Sunday, December 21, 2008

காலங்களின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்கள்

தமிழ் பல்கலைக்கழக பட்டய படிப்பிற்கான பாட திட்டத்தில் இருக்கும் ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தமிழ் இலக்கியங்களை அவை இயற்றப்பட்டக் கால அடிப்படையில் தொகுத்திருந்தார்கள். அதனை எடுத்து இங்கே இடுகிறேன்.

***

(1) சங்க கால இலக்கியங்கள் (கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை)

தோன்றிய நூற்கள்: அகத்தியம், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

(2) சங்கம் மருவிய கால இலக்கியங்கள் (கி.பி. 200 முதல் கி.பி. 450 வரை)

பதினெண் கீழ்க்கணக்கு நூற்கள் இக்காலத்தில் தோன்றின. சங்க காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கள் குடித்தலையும், பரத்தமைத் தொடர்பையும் இக்கால இலக்கியங்கள் கண்டித்தன. பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் வேரூன்றின. தனிப்பாடல் அமைப்பை இளங்கோ மாற்றி சிலப்பதிகாரம் எனும் காப்பியம் தந்தார். பசியைப் போக்குதலே உயர்ந்த அறம் எனும் நோக்கில் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை எனும் காப்பியம் படைத்தார். குணாட்டியர் என்பவரால் பைசாச மொழியில் இயற்றப்பட்ட பிருகத் கதை எனும் நூலின் அடிப்படையில் பெருங்கதை அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் கொங்கு வேளிர். இது சமண சமய நூல்.

(3) சோழர் காலக் காப்பியங்கள் (கி.பி. 900 முதல் கி.பி. 1300 வரை)

1. சீவகசிந்தாமணி - திருத்தக்க தேவர்

2. வளையாபதி - 72 பாடல்கள் தற்போது கிடைத்துள்ளன. ஆரிய வைசிய புராணத்தின் அடிப்படையில் அமைந்தது.

3. குண்டலகேசி - பௌத்தம் சார்ந்தது.

4. நீலகேசி - தமிழின் முதல் தர்க்க நூல். புத்த சமய நூலுக்கு (குண்டலகேசி) எதிர்ப்பாகத் தோன்றியது. சமண சமய நூல்.

5. சூளாமணி - வடமொழியில் ஜினசேனர் எழுதிய மகாபுராணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

6. உதயணகுமார காவியம் - 367 பாடல்கள் உடையது. உதயணன் வரலாறு கூறும் நூல் இது. சமண சமயம் சார்ந்த நூல்.

7. யசோதர காவியம் - நூலாசிரியர் சமணர்.

8. நாககுமார காவியம் - சென்னைப் பல்கலைக்கழகம் 1973ல் புலவர் சண்முகத்தைக் கொண்டு இந்நூலை வெளியிட்டது. நாகபஞ்சமி கதை என்ற பெயர் உண்டு. நாககுமாரனின் கதையைக் கூறும் காப்பியம் இது.

9. மேரு மந்தர புராணம் - சமண சமயத்தின் சமய சாரம் இந்நூல். ஆசிரியர் வாமனாசாரியர். 'நல்வினையோ தீவினையோ நம்மைத் தொடரும்' என்கிறது இந்நூல்.

10. பெரிய புராணம் - ஆசிரியர் சேக்கிழார். காலம். கி.பி. 12ஆம் நூற்றாண்டு. அப்போது சோழ நாட்டை ஆண்ட மன்னன் இரன்டாம் குலோத்துங்கன். சேக்கிழார் இந்நூலுக்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும். 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்களின் வரலாறு கூறும் நூல்.

11. கம்பராமாயணம் - ஆசிரியர் கம்பர். தமிழில் தோன்றிய காப்பியங்களுள் அளவிற் பெரியது. இராமபிரானின் வரலாறு கூறும் நூல்.

12. நளவெண்பா - ஆசிரியர் புகழேந்தி. வியாசபாரதத்தில் வரும் நளன் பற்றிய கதையைக் கூறுவது. பெண்பா யாப்பில் அமைந்தது.

(4) நாயக்கர் காலம்

இதைச் சிற்றிலக்கிய காலமாக அழைக்கலாம். இக்காலத்தில் தான் கோவை, பரணி, பள்ளு, பிள்ளைத்தமிழ், குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள் தோன்றின.

நன்றி: இணையத் தமிழ் பல்கலைக்கழகம்.

16 comments:

தேவன் மாயம் said...

தமிழ் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்!!!
நவீன தமிழ் இலக்கியமும்,மொழிபெயர்ப்பு இலக்கியமும் எந்த அளவில் உள்ளன? அவற்றை பேராசிரியர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

தேவா...

Unknown said...

தமிழ் பல்கலைக்கழக பட்டய படிப்பிற்கான பாட திட்டத்தில் இருக்கும் ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தமிழ் இலக்கியங்களை அவை இயற்றப்பட்டக் கால அடிப்படையில் தொகுத்திருந்தார்கள்.//

ஆசிரியர் யார்?

அகத்தியம் இல்லை இன்று.

தொல்காப்பியம் உண்டு.

இது கி.மு 500 முதல், கி.பி. 200 வரை. என்றாள், எதை எடுத்துக்கொள்வது?

7 நூற்றண்டுகளில் இவ்வளவுதானா தமிழர்களால் எழுத முடிந்தன?

கி.மு 500க்கு முன், தமிழின் நிலை என்ன? தமிழர் வாழ்க்கை எப்படி?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பட்டியலில் முழுமை தெரியவில்லையே குமரன்!

திருக்குறள் காலம் சொல்லப்படவில்லை!

பெரியபுராணம் இருக்கு! திருமுறைகள் இல்லை!

//சங்க கால இலக்கியங்கள் (கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை)//

இது மிகவும் விரிந்த காலம்! 700 ஆண்டு கால இலக்கியத்தை ஒரே காலத்தில் அடைப்பது மூச்சு தான் முட்டும்!
இவ்வளவு விரிவில் சொன்னால் முழுமை ஆகாதே! இன்னும் பகுத்துச் சொல்ல வேண்டும்!

pathykv said...

kumaran,
paTTayappaDippil viraindu veTRi peRa vazhttukkaL!
K.V.Pathy

குமரன் (Kumaran) said...

நன்றி தேவா. பேராசிரியர்கள் எவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் பட்டயப் படிப்பு படிக்கவில்லை. அதன் பாடதிட்டத்தில் இருக்கும் கட்டுரையைத் தான் இணையத்தில் இருந்து எடுத்துப் படிக்கிறேன். அதில் இருந்த இந்தப் பகுதியை பகிர்ந்து கொண்டேன். அதனால் பேராசிரியர்கள் தற்கால இலக்கியங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது.

குமரன் (Kumaran) said...

இந்தக் கட்டுரையின் ஆசிரியர் யார் என்று தெரியாது pvina ஐயா.

அகத்தியம் இப்போது கிடைப்பதில்லை என்று நானும் படித்திருக்கிறேன்.

தொல்காப்பியம் சில வரிகள் படித்திருக்கிறேன். இணையப் பல்கலைக்கழக நூலகத்தில்.

சங்க காலம் என்று கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை பிற ஆராய்ச்சியாளர்களும் சொல்லப் படித்திருக்கிறேன். அதனைத் தான் இந்தக் கட்டுரையும் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

தமிழர்களால் ஏழு நூற்றாண்டுகளில் இவ்வளவு தான் எழுத முடிந்தது என்று இந்தக் கட்டுரையும் சொல்லவில்லை; நானும் சொல்லவில்லை. இன்னும் நிறைய எழுதியிருப்பார்கள் தான். அகத்தியமும் தொல்காப்பியமும் இலக்கண நூற்கள்; நிறைய இலக்கியங்கள் எழுதப்பட்ட பின்னர் தான் இலக்கண வரைவு நடக்கும் என்றும் படித்திருக்கிறேன். அதனால் இன்னும் பல நூற்றாண்டுகளாக தமிழில் இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்றே அறிஞர்கள் ஊகிக்கிறார்கள். ஆனால் கிடைத்தவற்றை மட்டுமே இங்கே பட்டியல் இட்டிருக்கிறார்கள். இவை போக வேறு ஏதேனும் சங்க கால இலக்கியங்கள் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள்.

கிடைத்த தரவுகளின் படி தான் ஏதேனும் சொல்ல முடியும். சங்க காலத்தில் தமிழர் வாழ்க்கை, தமிழின் நிலை இவற்றைப் பற்றியே கிடைத்த நூற்களின் படி தகுந்த அளவிற்கு ஆய்வுகள் நடக்கவில்லை என்பது என் ஆதங்கம். நிறைய ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால் இன்னும் நிறைய நடக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாத உள்ளதை உள்ள படி சொல்லும் ஆய்வுகள் இன்னும் நிறைய வேண்டும். அப்படி நிறைய ஆய்வுகள் இல்லை என்றோ அப்படியே இருந்தாலும் அவை மக்களின் நடுவில் அவ்வளவாக படிக்கப்படவில்லை என்றோ தான் எனக்குத் தோன்றுகிறது.

அப்படி இருக்க கி.மு. 500க்கு முன் தமிழின் நிலை பற்றியும் தமிழர் வாழ்க்கையைப் பற்றியும் எப்படி சொல்வது? இலக்கியத் தரவுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். தொல்காப்பியம் தான் கிடைத்தவற்றிலேயே மிகப் பழைமையானது என்கிறார்கள். கி.மு. 500க்கு முந்தைய நிலையைச் சொல்ல கல்வெட்டாய்வுகளும் அகழ்வாய்வுகளும் தான் உதவ வேண்டும்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவி. இது முழுமையான பட்டியல் இல்லை. காப்பியங்கள் என்று வகைப்படுத்தப்பட்டவை மட்டுமே இப்பட்டியலில் இருக்கின்றன.

திருக்குறளின் காலம் ஏன் சொல்லப்படவில்லை என்று தெரியவில்லை. ஆனால் பதினெண்கீழ்க்கணக்கு நூற்கள் கி.பி. 200 முதல் எழுதப்பட்டவை என்று இந்தப் பட்டியலும் வேறு இடங்களிலும் படித்திருக்கிறேன். அவை சங்கம் மருவிய காலத்து நூற்கள் என்று. திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் ஒன்று. அதனால் தான் திருவள்ளுவரின் காலம் கி.மு. 2 / கி.மு. 31 என்னும் போது எனக்கு கேள்வி எழுந்தது.

சங்க கால, சங்கம் மருவிய கால தொகை நூற்களை இந்தப் பட்டியலில் சேர்த்தவர்களுக்கு ஏன் நாலாயிரப்பனுவல்களையும் சைவத்திருமுறைகளையும் சேர்க்கும் எண்ணம் வரவில்லை என்று தெரியவில்லை. சமயப்பனுவல்கள் என்றும் ஒதுக்க இயலாது - சமண பௌத்த நூற்களைப் பட்டியல் இட்டிருக்கிறார்களே.

சங்க கால நூற்களை இன்னும் பகுத்து சொல்வது கடினம். ஏனெனில் அவை பெரும்பாலும் தொகை நூற்களாக இருப்பதால். பத்துப்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு நூலுக்கும் காலத்தை உறுதிப்படுத்த இயலலாம்; ஆனால் எட்டுத்தொகையில் இருக்கும் ஒவ்வொரு பாடலுக்கும் அப்படி சொல்ல இயலாது.

குமரன் (Kumaran) said...

மன்னிக்கவேண்டும் பதி ஐயா. நான் பட்டயப்படிப்பு படிக்கவில்லை. அப்படி பொருள் வரும்படி தவறாக எழுதிவிட்டேன்.

ஆனாலும் தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

ப்ரேவ் செர,
குமரன்.

Unknown said...

//அப்படி இருக்க கி.மு. 500க்கு முன் தமிழின் நிலை பற்றியும் தமிழர் வாழ்க்கையைப் பற்றியும் எப்படி சொல்வது? இலக்கியத் தரவுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். தொல்காப்பியம் தான் கிடைத்தவற்றிலேயே மிகப் பழைமையானது என்கிறார்கள். கி.மு. 500க்கு முந்தைய நிலையைச் சொல்ல கல்வெட்டாய்வுகளும் அகழ்வாய்வுகளும் தான் உதவ வேண்டும்.//


இந்த கருத்தைத்தான் நான் எதிர்பார்த்தேன். விழைகிறேன்.

‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி
மூத்த குடி தமிழ்க்குடி’

என்று எழுதியவர் எந்தவொரு திராவிடக் கழகத் தலைவரல்ல. கழகங்கள் பிறப்பதற்கு முன், ஆயிரக்கணக்கானவாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த ஒரு தொன்மொழிப்புலவரே ஆவர்.

இது மிகை. ஆனால் மிகைப்படுத்தல் கவிஞர்களின் ஏகபோகயுரிமை. இதில், சொல்ல வந்த கருத்து: நமக்கு கிடைத்த முதற்பநுவலான தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் மொழியில் தொன்மொழிப்புலவர்கள் இருந்தார்கள். (தொல்காப்பியரும் அதைச்சொல்கிறார்! குமரனும் ஆமோத்து விட்டார்!) மொழி வளர்ச்சியடைந்து, இலக்கியம் படைக்குமளவுக்கு விரிந்திருந்தது.

அப்படிச் சிறப்புற்ற மொழிக்கே இலக்கணம் வரைய முடியும். அதைச் செய்தது அகத்தியம். அது கிட்டவில்லை. கிட்டியது பின்னூலான தொல்காப்பியமாகும். இல்லையா?

அஃகாதவது, கிடைத்த நூல்கள், தொன்மொழியான தமிழில், வடமொழி கலக்கத் தொடங்கிய காலத்தவைதான் என்றுணர்க.

வடமொழி எப்படி இங்கே வந்தது? யார் கொண்டு வந்தது?

இக்கேள்விகளுக்கு பதில் தேடும்போது அரசியல் நுழைகிறது. இரு குழுக்களாக பிரிகிறீர்கள். உங்கள் எழுத்துகளின், எங்கே, கண்ணன் ஆரியத்தெய்வமாகி விடுவானோ? என்ற பயம் தெரிகிறது. முருகனைத் தமிழ்க்கடவுள் என்போரை நையாண்டி பண்ணுவதிலேயே காலம் கழிகிறது.! உடனே நான்கு பேர் உள் நுழைந்து ஒத்து ஊதுகிறார்கள்! அதில் ஒரு அலாதி இன்பம்!!

இப்போது, சொல்லுங்கள்: நினைப்புகெட்டா நெடுங்காலத்திலிருந்தே, தமிழ் தழைத்திருக்கிறது. வளர்ச்சியடைந்த மொழிக்கு சொந்தக்காரர்கள் வளர்ச்சியடைந்த நாகரிகத்திற்கும் சொந்த்தக்காரர்கள். அவர்கள் தெய்வங்கள் எவை எவை? கண்ணனா? ஸ்கந்தனா? சிவனா? கொற்கையா? மாயோனா? திருமாலா? அப்படியே இத் தெய்வங்கள் இவர்களில் ஆதி தெய்வங்கள் என்றால், வடநாட்டவரும் தொன்று தொட்டு இத்தெய்வங்களைத்தானே (ஒரு சில தவிர) வணங்கி வருகின்றனரே!. இங்கிருந்து அங்கு போனதா? அங்கிருந்து இங்கு வந்ததா?

கண்ணன் ஆரியத்தெய்வமா? முருகன் தமிழ்க் கடவுளா? என்பனவற்றுக்கு ஏன் வடமொழி கலந்த காலத்திலிருந்துதான் தரவுகளைத் தேடுகிறீர்கள், குமரன்? அதற்கு முன், முடியாதென்ற ஒரே கரணியத்தால், இல்லை என்று முடிபாகி விடுமா? ஆழ்வார்கள் காலமே 7 அல்லது 8ம் நூற்றாண்டுகளிலிருந்துதான் தொடங்குகிறது. அவர்களிடம் போய் தரவுகளைத் தேடலாமா? தொல்காப்பியம் முதற்பனுவல் அல்ல! அது பழமையானது மட்டுமே! முதற்பனுவல் எது என்றெவராலே சொல்லவியலும்?

மனிதன் இப்பூலகில் தோன்றிய பின்தான் நிலவைப் பார்த்தான். அதற்காக, அவனுக்கு முன் நிலவே இல்லை என்று சொல்லுவானா? கல்வெட்டுகளும், அகழ்வாய்புகளும் கிடைக்கவெல்லையென்றால்…?

தொல்காப்பியத்திற்குப் பின்னர்தான், தமிழர் இறைவணக்கம் செய்தனரா?

எனவேதான் குமரன், நான் கி.மு என்ற பேச்சையே எடுத்தேன்!

Please don’t censor my words here.

குமரன் (Kumaran) said...

pvina, I definitely want to talk to you but might be delayed a bit in responding. Will do so as soon as I get some time. This is true for everyone's comment and not just yours. As you seemed to have a doubt that I will censor your words, I have to mention this.

அகரம் அமுதா said...

இக்குறிப்புக் கட்டுரையில் அகநானூறு புறநானூறு மற்றும் திருக்குறளின் காலங்கள் குறிப்பிடப்பட வில்லையே!

குமரன் (Kumaran) said...

//குமரனும் ஆமோத்து விட்டார்!) //

அடியேன் மிகச் சிறியவன். என் ஒப்புதல் எதற்கும் தேவையில்லை. என் கருத்துகளை உரைக்கிறேன். அவை தவறென்றால் மாற்றிக் கொள்கிறேன். பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பவன் இல்லை. அதனால் உங்கள் கருத்துகளையும் நேரடியாகச் சொல்லுங்கள். என் வாயைப் பிடுங்குவது போல் சுற்றி வளைத்துக் கேள்விகள் கேட்டு உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டிய தேவை இல்லை.

என் எழுத்துகளில் 'எங்கே கண்ணன் ஆரியத் தெய்வம் ஆகிவிடுவானா?' என்ற ஐயம் தென்பட்டிருக்கலாம். ஆனால் எனக்கு அதில் எந்த வித ஐயமும் இல்லை. கண்ணனும் சிவனைப் போல் சேயோனைப் போல் தமிழர் தெய்வமே. அதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை. ஆனால் இதனை ஒத்துக் கொள்ளாதார் நிறைய பேர் இருக்கிறார்கள். என் தொடக்கக் கால பதிவுகளில் பார்த்தீர்கள் என்றால் நான் இதனைப் பற்றி பேசியிருக்கவே மாட்டேன். 2006 ஜனவரியில் தமிழ்மணத்தார் என்னை விண்மீனாக இருக்க அழைத்தார்கள். அப்போது நான் எழுதிய சில இடுகைகளுக்கு வந்த பின்னூட்டங்களைக் கண்டால் தெரியும் - ஏன் நான் அப்போதிலிருந்து கண்ணனும் தமிழர் கடவுளே என்று நிலைநாட்டத் தரவுகளை வைக்கத் தொடங்கினேன் என்று. தரவுகளை வைப்பது எங்கே கண்ணன் ஆரியத் தெய்வமாகிவிடுவானோ என்ற பயத்தில் இல்லை; கண்ணன் ஆரியத் தெய்வமே என்று அடித்துக் கூறுபவர்களின் கூற்றினைத் தகர்க்க.

முருகனைத் தமிழ்க்கடவுள் என்போரை நையாண்டி செய்கிறேன் என்ற தோற்றம் என் எழுத்துகளில் தென்பட்டால் அதற்காக மிகவும் மிகவும் வருந்துகிறேன். முருகன் தமிழ்க்கடவுள் என்பதில் எனக்கு எள்ளவும் ஐயம் இல்லை. ஆனால் முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று சொல்பவர்கள் கண்ணனும் தமிழ்க்கடவுள் என்பதற்கு நான் காட்டும் தரவுகளைப் பார்க்க மறுக்கும் போது அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச வேண்டிய அவசியம் எழுகிறது. என் மற்ற எழுத்துகளையும் நீங்கள் காண்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என் முதல் வேலை தரவுகளை வைப்பதே அன்றி முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்பவரை நையாண்டி செய்வதில்லை. என் நேரமும் அந்த வகையில் நன்றாகவே கழிகிறது. வெறும் நையாண்டி மட்டும் செய்வதென்றால் நான் பதிவெழுதுவதே வீண். நான்கு பேர் உள் நுழைந்து ஒத்து ஊதுகின்றார்கள் என்றால் அவர்கள் சொல்வதில் ஏதேனும் தவறு காண்கிறீர்களா? அதனைச் சொல்லுங்கள்.

சும்மா பொத்தாம் பொதுவாக 'நையாண்டி செய்வதிலேயே காலம் கழிகிறது. நான்கு பேர் நுழைந்து ஒத்து ஊதுகிறார்கள். அதில் ஒரு அலாதி இன்பம்' என்றெல்லாம் பேசிக் கொண்டே சென்றால் உங்களுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றே சொல்லத் தோன்றும். தரவுகளுடன் பேசும் போது நீங்கள் அந்தத் தரவை மறுத்துப் பேசுங்கள்; அல்லது வேறு தரவுகள் வைத்துப் பேசுங்கள். அப்படி இன்றி பொத்தாம் பொதுவாக புறங்கையால் 'காலம் கழிகின்றது. ஒத்து ஊதுகின்றார்கள்' என்றால் எனக்கு நேரத்தைக் கழிக்க வேறு வேலைகள் இருக்கின்றன; சென்று வருகிறேன் என்றே சொல்லத் தோன்றுகிறது. :-)

அடுத்த பகுதியில் நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். அவற்றிற்கு பதில் சொல்ல மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நல்லதொரு கருத்தினைச் சொல்லியிருக்கிறீர்கள்.

முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று சொல்பவர்கள் தரும் தரவுகளைக் கண்டிருக்கிறீர்களா? வடமொழியும் கலக்கத் தொடங்கிய காலத்திலிருந்து தான் நமக்கு இலக்கியங்கள் கிடைத்திருக்கின்றன; அவற்றிலிருந்து தான் தரவுகளைத் தர முடியும்; தருகிறார்கள். அதே கால கட்டத்தில் இருக்கும் இலக்கியங்களிலிருந்து அதே அளவு தரவுகளைக் கண்ணனும் தமிழர் கடவுள் என்று காட்ட எடுத்துத் தந்தால் அதனை ஏற்றுக் கொள்வதில்லை அவர்கள். கேட்டால் தொல்காப்பியத்திற்கு முன்பிருந்தே முருகன் மட்டுமே தமிழ்க்கடவுளாக இருந்தான் என்பார்கள். ஐயா, அதற்கு முன்னால் இலக்கியத் தரவே இல்லையே? எந்த வகையில் அப்படி சொல்கிறீர்கள்? அப்படி சொல்வதெல்லாம் வெறும் ஊகங்கள் தானே. ஊகங்கள் என்றாலே தவறாக இருக்க பெரும்பாலும் வாய்ப்புகள் உண்டே. முருகன் தொல்காப்பியக் காலத்திற்கு முன்னர் வணங்கப்பட்டான் என்பதை ஊகித்து நீங்கள் சொல்வதைப் போல் கண்ணனும் தொல்காப்பியக் காலத்திற்கு முன்னர் வணங்கப்பட்டான் என்று ஊகித்துச் சொன்னால் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? இவை எல்லாம் கேட்டால் பதில் இல்லை.

இப்போது நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரடியான பதில்களைத் தருகிறேன்.

நெடுங்காலமாகத் தமிழ் தழைத்து வந்திருக்கிறது. கிடைத்த முதல் நூலாக தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் அமைவதிலேயே அது தெரிகிறது.

மொழி வளமுடன் இருந்தால் நாகரிகமும் வளமுடன் இருந்திருக்கும். ஏரணத்திற்கும் உகந்தது. வெளிப்படையாகவும் நாம் காணலாம்.

நாகரிக வளர்ச்சி பெற்றவர்கள் சமய நம்பிக்கை பெற்றவராகவும் இருப்பார்கள். அதிலும் ஐயமில்லை.

அவர்கள் வணங்கிய தெய்வங்கள் யாவை? கிடைத்த இலக்கியத் தரவுகளின் படி சிவன், கொற்றவை, மாயோன், சேயோன் என்று பல தெய்வங்கள். வடநாட்டவர் இத்தெய்வங்கள் அனைத்தையும் தொன்று தொட்டு வணங்கினார்களா? கிடைத்த இலக்கியத் தரவுகளிலிருந்து இத்தெய்வங்கள் வடநாட்டார் வழிபாட்டில் இருந்திருக்கிறது - ஆனால் வேதத் தெய்வங்கள் எனப்படும் இந்திரன், வருணன், அக்கினி போன்ற தெய்வங்களும் அவர்கள் வழிபாட்டில் இருந்திருக்கிறார்கள். இங்கிருந்து அங்கு போனதா? அங்கிருந்து இங்கு வந்ததா? அறியோம். ஊகத்தின் அடிப்படையிலும் சில கருத்தாக்கங்களின் அடிப்படையிலும் சில கருத்துகள் சொல்லப்படுகின்றன. அவை வடமொழியும் தமிழும் கலப்பதற்கு முன்னர் நடந்தவையாகச் சொல்லப்படுவதால் தமிழ் இலக்கியங்களைக் கொண்டு அவற்றை உறுதிப்படுத்த இயலவில்லை. வடமொழி இலக்கியங்களிலும் அவற்றை உறுதிப்படுத்தத் தேவையான அளவிற்குத் தரவுகள் இல்லை.

கண்ணன் ஆரியத் தெய்வமா? முருகன் மட்டுமே தமிழ்க்கடவுளா? என்பவற்றிற்கு ஏன் வடமொழி கலந்த காலத்திலிருந்து தரவுகள் தேடுகின்றீர்கள்? அதற்கு முன் முடியாதென்ற காரணத்தால் இல்லை என்று ஆகிவிடுமா? - நல்ல கேள்விகள்.

முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று சொல்பவர்கள் வைக்கும் தரவுகள் வடமொழி கலந்த காலத்திலிருந்தே இருக்கின்றன. அதனால் அதே அளவிற்குத் தரவுகள் கண்ணனும் தமிழர்கடவுள் என்று காட்ட இருக்கின்றன என்று சொல்லவே அந்தக் காலத்திலிருந்து தரவுகள் எடுத்து வைக்கிறேன் (வைக்கிறோம்). அதற்கு முன்னர் தரவுகள் இல்லை என்ற காரணத்தால் இவர்கள் தமிழர் கடவுள் இல்லை என்று ஆகிவிடாது என்பதில் எனக்கு ஐயமே இல்லை. ஆனால் முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்பவர்கள் முருகனே தொல்காப்பியக் காலத்திற்கு முன்னரும் தமிழ்த்தெய்வமாக இருந்தவன்; மாயோன் அப்படி இல்லை என்கிறார்கள்.

தமிழர்கடவுள் யார் என்பதில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர் காலங்களுக்குச் சென்று தரவுகளைத் தேடுவதில்லை. முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்பவர்கள் பக்தி இலக்கியக் காலத்திலிருந்து தரவுகள் தருவதில்லை. அவர்கள் தரும் தரவுகள் எல்லாம் சங்க இலக்கிய, சங்கம் மருவிய கால இலக்கியங்களிலிருந்தே. மாயோனும் தமிழ்க்கடவுள் என்னும் நாங்களும் அதே காலங்களில் இருந்தே தரவுகள் தருகிறோம். ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்து தருவதில்லை.

தொல்காப்பியம் முதல் நூல் இல்லை; கிடைத்தவற்றிலேயே பழமையான நூல். உண்மை தான். அதிலேயே மாயோனைப் பற்றி சொல்லியிருக்கிறது என்று காட்டுவது சங்க இலக்கியத் தரவுகளின் அடிப்படையில் மாயோனும் தமிழ்க்கடவுளே என்று உறுதிப்படுத்த. அதற்கு முன்னர் மாயோன் தமிழ்க்கடவுளாக இருந்ததில்லை என்று சொன்னால் அது ஊகத்தின் அடிப்படையிலான கற்பனை என்றே தள்ள வேன்டும்.

இறுதியாக ஒன்று: கிடைத்தத் தரவுகளின் அடிப்படையிலே தான் பேச இயலும். அதற்கு முன்னர் எபப்டி இருந்தது என்பதை யாரும் அறுதியிட்டுச் சொல்ல இயலாது. அதனால் கிடைத்தத் தரவுகளை வைத்துக் கொண்டு பேசுவது, பேசிக் கொண்டே இருப்பது, இதெல்லாம் நேரத்தை வீணடிப்பது என்று என்னால் நினைக்க இயலவில்லை. இந்த வேலையைத் தொடங்கிய பின்னர் தான் சமய இலக்கியங்களை மட்டுமே படித்திருந்த நான் சங்க இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினேன். அதன் சுவையால் மேன்மேலும் அதனைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் என் நேரம் மிக அருமையாகச் சென்று கொண்டிருக்கிறது. :-)

குமரன் (Kumaran) said...

அகரம் அமுதா,

அகநானூறு, புறநானூறு, திருக்குறள் இவற்றின் காலம் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. அகநானூறும் புறநானூறும் எட்டுத்தொகை நூற்கள். அதனால் அவற்றின் காலம் கி.மு. 500ல் இருந்து கி.பி. 200 வரை என்று சொல்லியிருக்கிறார்களே அதில் அடக்கம். திருக்குறள் பதினெண்கீழ்கணக்கு நூற்களில் ஒன்று. அவற்றின் காலம் சங்கம் மருவிய காலம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நன்றி.

kalai said...

அன்பிற்கினிய குமரன் அவர்களுக்கு, திருக்குறளின் காலம் தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியத்திற்கும் இடைப்பட்ட காலம். கி.மு. 31 என்பது மறைமலையடிகள் தலைமையில் அறிஞர் பெருமக்கள் ஒன்றாகக் கூடி முடிவெடுத்தது. எனினும், இம்முடிவிலும் மாற்றம் உள்ளது. தமிழ்ப்பேரறிஞர் இளங்குமரனார் அவர்கள் திருக்குறளின் காலம் குறித்து மிக விரிவானதொரு ஆய்வு நடத்தியுள்ளார். அவர் தரும் சான்றுகள் அறிவியல் மற்றும் மொழி வரலாற்றியல் அடிப்படையில் சரியாக இருப்பதாக உணர்கிறேன்.

திருக்குறளைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இணைத்தற்குக் காரணம் அதன் பொருளமைதியே ஆம். அதாவது நீதி நூல்கள் எனும் வரிசையில் அதனை வகைப்படுத்தியுள்ளார்கள். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறள் மட்டுமே சங்கக் காலத்து நூல்.

குமரன் (Kumaran) said...

நன்றி கலை.