Friday, January 25, 2008

கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு?

எழுத வந்த புதிதில் என்ன எழுதுவது என்று தெரியாமல் இதை எழுதலாமா அதை எழுதலாமா என்று சிலவற்றைப் பரிசோதித்துப் பார்த்தேன். அப்படி எழுதிய ஒரு இடுகை தான் இந்த இடுகை. உஷா மொக்கை போட அழைத்தவுடன் இதை மீள்பதிவு செய்துவிடலாம் என்று தோன்றியது. அப்படியே செய்கிறேன். இப்போது நால்வரை அழைக்க நேரம் இல்லை. நாளைக்கும் நால்வரை அழைத்து இந்த இடுகையில் எழுதுகிறேன்.

***

சின்ன வயசிலெ இந்த மகாபாரதம் படிக்க ஆரம்பிச்சிட்டா போதும், சோறு தண்ணி வேணாம் எனக்கு. அவ்வளவு சுவாரசியமா போய்க்கிட்டு இருக்கும். நல்லவனா எப்படி வாழ்றதுன்னு கத்துக்கற அதே நேரத்துல ஊர எப்படி எப்படி எல்லாம் ஏமாத்தலாம்ங்கறதையும் அதுல கத்துக்கலாம். அப்பப்ப விடுகதை, கேள்வி பதில், துணுக்குகள், புதிர்கள், கதைக்குள் கதை அப்படின்னு வந்துக்கிட்டே இருக்கும். அதுல இருக்கிற எல்லா புதிர்களிலும் நான் இப்பொ எழுதப்போற புதிருக்குத் தான் எனக்கு இன்னும் பதில் தெரியல.

உங்ககிட்ட யாராவது வந்து 'கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு?'ன்னு கேட்டா என்ன சொல்வீங்க? டக்குன்னு 'அண்ணன் தம்பி'ன்னு தானே? நானும் அப்படித்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஒரு நாள் எங்க பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிறப்ப, 'யமன் சூரியனோட மகன்'ன்னு சொன்னாங்க. உடனே எனக்கு கர்ணனும் தருமனும் தான் ஞாபகத்துக்கு வந்தாங்க.

மகாபாரத்தின் படி, கர்ணன் சூரிய தேவனின் 'அருளால்' குந்தி தேவிக்குப் பிறந்தவன்; தருமன் யம தரும ராஜனின் 'அருளால்' குந்தி தேவிக்குப் பிறந்தவன். அப்படின்னா கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு? அண்ணன் தம்பியா? இல்லியே...கர்ணனும் யமனும் சூரிய தேவனின் மக்கள். அப்படின்னா, கர்ணனுக்கு அண்ணன் மகன் தானே தருமன்...தம்பி இல்லியே? சரியா?

இந்த கேள்விக்கும இன்னும் எனக்கு யாரும் சரியா பதிலே சொல்லல...உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களே!!!!

***

இதை முன்பு பதித்த போது வந்த பின்னூட்டங்களைப் படிக்க வேண்டும் என்றால் இங்கு செல்லவும்.

13 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஒவ்வொரு யுக ஆரம்பத்திலும் ஒரு சூர்யன் உண்டு, ஒரு யமன் உண்டு. நீங்க மாறுபட்ட யுகங்களில் இருந்திருக்கும் சூர்யன், யமன் ஆகியவர்களை ரிலேட் பண்ணுறீங்க.
:-)

R.P.RAJANAYAHEM said...

Please convey my regards and congratulations to your Grandma.

Brilliant old woman!

R.P.RAJANAYAHEM said...

Convey my regards and congratulations to your Grandma.

Such a brilliant old woman!

கோவி.கண்ணன் said...

மாகாபாரத பாத்திர கர்ணன் - தருமனை விட எனக்கு முருகனுக்கும் ஐயப்பனுக்கும் என்ன உறவு என்று தெரிந்து கொள்ளவே ஆவல்.

கிருஷ்ணன் - முருகனுக்கு தாய்மாமன், ஐயப்பனுக்கு அம்மா. அப்போ முருகனுக்கும் ஐயப்பனுக்கும் என்ன உறவோ ?
:)

குமரன் (Kumaran) said...

மொக்கை எழுதச் சொல்லி யாரையும் தனியா கூப்புடப் போறதில்லை. யார் யாருக்கு மொக்கை போடணும்ன்னு தோணுதோ அவங்க எல்லாம் இதையா அழைப்பா எடுத்துக்கோங்க. (துளசி அக்கா பதிவை இம்புட்டு நாள் படிச்சுட்டு இத மட்டுமாவது கத்துக்க வேணாமா?) :-)

குமரன் (Kumaran) said...

நல்ல வாதம் மௌலி. இந்த மாதிரி ஒத்து வராத விஷயங்கள்ல எல்லாம் கல்பத்தைக் கொண்டு வந்து விளக்கம் சொல்றதைக் கேட்டிருக்கேன். ஒவ்வொரு கல்பத்திற்கும் வெவ்வேறு ஜீவன்கள் இந்த தேவர்களா இருக்கும்ங்கறது புராணங்கள் சொல்வது. ஒவ்வொரு யுகங்கள்லயும் இல்லை. கல்பம், மன்வந்தரம், யுகம்ன்னு எழுதத் தொடங்குனா அதுவே ஒரு சூப்பர் மொக்கையா இருக்கும்ல? :-)

இப்ப உங்க பின்னூட்டத்துக்கு வரலாம். ஆக போன கல்பத்துல சூரியனுக்கு யமன் மகன்; இந்த கல்பத்துல ரெண்டு பேருக்கும் தொடர்பு இல்லை; அதனால கர்ணனுக்கும் தருமனுக்கும் இடையே இருக்கிற உறவு குந்திதேவியினால வந்த சகோதர உறவு தான். அருமையா புதிருக்கு விடை சொன்னீங்க. ரொம்ப நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி திரு. இராஜநாயகம். என் பாட்டியாருடன் பேசியே பல நாட்களாகிவிட்டன. இன்றிரவு அவர்களுடன் தொலைபேச முயல்கிறேன். தூண்டியதற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

கோவி. கண்ணன். என்னோட டேஞ்சரோ மீட்டர்ல நான் கேட்ட கேள்விக்குத் தான் அனுமதி உண்டு. நீங்க கேக்குற கேள்வியைக் கேட்டா என்னோட டேஞ்சரோ மீட்டர் வெடிச்சுரும். :-)

ஆக மொத்தம் இந்த மாதிரி கேள்விகளைக் கேக்குறதெல்லாம் மொக்கைன்னு ஒத்துக்கிறீங்க இல்லையா? நல்ல வேளையா 'புதுசா' மொக்கை போடுங்கன்னு உங்களைக் கேக்கலை நான். :-))))

Sridhar Narayanan said...

கர்ணன் மட்டுமல்ல. நகுல சகதேவர்கள், அஸ்வினி சகோதரர்களின் மகன்களாக அறியப்படுகிறார்கள். அஸ்வினி சகோதரர்கள் சூரியனின் புதல்வர்கள்.

தாய் வழிச் சமூகம் என்று பார்தாலும், பின்னர் அர்ஜுனனுக்கும் ஊர்வசிக்கும் நடக்கும் உரையாடலில் தான் இந்திரனின் புதல்வன் என்பதால் ஊர்வசியின் அழைப்பை ஏற்க மறுத்து சாபமும் பெறுகிறான்.

இந்த கல்பத்தை விளக்கம் சொல்வது இதிகாசங்களில் மட்டுமல்ல இலக்கியங்க்களிலும் காணப்படுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட அகத்தியர், ஔவையார் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்பபடுகிறது.

கொஞ்சம் சிக்கலான உறவுப் புதிர்கள்தான் :-)

Unknown said...

இது அக்னி நட்சத்திரம் கார்த்திக் / நிரோஷா கதை யா இருக்கே!

யமனுடைய அப்பா சூரியன் என்பது புதிய செய்தி. கூகிளாண்டவர் என்னை ஒரு ரிக் வேத பதிவுக்கு கொண்டு போகிறார். (It says - Yama, son of Vivasvant, "An" Aditya). எனவே, கல்பத்தை கப்பென்று கல்பித்துக் கொல்!வதில் தவறில்லை.

எனிவே, இது தான் சொல்ல வந்தது (எனக்கு உருப்படியாகத் தெரிந்தது): ஆங்கிலத்தில், தாய் வயிற்று சகோதர / சகோதரிகள் (பில் கிளின்டன் / கர்ணன்) அரை சகோதரர்கள் (half brother / half sister); பல தாய்/ஒரு தந்தை வழி சகோதர சகோதரிகள் (ராம இலக்குவர்) "ஒன்று விட்ட" (?!) சகோதரர்கள் (step brother / step sistஎர்)... "சகோதர" சொல்லுக்கு வடமொழி மூலத்தில் ஆராய்ச்சியாய் இருப்பதால் இந்த கஷ்டம்;‍-) வேண்ணா, சகோதிர (சஹ + உதிரம்)னு மாத்திடுங்க!

(மொக்கைப் பதிவுல சீரியஸ் பதிலா?) ஹி ஹி, கோவி.கண்ணன் அவர்கள் கேள்வி செம கேள்வியாயிருக்கிறது. இந்த வடை வேகுமான்னு சொல்லுங்க: "மாமிமன் மகன்" ?

Unknown said...

யோசிச்சுட்டு பேசுன்னு சொன்னா கேக்கவா போறேன்?

யமனும் சனியும் சூரிய புத்திரரகள். சிறு வயதில் நேர்ந்த சண்டையில் காலில் அடி பட்டதால், சனி சிறிது தாங்கி நடப்பார். இது நான் புராணங்களில் படித்தது (மந்த: என்ற பெயரும் சனிக்கு உண்டு) - எப்படி மறந்து போனேன்? இன்னிக்கு சனிக்கிழமை, அது தான் நினைவு வந்தது. யமனும் சனியும் "படிச் சகோதரர்கள்" னு நினைக்கிறேன்.BTW, தருமரு "திரும்பி" போகும் போது "யமன்" தானே நாயாக கூட வந்தது? அப்ப என்னானு கூப்பிட்டுருப்பாரு? (சரி, சரி, கொயட்டு).

குமரன் (Kumaran) said...

அஸ்வினி தேவர்களும் சூரியனின் பிள்ளைகள் என்பது இதுவரை எனக்குத் தெரியாது Sridhar Narayanan.

சரியாகச் சொன்னீர்கள். அருச்சுனன் ஊர்வசியை ஏற்றுக் கொள்ள மறுக்கும் போது அவள் தனது தாய் என்று சொல்வானே. அதனால் தானே அவன் ஒரு வருடம் பிருகன்னளையாக வாழ்கிறான்.

கல்பம் தான் வந்து இந்தப் புதிர்களை விளக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனாலும் விடுவிக்கப்படுமோ இல்லையோ?

அகத்தியர், வள்ளுவர், ஒளவையார் எல்லோருமே ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்திருப்பார்கள் என்று சொல்வதைப் படித்திருக்கிறேன். ஆனால் தெளிவாகத் தெரியாது.

முதல் வருகை என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

வாங்க கெக்கே பிக்குணி. அடிச்சு நொறுக்குறீங்க. :-)

விவஸ்வான் என்பது சூரியனுக்கு உள்ள இன்னொரு பெயர். பகவத் கீதையிலும் கிருஷ்ணன் நான்காம் அத்தியாயத்தில் அந்த கீதைப்பகுதியை விவஸ்வானுக்கு ஏற்கனவே சொல்லியிருப்பதாகச் சொல்லுவார்.

Half brother/sister = step brother/sister என்று அவை synonyms என்று நினைத்திருந்தேன். இன்று தான் வேறுபாட்டை அறிந்தேன்.

சகோதர, சகோதிர - ரெண்டையும் சொல்லலாம் போலிருக்கே. :-)

நீங்க கோவி.கண்ணனுக்குத் தந்த வடை வெந்திருக்கான்னு அவர் தான் சொல்லணும். நான் ஒன்னும் சொல்றதுக்கில்லை. :-)

ஆமாம். சனியும் யமனும் சகோதரர்கள். யமுனை அவர்களின் தங்கை. சனி மந்தன் ஆனதற்குக் காரணம் நீங்கள் சொன்னது தான். அதே போல் சொர்க்காரோகணம் நடக்கும் போது கடைசி வரைக்கும் தருமனுடன் நாய் உருவில் வருபவர் தருமதேவதை என்று தான் சொல்லப்படுகிறது; யமனே தருமராஜன் என்று அறியப்படுபவர்.