Sunday, June 20, 2010

மடப்பயலா நீ முருகா?


சங்கப்புலவர் பிரமசாரி பாடிய பாடல் ஒன்று முருகனை நோக்கி மடவனா நீ என்று கேட்கிறது. இப்பாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 34வது பாடலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

தலைவனின் பிரிவால் பசலை நோய் கொண்டு வருந்தி நிற்கும் தலைவியைக் கண்டு அவள் தாய் அதனை புரிந்து கொள்ளாது, முருகனை வணங்கும் வேலன் வெறியாடலை நிகழ்த்தினால் தலைவியின் நோய் நீங்கும் என்று நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள். அதனைக் கண்ட தோழி முருகனை நோக்கி உரைப்பதைப் போல் பேசி தலைவியின் உண்மை நிலையைக் குறிப்பால் தாய் அறியும் படி செய்கிறாள்.

மானிடர் யாராலும் அணிவதற்குப் பறிக்கப்படாமல் நிறைய பூத்து நிற்கும் குவளை மலரொடு, குருதியைப் போல் சிவந்த காந்தள் மலர் ஒன்று சேரக் கட்டி, தேவ மகளிர் இசையுடன் ஆடும் மலையை உடைய நாடனின் மார்பை தழுவியதால் தோன்றிய நோய் இந்நோய் என்பதை அறியாத மூடர்களாக வெறியாடலுக்கு ஏற்பாடு செய்த தாயும் வெறியாடலை நிகழ்த்த வந்த பூசாரியான வேலனும் இருக்கலாம். ஆனால் உண்மையை அறிந்த கடவுளான நீயும் அந்த வெறியாடலை ஏற்க வரலாமா முருகா? அப்படி நீ வந்தால் நீ மடப்பயலே!

சரி தானே?! அறியா மானிடர் வெறியாடலை நிகழ்த்தலாம்! எல்லாம் அறிந்த கடவுளும் அதனை ஏற்க வரலாமா? அப்படி வந்தால் அவன் மடவன் தானே?!

இதோ அந்த நற்றிணைப்பாடல்.

கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டி
பெருவரை அடுக்கப் பொற்பச் சூர்மகள்
அருவி இன்னியத்து ஆடு நாடன்
மார்பு தர வந்த படர் மலி அருநோய்
நின் அணங்கு அன்மை அறிந்து அண்ணாந்து
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே!

பாடலின் நிரல்வரிசையிலேயே பொருளைப் பார்ப்போமா?

கடவுள் தன்மை பொருந்திய மலையிலுள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த கொய்யாமல் விடப்பட்டிருக்கும் குவளை மலரைப் பறித்து, அவற்றோடு குருதி போன்ற காந்தளின் ஒளிவீசும் பூக்களை அழகுடன் கட்டி, அதனைச் சூடி, பெரிய மலையின் பக்கங்களெல்லாம் பொலிவு பெற தேவ மகள் அங்கே விழும் அருவியின் இசையையே இன்னிசையாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டை உடையவனின் மார்பைத் தழுவியதால் அந்த மார்பு தர வந்த நோய் இந்த படர்ந்து மலிந்த பசலை நோய். இது உன் அணங்கால் வந்தது இல்லை என்று நீ அறிந்திருந்தும் மிகப் பெருமையுடன் தலை நிமிர்ந்து கார்காலத்தில் மலர்கின்ற நறுமணம் வீசும் கடம்ப மாலையை சூடி, பூசாரியான வேலன் வேண்ட வெறியாடும் இடத்திற்கு வந்தாய்! உண்மையை அறிந்திருந்தும் இப்படி வந்தாயே! கடவுள் ஆனாலும் ஆகட்டும் நீ மடவனே! வாழ்ந்து போவாய் முருகனே!

கடவுள் சுனையில் மலர்ந்த மலர் ஆதலால் மானிடர் யாரும் குவளையைப் பறிப்பதில்லை. ஆனால் அந்த மலையில் வாழும் தேவ மகளில் அவற்றைப் பறித்துச் சூடிக் கொள்கிறார்கள். மானிடர்கள் தேவ மகளுக்காக அம்மலர்களைப் பறித்து தேவ மகளிரின் சிலைகளுக்குச் சூடி வழிபட்டார்கள் என்று சொன்னாலும் பொருந்தும்.

இந்தப் பாடலின் கருத்து அப்படியே சிலப்பதிகாரத்தின் குன்றக்குரவையிலும் வருகின்றது வியப்பு.

இறை வளை நல்லாய் இது நகையாகின்றே
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்றன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள்

ஆய் வளை நல்லாய் இது நகையாகின்றே
மாமலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வருமாயின் வேலன் மடவன் அவனில்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன்

செறி வளைக் கை நல்லாய் இது நகையாகின்றே
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வேலன் மடவன் அவனினும் தான் மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்

நேரிழை நல்லாய் நகையா மலை நாடன்
மார்பு தரு வெந்நோய் தீர்க்க வரும் வேலன்
தீர்க்க வரும் வேலன் தன்னினும் தான் மடவன்
கார்க்கடப்பந்தார் எம் கடவுள் வருமாயின்...


கடவுளே ஆயினும் பொருத்தமில்லாத காரியத்தைச் செய்தால் அவனை மடவன் என்று விளித்தல் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது போலும்! வாழிய முருகே!

9 comments:

மதுரையம்பதி said...

மீள் பதிவெல்லாம் முடிந்ததா குமரன்? :)

மதுரையம்பதி said...

வித்யாசமானவற்றை எப்படித்தான் தேடிப் பிடித்துத் தருகிறீர்களோ!....அருமை குமரன். நன்றி.

குமரன் (Kumaran) said...

'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவிலிருந்து இங்கே மாற்ற வேண்டியவற்றை மீள்பதிவாகப் போட்டுவிட்டேன் மௌலி. வேறு ஏதெனும் பதிவை இப்படி கூடலுக்குக் கொண்டு வரும் நாள் வரை மீள்பதிவுகள் இல்லை. :-)

எங்காவது ஏதாவது கட்டுரைகளைப் படிக்கும் போது இப்படிப்பட்ட குறிப்புகள் கிடைக்கும்; அதனைக் குறித்து வைத்துக் கொள்வேன். நேரம் கிடைக்கும் போது விரித்து பதிவில் எழுதுகிறேன். இந்தப் பாடலைப் பற்றிய குறிப்பைக் கண்டது மே 2009ல். எழுத இப்போது தான் வாய்ப்பு கிட்டியது. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

hey, my murugan is madavan! madaiyan! kodiyan! :)

மடவன் x மடவள்

விறலியை (பாடிக் கொண்டே ஆடுவாளை) மடவள்-ன்னும் சொல்வதுண்டு! அப்போ மடவன்? :)

டேய் மட(வ)ப் பய முருவா, சொல்லுறா! :)

குமரன் (Kumaran) said...

Oh...Murugan is Madavan? I thought Kannan is Madhavan, and no one else. :-)

Hey Maddy Muruga! How are you?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Oh...Murugan is Madavan? I thought Kannan is Madhavan, and no one else. :-)//

kannan is mad"h"avan!
murugan is madavan!
take the case of ragavan-raghavan; same here! :)

btw madavaL=viRali means, madavan=singer/dancer right? esc aavaama, athai chollunga mothal-la!

குமரன் (Kumaran) said...

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இந்நான்கும் பெண்களின் நாற்படைகள். இதில் வரும் மடம் என்ற குணம் மிகுந்தவள் மடவள்.

என் மனைவி ஒரு பெண்; பெண்கள் எல்லோரும் என் மனைவியர் இல்லை. அது போல் அந்த விறலி ஒரு மடவள்; மடமெனும் குணம் கொண்டவர்கள் எல்லோரும் விறலியரோ/பாடகரோ/ஆடுபவரோ இல்லை! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அது போல் அந்த விறலி ஒரு மடவள்; மடமெனும் குணம் கொண்டவர்கள் எல்லோரும் விறலியரோ/பாடகரோ/ஆடுபவரோ இல்லை! :-)//


1. மடவள் maṭavaḷ : (page 3021)
விறலி (புறநா. 89). 2. Woman; பெண். மடவர னோக்கம் (குறள், 1085).

குமரன் (Kumaran) said...

இந்தப் பொருள் எங்கே இருந்து எடுத்துப் போட்டீங்கன்னு தெரியலை இரவி. ஆனா ஏதோ ஒரு அகரமுதலியில இருந்துன்னு தோணுது. மடவளுக்கு அது தான் ஒரே பொருள்ன்னும் நீங்க நினைக்கிற மாதிரி இருக்கு. மடவள் விறலிங்கறதால மடவன்னா விறலிக்கு ஆண்பால் எதுவோ அது தான் பொருள்ன்னு நினைக்கிற மாதிரியும் இருக்கு. எனக்குப் புரிஞ்ச பொருள்ல இந்த சங்கப் பாடலுக்குப் பொருள் சொல்லியிருக்கேன். நீங்க நினைக்கிற பொருள்ல இந்த சங்கப் பாடலுக்கு என்ன பொருள்ன்னு சொல்லுங்க. :-)