Wednesday, March 17, 2010

இன்பத்துப் பால்: புணர்ச்சி மகிழ்தல் - 2


உறுதோறுயிர் தளிப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்

நான் இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர் கிளர்ச்சியும் உரமும் பெறுமாறு தீண்டுகின்றாள். அதனால் இந்த இளம்பெண்ணின் தோள்கள் மென்மையும் குளிர்ச்சியும் இன்பமும் தரும் அமிழ்தினால் ஆனவை.

உயிர் என்றும் நிலைக்கும் படி செய்வது அமிழ்தம். அதனைப் போன்று இவள் தோள்களும் உயிரினை தழைக்கச் செய்வதால் அவையும் அமிழ்தம்.

அவளைத் தழுவாத நேரம் உயிர் உரமின்றிப் போய்விடுகிறது என்பது ஓர் உட்பொருள்.

உறுதோறும் - தழுவும் போதெல்லாம்


உயிர் தளிப்பத் தீண்டலால் - உயிர் தளிர்க்கும் படி தீண்டுவதால்


பேதைக்கு - இளம் பெண்ணிற்கு


அமிழ்தின் இயன்றன தோள் - தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டவை

***

தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

தமது இல்லத்தில் வீற்றிருந்து தன் முயற்சியால் பெற்ற பொருளை தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து விதமாக பகுத்து தனது பங்கினை உண்ணும் இன்பத்தைப் போல் உள்ளது இந்த மாநிறம் கொண்ட அழகியைத் தழுவிக் காணும் இன்பம்.

இங்கே களவின்பத்தைப் பேசும் போது இல்லறவொழுக்கத்தில் இருக்கும் இன்பத்தை இந்த இன்பத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறான் தலைவன். இல்லறவின்பம் பெரிய இன்பம் என்பதே உலக வழக்கு. அதனால் அந்த உயர்ந்த இல்லற இன்பம் தனக்கு இந்தத் தலைவியைத் தழுவும் போதே கிட்டுகிறது என்று சொல்கிறான்.

தான் தன் முயற்சியால் பெற்ற பொருளைத் தமது என்று சிறப்பாகச் சொல்கிறார். திருக்குறளில் வேறோரிடத்தில் இல்லறத்தின் இன்பமாகச் சொன்ன தன் பொருளை ஐந்து விதமாகப் பகுத்து தெய்வத்தை வணங்க ஒரு பங்கும், விருந்தினர்களை விருந்தோம்ப ஒரு பங்கும், சுற்றத்தாரைக் காக்க ஒரு பங்கும், முன்னோர்களை வழிபடவும் அவர் பெயர் விளங்கவும் செய்ய ஒரு பங்கும், தனக்கு ஒரு பங்கும் செலவழிக்கும் இன்பத்தை இங்கே பகுத்து - பாத்து என்று குறிப்பாகச் சொல்கிறார். இன்னொரு இடத்தில் இந்த ஐந்து பங்கு போக ஆறாவது பங்கையும் சொல்கிறார். அது அரசனுக்குரிய வரி. பழந்தமிழகத்தில் வருமானத்தில் / விளைச்சலில் ஆறு பங்கு அரசனுக்கு உரிய வரி என்றும் அப்படி பெறுவதே நியாயமான வரி என்றும் அதற்கு மேல் பெற்றால் அது அநியாய வரி என்றும் கருதப்பட்டது.

தம்மில் இருந்து - தமக்கு உரிமையான வீட்டில் வாழ்ந்து


தமது - தாம் தம் முயற்சியால் ஈட்டிய பொருளை


பாத்து - பகுத்து


உண்டு அற்றால் - உண்டு மகிழ்வது போல் தானே இருக்கிறது


அம்மா அரிவை முயக்கு - அந்த மாநிறம் கொண்ட அழகிய பெண்ணின் தழுவல்

***

வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை
போழப் படாஅ முயக்கு

ஒருவரை ஒருவர் விரும்பும் இரு காதலர்களுக்கு இனியதாவது காற்று இடையில் அறுத்துக் கொண்டு செல்லாதபடி கட்டித் தழுவிக் கொள்வது.

வீழும் இருவர்க்கு - ஒருவரை ஒருவர் விரும்பும் இரு காதலருக்கு


இனிதே - இனிமையானது


வளி இடை போழப் படாஅ முயக்கு - காற்று இடையில் புகுந்து கிழிக்க முடியாத தழுவல்

***

ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன்

சிறு சிறு சண்டைகள் செய்து ஊடி நிற்பதும், பின்னர் தம் தவறுணர்ந்து ஊடல் மறப்பதும், அது மறந்த பின் மீண்டும் கூடுவதும் என இவை தான் காதல் உற்றவர் பெற்ற பயன்.

ஊடலிலும் இன்பம் உண்டு; அந்த இன்பம் போதும் என்று உணர்ந்து அந்த ஊடலை முடித்துக் கொண்டு பின்னர் புணர்ந்து மேன்மேலும் இன்பம் பெறுகின்றனர் காதலர் என்பது இன்னொரு உரையாசிரியரின் கருத்து.

ஊடல் - ஊடல் கொள்வதும்


உணர்தல் - பின் அதன் பயன் உணர்ந்து ஊடலை மறப்பதும்


புணர்தல் - அதன் பின் கூடுதலும்


இவை - என இந்த மூன்றே


காமம் கூடியார் பெற்ற பயன் - காதல் கொண்டவர்கள் பெற்ற பெரும்பேறு.
***


அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

பல வித அறிவு நூல்களைக் கற்கும் தோறும் அதில் அறிவு ஏற்பட்டு இது வரை அந்த அறிவு இல்லாமல் இருந்தது எப்படி தோன்றுகிறதோ அதே போல் இவளுடன் கூடும் போதெல்லாம் மேன்மேலும் இன்பம் விளங்கி இந்த சிவந்த ஆடை அணிகலன் அணிந்த பெண்ணின் மீது மேன்மேலும் காதல் தோன்றுகிறது.

ஒரே நூலையும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது புதிது புதிதாகப் பொருள் தோன்றுவதைப் போல் ஒரே பெண்ணான இவளுடன் மீண்டும் மீண்டும் கூடும் போது புதிது புதிதாக இன்பம் தோன்றி இவள் மேல் மேன்மேலும் காதல் தோன்றச் செய்கிறது. புதிய அறிவு பழைய அறிவை சிறியதாக்குவதைப் போல் புதிய காதல் பழைய காதலை சிறியதாகக் காணச்செய்கிறது. காலம் செல்ல செல்ல காதல் கூடும்; கூடுகிறது என்பது உட்பொருள்.

அறிதோறும் - புதிய அறிவினைப் பெறும் போதெல்லாம்

அறியாமை - இதுவரை இருந்த அறியாமை

கண்டற்றால் - தெரிய வருவது போல்


காமம் செறிதோறும் சேயிழை மாட்டு - சிவந்த ஆடைகளை அணிந்த இந்த அழகிய பெண்ணின் மேல் உள்ள காதல் மென் மேலும் வளர்கிறது.

1 comment:

குமரன் (Kumaran) said...

4 comments:

வடுவூர் குமார் said...
திருக்குறளுக்கு நல்லாவே பொட்டி தட்டியிருக்கீங்க.
அருமையாக இருந்தது.

August 10, 2007 10:29 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி குமார்.

August 11, 2007 3:20 PM
--

cheena (சீனா) said...
நண்ப !! ஆன்மீகம் எழுதும் கரங்கள் வள்ளுவனின் இன்பத்துப் பாலையும் பற்றும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி - பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி பல் வேறு தலைப்புகளிலும் பதிவுகள் இடுவது - நேரம் ஒதுக்குவது - பின்னூட்டங்கள் இடுவது - அயராத பணி என நினைக்கிறேன்.

வாழ்க அரும்பணி ! வளர்க அருந்தொண்டு !

October 05, 2007 9:51 PM
--

குமரன் (Kumaran) said...
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சீனா ஐயா.

October 12, 2007 11:02 AM