'இப்படி ஒரு தருமசங்கடம் வரும் என்று வெகு நாட்களாகவே தெரியும். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் பதிமூன்று வருடங்களாகத் தெரியும்.
துரியோதனனின் குணம் தெரிந்தது தானே. பதிமூன்றாம் வருடத்தில் எப்படியாவது சிற்றப்பன் மக்களைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்; இல்லையேல் சண்டையிட்டு அவர்களைக் கொல்ல வேண்டும் என்பது தானே அவனது திட்டம்.
குருபிதாமஹர் ஏதாவது செய்து சமாதானம் செய்துவைப்பார் என்று ஓரத்தில் ஒரு நப்பாசை இருந்தது. விதி வாயை மூடி வைத்ததா தானே மூடினாரா தெரியவில்லை. பெரியவர் பேச வேண்டிய நேரங்களில் எல்லாம் பேசாமல் வாய் மூடி மௌனமாக இருந்துவிடுகிறார். செய்தக்க அல்லது செயக் கெடும் செய்தக்க செய்யாமையாலும் கெடும் என்று அவருக்கு யாரும் சொல்லவில்லை போலும். அவருக்கு என்ன தருமசங்கடமோ?
நம் மைத்துனர் என்ன முடிவு செய்தாரோ தெரியவில்லை. நம்மைப் போல் தானே அவரும். அவர் செய்யும் முடிவையே நாமும் பின்பற்றலாமோ? இந்தத் துரோணன் எல்லா நேரங்களிலும் மைத்துனனையே பின்பற்றுகிறான் என்ற கெட்டபெயர் வந்துவிடுமோ?
பச்சைக் குழந்தைக்குப் பால் வாங்கித் தர இயலாமல் துருபதனிடம் அவமானப்பட்டு கிருபர் கையைத் தானே எதிர்பார்த்து வந்தேன். வந்த இடத்தில் நல்ல வேளை கிருபரைப் பார்ப்பதற்கு முன்னரே இளவரசர்களின் பந்து கிணற்றில் விழுந்து என்னைக் காப்பாற்றியது. இளவரசர்கள் மூலம் செய்தி அறிந்து குருபிதாமஹரே நம்மை அழைத்து அவர்களுக்கு ஆசிரியர் ஆக்கினார். கிருபரின் கையை எதிர் நோக்காமல் அவருக்கு இணையான ஆசிரியராக ஆகி வரவிருந்த அவமானம் வராமல் போனது. அப்போதிலிருந்து ஏறு முகம் தான். குரு குல இளவல்களின் ஆசிரியர் என்றால் என் பெயரைத் தான் முதலில் சொல்கிறார்கள். அவர் பெயர் மறந்தே போய்விட்டது.
இந்த நிலையில் நாமாக ஒரு முடிவு எடுத்தால் தான் நல்லது. பீஷ்மரும் கிருபரும் என்ன முடிவு வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நமக்கென்ன?
விதுரர் பாடு பாவம். அரசவையில் அவமானப்பட்டு வில்லை ஒடித்துவிட்டுச் சென்றுவிட்டார். அதுவும் ஒரு வகையில் நல்லதாக போனது அவருக்கு. எனக்கு இருக்கும் குழப்பம் இல்லையே அவருக்கு.
இதோ போர் மூண்டுவிட்டது. யார் பக்கம் நாம் நிற்பது? எனக்குப் பிரியமான அருச்சுனன் பக்கமா? நூற்றுவர் பக்கமா? அருச்சுனன் அந்தப் பக்கத்தில் இருப்பதால் ஐவர் படையில் தான் நாம் இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது. ஆனால் ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறதே? என்ன அது?
உண்மையில் துரியோதனனின் மேல் தான் எனக்கு அன்பு அதிகமோ? அதனால் தான் ஐவர் பக்கம் நிற்பதை அது தடுக்கிறதோ? இல்லையே! முக்குணங்களைப் போல் ஆடை அணிந்து வரும் கர்ண துரியோதன சகுனியரைக் கண்டாலே கண் எரிகிறதே! பின் எது தடுக்கிறது?
வீடுமரோ? அதுவும் இல்லை. மற்றவரைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை; அவருடைய கடமைகளும் சபதங்களுமே அவருக்கு முக்கியம். அவருக்காக மற்றவரும் கவலைப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. அதனால் தடுப்பது பீஷ்மரும் இல்லை.
பின் எது?
ஓ தெரிந்தது தெரிந்தது. துருபதன்!
நண்பன் பகையானால் எவ்வளவு பெரிய கொடுமை! அப்பப்பா! அது தான் நம்மைத் தடுக்கிறது!
என்ன தான் துருபதனை நாம் பழி தீர்த்தாலும் என்னைக் கொல்லவே அவன் பெற்ற மகனுக்கு வில் வித்தை சொல்லித் தந்தாலும் நம் மனத்திலும் அந்தப் பகை தீரவில்லை; துருபதன் மனத்திலும் தீரவில்லை.
மகளை பார்த்தனுக்கு மணமுடித்து ஐவரின் சம்பந்தி ஆகிவிட்டான் அவன். எப்படியும் பாண்டவர் பக்கம் நின்று அவன் போரிட முனைவான். நானும் பாண்டவர் பக்கம் சென்றால் அவனுக்குப் பெரிய தருமசங்கடம் ஆகிவிடும். தயங்குவான்.
அவன் தயங்கினால் அவன் மகன் தயங்குவான். அவன் மகன் தயங்கினால் என் விதி எப்படி முடிவது?
துருபதனும் திருட்டதுய்மனும் சம்பந்திகளை எதிர்த்து கௌரவர் பக்கமும் நின்று போரிட மாட்டார்கள்.
அது தான் சரி. நாம் நூற்றுவர் பக்கமே நிற்போம். அப்படி செய்தால் தான் துருபதனின் பெரும் உதவி பாண்டவர்களுக்குக் கிட்டும். நாம் எதிர்பக்கம் நின்றாலும் என்னைக் கொல்வதற்கே பிறந்தவன் அவர்கள் பக்கம் நிற்பான். என்னைக் கொல்வான். நான் நூற்றுவர் பக்கம் நிற்பதே பாண்டவர்களுக்கு உதவியாகும்! அப்படியே செய்கிறேன்!
அருச்சுனா! உன் பெயர் இருக்கும் வரை என் பெயரும் இருக்கும்! அதற்கு நீ வெற்றி பெற வேண்டும்! அதற்கு நான் உன் எதிரியாக நின்று அழிய வேண்டும்! இதுவே விதி!’
Pictures Courtesy: http://netra-creative-vision.blogspot.com/
7 comments:
:)
இது என்ன துரோணரின் மனச்சாட்சிப் பதிவா?
//வீடுமரோ? அதுவும் இல்லை. மற்றவரைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை; அவருடைய கடமைகளும் சபதங்களுமே அவருக்கு முக்கியம்//
:)
ராதா, இக்கட ஒச்சி, ஈ வசனமுலு சூடண்டி! :)
செல்லாது செல்லாது...
அஸ்வதாமன்-துரோணர் கூட்டணி பாண்டவர் பக்கம் இருந்தால் திட்டதூய்மனாவது துருபதனாவது. அஸ்வதாமனை விட்டுவிட்டு துரோணர் சிந்திப்பாரா?
தோல்வி கிடைக்கும் கூட்டணியில் தன் மகனை விட நிச்சயம் துரோணர் விரும்ப மாட்டார். அவருடைய பிள்ளை பாசம் உலகம் அறியும்.
அஸ்வதாமன் பாண்டவர் கூட்டணியில் இருந்தால் அவனை வெல்ல கௌரவர் படையில் பிதாமகரைத் தவிர வேறு யாரும் கிடையாது.
இதனால இந்த கதை செல்லாது. செல்லாது.. செல்லாது :-)
துரோணரின் அருச்சுன பாசம் அவ்வளவு பெரிதாக இருக்கிறதே பாலாஜி! என்ன செய்வது?
என்ன தான் மகன் இறந்தான் என்பதைத் தாங்க முடியாமல் துரோணர் இறந்தார் என்று சொன்னாலும் துருவிப் பார்த்தால் அருச்சுன பாசம் தான் அவரை வென்றிருக்கிறது என்று தெரிகிறது! அவரது அருச்சுன பாசத்தால் அழிந்தவர்கள் மூவர்! முதலில் ஏகலவ்யன் (ஏகலைவன்)! பிறப்பில் பெருமை இல்லை என்று சொல்லி அவனை அழித்தார்! இரண்டாவது கர்ணன்! பிறப்பின் இரகசியம் தெரியாது என்று சொல்லி அவனை ஒதுக்கி பரசுராமரிடம் அவன் பொய் சொல்லும்படியான ஒரு நிலையை உருவாக்கி அவனை அழித்தார்! மூன்றாவது தன் சொந்த மகனான அசுவத்தாமனையே அழித்தார்!
முதல் இருவரின் குமுறல்களை நாம் நிறைய கேட்டுவிட்டோம். அசுவத்தாமனின் குமுறல் இப்போது தான் என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நாளில் உங்கள் காதுகளிலும் ஒலிக்கும் என்று நினைக்கிறேன்!
அவர் இப்படி யோசிச்சுருப்பாருன்னு எனக்குத் தோணல்லை குமரன்....
மௌலி. அவர் அப்படி சிந்திச்சிருப்பாருன்னு எல்லோருக்கும் தோணியிருந்தா நிறைய பேரு எழுதியிருப்பாங்களே. வியாசரே எழுதியிருப்பாரே! :-)
நடந்தது தர்மயுத்தம் அல்லவா அவ்வகையில் செயல்புரிந்தது அவர் அல்ல
அஸ்வதாமன் சிரஞ்சீவி மேலும் ஏகலைவன் கிருஷ்ணரின் கையால் மடிந்து திருட்டத்துய்மனாய் வந்தான்
துரோணரின் தவறுகளுக்கு முக்கிய காரணம் பிள்ளைப்பாசமே
மேலும் ஏகலைவனுக்கு இழைத்தது கொடும்பாவமல்லவா
ஆதலால் தான் அஸ்வதாமனை காரணமாய் கொண்டு முற்பிறப்பில் துரோணரிடம் கல்வி கற்கவில்லை என்றாலும் இப்பிறப்பில் அவரிடமே கற்று அவரை கொன்றான் ஏகலைவன்
Post a Comment