Friday, January 25, 2008

ஜன கன மன - குடியரசு தினத்தை முன்னிட்டு...

இன்றைக்குக் குடியரசுத் தினம். குடியரசு முறை நம் நாட்டிற்குப் புதியதன்று. தமிழகத்தில் மன்னர் ஆட்சியே இருந்திருந்தாலும் குடவோலை முறையில் ஊர்ச்சபையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்ததாகவும், வட நாட்டில் மௌரியர் காலத்திற்கு முன் 'கண ராஜ்யம்' என்னும் சிறு சிறு குழு குடியரசுகள் இருந்ததாகவும் படித்திருக்கிறேன்.

நம் தேசிய கீதம் எந்தத் தருணத்தில் இயற்றப்பட்டது என்பது ஒரு விவாதமாகவே இருக்கிறது. கவிகுரு இரவீந்திர நாத் தாகூர் அதனை ஆங்கில (வேல்ஸ்?) இளவரசர் பாரதத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்கும் முகமாக எழுதியது என்ற ஒரு கருத்து வலுவுடன் வலம் வருகிறது . இருக்கலாம். அதனை மறுத்துக் கூறவோ ஆதரித்துக் கூறவோ என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. இது அரசியல்வாதிகளின் வெறும் கூச்சலாக இருக்கலாம். இல்லை அதில் உண்மையும் இருக்கலாம்.

ஆனால் நம் தேசிய கீதத்தின் பொருளைப் பார்க்கும் போது அது நம் நாட்டின் பெருமையை மிக நன்றாகப் பாடுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் இந்தப் பாடலைப் புறக்கணித்து விட்டு இன்னொரு பாடலை நாம் நம் நாட்டுப் பண்ணாகக் கொண்டுவரத் தேவையில்லை என்று தான் சொல்வேன். நீங்களே படித்துப் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் - பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் - சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் - குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் - மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் - திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் - உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் - பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்த்ய ஹிமாசல

யமுனா கங்கா

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் - விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் - இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் - கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா - மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாஹே - உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஷ மாஹே - உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா - உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே - இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! - வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!

***
நண்பர் சந்தோஷ் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு பதிவு இட்டிருந்தார். அதில் மிக நல்ல முறையில் நம் நாட்டுப் பண் பல இசைவாணர்களால் இசைத்துப் பாடப்பட்டு எடுக்கப் பட்டப் படத்தை இட்டிருந்தார். அதனை இந்தப் பதிவிலும் இடவேண்டும் என்று எண்ணி அவரிடம் கேட்டேன். அவர் சொன்ன முறையில் கூகிள் கொடுத்த இந்தப் படத்தை இங்கே தருகிறேன். பார்த்துக் கேட்டு மகிழுங்கள். முடிந்தால் எழுந்து நின்று நாட்டுப் பண்ணுக்கு மரியாதை செய்யுங்கள்.


இது ஒரு மீள்பதிவு - நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்து இரு வருடங்கள் ஆகிவிட்டன. :-)

8 comments:

வாணியர் இளைஞர் நலச் சங்கம் said...

உங்களுடைய தேசப்பற்றுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.தேசிய கீதத்தை பலமுறை நான் படித்திருந்தாலும்,மேலோட்டமாகத்தான் கவனித்திருக்கிறேன்.உங்களுடைய விளக்கத்தின் மூலம் தெளிவாக விளங்க வைத்துள்ளீர்கள்.நன்றி!

வாணியர் இளைஞர் நலச் சங்கம் said...

உங்களுடைய தேசப்பற்றுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.தேசிய கீதத்தை பலமுறை நான் படித்திருந்தாலும்,மேலோட்டமாகத்தான் கவனித்திருக்கிறேன்.உங்களுடைய விளக்கத்தின் மூலம் தெளிவாக விளங்க வைத்துள்ளீர்கள்.நன்றி!

வாணியர் இளைஞர் நலச் சங்கம் said...

உங்களுடைய தேசப்பற்றுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.தேசிய கீதத்தை பலமுறை நான் படித்திருந்தாலும்,மேலோட்டமாகத்தான் கவனித்திருக்கிறேன்.உங்களுடைய விளக்கத்தின் மூலம் தெளிவாக விளங்க வைத்துள்ளீர்கள்.நன்றி!

குமரன் (Kumaran) said...

மும்முறை வாழ்த்திய வாணியர் இளைஞர் நலச் சங்கத்தாருக்கு நன்றி. வாணியருக்கு மற்றும் இன்றி மற்றவருக்கும் நலமான செயல்களை நீங்கள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குடியரசு நாள் வாழ்த்துக்கள் குமரன்!

//நம் தேசிய கீதம் எந்தத் தருணத்தில் இயற்றப்பட்டது என்பது ஒரு விவாதமாகவே இருக்கிறது. கவிகுரு இரவீந்திர நாத் தாகூர் அதனை ஆங்கில (வேல்ஸ்?) இளவரசர் பாரதத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்கும் முகமாக எழுதியது என்ற ஒரு கருத்து வலுவுடன் வலம் வருகிறது . இருக்கலாம். அதனை மறுத்துக் கூறவோ ஆதரித்துக் கூறவோ என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை//

நம் தேசிய கீதம் - தேசிய கீதம் தான்! விதேசிய கீதம் அல்ல!
இது பற்றிய என் பதிவையும், சான்றுகளையும் இங்கு வருவோர் பார்வைக்கு வைக்கின்றேன்! எங்கெங்கு எல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முன் வைக்கிறேன்! :-)
http://madhavipanthal.blogspot.com/2007/08/aug-15.html

குமரன் (Kumaran) said...

நானும் உங்கள் இடுகையைப் படித்திருக்கிறேன் இரவிசங்கர். சுட்டியைத் தந்ததற்கு நன்றி. இது மீள்பதிவு என்பதால் இந்த இடுகையில் சொன்னதை மாற்றாமல் அப்படியே இட்டுவிட்டேன்.

Jayarathina Madharasan said...

தங்களின் இந்த தமிழாக்கத்தை தமிழ் விக்கிப்பீடியாவில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்சிஉடன் தெரிவிக்கிறேன்! உங்களுடைய தேசப்பற்றுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி திரு.செயரத்தின