"யப்பா. இவன் செய்ற குசும்பு தாங்க முடியலைங்க. இவங்க அக்கா செஞ்ச குசும்பெல்லாம் எந்த மூலைக்கு? இவன அடக்க என்னால முடியலை. நீங்க தான் பாத்துக்கணும். சும்மா தமிழ்மணம் பாத்துக்கிட்டு இருக்காதீங்க. இவனைக் கொஞ்சம் பாத்துக்குங்க"
"இப்ப என்ன பண்ணிட்டான் அவன்?"
"நான் பாத்திரம் கழுவி டிஷ் வாஷர்ல போட விடமாட்டேங்கறான். எல்லாத்தையும் எடுத்து வெளிய போட்டுக்கிட்டு இருக்கான்"
"அவங்க அக்காவோட விளையாடச் சொல்ல வேண்டியது தானே?"
"ஆமா. அப்புறம் அவங்க சண்டைய யாரு தீர்த்து வைக்கிறது?"
"சண்டையா? நல்லா தானா தம்பியைப் பாத்துக்கிறா பெரியவ? அப்புறம் ஏன் சண்டை போடறாங்க?"
"அவ நல்லாத் தான் பாத்துக்கறா. இவன் தான் எதை எடுத்தாலும் மைன் மைன்னு சொல்லி புடுங்கறான். தம்பி கேக்குறான்னு அவளும் குடுத்துர்றா. அப்புறம் அவ தலை முடியை புடிச்சு இழுக்குறான். அவ அழ ஆரம்பிச்சுர்றா"
"ம்ம்ம். தேஜும்மா. தம்பி உன் முடியைப் பிடிச்சு இழுத்தா நீயும் அவன் முடியை பிடிச்சு இழு"
"என்ன சொல்லித் தர்றீங்க நீங்க? தம்பி சின்னப்பையன்;அடிக்கக் கூடாதுன்னு நான் சொல்லியிருக்கேன். அதனால தான் அவ அடிக்கிறதில்லை. நீங்க இப்படி சொல்லித் தரலாமா? சும்மா பேசிக்கிட்டு இருக்காம வந்து பையனைப் பாத்துக்கோங்க"
"சரி சரி இதோ வர்றேன். இந்த கமெண்டை மட்டும் படிச்சுட்டு வர்றேன்"
நான் பிடிக்கப் போக அவன் சிரித்துக் கொண்டே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஓடி ஒளிகிறான். அந்த விளையாட்டில் அவன் அக்காவும் கலந்து கொள்கிறாள். சமையலறையிலிருந்து எப்படியோ அவனை வெளியே ஓட்டிக் கொண்டு வந்தாயிற்று. எப்படி இவனை இங்கேயே கட்டிப் போடுவது? ஆமாம் யசோதை செஞ்சதைத் தான் செய்யணும். கண்ணனோட குறும்பு தாங்க முடியாம தாம்புக் கயித்தால கட்டிப் போடறதுக்கு முன்னாடி பால் குடுத்து தானே அவனை வஞ்சித்தாள். அதையே செய்ய வேண்டியது தான்.
"இவன் எப்ப பால் குடிச்சான்?"
"ரெண்டு மணி நேரம் ஆச்சு. அதோ அங்க பாட்டில் இருக்கு. ஹார்லிக்ஸ் கலந்து குடுங்க".
செஞ்சுட்டா போச்சு. :-)
பாலை ஹார்லிக்ஸுடன் கலந்து கையில் வைத்துக் கொண்டதும் அவனாகவே வந்து அதனைப் பிடுங்கிக் கொண்டான். அவனை அப்படியே தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் போட்டு பாடத் தொடங்கினேன். பாலைக் குடித்துக் கொண்டே பாட்டும் கேட்டுக் கொண்டுத் தூங்கிப் போனான். நான் எழுத வந்தேன்.
அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதரப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்து காணீரே
18 comments:
குமரன் உங்கள் மனத்தின் கோதுகலத்தை இப்பாசுரத்துடன் இணைத்து அருமையாக சொல்லிருக்கீங்க.
குமரனின் குமரன் பெயர் என்னவோ ?
அதிரும் - இங்கே, வீடே அதிருகிறது போல :)
கடல் நிற வண்ணன் - பாற்கடல் நிற வண்ணனோ உம் குமரன் ?
ச்சோ ச்வீட் :) கண்ணனை எங்கும் எதிலும் எப்போதும் நீங்கள் காண்பது அருமையாகத் தெரிகிறது :)
ஆமாம் இராகவ். இருவர் போடும் கூச்சலிலும் வீடு அதிர்ந்து கொண்டு தான் இருக்கிறது. :-)
குமரனின் குமரன் கடல்வண்ணன் இல்லை. அவன் சேந்தன் - சிவந்தவன். அவன் பெயரும் அது தான். முருகனின் திருப்பெயர். :-)
என் பெயரில் மட்டும் ஒரு தடவை தான் முருகன் பெயர் வருகிறது; தம்பி பெயரில் இரு முறை வருகிறதே என்று சொல்லிக் கொண்டிருப்பாள் மகள். அவன் முழுப்பெயர் சேந்தன் குமரன் மல்லி. :-)
நன்றி கவிநயா அக்கா. :-)
மனதால் நினைத்துப் பார்த்தேன்...அழகான காட்சி, அதற்கேற்றார்போல் பாடலா?...கலக்கல்ஸ். :)
//பதரப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே//
ஓ...கயிற்றால் கட்டி எல்லாம் போடுறீங்களா? Too bad kumaran :)
//ஒளிவளையீர் வந்து காணீரே//
கண்டோமே! (கையில் ஒளி வாட்ச் இருக்கு) :)
நன்றி மௌலி. :-)
கயிற்றால் மட்டும் தான் இன்னும் கட்டிப்போடவில்லை இரவி. பார்ப்பவர்கள் எல்லாம் சொல்கிறார்கள் - பயங்கரக் குறும்பனாக இருக்கிறான் என்று. அதனால் தான் பெரியவர்கள் பெயர் வைக்கும் போது பார்த்து வைக்க வேண்டும் என்கிறார்களோ என்னவோ? சேந்தன் என்று வைத்தாலும் வைத்தேன் - கந்த புராணத்தில் சேந்தன் செய்ததாக வரும் எல்லா குறும்பையும் இவனும் செய்வான் போலிருக்கிறது. :-)
சேந்தனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி கைலாஷி ஐயா.
சேந்தன் குமரன் என்ற பெயரைப் படித்த உடன், பொன்னியின் செல்வன் கதையில் வரும் சேந்தன் அமுதன் என்னும் கதா பாத்திரத்தின் பெயர் நினைவுக்கு வருகிறது.
சிறையில் அடைத்து வைத்த பொழுதும் “பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்த , மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே” என்ற பாடலை மனம் உருகி பாடுவார்.அதைக் கொண்டே அவர் குற்றமில்லாதவர், என்று உடனடியாக சிறைக்காவலர்கள் உணர்ந்து கொள்வதாக கல்கி அவர்கள் சுவையாக எழுதும் செய்தி இனிமையாக நினைவுக்கு வருகிறது.
அந்த அளவு குற்றமில்லாத முழு, சிவ நெறி, இறை நெறியாளராக இருப்பார்.
அது போல தங்கள் சேந்தனும் இறை நெறியாளராக வளரட்டும். கண்ணன் கேசவன் புகழ் பாடட்டும்.
குமரன், உங்களுக்கு, அண்ணிக்கு, சேந்தன் அவனது அக்கா அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள்.
ஆமாம் சுந்தர். சேந்தன் என்ற பெயர் கேள்விபட்டதே இல்லையே என்பவர்களுக்கு நான் சொல்வதும் அது தான் - சேந்தன் அமுதன் நினைவிருக்கிறதா? பொன்னியின் செல்வன் நாவலில் வருமே? என்பேன். பலருக்கும் உடனே நினைவிற்கு வந்துவிடும். அப்புறம் தான் இது முருகனின் பெயர் என்று சொல்வேன். சேந்தனார் என்று சங்ககால புலவர்களும் ஓரிருவர் இருந்திருக்கிறார்கள். சைவத் திருமுறைகளில் திருப்பள்ளியெழுச்சி சேந்தனார் என்பவரால் பாடப்பட்டிருக்கிறது. இது புதிய பெயர் இல்லை; ஆனால் நாம் மறந்துவிட்ட பெயர்.
எங்கள் குலதெய்வம் முருகனின் திருப்பெயரை வைக்க வேண்டும்; அது தமிழ்ப்பெயராக இருக்க வேண்டும் (மகளுக்கு வடமொழிப் பெயரை வைத்தாகிவிட்டது - வடமொழியும் தமிழும் என் இரு கண்கள் என்று சொல்வேன் - அதற்கேற்ப ஒரு குழந்தைக்கு வடமொழிப்பெயர் இன்னொரு குழந்தைகுத் தமிழ்ப்பெயர்) - பலரும் வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்று தேடியதில் இந்தப் பெயர் கிடைத்தது.
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
நன்றி இராகவ். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
கண்ணாடி வளையீர்வந்து கண்டோம் அருமை குமரன்!
நன்றி ஷைலஜா அக்கா.
Post a Comment