சேர மன்னர்களைப் பற்றிய பத்து * பத்து = நூறு பாடல்களைக் கொண்டது பதிற்றுப்பத்து. பல மன்னர்களைப் பல புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்ததால் இது தொகை நூலாகும். சங்க இலக்கியத்தின் ஒரு வகையான எட்டுத்தொகை நூற்களில் ஒன்று.
இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து உண்டா இல்லையா என்று உறுதியாகத் தெரியவில்லை. 'மதுரைத் திட்டம்' கடவுள் வாழ்த்துப் பகுதி இல்லாமலேயே பதிற்றுப்பத்தினைக் காட்டுகிறது. இணையப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலில் ஆசிரியர் பெயர் சொல்லாமல் ஒரு பாடல் கடவுள் வாழ்த்தாக இருக்கிறது. ஆனால் அங்கேயே இருக்கும் உரை நூலில் அந்தப் பாடலைக் காணவில்லை. பாடலைப் படித்துப் பார்த்தால் சங்க காலப் பாடலைப் போன்று தான் இருக்கிறது. உரையின் துணையின்றி எனக்குப் புரிந்த வரையில் இந்தப் பாடலின் பொருளை எழுதுகிறேன். இந்தப் பாடலைப் பற்றிய மேற்தகவல்கள் தெரிந்திருந்தாலோ பாடலின் பொருளைத் தவறாக எழுதியிருந்தாலோ சொல்லுங்கள்.
எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்க்
கொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன் தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்க மா வலனே
வடமொழியில் இருக்கும் புராணங்கள் எல்லாம் தமிழரிடமிருந்து சென்றவை என்ற கருத்திற்கு அணி செய்யும் இன்னொரு பாடல் இது. சிவபெருமானின் 'உருவ அழகை'யும் (இலிங்கத் திருமேனியை இல்லை) புராணங்கள் கூறும் சிவபெருமானின் பெருமைகளையும் அழகாகக் கூறும் பாடல் இது.
எரி எள்ளு அன்ன நிறத்தன் - எரிகின்ற எள்ளினைப் போன்ற நிறத்தை உடையவன்.
சிவபெருமான் சிவந்தவன் என்பது தமிழர் மரபு. அதனாலேயே சேயோன் (சிவந்தவன்) என்னும் பெயர் தந்தைக்கும் மகனுக்கும் ஆகும் என்று சொல்வதுண்டு. எள்ளு எரியும் போது அது மிக அடர்த்தியான சிவப்பு நிறத்தில் எரியும். அப்படி எரியும் எள்ளினைப் போன்ற அடர்த்தியான சிவப்பு நிறத்தைக் கொண்டவன் சிவபெருமான்.
விரி இணர்க் கொன்றை அம் பைந்தார் அகலத்தன் - விரிந்த கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலை சூடிய மார்பன்.
நெஞ்சு அகன்று விரிந்து இருப்பது ஆண்மகனுக்கு அழகு. அப்படி அகன்று விரிந்த மார்பை அகலம் என்று சொல்வது மரபு. அப்போதே பறித்த விரிந்த பூங்கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலையை அணிந்தவன் சிவபெருமான்.
பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் - அடங்காத முப்புரத்தை உடையவர்களின் மதில்களை/கோட்டைகளை எரித்த வில்லை உடையவன்.
திரிபுராசுரர்கள் என்று சொல்லப்படும் முப்புரம் உடைய அசுரர்களின் முக்கோட்டைகளையும் சிவபெருமான் தன்னுடைய சினம் மேவிய சிரிப்பாலேயே எரித்து அழித்தார் என்று சொல்லும் புராணம். அப்படி முப்புரம் எரித்த போது மேரு மலையையே தன் கைவில்லாக ஏந்தி இருந்தானாம். அந்த செய்தியைச் சொல்கிறது 'வில்லன்' என்ற பெயர்.
பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன் - இருள் நிறைந்த (சுடு)காட்டில் நிலையாக இருந்து ஆடும் ஆடல்வல்லவன்.
சிவபெருமான் சுடலையில் ஆடுபவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சுடலையை இங்கே 'இருள் பயில் காடு' என்ற தொடரால் சொல்லியிருக்கிறார்கள். அங்கேயே நிலையாக இருந்து ஆடுபவன் என்பதால் 'அமர்ந்து ஆடிய' என்றார்கள். அவன் ஆடல் வல்லான் என்பதால் 'ஆடலன்' என்றார்கள்.
நீடிப் புறம் புதை தாழ்ந்த சடையன் - நீண்டு இரு புறங்களும் மறையும் படி தாழ்ந்து இருக்கும் சடைமுடியை உடையவன்.
சிவபெருமானுக்கு தாழ்சடை உண்டு என்பது தேவார திருவாசகங்களின் கூற்று. அந்த தாழ்சடை நீண்டு இரு புறங்களிலும் மறையும் படி நிற்கின்றதாம். சிவபெருமானின் உருவம் இப்பாடலின் வழி தியானிக்கக் கிடைக்கிறதா?
குறங்கு அறைந்து வெண் மணி ஆர்க்கும் விழவினன் - தொடையில் அறைந்து நுண்ணிய ஒலி கொண்ட மணியை ஒலிக்கும் விழாவை உடையவன்.
ஆட்டத்தின் போது தன் திருத்தொடைகளை அறைந்து கொண்டு தன் திருக்கையில் இருக்கும் கண்டா மணியை ஒலிக்கும் செயல்களை சிவபெருமான் செய்வதாக இப்பாடல் வரி சொல்கிறது. நுண்ணிய ஒலியை எழுப்பும் மணி என்பதால் வெண்மணி என்றார் பாடலாசிரியர்.
நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் - நுட்பமான வேலைப்பாடுகள் உடைய உடுக்கையை அடிக்கும் விரலை உடையவன்.
சிவபெருமானின் திருக்கையில் துடி என்ற உடுக்கை இருக்கின்றது. உடுக்கைக்கு இன்னொரு பெயர் சிரந்தை. அது மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பதால் நுண்ணூல் சிரந்தை எனப்பட்டது. இரட்டுதல் என்றால் உடுக்கையின் இடுப்புப்பகுதியில் விரல்களை வைத்து இப்புறமும் அப்புறமும் அசைத்து ஒலி செய்தல். அப்படி உடுக்கையை ஒலிக்கும் விரல்களை உடையவன் சிவபெருமான்.
இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் - ஆணாகிப் பெண்ணாகி இருவுருவமும் ஆகி மாதொரு பாகனாய் நுண்ணிய அணிகலன்கள் அணிந்திருக்கும் பெரும் அழகுடையவன்.
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தில் சொன்னது போல் இங்கும் சிவபெருமானின் மாதொருபாகன் திருவுருவம் போற்றப்படுகின்றது. இரண்டு உருவாகி நுண்ணிய அணிகலன்களை அணிந்து அழகுடன் திகழ்கிறான் சிவபெருமான்.
ஏரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் - எழுகின்ற இளம்பிறை சேர்ந்த நெற்றியை உடையவன்.
சிவபெருமான் பிறைசூடி என்பதை அனைவரும் அறிவோம். அப்போதே எழுந்து வரும் இளம்பிறையை அணிந்த திருமுடியை உடையவன் என்று இங்கே சொல்லப்படுகிறான் மதிவாணன்.
களங்கனி மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன் - களங்கனியின் கருமைக்குப் போட்டியாக அமைந்திருக்கும் மறு கொண்ட தொண்டையை உடையவன்.
சிவபெருமான் நீலகண்டன். பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் அவனுடைய மிடறு/தொண்டை மணிமிடறு/மறுமிடறு ஆகியது என்று கூறும் புராணம். அப்படி சிவபெருமானின் தொண்டையில் காணப்படும் மறு களங்கனியைப் போல் விளங்குவதால் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் சிவபெருமான் என்கிறார் புலவர்.
தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட்கு - திரிசூலமென்னும் ஒளிவீசும் படைக்கலத்தை உடைய கால உருவான கடவுள்.
சிவபெருமானே அழித்தல் தொழிலுக்குரிய கடவுள் என்னும் புராணம். அதனால் அவனைக் காலக் கடவுள் என்கிறார் புலவர். அவன் தன் திருக்கையில் திரிசூலம் ஏந்தியிருப்பதையும் பாடுகிறார்.
உயர்க மா வலனே - அவனுடைய புகழும் பெருமையும் வலிமையும் மிகுதியாக உயரட்டும்!
இப்படிப் புராணங்கள் சொல்லும் சிவபெருமானின் உருவத்தையும் பெருமைகளையும் போற்றிப் பாடி இதுவும் ஒரு தியானச் சுலோகம் என்னலாம் படி இருக்கிறது இப்பாடல்.
17 comments:
தேடித் தேடி தருகிறீர்கள், நன்றி குமரன்.
:-)
நன்றி மௌலி.
இரவிசங்கர் வழியில் ஒரு தலைப்பை இந்த இடுகைக்கு (இடுகையை இட்ட பின்னர்) நினைத்தேன். என்ன தலைப்பு என்று தெரிகிறதா? :-)
//இந்த இடுகைக்கு (இடுகையை இட்ட பின்னர்) நினைத்தேன். என்ன தலைப்பு என்று தெரிகிறதா? :-)//
ஒரு மாதிரி கெஸ் பண்ண முடிந்தாலும், நான் இந்த ஆட்டைக்கு வரலீங்கண்ணா... :-)
நமது ஊகங்கள் எல்லாம் சரி தானா என்று இரவிசங்கர் வந்து சொல்லட்டும். அவர் இந்த இடுகைக்கு என்ன தலைப்புகளைப் பரிந்துரைப்பார் என்று பட்டியல் இட்டால் நம் ஊகங்கள் எல்லாம் சரி தானா என்று தெரிந்துவிடும். :-)
இரவிசங்கர் - செய்வீர்களா?
:)
//இரவிசங்கர் - செய்வீர்களா?//
மெளலி அண்ணா இதுக்கு, எனக்கும் சேர்த்தே பதில் சொல்லி இருக்காரே! :))
அறியாத தகவல், அருமையான ஒரு பாடல், நன்றி ஜூனியர்!
//பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன்//
//அங்கேயே நிலையாக இருந்து ஆடுபவன் என்பதால் 'அமர்ந்து ஆடிய' என்றார்கள்//
அது மட்டுமில்லை குமரன்!
ஆடல் கலையில் நின்று ஆடுவது மட்டுமன்றி, அமர்ந்து ஆடுவதும் ஒரு வகை! (முட்டி போட்டு ஆடுவதும் பார்த்திருப்பீர்களே - மீதியைக் கவி அக்கா வந்து சொல்லட்டும்)
நின்று, இருந்து, கிடந்து, நடந்து-ன்னு பலப்பல ஆட்ட வகைகள் சிவபெருமானிடம்! தட்டின் மேல் ஆடுவது, குடத்தின் மேல் ஆடுவதும் உண்டு!
இங்கு அமர்ந்து (இருந்து) ஆடுவது ஒரு விசேடம் போலும்! இடுகாடு அல்லவா! ஆர்ப்பாட்ட நடனத்துக்குப் பதிலாய் அமைதி கொண்டு இருந்தாடும் நடனம்!
திருவாருர் தியாகேசரை "இருந்தாடும்" அழகர், "அமர்ந்தாடும்" அழகர் என்றே குறிப்பார்கள்! பெருமாளின் மூச்சுக் காற்றில் லிங்கமாய் அமர்ந்து ஆடும் அஜபா நடனம் அல்லவா! அதான் "அமர்ந்தாடும்"!
நீங்களும் இந்த ஆட்டைக்கு வரலையா? படிச்சுட்டு விசனப்பட்டுப் போனேன் இரவிசங்கர். ஆகச்சிறந்த தலைப்பு ஒன்றாவது சொல்லுங்களேன். நான் நினைத்த தலைப்போடு ஒத்துப் போகிறதா என்று பார்க்கத் தான். உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பலவற்றில் 'சந்தைப்படுத்துதல்' கலையும் ஒன்றன்றோ?! அதனால் தான் கேட்கிறேன்.
நன்றி பாலா (சீனியர்).
அமர்ந்தாடும் அழகைப் பற்றி அழகாகச் சொன்னதற்கு நன்றி இரவிசங்கர். ஆடலைப் பற்றி யான் என்ன அறிவேன்? ஒன்று கண்ணபிரானாக இருக்க வேண்டும்; இல்லை கூத்தப்பிரானாக இருக்க வேண்டும். நான் இரண்டும் இல்லை. :-)
அச்சோ. எனக்கு ஒரே ஒரு ஆட்டம்தான் தெரியும். கண்ணபிரானே விளக்கும்படி கேட்டுக்கறேன் :)
//சிவபெருமானின் உருவம் இப்பாடலின் வழி தியானிக்கக் கிடைக்கிறதா?//
ஆஹா, அருமையாக.
இந்த மாதிரி படிக்கும்போது சுவையா சுகமா இருக்கு :) பார்த்துப் பார்த்துப் பரிமாறும் குமரனுக்கு நன்றிகள் பல.
ஆகா. உங்களுக்குத் தெரியாதா அக்கா? அப்ப சரி. நம்ம கண்ணபிரான் இரவிசங்கர் தான் 'வழக்கம் போல' 'சொந்தமா' ஏதோ கதையடிச்சுட்டு போயிருக்கிறார். பாக்கலாம்; இன்னும் எவ்வளவு நேரம் உக்காந்து ஆடறார்ன்னு. :-)
பாராட்டுக்கு நன்றி அக்கா.
சிறந்த முறையில் முயலும் உங்களுக்கு எனது நன்றிகள். வாழ்க உங்கள் தொண்டு!
நரசய்யா
நன்றி ஐயா. தங்கள் பார்வையில் இந்த இடுகை பட்டதில் மிக்க மகிழ்ச்சி.
எரியெள் ளன்ன நிறத்தன் என்பது தீயைவிடச் சிவந்த நிறத்தை உடையன் எனப் பொருள்படுமே!
Post a Comment