அன்றிரவு படுப்பதற்கு முன் அவன் மிகவும் சோகமாக இருந்தான்.
"சேந்தன். என்ன ஆச்சு?"
"நான் கவலையாக இருக்கிறேன்"
"ஏன்?"
"தம்பிகிட்ட பணம் இல்லை!"
சிரிப்பதா இல்லையா என்று தெரியவில்லை. திரைப்படத்தின் விளைவா, எங்கள் பேச்சுக்களின் விளைவா தெரியவில்லை. மூன்று வயதில் ‘பணம் இல்லை’ என்ற கவலை! அவனுடைய உண்டியலில் பணம் இருக்கிறதே என்று சொன்னவுடன் அவன் கவலை பறந்தோடிவிட்டது. :-)
இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? நாலடியாரில் ஒரு பாடலைப் படித்ததால் வந்த விளைவு!
'இல்லானை இல்லாளும் வேண்டாள்!' என்று ஒரு பழமொழி இருக்கிறது. பணம் இல்லாதவன் என்றால் மனைவியும் விரும்ப மாட்டாள் என்று பொருள். மேலே சொன்ன திரைப்படத்தின் கதை உண்மைக்கதை. அதில் பணம் இல்லாத கணவனை மனைவி பிரிந்து சென்று விடுகிறாள். திரைப்படம் முடியும் வரை அவள் திரும்பி கணவனிடம் வந்தாளா இல்லையா என்றே காட்டவில்லை. தேஜஸ்வினிக்கு அது பெரிய கேள்வியாக இருந்தது. கடைசியில் கதாநாயகன் பெரும் கோடீஸ்வரன் ஆகிறான் என்பதால் மனைவி திரும்பி வந்திருப்பாள் என்று சொன்னேன்.
பணம் இல்லாதவனைப் பிரிந்து மனைவியே செல்லும் போது விலை மகளிர் அவனைப் புறந்தள்ளுதல் இயல்பு தானே. அதனைத் தான் நாலடியார் கூறுகிறது. அக்காலத்தில் பரத்தையரிடம் செல்வது குமுகாயத்தில் (சமுதாயத்தில்) இயல்பான ஒன்றாக இருந்ததால் அதனை அழுத்திக் கூற வேண்டிய தேவை நாலடியாரின் ஆசிரியருக்கு இருந்தது போலும்.
அங்கண் விசும்பில் அமரர் தொழப்படும்
செங்கண் மால் ஆயினும் ஆக மன்! - தம் கைக்
கொடுப்பது ஒன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர் தம் கையால் தொழுது!
(நாலடியார் – பொருட்பால் - பொதுமகளிர் – 373)
விரிந்து பரந்த விண்ணுலகத்தில் வாழும் தேவர்களால் தொழப்படும் பெருமை பெற்ற, சிவந்த தாமரை போன்ற திருக்கண்களைப் பெற்று சிறந்த ஆண்மகன் - புருஷோத்தமன் - என்று பெயர் பெற்ற திருமாலே ஆனாலும் ஆகட்டும், தனது கையில் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லாதவரை கொய்து முகரத் தகுந்த இளந்தளிர் போன்ற மேனியை உடைய மகளிர் தம் கைகளால் வணங்கி விடை கொடுத்து அனுப்புவார்கள்!
பொது மகளிருக்கு எத்தகுதியும் பொருட்டில்லை; பொருளுடையவன் என்பது ஒன்றே தகுதி என்று வலியுறுத்துகிறது இந்தப் பாடல்.
விரிந்து பரந்தது அங்கண் மா ஞாலமாகிய இந்த உலகம்! அதனிலும் பெருமை உடையது அங்கண் விசும்பாகிய விண்ணுலகம்! அந்த விண்ணுலகில் வாழும் தேவர்கள் மனிதர்களால் வணங்கப்படும் பெருமை உடையவர்கள்! அந்த தேவர்களாலேயே வணங்கப்படும் பெருமை உடையவன் செங்கண் மால்! செங்கண் என்று இங்கே சொன்னது அவனது அழகான தாமரை போன்ற கண்களைக் கூறி அதன் மூலம் அவனது வடிவழகைக் குறிப்பாக உணர்த்த. அப்படி பெருமைக்கெல்லாம் சிறந்த பெருமை பெற்றிருந்தாலும் சரி; அழகுக்கெல்லாம் சிறந்த அழகு பெற்றிருந்தாலும் சரி - அவை எல்லாம் இளந்தளிர் போன்ற மென்மையான அழகான மேனியை உடைய பெண்களுக்கு ஒரு பொருட்டில்லை. கையில் காசு இல்லை என்றால் போயிட்டு வாங்க என்று கை தொழுது அனுப்பிவிடுவார்கள்.
இன்னொரு குறிப்பும் இந்தப் பாடலில் இருக்கிறது. பணம் இல்லாதவரைக் கடிந்து துரத்தவில்லை இந்தப் பொது மகளிர். பெருமையுடையவன்; அழகுடையவன் என்பதால் இனி வருங்காலத்தில் அவனிடம் பணம் இருக்க வாய்ப்புண்டு. அப்படி பணம் கிடைக்கும் போது அவனை அவர்கள் 'வருக வருக' என்று அழைப்பார்கள். இப்போது கடிந்து அனுப்பினால் பின்னர் பணம் வரும் போது பகையாக முடியும் என்று எண்ணி பணமில்லாத நேரத்தில் பணிவாகக் கை தொழுது திருப்பி அனுப்புகிறார்களாம்!
பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்று சும்மாவா சொன்னார் ஐயன்!
12 comments:
பணம் இல்லையென்றால் மனைவி மட்டுமல்ல சொந்தம் பந்தம் பிள்ளை குட்டிங்க எதுவுமே திரும்பி கூட
பார்க்க மாட்டாங்க!
என்றுமே நிரந்தரமான ஒரே பற்று ஸ்ரீமன் நாராயணன்
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடைவன் நாராயணன் .
நாராயணனிடம் பொருளோ சக்தியோ இல்லைஎன்றால் மக்கள் அவரை வணங்குவார்களா! இல்லையா
நாராயணிடம் பொருளோ சக்தியோ இல்லையென்றாலும் அவர் உத்தமர் உத்தமருக்கெல்லாம் உத்தமர்.
என்பதை எண்ணி அவரை பற்ற வேண்டும்.
பொருள் இல்லை என்பதால் வணங்கி விடை கொடுக்க கூடாது.
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே
---நம்மாழ்வார்
நம் மனங்களுக்கு நாம் சொல்லிக் கொள்ளும் நம்மாழ்வாரின் பாசுரம் மிகச்சரியே.
நாலடியார் பாடல் பெருமாளின் பெருமைக்கு எந்த விதத்திலும் குறைவு காட்டவில்லை. உயர்ந்த பொருளையே உவமையாகக் கூறுவார்கள் புலவர்கள். இங்கே மிக உயர்ந்தவரான பெருமாளை உவமையாகக் கூறி பொதுமகளிரின் தன்மையைக் குறித்திருக்கிறார் புலவர். அவ்வளவு தான்.
Who are in these b/w pics kumaran?
Were these pics put in the context of "pothu magaLir"? They dont look like the cinematic pothu magaLir. They look much grand and divine :)
சங்க நூல்கள் பொது மகளிரைப் பற்றி அதிகம் பேசுகின்றனவா, குமரன்? பொது மகளிரின் பணத்தாசை, பொருளாசையை இழித்துச் சொல்லும் இலக்கியங்கள், அவர்களிடம் செல்லும் "கனவான்களின்" ஆசையை மட்டும் சுட்டிக் காட்டி இழிக்காதது ஏனோ?
//பொது மகளிருக்கு எத்தகுதியும் பொருட்டில்லை; பொருளுடையவன் என்பது ஒன்றே தகுதி என்று வலியுறுத்துகிறது இந்தப் பாடல்//
பொது மகளிரிடம் செல்பவருக்கு எத்தகுதியும் பொருட்டில்லை! தங்கள் ஆசையைத் தணிப்பவர்கள் என்பது ஒன்றே "தகுதி" என்றல்லவா சொல்ல வேண்டும்!
எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்?
நுகர்வோன் இருக்க நுகர் பொருளைப் பழிப்பான் ஏன்?
//சேந்தன். என்ன ஆச்சு?"
"நான் கவலையாக இருக்கிறேன்"
"ஏன்?"
"தம்பிகிட்ட பணம் இல்லை!"//
ஹா ஹா ஹா! சேந்தனின் கவலை நியாயமான கவலை!
முருகா! பச்சப் புள்ளையப் போயி கவலைப்பட வச்சிட்டியேப்பா!
சரி பரவாயில்லை! இனியாச்சும் குமரனை ஒழுங்கா வேளா வேளைக்குப் பாக்கெட் மணி கொடுக்கச் சொல்லு! அப்போ தான் உன் பாட்டெல்லாம் முருகனருளில் போடுவேன், சொல்லிட்டேன்!
நல்ல கேள்விகள் தான் இரவி. It is a vicious cycle. விழைபவர் இருப்பதால் விலைமாதர் இருக்கிறார்கள்; விலைமாதர் இருப்பதால் விழைபவர் இருக்கிறார்கள். :-(
படத்தில் இருப்பவர்கள் ஆடல் மகளிர். ஆடல் மகளிர் அனைவரும் பொது மகளிர் இல்லை; பொது மகளிர் அனைவரும் ஆடல் மகளிர் இல்லை. பழைய கால பொது மகளிர் படங்கள் கிடைக்காததால் (இன்னும் தேடினால் கிடைக்கலாம்) கிடைத்த இந்தப் படங்களில் இரண்டை இட்டேன்.
பொது மகளிர் தெய்வீகத் தோற்றத்துடன் இருப்பார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது இரவி. உங்களுக்குத் தெரியும் போலிருக்கிறதே! :-)
0! iam sorry பொது மகளிர் means விலைமாதர்!!!
intially i think & tention -- பொது மகளிர் means all ladies
now only i realize .. thanks krs.
//சரி பரவாயில்லை! இனியாச்சும் குமரனை ஒழுங்கா வேளா வேளைக்குப் பாக்கெட் மணி கொடுக்கச் சொல்லு! அப்போ தான் உன் பாட்டெல்லாம் முருகனருளில் போடுவேன், சொல்லிட்டேன்!//
intha vaaram murugan aruL-la innum paattu pOdala...pocket money chEnthanukku koduthaacha-nu confirm cheyyaNdi...appRam murugan aruL-la, me song putting :)
You told that to Murugan! He will confirm! or Not! It is between you and Him. :-)
If kumaran has muruga paasam, he wud rush to make murugan songs to continue and wud not wait until word of mouth! That wazz He told me and joyfully waiting to see :-)
Now its upto kumaran to conform & confirm :)
Confirmed. Chenden has his own big fat biggy bank half full...
:)
cheri darling muruga...kumaran conformed to our specs :)
naan un paattai murugan aruL-la puttings okay? :)
chEnthan pugazh vaazhga! :)
Post a Comment