பெருமாள் கோவிலில் தீர்த்தம் தருவார்கள். சிவன் கோவிலில் திருநீறு தானே தருவார்கள்? தீர்த்தப் பிரசாதம் தருவதும் உண்டா? உண்டு என்று தான் கூகிளார் சொல்கிறார். இராமேஸ்வரம் இராமநாதப் பெருமான் சன்னிதியில் தீர்த்தப் பிரசாதம் தருவார்கள் என்ற குறிப்பைப் படித்தேன். சரி தானா என்று தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.
***
கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒரு சிவத்தலம் திருநல்லூர். அப்பர், சம்பந்தர் இருவருடைய பதிகங்களையும் பெற்ற திருத்தலம். அப்பர் பெருமான் இறைவனுடைய திருவடிகளில் சரணடைந்தது இந்தத் திருத்தலத்தில் என்பதால் இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடிநிலைகளை இங்கு வணங்க வரும் பக்தர்களின் தலைகளில் வைத்து ஆசி வழங்கும் வழக்கம் இருக்கிறது.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினதிருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனதுருவி மணிமகுடத் தேறத்துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே.
நல்லூரிலுள்ள எம் பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களை மேலும் மனம் உருகுமாறு அவர் களுடைய தீவினைகளை எல்லாம் போக்கியவர். சினந்து எதிர்த்த யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர். பிறை சூடியவர். தேவர் கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி, அரிதின் கிட்டி, அவர்கள், தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில் செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தன போலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார். இஃது அவர் பேரருளின் தன்மையாம்.
பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை, கங்கை, பிறை என்பன சூடி, காதில் குழை அணிந்து, மார்பில் பூணூல் தரித்து, இடையில் புலித்தோலை உடுத்து, யானைத் தோலைப் போர்த்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு, அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத் தாங்கி, மேம்பட்ட சிறப்புடைய திரு வடிகளை, என் தலைமேல் வைத்த, பேரருளின் தன்மை உடையவர்.
தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
இதழ்கள் மிக்க கொன்றை மலரைத் தலையில் சூடி, எருக்கம் பூ மாலை பூண்டு, தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து, மலைமகளைப் பாகமாகக் கொண்டு, அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக்கொண்டு, கையில் வில் ஏந்தி, யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.
வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார், வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, விரிந்த சடையில் கங்கையைச் சூடி, மலையை வில்லாகக்கொண்டு, கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு, கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு, வேதங்களை அருளி, முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து, தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி, தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து, மிக்க அருளினாலே, தம் திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி, அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி, நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து, தீயினை யும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு, அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து, மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர். குறைந்த சந்திரனை வளரவைத்தவர். பகை, ஆர்வம், காமம், உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்த பாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்ல தவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர். அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர். அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர். நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர். தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர். மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.
குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர். இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர். திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்த விடத்தை உண்டு, அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர். எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர். நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர். அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர். இவ்வுலகில் எண்திசைகள், கீழ்ப்புறம், மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர். தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர். நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர். கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன் புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர். காளையை வாகனமாகக் கொண்டவர். வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார், பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க, கங்கை அலை வீச, அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர். தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர். சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்ட வர். நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர். உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்ட வர். விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர்.
குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார், கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளை யும் அமைத்தவர். கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர். இராவணன் ` தலைவனே ` என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர். தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து, நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர்.
பதிகத்தின் பொழிப்புரைக்கு நன்றி: http://www.thevaaram.org/
பெருமாள் கோவில்களில் பெருமாள் திருவடிநிலைகளை சடகோபன் நம்மாழ்வாரின் திருவுருவமாகக் கருதுவதால் சடாரி என்று அழைப்பார்கள். இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடி நிலைகளை எந்தப் பெயருடன் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை - அப்பர் என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.
***
பெருமாள் விபூதி அணிந்து கொள்வதும் விபூதி பிரசாதம் அந்த நேரத்தில் எல்லோருக்கும் தரப்படுவதும் பற்றி மிக அருமையாக மிகத் தெளிவாக கதை வசனத்துடன் அந்த நிகழ்வை இரவிசங்கர் எழுதியிருந்தார். அதனைப் படித்த பின்னர் தான் திருக்கண்ணங்குடி என்று கூகிளில் தேடினேன். இரவிசங்கர் சொன்ன நிகழ்வைப் பற்றி சொல்லும் குறிப்புகளையும் படித்தேன். பெருமாள் திருநீறு அணிவதற்கு இன்னொரு நிகழ்வையும் காட்டும் குறிப்பு ஒன்றைப் படித்தேன். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
உபரிசிரவஸு என்னும் மன்னன் சிவபக்தன். (இந்த உபரிசிரவஸு என்ற பெயர் ஏதோ ஒரு சோழ மன்னனின் தமிழ்ப்பெயரின் வடமொழி வடிவம் என்று நினைக்கிறேன்). தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்வது அவன் வழக்கம். ஒரு முறை திருக்கண்ணங்குடி வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது இந்தக் கோவில் சிவன் கோவில் என்று எண்ணி தரிசிக்க உள்ளே சென்றான். அவன் ஏமாறாமல் இருக்க மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) பெருமாள் திருநீறு அணிந்து சிவனாகக் காட்சியளித்தார்.
17 comments:
அருமை அருமை அருமை!
குமரன் குமரன் குமரன்!
//திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே/
இப்போ தான் வள்ளுவரின் திருவடிப் பார்வை-ஆண்டாளின் திருவடிப் பார்வை-ன்னு பாவைப் பதிவில் சொல்லிட்டு வாரேன்!
இங்கே வந்தா, அடியேன் தலையில், சிவபெருமானின் எடுத்த பொற் பாதங்களைச் சாற்றினீர்களே!
சிவன் திருவடி என் தலைமேல் குமரன் வைத்தார்!
//நல்லூர் "எம்பெருமானார்" நல்லவாறே//
அடா அடா அடா! மிகவும் ரசித்தேன்!
//நல்லூர் "எம்பெருமானும்" நல்லவாறே//-ன்னு கூட அப்பர் எழுதி இருக்க முடியும்! ஆனால் எம்பெருமானார்-ன்னு அமையுது பாருங்க! ஈசனின் சங்கல்பம்!
//பெருமாள் கோவில்களில் பெருமாள் திருவடிநிலைகளை சடகோபன் நம்மாழ்வாரின் திருவுருவமாகக் கருதுவதால் சடாரி என்று அழைப்பார்கள். இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடி நிலைகளை எந்தப் பெயருடன் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை - அப்பர் என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது//
சாலவும் பொருத்தமே!
கத்தோலிக்கர்கள் பலி முடிந்து அப்பம் ஈவார்கள்!
இங்கே அப்பர் ஈயட்டுமே!
அப்பர் வைத்தார், வைத்தார்-ன்னே வரிக்கி வரி முடிக்கிறாரு பாருங்க! சூப்பரு!
இன்னொன்று கவனித்தீர்களா? நால்வருக்கும் "வைத்த"-க்கும் அப்படி ஒரு தொடர்பு!
சுந்தரரின் முதல் பதிகமே "வைத்த" தான்!
"வைத்தாய்" பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
//உபரிசிரவஸு//
உபரி-தகவலுக்கு நன்றி குமரன்!:)
இதை அங்கும் வந்து சொல்லுங்கோள்! :)
இராமேஸ்வர தீர்த்தம் பற்றி மக்கள் வந்து சொல்லட்டும்! கேரள சிவாலயங்கள் சிலவற்றிலும் தீர்த்தம் உண்டு!
குமரன், இராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தம் தருவார்கள். ஆனால் சிவன் கோயில்களில் சடாரி உண்டா என்றே தெரியாது.
சில சிவாலயங்களில், தீர்த்தத்திற்கு பதிலாக அபிஷேகப் பாலுடன் கற்பூரம், ஏலக்காய் கலந்து தருவார்கள்.
நன்றி இரவிசங்கர் & இராகவ்.
ரொம்ப அழகான பாடல்கள். இன்னும் நிதானமாக படிக்க வேணும். உங்களாலதான் இப்படிப் பட்ட பாடல்களெல்லாம் நான் கண்ணாலயாச்சும் பாக்கறேன் குமரா. மிக்க நன்றி உங்களுக்கு.
நானும் இனிமே தான் நிதானமா படிக்கணும் அக்கா. :-)
//அருமை அருமை அருமை!
குமரன் குமரன் குமரன்!//
இரவிசங்கரின் சொற்களை நானும் சொல்கிறேன்.
//கத்தோலிக்கர்கள் பலி முடிந்து அப்பம் ஈவார்கள்! இங்கே அப்பர் ஈயட்டுமே!//
ஈசனடி போற்றி!
//கத்தோலிக்கர்கள் பலி முடிந்து அப்பம் ஈவார்கள்! இங்கே அப்பர் ஈயட்டுமே!//
ஈசனடி போற்றி!
நன்றி ஓகை ஐயா.
//உபரிசிரவஸு என்னும் மன்னன் சிவபக்தன். (இந்த உபரிசிரவஸு என்ற பெயர் ஏதோ ஒரு சோழ மன்னனின் தமிழ்ப்பெயரின் வடமொழி வடிவம் என்று நினைக்கிறேன்). தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்வது அவன் வழக்கம். ஒரு முறை திருக்கண்ணங்குடி வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது இந்தக் கோவில் சிவன் கோவில் என்று எண்ணி தரிசிக்க உள்ளே சென்றான். அவன் ஏமாறாமல் இருக்க மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) பெருமாள் திருநீறு அணிந்து சிவனாகக் காட்சியளித்தார்.
//
சோழன் நாட்டின் அரசன். அவன் நாட்டிலேதான் இந்த திருக்கண்ணபுரம் உள்ளது. அம்மன்னன் சைவன். தெரியாமல் சைவக்கோயில் என நினைத்து அவன் உள் நுழைய திகைத்தனர் கோயில் ஊழியர்கள் (புஜாரிகள்). மன்னன் உள்ளக்கிடைக்கை அவர்களுக்கு எப்போதும் தெரிந்த ஒன்று.
இக்கால அரசிடம் முரண்டு பிடிக்கலாம் சிதம்பரத்தில் செய்தது போல்.
‘யாரங்கே..இவர்களை கழுவிலேற்றிக் கொல்க!’
என இக்காலத்தில் ஆணையிட முடியாது.
அக்காலத்தில் அதுதான் நடக்கும்.
தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள அக்கோயில் ஊழியர்கள் செய்த ஒரு compromise தான் இது.
பின்னர், ஒரு வழக்கமாக உருவெடுத்து, இங்கு நாம் சிலாகிக்கிறோம், குமரன்!
இந்துமதக் கடவுள்களை எல்லாம் விரவி ‘இந்து’ என்றால் அனைத்துக் கடவுள்களும் சேர்த்துத்தான், என நினைப்பவருக்கு இப்படிப்பட்ட நிகழ்வுகள் ‘வாராது போல் வந்த மாமணிகள்’
சிவனும் பெருமாளும் ஒன்றல்ல. இவருக்கு அவர் மேல். அவருக்கு இவர் மேல். என கொள்கையுடையோர், இப்படிப்பட்ட நிகழ்வுகளை, வெறும் compromises என்றுதான் எடுத்துக்கொள்வர்.
சிரிவைணவத்தை அழிக்க, சிதைக்க எத்தனையோ முயற்சிகள் அரங்கேறின அக்காலத்தில். எ.டு. தென்காசி சங்கரநாராயணன்.
‘அரியும் சிவனும் ஒன்னு
இதை அறியாதவர் வாயிலே மண்ணு’
என்று சொல்லல் உண்டாயிற்று. ஆனால், அவையெல்லாம் தோல்வியையே தழுவின.
அவற்றுள் இந்தத் திருக்கண்ணபுர நிகழ்வு உண்டு எனத் தோன்றுகிறது!!
இன்றும் இந்த சிரிவைணவம் தனியாகத்தான் நடைபோட்டு வருகிறது. அவர்களுக்கு திருமாலே ஒரே தெய்வம். இப்படி நான் கேள்விப்படுகிறேன் குமரன்.
நீங்கள் ஏன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளக்கூடாது?
>>உபரிசிரவஸு<<
That name sounds familiar. Isn't he the same king whose chariot got sunk in tErazhundUr (tEr + azhundu +Ur) (near Mayuram and KuttAlam) or am I meandering somewhere?
>> pvina said...
இன்றும் இந்த சிரிவைணவம் தனியாகத்தான் நடைபோட்டு வருகிறது. அவர்களுக்கு திருமாலே ஒரே தெய்வம். இப்படி நான் கேள்விப்படுகிறேன் குமரன்.
நீங்கள் ஏன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளக்கூடாது?<<
Yes. if you think about it the "only God" concept has been practiced by several religions. The Jews, Muslims, and even Christians believe that their God is the only God. Coming to Vaishnavism, some serious vaishNavites believe in that concept too. They take PeriyAzhwAr's "victory" at Pandyan's court establishing the supremacy of Vishnu very literally and run with it. To augment their belief further, Varaha Puranam declares that there is no god equal to VenkaTEsa of Tiruppathi. The following slokham illustrates this>
venkaTadri samam sthAnam
brahmANDe nAsti kincana
venkaTEsa samo devo
na bhUtO na bhavishyati
Translation: There is no place in the universe which is equal to venkaTAdri (tiruppathi). There has been go god equal to VenkaTEsa nor will there ever be one.
Go figure!
>>There has been go god <<
It should read as " no god"
pvina,
நான் எதையும் இந்த இடுகையில் சிலாகிக்கவில்லை. இந்த இடுகையின் தலைப்பே சைவ வைணவ வேற்றுமைகள் இருக்கின்றன என்பதைப் பறை சாற்றுகின்றது. வேற்றுமைகள் இருக்கின்றதால் தானே இப்படி மாற்றி சில இடங்களில் இருப்பதை ஒரு செய்தியாகச் சொல்லத் தோன்றுகிறது; தோன்றியது. வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திக் காண்பிக்கவில்லை; வேற்றுமைகளே இல்லை என்று சொல்லவில்லை. என் பார்வையில் இரண்டுமே தவறான செயல்கள். உலகத்தில் எல்லாவற்றிற்கும் பன்முகத் தன்மை உண்டு; இந்திய இறையியலுக்கும் அப்படியே; இந்து மதம் என்று சொல்லப்படும் மதத்திற்கும் அப்படியே. அதனால் இங்கே சொல்லப்பட்டதை சிலாகிப்பதாகக் கொள்ளாமல் ஒரு செய்தியாகக் கொள்ளுங்கள்.
இந்த இடுகையில் சொல்லப்பட்டது திருக்கண்ணங்குடி என்ற தலம்; திருக்கண்ணபுரம் இல்லை.
எந்த ஒரு தொன்மத்தையும் இருவிதமாகப் புரிந்து கொள்ளலாம்; இருவகை புரிதல்களும் தேவை; இரண்டும் முரண்பாடானவை இல்லை.
முதல் வகை: எந்த வித அதிசயமும் நடைபெறவில்லை; நடைபெறுவதும் இல்லை. மனிதர்களின் தேவைகளுக்கேற்ப சில மாற்றங்கள் செய்து கொள்ளப்படுகின்றன. அவற்றிற்குப் புனித முலாம் பூசப்படுகின்றது.
இரண்டாம் வகை: எல்லாம் வல்ல இறைவனால் இந்தச் சிறு அதிசயத்தைச் செய்ய இயலாதா? சில இடங்களில் மனிதர்கள் மாற்றங்களைச் செய்து அவற்றிற்குப் புனித முலாம் பூசியதால் அதனைப் போல் தான் எல்லா இடங்களிலும் நிகழ்கின்றது என்று சொல்லத் தேவையில்லை. மாற்றங்கள் மனிதர்களின் தேவைகளுக்காக நடைபெறுவதும் உண்டு; இறையருளால் அதிசயங்கள் நடைபெறுவதும் உண்டு.
சங்கர நாராயணர், அரியும் சிவனும் ஒன்று பழமொழி இவையெல்லாம் தமிழக வைணவத்தை அழிக்க ஏற்பட்ட முயற்சிகள் என்பது வெறும் அபாண்டம் என்பது என் துணிபு. வேற்றுமைகள் இருக்கும் இடங்களில் ஒற்றுமைகளை ஏற்படுத்த முயற்சிகள் எப்போதுமே இருக்கும். அந்த வகை முயற்சிகள் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்; அவற்றிற்கு நல்ல நோக்கங்களையே நான் காண்கிறேன். அரியும் சிவனும் ஒன்று என்றதால் சைவமோ வைணவமோ அழிந்து போகப் போவதில்லை; அவற்றிற்கிடையே ஆன வேற்றுமைகள் வெட்டிச்சண்டைகளுக்குக் காரணமாகப் போகாமல் தடுக்கும் முயற்சிகள். இது போன்ற கருத்துகளும் செயல்களும் வெகு நாட்களாகவே (தமிழக வைணவமோ தமிழக சைவமோ மேலாண்மையும் பெரும்பான்மையும் பெறுவதற்கு முன்னாலேயே) நடைபெற்று வருகின்றன. ஆழ்வார்களின் பாடல்களிலும் தேவார திருவாசகங்களிலும் வேற்றுமைகள் பேசப்படும் அளவிற்கு ஒற்றுமை முயற்சிகளும் காணப்படுகின்றன.
சேதுராமன் ஐயா,
நீங்கள் சொல்வது சரி தான். தேரழுந்தூர் தலபுராணத்தில் சொல்லப்படும் அரசனே தான் உபரிசிரவஸு.
அருமையான சுலோகத்தைச் சொன்னீர்கள். எனக்கு மிகவும் பிடித்த பனுவல்களில் ஒன்று இது. :-)
நன்றி ஐயா.
Post a Comment