Wednesday, January 07, 2009

ஐங்குறுநூறு காட்டும் மாதொருபாகன்

மூவகை உலகங்கள் இருக்கின்றனவாம். மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நடு உலகங்கள். மக்களும் மாக்களும் மரம் செடி கொடிகளும் வாழும் உலகங்கள் நடு உலகங்கள். மக்களில் சிறந்தோர் முனிவரும் தேவரும் எனப்பட்டோர் வாழும் உலகங்கள் மேல் உலகங்கள். மக்களில் கீழானோர் கீழ்மதி படைத்தோர் வாழும் உலகங்கள் கீழ் உலகங்கள். இவை யாவுமே மனத்தளவிலான ஆன்மிக உலகங்கள். இம்மூவகை உலகங்களும் இந்த பூமி என்ற ஒற்றைத் தளத்திலேயே இருக்கின்றன - இவை யாவும் ஆன்றோர் வாக்கு. இம்மூவகை உலகங்களைப் பற்றி வடமொழிப் பனுவல்களும் பழந்தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. அவ்வாறு கூறும் ஒரு பழந்தமிழ்ப் பாடலைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.

இம்மூவகை உலகங்களும் யாருடைய திருவடியின் கீழ் தோன்றின என்றும் இப்பாடல் சொல்கிறது. அவன் 'ஒருவன்' என்று நின்றவன். இதனையே வேதமும் 'ஏகம் அத்விதீயம்' என்று சொல்கிறது. இந்தப் பாடல் இப்படி 'ஒருவன்' என்று சொன்னதையே பிற்காலப் பாடல் ஒன்று 'ஒன்றானவன் உருவில் இரண்டானவன்' என்கிறது.

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே


நீல மேனி கொண்டவன் ஒருவன் - அவன் மாயோன். நீல மேனி கொண்டவள்? அவள் மாயோள். அவளை தன் மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் 'ஒருவன்'. அவன் யார்? அவன் தான் சேயோனின் தந்தையான சிவபெருமான். அவனுடைய திருவடி நிழலில் தான் மூவகை உலகங்களும் ஒவ்வொன்றாக முகிழ்த்தனவாம்.

நீல மேனியும் தூய்மையான ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த உமாதேவியை தன் மேனியின் ஒரு பாகத்துக் கொண்ட ஒருவன் சிவபெருமான். அவனது திருவடிகளின் நிழலின் கீழ் மூவகை உலகங்களும் முறையே முகிழ்த்தன என்கிறார் இந்தப் பாடலைக் கடவுள் வாழ்த்தாக 'ஐங்குறுநூறு' என்ற சங்க கால தொகை நூலில் பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்'. ஆமாம் இவர் தான் திருமுருகனை 'சேவலங்கொடியோன்' என்று குறுந்தொகையில் பாடியவர். இங்கே அவனது தாய் தந்தையைப் பாடுகிறார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் எங்குமே இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்புகளை இது வரை நான் காணவில்லை. வடமொழி வேதத்தில் இலிங்க வழிபாடு இகழப்படுவதாகவும் அப்படி இகழப்படுவது திராவிடர் வழிபாடே என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் கருத்தை நிலை நாட்ட அவர்கள் காட்டும் ஒரே தரவு 'சிசுன தேவர்கள்' என்று யாரையோ இகழ்ந்து பேசும் வேத வரியை. இலிங்க வழிபாடு திராவிடர்/தமிழர் வழிபாடு என்றால் அந்த வழிபாட்டைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் ஏதேனும் குறிப்பு இருக்குமே என்று தேடி வருகிறேன். இது வரை பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலும் சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் காணவில்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட குறிப்புகள் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

அருவுருவான இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்பைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கும் போது சிவபெருமானின் உருவ உருவை மிகவும் வருணித்து வரும் பாடல் குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது பழந்தமிழர்கள் அருவுருவத் திருமேனியான இலிங்கத்தை விட உருவத்துடன் கூடிய சிவபெருமானையே பெரிதும் போற்றியிருப்பார்களோ என்று தோன்றுகிறது.

இப்பாடலில் மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டதாக சிலர் எண்ணிக் கொள்ளும் அருத்தநாரி/மாதொருபாகன் உருவத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. சைவ சமயம் ஆணாதிக்கம் கொண்ட சமயமாகத் தொடக்கத்தில் இருந்ததாகவும் கால மாற்றத்தில் வேண்டா வெறுப்பாக பெண்ணுக்கு சம உரிமை தருவதைப் போல் மாதொருபாகன் என்ற உருவத்தை ஆக்கி வழிபட்டதாகவும் சில மூடர்கள் சொல்லித் திரிகின்றனர். அப்படி சொல்வதெல்லாம் அவர்களின் தடம் புரண்ட கற்பனையே என்பதை இந்தப் பாடல் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. பழந்தமிழ் இலக்கிய காலத்திலேயே மாதொருபாகன் என்ற திருவுருவம் தமிழர் நடுவே மிகவும் பெரிதாக வழிபடப்பட்டிருக்கிறது என்பது இப்பாடலில் சிவபெருமானின் திருப்பெயரைக் கூட குறிப்பிடாமல் 'வாலிழை பாகத்து ஒருவன்' என்று குறிப்பதிலேயே தெரிகிறது.

சிவபெருமானின் திருவடி நிழலைப் பற்றி இந்தப் பாடல் பாடுவதைப் படிக்கும் போது 'மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இள வேனிலும் மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே' என்று பக்தி இலக்கியக் காலத் திருமுறைப் பாடல் நினைவிற்கு வருகிறது.

9 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)

குமரன் (Kumaran) said...

:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இரண்டாம் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீல மேனி வாலிழை//

ரொம்பப் பிடிச்ச வரிகள்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்த நீல மேனிங்க தொல்லை தாங்க முடியலை! :))
அண்ணனும் சங்கர நாராயணனா பங்கு போட்டுக்கறான்! - பிறைத்தங்கு சடையானை வலத்தே வைத்து!
தங்கச்சியும் மாதொரு பாகனா பங்கு போட்டுக்கறா! - நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பழந்தமிழ் இலக்கியங்களில் எங்குமே இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்புகளை இது வரை நான் காணவில்லை//

இலிங்கத் திருமேனிக்குத் திருமூலரின் திருமந்திரத்தைத் தரவாகக் கொள்ள முடியுமா குமரன்?

குமரன் (Kumaran) said...

நானும் இரண்டாம் :-)

குமரன் (Kumaran) said...

திருமூலரின் திருமந்திரத்தில் இலிங்கத் திருமேனியைப் பற்றி வருகிறதா? அப்பாடல்களைச் சொல்லுங்கள் இரவி.

திருமந்திரத்தின் காலம் சங்க காலம், சங்கம் மருவிய காலம் என்றால் அப்பாடல்களைத் தரவாகக் கொள்வதில் தடையேதும் இல்லை. அந்நூலின் காலத்தையும் சொல்லுங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
திருமூலரின் திருமந்திரத்தில் இலிங்கத் திருமேனியைப் பற்றி வருகிறதா? அப்பாடல்களைச் சொல்லுங்கள் இரவி//

சைவச் செம்மலிடம் கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் அடியேனிடம் கேட்டால் எப்படி குமரன்? :)

//அந்நூலின் காலத்தையும் சொல்லுங்கள்//

மறுபடியும் கேள்வியா? :)
சைவச் செம்மலே வாரும்!
குமரனின் ஐயம் தீரும்!