நான், சரவணன், சேந்தன், தேஜஸ்வினி, சீனா ஐயா ஐவரும் உணவு பரிமாறினோம். அவர்கள் விருப்பப்படி உணவு கிடைத்ததால் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்கள் உண்டார்கள் என்று உணர்ந்தோம். சிலருக்கு இரண்டாம் முறை கேட்டுப் பரிமாறினோம்.









பின்னர் நாங்கள் அனைவரும் அவர்களுடன் அமர்ந்து உண்டோம். நேரம் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அனைவரையும் அந்த அறையில் அமர வைத்துப் பரிமாறினால் வெகு நேரம் ஆகிவிடும்; அதனால் மாணவர்கள் வரிசையில் வர அவர்களுக்கு உணவை அவர்கள் தட்டில் தரலாம்; அவர்கள் அதனை வாங்கிக் கொண்டு வளாகத்தில் அவர்களுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து உண்டு கொள்ளலாம் என்று உணவைப் பரிமாற எங்களுக்கு உதவிய அப்பள்ளியின் ஆசிரியை ஒருவர் சொன்னதால், சரி அப்படியே செய்யுங்கள் என்று சொன்னோம்.

நாங்கள் உணவுண்டு வரும் போது கீழே வரிசையாக மாணவர்களும் முதல் மாடியில் வரிசையாக மாணவியர்களும் வந்து உணவைப் பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் மிக இயல்பாக நடந்து வந்து உணவைப் பெற்றுச் செல்வதால் அவர்கள் பார்வைக் குறை உடையவர்கள் என்பதே மறந்து போகிறது. தற்செயலாக சில மாணவர்களின் வழியில் நின்று கொண்டு அவர்களுடன் மோதிக் கொண்டேன். சில முறை இப்படி நடந்த பின்னர் தான் அவர்கள் பழக்கத்தால் அப்படி இயல்பாக நடக்கிறார்கள்; அதனால் புதியவரான நாம் தான் அவர்கள் பாதையில் இருந்து விலக வேண்டும்; அவர்கள் நாம் அங்கே இருப்பதை அறியார்கள் என்பது புரிந்தது. அவர்கள் பாதையில் இருந்து விலகி சிறிது தூரத்தில் வந்து நின்று கொண்டோம்.



மற்றவர்கள் படிக்கும் அதே பாடபுத்தகங்களைத் தான் இம்மாணவர்களும் படிக்கிறார்கள் என்று சரவணன் சொன்னார். அப்புத்தகங்களில் இருப்பதை ஒலிப்பதிவு செய்து அதனைக் கேட்டுக் கேட்டு இவர்கள் படிக்கிறார்கள் என்றும் சொன்னார். +2 தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள் என்றும் அவர்கள் பெயர்களுடன் மதிப்பெண் பட்டியலை அங்கே ஓரிடத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

மெய்யம்மை அம்மா அவர்கள் தேர்வெழுதும் போது அவர்களுக்குத் துணையாகச் சென்று அவர்கள் சொல்லச் சொல்ல எழுதிய அனுபவத்தைப் பற்றி சொன்னார். என் தம்பியும் அப்படி சென்று உதவியது உண்டென்றும் பாடங்களை ஒலிப்பதிவு செய்தும் தந்துள்ளார் என்றும் அழகர்கோவிலில் இப்பள்ளியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சொல்லியிருந்தார்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உணவு பெற்ற பின்னர் கல்லூரி மாணவர்கள் வந்து உணவு பெறத் தொடங்கினார்கள். அருகிலேயே காதக்கிணறு என்ற ஊரில் இருக்கும் தாய் தந்தையர் அற்ற ஆதரவற்ற சிறுவர்கள் வாழ்ந்து படிக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று சீனா ஐயாவிடம் சொல்லியிருந்ததால் அவர் அப்பள்ளி ஆசிரியரிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். அங்கே செல்ல நேரமாகிவிட்டதால் பார்வையற்றோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டோம்.





நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் தன் செலவிலேயே நடத்தும் இந்த ஆதரவற்ற சிறுவர்களின் பள்ளிக்குச் சென்றோம். அங்கே மாணவர்கள் எங்கள் வருகை எதிர்நோக்கி அமர்ந்திருந்தார்கள். சென்று சிறிது நேரம் அவர்களுடன் செலவழித்து பின்னொரு நாள் வருவதாகச் சொல்லி வந்தோம்.

இன்னும் சில உதவிகளை எங்கள் சார்பில் சீனா ஐயா செய்வதற்கு ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய பேருதவி மட்டும் இல்லையென்றால் இந்த உதவிகளை எல்லாம் இவ்வளவு குறுகிய காலத்தில் செய்திருக்க இயலாது. உதவி தர முன் வருபவர்களையும் உதவி வேண்டுபவர்களையும் இணைக்கும் இந்த நற்செயலை தனது பொன்னான நேரத்தை எல்லாம் செலவழித்துச் செய்யும் ஐயாவின் மனத்திற்கும் அம்மாவின் மனத்திற்கும் பல்லாயிரம் நன்றிகளைத் தெரிவித்தாலும் போதாது!

17 comments:

Unknown said...

உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல பணி செய்ய வாழ்த்துகிறேன்.

உங்களை விட சீனா ஐயாவுக்கு என் அனேக நமஸ்காரங்கள். வழிகாட்டிய கைகளுக்கு வணக்கம்.

இந்த முறை இந்தியா போனபோது ஒரு சின்ன விதை விதைத்திருக்கிறேன். இன்னும் பல செய்ய ஆசை, அடுத்த முறையாவது செய்யணும், பாக்கலாம்.

Unknown said...

பின்னூட்டம் தொடர...

Karthick Chidambaram said...

நீங்கள் பாராட்டுக்கு உரியவர். சீனா அய்யாவும்.
தொடரட்டும் உங்கள் நற்பணி.

பிரகாசம் said...

தாங்கள் செய்திருக்கும் பணி மிகவும் போற்றப்பட வேண்டியது. அவர்கள் இந்த நிலையிலும் ஆயிரம் மதிப்பெண்களுக்குமேல் பெற்றிருப்பது வியப்பாக உள்ளது.
தாங்கள் தெரிவித்துள்ளதுபோல் தக்கவர்களை இனங்கண்டு அவர்களுக்கு இதுபோன்ற உதவிகள் கிடைக்கச் செய்த அய்யா அவர்களுக்கு மிக்க நன்றிகள்

Mukil said...

குமரன் ஐயா,

என்ன சொல்றதுன்னே தெரியலங்க... கண்கள் கலங்கி நிற்கிறேன்! இப்பதிவின் துவக்கத்தில் சொல்லியவை சாட்டையடியைப் போன்று உரைத்தன.

உங்கள் மதுரை பயணத்தின் முழுக்கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்! அவை அனைத்தும் என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்துபவையாய் உள்ளன.

வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று காலத்தின் போக்கில் வாழ்கின்ற, என் போன்ற நம்பிக்கையற்ற, பிடிப்பற்ற ஈனர்க்கு உங்கள் வாழ்க்கை ஒரு தூண்டுகோலைத் தருகிறது.

நீங்களும் உங்கள் குடும்பத்தவரும் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்!

-முகிலரசி

cheena (சீனா) said...

அன்பின் குமரன்

அருமையான நாட்கள் - மனம் மகிழ்ந்த நாட்கள் - சிறிய அளவில் எங்களால் இயனறதைச் செய்து வந்தோம். - எங்களைத் தொடர்பு கொண்டு சில செயல்களைச் செய்ய வேண்டிய போது - மலைத்தோம் - நம்க்கிருக்கும் பணிச்சுமையில் செய்ய இயலுமா என. இருப்பினும் ஆரவத்துடன் ஏறபாடு செய்தோம். எங்கள் பங்கு அணிலின் மிகச் சிறிய பங்கு தான். இன்னும் செய்ய வேண்டியது இருக்கிறது. செய்து முடிப்போம்.

குமரன் குடும்பத்தார் எல்லா நலனும் பெற்று பெரு வாழ்வு வாழ - இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ - எல்லாம் வல்ல இறைவனின் கருணை என்றும் துணை இருக்க - பிரார்த்திக்கிறோம். நல்வாழ்த்துகள் குமரன்

நட்புடன் சீனா

சின்னப் பையன் said...

வாழ்த்துகள் அண்ணா.. மிகவும் நல்ல செயல்கள் செய்து வருகிறீர்கள்.. மிக்க மகிழ்ச்சி.

சீனா ஐயாவுக்கும் வாழ்த்துகள்..

கோவி.கண்ணன் said...

கலக்கல் நாள்தோறும் நல் நிகழ்வுகள், சேவைகள், நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் குமரன்.

மதுரை சரவணன் said...

அன்புக் குமரன் , அத்தருணங்களை உங்கள் எழுத்து கண் முன் கொண்டு வருகிறது. உங்கள் செயல் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம். உதவிகள் செய்ய பலர் இருப்பினும் , அது முறையாக செல்கிறதா...?என்ற அய்யப்பாடு அனைவருக்கும் உண்டு. அய்யா சீனா போன்றோர் இருக்கும் வரை அனைத்து உதவிகளும் சாத்தியம் ... அவருடன் பழகிய நாட்கள் குறைவு தான் இருப்பினும் , தன் அயராத பணியின் நடுவிலும் , அதிக கவ்னம் எடுத்து, பார்த்து, பார்த்து, உண்மையான முறையில் உதவிகள் நிறைவேற உழைப்பவர். இருவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் குடும்பத்துடன் நீண்ட ஆயுளைப் பெற்று பல்லாண்டு இன்பத்துடன் , செல்வச்செழிப்புடன் நலமாய் வாழ வாழ்த்துகிறேன்... தொடரட்டும் உங்கள் சேவை .

G.Ragavan said...

தாம் உண்பதென்ன
உடலில் உடுப்பதென்ன
உளங்குளிர நினைப்பதென்ன
மேனியைத் தீண்டுவதென்ன
தம்மைத் தாண்டுவதென்ன
எண்ணத்தைத் தூண்டுவதென்ன
என்று எதையும் காணாதவருக்குக்
கணிணி கொடுத்த பாங்கு சிறப்பு. ஆயிரம் கோயிலுக்கு அறம் செய்வதிலும் ஆயிரமாயிரம் மடங்கு உயர்ந்தது ஆதரவற்றவ சிறப்புத் திறனாளர்களுக்கு ஆதரவு செய்வது. இதற்குத் தரவு ஆண்டவன் அருளேட்டில் இருக்கும்.

கண்ணூறக் காணமுடியாத நிலையிலும் வாயூற உண்டது அவர்களுக்கு மகிழ்ச்சியையே உண்டாக்கியிருக்கும். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றார்கள். பிரியாணி இட்டவரை.... உளம்பிரியாமல் நினைக்க வேண்டுமோ!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

விட்டுப் போன பதிவுகளுக்கு எல்லாம் இதோ வந்து விட்டேன்!

கண் இழந்தார்க்கு ஒரு கை விளக்கு! - இந்த விளக்கு, அவர்களுக்கா? நமக்கா?

நமக்குத் தானே ஒளி தெரிகிறது! எனவே இந்த விளக்கு நமக்கே!
இது போல் இன்னும் ஒளி தொடர வேணும் என்பதற்கு நமக்கான ஒரு விளக்கு!

கை விளக்கை எங்களுக்குத் தந்தமைக்கு நன்றி குமரன்!

எல்லா விளக்கும் விளக்கல்ல, ஈத்துவக்கும்
நல்லா விளக்கே விளக்கு!

மார்கண்டேயன் said...

மதிப்பிற்குரிய குமரனுக்கு, உங்கள் சேவை தொடரட்டும்.

subha said...

brother, iam so happy to see you in such place. i cant find words to praise your generosity. god bless you and your family. your andal pasuram etc are simply superb. i feel proud to be a member of your family.how is your bangalore trip?
i will regularly see your blogs hereafter.

subhashini @ rani, coimbatore.

குமரன் (Kumaran) said...

Hi Rani maai, Felt surprised and happy to see your comments in my blog. Sorry for the delay in response. Bangalore trip was very busy with office work and visiting friends in the evenings. Reached Madurai yesterday. Few more days before leaving for Minneapolis.

Continue reading the posts in this blog.

குமரன் (Kumaran) said...

நீங்கள் விதைத்த விதை நன்கு முளைத்திருக்கும் என்று என்ணுகிறேன் கெக்கேபிக்குணி அக்கா. தொடர்ந்து இயன்றதை ஆந்தனையும் கைகாட்டுவோம்.

--
நன்றி கார்த்திக் சிதம்பரம்.

--

நன்றி பிரகாசம் ஐயா.

--

மகிழ்ச்சி முகிலரசி. நன்றிகளும்.

--

நன்றி சீனா ஐயா.

--

நன்றி ச்சின்னப் பையன் (தம்பி)! :-)

--

நன்றி கண்ணன்.

--

நன்றி சரவணன்.

--

நன்றி இராகவன்.

--

நீங்கள் சொல்றது சரி தான் இரவி. இன்னொரு விதமாகவும் சொல்லலாம். கண்ணிழந்தவர்கள் அவர்கள் இல்லை. சுற்றிலும் நடப்பவற்றைக் காணாமல் கண் மூடி இருக்கிறோமே நாம் தான் கண்ணிழந்தவர்கள்.

--

நன்றி மார்கண்டேயன். நானும் மார்கண்டேயன் தான் - மார்கண்டேய கோத்திரம். :)

Ravikumar Monni said...

கண் பார்வையற்றோருக்கு IT சிறந்த துறை என்பது என் எண்ணம். மின்னியாபொலிசில் கண் பார்வை இல்லாத என் பக்கத்துக்கு வீட்டுகாரர் Target-இல் IT-இல் வேலை செய்பவரே. Bestbuy-இலும் ஒரு கண் பார்வையற்றவர் உடன் பணியாற்றியுள்ளார். உங்கள் இடுகையைப் படித்தபின் மும்பையில் என் மேலாளராக இருந்த திரு.ராஜன் நினைவுக்கு வருகிறார். கண் பார்வையற்றோருக்கு உதவும் மென்பொருளை உருவாக்குவதில் மிகவும் முனைப்புடன் இருந்தவர் அவர். சமீகாலத்தில் தொடர்பில் இல்லாவிட்டாலும் அவருடன் தொடர்பு கொண்டு இந்த பள்ளிக்கு வேறு ஏதாவது செய்ய இயலுமா என்று முயற்சிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி ரவிகுமார். உங்கள் பக்கத்துவீட்டுக்காரரைப் பற்றி நீங்கள் ஏற்கனவே சொன்னது நினைவிருக்கிறது. உங்கள் முன்னாள் மேலாளர் திரு. ராஜன் போற்றுதலுக்குரியவர்.