Saturday, March 13, 2010

இன்பத்துப் பால்: குறிப்பறிதல் - 2

உறாஅ தவர் போல் சொலினும் செறா அர்சொல்
ஒல்லை உணரப் படும்

காதலர் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலை மறைத்துக் கொண்டு, காதல் இல்லாதவர் போல் நடித்து அயலார் போல் சினத்துடன் பேசினாலும் அவர்கள் கொண்டிருக்கும் காதல் விரைவில் மற்றவரால் உணரப்பட்டுவிடும்.

உறாஅதவர் போல் சொலினும் - காதல் கொள்ளாதவர் போல் பேசினாலும்

செறாஅர் சொல் - உண்மையில் சினமில்லாத அவர்களின் சொற்கள்

ஒல்லை உணரப்படும் - விரைவில் அவர்கள் மற்றவர் மேல் கொண்ட காதலை வெளிப்படுத்திவிடும்

***

செறாஅச் சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்றுற்றார் குறிப்பு

சினமில்லாமல் ஆனால் சினத்தவர் போல் பேசும் சொற்களும் சினத்துடன் நோக்கும் பார்வையும் காதல் கொண்டதை வெளியே சொல்ல விரும்பாமல் ஆனால் காதல் கொண்டவர்கள் தங்களை அறியாமல் காட்டும் குறிப்பு

செறாஅச் சிறுசொல்லும் - சினமில்லா சுடுசொற்களும்

செற்றார் போல் நோக்கும் - சினத்தவர் போல் பார்க்கும் பார்வையும்

உறாஅர் போல் உற்றார் குறிப்பு - காதல் உறவில்லை என்று எண்ணிக் கொண்டே காதல் உறுபவர்கள் காட்டும் குறிப்பு.

***

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

என் மேல் அன்பு கொண்டவள் நான் பார்க்கும் போது மெல்லச் சிரிக்கிறாள். அப்போது அந்த அழகிய மெல்லியலாள் இன்னும் அதிக அழகுடன் தோன்றுகிறாள்.

யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என் மேல் அன்பு கொண்டவள் நான் நோக்கும் போது மெல்ல சிரிக்கிறாள். (பசை - பாசம்; அன்பு)

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர் - அந்த அசையும் துடியிடை உடைய அந்த பெண்ணுக்கு அதிக அழகு உண்டு.

***

ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

காதலர்களிடம் மட்டுமே இருக்கும் ஒரு குணம்: அவர்கள் பொது இடத்தில் இருக்கும் போது தமக்குள் எந்த வித உறவும் இல்லாதவர் போல் நடந்து கொள்வார்கள்.

ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் - தமக்கு நடுவில் எந்த விதமான உறவும் இல்லாதவர் போல் பொதுவாக பார்த்துக் கொள்ளுதல்

காதலார் கண்ணே உள - காதலர்களிடம் மட்டுமே இருக்கும் ஒரு குணம்.

***

கண்ணொடு கண் இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல


காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அவர்கள் உள்ளங்கள் கலப்பது போல் கண்களும் கலந்து ஒன்றுபட்டுவிட்டால் வாய்ச்சொற்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விடுகின்றது.

கண்ணொடு கண் இணை நோக்கொக்கின் - கண்ணுடன் கண் இணைந்து பார்வைகள் ஒன்று பட்டுவிட்டால்

வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - வாய்ச்சொற்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விடுகின்றது

1 comment:

குமரன் (Kumaran) said...

14 comments:

சிறில் அலெக்ஸ் said...

என்ன குமரன்,
லான் மோவ் பண்ணும்போது வள்ளக்காரி யாரையாவது பாத்தீங்களா?

:)
எந்த இன்ஸ்பிரேஷனானாலும்... பலரும் படித்திராத இன்பத்துப்பாலை படிக்கத்தந்தற்கு நன்றி.

June 17, 2006 7:54 AM
--

குமரன் (Kumaran) said...
என்ன சிறில்? இன்பத்துப் பால் பாடறதுக்கு இன்ஸ்பிரேஷன் வேற தேவையா என்ன? வளரிளமைக்காலத்தைத் தாண்டுனா பத்தாது? இரண்டு வாரமா புல் வெட்டலை. நினைவு படுத்துனதுக்கு நன்றி. இன்பத்துப் பாலெல்லாம் எழுதுனது போதும்; மொதோ போயி புல்லு வெட்டுங்க; புதர் மாதிரி வளர்றதுக்குள்ளேன்னு அன்பான அதட்டல் வர்றதுக்கு முன்னால தொடங்கிட வேண்டியது தான்.

சிறில். உங்க ஊரில வள்ளக்காரி நிறைய உண்டோ? இங்கே இல்லியேங்க :-)

June 17, 2006 8:10 AM
--

rnateshan. said...
இன்பத்து பால்ன்னாலே ஜாலிதான் குமரன் எந்த நாடாயிருந்தா என்ன!!வள்ளக்காரியிருந்தா என்ன கறுப்புக்காரியிருந்தா என்ன!!

June 18, 2006 1:21 AM
--

குமரன் (Kumaran) said...
நீங்க சொல்றது சரிதான் நடேசன் ஐயா. :-)

சிறில் சொன்னது வெள்ளைக்காரியையா? நான் வள்ளக்காரியை என்றல்லவா நினைத்தேன். வெள்ளைக்காரியை என்றால் அவர்கள் எங்கள் ஊரிலும் நிறைய இருக்கிறார்கள். :-)

June 18, 2006 7:42 AM
--

ரங்கா - Ranga said...
குமரன்,

"கண்ணொடு கண் இணை நோக்கொக்கின்" குறளின் விளக்கத்தைப் படித்தவுடன் கம்பரின் "கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ" வரிகள் நினைவுக்கு வருகிறது.

ரங்கா.

June 19, 2006 10:21 AM
--

G.Ragavan said...
இந்தப் பாக்கள் அத்தனையையும் கவிஞர்கள் பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு பெண்மையின் நிலை என்ன? மௌனம் - இதிலிருந்து இன்று வரைக்கும் கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் பாடல் பயன்படுத்தப்படுகிறது.

ஏதிலாரும் அப்படித்தான். சினிமாவுக்குப் பாட்டெழுதுறவங்க காமத்துப்பாலை ரெண்டு வாட்டி படிச்சுக்கிட்டுப் போனா...தேசிய விருது வாங்கீரலாம்.

June 19, 2006 11:49 AM
--

குமரன் (Kumaran) said...
அருமையான கம்பராமாயண வரிகள் ரங்கா அண்ணா. நினைவுறுத்தியதற்கு மிக்க நன்றி.

June 19, 2006 6:46 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் இராகவன். பல திரைப்படப் பாடல்களிலும் தனிப்பாடல்களிலும் காமத்துப்பாலில் வரும் சொற்கள் முதற்கொண்டு ஏறக்குறைய எல்லாக் கருத்துகளும் வந்திருக்கின்றன.

தேசிய விருது வாங்கிடலாமா? :-) அதற்குத் தானே இந்த முயற்சி. பார்ப்போம் காமத்துப்பால் படிச்சு முடிச்சா கவிதை எழுத வருதான்னு. :-)

June 19, 2006 6:49 PM
--

manu said...
நன்றி, குமரன்.நீங்கள் வள்ளுவர் குறளை எழுதி, எங்கள் பழய நடவடிக்கைகளை நினைவு கொண்டுவந்தீர்கள்.நாங்கள் சொல்வது,எல்லோரும் சுற்றி இருக்கையில் ஒருவருக்கு ஒருவர் கண்டு கொள்ளாமல்(!) இருப்பது.

June 19, 2006 7:22 PM
--

சிறில் அலெக்ஸ் said...
வெள்ளக்காரிய ஒரே நொடியில போட்ல ஏத்திட்டேன்.

எழுத்துப்பிழை..

June 19, 2006 10:45 PM
--

குமரன் (Kumaran) said...
எழுத்துப்பிழையா சிறில். கொஞ்ச நேரம் என்ன சொல்றீங்கன்னு புரியாம விழித்தேன். (முழித்தேனா விழித்தேனா எது சரி?)

June 20, 2006 5:53 AM
--

குமரன் (Kumaran) said...
மனு, அது உங்கள் பழைய நடவடிக்கைகள் மட்டும் இல்லையே. வள்ளுவர் காலம் தொட்டு இன்று வரை அதே கதை தானே. என்றென்றும் அது அப்படித்தான் போல. :-)

June 20, 2006 5:54 AM
--

முத்தமிழ் குமரன் said...
நல்ல நல்ல விசய்ங்களை பகிர்ந்து கொள்வதில் உங்கள் ஈடுபாடு எனக்கு வியாப்பளிக்கிறது, தமிழை பிரித்து அழகாக கற்றுதருகின்றீர்.

நன்றி

குமரன்@முத்தமிழ்மன்றம்

March 09, 2007 9:23 AM
--

குமரன் (Kumaran) said...
தங்கள் பாராட்டிற்கு நன்றி முத்தமிழ் குமரன்

March 11, 2007 7:31 AM