Tuesday, January 22, 2008

புல்லாகிப் பூண்டாகி - நினைத்ததும் நடந்ததும் - ஒரு சுய விமர்சனம்

மனத்தில் பல நாட்களாக பல வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த ஒரு விதை எஸ்.கே. எழுதிய சித்தர் குறுநாவலின் கடைசிப் பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் நினைவிற்கு வந்தது. அதனைப் பற்றியே எண்ணிக் கொண்டு உறங்க கனவிலும் அந்த விதை மீண்டும் வந்தது. அந்தக் கனவைப் பற்றி சித்தர் குறுநாவலின் கடைசி இடுகையின் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு இறையருளை முன்னிட்டு 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையை எழுதத் தொடங்கினேன்.

எழுதும் முன் இதை நான்கு ஐந்து பகுதிகளாக உள்ள சிறிய தொடராக எழுதலாமா, பல பகுதிகளாகக் கொண்ட பெரிய தொடர்கதையாக எழுதலாமா, குறுநாவல் என்று சொல்லி நன்கு விரித்து எழுதலாமா என்றெல்லாம் கேள்விகள். குறுநாவலாக மிகவும் விரித்தால் எடுத்துக் கொண்ட பொருள் மிகவும் நீர்த்துப் போய்விடும் என்று தோன்றியது. சிறிய தொடராக எழுதினால் புகுந்து புறப்பட வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் பெரிய தொடராகவே எழுதலாம் என்று எண்ணி அதனை அறிவித்து விட்டுத் தொடங்கினேன்.

என்ன எழுதுவது என்றும் எப்படி கதையை நகர்த்திச் செல்வது என்றும் ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொண்டு குறிப்பு எழுதி வைத்துக் கொண்டேன். எழுதிய குறிப்பினைப் பார்த்த போது கதையின் முக்கிய இடம் முதல் சில அத்தியாயங்களில் வராததைக் கண்டேன். அதனால் கதையின் முக்கிய செய்தியைத் தலைப்பில் மட்டும் சொல்லிச் செல்லலாம்; அது பலருக்கும் புரியும் என்று தோன்றியது.

இப்படி எழுதத் தொடங்கிய பின்னர் தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன என்ன எழுதுவது எந்த செய்தியைச் சொல்லுவது; எதனை விடுப்பது; எதனில் புகுந்து புறப்படுவது; எதனில் மேலோட்டமாகத் தொட்டுச் செல்வது என்பதெல்லாம் அந்த அந்த அத்தியாயம் எழுதும் போது அன்று இருந்த மனநிலையின் அடிப்படையிலேயே தான் சென்றது. அதனால் சில அத்தியாயங்கள் மிகவும் மேலோட்டமாகவும் சில கொஞ்சம் ஆழமாகவும் சென்றன.

முதலில் வந்த அத்தியாயங்களில் கந்தனின் குணநலன்களை வெறும் வார்த்தைகளால் சொல்லிச் செல்வதை விட சில நிகழ்ச்சிகளால் சொன்னால் நன்று என்று தோன்றியது. அதனால் நிகழ்ச்சிகளைச் சொல்லி வந்தேன். அதனால் தான் மலை வலமும் கோவில் தரிசனமும் என்று கதைக்குத் தொடர்பில்லாதது என்று கூட தோன்றும் அத்தியாயங்கள் இருந்தது. அவை இயற்கையாக அமைந்தன என்றே நம்புகிறேன். அவற்றில் மிகையாக எதனையும் சொல்லவில்லை. அங்கே என்னுடைய குறிக்கோள் கந்தனின், கேசவனின் குணங்களைக் கோடிட்டுக் காட்டுவதே. அப்படி நம்மைச் சுற்றி சாதாரணமாக சராசரியாகச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வெளிப்பார்வைக்குச் சாதாரணமாகத் தென்படுபவர்கள் எல்லாம் சாதாரணமானவர்களாக இருக்க வேண்டியதில்லை. அவர்களின் பின்புலம் மிக ஆழமானதாக இருக்கலாம். இந்த செய்தியைக் கதையில் சொல்ல நினைத்தேன். எவ்வளவு தூரம் சொன்னேன் என்று தெரியவில்லை. ஒருவருக்காவது அந்த எண்ணத்தை இந்தக் கதை ஏற்படுத்தியிருந்தால் அதுவே வெற்றி என்று எண்ணிக் கொள்வேன். ஏதோ ஒரு கேள்விக்கு சீனா ஐயாவுக்குக் கொடுத்த விடையிலும் 'எல்லோருமே தெய்வீகப் பிறவிகள் தான் ஐயா' என்று பின்னூட்டத்தில் சொன்னேன். கதையில் சொல்லி விளக்க முடியாததைப் பின்னூட்டங்களில் சொல்ல விழைந்தேன். அதனால் இந்தத் தொடருக்கு பின்னூட்டங்களும் மிக முக்கியம் என்று நினைக்கிறேன்.

இந்தக் கதையில் கந்தனிடமும் கேசவனிடமும் கதையைப் படித்தவர்கள் சிலர் தங்களையே கண்டு கொண்டார்கள் என்பது அவர்களின் விமர்சனத்தால் தெரிகிறது. அதுவும் நான் எதிர்பார்த்த ஒன்று. அதனால் மகிழ்ச்சி.

படித்தவர்கள் தங்களைக் கதை மாந்தர்களிடம் கண்டது மட்டுமின்றி தங்கள் கருத்துகளையும் கதை மாந்தர்களிடம் ஏற்றி கதை மாந்தர்கள் செய்ததில் முரண்பாடுகளையும் கண்டிருக்கிறார்கள். அதுவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதையை எழுதிய நான் என் கருத்துகளைக் கதை மாந்தர்கள் மேல் ஏற்றிய அதே நேரத்தில் மற்றவர்களும் அவரவர் கருத்துகளைக் கதை மாந்தர்களிடம் ஏற்றும் வகையில் கதை அமைந்திருந்தது எழுதிய எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

பாராட்டுகளாகச் சில விமர்சனங்களும் மேற்சென்றிடிக்கும் கருத்துகளாகச் சில விமர்சனங்களும் என்று நகுதற் பொருட்டு மட்டுமில்லை நட்டல் என்று ஐயன் சொன்னதற்கேற்ப பலவிதமான விமர்சனங்களை என் மனம் நிறையும் படி தந்திருக்கிறார்கள் நண்பர்கள். அவர்கள் சொன்னவற்றில் சிலவற்றை எடுத்துக் கொண்டு விடை சொல்ல முயல்கிறேன். ஏதேனும் ஒன்றிற்கு நான் விடை சொல்ல வேண்டும்; ஆனால் சொல்ல மறந்துவிட்டேன் என்று தோன்றினால் தயங்காமல் கேளுங்கள். தெரிந்த வரை சொல்கிறேன்.

***

எந்த நம்பிக்கையும் ஆழமாக இருந்தால் அதன் தொடர்பில் எழுதும் போது எழுத்தும் கருத்தும் இயல்பாக வெளிப்படும் என்று கோவி.கண்ணன் சொல்லியிருக்கிறார். அது உண்மை தான். ஆனால் இந்தக் கதையில் சொல்லப்பட்ட கருத்தில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாக எண்ணவில்லை. நான் ஏறக்குறைய யோகன் ஐயா சொன்னது போல் தான் இவற்றை எடுத்துக் கொள்கிறேன்.

நம்பிக்கை ஆழமாக இருந்தால் மட்டும் இல்லை அனுபவங்களும் சில நேரங்களில் எழுத்தையும் கருத்தையும் இயல்பாக வெளிப்படுத்தும் என்பதும் உண்மை.

மலை வலமும் கோவில் தரிசனமும் வேக வேகமாக முடிந்தன என்று பாலாஜியும் அவை கதைக்குத் தேவையில்லாமல் இருந்தன என்று இரவிசங்கரும் இன்னொரு நண்பரும் (அவர் விமர்சனம் எழுதிக் கொடுக்காமல் ஜிமெயில் அரட்டையில் மட்டும் தன் கருத்துகளைக் கூறினார்) சொல்லியிருக்கின்றனர். முதல் சில அத்தியாயங்கள் கதைக்குத் தேவையில்லாதது போல் தோன்றினாலும் அங்கே கதை மாந்தர்களின் குண நலன்களை வெளிப்படுத்தவே அவற்றைச் சொன்னேன். அதனால் இப்படி இருவிதமான கருத்துகள் தோன்றியிருக்கின்றன என்று நினைக்கிறேன். ஆனால் கோவில்களைப் பற்றி சொல்வதற்கு இது ஒரு நல்லதொரு வழிமுறை என்று எழுதும் போது தோன்றத் தொடங்கியது. இந்த கதை சொல்லும் பாணியில் கோவில்களைப் பற்றி இனி மேல் ஒரு சிலவாவது சொல்வேன் என்று நினைக்கிறேன்.

புல்லாகிப் பூண்டாகி என்று தலைப்பிற்கு மட்டுமே மாணிக்கவாசகர் உதவியதால் அவர் சொன்ன எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தலை இந்தக் கதை சொல்லவில்லை. இன்னும் எத்தனை பிறவியப்பா என்று நண்பர்களுக்குத் தோன்றுவதற்கு முன் நான்கே பிறவிகளில் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் பின்னர் தாத்தா - கந்தன் உரையாடலில் மிச்சத்தைச் சொன்னது நல்லதாகப் போய்விட்டது. இதற்கே தகவல்களைச் சால மிகுத்துப் பெய்துவிட்டீர்கக்ள் என்று ஒரு நண்பர் சொன்னார். நல்ல வேளை இன்னும் விரிக்கவில்லை.

கதை பக்தி மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கிறது என்று பாலாஜி சொல்லியிருக்கிறார். அது கதையைப் படித்ததால் மட்டும் தோன்றிய எண்ணமா என்னை அறிந்ததால் தோன்றிய எண்ணமா தெரியவில்லை. என்னை அறியாதவர்களும் கதையைப் படித்துப் பார்த்தால் இந்த கதையில் பக்தி மார்க்கத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது என்று எண்ணுவார்களா தெரியவில்லை. என்னை அறியாமல் பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லிச் சென்றேனோ என்னவோ. அதே போல் தான் கோவி. கண்ணன் சொன்ன 'வைணவர் என்பதால் கண்ணனைப் பற்றி முடிந்த போதெல்லாம் நுழைத்திருக்கிறார்' என்ற கருத்திற்கும் தோன்றுகிறது. கண்ணனைப் பற்றிச் சொன்ன அளவிற்கு மற்றவர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன். ஆனால் என்னை அறிந்தவர் என்பதால் கோவி.கண்ணனுக்கு அப்படி ஒரு கருத்து தோன்றியதோ என்று எண்ணுகிறேன். ஒரு வேளை கண்ணனைப் பற்றி எழுதும் போது என்னை அறியாமல் ஒரு தனிப் பரவசம் தென்பட்டதோ என்னவோ.

பாலாஜி சொன்னது போல் அடுத்தமுறை கதையின் ஓட்டத்தை இன்னும் பல முறை சிந்தித்துவிட்டு எழுதத் தொடங்குகிறேன்.

மிக மிக அருமையாக விமர்சனம் எழுதிக் கொடுத்திருக்கிறார் கீதாம்மா. எல்லா அத்தியாயங்களையும் அழகாக உள்வாங்கி முக்கியமானவற்றை எடுத்துச் சொல்லி அவர் விமர்சனத்தை ஒரு முறை படித்தாலே முழுக்கதையையும் படித்த ஒரு வீச்சைத் தந்திருக்கிறார்.

நாயகி பாவத்தை ஏன் மாதுர்ய பக்தி என்று சொல்கிறார்கள் என்று விவரித்துக் கூறியிருக்கலாம் என்று மௌலி சொல்லியிருந்தார். விவரித்துச் சொல்லியிருக்கலாம் தான். ஆனால் அதனை விவரிக்கும் திட்டம் இல்லாததால் மேலோட்டமாகச் சொல்லிச் சென்றேன்.

பஞ்ச கோசங்களைப் பற்றிய அறிவும் உணர்வும் உள்ள ஒரு ஞான மார்க்கிக்கு எப்படி வாசனையைப் பற்றியும் இராமகிருஷ்ணரின் நிலையைப் பற்றியும் தெரியாமல் போனது என்றும் மௌலி வியந்திருக்கிறார். பலவிதமான அறிவும் உணர்வும் இருந்தாலும் முந்தைய வாசனைகளின் ஈர்ப்பினால் தேவையானது தகுந்த நேரத்தில் மறந்து போவதில்லையா? அது அங்கே ஜகன்மோகனுக்கும் நடந்திருக்கலாம். அதனால் தான் அவரது குரு அவற்றைப் பற்றித் தொட்டுச் சென்றிருக்கிறார். அப்படித் தொட்டுச் சென்றவுடனேயே ஜகன்மோகனுக்குப் புரிந்தது; ஆனால் அந்த வாசனையும் அதன் ஈர்ப்பும் நீங்க அவர் இன்னும் பல பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தது போலும்.

பக்தி மார்க்கத்தைக் கடந்த பின் வருவது ஞான மார்க்கமா, ஞான மார்க்கத்தைக் கடந்த பின் வருவது பக்தி மார்க்கமா என்ற விசாரணையில் நான் இறங்க விரும்பவில்லை. நரசிம்மதாசனுக்கு சைதன்யர் சொன்ன எச்சரிக்கையில் அவன் பக்தி மார்க்கத்தை விட்டு விலகி வேறு மார்க்கங்களுக்குச் செல்லும் வாய்ப்புண்டு என்பதைக் குறிப்பாகச் சொல்லியிருந்தேன்; அதிலேயே என் எண்ணமும் மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தக் கேள்விகள் தவறாக ஞான மார்க்கிக்கு வந்திருக்கிறது என்று மௌலி நினைக்கிறார். ஆனால் சைதன்யர் வழி வந்தவர்களோ இராமானுஜர் வழி வந்தவர்களோ முதலில் பக்தி மார்க்கத்தில் இருந்தவன் எப்படி ஞான மார்க்கத்திற்குள் சென்றான்; முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே என்று கேட்கலாம். என்னிடம் விடை இல்லை.

ஏன் கீத கோவிந்தத்தையும் சைதன்யரையும் தோதாபுரியையும் எடுத்துக் கொண்டேன்; ஏன் நமக்கு இன்னும் நன்கு அறிமுகமான புரந்தர தாசரையோ ஊத்துக்காட்டாரையோ இரமணரையோ வள்ளலாரையோ எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மௌலி கேட்டிருக்கிறார். மிக அருமையான கேள்வி. படித்தவுடன் மனம் மிகவும் மகிழ்ந்தது.

இதற்கு பதில்கள்:

1. முதல் மூன்று பிறவிகளும் நமக்கு நன்கு அறிமுகமான சூழலில் நடக்கிறது. நான்கும் ஐந்தும் அவ்வளவாக அறிமுகமாகாத சூழலில் இருந்தால் என்ன?

2. இவையே கந்தனின் முற்பிறவிகள். தமிழ்நாட்டில் சைதன்யர் காலத்திலும் தோதாபுரி காலத்திலும் அவனுக்குப் பிறவிகள் ஏற்படவில்லை போலும். அப்படியே ஏற்பட்டிருந்தாலும் அவை இந்தப் பிறவிகளைப் போல் முக்கியமில்லாதவைகளாக இருந்தன போலும். அதனால் அவனுக்குக் கனவிலும் வரவில்லை. தாத்தாவும் சொல்லவில்லை.

எந்த பதில் பிடிக்கிறதோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள். :-)

கண்ணன் கால் பட்டால் பிறவிச் சூழலில் மாட்டிக் கொள்ள வேண்டுமா? இறைவன் திருவடிகளைப் பற்றினால் விடுதலை அல்லவா கிடைக்கும்? இங்கே சிறையில் மாட்டியதாக அல்லவா சொல்கிறார்? இவை இரவிசங்கரின் கேள்விகள். ஏற்கனவே ஒரு முறை பதிவின் பின்னூட்டத்தில் இதற்குப் பதில் சொல்லியிருந்தேன். அதனை மீண்டும் சொல்கிறேன். இறைவனின் கருணை எப்படிச் செயல்படும் என்று எப்படி சொல்வது? திருவடிகளைப் பற்றுதல் என்ற முயற்சியை அறிவுடைய பிறவிகள் செய்யலாம்; அதற்கு இரங்கி கண்ணன் காலடிகள் விடுதலை தரலாம். எந்த முயற்சியும் செய்ய இயலாத அறிவில்லாத பிறவியான கல்லிற்கு அறிவுடைய பிறவிகள் எடுக்கும் வகையில் கிக் ஸ்டார்ட் கொடுத்தது தானே கண்ணன் காலால் உதைபட்டது? உணர்வின்றிக் கிடந்தக் கல்லை உணர்வுடன் கூடிய பிறவிகளைப் பெறச் செய்து வீடுபேறு அடையும் வழியில் உதைத்து விட்டதால் இது முரண்பாடு இல்லை. கண்ணனின் திருவடிப் பெருமையே இது.

கதையில் இன்னும் நிறைய உரையாடல்கள் வேண்டும் என்று இரவிசங்கர் சொல்லியிருக்கிறார். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் நிறைய உரையாடல்களை இட்டால் போரடிக்குமோ என்ற பயமும் இருந்தது. சுவையாக நிறைய உரையாடல்கள் எழுதினால் அந்தக் கவலை இல்லை. முயல்கிறேன்.

மகான்கள் நம்மிடம் பேச வேண்டிய தேவை இந்தக் கதையில் இல்லாதது போல் தோன்றியது. அதே நேரத்தில் ஓவர் டோஸ் கொடுக்க வேண்டாம் என்ற எண்ணமும் காரணம். அதனால் தான் அவர்கள் நம்மிடம் நேரடியாகப் பேசவில்லை.

தலைப்பை மட்டுமே வைத்துக் கொண்டு கதையின் ஓட்டம் புரிந்துவிடும் என்று தப்பாக எண்ணிவிட்டேன். பின்னூட்டங்களில் அதனை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டியும் பலருக்குக் கதையின் ஓட்டம் புரியவில்லை தான். பதிமூன்றாம் அத்தியாயத்தில் எல்லாம் புரிந்த போது கதை நிறைவு பெற்றுவிட்டது. அதனால் மீண்டும் முழுக்கதையையும் படிக்க வேண்டிய தேவை இருந்தது. எத்தனை பேருக்கு அந்த பொறுமை இருக்கும்? இருக்காது தான். நானாக இருந்தால் மீண்டும் படித்திருக்க மாட்டேன். புரிந்த வரை போதும் என்று விட்டிருப்பேன். இரவிசங்கரும் பாலாஜியும் சொன்னது போல் நிகழ்காலத்தையும் முற்பிறவிகளையும் மாற்றி மாற்றியோ முற்பிறவிகளைப் பற்றி முதல் அத்தியாயங்களிலேயே குறிப்பாகவோ சொல்லியிருக்கலாம். வருங்காலத்தில் அப்படி ஒரு கதை அமைந்தால் அப்படி எழுத முயல்கிறேன்.

குறு நாவல் என்று தான் எழுதத் தொடங்கினேன். அப்புறம் பெரிய தொடர் என்று நிறுத்திக் கொண்டேன். அதனால் ஆலய வருணனைகள் பிரகார விளக்கங்கள் என்று எடுத்துக் கொண்டதைச் சுருக்கமாகச் சொல்லிச் செல்ல வேண்டியதாயிற்று. ஒரு பக்கம் அது கதையை நீர்த்துப் போகச் செய்ததாகத் தோன்றும் போது மறு பக்கம் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமல் அவசர அவசரமாக முடிந்துக் கொண்டு வந்தது போல் தோன்றுகிறது.

காலடி பட்டதால் பிறவிச் சுழற்சி என்பது புதிய கருத்தாக இருக்கலாம். அதனால் அது குறை போல் தோன்றுகிறது. ஆனால் ஆன்மிகத்தில் அதற்கும் இடம் இருக்கிறது என்பதால் அதனை எதிர்த் தோற்றமாகப் பார்க்க வேண்டியதில்லை.

இந்தக் கதையில் ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் தீனி அமைந்திருக்கிறது என்று இரவிசங்கர் சொல்கிறார். அது உண்மையும் கூட. அதனை நோக்கமாக வைத்தும் இந்தக் கதையை எழுதினேன். தனிப்பட்ட முறையிலும் நாத்திகக் கருத்துகளில் ஆர்வம் உள்ளவன் நான். அது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். என் பதிவுகள் எல்லாம் நான் ஆத்திக நம்பிக்கை மிகுந்தவன் என்பதைப் பறைசாற்றினாலும் உண்மையில் நான் அக்னாஸ்டிக் வகையைச் சேர்ந்தவன் என்று தான் நினைக்கிறேன். அதனால் இரு சாராருக்கும் உள்ள கேள்விகள் எனக்கும் இருக்கின்றன. அவற்றை இந்தக் கதையிலும் சொல்லிவந்தேன்.

Personal Choice Vs. Destiny என்பது மிகப் பெரிய விவாதம். அதனை இந்தக் கதையில் மிக ஆழமாக விவாதிக்காமல் தொட்டுச் சென்றேன். தேடல் தொடரும்.

விமர்சனம் செய்யும் போதே கூடுதலாக ஒரு கதையையும் சொல்லி நம்மை எல்லாம் மகிழ்வித்திருக்கிறார் தி.ரா.ச. சுகப் பிரம்மத்தைப் பற்றிய கதை தான் அது. அவர் சொன்ன பிறகு தான் கவனித்தேன். தொடரின் பாதி தூரம் வரை கண்ணனைப் பற்றி ஒரு சொல் கூட வரவில்லை. அப்படியிருக்க "முடிந்த வரை கண்ணனைப் பற்றி 'நுழைத்தேன்'" என்று கோவியார் எப்படி சொன்னாரோ? :-)

கதையில் என் சொந்த அனுபவங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எந்த அளவிற்கு இவற்றில் உண்மை நிகழ்வுகள் எந்த அளவிற்கு கற்பனை என்பதை படிப்பவர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். :-)

என் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் ஒரு முறை முழுக்கதையையும் படித்து விமர்சனம் எழுதித் தந்த ஜீவி ஐயா, யோகன் ஐயா, கீதாம்மா, கோவி.கண்ணன், ஜீவா, இரவிசங்கர், பாலாஜி, தி.ரா.ச., மௌலி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



இந்தத் தொடர்கதையை குருஜி தாத்தா திரு. இராமன் ஐயப்பன் அவர்களின் திருவடிக்கமலங்களில் காணிக்கை ஆக்குகிறேன். திருமண நாளன்று நேரில் வந்து கந்தனை வாழ்த்தியது போல் என்றும் அவன் வாழ்க்கையில் துணையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

21 comments:

இலவசக்கொத்தனார் said...

இவ்வளவு எல்லாம் புரியலைன்னாலும் ஒரு நல்ல கதை படித்த நிறைவு இருந்தது குமரன். நம்ம கிட்ட இருந்து கருத்து இவ்வளவுதான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் குமரன்!
ஆன்மீகப் பதிவுகளில், பிறர் எழுதிய கதைகளைத் தான் இலக்கியங்களில் இருந்து பெரும்பாலும் எடுத்துச் சொல்கிறோம்!

ஆனால் ஆன்மீகக் கருத்துக்களை உள்ளடக்கி நீங்களே ஒரு கதை தந்தது மிகவும் சிறப்பு! தொடரட்டும் இந்த நற்பணி!

G.Ragavan said...

உங்களுக்கு நானும் விமர்சனம் எழுதவில்லை. ஆனால் கதையை முழுதும் படித்தேன். கதைத்தொடர்பு என்று சொல்வார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இருக்கும். ஆனால் ஓரிடத்தில் ஒன்றாகச் சேரும். உங்கள் கதையில் அந்த ஓரிடம் என்பது கதை முடியுமிடமானதால் சில இடங்களில் குழம்பிப் போனது உண்மைதான்.

என்னதான் பக்தி..ஆன்மீகம் என்றாலும் அந்தத் தாத்தாவும் கேசவனும் நாடகமாடிக் கந்தனைக் குழப்பி ஆன்மீகக் கிறுக்காக்கி விட்டார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. :) இதைக் கடைசி அத்தியாயத்திலும் சொல்லியிருந்தேனே. :) கோவித்துக்கொள்ளாதீர்கள். அப்படித் தோன்றியதால் சொன்னேன்.

அடுத்த கதையில் சாமியை மூட்டி கட்டி வைத்து விட்டு....ஆசாமிகளிடம் வாருங்கள்.

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. தனிமடலில் அனுப்பியது:

அன்பு நண்பரே!
வணக்கம்.
இந்தியா சென்று நேற்றுதான் திரும்பினேன். அங்கு கணினி பக்கம் செல்லவே வாய்ப்பில்லாததால், தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. கதையின் போக்கினை அதற்குள் ஒருவாறு ஊகித்து வைத்திருந்ததால், எப்படி முடிக்கப் போகிறீர்கள் என மட்டும் அறிய ஆவலாய் இருந்தது. அதன்படி, வந்தவுடன் முதல் வேலையாக அமர்ந்து முழுக் கதையையும் படித்து முடித்து விட்டேன்! கூடவே அனைவரது விமரிசனங்களையும் கூடத்தான்! அவர்கள் எல்லாரும் சொன்ன பின்னர் வேறு புதிதாக என்ன சொல்லிவிட முடியும் என்றவொரு மலைப்புதான் மிஞ்சி நிற்கும் வேளையில் என் மனதில் பட்ட ஒரு சில கருத்துகளைச் சுருக்கமான ஒரு விமரிசனமாக, நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கு தருகிறேன். இதைப் பிரசுரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு சரியெனப் பட்டால் பிரசுரிக்கவும் மறுப்பில்லை.

கதைக்கான கரு மிகவும் அற்புதம். ஒரு சிறு கல்லின் நெடும் பயணம்..... இன்னும் தொடரும் பயணத்தில் அதன் மாற்றங்கள், பரிணாமங்கள், அது அடையும்., அனுபவிக்கும் பரிமாணங்கள் இவற்றின் தொடர்ச்சியைத் தொய்வில்லாமல் அளித்த விதம் பாராட்டத் தக்கது. அதே சமயம், இது ஒரு தொடர்பில்லாமல் அனைவரையும் குழம்ப வைத்தது துவக்கத்தில் என்பது மறுக்க இயலாது. இதற்கு காரணம், வெட்டியார் சொன்னது போல, முதலிலேயே கதையமைப்பைச் சரியாக முறையமைத்துக் கொள்ளாதது என்பதுவே என் கருத்து. ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும் கந்தனை மீண்டும் நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்து முந்தையது கனவு என்பதை வாசகர்களையும் உணர வைத்திருந்தால் இன்னமும் தெளிவாகச் சென்றிருக்க முடியும் என எண்ணுகிறேன்.

ஒவ்வொரு தனி நிகழ்வும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு விளக்கமாக அமைந்தது சிறப்பென்றால், அதன் முடிவை பதிவின் இறுதியில் இன்னமும் முனைப்பாகச் சொல்லியிருந்தால் ஒரு கோர்வை வந்திருக்கும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், "இதயம்" மணியன் அவர்களின் "ராமாயணம்" தொடர் ஒலிநாடாவைக் கேட்டீர்களென்றால் புரியும். ஒவ்வொரு பாத்திரமும் விடை பெறும் போது, 'இத்துடன் என் பணி முடிந்தது. இனி உன் பயணம் தொடரட்டும்' என ஒரு சொற்றொடர் அடிக்கடி வரும். அது போல வந்திருக்கலாம் என்பது என் கருத்து. புரியுமென நம்புகிறேன்.

'மதுரையம்பதி' மிக அழகாகக் காட்டியிருப்பது போல, ஜகன்மோகனுக்கு வந்த 'வாசனை, சமாதி' சந்தேகங்கள் அந்த கால கட்டத்தில், அந்தப் பிறவியில் ஒட்டவில்லை. அவருக்கு இது வர வாய்ப்பில்லை எனவே நானும் கருதுகிறேன்.

'நான் வருகிறேன்' என தாத்தா சொன்னதை 'நான் சென்று வருகிறேன்' எனவே நான் அப்போது புரிந்து கொண்டதால், அவர் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. அதே சமயம், அவரையே எதிர்பார்த்துக் கொண்டிருந்த கந்தன், கேசவன் இருவருக்கும் அந்த தோற்ற மயக்கம் வந்ததிலும் ஆச்சரியமில்லை. தாத்தாவாலும் இதைச் செய்திருக்க முடியும் எனவும் நான் நம்புகிறேன்!

'எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தாலும்' அவரவர் கையில்தான் அவரவர் விதி முடிவு இருக்கிறது என்ற கருத்துடன் நான் முழுதுமாக ஒன்றுகிறேன். ஒவ்வொரு கால கட்டத்திலும் இது ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. இதற்கு கண்ணன் காலடி பட வேண்டுமென்ற அவசியம் இல்லாமலேயே!

நான் அக்னாஸ்டிக் என்ற சுய விமரிசனம் யாரைத் திருப்தி படுத்தவென சொன்னது என விளங்கவில்லை. சுய நிகழ்வுகளும் கலந்திருக்கும் இக்கதையில் இது போன்ற விமரிசனம் எவரையோ சமாதானப் படுத்தவென வலிய திணிக்கப்பட்ட ஒரு உணர்வினை எனக்கு அளித்தது.

மிகச் சிறந்த கதைகளை உங்களால் அளிக்க முடியும் என்ற நம்பிக்கையை இத்தொடர் எனக்கு அளித்தது என்றால் அது மிகையில்லை. கோவியார் சொன்னது போல, 'ஊனாகி உயிராகி' தாராளமாக ஆரம்பிக்கலாம்!

வாழ்த்துகள்.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

குமரன்,

தொடரை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் தொடரில் நன்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் இடம்பெற்றது கூடுதல் சிறப்பு.

அடுத்த தொடர் எப்போது ?

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன். அடுத்த தொடர் இந்த வாரத்திலேயே தொடங்கும். ஆனால் அதற்குத் தலைப்பு 'ஊனாகி உயிராகி' இல்லை. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

எல்லா விமர்சனங்களையும் உள்வாங்கியிருக்கிறீர்கள் குமரன்.

எனக்கு 2 பதில் தந்து இருந்தீர்கள் படித்தேன், :)

பாட-பாட ராகம், போட-போட கணக்குன்னு சொல்லுவாங்க,அது மாதிரி, நீங்க இன்னும் 2-3 பெருந்தொடர் எழுதினீங்கன்னா இன்னும் நன்றாக தேர்ந்துவிடுவீர்கள். வாழ்த்துக்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

படம் போட்டு பதிவினை அப்டேட் பண்ணியிருக்கீங்களோ?..

யாருங்க இந்த பெரியவர் ராமன் ஐயப்பன்?. ஏதேனும் சிறு குறிப்பு கிடைக்குமா?

வெட்டிப்பயல் said...

//மதுரையம்பதி said...

படம் போட்டு பதிவினை அப்டேட் பண்ணியிருக்கீங்களோ?..

யாருங்க இந்த பெரியவர் ராமன் ஐயப்பன்?. ஏதேனும் சிறு குறிப்பு கிடைக்குமா?//

ரிப்பீட்டே ;)

Geetha Sambasivam said...

சுய விமரிசனம் மிக அருமையாக அமைந்துள்ளது. நீங்கள் "நாத்தீகம்" தெரிந்தவராய் இருந்தாலும் அடிப்படையில் அப்படி இல்லை என்றே எண்ணுகிறேன். என்றாலும் நம் அனைவருக்குமே சில கேள்விகள், சில சந்தேகங்கள் உண்டுதான். அவற்றுக்கு விடையும் தேடுகிறோம். சிலருக்குக் கிடைக்கிறது. சிலருக்கு நீங்கள் உங்கள் கதையில் சொல்வது போல் பல பிறவிகளுக்குப் பின்னர் கிடைக்கும். உங்கள் தேடலுக்குப் பதில் கிடைக்க வாழ்த்துக்கள். அருமையான கதைப் போக்கு என்றாலும், கந்தனின் கனவுகள் என்பதை என்னால் முதலில் ஊகிக்க முடியவில்லை, பின்னர் ஊகித்தபோது, (நடுவில் படிக்க முடியவில்லை) கதை முடிந்து விமரிசனங்கள் வர ஆரம்பித்து விட்டது. அடுத்த தொடருக்கு ஆவலுடன் காத்திருக்கோம்.

குமரன் (Kumaran) said...

நன்றி கொத்ஸ். உங்களை மாதிரி அருமையான லேடரல் திங்கிங்க் திறமை உள்ளவர்கள் நல்ல கதைங்கற அளவுல படிச்சதால நான் தப்பிச்சேன்னு நினைக்கிறேன். :-) இல்லாட்டி நிறைய ஓட்டைங்களைக் கண்டுபிடிச்சு சொல்லியிருப்பீங்களே?! :-)

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர். உண்மை. இதுவரை நான் எழுதிய கதைகள் எல்லாமுமே (ஒன்றிரண்டைத் தவிர்த்து) பிறர் ஏற்கனவே சொன்னதை என் பாணியில் சொன்னது தான். அடிப்படைக் கதை ஏற்கனவே இருந்தது - ஆங்காங்கே கற்பனைகளைத் தூவிக் கொண்டேன். முழுக்க முழுக்கக் கற்பனையாக எழுத என்னால் இயலாது என்றே நினைக்கிறேன். அடுத்த தொடரும் ஏற்கனவே நமக்கெல்லாம் தெரிந்த கதை தான் - என் பாணியில் எழுதப்படும்; அவ்வளவு தான். யோகன் ஐயா எழுதச் சொன்னது அது.

குமரன் (Kumaran) said...

தாத்தாவோட படம் இப்போது இடுகையில் இருக்கிறது இராகவன். பாருங்கள். இந்தக் கதையைத் தாத்தா படிக்க உயிருடன் இல்லை. ஆனால் கேசவன், கந்தன், மணிகண்டன் எல்லோரும் இருக்கிறார்கள். தாத்தாவை அறிந்த வேறு சிலரும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் எப்போதாவது இந்தக் கதையைப் படிக்க வாய்ப்பிருக்கிறது. சொல்லியிருக்கிறேன். :-)

இந்தக் கதையிலும் சாமியைப் பற்றிப் பேசிய அதே அளவிற்கு ஆசாமிகளைப் பற்றியும் பேசியிருக்கிறேனே இராகவன். கந்தன், கேசவன், மணிகண்டன், தாத்தா எல்லாம் ஆசாமிகளாகத் தெரியவில்லையா உங்களுக்கு? :-)

குமரன் (Kumaran) said...

விமர்சனத்திற்கு மிக்க நன்றி எஸ்.கே. மீண்டும் வந்து உங்கள் விமர்சனத்திற்கு பதில் சொல்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் கோவி.கண்ணன். தொடர் நிறைவு பெற்றுவிட்டது. அடுத்தத் தொடரைத் துவக்கியாக வேண்டும். யோகன் ஐயாவிடம் சென்ற வாரமே எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டேன். இன்னும் தாமதிக்கக்கூடாது என்று இந்தத் தொடரை நிறைவு செய்துவிட்டேன். :-)

அடுத்தத் தொடருக்கு படங்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் தேவையான அளவிற்குப் பாடல்கள் கிடைத்துவிட்டன. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. தேர்ந்தால் சரி. தேறமாட்டேன் போலிருக்கிறதே. :-)

தாத்தாவைப் பற்றி சிறு குறிப்பை நீங்களும் பாலாஜியும் கேட்டிருக்கிறீர்கள். இதோ சிறு குறிப்பு: திருவண்ணாமலையில் 1998 வரை வாழ்ந்தவர் தாத்தா. அவரை எனக்கு 1996 முதல் தெரியும். சென்னையில் முதன்முதலில் பார்த்தேன். நண்பரின் வீட்டில். பின்னர் 1998ல் திருவண்ணாமலையில் மீண்டும் சந்தித்தேன். பார்வைக்கு மிகச் சாதாரணமானவர். எங்கள் நட்பு வட்டாரத்தில் அவரைப் பற்றித் தெரியும். அவ்வளவு தான் அவரைப் பற்றி எனக்குத் தெரிந்தது. எந்த ஊர், என்ன வயது எதுவுமே தெரியாது. அவருடைய படத்தை நான் வெகு நாட்கள் வைத்திருந்தேன். நேற்று இடுகையில் இடத் தேடிய போது கிடைக்கவில்லை. பிறகு நண்பனிடம் கேட்டு வாங்கி இங்கே இட்டேன். இன்னும் மேல் விவரம் வேண்டுமென்றால் தனிமடலில் தருகிறேன். ஆனால் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்.

படம் போட்டு பின்னர் ஒரு பின்னூட்டத்தில் சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். பார்த்தால் உங்கள் பின்னூட்டம். கூகுள் ரீடரில் மீண்டும் இந்த இடுகை வந்துவிட்டதோ?

குமரன் (Kumaran) said...

பாலாஜி. ரிப்பீட்டே மட்டும் தானா? வேறொன்றும் சொல்வதற்கில்லையா?

குமரன் (Kumaran) said...

நன்றி கீதாம்மா. அடுத்தத் தொடர் விரைவில். ஆனால் ஆன்மிகத் தொடர் இல்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இராமன் ஐயப்பன் என்று கூகுளாரைக் கேட்டா, இப்போ கொண்டாந்து கண் முன் நிறுத்தறாரு!

சீடன் குருவுக்கு ஆற்றும் உதவி! :-)))
வாழ்த்துக்கள் குமரன்!

குமரன் (Kumaran) said...

நேற்று தேடினேன் கிடைக்கவில்லை. இன்று கிடைக்கிறதா? மகிழ்ச்சி இரவிசங்கர். :-)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

பாலாஜி. ரிப்பீட்டே மட்டும் தானா? வேறொன்றும் சொல்வதற்கில்லையா?//

அதுக்கு தான் தனியா பதிவு போட்டே சொல்லியாச்சே...

அடுத்த கதை ரெடினு சொல்லியிருக்கீங்க. அதுக்கு தான் வெயிட்டிங் :-)