Thursday, January 31, 2008

உடுக்கை இழந்தவன் கை - 2 (பாரி வள்ளலின் கதை)

பாண்டிய நாட்டின் வடக்கே இருக்கும் இந்த சிறிய நாடு மிகவும் புகழ் வாய்ந்தது. குன்றிலிட்ட விளக்காக இந்த நாட்டின் பெருமையும் இந்த நாட்டு மன்னனின் புகழும் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரவியிருக்கிறது. தமிழகம் முழுவதையும் தொன்று தொட்டு ஆண்டு வரும் வேளிர் குலத்தில் பெருமை வாய்ந்த ஒரு வேளிர் குலம் ஆட்சி செய்யும் நாடு இது. பறம்பு மலையின் சுற்றி அமைந்திருக்கும் நாடு என்பதால் இதற்குப் பறம்பு நாடு என்று பெயர். தேனும் தினைமாவும் கொள்ளும் எள்ளும் சந்தனமும் வேங்கைமரமும் என்று பார்க்கும் திசையிலெல்லாம் குறிஞ்சி நிலத்தின் வளமெல்லாம் இந்தப் பறம்பு நாட்டில் மிகுதியாக இருக்கிறது.

இங்கே தான் என் நண்பன் வாழ்கிறான். வள்ளல்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவன். வள்ளல் என்று சொன்னவுடனே எல்லோருக்கும் நினைவில் தோன்றுபவன். இந்த நாட்டின் புகழை தமிழகம் என்று பரப்பி நிற்பவன். பறம்பு மலையிலிருந்து ஆட்சி செய்யும் பாரி வேள் தான் அவன். சர்க்கரை இருக்குமிடம் நோக்கி எறும்புகளின் கூட்டம் வருவதைப் போல் எல்லாத் திசைகளிலிருந்தும் பரிசிலர்கள் இவனை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

தென்மதுரையில் பாண்டினால் அமைக்கப்பட்டுப் புரக்கப்படும் தமிழ்ச் சங்கத்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது. அதனை ஏற்று மதுரைக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறேன். பாரியின் புகழ் சங்கப்புலவர்கள் இடையே நன்கு பரவியிருக்கிறது. நான் பாரியின் நண்பன் என்பதால் புலவர்கள் நடுவே எனக்கு ஒரு தனி மரியாதை. என் கல்விக்குத் தரும் மரியாதை என்று அவரக்ள் சொன்னாலும் அவர்கள் யாரும் கல்வியில் எனக்கு இளைத்தவர்கள் இல்லை என்பதால் பாரியின் நண்பன் என்பதால் தான் எனக்கு அந்த மரியாதை என்று எனக்குத் தெரியும். புலவர்கள் மற்ற மன்னரைப் புகழ்வதற்காகச் சொல்லும் உயர்வுநவிற்சியைப் போலின்றி பாரியைப் பற்றிச் சொல்லப்படுபவை எல்லாம் உண்மையே என்பதை உணர்ந்ததால் வந்த மரியாதை அது. பொய்களுக்கு நடுவில் உண்மைக்கு என்றுமே தனி மரியாதை உண்டு தானே.

மதுரையில் கிடைத்த ஏற்றத்தைப் பற்றி பாரியிடம் சொல்லவேண்டும். பாண்டியனே பொறாமையால் புழுங்கும் அளவிற்குத் தமிழ்ப்புலவர்கள் எல்லாம் பாரியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ வள்ளல்கள் தமிழகம் எங்கும் இருந்தாலும் பாரிக்கு நிகர் பாரியே என்று அவர்கள் சொல்லும் போது என் நண்பன் அவன் என்று என் நெஞ்சு பெருமிதத்தால் விம்முகிறது.

நடுப்பகல் நேரமாகிவிட்டது. ஏதேனும் ஊர் தென்பட்டால் அங்கு உணவு அருந்திவிட்டு வெயில் சாயும் வரை கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். இந்தக் காட்டுவழியில் செல்லும் போது வெயில் அவ்வளவாகத் தெரிவதில்லை தான். ஆனால் பழக்கம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? நடுப்பகலை ஒட்டி உணவருந்திவிட்டுக் கொஞ்சம் ஓய்வெடுக்கும் வழக்கம் சிறு வயதில் இருந்தே அமைந்துவிட்டது. ஓரிரு நாழிகை அப்படி ஓய்வெடுத்துவிட்டால் பின்னர் அந்தி சாயும் வரை நடக்க உடலில் தெம்பிருக்கும். இந்த வழியில் இதுவரை வந்ததில்லை. இது அணுக்கமான வழி என்று சொன்னார்கள் என்பதால் இந்த வழியில் வந்தேன். கடந்த நான்கு நாழிகைகளாக எந்த ஊரும் வரவில்லை. இன்னும் ஒரு நாழிகைக்குள் ஏதாவது ஒரு ஊர் தென்பட்டால் நன்றாக இருக்கும்.

அதோ சில வீடுகள் தெரிகின்றன. சிறிய வீடுகள் தான். ஆனால் எந்தக் குறையும் இன்றி மக்கள் வாழும் வீடுகள் என்பது நன்கு தெரிகிறது. முதலில் தெரியும் வீட்டில் உணவு அருந்த முடியுமா என்று பார்க்கவேண்டும்.

***

இந்த ஊரில் எந்தக் குறையும் இல்லை. வேண்டியது எல்லாம் கிடைக்கிறது. அஞ்சியத்தை மகள் நாகையாரும் அண்டர் மகன் குறுவழுதியாரும் இந்த ஊரில் தான் வாழ்ந்து வருகிறார்கள். பாணர் குலத்தில் பிறந்த பாணரும் விறலியும் ஆனாலும் இது வரை எந்த மன்னரிடமும் சென்று பாடல் பாடி பரிசில் பெறவில்லை. இசையாலும் பாடல்களாலும் ஊராரை மகிழ்வித்து அவர்கள் தரும் பொருளைக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். சில நாட்களாக நாகையாருக்கு ஒரு பெரிய பொன்னால் ஆன கழுத்தணி வேண்டும் என்று ஆசை. ஊர்ப் பெரியவரின் மகள் அப்படி ஒரு நகையை அணிந்து ஊர்த்திருவிழாவிற்கு வந்திருந்தாள். அன்று முதல் அந்த நகை பல இரவுகள் நாகையாரின் கனவில் வந்து அவளைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. எந்த மன்னரிடம் சென்று கேட்டால் அப்படிப்பட்ட பரிசில் கிடைக்கும் என்று தெரியவில்லை. குறுவழுதியோ எந்த மன்னரைத் தேடியும் செல்லும் மனநிலையில் இல்லை. அதனால் தனக்குள்ளேயே அந்த ஆசையை வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளி வருகிறாள் நாகையார்.

"அன்பர்களே. அன்பர்களே"

அழைக்கும் குரலைக் கேட்டு நாகையார் வெளியே வந்து பார்த்தாள்.

"ஐயா. தாங்கள் யார்? என்ன வேண்டும்?"

"அம்மையே. நான் ஒரு தமிழ்ப்புலவன். மதுரையிலிருந்து பாரி வேளின் மாளிகைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். என் பெயர் கபிலன். இன்று பகற்பொழுதை இங்கே கழிக்கலாமா என்று கேட்கவே அழைத்தேன்"

"ஐயா. தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்குப் பெரும்பெருமை. இந்தப் பகற்பொழுதிற்கு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். உணவு அருந்திவிட்டீர்களா?"

"இல்லை அம்மா. இனிமேல் தான்"

"தேனும் தினைமாவும் இருக்கின்றன ஐயா. உண்கிறீர்களா?"

"ஆகட்டும் தாயே"

நாகையார் கொண்டு வந்து கொடுத்த தேனையும் தினைமாவையும் வயிறார உண்டு விட்டு நிழலாக இருக்கும் ஒரு திண்ணைக்கு வந்து அமர்ந்தார் கபிலர். சரியாக அதே நேரத்தில் . குறுவழுதியார் திரும்பி வந்தார்.

"ஐயா. இது என் வீடு தான். தங்களைப் பார்த்தால் புலவர் போல் தெரிகிறது. உணவு உண்டீர்களா?"

"ஆம் ஐயா. அம்மை உணவு தந்தாள். சுவையான உணவை இப்போது தான் உண்டு முடித்தேன். சற்று இளைப்பாறவே இங்கு அமர்ந்திருக்கிறேன்"

"மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களைப் போன்ற புலவர்கள் எழுதித் தரும் பாடல்களைப் பண்ணில் இசைத்துப் பாடுபவர்கள் நாங்கள்."

"ஓ. பாணரோ?"

"ஆம் ஐயா. என் மனைவியும் நன்கு பண்ணிசைத்துப் பாடுவாள்"

"அம்மையின் குரலும் நன்கு இனிமையாக இருக்கிறது"

"ஆம் ஐயா. எங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையான புலவர் பெருமக்கள் எங்கள் வீட்டிற்கு வருவதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம்"

ஒரு செம்பில் குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து கபிலர் அருகில் வைத்துவிட்டு சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த தன் கணவர் அருகில் அமர்ந்தாள் நாகையார்.

"பாணரே. நீங்கள் பரிசில் வேண்டி எந்த ஊர்களுக்குச் சென்றுள்ளீர்கள்? அந்த ஊர்களின் சிறப்புகளைச் சொல்லுங்கள்."

"புலவர் பெருமானே. பரிசில் வேண்டிப் பலவூர் செல்லும் தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. இவ்வூர்ப் பெருமக்களே எங்களை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். அதனால் நாங்கள் இதுவரை இந்த ஊரை விட்டு வேறு ஊர்களுக்குப் பரிசில் வேண்டிச் சென்றதில்லை"

"வியப்பிலும் வியப்பு பாணரே. பாணர்களும் புலவர்களும் பரிசில்களை வேண்டிப் புரவலர்களை நோக்கிச் செல்லுதல் தானே முறை. நம் மன்னர் பாரியை நோக்கிப் பல திசைகளில் இருந்தும் பரிசிலர்கள் வந்து கொண்டே இருக்க இந்த நாட்டில் வாழும் நீங்கள் அவனிடம் கூடவா பரிசில் வேண்டிப் பெற்றதில்லை?"

"ஐயா. அப்படியே பரிசில் வேண்டிச் செல்ல வேண்டும் என்றாலும் யார் யாரிடம் சென்றால் பரிசில் கிடைக்கும் என்று தெரியாது ஐயா. தங்களைப் போன்ற புலவர்கள் சொன்னால் அதனைக் கேட்டு அதன் படி நடப்போம்"

"அம்மையே. நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் எழுதிய சிறுபாணாற்றுப்படையில் வள்ளல்கள் ஏழு பேரைப் பற்றி சொல்லியிருக்கிறார். பாணர்களை வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்துவதே இந்த சிறுபாணாற்றுப்படையின் நோக்கம். அந்த நூலில் இருக்கும் செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நத்தத்தனார் சொன்ன ஏழு வள்ளல்கள் பாரி, காரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி, ஓரி என்போர்.

சுரும்புகள் (வண்டுகள்) விரும்பி உண்ணும் படி தேனைத் துளிக்கும் பூக்களை உடைய மரங்கள் நிறைந்த காட்டு வழியில் சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடிக்கு அது தழுவி வளர்ந்து தழைப்பதற்குப் பெரிய அழகிய தேரினைக் கொடுத்த எல்லாத் திசைகளிலும் வெள்ளிய அருவிகள் விழும் பறம்பு மலைக்கு அதிபதியான வள்ளல் பாரி.

சுரும்புண நறுவீ யுறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி


வாலாலேயே உலகத்தையெல்லாம் மருளச் செய்யும் புரவியுடைய, அன்புடன் கூடிய நல்ல சொற்களை இரவலர்களுக்குத் தந்த, நெருப்பு திகழ்ந்து விளங்கும் அச்சம் தரும் நெடிய வேலினையுடைய வீரக்கழலினையும் தொடியையும் அணிந்த நீண்ட கைகளையுடைய காரி

வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்
கழல் தொடித் தடக்கை காரி


மழை தவறாமல் பெய்வதால் உண்டான வளத்தை உடைய மலைப்பகுதிக் காட்டிடையே திரிந்து கொண்டிருந்த மயில் கூவியதை அது குளிரால் நடுங்கிக் கூவியது என்று கருதி அருள் மிகுதியால் போர்வையைக் கொடுத்த, அருமையான வலிமையையுடைய அழகிய வடிவினையுடைய ஆவியர் குடியில் பிறந்த பெருமகன், பெரிய மலைநாட்டையுடைய பேகன்

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்


குளிர்ச்சி தரும் வகையில் கருநிற நாகம் கொடுத்த உடையை மனம் உவந்து ஆல மரத்தின் கீழ் அமர்ந்த இறைவற்குத் தந்த, வில்லைத் தாங்கிச் சந்தனம் பூசித் திகழும் வலிமையனா தோள்களைக் கொண்ட, அன்புடைய நன்மொழிகளை உடைய ஆய்.

நிழல் திகழ் நீல நாகம் நல்கிய கலிங்க
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவன் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன்மொழி ஆய்


பெருமையுடைய மலையில் கமழும் பூக்களையுடைய சாரலில் உள்ள நெல்லி மரத்தில் விளைந்த நீண்ட வாழ்நாளைத் தரும் அருமையான நெல்லிக்கனியை தான் உண்ணாது ஒளவைக்கு ஈந்த, சினம், நெருப்பு, ஒளி இவை மூன்றும் திகழும் நெடிய வேலினை உடைய, பெரும் அரவத்தை உண்டாக்கும் கடலினைப் போன்ற படையை உடைய அதியமான்

மால்வரைக் கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல்
அரவம் கடல் தானை அதிகன்


தம் மனத்தில் உள்ளதை மறைக்காது கூறி நட்பு செய்தவர்கள் மகிழும் படி அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான பொருட்களை நாள் தோறும் தவறாது கொடுத்த, போர் முனையில் வெற்றி பெற்று விளங்கும் நீண்ட கைகளை உடைய, மழை தவறாது பொழியும் உயர்ச்சியால் காற்று செல்லும் இடம் வேறின்றித் தங்கும் பெரிய சிகரங்களை உடைய மலைநாட்டையுடைய நள்ளி

கரவாது நட்டோர் உவப்ப நடை பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளி


தேன் நிரம்பிய மணம் கமழும் பூக்களை உடைய நாக மரங்கள் நிரம்பிய நல்ல நிலத்தை கோடியர்க்குத் தந்த, கரிய நிறக் குதிரையில் வலம் வரும் ஓரி

நளிசினை நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரை காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரி


இந்த ஏழு வள்ளல்களும் வருகின்ற பரிசிலர்களுக்கு எல்லாம் வேண்டியதெல்லாம் வேண்டிய அளவிற்குத் தருகிறார்கள். நீங்களும் இவர்களை நோக்கிச் சென்றால் வேண்டியதெல்லாம் பெறலாம்"

"ஐயா. ஏழு வள்ளல்களைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி. எனக்குப் பல நாட்களாக ஒரு பொன்னாலான நீண்ட கழுத்தணியை அடைய வேண்டும் என்று ஆசை. அது நிறைவேறுவதற்கு யாரிடம் சென்று இரக்கலாம்?"

"என்ன கேள்வி இது அம்மையே. நம் மன்னவன் பாரியிடமே சென்று பெறலாமே"

"இசையில் கொஞ்சமே எனக்குத் தேர்ச்சி உண்டு. பாடல் புனையும் திறமையும் கிடையாது. எதனை வைத்துக் கொண்டு நான் பாரி மன்னரிடம் சென்று பொன்னிழை வேண்டுவேன் புலவர் பெருமானே"

"இது தான் உங்கள் குறையா? கவலையே வேண்டாம். அதற்கு ஒரு நல்ல வழி இருக்கிறது"

33 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
கடையேழு வள்ளல்கள் பற்றிய பாடல்கள்; தந்தமைக்கு நன்றி...
தொடருங்கள்.

பாச மலர் said...

இரண்டு பகுதிகளும் படித்தேன்..வரலாற்றுடன் காலார நடந்து செல்வது போல் உள்ளது..

குமரன் (Kumaran) said...

நன்றி யோகன் ஐயா. இது பாரியின் கதை என்பதால் கடையேழு வள்ளல்களைப் பற்றி தொட்டுச் சென்றிருக்கிறேன். அதிகமாக விளக்கவில்லை.

குமரன் (Kumaran) said...

நன்றி பாசமலர். அப்படி காலார நடந்து செல்ல வேண்டும் என்பதே என் ஆவலும்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கதை அருமையாப் போகுது குமரன்.
சிறு பாண் ஆற்றுப்படை பாடல்களோடு சொன்னமைக்குப் பாராட்டுக்கள்!

இந்த ஏழு வள்ளல்களும் கடைச்சங்க காலம் தானே? கடை-ஏழு-வள்ளல்கள் என்று அதனால் தானே சொல்கிறோம்?
முதலேழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள் எல்லாம் இருக்காங்களா?

//உயர்வுநவிற்சியைப் போலின்றி பாரியைப் பற்றிச் சொல்லப்படுபவை எல்லாம் உண்மையே என்பதை உணர்ந்ததால் வந்த மரியாதை அது. பொய்களுக்கு நடுவில் உண்மைக்கு என்றுமே தனி மரியாதை உண்டு தானே//

அதே அதே!
உண்மையான உயர்வை எவர் தடுத்தாலும் முடியாது!
பல பெரிய பெரிய முத்துக்கள் மத்தியிலும் சிறு வைரம் தானே தெரியும்!

மதுரையம்பதி said...

நிறையத் தெரிந்து கொண்டேன். ஆற்றுப்படை பற்றி எல்லாம் பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்கள், அன்று அதன் அருமையினை உணரவில்லை.
மிக்க நன்றி குமரன்.

G.Ragavan said...

பாரிங்குற பேர போன வாட்டி சொல்லலை. இந்த வாட்டி நீங்களே சொல்லீட்டீங்க. :)

அத்தனை வள்ளல்கள் இருந்திருக்காங்க. ஆனா ஏழு பேரத்தான் சொல்றோம். அந்த ஏழுலயும் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரின்னு அவரைத்தான் நினைவு வெச்சிருக்கோம். அடுத்தது அதியமானச் சொல்வோம். பாரிக்கு அந்த அளவுக்குப் புகழ்.

அப்புறம் ஏழு வள்ளல்களைப் பத்தியும் சொல்லியிருக்கீங்க. கொஞ்சம் எளிமையான தமிழ்ல சொல்லீருந்தீங்கன்னா எனக்கும் புரிஞ்சிருக்கும்.

வெட்டிப்பயல் said...

கதை சூப்பரா போகுது... கடை ஏழு வள்ளல்களை பற்றி வலைப்பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில் நண்பர் ஒருவரை கேட்டிருந்தேன். அவருக்கு நேரமில்லாத காரணத்தால் அந்த பதிவை பாரி, பேகனை வைத்து ஒப்பேத்த நேர்ந்தது...

அதில் பலர் பாரி, பேகனை தவிர மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று ஆவலுடன் வந்து ஏமாந்து போயினர்...

ரெண்டு வருஷம் கழிச்சி தெரிஞ்சதுல ரொம்ப சந்தோஷம்...

குமரன் (Kumaran) said...

கடையேழு வள்ளல்களைப் பத்தி இங்கே சொல்லியிருக்கு. உண்மை தான். ஆனா விறலியோட கவலைக்கு யாருமே எதுவுமே சொல்லலியே? கபிலர் என்ன சொல்லுவார்னாவது சொல்லலாமில்லையா? ஹூம். யாருக்கும் விறலியின் மேல பாசம் இல்லாம போயிருச்சு போல. :-(

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி இரவிசங்கர். இந்த ஏழு வள்ளல்களும் கடைச்சங்கக் காலம் என்று தான் நினைக்கிறேன். எனக்குச் சரியாகத் தெரியாது. அதனால் தான் அவர்களைக் கடையேழு வள்ளல்கள்ன்னு சொல்றாங்களான்னும் தெரியாது. :-)

முத்துக்களுக்கு என்ன குறைச்சல் இரவிசங்கர்? எங்க ஊர் முத்துடைத்து தெரியுமா? எங்க ஊரைக் கேவலப்படுத்துறதுக்குன்னே எம்புட்டு நாள் காத்திருந்தீங்க? முத்துகள் = பொய்களாம்; உண்மை = வைரமாம். யாருக்கிட்ட வந்து காது குத்துறீங்க?

(ஹிஹி இது உங்களைச் சர்ச்சையில மாட்டிவுடற சீசன் ஐயா. நீங்களா வந்து இப்படியா எடுத்துக் குடுப்பீங்க?)

குமரன் (Kumaran) said...

நன்றி யோகன் ஐயாவுக்குச் சொல்ல வேண்டும் மௌலி. அவரால் தான் நானும் இப்போது இந்த இலக்கியப் பகுதிகளை எல்லாம் படித்தேன். இன்னும் நிறைய பாட்டுங்க பொருளோட வரும் இந்தக் கதையில. படங்க தான் கிடைக்கலை.

குமரன் (Kumaran) said...

இடுகையில சொல்லாட்டியும் பின்னூட்டத்துல சொல்லிட்டேன் இராகவன். நீங்க அப்புறமா வந்து பின்னூட்டமெல்லாம் படிச்சீங்களான்னு தெரியலை. படிக்கலைன்னா படிச்சுப் பாருங்க. இந்த தடவை எல்லாரோட பேரும் சொல்லியாச்சு. இனிமேலயும் அப்படித் தான். :-)

பாரிக்கு ரொம்ப பெருமையும் புகழும் தான். உண்மையைச் சொன்னீங்க. பறம்பு மலை காரைக்குடி பக்கமாமே. இப்ப அந்த மலைக்குப் பிரான் மலைன்னு பேராம். தெரியுமா உங்களுக்கு?

இது பாரி கதைங்கறதால ரொம்ப விளக்கமா ஏழு பேரைப் பத்தியும் சொல்லாம மேலோட்டமா சொல்லிட்டுப் போயிட்டேன் இராகவன். பாரி, பேகன், அதியமான் இவங்க செஞ்சது தான் நமக்கு ஏற்கனவே தெரியும். அதனால அவங்களைப் பத்தி சொல்லியிருக்கிறது புரிஞ்சது. ஆனா மத்தவங்களைப் பத்திச் சொன்னது எனக்கும் புரியலை. இங்கே அலுவலகத்துல எனக்குப் புரியாட்டியும் மத்தவங்களுக்குச் சொல்லி அவங்களைப் புரியவைக்க முயற்சி பண்ற மாதிரி இங்கேயும் முயற்சி பண்ணியிருக்கேன். :-) நீங்களும் அப்படி உங்க அலுவலகத்துல பண்ணியிருந்தா நான் சொல்றது என்னான்னு புரியும். (அப்பாடா அதாவது புரிஞ்சிருமே.)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பறம்பு மலையின் சுற்றி அமைந்திருக்கும் நாடு என்பதால் இதற்குப் பறம்பு நாடு என்று பெயர்//

பறம்பு என்ற சொல்லுக்கு என்ன பொருள் குமரன்?

ஒவ்வொரு வள்ளல் பற்றியும் குமரன் பாட்டுல சொல்லிட்டாரு.
பாரி முல்லைக்குத் தேர் தந்தான்.
பேகன் மயிலுக்குப் போர்வை தந்தான்.
அதே போல மத்தவங்க எல்லார் வாழ்விலும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி இருக்கும் அல்லவா? அவை எல்லாம் வெளியில் அவ்வளவா தெரிவதில்லை! அதனால் இங்கு அடியேன் சொல்கிறேன். அடுத்த பாகத்தில் கதை முழுக்க பாரியிடம் சென்று விடும்!

பாரி = முல்லைக் கொடுக்குத் தேர் தந்தான்

காரி = அதியமான் தன் எதிரி என்பதால் ஒளவையார் தன் நாட்டில் உண்ணமாட்டார் என்று நினைத்து, தான் யார் என்று சொல்லாமலேயே, பணியாள் போல் ஒளவைக்குப் பணிவிடைகள் செய்து உணவிட்டான்.

பேகன் = மயிலுக்குப் போர்வை தந்தான்

ஆய் = அபூர்வ நாகரத்தினக் கல்லை(?) ஆலமர் கடவுள் (சிவனாருக்கு) கொடுத்தான்

அதியமான் = அபூர்வ நெல்லிக்கனியைத் தமிழ் வாழ ஒளவைக்கு அளித்தான்

நள்ளி = ?

ஓரி = வல்வில் ஓர! ஒரே அம்பால் புலி, மான், பன்றி, முயல் என்று வரிசையாக வீழ்த்திய வில்லாளன்.

(இதில் இவர்களுக்குள்ளேயே...
ஓரி, காரி-அதியமான் இடையே பகை இருந்தது; ஓரியின் குடும்பத்தைப் பூண்டோடு அழிக்க எண்ணியது, ஓரியின் குழந்தைகளை யானையை விட்டு இடறச் சொன்னது, தமிழ் தலையிட்டு பகை தீர்த்தது எல்லாம் தனிக் கதை :-) அதையும் யாரச்சும் தொடர்கதையாப் போடுங்கப்பா!

குமரன் (Kumaran) said...

//அதையும் யாரச்சும் தொடர்கதையாப் போடுங்கப்பா!
//

ஒரு விரலை அடுத்தவரை நோக்கிச் சுட்டும் போது மூன்று விரல்களை நம்மை நோக்கியும் ஒரு விரல் மேல் நோக்கியும் சுட்டுவதன் பொருள் உங்களுக்குத் தெரியாததா இரவிசங்கர்? :-) மேல் நோக்கிச் சுட்டும் விரலில் பொருள் மட்டும் நான் இங்கே சொல்கிறேன் - முருகனருள் முன்னிற்கும்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//(ஹிஹி இது உங்களைச் சர்ச்சையில மாட்டிவுடற சீசன் ஐயா. நீங்களா வந்து இப்படியா எடுத்துக் குடுப்பீங்க?)//

உடுக்கை இழந்தவன் கதை-ன்னு போட்டுட்டு, எனக்கு உடுக்கை அடிப்பவன் கதையா மாத்தறுதல உங்களுக்கு அப்படி ஒரு சந்தோசமா! முத்து-ன்னு சொன்னா குத்து வைக்கறீங்க! வைரம்-னு சொன்னா வைரி-ன்னு ஆக்குறீங்க! நல்லா இருங்க சாமீ! நல்லா இருங்க! :-)

ஒரு அப்பாவிப் பையன், பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகன், என்னைச் சர்ச்சையில் மாட்டி விடுவது அடுக்குமா? என்ன கொடுமை குமரன்!

//அதையும் யாரச்சும் தொடர்கதையாப் போடுங்கப்பா!
//

நீங்க போடுங்க-ன்னு சொன்னாத் தான் விரல் சுட்டும்! யாராச்சும் போடுங்கன்னு சொல்லும் போது சுட்டாது! சுட்ட பழம், சுட்டாத பழம் கேட்ட குமரனுக்கு இது தெரியாததா என்ன? :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
கதை சூப்பரா போகுது... கடை ஏழு வள்ளல்களை பற்றி வலைப்பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில்...//

அடப் பாவமே!
கடையேழு வள்ளல்கள்-னு கூகுளாரைக் கேட்டாக்கா, வெட்டி போட்ட கவுண்டரும் கடையேழு வள்ளல்கள் பதிவு தான் முன்னால வந்து நிக்குது!
வள்ளல்களைப் பற்றிய தகவல் தேடறவங்க எல்லார் முன்னாடியும் வள்ளல்களை ஓட்டித் தள்ளிய பதிவு தான் முன்னால வந்து நிக்கப் போகுது! :-))

அண்ணன் பாலாஜியாகிய, திருக்கோவிலூர் மலையமான் வெட்டி வள்ளலுக்கு ஒரு "ஓ" போட்டுக்கறேன்! :-)
வாழ்க திருக்கோவிலூர் மலையமான் நெடுமுடி வெட்டி! :-))

Sridhar Narayanan said...

பிறிதொரு பதிவில் படித்தது (நினைவிலிருந்து)

அதியமான் - அரசனின் பெயரல்ல. சேரமான் மாதிரி அரச வம்சம் பெயர்.

ஆய், அஞ்சி இருவரும் அதியமான்கள்தான். வெவ்வேறு சங்க காலத்து வள்ளல்கள். அஞ்சிதான் ஔவைக்கு நெல்லிக் கனி தந்த வள்ளல். ஆய், இடைச்சங்க காலத்து வள்ளல் என்று தெரிகிறது.

இதுவே எனக்கு புதிய செய்திதான். வேறு யாராவது முழுமையாக அறியத் தந்தால் நன்று. :-)

VSK said...

என்ன அருமையான கதையோட்டம்!

கடையெழு வள்ளல்களைப் பற்றிய குறிப்பு சுருக்கமாகவும் நிறைவாகவும் இருக்கிறது.

ரவியும், நீங்களும் போட்டி போட்டுக்கொண்டு பின்னூட்டங்களைச் சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.

பாராட்டுகள்!

Sridhar Narayanan said...

ரவி, ஞாபகபடுத்திட்டிங்க. நம்ம வெட்டியாரோட பதிவுலதான் கோபி(Gopi) சொல்லியிருந்தார். இதோ சுட்டி

குமரன் (Kumaran) said...

ஆமாம் பாலாஜி. எனக்கும் ஏழு வள்ளல்களோட பேரு தெரியுமே ஒழிய யாரு என்ன செஞ்சாங்கன்னு தெரியாது. பாரி, பேகன், அதியமான் இவங்க செஞ்சது தான் தெரியும். இப்ப இந்தக் கதை எழுதுறதுக்காகப் படிச்சதுல கொஞ்சம் தெரிஞ்சது. இரவிசங்கர் இன்னும் கொஞ்ச விளக்கியிருக்கார்.

குமரன் (Kumaran) said...

பறம்புன்னு அகரமுதலியில தேடிப் பார்த்தேன் இரவிசங்கர். பறம்புதல்னா ஏமாற்றுதல், அடித்தல்ன்னு பொருள் சொல்லியிருக்கு. பறம்புன்னா பாரிவேளின் மலைன்னு சொல்லியிருக்கு.

//அடுத்த பாகத்தில் கதை முழுக்க பாரியிடம் சென்று விடும்!// அட இது எப்படிங்க உங்களுக்குத் தெரியும்? பாரிகிட்ட போறதுக்கு இன்னும் எத்தனை அத்தியாயம் போகணுமோ? கபிலர் மெதுவா நடந்து போகவேணாமா? இந்த காலம் மாதிரி கார்லயோ டூவீலர்லயோவா போறாரு? :-)

ஆயைப் பற்றிச் சொல்லும் போது நாக கலிங்கம்ன்னு சொல்லியிருக்கு. கலிங்கம்ன்னா உடைன்னு பொருள். அதே பொருளைச் சொன்னேன். அகரமுதலியில் பார்த்தால் இரத்தினம் என்று சொன்ன மாதிரி தெரியவில்லை.

ஓரியின் கதையை நீங்களே எழுதுங்கள் இரவிசங்கர்.

குமரன் (Kumaran) said...

விளக்கமும் தந்து சுட்டியையும் கொடுத்ததற்கு நன்றி Sridhar Narayanan

அதியமான் என்பது பரம்பரை பெயர் என்று தெரிந்திருந்தது. ஆனால் ஆயும் ஒரு அதியமான் தான் என்பது புதிய செய்தி.

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி எஸ்.கே.

தி. ரா. ச.(T.R.C.) said...

பாரி வள்ளல் கதை ஜோர். நான் சிங்கம்புனரியில் வேலை பார்த்தபோது பறம்பு மலையில் வருடா வருடம் விழா நடக்கும். ஒரு தடவை போனதுண்டு.பாரி விழாவுக்கு பக்கத்திலுள்ள கிராம்த்திலிருந்து வண்டி கட்டிக்கொண்டு வருவார்கள்

குமரன் (Kumaran) said...

பறம்பு மலை திருவிழா பத்தி சொன்னதற்கு நன்றி தி.ரா.ச. பாரி வள்ளலைப் பற்றி இணையத்தில் தேடுன போது தான் இந்தத் திருவிழா பத்தி படிச்சேன்.

***

வள்ளல் பாரி மன்னன் ஆண்ட இடம் பிரான்மலையாகும். ஆண்டுக்கொருமுறை மாசி சிவராத்தி நாளில் பிரான்மலையில் பாரி வேட்டை எனும் நிகழ்வு நடந்து வருகிறது. பிரான்மலையை அடுத்த தனிக்குன்றில் மூன்று கோவில்கள் உள்ளன. பாடல் பெற்ற முக்கியமான பெரிய கோவில் அடிவாரத்திலுள்ளது. மலையில் புடைப்புச் சிற்பங்களாய் இறை உருவங்கள் அமைந்துள்ளன. சித்திரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் தேர்த்திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. திருக்கார்த்திகையன்று மலை மீது விளக்கு ஏற்றுவர். அதன் ஒளி 20 கி.மீ. சுற்றளவுக்குத் தெரியும். அமாவாசை தினங்களில் ஏராளமான மக்கள் கூடுவார்கள்.

கீதா சாம்பசிவம் said...

கடையெழு வள்ளல்களில், "ஆய்" அதியமான் குடியைச் சேர்ந்தவர் என்பதும், நெடுமான் அஞ்சிக்கு முந்தியவர் என்பதும் புதிய செய்தி. அறியத் தந்த ஸ்ரீதர் நாராயணனுக்கு நன்றி. அருமையான நீரோட்டமான கதை, இதில் பாரி&கபிலரின் நட்புக்கு என்ன நேரப் போகிறது? அல்லது உடுக்கை இழந்தவன் கையாக யார் மாறப் போகிறார்கள்? என்று அறியக் காத்திருக்கிறேன். சுவையான வரலாற்றுக் காவியம்.

கீதா சாம்பசிவம் said...

மன்னிக்கவும், "உடுக்கை இழந்தவன் கையாக" என்று எழுதி விட்டேன் என நினைக்கிறேன், "இடுக்கண் களையும் நட்பு யார்?" என அறியக் காத்திருக்கிறேன், என்று எழுதி இருக்க வேண்டும்.

குமரன் (Kumaran) said...

நன்றி கீதாம்மா. நல்ல நீரோட்டம், சுவையான கதை என்றெல்லாம் பாராட்டியதற்கு நன்றிகள். சோழன் பிசிராந்தையார் நட்பினைப் பற்றி நிறைய படித்திருக்கிறோம். பாரி - கபிலர் நட்பும் அந்த அளவிற்கு உள்ள நட்பு தான். இப்போது தான் மிக நன்றாக நான் அறியும் வாய்ப்பு கிட்டியது. பிசிராந்தையாரோ சோழனைப் பார்க்காமலேயே நட்பு பூண்டவர். பாரி, கபிலர் நட்பு பல காலம் உடனிருந்து வாழ்ந்த நட்பு. நண்பன் பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் என்று மனமுவந்து சொன்ன நட்பு.

உடுக்கை இழந்தவன் கையாக மாறி இடுக்கண் களைபவர் யார் என்பதை வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

துளசி கோபால் said...

கதை நல்லாவே போகுது.

பெரிய கழுத்தணிக்குக் காத்திருக்கேன்:-)

குமரன் (Kumaran) said...

நன்றி துளசி அக்கா.

அடுத்த பகுதி போட்டாச்சு. பெரிய கழுத்தணி கிடைச்சதான்னு பாருங்க.

வவ்வால் said...

குமரன்,

பாட்டெல்லாம் வைத்து பொருள் சொல்லி அழகாக கடை ஏழு வள்ளல்களைப்பர்றி சொல்லியுள்ளீர்கள், பாடல்கள் எல்லாம் இருப்பதால் எங்கேயும் கை வைக்க கொஞ்சம் பயம் , எங்கே நாம் ஒன்று நினைத்து சொல்ல அது அப்படி அல்ல என்று ஆகி, கடைசியில் நம்ம தமிழ் அறிவு வெட்ட வெளிச்சம் ஆகிடுமே :-)) என்று தான் வேடிக்கைப்பார்த்தேன்!

//அப்புறம் ஏழு வள்ளல்களைப் பத்தியும் சொல்லியிருக்கீங்க. கொஞ்சம் எளிமையான தமிழ்ல சொல்லீருந்தீங்கன்னா எனக்கும் புரிஞ்சிருக்கும்.//

ராகவன் சொல்லி இருப்பது போல எனக்கும் தோன்றும் அதனால் தான் நான் பாடல்களை எல்லாம் தவிர்த்துவிட்டுப்பதிவிட்டேன். ஆனாலும் நீங்க விடாமல் எங்கே பாடல்கள் என்று மடக்கிட்டிங்க :-))
----------------------

//ஆய், அஞ்சி இருவரும் அதியமான்கள்தான். வெவ்வேறு சங்க காலத்து வள்ளல்கள். அஞ்சிதான் ஔவைக்கு நெல்லிக் கனி தந்த வள்ளல். ஆய், இடைச்சங்க காலத்து வள்ளல் என்று தெரிகிறது.//

ஆய் சேர தேசப்பகுதியை சேர்ந்த வள்ளல், அவர் ஆண்ட பகுதி கன்யாகுமரி பக்கம் இருப்பதாக சொல்கிறார்கள். கிரேக்க அறிஞர் டாலமி முதன் முதலாக உலக வரைப்படத்தை வரைந்த போது கேரளாவை ஆய் ஆண்டதாக குறித்துள்ளார்.

அதியமான் சோழ தேசத்தில் இருந்த ஒரு குறுநில வள்ளல். எனவே இருவரும் அதிகமான் பரம்பரை என்று சொல்ல இயலாது.

-----------------------
கண்ணபிரான் ரவிசங்கர்,

//இதில் இவர்களுக்குள்ளேயே...
ஓரி, காரி-அதியமான் இடையே பகை இருந்தது; ஓரியின் குடும்பத்தைப் பூண்டோடு அழிக்க எண்ணியது, ஓரியின் குழந்தைகளை யானையை விட்டு இடறச் சொன்னது, தமிழ் தலையிட்டு பகை தீர்த்தது எல்லாம் தனிக் கதை :-) அதையும் யாரச்சும் தொடர்கதையாப் போடுங்கப்பா!//

நள்ளி கடை ஏழு வள்ளல் கிடையாது என நினைக்கிறேன், அண்டிரன் தான் கடை ஏழு வள்ளல்.

ஆய் , அண்டிரன் என்று அடுத்தடுத்து சொல்வதால் ஒரே பெயர் என்று நினைத்து விட்டீர்கள் என நினைக்கிரேன்.

அதியமான் முதலில் காரியின் கோட்டையை தகர்த்தான், அதற்கு பழி வாங்கும் விதமாக காரி , சேரன் இரும்பொறையுடன் கூட்டு சேர்ந்து போர் புரிந்து அதில் அதியமானைக்கொன்றான்.இதை தகடூர் யாத்திரை என்ற நூல் மூலம் அறியலாம்.

அதே போரில் ஒரு கட்டத்தில் ஓரியையும் காரி தான் கொன்றார். அதன் பின்னரே அதியமானை தகடூர் வரைக்கும் தொறத்தி சென்று கொன்றார்.

இந்த போரில் ஓரி, அதியமான், சோழர்கள் ஒரு பக்கம், மற்றும் காரி , சேர மன்னர் ஒரு பக்கம் என்று நின்று சண்டைப்போட்டார்கள்.

கடை ஏழு வள்ளல்கள் தங்களுக்குள் இருந்த விரோதத்தின் காரணமாகவே பெரும்பாலும் அழிந்தார்கள்.

குமரன் (Kumaran) said...

வவ்வால்,

வரும் பகுதிகளில் சில இடங்களில் பாடல்கள் இல்லாமல் வேறு எங்கோ படித்தவற்றை வைத்து எழுத இருக்கிறேன். அதற்குள் தகுந்த தரவுகள் கிடைத்துவிட்டால் நல்லது; கதையை மாற்றி எழுத வேண்டும் என்றால் எழுதிவிடலாம். அப்படி கிடைக்காவிட்டால் உங்களுக்குத் தீனி இருக்கும். :-)

இராகவன் இந்த இடுகைக்கு இப்படி சொன்னார்; அடுத்த இடுகையை நன்கு ரசித்தேன் என்று சொல்லியிருக்கார். நீங்க படிச்சீங்களா? அங்கேயும் பாட்டுகளை வச்சுத் தான் சொன்னேன்; ஆனால் விளக்கங்கள் கொஞ்சம் எளிமையா இருக்குன்னு நினைக்கிறேன்.

ஆயும் அஞ்சியும் வெவ்வேறு பகுதிகளில் ஆண்ட சிற்றரசர்களாக இருந்தாலும் ஒரே குடியைச் சார்ந்தவர்கள் என்று சொல்வதற்கு என்ன தடை இருக்கிறது வவ்வால்? நீங்கள் சொல்வது புரியவில்லை.

கடையேழு வள்ளல்களில் நள்ளியையும் தான் சிறுபாணாற்றுப்படை சொல்கிறது வவ்வால். இந்தத் தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தில் இருக்கும் பக்கத்தைப் பாருங்கள்.

http://www.tamilvu.org/library/l1100/html/l1130101.htm

ஆய் ஆண்டிரன் என்பது ஒருவரைத் தான் என்று வேறொரிடத்தில் படித்த நினைவு. நீங்களும் இரவிசங்கரும் சொல்லும் போர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் நீங்கள் இருவரும் தனிப்பதிவாக எழுதிப் போடும் வரை காத்திருக்கிறேன். :-)

ramanan.pg said...

நல்ல முயற்சி.தொடருங்கள்.பேகனைப் பற்றிக் கூறுமிடத்தில், " மயில் கூவியது" என்பதை மாற்றிவிடுங்கள். மயில் 'அகவும்'
வாழ்க வளமுடன்