Friday, January 09, 2009

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....

உலகில் அறிவுக் குறையின்றி வளர்ந்து நிறைவு பெற்று வாழ விரும்புவோர் எந்த ஒரு பொருளைப் பற்றி யார் சொல்லக் கேட்டாலும், யார் எழுதக் கண்ணுற்றாலும் அந்தப் பொருளின்கண் உண்மையுள்ளதா என்று ஆராய்ந்து தெளிதல் வேண்டும். இவ்வாறு ஆய்வதன் மூலமே செம்பொருள் - மெய்ப்பொருள் கிடைக்கும்.
நூல்வல்லார் எழுதிய அகராதி, நிகண்டுகளாயினும் அவை கூறும் சொற்பொருள் சரிதானா என்று சிந்தித்தல் நலம் பயக்கும். ஆராயாது ஏற்றுக் கொள்வது அறிவுடைமைக்கு அழகன்று. ஏனெனில் இயற்கை அறிவும் நூலறிவும் ஒருங்கே அமையப்பெற்ற சான்றோர்களும் சிலபோது முறை மறந்து எழுதுதல் - பேசுதல் உண்டு என்பதனை மறத்தல் கூடாது.

நூலா சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொராசிரியர்
ஒவ்வொரு மதமா யுரையுரைக் குவரே
யவ்வுரை யதனுள் அடுத்தவா சகங்கட்கு
அவர்கருத் தறியாது அவரவர் கருத்தினுள்
கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே
ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே
ஒருபெயர் தனக்கே பலவிதி வருமே
நூலுரை பேதகா சிரியர் மூவரும்
முக்குண வசத்தான் முறைமறந் தறைவரே.


என்று இலக்கணக் கொத்து ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் பாயிரத்துள் கூறிய கருத்துப் புறக்கணிக்கக் கூடியதன்று.

நிகண்டு இயற்றிய பெருமக்கள் இலக்கிய, இலக்கணப் பயிற்சிமிக்குடையர் என்பதை அறிவோம். அதனால் அவர்களின் நூல்களில் குறைகள் இருக்க இடமில்லை என்று துணிதல் கூடாது. அவர்கள் தவறு செய்த இடங்களும் உண்டு.

யானைக் கன்றின் பெயர்களைக் கூறும்போது "கயந்தலை போதகங்கள் துடியடி களபமோடு கயமுனி யானைக் கன்றாம்," என்கிறது சூடாமணி நிகண்டு.

பிங்கல நிகண்டும் (2416),

"கயந்தலை போதகம் துடியடி களபம்
கயமுனி யானைக் கன்றா கும்மே."


என்று கூறுகிறது. திவாகர நிகண்டும் இவ்வாறே கூறுகிறது.

இவை யானைக் கன்றின் வேறு பெயர்களைக்

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி


என்று ஐந்தனையும் குறிப்பிடுகின்றன.

கயந்தலை - யானைக்கன்றைக் குறிக்குமா?

இலக்கிய இலக்கணச் சான்று உண்டா?

என்ற வினாக்களை எழுப்பிச் செம்பொருள் காணல் வேண்டும்.

"தடவும் கயவும் நளியும் பெருமை." - தொல்.உரி: 24
"கயவென் கிளவி மென்மையும் ஆகும்." - தொல்.உரி: 26

என்று ஆசிரியர் தொல்காப்பியனாரே கூறுவதால் "கய" என்ற சொல்லானது பெருமை, மென்மை என்ற பொருள்களையே தரும். சங்கப் புலவர்களும் இவ்விரு பொருள்களிலேயே "கய" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

பரிபாடலில் (8:15) வருகின்ற "கயமுகை" என்பதற்குப் பரிமேலழகர் "பெரியமுகை" என்றே பொருள் எழுதுகிறார்.

கயம்பட்ட உருவின்மேல் - கலித் 72:19, கயம் - மென்மை என்றார் நச்சினார்க்கினியர். இவ்வாறு உரையாசிரியர்கள் அனைவரும் தொல்காப்பிய நெறி நின்றே "கய" என்பதற்கு மென்மை, பெருமை என்று பொருள் கொண்டனர்.

ஆகையால் "கயந்தலை" என்று செய்யுட்களில் வருமிடந்தோறும் பெருமை பொருந்திய தலை, அல்லது மென்மையான தலை என்றுதான் பொருள் கொளல் வேண்டும். முன்னொட்டு எதுவுமின்றிக் "கயந்தலை" என்று மட்டும் வந்தால் யானைக்கன்று எனப்பொருள் கொள்ளல் பொருந்தாது.

"கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக்
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி."
- அகநா.165:1 - 3

"மெல்லிய தலையினை உடைய மடப்பத்தினையுடைய பெண் யானை, படுகுழியில் வீழ்ந்து அகப்பட்டதென்று களிற்றி யானை விளித்தல் பொருந்திய முழக்கத்தினை யஞ்சி மெல்லென எழுந்த செய்ய வாயையுடைய யானைக்கன்று," என்பது பொருள். ஈண்டு "கயந்தலை மடப்பிடி" என்று பெண் யானை குறிப்பிடப்படுவதையும், இம்மடப்பிடியின் கன்று "செவ்வாய்க் குழவி" எனக் குறிப்பிடப்படுவதையும் கவனிக்க வேண்டும்.

"கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி." - மலைபடு - 307

இங்கே கன்று வேறாகவும் "கயந்தலை மடப்பிடி" வேறாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. "கன்று வயிற்றிலே உண்டான மெல்லிய தலையினை உடைய மடப்பிடி," என்பது நச்சினார்க்கினியர் உரை. மடப்பிடி - இளம் பெண்யானை.

பிடிக்குக் "கயந்தலை" அடைமொழியாக வந்தாற்போல, களிற்றுக்கும் "கயந்தலை" அடைமொழியாக வருவதுண்டு. "கயந்தலைக் களிற்றின்" - சூளாமணி -106. ஆண் யானையின் தலை "கயந்தலை" எனப்பட்டது. கயந்தலை -பெரியதலை என்ற பொருளில் இங்கு வந்துள்ளது. இவை போல் யானைக்கன்றின் தலையும் கயந்தலை எனக்குறிப்பிடப்படும் பாடலும் உண்டு. "கயந்தலைக் குழவி கவியுகிர் மடப்பிடி" - அகநா.229:4. மடப்பிடிக்கு முன் குழவியும் சேர்ந்து "கயந்தலைக் குழவி" என வந்ததால் யானைக் கன்றினைக் குறித்தது.

கயந்தலை உயர்திணையிலும் அடைமொழியாய் வருவதுண்டு.

புதல்வருடைய மென்மையான தலையைப் "புதல்வர் கயந்தலை" என்று பரிபாடல் (16:8) குறிப்பிடக் காணலாம். இப்பரிபாடலிலேயே வேறொரு இடத்தில் (5:10) "மூவிரு கயந்தலை" என வருகிறது. இங்கு பரிமேலழகர் "ஆறுதிருமுடிகளை உடையோய்" எனப்பொருள் எழுதியதுடன், "கயந்தலை என்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; அஃது ஈண்டு ஆகுபெயராய் அண்மை விளியேற்றது" என்று எழுதினார். முருகன் தலைகள் ஆறும் "மூவிரு கயந்தலை" எனப்பட்டன.

உரல் போன்ற அடியினை உடையது பெரிய யானை. அதனால் "கறையடியானை" - (அகநா - 142:9) எனப்பட்டது. யானைக் கன்றின் கால்கள் துடிபோன்று இருப்பதால் "துடியடிக் கயந்தலை" (கலித் -10:8) என்றார் பாலைக்கலி பாடிய பெருங்கடுங்கோன் (துடி - உடுக்கையென்னும் பறைவகை). இவ்விடத்தில் "துடியடி"யின்றி, "கயந்தலை" மட்டும் வந்திருந்தால் யானைக் கன்றைக் குறிக்காது. கயந்தலை என்று மட்டும் வந்து யானைக் கன்றைக் குறித்த இடம் பழந்தமிழ்ச் செய்யுட்களில் யாண்டும் இல்லை. அதனால்தான் 1936ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வையாபுரிப் பிள்ளை தலைமையில் தொகுக்கப்பட்டு வெளிவந்த தமிழ் லெக்சிகனில், எங்கும் கயந்தலை -யானைக்கன்று என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் நிகண்டுகளைப் பின்பற்றிப் பல அகராதிகளில் கயந்தலை -யானைக்கன்று என்று எழுதிவிட்டனர். இது முன்னோர் கொள்கைக்கு முரணாகும்.

மா.சின்னு

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: மின் தமிழ் குழுமத்தில் இட்ட திரு. ஒளவை. ந. கண்ணன்.

***

இந்தக் கட்டுரை மிக நல்ல கட்டுரை. ஒரு அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறது. ஆனால் கொஞ்சம் புலமைத்தமிழில் அமைந்திருக்கிறதோ என்ற ஐயம் இருக்கிறது. இன்னும் எளிமையாக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் சொல்லுங்கள்; இக்கட்டுரைக் கருத்தைத் தழுவி இன்னொரு கட்டுரை எழுதி இடுகிறேன். நன்றி.

10 comments:

Raghav said...

கட்டுரை என்னை மாதிரி அரைகுறை தமிழ் தெரிந்தவனுக்கு ரொம்பவே கடினமா இருக்கு குமரன்.. பாதி படித்து விட்டு, இது எனக்கான பதிவு அல்ல என்று தெரிந்து கொண்டேன்.. :)

தருமி said...

குமரன்,

எப்படி இப்பதிவின் தொடுப்பு எனது இப்பதிவில் வந்துற்றது என்பதை அறியேன்; விளக்க முடியுமா?

மதுரையம்பதி said...

//பாதி படித்து விட்டு, இது எனக்கான பதிவு அல்ல என்று தெரிந்து கொண்டேன்.. //

ரீப்பிட்டே....படிக்காம விடல்ல...ஆனா படிச்சது ஏதும் மண்டைல ஏறல்ல...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தருமி said...
குமரன்,
எப்படி இப்பதிவின் தொடுப்பு எனது இப்பதிவில் வந்துற்றது என்பதை அறியேன்; விளக்க முடியுமா?//

ரிப்பீட்டே! :)

இப்பதிவின் தொடுப்பு எனது இப்பதிவில் வந்துற்றது!

குமரன் (Kumaran) said...

இல்லை இராகவ். நீங்களும் படிக்க வேண்டிய கட்டுரை தான் இது. கொஞ்சம் கடின நடைன்னு எனக்கும் தோன்றியதால் தான் கேட்டேன். (கேட்டிருக்கக் கூடாதோ? கேட்டதால் தானே இப்படி சொல்கிறீர்கள்? :-) )

இந்தக் கட்டுரைக் கருத்தைத் தழுவி என் நடையில் எழுதுகிறேன். அப்போது கொஞ்சம் எளிமையாக இருக்கும் (என்று நம்புகிறேன்). அதுவும் ஒன்னும் புரியாதுய்யா என்பீர்களோ? :-)

குமரன் (Kumaran) said...

என் பதிவிற்கு நீங்கள் வந்துற்று பல நூறு நாட்கள் ஆகிவிட்டன என்பதால் இச்சதி நடந்துற்றது தருமி ஐயா. :-)

வந்துற்றீர்கள் பாருங்கள். :-)

உங்கள் பதிவை பின்பற்றுகிறேன் என்று ப்ளாக்கரிடம் சொன்னால் உங்கள் இடுகைகளை என் இடுகையிலும் என் இடுகைகளை உங்கள் இடுகையிலும் தொடுத்து விடுகிறார் ப்ளாக்கர். அதனால் தான் இவ்விடுகையின் தொடுப்பு உங்கள் இடுகையில் தென்படலாயிற்று.

இதே தான் ஆன்மிகப் பெருந்தலைவர் இரவிசங்கரின் இடுகையிலும் நடந்தேறியது. அவரும் அங்கிருந்து இங்கு நடந்து என் பதிவில் ஏறி கேள்வியால் வேள்வி செய்திருக்கிறார். :-)

குமரன் (Kumaran) said...

மௌலி. நான் கடைசியில அந்த ஒரு வரி எழுதியிருக்கக் கூடாது. அதனால தானே இராகவ் தம்பி சொன்னதை வழிமொழியுறீங்க? :-)

சொன்ன மாதிரி என் நடையில் இக்கட்டுரையைக் கடைவிரிக்கிறேன். கொள்வார் உண்டா இல்லையா என்று அப்ப தெரிஞ்சிரும்.

குமரன் (Kumaran) said...

கண்ணபிரான் (lower case - not caste - letters) கமா இரவி சங்கர் (KRS) (upper case - not caste - letters), படியேறி வந்து சொன்னதுக்கு நன்றி. இந்தச் சதி எப்படி நடந்தேறியது என்று மேலே சொல்லியிருக்கேன். பாருங்க. நீங்க பாக்க எல்லாம் தேவையில்லை - உங்களுக்கு நல்லாவே தெரியும்ன்னு தெரியும் - ஆனாலும் ஒரு பார்வை பாருங்க. குரு பார்வை எல்லா தோசங்களையும் நீக்குமாம். :-)

கவிநயா said...

நல்ல தமிழ் படிக்க சுகமாகத் தான் இருக்கிறது :)

குமரன் (Kumaran) said...

ஆகா. யாராவது ஒருத்தர் இப்படி சொல்லமாட்டாங்களான்னு காத்திருந்தேன். நீங்க சொல்லிட்டதால இதை மறுபடி எழுதப் போறதில்லை. எழுத இன்னும் நிறைய இருக்கே. :-)