Tuesday, March 23, 2010

நாலடியார் போற்றும் கால் நிலம் தோயாக் கடவுள்!

நாலடியார் என்ற சங்க கால நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் சமண முனிவர் இயற்றியது என்ற குறிப்புடன் இருக்கிறது. அபியுத்தர், பதுமனார் என்று இரண்டு பேர்களில் ஒருவர் (அல்லது ஒரே புலவரின் இரு பெயர்களாகவும் இருக்கலாம்) இந்தப் பாடலை எழுதியவராக உரையாசிரியர்களால் குறிக்கப்படுகிறார்கள்.

வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்
கானிலம் தோயாக் கடவுளை - யானிலம்
சென்னியுற வணங்கிச் சேர்துமெம் உள்ளத்து
முன்னியவை முடிக என்று.

வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால்
கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம்
சென்னி உற வணங்கிச் சேர்தும் எம் உள்ளத்து
முன்னியவை முடிக என்று.


வான் என்ற சொல் இங்கே மேகத்தைக் குறித்தது. வான் இடு வில் - மேகத்தால் உண்டாகும் வானவில்/இந்திரவில். வானவில் எப்போது தோன்றும் என்பது சொல்ல இயலாது. இன்றைய அறிவியலும் இந்த இந்த சூழல்கள் இருந்தால் வானவில் 'தோன்றலாம்' என்று சொல்கிறதே ஒழிய வானவில் தோன்றுவதற்கான காரணிகள் அனைத்தையும் சொல்லி அக்காரணிகள் இருக்கும் பொழுதில் கட்டாயம் வானவில் தோன்றும் என்று அறுதியிடவில்லை; இனி வருங்காலத்தில் அறிவியல் அந்நிலையை அடையலாம். இவையெல்லாம் தெரியாத சங்க காலத்தில், கண்ட காட்சியையும் உய்த்துணர்ந்த அறிவையும் பெரியோர் பொய்யாமொழிகளையும் சான்றாகக் கொண்ட அக்காலத்தில், வான் இடு வில்லின் வரவு அறிய முடியாததாக இருந்தது!

வான் இடு வில்லின் வரவு அறிய முடியாத வாய்மையை எடுத்துக் காட்டாகக் கூறி அதே போல் தான் இவ்வுலகில் நிகழும் அனைத்துமே என்று புலவர் உணர்த்துவதைப் போல் இருக்கிறது. இது ஊழ் (ஊழ்வினை என்று இன்றைக்கு நாம் சொல்லும் நல்வினைத் தீவினைப் பயன்கள் இல்லை; ஊழ் - நியதி; உலகில் நிகழ்வன அனைத்தும் ஒரு நியதியின் படியே நடப்பதாகச் சொல்லும் தத்துவம். வடநூலார் அதனை ரிதம் என்றும் சொல்வார்கள்) என்னும் தத்துவக் கருத்தினை மறுப்பது போல் தோன்றுகிறது. ஆனால் ஊழின் படியே அனைத்தும், வானவில்லின் வருகையும் நிகழ்கிறது; ஆனால் அதனை அறியும் அறிவு நமக்கில்லை என்று சொல்வதாகக் கொண்டால் ஊழ்/நியதி என்ற தத்துவக் கருத்தை மறுப்பதாகக் கொள்ள வேண்டியதில்லை!

'வான் இடு வில்லின் வரவு அறிய முடியாத வாய்மையைப் போல் எம் உள்ளத்தே நாங்கள் நினைத்தவையும் நிகழும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையும் எமக்கு இருக்கிறது. அதனால் கால் நிலத்தில் படியாத கடவுளை எம் தலை (சென்னி) நிலம் சேரும்படி தலை தாழ்ந்து வணங்கிப் போற்றுவோம்' என்கிறார் புலவர்.

அனைத்தும் கடந்து உள்ளே இருப்பதால் இறைக்குக் கடவுள் என்ற பெயர் சொன்னார்கள் புலவர்கள். தேவர்களின் கால்கள் நிலத்தில் படியாது என்பது இந்திய சமயங்களின் கருத்து. அதனைத் தான் இங்கே குறிக்கிறார் போலும் புலவர். வான் இடு வில்லின் வரவு என்பது முன்னியவைகள் முடிவதற்கு ஆன எடுத்துக்காட்டாகக் கொள்ளாமல், கால் நிலம் தோயாக் கடவுளின் வரவாகக் கொண்டால் அவதாரம் என்ற கருத்து இங்கே சொல்லப்படுகிறதோ என்று தோன்றுகிறது. கால் நிலம் தோயாக் கடவுள் நிலத்தில் கால் தோயும் படி பிறப்பெடுத்து வருவதன் காரணம் நம்மால் அறிய இயலாது - வான் இடு வில்லின் வரவு அறிய முடியாத உண்மையைப் போல். அதனால் எம் உள்ளத்தில் முன்னியவை முடிக என்று அவன் தாளை வணங்குவோம் என்று சொல்வதாகக் கொள்ளலாம்.

கடவுளின் கால்கள் நிலத்தில் தோயாமல் இருக்கலாம்; ஆனால் எங்கள் தலைகள் நிலத்தில் உறும் படி வணங்குவோம் என்று கூறியது இறையின் உயர்வினையும் வணங்குபவனின் தாழ்வினையும் மிக்க நயத்துடன் குறித்ததாகக் கொள்ளலாம்.

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது இப்போதைக்கு அப்போது இட்டதா?
இல்லை இப்போதைக்கு இப்போது இட்டதா?
:)

cheena (சீனா) said...

அன்பின் குமரன்

இறையின் காலடிகள் நிலத்தில் பதிகிறதோ இல்லையோ - எங்கள் தலை நிலத்தில் பதிந்து - தாழ்மையுடன் வணங்குவோம்


நல்வாழ்த்துகள் குமரன்

குமரன் (Kumaran) said...

எப்'போதை'யும் எப்போதும் இல்லை இரவி! பக்தி போதை உட்பட! :-)

நேற்று பேருந்தில் வீட்டிற்கு வரும் போது வேலை செய்ய பிடிக்கவில்லை! அந்த நேரத்தில் இதனை எழுதினேன். சிறிய பாடல் என்பதால் அந்த 40 நிமிடங்களிலேயே எழுதி முடித்துவிட்டேன். வீட்டிற்கு வந்தவுடன் இட்டேன்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் சீனா ஐயா. தங்களுக்கும் நல்வாழ்த்துகள் ஐயா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எப்'போதை'யும் எப்போதும் இல்லை இரவி! பக்தி போதை உட்பட! :-)//

பக்தி போதை-ன்னா என்ன குமரன்? :)
அப்பறம் ஞான போதை, கர்ம போதை அப்படின்னா என்னன்னும் சொல்லுங்க !:)

//அனைத்தும் கடந்து உள்ளே இருப்பதால் இறைக்குக் கடவுள் என்ற பெயர் சொன்னார்கள் புலவர்கள்//

அனைத்தும் கடந்து
எதற்கு உள்ளே இருக்கிறான்?

//கால் நிலம் தோயாக் கடவுளின் வரவாகக் கொண்டால் அவதாரம் என்ற கருத்து இங்கே சொல்லப்படுகிறதோ என்று தோன்றுகிறது.//

செல்லாது! செல்லாது!
இது பதுமனார் aka சமண முனிவர் பாட்டு!
நைசா அவதாரம்-ன்னு எல்லாம் அவதாரம் எடுக்காதீங்க-ன்னு ரகுகுலத்தினியான் என் கிட்ட சொல்றான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

* வண்டு ஒலிக்காத மாலை வாடாமையும்,
* கண் இமையாமையும் (இமையோர்)
* கானிலந் தோயாமையும்,
தேவர்க்கு உரிய குணங்கள் என்று சங்க இலக்கியம் பல இடங்களில் பேசும்!

மனிதர்களுக்குத் தோயும்!
தேவர்களுக்குத் தோயாது!
அசுரர்களுக்கு எப்படி குமரன்?

பூத கணங்களுக்குக் கால் தோய்ந்ததாக, பெரிய புராணம் சொல்லும்! சுந்தரரை மீண்டும் கயிலைக்கு அழைத்து வர திருவஞ்சைக்களம் வந்த போது, கால்கள் நிலம் தீண்டின!

தேன் அலம்பு தண்சோலை சூழ்
திருவஞ்சைக் களம் சேர
கால் நிலங்கொள வலங்கொண்டு
மேவினார் கடிமதில் திருவாயில்

குமரன் (Kumaran) said...

பூதகணங்களுக்கும் கால் தோயாதோ என்னவோ? அவை மண்ணுலகத்திற்கு வந்ததால கால் தோய வேண்டியிருந்ததோ என்னவோ?!