Tuesday, March 23, 2010

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே! - 1

'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற தலைப்பில் பாரதியார் ஒரு பாடல் பாடியுள்ளார். அது 'பாரதி' திரைப்படத்திலும் வந்து இப்போது பலரும் அறிந்த ஒரு பாடலாகி விட்டது.

மகாகவி புதுவையில் இருக்கும் போது தத்துவ விசாரணையில் மிகுதியும் ஈடுபாடு கொண்டிருந்தார். அப்போது புதுவையில் வாழ்ந்து வந்த அரவிந்தருடன் அடிக்கடி தத்துவங்களைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார் என்றும் அறிகிறோம்.

மாயாவாதம் எனப்படும் அத்வைதத் தத்துவம் இந்திய இறைத்தத்துவங்களிலேயே மிகப் புகழ் பெற்றது. இந்தத் தத்துவப்படி இங்கு உள்ளதெல்லாம் இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. பெயர் உருவம் உள்ளதாய்க் காண்பதெல்லாம் மாயை. ப்ரம்மம் சத்யம்; ஜகத் மித்யை - இறைவன் மட்டுமே உண்மை, இந்த உலகம் பொய் என்பது அதன் கருத்து.

பாரதியார் அந்தக் கருத்தைப் பற்றி இந்தப் பாடலில் பாடி பாடலிறுதியில் தன் கருத்தை வலியுறுத்துகிறார்.


நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

இங்கு உள்ளதெல்லாம் இறைவடிவம் என்பதில் பாரதியாருக்கு எந்த அளவும் சந்தேகம் இல்லை. ஆனால் பெயரும் உருவமும் கொண்டு தோன்றுவதெல்லாம் பொய் என்னும் கொள்கையைத் தான் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நிலையாய் ஓரிடத்தில் நிற்கும் மலைகள், மரங்கள் போன்றவற்றை 'நிற்பதுவே' என்றும், நடக்கும் விலங்கினங்களை 'நடப்பதுவே' என்றும், பறக்கும் பறவையினங்களை 'பறப்பதுவே' என்றும் விளித்து, உங்களை நான் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறேனே நீங்கள் என்ன நான் காணும் சொப்பனமா? எனக்கு வந்துள்ள அழகான கனவா? கானல் நீர் போல், இல்லாத ஒன்று இருப்பது போல் தோன்றும் தோற்ற மயக்கங்களா? என்று கேட்கிறார்.


பிறந்த நாள் முதல் எத்தனையோ விஷயங்களை கற்கிறோம். மற்றவர்கள் அனுபவங்களைக் கேட்டு அதிலும் பல பாடங்களைப் பெறுகிறோம். இப்படி கற்றும் கேட்டும் உள்ள விஷயங்களை மனதில் கருதி அசை போட்டு ஒரு நிலையான கருத்தை அடைகிறோம். இப்படி நாம் நாள்தோறும் செய்பவையெல்லாம் வெறும் அற்ப மாயைகளா? இவற்றால் எந்த பயனுமில்லையா? கற்பதிலும் கேட்பதிலும் மனதில் கருதுவதிலும் எந்த ஆழ்ந்த பொருளும் இல்லையா? என்கிறார்.

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

அதிகாலையிலும் நடுப்பகலிலும் பொன்மாலைப் பொழிதினிலும் வானம் தீட்டும் வண்ண வண்ண ஓவியங்களைக் கண்டு ஆச்சரியமும் ஆனந்தமும் எத்தனை முறை அடைந்துள்ளோம்? அதிகாலையில் வீசும் இளவெயில் உடலுக்கும் மனதிற்கும் எத்தனைப் புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதை அனுபவித்துள்ளோம் அல்லவா? பசுமையான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள கானகத்தைக் கண்டால் மனது எப்படி துள்ளிக் குதிக்கிறது. இவையெல்லாம் கானலின் நீர் போல் தானோ? ஒன்றை பிறிதொன்றாய்க் காணும் காட்சிப் பிழைதானோ? என்கிறார்.

இவ்வுலகில் எந்தனையோ மாந்தர் வாழ்ந்தனர். பெரிய பெரிய வீரர்களும் பேரரசர்களும் பேரறிஞர்களும் செயற்கரிய செய்தவர்களும் எத்தனையோ பேர் வாழ்ந்துள்ளனர். ஆனால் அவர்களெல்லாம் வெறும் கனவினைப் போல் இப்போது இல்லாமல் போனார்கள். அது போல் நானும் ஒரு கனவினைப் போல் ஒன்றும் இல்லாமல் போய்விடுவேனோ? இந்த உலகம் உண்மையிலேயே பொய்தானோ? என்கிறார்.

'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்னும் பொய்யாமொழிக்கேற்ப அந்த செயற்கரிய செய்தவர்களெல்லாம் இப்போது இல்லாமல் மரித்து புதைந்து அழிந்து போனாலும், அவர் செய்த செயல்களின் பலன்களை அவர்களின் பின்னால் வந்த பல தலைமுறையினர் அனுபவிப்பதும் அவர் தம் புகழுடம்பால் என்றும் வாழ்வதும் உண்மையாதலால் அவர்கள் வெறும் கனவாய்ப் போய்விடவில்லை. இந்த ஞாலமும் பொய்யில்லை என்பது இப்பாடலில் தொக்கி நிற்கும் கருத்து என நினைக்கிறேன்.

இதன் தொடர்ச்சியை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 03 நவம்பர் 2005 அன்று 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவில் என்னால் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

4 comments:

supersubra said...
பாரதியாரே வேறு ஒரு கட்டுரையில் எல்லாம் மாயை எல்லாம் பொய் என்றாலும் ஒரு சம்சாரி நடு வீட்டில் அப்படிச்சொல்லகூடாது, அது அடுக்காது, உலகாயத வாழ்வுக்கு அது ஒவ்வாது என்று எழுதியதாக எனக்கு நினைவு - அன்பே ஆருயிரே படத்தில் வரும் வசனம் போல அது இருக்கும் ஆனால் இருக்காது அது இருக்காது ஆனால் இருக்கும்

November 04, 2005 6:29 AM
--

குமரன் (Kumaran) said...
திரு சூப்பர் சுப்ரா,

வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்னது சரி. பாரதியார் தனது கட்டுரை ஒன்றில் அப்படிக் கூறியிருக்கிறார்.

நன்றிகளுடன்,
குமரன்.

November 06, 2005 6:31 AM
--

G.Ragavan said...
குமரன், இந்தப் பாடல் மிகவும் ஆழமானது. சுப்ரா சொன்னது போல இருக்கும். ஆனால் இருக்காது தத்துவம்தான்.

நேற்று இருந்தது இன்று இல்லை. இன்று இருப்பது நாளை இல்லை. ஆக எல்லாம் இருக்கும். ஆனால் எதுவுமே இல்லை.

நிற்பவை எல்லாம் நிலைப்பவை இல்லை என்பதை உணர்த்தும் பாடலிது. பாரதியின் தலை சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.

November 07, 2005 4:44 AM
--

குமரன் (Kumaran) said...
ராகவன்,

நிற்பவை எல்லாம் நிலைப்பவை அல்ல என்பதில் பாரதிக்கும் எனக்கும் உடன்பாடு உண்டு. இதை உணர்த்துவதை விட 'நிலைக்காமல் இருப்பதாலேயே அவை பொய்யல்ல' என்று உணர்த்துவதுதான் இந்த பாடல் என்பது என் கருத்து. நீங்கள் இதன் தொடரான அடுத்தப் பதிவினைப் பார்த்துவிட்டீர்களா?

பாரதியார் பாடல்களில் தலை சிறந்தது எது என்று கூறுதல் மிகக் கடினம். எல்லாப் பாடல்களும் மிகச் சிறந்தவைகளே. தமிழில் ஆர்வம் கொண்டு இலக்கியம் படிக்க விரும்பும் நண்பர்களுக்கு எல்லாம் நான் சொல்வது 'முதலில் பாரதியைப் படியுங்கள்' என்பதே.

தொடர்ந்து படித்துக் கருத்து கூறுவதற்கு மிக்க நன்றி.

November 07, 2005 2:54 PM

திகழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

குமரன் (Kumaran) said...

நன்றி திகழ்.

மாதேவி said...

மீண்டும் பதிந்ததற்கு நன்றி. எனக்கும் இப்பாடல் ரொம்பப் பிடிக்கும்.

குமரன் (Kumaran) said...

மிக்க மகிழ்ச்சி மாதேவி.