கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி கதையா துளசியக்கா எழுதுற மாதிரி நாமளும் ஊர் சுத்துற கதையெல்லாம் எழுதிறனும்ன்னு நினைச்சா முடியுதா என்ன? பாருங்க நடுவுல கொஞ்சம் தொய்வு வந்திருச்சு.
அழகர் கோவில் போனதுல இருந்து எழுதுறதுக்கு நிறைய சேர்ந்திருச்சு. வான்கோழி தான்னு புரிஞ்சதால ரொம்ப விரிவா எழுதாம கொஞ்சமே கொஞ்சமா எல்லாத்தையும் இரண்டு இடுகையிலேயே சொல்லிட்டுப் போயிரலாம்ன்னு நினைக்கிறேன். துளசியக்கா எழுதுனா சுவையா இருக்கும். அப்படி எழுத வராதவன் சும்மா விரிவா எழுதுறேன்னு சொல்லி உங்களை போரடிக்கக்கூடாதுல்ல. :-)
போன இடுகையில சொன்ன மாதிரி பார்வையற்றோர் பள்ளிக்குப் போறப்ப அது அழகர் கோவில் போற வழியில இருக்குறதால அப்படியே குடும்பத்தோட அழகர் கோவிலுக்கும் போயிட்டு வந்தோம்.
அழகர் கோவில் போற வழியில காதக்கிணறுங்கற ஊருல தான் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளோட பிருந்தாவனக்/ஜீவசமாதிக் கோவில் இருக்கு. மார்கழி மிருகசீருஷ நட்சத்திரத்துல பிறந்த சுவாமிகள் இன்னொரு மார்கழியில முக்கோடி ஏகாதசிங்கற வைகுண்ட ஏகாதசியன்னைக்கு ஜீவசமாதி அடைஞ்சார். யானைமலை நரசிம்மசுவாமியைப் பார்த்தபடி, பரி மேல் வரும் அழகன் வைகையில் இறங்க வரும் வழியில் ஜீவசமாதி அடைஞ்சார்.
முதல்ல காதக்கிணறுல அந்தக் கோவிலுக்குப் போய் சுவாமிகளின் பிருந்தாவனத்தைத் தரிசனம் செஞ்சுட்டு, அப்படியே அதே கோவில்ல இருக்கிற ருக்மினி சத்யபாமா சமேத வேணுகோபாலசுவாமியையும் தரிசனம் செஞ்சோம். சின்னக் கோவில். அழகான கோவில். முன்பு (நான் சின்ன பையனாக இருந்த போது) சுவாமிகளோட பிருந்தாவனம் மட்டுமே இருந்தது. பிருந்தாவனத்து மேல வேணுகோபால சுவாமி மட்டும் இருந்தார். இப்ப சுவாமிகளின் பிருந்தாவனத்து மேல சுவாமிகளோட திருவுருவமும் தனிச்சன்னிதியில ருக்மினி சத்யபாமா உடனுறை வேணுகோபாலனும் இருக்காங்க.
அங்கே இருந்து நேரா அழகர் கோவில் தான். ஆடித் திருவிழா நடந்துக்கிட்டு இருந்துச்சு. கூட்டமோ கூட்டம். ஆனா தள்ளு முள்ளு இல்லை. வண்டி கட்டிக்கிட்டு வந்து இறங்கி அங்கே அங்கே சமையல் செஞ்சு கிராமத்து மக்கள் எல்லாம் சாப்புட்டுக்கிட்டு இருந்தாங்க. மக்கள் கூட்டம் அதிகமா இருந்ததால குரங்குகளை அவ்வளவா பாக்க முடியலை. ஓரமா ஒளிஞ்சிக்கிட்டு மக்களை உத்து உத்துப் பாத்துக்கிட்டு இருந்த குரங்குகளைக் கண்டுபிடிச்சுக் குழந்தைகளுக்குக் காட்டுனோம்.
பதினெட்டாம்படி கருப்பணசாமி முன்னாடி நல்ல கூட்டம். ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு சந்தனம் பூச ஆயத்தமாகிகிட்டு இருந்தாங்க. பதினெட்டாம்படி கருப்பரைக் கும்பிட்டுட்டு அங்கே குடுத்த துன்னூறைப் பூசிக்கிட்டு இருக்கிறப்ப பக்கத்துல ஒரு சலசலப்பு. என்னடான்னு பாத்தா ஒருத்தர் மேல கருப்பணசாமியோட ஆவேசம் வந்து ஆடிக்கிட்டு இருக்கார். அவர் உறுமுறதைப் பாத்து சில பொண்ணுங்க பயந்து பின்வாங்கிக்கிட்டு இருந்தாங்க. குழந்தைங்க அவங்க சித்தப்பாவோட சேர்ந்து குரங்குகளைப் பாக்கப் போயிட்டதால அவங்க இந்த சாமியாட்டத்தைப் பாக்கலை.
கோவில்லயும் நல்ல கூட்டம். ஆனா தள்ளுமுள்ளு இல்லை. அமைதியா வரிசையா போயி சாமி பாத்தாங்க. கொடிமரத்துக்கிட்ட கும்புட்டுட்டு மேலே மண்டபத்துல ஏறி அங்கே இருக்குற இசைத்தூண்கள்ல கொஞ்சம் தட்டித் தட்டிக் குழந்தைகளுக்குக் காட்டினேன். அப்புறம் நேரா போயி அழகர்கோவில் மூலவர் பரமசாமியைத் தரிசிச்சோம். அப்புறம் தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், சூடிக்கொடுத்த நாச்சியார் எல்லாரையும் பாத்துட்டு கொடிமரத்துக்கிட்ட வந்து ஒரு தோசை வாங்கினோம். அழகர் கோவில் தோசை ஒரு நொடியில தீர்ந்திருச்சு. இன்னும் எனக்கு ஆசை தீராததால இன்னொன்னும் வாங்கினேன். அதுவும் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா பிச்சுப் பிச்சுத் தின்னதுல ஒரு நொடியில காணாமப் போயிருச்சு. இன்னொன்னும் வாங்கி பாதியை மட்டும் பிச்சு மனைவிக்கிட்ட குடுத்துட்டு மீதியை எடுத்துக்கிட்டு அந்தப் பக்கமா தனியா போயி ஆசை தீரச் சாப்புட்டேன். அப்ப என் மனைவி சாபம் குடுத்துட்டாங்க போல. வீட்டுக்கு வந்த பின்னாடி வயித்து வலி வந்திருச்சு. (அப்புறமா சாப்புட்ட பிரியாணி தான் காரணம்ன்னு நான் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஆனால் அவங்க விடாப்பிடியா தனியா போயி சாப்புட்டீங்களே அந்த அழகர் கோவில் தோசை தான்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க). :-)
கோவிலுக்கு முன்னாடி கொய்யாப்பழம் வாங்கிக்கிட்டு அங்கே இருந்த திடீர் கடைகள்ல பொண்ணு வளையல், சங்கிலின்னு வாங்கிக்கிட்டு இருக்கிறப்ப கமுக்கமா பல்லாக்குல ஆடி அசைஞ்சு கள்ளழகர் வந்தாரு. அப்பத் தான் அவரை கோவிலுக்குள்ள பாக்கலைங்கறதே உறைச்சுச்சு. ஆடித்திருவிழாவுக்கு வந்தவங்களை எல்லாம் சுத்தி பாத்துட்டு வந்தாரு போல. வேக வேகமா ஓடி ஒளிஞ்சுக்கப் போன அவரை படமா புடிச்சு வச்சிக்கிட்டேன்.
அப்பா இறந்து இன்னும் ஒரு வருடம் முடியலைங்கறதால மலை மேல போயி பழமுதிர்சோலையானைப் பாக்க முடியலை. திருமாலிருஞ்சோலையானை மட்டும் பாத்துட்டு அங்கே இருந்து கிளம்பி சுந்தரராஜன்பட்டியில இருக்குற பார்வையற்றோர் பள்ளிக்கு வந்தோம்.
6 comments:
முருகன்-ன்னா அழகு!
அப்போ அழகர்-ன்னா முருகர்!
கள் அழகர் = கள் முருகர்!
கையில் குடத்தோட...கள்முருகன் சூப்பரா இருக்காரு படத்துல! :))
கள்முருகன் திருவடிகளே சரணம்!
மலைக்கு மேல போயி அந்த இடைச்சிறுவனைப் பாக்கலையேங்கற கவலை இருந்துச்சு. அந்த இடையன் இவன் தான்னா அந்த கவலையும் போச்சு! :-)
அருணகிரி ஒவ்வொரு பாட்டுல-யும் பெருமாளே-ன்னு முடிப்பாரு! அதுக்கு இந்த வைணவப் பயலுக என்னமா காலரைத் தூக்கி விட்டுக்கிட்டாங்க! இப்போ பாருங்க! எல்லாக் கள்ளழகர் பாசுரங்களையும், அழகோனே-க்குப் பதிலா முருகோனே-ன்னு முடிக்கிறேன்! அப்போ என்னா பண்ணுவாங்க? :)
//மலைக்கு மேல போயி அந்த இடைச்சிறுவனை//
என்னாது? என் காதலன் உங்களுக்குச் சிறுவனா? என் முருகன் எப்பவோ வயசுக்கு வந்துட்டான் தெரிஞ்சிக்கோங்க! :)
அவன் இடைச் சிறுவன் அல்ல! சிற்று இடையன்! இஞ்சி இடுப்பழகன்!
நீங்க "பழமுதிர்சோலையானைப்" பார்க்காமல் வந்துட்டீங்க!
ஆனால் நான் இனி மதுரை வரும்போதெல்லாம்.....
"பரங்குன்றத்தானைப்" பார்க்காமல் தான் வருவேன்! :(
ஒரு நல்ல நாள் அதுவுமா, துணை இருக்குமாறு, பரங்குன்றத்தானைத் தான் அனுப்பி வைச்சேன் ஒரு வருசத்துக்கு முன்னாடி! ஆனால் அவன் துணையாகச் செல்லாது தூங்கி விட்டான்! துணையாகப் போகாமல் வினை ஆகிப் போனான்!
தன் வைகாசி வசந்த விழாவில் களித்தவன்,
அன்பன் வசந்தத்தையே மறந்து போனான்!
வசந்தமே வறண்டு போனது, என் திருபபரங்குன்றா!
பரங்குன்றான் இனி வேணாம்! போ! போ!
பழமுதிர்சோலையானே எனக்குப் போதும்!
இகரமும் ஆகி, எவைகளும் ஆகி,
இனிமையும் ஆகி வருவோனே!!
இருநிலம் மீதில், எளியனும் வாழ,
எனது முன் ஓடி வர வேணும்!!
எனது முன் ஓடி வர வேணும்!!
சக கென சேகு, தகு திமி தோதி, திமி என ஆடும் மயிலோனே!!
திரு மலிவான "பழமுதிர் சோலை"
மலை மிசை மேவு பெருமாளே!!
என் மனம் மிசை மேவு பெருமாளே!!
அன்பின் குமரன்
அருமையான சுற்றுலா கட்டுரை - அழகான இடுகை - கள்ளழகர் தேடி வந்து பார்த்துச் சென்றாரோ ... பலெ பலே ! கொடுத்து வைத்தவரையா நீர்.
தோசையினல வயிறு வலிக்காது - வூட்ல சொல்லி வைக்கனூம். இருந்தாலும் பகிர்ந்து உண்ணுவது நன்று - என்ன பண்றது .... ஆசை யாரை விட்டது....
கேயாரெஸ் புல்லுல படுத்துக் கிட்டு சண்டை போடறாரே - பரங்குன்றத்தானிடம் .... இவர் வரலேன்னா அவன் வந்துட்டுப் போறான். அவ்ளோ தானே
சரி சரி - நல்வாழ்த்துகள் அனைவருக்கும்
நட்புடன் சீனா
Post a Comment