Tuesday, January 13, 2009

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா



இதோ மார்கழி முடிந்து தை பிறக்கப் போகிறது. தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கப் போகிறது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்; தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

தை ஒன்றாம் நாள் என்றால் இன்னொரு புனிதமான நிகழ்வும் நினைவிற்கு வரும். ஒரு மண்டல காலம் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்குச் செல்லும் அடியார்கள் கொண்டாடும் மகரவிளக்கு தரிசனம்.


இந்தப் புனிதத் திருநாளில் பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளும் புத்தாண்டு வாழ்த்துகளும் சொல்லிக் கொண்டு ஐயப்பனை சரணடைவோம்.

***



சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா (3)

பந்தள மன்னா எந்தனை காவாய்
சந்ததம் உந்தனை பஜித்தேன் சுவாமி (சரணம் ஐயப்பா)

கலியுக வரதன் நீ கரி குகன் அனுஜன் நீ
வலிமிகு விதியையும் நலிவுறச் செய்வோனே (சரணம் ஐயப்பா)

சுத்தியுடன் விரதம் காத்திடும் பக்தர்க்கு
சத்தியமாய் அருள் புரிந்திடும் வள்ளல் நீ
நம்பினோர் கெடுவதில்லை உன்னை
கும்பிடுவேன் கூவி அழைத்திடுவேன் சுவாமி (சரணம் ஐயப்பா)



பாடியவர்: திருமதி. எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
இயற்றியவர்: ஆத்மா
இராகம்: ரேவதி
தாளம்: மிஸ்ரசாபு


சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

பந்தள மன்னா எந்தனைக் காப்பாய்; எப்போதும் உந்தனை போற்றினேன் தலைவனே. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

கலியுகத்தில் எல்லா வரங்களும் தருபவன் நீ. ஆனைமுகன் ஆறுமுகன் தம்பி நீ. மிகுந்த வலிமை கொண்ட விதியையும் வலிமை கெடச் செய்பவன் நீ. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

தூய்மையுடன் நோன்பு நோற்றிடும் அன்பர்களுக்கு உறுதியாக அருள் புரிந்திடும் வள்ளல் நீ. உன்னை நம்பினோர் கெடுவதில்லை; உன்னைக் கும்பிடுவேன்; கூவி அழைத்திடுவேன் தலைவனே. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

12 comments:

pudugaithendral said...

பூத நாத சதாநந்தா சர்வ பூத தயாபரா.

ரக்‌ஷ ரக்‌ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ.

மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

வாங்க புதுகைத் தென்றல். அருமையான சுலோகம் இது. உடனே சாஸ்தா பஞ்சரத்னத்திற்குப் பொருள் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றே எழுத முடிந்தால் சொல்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

சாஸ்தா பஞ்சரத்னத்திற்குப் பொருளை ஏற்கனவே நண்பர் மௌலி எழுதிவிட்டார். இதோ சுட்டி.

http://sthothramaalaa.blogspot.com/2008/06/blog-post_18.html

pudugaithendral said...

அப்பாவும் மலைக்கு 25 வருடத்திற்கு மேல் சென்றவர். அதனால் இந்த ஸ்லோகங்கள் பழக்கமாகிவிட்டது.

இதோ என் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

மொளலியின் விளக்கத்தைப் போய் படிக்கிறேன்.

Raghav said...

சுவாமியேய் சரணம் ஐயப்பா!!

மகரஜோதி அன்று நல்லதொரு பாடலையும் பதிந்தமைக்கு நன்றி குமரன்...

சிறு வயதில் ஊரில் நடக்கும் அனைத்து ஐயப்ப பஜனையிலும் கலந்து கொண்டு பாடுவேன். இப்போது எங்கே..

மெளலி (மதுரையம்பதி) said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் குமரன்.

தமிழ் said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சாமியேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
சரணம் ஐயப்பா...

ஐயப்பன் பாட்டு தான் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கா? :)

ஐ+அப்பன் என்பதற்கு விளக்கம் கொடுங்கள் குமரன்.

இனிய தமிழ்ப் புத்தாண்டு, தைத் திருநாள்-பொங்கல் வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) said...

நானும் நிறைய ஐயப்பன் பஜனைகளில் சிறுவயதில் கலந்து கொண்டிருக்கிறேன் இராகவ்.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. பொங்கல் நல்வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்றி திகழ்மிளிர். இனிய பொங்கல் & புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

விளக்கமெல்லாம் நீங்கள் தான் மிக எளிதாகத் தருவீர்கள் இரவி. :-)

அம்மன் பாட்டு பக்கம் சென்றீர்களா?