Saturday, December 20, 2008

புறநானூறு சொல்லும் உடன்கட்டை ஏற்றம்...

புறநானூறு 246ஆவது பாடல். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் அரசி பெருங்கோப்பெண்டு என்பவர் பாடியது. பூதப்பாண்டியன் இளம்வயதிலேயே மாண்டுவிட கணவனை இழந்து வாழேன் என்று கூறி உடன்கட்டை ஏற முடிவெடுத்தாள் பெருங்கோப்பெண்டு. அமைச்சர்களும் அரசவைப் பெரியோர்களும் அவளது முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் வேண்டுகோளை மறுத்து அரசி இயற்றிய பாடல் இது.

பல் சான்றீரே! பல் சான்றீரே!
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!


திணை: பொதுவியல் (பொதுவியல் திணை என்பது வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது திணைகளில் அடக்கிக் கூறமுடியாத
பொதுவான செய்திகளைக் கூறும் திணை)
துறை: ஆனந்தப்பையுள் (கணவன் இறப்ப மனைவி மெலிந்து வருந்தும் அறத்துறை)

சான்றோர்களே! சான்றோர்களே! நீயும் இறந்துபட்ட கணவனுடன் சென்று விடு என்று என்னை அனுப்பாமல் அதனைத் தவிர்த்து உயிர் வாழச் சொல்லும் உங்கள் பொல்லாத பேரறிவினை உடையவராக இருக்கிறீர்களே.

அணிலின் முதுகில் உள்ள கோடுகளைப் போன்ற வரிகளை உடைய வெள்ளரிக்காயைப் பிளந்தால் அதிலிருக்கும் சிறு விதைகளைப் பார்க்கலாம்; அந்த விதைகளைப் போன்ற நுண்ணிய நெய்யைக் கையால் தொடாமல் இருக்க வேன்டும். இலையின் மேல் இடப்பட்ட கைப்பிடி அளவு பழைய சோற்றைப் பிழிந்து நீரை விலக்கி வெள்ளெருக்குத் துவையலைத் தொட்டுக் கொண்டு சிறிதே புளியைச் சேர்த்துக் கொண்டு வெந்தும் வேகாததுமாக உண்ண வேண்டும். பரல் கற்கள் (பருக்கைக் கற்கள்) நிறைந்த கட்டாந்தரையில் பாய் இன்றிப் படுக்க வேண்டும். இப்படி ஒரு கடின வாழ்க்கையை விரும்பி வாழும், கைம்மை நோன்பு நோற்றேனும் உயிர் வாழ விரும்பும் பெண்களில் ஒருத்தி இல்லை யான்.

ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் கருங்கட்டைகளால் உண்டான நெருப்பை உடைய இந்த ஈமப்படுக்கை உங்களுக்கு வேண்டுமானால் அரியதாகவும் கொடியதாகவும் இருக்கலாம்; எனக்கு அப்படி இல்லை.

பெரிய தோளினை உடைய என் கணவன் மாய்ந்த பின் நன்கு மலர்ந்த அழகான தாமரை மலர்கள் நிறைந்த நீர்ப்பொய்கையும் தீயும் ஒரே தன்மை உடையன.

***

உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்தப் பாடல் எழுதப்பட்ட போது இருந்திருக்கிறது என்பது இந்தப் பாடலின் மூலம் தெரிகிறது; ஆனால் அது சான்றோர்களால் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இந்தப் பாடலின் மூலம் விதவைகள் படும் துயரமும் சொல்லப்பட்டிருக்கிறது. கைம்மை நோன்பெனும் துயரம் பலவகைகளில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலின் குறிப்பில் 'பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவள் இந்தப் பாடலைப் பாடிய பின்னர் தீப்பாய்ந்தாளா இல்லையா என்ற குறிப்பு இந்தப் பாடலில் இல்லை. ஆனால் அவள் தீப்பாய்ந்தாள் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது.

பாண்டியன் மனைவி தீப்பாய்ந்தாள் என்றால் வேறு ஏதாவது புலவர் அதனைப் பாடியிருப்பார்; ஆனால் அப்படிப்பட்ட குறிப்பு வேறு எந்தப் பாடலிலும் இல்லை; அதனால் இவள் தீப்பாய்ந்தாள் எனக் கொள்ளத் தேவையில்லை என்றும் சிலர் கருதுகின்றனர். ஏரணப்படி சரி தான் என்று தோன்றத் தொடங்கினாலும் மேற்கேள்விகள் எழாமல் இல்லை. சங்க காலத்தில் இயற்றப்பட்ட எல்லா பாடல்களும் கிடைக்கவில்லை; பத்துப்பாட்டு எட்டுத்தொகை கீழ்க்கணக்கு என்று தொகுக்கப்பட்ட தொகைப்பாடல்களில் இருக்கும் பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அதனால் வேறு எந்தப் பாடலிலும் இந்தக் குறிப்பு இல்லை என்பது இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை என்று காட்டுவதாக அமையாது.

இந்தப் பாடல் மட்டுமே கைம்மைக் கொடுமையையும் உடன்கட்டை ஏறுவதையும் கூறுகிறது; அதனால் இது சிறுபான்மையாகத் தான் நடந்திருக்கும்; பெரும்பான்மையாக நடந்திருந்தால் மற்ற பாடல்கள் கூறியிருக்கும் - என்றும் ஒரு கருத்து இருக்கலாம். அதற்கும் மறுப்பு உண்டு. உடன்கட்டை ஏறுவது வேண்டுமானால் சிறுபான்மையாக இருந்திருக்கலாம்; ஆனால் கைம்மை பெரும்பான்மையாகத் தான் இருந்தது என்பது இந்தப் பாடலின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறவில்லை; மற்றவர் செய்ததைத் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு பாடினாள். கபிலர் பெண்ணைப் போல் பல பாடல்கள் பாடியிருக்கிறார்; அதனால் அவர் பெண் என்று கூறிவிட இயலுமா? - என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது. மற்றவர் செய்ததைத் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு படர்க்கையில் பாடாமல் மரபுப்படி தன்மையில் பெருங்கோப்பெண்டு பாடியிருந்தாலும் இருந்ததைத் தான் பாடியிருக்கிறாள் என்பது கைம்மை நோன்பைப் பற்றி தெளிவாகப் பாடியிருப்பதன் மூலம் தெரிகிறது.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாகத் தெரியும் செய்திகளையும் ஏற்க மறுத்து இப்படி வாதங்களை வைப்பது தான் ஏன் என்று புரிவதில்லை. வடமொழி இலக்கியங்களில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சொல்லைத் தவறாகப் பொருள் கொண்டு அதனை முடிந்த முடிபென்று பேச முடியும் போது (எடுத்துக்காட்டுகள்: இராமனுக்குப் பல மனைவிகள் என்று கூறுவது, திராவிட சிசு என்று சங்கரர் தன்னையோ சம்பந்தரையோ 'இழிவாக'ச் சொன்னார் என்று சாதிப்பது, இலிங்க வழிபாட்டை ஆரியர்கள் பழித்தார்கள் என்று கூறுவது) தெள்ளத் தெளிவாகத் தமிழ் இலக்கியங்களில் இருக்கும் செய்திகளைத் தங்களின் கருத்தாக்கத்திற்கு ஒவ்வாத செய்திகள் என்பதால் வலிந்து புறந்தள்ள எடுக்கப்படும் முயற்சிகளாகத் தான் இந்த வகை மறுப்புகளைக் காண முடிகிறது.

4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அறிய செய்தியைத் தந்தமைக்கு நன்றி குமரன்.

jeevagv said...

தரவுகளுடன் தாங்கள் தந்துள்ள தகவல்கள் தமிழுக்கு பெருமை சேர்க்கின்றன, மிக்க நன்றிகள்!

குமரன் (Kumaran) said...

அரிய செய்தியை அறியத் தந்தமைக்குத் தானே நன்றி சொல்கிறீர்கள் மௌலி. அப்படியென்றால் வரவேற்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவா. இப்படி தரவுகளுடன் எழுதுவதே பொறுப்பான செயல் என்பது என் எண்ணம். அப்படி இன்றி சும்மா 'அவர் சொன்னார்', 'இவர் சொன்னார்' என்றோ 'இப்படி தான் நடந்தது', 'அப்படி தான் நடந்தது' என்று எழுதினால் அது பெரும்பாலும் தரவுகள் இல்லாத அவதூறாகத் தான் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். :-)