Thursday, January 03, 2008

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 14 (நிறைவு)

காலையில் வெகு சீக்கிரமே கந்தனுக்கு விழிப்பு வந்துவிட்டது. படுக்கையில் அவனை அணைத்தபடியே படுத்திருந்த மனைவியைக் குளிருக்கு இதமாக கந்தனும் இறுக்கி அணைத்துக் கொண்டான். குழந்தைகள் இருவரும் பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று இரவு பன்னிரண்டு மணிவரை விழித்திருந்து பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிவிட்டு பரிசையும் கொடுத்துவிட்டு இப்போது நன்கு தூங்கிக் கொண்டிருக்கிறாள் கந்தனின் மனைவி. இன்றைக்கு கோழி பிரியாணியும் மீன் வறுவலும் செய்யச் சொல்லியிருந்தான். 'பிறந்த நாளும் அதுவுமா பாயசம் பண்ணாம சிக்கனும் மீனும் கேக்குதா உனக்கு' என்று வழக்கமாக ஒவ்வொரு வருடமும் சொல்வதையே சொல்லிவிட்டு பிரியாணியும் மீன் வறுவலும் செய்ய ஒத்துக் கொண்டாள். ஒவ்வொரு பிறந்த நாளன்றும் தவறாமல் தோன்றும் தொடர்ச்சியான எண்ணங்கள் இந்த முறையும் வந்து கந்தனைத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது.

ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகிவிட்டது திருவண்ணாமலையில் தாத்தாவோடு பேசி. இன்றோடு கந்தனுக்கு முப்பத்தைந்து வயது நிரம்பிவிட்டது. அன்று தாத்தா சொன்னது எதையுமே இன்னும் நம்பமுடியாமல் தான் இருக்கிறது. கேசவனிடம் கூட அன்று தாத்தாவும் அவனும் பேசியதைப் பற்றிச் சொல்லவில்லை. இவனுக்குள்ளேயே இருக்கிறது அன்று கண்ட கனவுகளும் உரையாடல்களும். அந்தக் கனவுகளையும் உரையாடல்களையும் பற்றி நினைத்தால் ஒரு கேள்விக்கு விடை கிடைக்கும். ஆனால் அதிலிருந்து பத்து கேள்விகள் தோன்றும். அதனால் குழப்பம் அதிகமானதே தவிர குறையவில்லை. அவனுடைய குணங்களிலும் எந்த வித நல்லதும் தெரியவில்லை. என்றும் போல் பெரிய ஈகோவோடு தான் இன்றும் இருக்கிறான். யாராவது இவனைப் புகழ்ந்தால் மிகவும் பிடிக்கிறது. குழந்தைகளிடம் அடிக்கடி கோவித்துக் கொள்கிறான்; அடிக்கிறான். மனைவியிடம் சண்டையென்றால் அந்தக் கோபமும் குழந்தைகளிடம் அடியாக இறங்குகிறது. இப்படி எத்தனையோ சொல்லலாம். தன்னைத் தானே இந்த நிலையில் எல்லாம் பார்க்கும் போது ஆன்மிக வளர்ச்சி உள்ளவன் மாதிரியே தோன்றுவதில்லை கந்தனுக்கு. ஆன்மிக வளர்ச்சி என்ன, ஒரு நல்ல மனிதன் என்று கூடச் சொல்ல முடியாது.

திருவண்ணாமலையிலிருந்து திரும்பி வந்த பிறகு 'இதெல்லாம் முழுக்க முழுக்க கற்பனை - பொய்' என்று உறுதியாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் கந்தன். ஆனால் பின்னர் தாத்தாவுடன் கிடைத்த அனுபவங்கள் அவனை மீண்டும் குழப்பிவிட்டன. இவற்றை எல்லாம் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

தாத்தாவுடன் பேசிய ஓரிரு வருடங்களிலேயே கந்தனுக்குத் திருமணம் நிச்சயமானது. பெண்ணும் சென்னையிலேயே பணி புரிந்து கொண்டிருந்தாள். அதனால் நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் நடுவில் இருந்த ஆறு மாதங்கள் அருமையாகச் சென்றன. இருவரும் தினந்தோறும் சந்தித்துக் கொண்டார்கள். எங்கெல்லாம் காதலர்கள் சுற்றலாமோ அங்கெல்லாம் சென்றார்கள்.

அப்படி இருக்கும் போது கேசவன் ஒரு முறை தொலைபேசி தாத்தாவுக்கு உடல் நலமின்றி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னான். கேசவனும் கந்தனும் தாத்தாவைப் பார்க்க மயிலாப்பூரில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். போகும் போது சாயி பாபா கோவிலுக்குச் சென்று அங்கிருந்து உதி (சீரடி சாயிபாபா கோவிலில் எரிந்து கொண்டிருக்கும் அணையாத நெருப்பின் சாம்பல்) எடுத்துக் கொண்டு போய் கொடுக்கலாம் என்று கேசவன் சொன்னதால் அப்படியே செய்தார்கள்.

மருத்துவமனையில் இருவரையும் பார்த்த தாத்தா மிகவும் மகிழ்ச்சியாக இருவரையும் வரவேற்றார்.

"எப்ப முகூர்த்தம் மோகன்?"

கந்தனுக்கு முதலில் என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. முதல் கேள்வியே திருமணத்தைப் பற்றி இருக்கும் என்று கந்தன் எதிர்பார்க்கவில்லை.

"எப்ப முகூர்த்தம்?"

"அக்டோபர் மாசம் தாத்தா"

"ஐப்பசியா?"

ஒரு நிமிடம் திகைத்துவிட்டு "ஆமாம் தாத்தா. ஐப்பசி தான்"

"நான் வர்றேன்"

"கட்டாயம் வாங்க தாத்தா. நான் அடுத்த தடவை வந்து பத்திரிக்கை வைக்கிறேன்"

கேசவன் உதியைத் தாத்தா நெற்றியில் இட்டுவிட்டான். பின்னர் அவர்கள் இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கூட இருந்து கவனித்துக் கொண்டிருந்தவர் சைகையில் 'போதும் பேசியது. அவர் கொஞ்ச நேரம் படுக்கட்டும்' என்று சொன்னதால் இருவரும் தாத்தாவிடம் விடை பெற்று கிளம்பினார்கள்.

நான்கு நாட்களுக்குப் பின்னர் கந்தன் கேசவனுக்குத் தொலைபேசினான்.

"கேசவா. தாத்தாவுக்கு பத்திரிக்கை வைக்க இன்னைக்குப் போகலாம்ன்னு இருக்கேன். நீயும் வர்றியா?"

"தாத்தா இன்னைக்கு காலையில போயிட்டாருடா. உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்கிறதால உன்கிட்ட சொல்ல வேணாம்ன்னு எங்க அப்பா சொல்லிட்டார். அதான் உனக்கு சொல்லலை"

கந்தனுக்குக் கொஞ்சம் சுருக்கென்றிருந்தது. திருமணத்திற்கு வருவேன் என்று சொன்னவர் அதற்குள் இறந்து போய்விட்டாரே என்று தோன்றியது. அவர் ஆசைப்பட்டார்; ஆனால் அதற்குள் அவர் நேரம் வந்துவிட்டது போல என்று எண்ணிக் கொண்டான்.

"நீ போய் பாத்துட்டு வந்தாச்சா?"

"ம். காலையிலயே போயிட்டு வந்துட்டேன்"

"எங்கேன்னு சொல்லு. நான் போயி பாக்குறேன்"

"டேய். உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிட்டதால நீ போகக்கூடாது"

"ஆமாம். அதுவும் சரி தான். ஆனா அவரை கடைசியா ஒரு தடவை பாக்கணுமேடா"

"அதான் நாலு நாளைக்கு முன்னாடி தானே பாத்தோம். பரவாயில்லை"

அரை மனத்துடன் சரி என்று சொல்லிவிட்டான் கந்தன்.

திருமண நாளும் வந்தது. கந்தன் முழுவதுமாகத் தாத்தாவை மறந்தே போய்விட்டான். கோலாகலமாக சொந்த ஊரில் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். கேசவனும் வந்திருக்கிறான்.

ஐயரிடம் முதலிலேயே சொல்லிவிட்டான். மந்திரங்களை எல்லாம் அவர் மட்டுமே சொல்லாமல் அவனையும் சொல்லவைக்க வேண்டுமென்று. இந்தக் காலத்தில் இப்படி ஒருவனா என்று ஐயர் நினைத்திருப்பார். ஆனால் கந்தன் கேட்டுக் கொண்டபடி எல்லா மந்திரங்களையும் அவனையும் சொல்லவைத்தார். மணமேடையில் பெண் வந்து அமர்ந்ததும் ஒவ்வொரு சடங்கையும் செய்யும் போது அதற்கு என்ன பொருள் என்று பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவளோ இவன் சொல்வதில் பாதியைக் காதில் வாங்கிக் கொண்டு மீதி நேரம் அவள் நண்பர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

கெட்டி மேளம் கொட்டி 'மாங்கல்யம் தந்துதானேன' மந்திரத்தோடு தாலியும் கட்டியாயிற்று. நண்பர்கள், நெருங்கிய சுற்றத்தார்கள் என்று நிறைய பேர் மணமேடைக்கே வந்து கைகுலுக்கி வாழ்த்துகள் சொன்னார்கள். அந்த சிறு கூட்டம் கலைந்து மேடையிலிருந்து சென்ற பின்னர் தற்செயலாக மேடைக்கு அருகில் பெரியவர்கள் அமர இடப்பட்டிருந்த இருக்கைகளின் மேல் கந்தனின் பார்வை விழுந்தது. அங்கே தாத்தா சிரித்த படியே உட்கார்ந்து கொண்டு கையைத் தூக்கி ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார். ஒரு நொடி திகைத்து மறுபடியும் பார்க்கும் போது அவரைக் காணவில்லை. திகைப்பாக இருந்தாலும் ஏதோ பிரமை என்று கந்தன் நினைத்துக் கொண்டான்.

அன்று மாலை கேசவனும் கந்தனும் பேசிக் கொண்டிருந்தார்கள். நண்பர்களின் கேலிகளையும் கிண்டல்களையும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விடும் நிலைக்குக் கந்தன் வந்திருந்தான். இப்போது தான் கேசவனுடன் தனியாகப் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது அவன் சொன்னதைக் கேட்டு மீண்டும் ஒருமுறை திகைத்தான் கந்தன்.

"கந்தா. தாத்தா கல்யாணத்துக்கு வந்திருந்தார். பாத்தியா?"

31 comments:

வெட்டிப்பயல் said...

ஹிம்ம்ம்... நல்லா முடிச்சிருக்கீங்க :-)

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருக்கு குமரன். ரொம்ப ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்குன்னு தெரிஞ்சாலும் அதை எல்லாம் புரியாட்டா கூட படிக்க சுவாரசியமா இருந்தது. வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

முடிவு பிடிச்சுருந்ததா? நன்றி பாலாஜி. :-)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

முடிவு பிடிச்சுருந்ததா? நன்றி பாலாஜி. :-)//

குமரன்,
முடிவு தெரிஞ்சதுதானே? ;)
நேத்தே சொல்லிட்டனே...

பாட்டு, தத்துவம் எல்லாம் சாதாரணமா உனக்கு புரியும்னு தாத்தா சொல்லும் போதே தெரிஞ்சிது கந்தன் யாருனு ;)

ஜீவி said...

அன்புள்ள குமரன்,
கதையை முடித்து விட்டீர்களே?.. நல்லதொரு முயற்சி நன்றாகவே அமைந்துவிட்டது. வாழ்த்துக்கள்.
சென்ற அத்தியாயதிற்கான பின்னூட்டத்தில் விமர்சனக்கட்டுரை ஒன்றை இந்தக் கதைக்கு எழுத வேண்டி நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன்.
முதலில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.
நல்ல பல செய்திகளை ஒரு கதையின் மூலமாக வெளிப்படுத்த முயன்றிருக்கும் நண்பர் ஒருவருக்கு,
அவரது செயல் நன்கு அமைய வேண்டி,கதைகள் எழுதுவதில் ஓரளவு பரிச்சயம் கொண்டிருந்ததினால், நம் பங்குக்கு நாமும்சில யோசனைகளைச் சொல்லலாம் என்கிற உரிமையில், கதை எழுதும் கலையில் உள்ள சில நெளிவு சுளிவுகளை உங்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவ்வளவு தான்.
நான் உங்களுக்குத் தெரிவித்தது கதையின் உள்ளடக்கம் சம்பந்தப்படாத, வெறும் 'எழுத்து' சம்பந்தப்பட்டதும், அதைச் சொல்லும் முறை சம்பந்தப்பட்டதும் தான். அடுத்த அத்தியாயத்திலேயே நீங்கள் அவற்றைக் கைக்கொண்டதைப் பார்த்தேன். சென்ற அத்தியாயத்தில் என்னை மீறி,'அந்த' வரிகளை சிலாகித்து ஒரு பின்னூட்டம் போட நேரிட்டது. அவ்வளவு தான் இந்தத் தொடரில் என் பங்களிப்பு. ஒரு பெரும் முயற்சியில், ஒரு துளி பங்கேற்ற என்னை, விமரிசனம் எழுதக் கேட்டுக் கொண்டது, உங்கள் பெருந்தன்மையையே காட்டுகிறது.
நீங்கள் கேட்டுக்கொண்டபடி இந்தக் கதைக்கு ஒரு விமரிசனம் எழுதப் புகின், இப்படிப்பட்ட சமாச்சாரங்களே எனது விமர்சனத்தில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ள நேரிடும். இருந்தும், இந்த கதை குறித்து ஆக்கபூர்வமான ஒரு விமரிசனம் தேவையா என்றால் நிச்சயம் தேவைதான். அடுத்த கதை எழுதுவதற்கு அது நிச்சயம் உங்களுக்கு உதவும் என்கிற அடிப்படையில் அது தேவைதான். தனது முதல் படைப்பைப் படைத்த ஒருவருக்கு, கறாரான விமரிசன பயமுறுத்தல்களைத் தவிர்த்து, ஊக்குவிக்கும் முறையில் சில பாராட்டுத் தட்டிக் கொடுத்தல்களே உடனடியான தேவை. அதுவும் நீங்கள் எடுத்துக் கொண்ட 'சப்ஜெக்ட்' மனம் போன போக்கில், நினைக்கும் எதையும் கற்பனையில் எழுதும் செய்தி இல்லை. சில ஆன்மீகச் செய்திகளைச் சுவைபடச் சொல்வதற்காக எடுத்துக் கொண்ட உருவம் கதையாக நேரிட்டதால், இயல்பாகவே அப்படிப்பட்ட கதைகள் எழுதுவதில் ஏற்படும் சில சங்கடங்களை நீங்களும் எதிர்கொள்ள நேரிட்டது. வெறும் விவரத் தொகுப்பாகப் போய்விடாமல், படிப்பவர்க்கு சலிப்பேற்படாமல் சொல்ல வேண்டிய அதிகபட்ச ஜாக்கிரதை உணர்வும் கொள்ள வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட சில இக்கட்டுகள் இருந்தும், நீங்கள் வெற்றியடைந்திருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
திருவெம்பாவை பாடல்கள், கண்ணன் தூது, அருள்மிகு பழனியாண்டவர் -போகர் சமாச்சாரங்கள்,அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு- புள்ளரசன் பொற்காலன் வட்டமிடுதல், நரசிம்மதாசன்,ஜெயதேவர்,கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டே வந்து ஜகன்மோகனில் நீங்கள் நின்று நிலைகொண்டபொழுது
கதை நன்கு களைகட்டி விட்டது. பின்பு கல்யாண காட்சியில் முடித்தும் சரிதான். பாக்கியை அடுத்துவரும் கதைகளில் வைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அதற்குள்--- வேறு என்னன்ன நகாசு வேலைகள் கதைகளில் செய்யலாம்,என்னன்ன உத்திகளை கைக்கொள்ளலாம், எங்கெங்கு நீட்டி- எங்கெங்கு குறைத்துக் கொள்ளலாம்,
எழுதுபவன், எங்கெங்கு அடக்கி வாசிக்க வேண்டும், எங்கெங்கு 'தான்' நுழைந்து கொண்டு படிப்பவனை தன்னுடன் கைபிடித்து அழைத்துச்செல்லலாம்--என்கிற சமாச்சாரங்களெல்லாம் உங்களுக்கு அத்துபடி ஆகியிருக்கும்.
கதைகளுக்கு, 'இவைல்லாம் எங்கு இவருக்குக் கிடைத்தன' என்று நாங்கள் மலைக்கும் அளவுக்கு நீங்கள் இட்டிருந்த படங்களைக் குறிப்பிடவில்லையெனில், பெரிய தவறு செய்தவனாவேன். கதையை நீங்கள் முடித்த பாங்கும் மிகுந்த நிறைவேற்படுத்தியது. மேற்குறிப்பிட்டவையெல்லாம், கதையைப் படித்த, ஒரு கதைசொல்லியின் வெறும் குறிப்புகளாகத்தான் இருக்க முடியும்.
ஆனால், நம்மிடையே சீனா சார் போன்ற 'ரசனை' வரம் பெற்ற அருமையான் ரசனையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு எழுத்தாளனது எழுத்துக்கு 'போஷாக்கு' ஊட்டுவது, இன்னும் இன்னும் எழுதத்தூண்டுவது அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற ரசனையாளர்களின் ரசிப்பு தான்.
அவர் எழுதப் போவதை நாமெல்லாம் சேர்ந்து படிப்போம்.
குமரன், வாழ்க..வளர்க!
நிறைய எழுதுங்கள்..படிக்கக் காத்திருக்கிறோம்.

G.Ragavan said...

என்ன மோகன் கதைய அதுக்குள்ள முடிச்சிட்டீங்க :)

ஆகக்கூடி அந்தக் கேசவனும் தாத்தனும் கூடி நாடகமாடி...செத்துப் போன மாதிரி நடிச்சி...அவரப் பாக்க விடாம செஞ்சி கல்யாணத்துல வர்ர மாதிரி வந்துட்டுப் போயி....கந்தன் இப்பிடி ஆன்மீகக் கிறுக்கனா ஆக்கீட்டாங்க. சரிதானே? :)

Geetha Sambasivam said...

தன் வரலாற்றுக் கட்டுரை? என்றாலும் முடித்திருந்த விதம் அருமை! பின்னூட்டம் கொடுக்கவே அருகதை அற்ற என்னை விமரிசனம் செய்யச் சொல்லி எழுதி இருந்தீர்கள். ஆனால் ஜீவாவை விட அருமையாக என்னால் விமரிசனம் எழுத முடியாது. கதை சொல்லும் அர்த்தங்களை மெதுவாக உள்வாங்கிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். அருமையான படைப்பு, மிகவும் சிரத்தையுடன் கூடிய பணி.

நானெல்லாம் சாதாரணமான சராசரியான வாழ்வின் அனுபவங்களை எழுதும், இன்னும் சொல்லப் போனால் அதிகமாய் மொக்கையே எழுதும் ஆள். இவ்வளவு உள்ளார்ந்த அர்த்தங்களுடன் கூடிய அற்புதமான, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாத, தன்னிலிருந்து விலகி நின்று, தன்னையே ஆராய்ந்த, சுய அலசல் செய்த ஒரு அற்புதமான மனிதரின் நட்புக் கிடைத்ததுக்கு ரொம்பவே சந்தோஷப் படுகிறேன். வாழ்த்துக்களும், ஆசிகளும்.

மெளலி (மதுரையம்பதி) said...

குமரன்,

இன்றுதான் நேரம் கிடைத்தது. இந்த பதிவினை படித்தேன். மிச்சம் எல்லாத்தையும் படித்துவிட்டு பின்னர் வருகிறேன்.

cheena (சீனா) said...

கதை நிறைவுற்றதா - இல்லை - தொடர்கிறது - எங்கோ ஆரமபித்து எங்கோ சுற்றி எங்கோ முடிகிறது போன்ற உணர்வு - அத்தனையும் தொடர்பு படுத்தி - சொல்ல நினைத்த - சொல்ல வேண்டிய அத்தனையையும் அருமையாகச் சொல்லி - அடடா - குமர, காவியம் படைத்துவிட்டீர்கள்

தொடர்க - நல்வாழ்த்துகள்

முதலில் தொடங்கி இறுதி வரை இன்னும் ஒரு முறை மூச்சு விடாமல் படிக்க வேண்டும் - படிக்கிறேன்

கோவி.கண்ணன் said...

சொந்த கதை மாதிரி இருக்கு. ஐ மீன் நீங்களே முழுக்க முழுக்க கற்பனையில் எழுதிய கதைதானே.
:)

jeevagv said...

குமரன்,
அந்த ஐந்து பிறவிக் கதைகளுக்கும் ஐந்து கோசங்களும் தொடர்புண்டோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்
கதையை முடிக்கும் போது சர்வேசனின் நஒக அனுப்ப வேண்டுமே என்று முடித்தீர்களா என்ன? நச் முடிவு தான்!

விவாதமே இல்லை!
அவனும் பார்த்தான்! இவனும் பார்த்தான்! அவரும் பார்த்தார்!! சுபம்!!!

இவ்வளவு நாள் ஜாலியாப் படிச்சிட்டு, பின்னூட்டம் மட்டும் போட்டுட்டுப் போயிட்டேன்! இனி விமர்சனமா? அதுவும் ஜீவி அவர்களின் விமர்சனம் படித்த பின் எனக்குக் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கு! :-)

//கந்தன் இப்பிடி ஆன்மீகக் கிறுக்கனா ஆக்கீட்டாங்க. சரிதானே? :)//

கிறுக்கனா?
அதுவும் சரி தான்!
ஆன்மீகச் சிந்தனைகள் என்றாலே கிறுகிறுத்துப் போபவன் கந்தன்!
கிறுகிறுக்கும் உள்ளத்துக்குச் சொந்தக்காரன் கிறுகிறுக்கன் தான்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆன்மீகக் கவிதைகள், கதைகளை எல்லாம் முடிக்கும் போது மங்களம் சொல்லி நிறைவு செய்யணுமே! நூற்பயன் சொல்லிடுங்க குமரன்! :-)

புல்லாகிப் பூண்டாகிப் புரைதீர்க்கப் போராடிக்
கல்லாகிக் கண்ணன் கழல்பெற்ற கதையீது
சொல்வார்கள் சொல்லக் கொள்வார்கள் சோர்வதனை
வெல்வார்கள் வென்று வையத்தில் வாழியரே!

குமரன் (Kumaran) said...

கொத்ஸ்.

நீங்க சொன்ன மாதிரியே என்னோட இன்னொரு நண்பரும் சொன்னார். (அவர் எப்பவாவது தான் தங்கிலீஷ்ல பின்னூட்டம் போடுவார்). 11,12 அத்தியாயங்களோட ஒட்ட முடியலை; புரியலைன்னு சொன்னார். பாக்கலாம். அதையெல்லாம் இன்னும் எளிதா எப்படி எழுதுறதுன்னு. இரவிசங்கர்கிட்ட ட்யூசன் எடுத்துக்க வேண்டியது தான்.

புரியலை; அதனால படிக்கலைன்னு அந்த நண்பர் சொல்லிட்டார். ஆனா நீங்க அப்படி இல்லாம புரியாட்டியும் படிச்சிருக்கீங்களே. ரொம்ப நன்றி.

தொடர்ந்து எல்லா அத்தியாயத்திற்கும் உற்சாகத்தோடு வந்து படித்து ஊக்கம் தந்ததற்கு மிக்க நன்றி.

உண்மையைச் சொல்லணும்ன்னா தமிழ்மண நட்சத்திர வாரம் முடிஞ்ச பின்னாடி ஏற்பட்ட அப்பாடா என்ற உணர்வு இப்போதும் இருக்கு. எனக்கு மட்டும் இல்லை. வீட்டுலயும். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதையெல்லாம் இன்னும் எளிதா எப்படி எழுதுறதுன்னு. இரவிசங்கர்கிட்ட ட்யூசன் எடுத்துக்க வேண்டியது தான்.//

இதுல உ.குத்து, வெ.குத்து, நுண்ணரசியல்-ன்னு என்னென்னமோ சொல்லுறாங்களே! அதெல்லாம் இல்ல தானே! :-)))))))

//அப்பாடா என்ற உணர்வு இப்போதும் இருக்கு. எனக்கு மட்டும் இல்லை. வீட்டுலயும். :-)//

அண்ணியார் வாழ்க! வாழ்க!!
அண்ணனுக்குக் கதை வடிச்ச களைப்பு தீர குறும்பாட்டு சூப் வைச்சிக் கொடுங்க அண்ணி! :-))

குமரன் (Kumaran) said...

//குமரன்,
முடிவு தெரிஞ்சதுதானே? ;)
நேத்தே சொல்லிட்டனே...

பாட்டு, தத்துவம் எல்லாம் சாதாரணமா உனக்கு புரியும்னு தாத்தா சொல்லும் போதே தெரிஞ்சிது கந்தன் யாருனு ;)//

கந்தன் யாரு பாலாஜி? நீங்க சொன்னதை மத்தவங்க பாருங்க தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க. சொல்றதைத் தெளிவா சொல்லுங்க பாலாஜி. வர வர உங்க பின்னூட்டமும் கீதாம்மா பின்னூட்டம் மாதிரி இருக்கு. (அப்பாடா ரொம்ப நாளைக்கப்புறம் கீதாம்மா காலை வாரியாச்சு. :-) )

பாட்டு, தத்துவம் எல்லாம் நல்லா புரிஞ்சவங்கன்னு சொன்னா இங்கே வலையுலகத்திலேயே ஒரு பட்டியல் தர முடியும் என்னால. இரவிசங்கர், இராகவன், எஸ்.கே., ஜீவா, கோவி.கண்ணன், இரத்னேஷ் அப்பா, வவ்வால், கீதாம்மா, வல்லியம்மான்னு பட்டியல் நீளமா போகும். உங்களை விட்டுட்டேனேன்னு நினைக்காதீங்க. குத்துப் பாட்டெல்லாம் கோவிந்தன் பாட்டா மாத்தி எழுதுற உங்களைச் சொல்லாம விடமுடியாது.

குமரன் (Kumaran) said...

தங்கள் அன்பான சொற்களுக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா. நீங்கள் எனக்குத் தந்த உத்திகள் கதையின் உள்ளடக்கத்திற்கு இல்லை தான். நேற்று உங்கள் பின்னூட்டத்திற்குப் பதில் எழுதிய பின்னர் படித்து பார்த்த போது உள்ளடக்கத்திலும் உங்கள் பங்கு இருப்பது போல் தொனித்ததைக் கவனித்தேன். ஆனால் மாற்றி எழுதாமல் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் நீங்கள் அதனை எடுத்துச் சொல்லிவிட்டீர்கள் இங்கே. :-)

நீங்கள் சொன்ன உத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கியதில் எனக்கு நிறைய தெளிவு கிடைத்தது. அதற்கு முன்னர் எல்லோர் பெயரையும் ஒவ்வொரு முறையும் 'இவன் சொன்னான்; அவன் செய்தான்; இவன் நினைத்தான்' என்று எழுதி படிப்பவர்களையும் குழப்பி என்னையும் குழப்பிக் கொண்டிருந்தேன். முதல் சில அத்தியாயங்களில் அந்தக் குழப்பத்தை உணர முடிந்தாலும் எப்படி சரி செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் உங்கள் பின்னூட்டம் கிடைத்தது. அதனை உடனே சேமித்து வைத்து பத்து தடவைக்கு மேல் படித்து அடுத்த அத்தியாயத்திலிருந்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். நான் சொல்ல வந்தது எல்லாவற்றையும் குழப்பமே இல்லாமல் அந்த உத்திகளால் சொல்ல முடிந்ததைக் கவனித்தேன். படிப்பவர்களுக்கும் குழப்பம் இல்லாமல் இருந்திருக்கும். சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா.

உங்கள் ஆலோசனையால் பெற்ற பயனை நன்கு அறிந்தவன் என்பதால் நீங்கள் தயங்காமல் ஒரு முழுமையான விமர்சனக் கட்டுரை எழுதித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது எனக்கும் என்னைப் போல் சொல்ல வேண்டும் என்ற ஆசையிருந்தும் சொல்லும் முறைகள் தெரியாமல் திகைப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

ஊக்குவிக்கும் முறையில் நீங்கள் தந்திருக்கும் பாராட்டுகளுக்கு நன்றி. கறாரான விமர்சனங்களும் இருந்தால் தரவேண்டும். இன்னொரு நண்பரும் 'நயம் பாராட்டல் வேண்டுமா, நடுநிலையான விமர்சனம் வேண்டுமா' என்று கேட்ட போது 'நகுதற் பொருட்டன்று நட்டல்' என்று பதில் சொன்னேன்.

தங்களின் அன்பிற்கு மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமபிரான் தான் பெற்ற வெற்றிகளுக்கு எல்லாம் பெரியவர்களின் ஆசிகளே காரணம் என்று சொன்னானாம். அவதாரத்திற்கே அப்படி என்றால் அடியேனுக்கு இன்னும் அது அதிகம் பொருந்தும். வயதிலும் அறிவிலும் மூத்தவர்களை நண்பர்களாகப் பெற்றேன்; அவர்களின் ஆசிகளையும் வாழ்த்துகளையும் அடைந்தேன்; உய்ந்தேன்.

குமரன் (Kumaran) said...

மோகன் கதை எங்கே முடிஞ்சது இராகவன். அவன் தான் இன்னும் படுக்கையிலே சுத்தி குடும்பம் உறங்கிக்கிட்டு இருக்க இவன் மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறானே. தொடரும் அவன் கேள்விகள்.

//ஆகக்கூடி அந்தக் கேசவனும் தாத்தனும் கூடி நாடகமாடி...செத்துப் போன மாதிரி நடிச்சி...அவரப் பாக்க விடாம செஞ்சி கல்யாணத்துல வர்ர மாதிரி வந்துட்டுப் போயி....கந்தன் இப்பிடி ஆன்மீகக் கிறுக்கனா ஆக்கீட்டாங்க. சரிதானே? :)
//

ஆகா. சொன்னீங்க பாருங்க சூப்பரா. கந்தனோட கிறுக்கெல்லாம் தீர்த்து வைத்த இராகவப் பெம்மான் வாழ்க வாழ்க. :-) கந்தனைப் பார்த்தா நான் சொல்றேங்க. நீங்களும் பாத்தா சொல்லுங்க. :-)

குமரன் (Kumaran) said...

//தன் வரலாற்றுக் கட்டுரை? //

கீதாம்மா. அப்படி சொல்றமாதிரி சில இந்தத் தொடர்கதையில இருக்குன்னு ஒத்துக்குறேன். ஆனா அப்படி சொல்ல முடியாத மாதிரி தானே நிறைய இருக்கு. பாலாஜி சொன்னதை வச்சு இந்த முடிவுக்கு வந்துட்டீங்களா என்ன?

//பின்னூட்டம் கொடுக்கவே அருகதை அற்ற என்னை //

இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

//ஆனால் ஜீவாவை விட அருமையாக என்னால் விமரிசனம் எழுத முடியாது//

ஜீவி ஐயா எழுதுனதைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். நண்பர் ஜீவாவும் விமர்சனத்தைத் தனிமடல்ல அனுப்பிச்சிருக்காரு. எல்லோரோட விமர்சனமும் வந்த பின்னாடி மொத்தமாவோ ஒவ்வொன்னாவோ போடறேன்.

//அருமையான படைப்பு, மிகவும் சிரத்தையுடன் கூடிய பணி.
//

பாராட்டிற்கு நன்றிகள்.

//வாழ்த்துக்களும், ஆசிகளும்.//

இவைகளுக்கும் மிக்க நன்றிகள். இந்த வரியை எழுதும் முன் எழுதியிருப்பவற்றைப் பற்றி என்ன சொல்றதுன்னு தெரியலை. :-)

குமரன் (Kumaran) said...

மெதுவா நேரம் கிடைக்கிறப்பப் படிச்சுச் சொல்லுங்க மௌலி.

குமரன் (Kumaran) said...

உண்மை சீனா ஐயா. கதை நிறைவு பெறவில்லை. தொடர்கிறது.

ஆமாம் ஐயா. எங்கோ தொடங்கி எங்கெல்லாமோ போய் இங்கு முடிந்திருக்கிறது.

நல்ல வேளை, குமரவுக்கும் காவித்திற்கும் நடுவில் அரைப்புள்ளி போட்டீர்கள். ஒரு நொடி 'குமர காவியம்'ன்னு சொல்றீங்களோன்னு பயந்துட்டேன். :-) பாராட்டிற்கு நன்றி ஐயா.

நீங்கள் சொன்னது போல் முதலிலிருந்து இறுதி வரை நான் இரண்டு முறை படித்தேன். :-) பின்னூட்டங்களைப் படிக்காமல் அத்தியாயங்களை மட்டுமே ஒரு முறை படித்தேன். அடுத்த முறை பின்னூட்டங்களுடன். இரண்டும் இரண்டுவிதமான உணர்வுகளைத் தந்தன. நேரம் இருந்தால் நீங்களும் படித்துப் பாருங்கள். பின்னூட்டங்களிலும் பல செய்திகள் இருக்கின்றன.

குமரன் (Kumaran) said...

//சொந்த கதை மாதிரி இருக்கு.//

ஏன் அப்படி சொல்றீங்க கோவி. கண்ணன்?

//ஐ மீன் நீங்களே முழுக்க முழுக்க கற்பனையில் எழுதிய கதைதானே.
//

உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? :-)

முழுக்க முழுக்க கற்பனை இல்லை. திருவண்ணாமலையைச் சுற்றிக் காண்பித்த போது அங்கிருப்பவையாகச் சொன்னவை கற்பனை இல்லை; கண்ணன் தூது, பழனியில் போகர் பழனியாண்டவர் சிலை வடித்தது, பெரிய கோவில் குடமுழுக்கு, சைதன்யர், ஜயதேவர், தோதாபுரி, இராமகிருஷ்ணர் இவர்களும் இவைகளும் கற்பனை இல்லை. இவை போக வேறு எதெல்லாம் கற்பனை இல்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது? :-)

கோவி.கண்ணன் said...

//ஏன் அப்படி சொல்றீங்க கோவி. கண்ணன்? //

ஓ அதுவா...கந்தனுக்கும் குமரனுக்கும் எனக்கு பெருசா வேறுபாடு தெரியல, உங்களுக்கு தெரிந்ததா ?
:)

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன். என்னை நீங்க இதுவரைக்கும் பாத்ததில்லை; போனில ஒரே ஒரு தடவை தான் பேசியிருக்கோம். எப்படிங்க கந்தன்ல குமரனைப் பாக்குறீங்க? :-)

I have two counter arguments.

1. Why can't it be a medidated diversion by showing the details about me which are already known to bloggers?

2. Everyone writing stories will include their experiences with themselves or others knowingly or unknowingly.

:-)

Just for the sake of arguments.

நீங்க ஏற்கனவே பாதி விமர்சனம் சுருக்கமா சொல்லிட்டீங்க. முழு விமர்சனமும் நேரம் கிடைக்கும் போது எழுதித் தாங்க. :-)

கோவி.கண்ணன் said...

//குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன். என்னை நீங்க இதுவரைக்கும் பாத்ததில்லை; போனில ஒரே ஒரு தடவை தான் பேசியிருக்கோம். எப்படிங்க கந்தன்ல குமரனைப் பாக்குறீங்க? :-)
//

கதை முழுக்க முழுக்க கற்பனை என்று டிஸ்கி போட்டிருக்கலாம்.
:)

குமரன் (Kumaran) said...

ஜீவா. அவற்றை எழுதும் போது ஐந்து கோசங்களுக்குத் தொடர்புபடுத்தி எழுதவில்லை. அவைகளும் அப்படியே ஐந்து கோசங்களுக்கும் பொருந்துபவைகளாக எனக்குத் தோன்றவில்லை. கல், மரம் இரண்டையும் அன்னமய கோசத்திற்குச் சொல்லலாம். கருடனை பிராணமய கோசத்திற்கோ மனோமய கோசத்திற்கோ சொல்லலாம். முன் பின்னாக ஜகன்மோகனை விஞ்ஞான மய கோசத்திற்கும் நர்சிஹ்ம்தாஸை ஆனந்தமய கோசத்திற்கும் சொல்லலாம்.

உங்களுக்கு எப்படி தோன்றுகிறது என்று சொல்லுங்கள்.

jeevagv said...

அப்படியா குமரன், நான் யோசித்துப்பார்த்ததிலும் அப்படித்தான் - நேரடியான தொடர்பு ஏதும் இருப்பதாக தோன்றவில்லை - நீங்கள் சொன்னதுபோல ஒரளவிற்கு ஒன்று சேர்க்கலாம் போலத் தோன்றியது.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். நான் கதையை எழுதி முடிக்கிறதுக்குள்ள சர்வேசன் கடைசி வட்ட வாக்கெடுப்பு தொடங்கியாச்சே. அது மட்டுமில்லாம சிறுகதை மட்டும் தானே நஒக போட்டியில சேரமுடியும் போல. இது தொடர்கதையா போச்சே. :-)

இந்த வாரத்துக்குள்ள எல்லார்கிட்ட இருந்தும் விமர்சனம் வந்துரும்ன்னு நினைக்கிறேன். நீங்களும் நேரம் கிடைச்சவுடனே எழுதி அனுப்புங்க.

நூற்பயன் நல்லா இருக்கு இரவிசங்கர். பெரியவங்களுக்கு எல்லாம் தனியன் எழுதி சேர்க்குற மாதிரி அடியேன் எழுதிய / கிறுக்கிய கிறுக்கல்களுக்கு நூற்பயன் எழுதி கிறுகிறுக்க வைத்துவிட்டீர்கள். கந்தக் கிறுக்கன் மாதிரி நானும் குமரக்கிறுக்கன் ஆகிவிட்டேன். :-)

//இதுல உ.குத்து, வெ.குத்து, நுண்ணரசியல்-ன்னு என்னென்னமோ சொல்லுறாங்களே! அதெல்லாம் இல்ல தானே! :-)))))))
//

இல்லை இல்லை இல்லவே இல்லை. :-)

//குறும்பாட்டு சூப் வைச்சிக் கொடுங்க அண்ணி! :-))
//

நல்ல வேளையா அவங்க பாட்டு பாட முயற்சி எடுக்கலை இன்னும் (நீ பாடி எல்லாரையும் கொல்றதே போதும்ன்னு என்னைப் பாத்து முடிவு செஞ்சிட்டாங்க போல. :-) ). அப்படி பாடியிருந்தா குறும் பாட்டு, நெடும் பாட்டு எல்லாம் சூப் வச்சிருப்பாங்க. :-)

ஜீவி said...
This comment has been removed by a blog administrator.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

புல்லாகிப் பூண்டாகி...குமரன் தொடராக எழுதி; நானும் வாசித்தேன்.
அவருக்குள்ள புராண;இதிகாச அறிவுடன் ஆத்மீகத் தேடலின் பிரதிபலிப்பே இக்கதையின் உள்ளீடு.
புராண ;இதிகாசத்தில் ஆர்வமிருந்தாலும் ; போதிய ஞானமற்ற எனக்கு இவை புதிய செய்திகளாக ஆர்வமூட்டுவதாக இருந்தது.
ஆத்மீகத்தில் நம்பிக்கை முக்கியபங்கு...." உண்ணும் சோறும்; தின்னும் வெற்றிலையும்"
அவனே என நம்புபவர்கள் ஆத்மீக வாதிகள்.
குமரனை ஒருவருடமாக எழுத்தில் தெரியும்; அவர் மிகுந்த நம்பிக்கை மிக்கவர்.
அதனால் அனுமானிச சக்தி என ஆத்மீகத் துறையில் உள்ளோர் கூறும்; நடைமுறைச் சம்பவக் கோர்வைகள்; இறைநம்பிக்கையுடன் கைகோர்த்து இவர் எழுத்தில் சென்றது.
இவற்றை அதிகம் நான் நம்பாவிடிலும்...(என் இறை நம்பிக்கையை-கோவிலைத் தேடி நான் போகாமல் குமரா உனை நான் கும்பிட வழி தா!)..மற்றவர் கூறுவதைக் கேட்கப் பிரியப்படுவேன்.
அந்த வகையில் இக்கதையில் சில வேளை இவை ;எழுதுபவர் சொந்த அனுபவமோ எனும் ஆவலைத் தூண்டும் படி இருந்ததால் வாசித்து முடித்தேன்.
ஒரு இடத்தில் மலைகள் பற்றிக் குறிப்பிடும் போது; மலைகள் எரிமலையிலிருந்து தோன்றியவை...என்று கூறுகிறார்.
அதை வாசித்த போது ;நான் அறிந்ததற்கு எதிர் மாறாக இருக்கிறதே இவர் கூற்று என நினைக்க அடுத்த வரிகளில்....எல்லா மலைகளும் எரிமலையில் தோன்றவில்லை. இமயமலை அப்படி தோன்றவில்லை என விஞ்ஞான பூர்வ உண்மையையும் கூறிச் சென்றார்.
அவர் பல பக்க வாசிப்பின் பிரதிபலிப்பு இது.
அடுத்து கழுகு பற்றி...கூறும் போது....கோவில் கோபுரத்தை வட்டமிடும் நிகழ்வு...இதே போல் தென் அமெரிக்க பழங்குடி; அவுஸ்ரேலியப் பழங்குடி மக்கள் கூட கழுகு ;வட்ட மிடுவதை நற்சகுனமாகக் கொள்ளுவதை படித்துள்ளதால்; இவர் கூற்றைத் தள்ள முடியவில்லை.
கடம்பமரம் பற்றிய பகுதி...நமது ஆத்மீக வாதிகள் எவ்வளவு தொலைநோக்குடன் இந்த மரங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றியது பற்றி சிந்தித்துள்ளார்கள் என்பது; பல மரங்கள் தல விருட்சமாக நிர்ணயித்ததில் புலப்படுகிறது. இப்போதும் பல முதியவர்கள் வேம்பு,அரசு மரத்தை அம்மையாகவும் ஈசனாகவும் போற்றுகிறார்கள்.இந்த நம்பிக்கை குறைவு இன்று சுற்று சூழல் மாசாக மாறி நம்மை வதைப்பதையும் நோக்கவேண்டியுள்ளது.
இப்படி காலம் காலமாக ஆத்மீகத்துக்குள்ள ஐயம் கலந்த செய்திகள்; இக்கதையில் இழையோடிய போதும்....ஏன்??? இருக்கக் கூடாது.என்ற எண்ணமும் தலை தூக்கியது.
இதுதான் அவர் எழுத்தின் வெற்றி எனக் கொள்கிறேன்.
கந்தனும்;கேசவனும் உரையாடல் பகுதிகள்...இன்றைய கணனி இளைஞர்கள் இப்படியும் உரையாடுவார்களா?? என ஐயுற வைத்த போதும்...
குமரன்; ராகவன்; ரவிசங்கர் கண்ணபிரான் கூட கணனியுள் தானே காலம் கழிக்கிறார்கள் என்பது என் அந்த ஐயத்தைத் தீர வைத்தது.இன்றைய இளைஞர் சமுதாயத்தின் அங்கத்தவர்கள் இவர்களுமே...

இதைத் தொடராகப் படித்த போது..எனக்கு அப்பப்போ கல்கி;கலைமகள் தீபாவளி மலர் ஞாபகம் வந்தது. அவற்றில் தான் இப்படிக் ஓவியங்களும்;நிழல்படங்களும் கூடிய தெய்வீகக் கதைகள்,திவ்ய தேசக் கதைகள் படிக்கக் கிடைக்கும்.
மிகப் பொருத்தமான படங்கள்;ஓவியங்கள்...இதை வாசிக்கும் போது, மேலதிக செய்திகளைத் தந்தது.கடம்பப்பூ முதல் முதல் குமரன் மூலமே படத்திலாவது பார்த்தேன். நல்ல பொருத்தமான பாடல் தேர்வுகளுடன் ஒரு திருக்கோவில் நாமும் சுற்றி வந்ததுபோல் இருந்தது.
இக்கதை எனக்குப் பிடித்தது போல்; பலருக்குப் பிடித்துள்ளதைப் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிகிறது.
இவ்வளவு விடயங்களையும் தொகுத்து, யாத்திரையில் கண்ட காட்சியுடன் இணைத்து கதையாக்கிய விதம்; இந்த கதைகூறும் யுக்தி பாராட்டுக்குரியதே...

குமரன் (Kumaran) said...

என் வேண்டுகோளுக்கு இணங்கி முழுத் தொடரையும் வாசித்து விமரித்ததற்கு மிக்க நன்றி யோகன் ஐயா.

//குமரனை ஒருவருடமாக எழுத்தில் தெரியும்; //

இல்லை ஐயா. தமிழ்மணத்தின் மூலம் கிடைத்த நம் அறிமுகத்திற்கு இரண்டு வயது ஆகப் போகிறது. 2006ல் இந்திய குடியரசு தினம் வந்த வாரத்தில் நான் தமிழ்மண விண்மீனாக வைக்கப்பட்டிருந்தேன். அப்போது தான் நீங்கள் என்னுடைய எழுத்துகளைப் படிக்கத் தொடங்கியதாக நினைவு. இதோ 2008 இந்திய குடியரசு தினம் வரப்போகிறது. நம் அறிமுகத்திற்கும் இரண்டு வயது ஆகப் போகிறது. சென்ற ஜனவரியில் பிறந்த எங்கள் அருமை மகன் - பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பரமன் மகன் திருப்பெயரைச் சூடிக் கொண்டவனுக்கு நாளை ஒரு வயது நிறைவு பெறுகிறது. :-)

//எழுதுபவர் சொந்த அனுபவமோ //

இதைப் பலரும் சொல்லிவிட்டார்கள். இதை ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. :-)

//இப்படி காலம் காலமாக ஆத்மீகத்துக்குள்ள ஐயம் கலந்த செய்திகள்; இக்கதையில் இழையோடிய போதும்....ஏன்??? இருக்கக் கூடாது.என்ற எண்ணமும் தலை தூக்கியது.இதுதான் அவர் எழுத்தின் வெற்றி எனக் கொள்கிறேன்.
//

இந்தக் கதையில் வந்தவை எல்லாமுமே ஐயமே இல்லாதவை என்று நானும் சொல்ல மாட்டேன் ஐயா. அவை முழுக்க முழுக்க நானும் நம்புபவை என்றும் சொல்ல மாட்டேன். கதை என்ற அளவில் 'ஏன் இருக்கக் கூடாது' என்று எண்ணும் படி தொடர்ச்சியாகத் தர முடிந்தமைக்கு மகிழ்கிறேன்.

//கந்தனும்;கேசவனும் உரையாடல் பகுதிகள்...இன்றைய கணனி இளைஞர்கள் இப்படியும் உரையாடுவார்களா?? என ஐயுற வைத்த போதும்...//

ஐயமே வேண்டாம். வெட்டிபையல் பாலாஜி, இரவிசங்கர் கண்ணபிரான், இராகவன் மூவரும் பேசத் தொடங்கினால் முக்கால்வாசி நேரம் இவற்றை போன்றவையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதாவது என்னையும் சேர்த்துக் கொள்வார்கள். :-)

//இக்கதை எனக்குப் பிடித்தது போல்; பலருக்குப் பிடித்துள்ளதைப் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிகிறது.
இவ்வளவு விடயங்களையும் தொகுத்து, யாத்திரையில் கண்ட காட்சியுடன் இணைத்து கதையாக்கிய விதம்; இந்த கதைகூறும் யுக்தி பாராட்டுக்குரியதே... //

நன்றி ஐயா. தொடர்ந்து இதே போல் சிறுகதைகளாவது எழுதலாமோ என்ற எண்ணம் இப்போது வருகின்றது. :-)

விமர்சனம் எழுதித் தந்தமைக்கு மீண்டும் நன்றிகள் ஐயா. நண்பர்களின் விமர்சனத்தை எல்லாம் ஒன்றாக ஒரு இடுகையில் (அல்லது இரு இடுகைகளில்) இட்டுப் பின்னர் அவை எனக்கு நேரடியாகச் சொன்ன & மறைமுகமாகச் சொன்ன செய்திகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.