Monday, March 08, 2010

தகை அணங்குறுத்தல் - 2

முந்தையப் பதிவின் தொடர்ச்சியாக இன்பத்துப்பாலின் முதல் அதிகாரம்...

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன் இவள் கண்


வளைந்திருக்கும் இவள் புருவம் வளையாமல் நேராய் அமைந்திருந்து அவள் கண்களை மறைத்திருந்தால் இப்படி நான் காதலில் மூழ்கி நடுக்கமுறும் துன்பத்தை அவள் கண்கள் செய்திருக்க மாட்டா.

கொடும்புருவம் - வளைந்து நிற்கும் புருவம்

கோடா - அப்படி வளையாமல் நேராய் அமைந்து

மறைப்பின் - அவள் கண்களை மறைத்திருந்தால்

நடுங்கஞர் செய்யல மன் இவள் கண் - நடுக்கமுறும் படி செய்பவை அன்று இவள் கண்.

***

கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்


மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேல் இட்ட முகபடாம் போல் தோன்றுகிறது இந்தப் பெண்ணின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடை.

கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் - மதங்கொண்ட யானையின் மேல் உள்ள படாம் (போன்றது)

மாதர் படாஅ முலை மேல் துகில் - பெண்ணின் சாயாத முலையின் மேல் உள்ள துகில்.

***

ஒண்ணுதற்கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களத்தில் என்னுடன் நட்பு பாராட்டாத பகைவரும் போற்றும் என் வீரம் இந்த ஒளி பொருந்திய நெற்றியை உடையவளின் முன்னால் வளைந்து கொடுத்து விட்டதே!

ஒண்ணுதற்கோஒ உடைந்தததே - ஒளி நிறைந்த நெற்றியையுடைய (ஒளி + நுதல் - ஒண்ணுதல்) இந்தப் பெண்ணின் முன் உடைந்ததே

ஞாட்பினுள் - களத்தில்

நண்ணாரும் - நட்பு பாராட்டாத பகைவரும்

உட்கும் என் பீடு - போற்றும் என் வீரம் (பெருமை).

***

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்(கு)
அணியெவனோ ஏதில தந்து.

பெண்மானைப் போல் இளமையான பார்வையும் நாணத்தையும் இயற்கையாக உடைய இவளுக்கு செயற்கையான அணிகலன்கள் எதற்காக? அவை இவள் பேரழகிற்கு முன் எம்மாத்திரம்?

பிணையேர் மட நோக்கும் - மானைப் போன்ற இளமையான பார்வையும்

நாணும் - நாணமும்

உடையாட்கு - உடையவளுக்கு

அணி எவனோ தந்து - செயற்கையான அணிகலன்களால் என்ன பயன்?

ஏதில - எதுவுமில்லை.

***

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று.

மது கூட உண்டவரைத் தான் மகிழ்விக்கும். ஆனால் கண்டவுடனே மகிழ்ச்சியைத் தருவது காதல் மட்டுமே.

உண்டார் கண் அல்லது அடு நறா - உண்டவர்களுக்கு மது (மகிழ்ச்சியூட்டும்)

காமம் போல் - காதலைப் போல்

கண்டார் மகிழ் செய்தல் இன்று - கண்டாலே மகிழ்ச்சியைத் தருவது (வேறொன்று) இல்லை.

8 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'ஐயன் வள்ளுவனின் இன்பத்துப்பால்' பதிவில் ஏப்ரல் 30, 2006 அன்று என்னால் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள் இவை:

tbr.joseph said...
அடடா குமரன்,

காப்பியில் பாலைக் கலந்து குடிக்க வேண்டிய நேரத்தில் காமத்துப்பாலை கலக்கி கிறங்கடித்துவிட்டீர்கள்..

நன்றி:-)

May 02, 2006 11:26 PM
--

manu said...
குமரன்,என்ன அழகான குறள். அதற்கான உரைஇரண்டுமெ பள்ளி நாட்களுக்கு அழைத்து சென்றுவிட்டன.
இன்னும் கேட்க ஆவல். மனு

May 03, 2006 1:07 AM
--

சிவமுருகன் said...
//பகைவரும் போற்றும் என் வீரம் இந்த ஒளி பொருந்திய நெற்றியை உடையவளின் முன்னால் வளைந்து கொடுத்து விட்டதே!//

வளைந்து கொடுத்து தான் ஆக வேண்டும். இல்லையேல் வாழ்க்கை என்ற நானல் ஒடிந்து விடுமே!.

May 03, 2006 4:50 AM
--

Merkondar said...
அருமையகா உள்ளது குமரன்

May 03, 2006 5:49 AM
--

குமரன் (Kumaran) said...
ஜோசஃப் ஐயா. உங்களுக்கு அது காப்பி குடிக்க வேண்டிய காலைப்பொழுதாக இருக்கலாம். ஆனால் உலகமெங்கும் பரவியுள்ள நம்மவர்களில் சிலருக்கு பொருத்தமான பொழுதாகவும் இருக்கலாமல்லவா? :-)

உங்கள் பாராட்டுரைக்கு நன்றி.

May 03, 2006 12:47 PM
--

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி மனு அவர்களே. குறட்பாக்கள் அழகானவை தான். :-)

May 03, 2006 12:48 PM
--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன். உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை என்றெண்ணியிருந்தேன். ஆனால் அனுபவத்தில் பேசுவது போல் இருக்கிறது? :-) ஓ... காதல் அனுபவம் திருமணத்திற்கு முன்னாலேயே வரலாமே... அதனை மறந்துவிட்டேன். :-)

May 03, 2006 12:49 PM
---

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி என்னார் ஐயா.

May 03, 2006 12:49 PM
--

G.Ragavan said...
ம்ம்ம்...நல்லாத்தான் இருக்கு உங்க விளக்கம்...

// கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் //

இதுல இன்னும் கொஞ்சம் விளக்கம். மதங் கொண்ட ஆனையப் பாத்திருக்கீங்களா........அதோட வேகம்...சூரம்...வீரம்....அத அடக்க முடியுமா? அப்படி மதயானை மேல படாம் போட்டா எப்படியிருக்கும். போட்டாலும் போட விடாம தடுத்து....ஏதோ போட்டும் போடாமலும் இருக்கும். விழுந்தாலும் விழுந்துரும். அப்படி இருந்துச்சாம்...அந்தப் பிள்ள போட்டுருந்த தாவணி. புரிஞ்சதா!

May 05, 2006 3:20 AM
--

குமரன் (Kumaran) said...
ம்ம்ம்.... நல்லாத் தான் இருக்கு...ன்னு இழுக்குறதைப் பார்த்தா விளக்கம் பிடிக்கலை போல இருக்கே இராகவன்? ஏற்கனவே கலைஞர், பரிமேலழகர் யாருமே திருக்குறளுக்குச் சரியாக உரை எழுதவில்லை என்றும் அதனால் நீங்கள் தான் எழுத வேண்டும் என்று சொன்னீர்களே. அது போல் என் உரையும் சரியில்லையோ? :-)

நீங்கள் சொல்லும் முறையில் நானும் உரை எழுதலாம் தான். ஆனால் அதனைத் தமிழ்மணத்தில் தடை செய்துவிடுவார்களோ என்று தான் அஞ்சுகிறேன். :-)

May 05, 2006 7:51 PM
--

சிவமுருகன் said...
//ஓ... காதல் அனுபவம் திருமணத்திற்கு முன்னாலேயே வரலாமே... அதனை மறந்துவிட்டேன்//

எல்லாம் மத்தவங்களுக்காக சிந்தித்தது. எனக்கு இதில் சுய அனுபவமில்லை சொல் அனுபவம் தான். (புத்தின்னு நானே சொல்லிக்க முடியாது பாருங்க)

May 06, 2006 7:39 AM
--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன்,

ஆட்டம் போடுவதும் அடங்கி போவதும் இரு பக்கமும் உண்டு. ஆண்கள் மிகைப்படுத்துவதால் நீங்கள் அப்படி எண்ணிவிட்டீர்கள். பெண்களைக் கேட்டீர்களானால் அவர்களும் மிகைப்படுத்தி ஆண்களைப் பற்றிச் சொல்லுவார்கள்.

May 06, 2006 4:25 PM

தமிழ் said...

பொருளும் உரையும் அருமை குமரன் ஐயா.

-முகில்

தமிழ் said...

அடுத்து எந்த அதிகாரம் எழுதப் போகிறீர்கள்?

வரிசைக்கிரமமாகவா? இல்லை குத்து மதிப்பாகவா?

-முகில்

தமிழ் said...

அடுத்து எந்த அதிகாரம் எழுதப் போகிறீர்கள்?

வரிசைக்கிரமமாகவா? இல்லை குத்து மதிப்பாகவா?

-முகில்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// தமிழ் said...
அடுத்து எந்த அதிகாரம் எழுதப் போகிறீர்கள்?//

என்ன முகில், "அதிகாரம்" தூள் பறக்குது? எங்க குமரனை இப்படி மெரட்டறீங்க? :)

புதிரா புனிதமா-க்கு ஐடியா கொடுத்திருக்கேன் பாருங்க - தமிழ் இலக்கியத்திலிருந்து! ஒடனே புதிரா புனிதமா போடுங்க! :)

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// தமிழ் said...
அடுத்து எந்த அதிகாரம் எழுதப் போகிறீர்கள்?//

என்ன முகில், "அதிகாரம்" தூள் பறக்குது? எங்க குமரனை இப்படி மெரட்டறீங்க? :)*/

அண்ணா, இப்பத்தான் உங்க வலைப்பூக்கு பதில் போட்டுட்டு வர்றேன். இங்க வந்து பாத்தா இங்கயுமா???

அண்ணா, அதிகாரம் தூள் பறக்குல. செயற்கைக்கோள் ல்ல பறக்குது. அதனாலத்தான் உங்களால அத படிக்க முடிஞ்சது.

குமரன் ஐயா வ நான் மிரட்டுறேனா?? அச்சோ அச்சோ, தெய்வமே! அவங்க பதிவுக்கும் சரி, பின்னூட்டத்துக்கும் சரி எனக்கு பதில் போடவே தெரியாது. அச்சமாவும் இருக்கும். அவங்கள போயி...

/*புதிரா புனிதமா-க்கு ஐடியா கொடுத்திருக்கேன் பாருங்க - தமிழ் இலக்கியத்திலிருந்து! ஒடனே புதிரா புனிதமா போடுங்க! :)*/

அண்ணா, ஒரு இரண்டு திங்கள் கால அவகாசம் தர்ரீங்களா??

குமரன் (Kumaran) said...

முன்பு எதுவரை, எந்த வரிசையில் எழுதினேனோ அப்படியே எடுத்து இடுகிறேன் தமிழ்முகில்.

அடுத்த முறை என்னை விளிக்கும் போது 'ஐயா'வைச் சேர்க்காமல் விளிக்க வேண்டுகிறேன். அடியேன் பொடியன்.

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

முன்பு எதுவரை, எந்த வரிசையில் எழுதினேனோ அப்படியே எடுத்து இடுகிறேன் தமிழ்முகில்.

அடுத்த முறை என்னை விளிக்கும் போது 'ஐயா'வைச் சேர்க்காமல் விளிக்க வேண்டுகிறேன். அடியேன் பொடியன்.*/

என்னங்க ஐயா, இது நாலு நாள் ஊருக்கு போயிட்டு வர்ரதுக்குள்ள இத்தன பதிவு போட்டுட்டீங்க??

யாரோட ஐயா வ உங்களோட சேர்க்கக் கூடாதுன்னு சொல்றீங்க??

அடியேன் பொடியேன் லாம், கேயாரெஸ் அண்ணனோட வசனங்களாச்சே!!

சுட்டாச்சா?? :-)