Thursday, January 24, 2008

உடுக்கை இழந்தவன் கை - அத்தியாயம் 1

உவகையுடன் கூடிய உள்ளத்தினராதல் மிகப் பெரிய சிறப்பு. எல்லோருக்கும் துன்பமும் இன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. குளிரும் வெப்பமும் போல் மாறி மாறி வரும் இந்த இன்பதுன்பங்களில் எல்லாம் உவகை கொண்ட மனத்துடன் இருப்பதென்பது ஒரு சிலரால் தான் முடிகிறது. கடமை புரிவார் இன்புறுவார் என்றொரு பண்டைக்கதையும் உண்டு. கடமையைச் செய்வதாலேயே இன்பம் தோன்றிவிடுகிறதா? கடமையைச் செய்து முடித்தவுடன் ஒரு நிறைவும் அமைதியும் தோன்றினாலும் உள்ளத்தில் உவகை தோன்றி நிலை நிற்பதில்லை. இப்படி இருக்க எல்லா கடமைகளையும் செய்து கொண்டே எதுவும் செய்யாத நிலையில் நிற்க வேண்டுமென்று கற்றறிந்தவர்கள் சொல்கிறார்கள். உலகத்தில் அப்படி இருப்பவர்கள் யாரேனும் உண்டா என்ன?

எல்லாமும் செய்து கொண்டிருக்கும் போதே ஒன்றும் செய்யாமல் இருக்கும் நிலையில் நிலைத்து நிற்கும் கரும யோகியைப் போல் கதிரவன் ஒளி வீசிக் கொண்டிருக்கிறான். இந்த உலகத்து உயிர்கள் எல்லாம் தழைத்து வாழ்வதற்காக என்று அவன் தன்னை எரித்துக் கொண்டு ஒளிவீசவில்லை. தானாக ஏனோ எரிந்து கொண்டிருக்கிறான். அவனின் ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியால் உலகத்து உயிர்கள் எல்லாம் வாழ்கின்றன. அவனின் எரி தழலின் வீச்சினைப் பொறுத்துக் கொள்ளும் தூரத்தில் அவனை வலம் வந்து கொண்டிருக்கும் பூமி அன்னை அவனது ஒளி தரும் சக்தியால் தன்னில் பிறந்த உயிர்களுக்குத் தேவையான உணவுகளை எல்லாம் உருவாக்கித் தருகிறாள். அன்னையும் தந்தையுமாக இருவரும் உயிர்க்குலம் அனைத்தையும் உயிர்ப்பித்து வளர்த்து வருகிறார்கள்.

பன்னெடும் காலமாக இந்த உலகத்தில் உயிர்கள் எல்லாம் இப்படியே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று பிறந்து அதனிலிருந்து இன்னொன்று பிறந்து என்று பல்கிப் பெருகி நிற்கின்றன. இந்தத் தென்பெண்ணையாற்றங்கரையோரப் பகுதியும் அப்படித் தான் இருக்கிறது. ஆற்று நீர்ப் பாசனத்தாலும் மாதம் மும்முறை தவறாது பெய்யும் மழையினாலும் இந்தப் பகுதி முழுவதும் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்திருக்கிறது. அந்தச் செழுமை இங்கு வாழும் மக்களிடமும் தெரிகிறது. வந்தவரை எல்லாம் வரவேற்று வாழவைக்கும் பெருமக்கள் இவர்கள். காடுகள் நிறைந்த இந்த முல்லை நில மக்கள் கரியவனைத் தொழுது வாழ்பவர்கள். ஆங்காங்கே காடுகளை வெட்டி சிறு ஊர்களும் நகரங்களும் அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். ஊருக்கு நடுவே மாயோனுக்குக் கோவிலும் அமைத்துப் பரவுகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக மக்கள் அனைவரும் தம் மன்னவனின் திருமண விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பழம்பெருமை கொண்ட குடியில் பிறந்த தங்கள் மன்னவனுக்கு ஏற்ற வகையில் இன்னொரு பழம்பெருமை கொண்ட குடியில் பிறந்த மகளிர் மனைவியராக அமைந்ததை எண்ணி எண்ணி தம்முள் ஒருவருக்கொருவர் பேசிப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். மன்னவனும் வள்ளல் என்று பெயர் பெற்றவன்; அவன் மனைவியரும் பெரும்வள்ளல் ஒருவனின் மக்கள். என்ன பொருத்தம் என்ன பொருத்தம் என்று வியக்காதவர் இல்லை. தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் பலவிதங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். வண்ணப்பொடிகளை எண்ணெயுடன் கலந்து ஒருவர் மேல் ஒருவர் தடவியும் வண்ணப்பட்டாடைகளை உடுத்தியும் மகிழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். போவோர் வருவோரை எல்லாம் வருந்தி அழைத்து விருந்து கொடுத்து மகிழ்கின்றனர்.

மகிழ்ச்சி ஒன்றைத் தவிர வேறு ஏதும் அறியாதவரைப் போல் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மக்கள் கூட்டத்தின் நடுவில் ஒரு முதியவர் வந்து கொண்டிருக்கிறார். தம் மன்னவனின் திருமண விழாவைத் தங்கள் வீட்டு விழா போல் கொண்டாடும் இந்த மக்களின் அரச அன்பைக் கண்டு புன்னகை பூத்த முகத்துடன் வந்து கொண்டிருக்கிறார். அந்த முதியவரின் தோற்றம் அவர் கல்வி கேள்விகள் சிறந்தவர் என்று பறை சாற்றுகிறது. அறிவின் ஒளி முக மண்டலமெங்கும் வீசிக் கொண்டிருக்கிறது. அவர் தனது இடையில் அணிந்திருக்கும் வெண்ணிற பட்டாடை அவரது செல்வச் செழுமையைச் சொல்கிறது. அரசர் பெருமானிடம் செல்வாக்கு கொண்டவர் என்பதை அவரது கையில் அணிந்திருக்கும் பொன் வளை சொல்கிறது. காலில் அணிந்திருக்கும் தண்டை இந்நாட்டு மன்னவன் மட்டுமின்றி வேறு பல மன்னர்களிடமும் செல்வாக்கு பெற்றவர் என்பதைக் கூறுகிறது. கழுத்தில் காதிலும் அணிந்திருக்கும் பொன்னணிகள் பல மன்னர்களிடம் பெற்ற பரிசில்களைப் போல் தெரிகின்றன. அவரது தோற்றத்தைப் பார்த்தாலே ஒரு பெரும் புலவர் என்று தெரிகிறது. அந்தத் தோற்றத்தைக் கண்ட மக்கள் அவருக்கு முகமன் கூறி மரியாதையுடன் வழி விட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.

பெண்ணையாற்றங்கரையில் வந்து நின்ற அவருக்கு அந்தச் சூழல் மிகவும் பிடித்திருக்கிறது. முதல் நாள் பெய்த மழை நீர் இன்னும் இந்த ஆற்றங்கரை புற்களின் மீது தேங்கி நிற்கிறது. அந்த நீர்த்துளிகள் கதிரவனின் ஒளியில் வைரக் கற்களைப் போல் மின்னுகின்றன. இன்று காலை பெய்த பனியோ என்று ஒரு நொடி தோன்றினாலும் பனி என்றால் கதிரவனைக் கண்டவுடன் விலகியிருக்கும்; இவை இன்னும் விலகாமல் நிற்பதால் இவை மழைத்துளிகளே என்று நினைத்துக் கொள்கிறார் அந்த முதியவர்.

கடமையைப் பற்றிய எண்ணங்கள் மீண்டும் மனத்தில் வருகின்றன. தனக்குரிய கடமைகள் எல்லாம் நிறைவேறிவிட்டது என்ற மன அமைதி இருந்தாலும் ஒரு பெரும் துயரம் அவரது மனத்தை அரித்துக் கொண்டிருக்கிறது.

'ஆருயிர் நண்பனை விட்டு கடைசி வரை பிரியாதிருப்போம் என்றல்லவா நினைத்திருந்தோம். காலத்தின் கோலத்தால் இப்படி அவனை மரணத்தின் வாயிலில் தனியே விட்டுவிட்டு வர வேண்டியதாயிற்றே. வாழும் வரை வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வாரி வழங்கி அவனை விட்டால் மாரி ஒன்று மட்டும் தான் உலகத்தில் அவனளவு வள்ளற்தன்மை கொண்டது என்று போற்றும் படி வாழ்ந்தானே. அவனுக்கு இப்படி ஒரு கதி ஏற்பட்டதே. செய்த அறங்களை எல்லாம் பரிசிலர்க்கு வழங்கிவிட்டானோ? அவனை அவன் செய்த எந்த அறமும் காக்கவில்லையே? ஐயகோ ஐயகோ. இந்த மக்கள் எல்லோரும் மகிழ்வுடன் தங்கள் மன்னவன் திருமணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நானோ என் மன்னவன் வானுறையச் சென்றதை எண்ணி துயர் உறுகிறேனே'

பெண்ணையாற்றங்கரையில் அமர்ந்து தனிமையில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார் அந்த முதியவர். மனத்தை அரிக்கும் துயரங்கள் கண்களின் வழியே வெளி வந்து கன்னங்களையும் அரிக்கத் தொடங்கிவிட்டன. சிறு வயது முதல் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக அவர் மனக்கண் முன் தோன்றி மறைகின்றன.

48 comments:

cheena (சீனா) said...

மீ த பர்ஸ்ட்டு - ரிசர்வ்ட் =

cheena (சீனா) said...

கதை அருமையாக ஆரம்பித்திருக்கிறது. இயற்கை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. முதியவரின் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. அனைத்துக் கடமைகளையும் மனது மகிழ செய்து முடித்த பூரிப்பின் இடையே ஒரு சிறு சோக இழை ஓடுகிறது. பொறுத்திருந்து பார்ப்பொம்.

கோவி.கண்ணன் said...

//எல்லாமும் செய்து கொண்டிருக்கும் போதே ஒன்றும் செய்யாமல் இருக்கும் நிலையில் நிலைத்து நிற்கும் கரும யோகியைப் போல் கதிரவன் ஒளி வீசிக் கொண்டிருக்கிறான். //

கதிரவனைத்தான் கரும யோகிக்கு உவமை காட்ட முடியும்.

கதிரவன் என்றுமே சலனமில்லாதது. அதனுடன் எந்த ஒரு யோகியையும் ஒப்பிட்டு காட்ட முடியாது. கதிரவன் போன்ற கர்ம யோகி என்று யாருக்காவது உவமை காட்டலாம். ஆனால் கர்ம யோகி போன்ற கதிரவன் எனும் போது எவரையாவது குறிப்பிட்டுச் சொன்னால் சரியாக இருக்கும்.

அப்படி கதிரவனுடம் ஒப்பிட்டுச் சொல்லக் கூடிய கர்ம யோகி எவரும் இல்லை.

கர்ம யோகி என்று எதனையாவது நினைத்தால் கதிரவனையே முதன்மையாக நினைக்க முடியும். இரண்டும் வேறல்ல. ஒப்பீடாக சொல்ல முடியாது. பண்பு பெயராக, தன்மையாகச் சொல்லலாம் என்றே நினைக்கிறேன்.

மாரியைப் போன்ற வள்ளல் என்பது சொல்லி இருக்கிறீர்கள். அது மிகச் சரி. ஆனால் வள்ளலைப் போன்ற மாரி என்று சொல்ல முடியாதே. அது போன்றது தான் கர்மயோகி போன்ற கதிரவன் என்ற பதம்

:)

அடுத்த தொடர் ஆரம்பமே நன்றாக வந்திருக்கிறது. குறிப்பாக முதியவர் பற்றிய வருணனைகள் மிக நன்றாகவே வந்திருக்கிறது

துளசி கோபால் said...

ஆஹா...........அடுத்த தொடரா?

வாழ்த்து(க்)கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல ஆரம்பம். சூரியனும்-பூமியும் பற்றிய வருணனை அழகாக இருக்கு.
வாழ்த்துக்கள் குமரன்.

G.Ragavan said...

XX XX என்று பலவேந்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப்புலவர்
XXயொருவனும் அல்லன்
மாரியும் உண்டீங்கு உலகு புரப்பதுவே! :) சரியா குமரன்?

குமரன் (Kumaran) said...

சீனா ஐயா. முற்பதிவு இந்த இடுகைக்கு மட்டும் தானா? இனி வரும் இடுகைகள் எல்லாவற்றிற்குமா? எப்போதும் முதல் ஆளாக வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். :-)

நான் பல பத்திகளில் சொன்னதை ஒரே பத்தியில் சுருக்கிச் சொன்னீர்கள். நன்கு சொன்னீர்கள். நன்றி ஐயா.

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன்.

நீங்கள் சொன்னதைத் தான் புலவரும் எண்ணியிருக்கிறார். உலகத்தில் அப்படிப்பட்டவர் யாராவது இருக்கிறாரா என்று கேட்டுவிட்டுப் பின்னர் கரும யோகி என்ற ஐடியலுக்குக் கதிரவன் மட்டுமே உண்டு என்று நினைக்கிறார். வேறு யாரையாவது கருமயோகி என்று அவர் சொல்ல நினைத்திருந்தால் அப்போது கதிரவனைப் போன்றவர் என்று சொல்லியிருப்பாரோ என்னவோ?! இங்கே அப்படி ஒருவரை அவர் காணாததால் கரும யோகி என்றாலே கதிரவன் மட்டும் தான் என்பது போல் பேசியிருக்கிறார்.

இன்னொரு முறை படித்துப் பாருங்கள். மாரியைப் போன்ற வள்ளல் என்று அவர் சொல்லவில்லை. வள்ளலைப் போன்ற மாரி என்று தான் சொல்லியிருக்கிறார். இந்தப் புலவர் பாடிய பாடலை இராகவன் சொல்லியிருக்கிறார் பாருங்கள். இந்த இடுகையில் பெயர்களை நான் சொல்லாததால் அவரும் பெயர்களை மறைத்துப் பாடலை மட்டும் சொல்லியிருக்கிறார். அடுத்த அத்தியாயத்தில் பெயர்கள் ஒவ்வொன்றாக வந்துவிடும்.

பழந்தமிழ்ப் புலவரின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுவதால் கதையின் நடையில் கொஞ்சம் செந்தமிழ் சேர்த்திருக்கிறேன். பல சொற்களுக்கு கோனார் உரை போட வேண்டியிருக்கலாம். இந்த ந்டையிலேயே தொடருவதா கொஞ்சம் எளிமைப் படுத்துவதா என்பதைப் போகப் போகத் தான் பார்க்க வேண்டும். செந்தமிழ் நடையில் இருப்பதால் நன்கு வந்திருக்கிறது என்று சொல்கிறீர்களா உள்ளடக்கம் நன்கு வந்திருக்கிறது என்று சொல்கிறீர்களா?

குமரன் (Kumaran) said...

நன்றி துளசி அக்கா.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. நடை கடினமாக இல்லையே?!

குமரன் (Kumaran) said...

பலவேந்தி இல்லை பல ஏத்தி. மத்தபடி அந்தப் பாடலை சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள் இராகவன். ஆக உங்களுக்கு இந்தப் பாடல் க்ளுவா அமைஞ்சது. இரவிசங்கருக்கும் பாலாஜிக்கும் வேற க்ளூ வச்சிருக்கேன். கண்டுபிடிச்சு சொல்றாங்களா பாக்கலாம்.

மற்ற நண்பர்களும் இந்தக் கதை யார் கதை; இந்தப் புலவர் யார் என்று சிந்தித்துச் சொல்லுங்கள். சிறிய அளவில் புதிரா புனிதமா இடுகை என்று கூட எண்ணிக் கொள்ளலாம். :-)

குமரன் (Kumaran) said...

பலவேந்தி இல்லை பல ஏத்தி. மத்தபடி அந்தப் பாடலை சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள் இராகவன். ஆக உங்களுக்கு இந்தப் பாடல் க்ளுவா அமைஞ்சது. இரவிசங்கருக்கும் பாலாஜிக்கும் வேற க்ளூ வச்சிருக்கேன். கண்டுபிடிச்சு சொல்றாங்களா பாக்கலாம்.

மற்ற நண்பர்களும் இந்தக் கதை யார் கதை; இந்தப் புலவர் யார் என்று சிந்தித்துச் சொல்லுங்கள். சிறிய அளவில் புதிரா புனிதமா இடுகை என்று கூட எண்ணிக் கொள்ளலாம். :-)

குமரன் (Kumaran) said...

ஒரு முக்கிய அறிவிப்பை மறந்துவிட்டேனே. வீட்டிலும் அலுவலகத்திலும் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும் என்றால் இந்தத் தொடரை வாரம் ஒரு அத்தியாயம் என்ற அளவில் தான் எழுத வேண்டும். அப்படியே செய்வதாக திட்டம். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

// வீட்டிலும் அலுவலகத்திலும் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும் என்றால் இந்தத் தொடரை வாரம் ஒரு அத்தியாயம் என்ற அளவில் தான் எழுத வேண்டும். அப்படியே செய்வதாக //

ஹலோ, ஹலோ, நான் ஜிரா கதையினை வாரத்துக்கு ரெண்டு நாள் பதிவிடச் சொன்னேன், அப்போ அங்க நீங்களூம் அதுக்கு ரீப்பீட் போட்டுவிட்டு, இங்க நீங்க சொல்லாமா?.

உங்க வேலைப் பளூ புரியுது குமரன், மேலே சொன்னது சும்மா வம்பிற்காக :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெண்ணையாற்றங்கரையில் வந்து நின்ற அவருக்கு அந்தச் சூழல் மிகவும் பிடித்திருக்கிறது//

அட, இங்கேயும் தென்பெண்ணையா? கலக்குங்க குமரன்!
பாரதியும் காவிரி தென்பெண்ணை பாலாறு...ன்னு காவிரிக்கு அடுத்து தென்பெண்ணையைத் தான் சொல்லுறான்!

//கதிரவனைத்தான் கரும யோகிக்கு உவமை காட்ட முடியும்.
கதிரவன் என்றுமே சலனமில்லாதது//

கோவி அண்ணா!
கதிரவனைக் காட்டிலும் உயர்ந்த கருமயோகி இருக்கிறான்...இல்லையில்லை இருக்கிறாள்! :-)

ஆனா என்ன ஒன்னு, நாம் அவள் மீதே இருப்பதால், அவள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை! எங்கோ உயரத்தைப் பார்த்தே பழக்கப்பட்ட மனித மனம், யோகத்தையும் வேறு எங்கோ தான் தேடுகிறது!

பூமித் தாயைக் காட்டிலும் ஒரு கர்மயோகியைக் காணவும் முடியாது! மெல்லிய மனம் கொண்ட ஒரு பெண் கர்ம யோகத்தைக் கடைப்பிடிப்பது என்பது...ஆகா!
அறம், மறம் இரண்டையும் சமமாகத் தாங்கிக் கொண்டே கடமை புரிவது ரொம்ப கஷ்டம்ங்க!

கதிரவன் மாதிரி அறம், மறம் ரெண்டையும் "பாத்துக்கிட்டே" கடமை புரிவது ஓரளவு இயலும்.
ஆனா அதைத் "தாங்கிக்கிட்டே" கடமையையும் செய்யணும்னா ரொம்ப கஷ்டம்ங்கண்ணா!

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல்! பெண்ணே உன் யோகமே உலகத்துக்கு இன்பம்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரவிசங்கருக்கும் பாலாஜிக்கும் வேற க்ளூ வச்சிருக்கேன். கண்டுபிடிச்சு சொல்றாங்களா பாக்கலாம்//

உக்கும்...
//தென்பெண்ணையாற்றங்கரையோரப் பகுதியும்//
//முல்லை நில மக்கள் கரியவனைத் தொழுது வாழ்பவர்கள். ஊருக்கு நடுவே மாயோனுக்குக் கோவிலும் அமைத்துப் பரவுகின்றனர்//
//பெண்ணையாற்றங்கரையில் அமர்ந்து தனிமையில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார் அந்த முதியவர்//

அட, ஜிரா எடுத்து விட்ட பாட்டைக் கூகுளாரைக் கேளூங்க!
இல்லாக்காட்டி திருக்கோவிலூருக்கு மாதவிப் பந்தல் பஸ்ஸில் ஒரு டிக்கெட் எடுங்கப்பா! :-)

கோவி.கண்ணன் said...

//பூமித் தாயைக் காட்டிலும் ஒரு கர்மயோகியைக் காணவும் முடியாது! மெல்லிய மனம் கொண்ட ஒரு பெண் கர்ம யோகத்தைக் கடைப்பிடிப்பது என்பது...ஆகா!
அறம், மறம் இரண்டையும் சமமாகத் தாங்கிக் கொண்டே கடமை புரிவது ரொம்ப கஷ்டம்ங்க!
//

இரவி,

ஒப்புக் கொள்ள மாட்டேன். பூமியில் நில அதிர்வு, கடல் பொங்குதல் இயற்கை சீற்றங்கள் உண்டு கதிரவனில் ? சோலார் பிளம்புகள் சீறினாலும் நமக்கு பாதிப்பு இல்லை.

பூமியே கதிரவனைச் சார்ந்துதானே இருக்கிறது. கதிரவனே மிகப் பெரிய, சிறப்பான கர்மயோகி.

:)

நேரம் இருந்தால் இதையும் படிங்கள்.

இலவசக்கொத்தனார் said...

குமரன், உண்மையைச் சொன்னா ஆரம்பத்தில் கொஞ்சம் நடை கடினமாத்தான் இருந்தது. எழுதினது தெரியாதவங்களா இருந்தா மேலே படிச்சு இருப்பேனான்னு சந்தேகம்தான்.

ஆனப் போகப் போக எனக்குப் பிடிபட்டுப் போச்சா இல்லை ஆட்கள் வந்ததினால கொஞ்சம் எளிமையாச்சான்னு தெரியலை. ஆனா நல்லா இருந்தது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
இரவி,
ஒப்புக் கொள்ள மாட்டேன். பூமியில் நில அதிர்வு, கடல் பொங்குதல் இயற்கை சீற்றங்கள் உண்டு கதிரவனில் ? சோலார் பிளம்புகள் சீறினாலும் நமக்கு பாதிப்பு இல்லை//

சீற்றங்களும் யோகத்துக்குள் அடக்கம் கோவி அண்ணா! :-)
பகவத் கீதை சொன்ன கோவி கண்ணனுக்கே கீதையில் சந்தேகமா? :-)

கடல் பொங்குதல், இயற்கைச் சீற்றம் எல்லாம் பூமியைச் சுற்றி பஞ்ச பூதங்கள், ஏன் சூரியனும் சேர்ந்து செய்யும் செயல்கள் தான்; பூமி அதையும் சேர்த்துத் தான் தாங்கிக் கொள்கிறாள்!

யாருக்கும் பாதிப்பு இல்லாமல் கடமை செய்வது என்பது மட்டும் கர்ம யோகம் இல்லை! பாதிப்புகள் தவிர்க்க முடியாததாக ஆகும் போது, பாதிப்புகளால் பாதிக்கப்படாமல் இன்னும் தொடர்ந்து கடமையைச் செய்வது தான் கர்ம யோகம்!

அப்படிப் பார்த்தால், பாதிப்புக்க்குள்ளான பூமி தொடர்ந்து கடமை செய்வது அரிதா இல்லை பாதிப்புக்கே உள்ளாகாத கதிரவன் கடமை செய்வது அரிதா? :-)

//நேரம் இருந்தால் இதையும் படிங்கள்//
அப்பயே படிச்சிருக்கேன் அந்தக் கவுஜயை! என் பின்னூட்டத்தை அங்க பாருங்க! :-)

குமரன் (Kumaran) said...

இந்தத் தொடர்கதைக்கும் விமர்சனம் எழுதச் சொல்லிக் கேட்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் முதல் தடவை படிக்கும் போதே அதை நினைவில் வைத்துக் கொண்டு படிக்குமாறு நண்பர்களை வேண்டிக் கொள்கிறேன். :-)))

குமரன் (Kumaran) said...

மௌலி. நமக்கு ஒரு நியாயம்; ஊருக்கு ஒரு நியாயம்ன்னு சொல்லுவாங்களே. கேள்விபட்டதில்லையா? :-)

இராகவனுக்கு என்ன குழந்தையா குட்டியா? ஜிமெயில் அரட்டை அடிக்கிற நேரத்துல இன்னும் ரெண்டு அத்தியாயம் எழுதலாமேங்கற நல்லெண்ணத்துல தான் நீங்க சொன்னதை வழிமொழிஞ்சேன் (கவனிக்கவும் - ரிப்பீட்டவில்லை). :-)))

நானும் சும்மா வம்புக்காகத் தான் சொல்றேன். :-)

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர் & கோவி.கண்ணன். நல்லா விவாதம் செஞ்சு ஒரு முடிவுக்கு வாங்க. அதுவரைக்கும் நான் ஒன்னும் சொல்லலை அதைப் பத்தி. :-)

குமரன் (Kumaran) said...

பாத்தீங்களா இரவி. க்ளூவை வச்சுக் கண்டுபிடிங்கன்னு சொன்னா உங்க வீட்டுக்கு எல்லாரையும் பஸ்ஸேத்தி உடறீங்க. இது உங்களுக்கே சரின்னு படுதா? :-)

ஆமாம் மக்களே. பொறுமை இருந்தா அடுத்த வாரம் வரைக்கும் பொறுத்திருங்க. இல்லாட்டி திருக்கொவிலூர் மாதவிப் பந்தல்ன்னு கூகுளாரைக் கேளுங்க. சரியா கொண்டு போய் விட்டுருவார். இல்லாட்டி இராகவன் சொன்ன பாட்டைப் போட்டாலும் சொல்லுவார்.

குமரன் (Kumaran) said...

சரி. கோவி.கண்ணனுக்கும் இரவிசங்கருக்கும் பேசறதுக்கு நிறைய வேணுமாம். மத்தவங்களும் முயற்சி செய்யலாம். அவங்களும் மத்தவங்களும் பேசறதுக்கு சில சிறு குறிப்புகள்.

1. உவகைன்னு ஏன் இந்த கதை தொடங்குது?
2. தலைப்பு 'உடுக்கை இழந்தவன் கை'ன்னு என்ன சொல்ல வருது?
3. இன்ப துன்பம் = குளிர் வெப்பம் - யார் சொன்ன உவமை?
4. கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டைக்கதை - யார் சொன்னது?
5. கரும யோகிக்குக் கதிரவனை உவமை சொன்னவர் யார்?
6. எந்த பண்பாட்டில் பூமி அன்னையாகவும் பகலவன் தந்தையாகவும் போற்றப்படுகிறான்? நாம் பூமாதேவி என்றும் உலக அன்னை என்றும் சொல்வதுண்டு. ஆனால் சூரிய தேவனை உலக தந்தை என்று சொல்வதில்லை. உயிர்களுக்கு இவர்கள் அன்னை தந்தை என்று கூறும் பழம்பண்பாடு உலகத்தில் இருக்கிறது.
7. குடிப்பெருமையைப் பற்றி ஏன் இந்த முதல் அத்தியாயம் பேசுகிறது?
8. இங்கே குறிப்பிடப்படும் வள்ளலாகிய மன்னவன் யார்? அவன் மணந்து கொண்ட மகளிர் யாவர்? அவர்களின் தந்தையான பெரும்வள்ளல் யார்?
9. வண்ணப்பொடிகளை எண்ணெயுடன் கலந்து தூவி மகிழ்வது கொண்டாட்ட வகை என்று எப்படி தெரியும்?
10. தென்பெண்ணையாற்றங்கரையில் அமர்ந்திருக்கும் இந்த முதியவர் யார்?

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். முதல் வரி மட்டும் தான் ரொம்ப பயமுறுத்துற மாதிரி இருக்குன்னு நினைக்கிறேன். மத்ததெல்லாம் அம்புட்டு பயமுறுத்தலை தானே. அடுத்த அத்தியாயத்தை இன்னும் கொஞ்சம் எளிமையாக்க முயற்சி செய்றேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா! எனக்கு சங்க இலக்கிய பாடம் எடுக்கறீங்களா குமரன். நல்லது இந்த பத்து கேள்விகளுக்கும் பதிலையும் நீங்களே சொல்லிட்டா தேவலை. :)

குருவே கே.ஆர்.எஸ்,

எங்க ஊர்ஸ் இப்படி என்னை தவிக்க விடுறார். மாதவிபந்தலுக்கான பஸ்-ல ஒரு டிக்கெட் ரிசர்வ் பண்ணி வச்சுட்டேன். நல்லபடியா என்னை கொண்டுபோய் சேத்துடுங்கப்பா.

வெட்டிப்பயல் said...

எங்க ஊரை பத்தி எழுதியிருக்கீங்க...சூப்பர்

கபிலர் வடக்கிருந்த கதை...

வெட்டிப்பயல் said...

8. மலையமான்... பாரி...
10. கபிலர் :-)

வெட்டிப்பயல் said...

//ஆக உங்களுக்கு இந்தப் பாடல் க்ளுவா அமைஞ்சது. இரவிசங்கருக்கும் பாலாஜிக்கும் வேற க்ளூ வச்சிருக்கேன். கண்டுபிடிச்சு சொல்றாங்களா பாக்கலாம்.//

என்னங்க எங்க ஊரை எனக்கு தெரியாதா??? இதுக்கு க்ளூவெல்லாம் வேற வேண்டுமா???

அந்த கல்யாணம் நடந்த ஊருக்கு பேரு மணமுண்டி...

குமரன் (Kumaran) said...

சங்க இலக்கிய பாடம் மட்டும் இல்லை மௌலி. சென்ற நூற்றாண்டுக் கவிஞர் சொன்னதும் இந்தக் கேள்விகளில் இருக்கிறது. :-)

இரவிசங்கர் மட்டுமில்லை மற்றவர்களும் கொஞ்சம் முயன்றால் இந்த கேள்விகளுக்கு விடை சொல்லிவிடலாம். கடினமில்லை.

மாதவிபந்தலுக்குப் போனா என்ன விடை கிடைக்குமோ அதை எல்லாம் பாலாஜி சொல்லிட்டார். மத்த கேள்விகளுக்கு விடை மாதவிப் பந்தலில் இல்லை.

குமரன் (Kumaran) said...

ஆமாம் பாலாஜி. முழுக்கதையும் உங்க ஊருல இல்லைன்னாலும் அங்கே தான் கதை தொடங்குது. ப்ளாஷ்பேக்குக்கு எங்க ஊர்ப்பக்கம் வந்துரும். அப்புறம் கடைசியில உங்க ஊருக்கு வந்து கதை முடியும்.

கபிலர் வடக்கிருந்தாரா தீபாய்ஞ்சாரா? வடக்கிருந்ததா நீங்களும் செந்தழல் இரவியும் இரவிசங்கரும் சொல்றீங்க. தீபாய்ஞ்சதா வரலாறு.காம் ல சொல்லியிருக்காங்க. முடிஞ்சா விசாரிச்சு சொல்றீங்களா?

எட்டாவது கேள்விக்கும் முழுவிடையும் சொல்லலையே? நீங்க சொல்லாம விட்ட பெயர்கள் தான் சிவாஜி படம் மூலமா ரொம்ப பிரபலமாயிடுச்சே. இன்னும் ஏன் சொல்லலை?

வெட்டிப்பயல் said...

//எட்டாவது கேள்விக்கும் முழுவிடையும் சொல்லலையே? நீங்க சொல்லாம விட்ட பெயர்கள் தான் சிவாஜி படம் மூலமா ரொம்ப பிரபலமாயிடுச்சே. இன்னும் ஏன் சொல்லலை?//

ஆஹா... அதை நான் சரியா படிக்கலை... அது அங்கவை, சங்கவை...

அவுங்க ரெண்டு பேருமே புலவர்கள்னு சின்ன வயசுல படிச்சிருக்கேன்.

வெட்டிப்பயல் said...

//கபிலர் வடக்கிருந்தாரா தீபாய்ஞ்சாரா? வடக்கிருந்ததா நீங்களும் செந்தழல் இரவியும் இரவிசங்கரும் சொல்றீங்க. தீபாய்ஞ்சதா வரலாறு.காம் ல சொல்லியிருக்காங்க. முடிஞ்சா விசாரிச்சு சொல்றீங்களா?//

அவர் வடக்கிருந்தாருனு தாங்க ஊருல சொல்றாங்க. கபிலர் பாறைனு கூட ஒன்னு இருக்குது.

குமரன் (Kumaran) said...

அப்ப நானும் கதையை அப்படியே எழுதுறேன். இப்ப ஆத்தங்கரையோரம் உக்காந்துக்கிட்டிருக்கிற கபிலர் இன்னும் கொஞ்ச நேரத்துல கபிலர் பாறைக்குப் போயிருவார்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன் வேல் வுடறத்துக்கு முன்னாடி நான் இதோ சக்கரம் வுட்டுக்கறேன்-பா! குமரன் சார் கேட்ட கேள்விகளுக்கு இந்த ஒன்னாங் கிளாஸ் மாணவன் சொல்ற பதிலுங்கோ! ஏதோ மார்க்கைப் பாத்துப் போடுங்க குமரன் சார்! :-)

8. இங்கே குறிப்பிடப்படும் வள்ளலாகிய மன்னவன் யார்? அவன் மணந்து கொண்ட மகளிர் யாவர்? அவர்களின் தந்தையான பெரும்வள்ளல் யார்?
மணந்த மன்னவன் திருக்கோவலூர்=மலையமான்
மணந்த பெண்கள்=அங்கவை, சங்கவை
அப்பெண்களின் தந்தை=பறம்பு மலை அரசன், பாரி

9. வண்ணப்பொடிகளை எண்ணெயுடன் கலந்து தூவி மகிழ்வது கொண்டாட்ட வகை என்று எப்படி தெரியும்?
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே என்ற பெரியாழ்வார் திருமொழியில், இப்படிக் கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம் பேசப்படுகிறது!

10. தென்பெண்ணையாற்றங்கரையில் அமர்ந்திருக்கும் இந்த முதியவர் யார்?
சங்கப் புலவர், கபிலர்

குமரன் (Kumaran) said...

மூணுல ரெண்டு ஏற்கனவே ஒருத்தர் சொல்லிட்டாருன்னாலும் உங்களுக்கும் மூணு மார்க் உண்டு இரவிசங்கர். :-)

இராகவனும் மின்னஞ்சல்ல 1,2,9க்கு பதில் தெரியும்ன்னு சொன்னார். அவர் வந்து பதில் சொல்றாரான்னு பாக்குறேன். உங்களாலயும் மத்த கேள்விகளுக்கு விடை சொல்ல முடியும்ன்னு நினைக்கிறேன். முயற்சி பண்ணி பாருங்க. சில கேள்விக்கு பதில் சக்கரம் வச்சிருக்கிறவர் தான். இந்த க்ளூ போதும்ன்னு நினைக்கிறேன். :-)

கடைசியில் மிச்சம் இருக்கும் கேள்விகளுக்கு செவ்வாய், புதன் போல் விடை சொல்லிடலாம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

4. கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டைக்கதை - யார் சொன்னது?
பாரதியார்....
கடமை புரிவார் இன்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்
கடமை அறிவோம் தொழிலறியோம்
கட்டென்பதனை வெட்டென்போம்
...மீதியை நீங்க முடிச்சிருங்க குமரன்! :-)

5. கரும யோகிக்குக் கதிரவனை உவமை சொன்னவர் யார்?
பலரும் சொல்லி இருப்பாங்க! பாரதியும் சொல்லி இருக்காருன்னு நினைக்கிறேன்!
கீதை விளக்கத்தில் ரமணரும், விவேகாவும் கூடச் சொல்லி இருக்காங்களே! பதிவர் குமரன் கூடத் தான் சொல்லி இருக்காரு! எல்லாத்துக்கும் மேல சிங்கைச் சிறுத்தை, எங்கள் அண்ணன் கோவி கண்ணன் கூடத் தான் சொல்லி இருக்காரு! :-)))

6. எந்த பண்பாட்டில் பூமி அன்னையாகவும் பகலவன் தந்தையாகவும் போற்றப்படுகிறான்? நாம் பூமாதேவி என்றும் உலக அன்னை என்றும் சொல்வதுண்டு. ஆனால் சூரிய தேவனை உலக தந்தை என்று சொல்வதில்லை. உயிர்களுக்கு இவர்கள் அன்னை தந்தை என்று கூறும் பழம்பண்பாடு உலகத்தில் இருக்கிறது.
ஜப்பானிய ஷிண்டோ மதத்தில் சூரியன் தந்தை-பூமி அன்னை!

7. குடிப்பெருமையைப் பற்றி ஏன் இந்த முதல் அத்தியாயம் பேசுகிறது?
பண்டைத் தமிழ்ச் சமூகத்திலும் திருமணங்கள் ஒத்த குடிகளுக்குள் நடந்தன! பாரியின் மகளிருக்கு அவனை ஒத்த குடியில் பிறந்த அரசனுக்குத் திருமணம் செய்விக்க முயற்சிகள் மேற்கொண்டனர்! அதனாலோ?
எது எப்படியோ, வள்ளுவர் காட்டும் குடிப்பெருமை வேறு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

1. உவகைன்னு ஏன் இந்த கதை தொடங்குது?
உ-ன்னு தான் இலக்கியம் தொடங்கணுமாமே! உலகம் உவப்ப, உலகெலாம், உலகம் யாவையும்...அது மாதிரியா, குமரன்? :-)

2. தலைப்பு 'உடுக்கை இழந்தவன் கை'ன்னு என்ன சொல்ல வருது?
நண்பனின் இடுக்கண் களைவதே நட்பு-ன்னு ஒரு அரசன்-புலவன் நட்பைப் பற்றிச் சொல்ல வரும் கதை! அதனால்!

3. இன்ப துன்பம் = குளிர் வெப்பம் - யார் சொன்ன உவமை?
ஹிஹி! நானே தான்! :-))
கண்ணபிரான் கீதையின் சாங்கிய யோகத்தில் சொல்வது!
சீதோஷ்ண சுகதுக்கேஷு
ததமானப் பமானயோ

வெட்டிப்பயல் said...

2. உடுக்கை இழந்தவன் கை - நட்பிற்கு எடுத்துகாட்டான குறள். இங்கே நண்பன் இழந்ததை குறிக்கிறது.

VSK said...

புதிய தொடரின் துவக்கமே கலக்கலாக வந்திருக்கிறது. தொடர்ந்த கோவி-ரவி விவாதங்கள் மேலும் சுவை!
நல்லதொரு இலக்கியச் சுவை இங்கு விளையும் என்பதற்கான அறிகுறிகள் விளையும் பயிரின் முளையிலேயே தெரிகின்றன.
வாழ்த்துகள் குமரன்!

குமரன் (Kumaran) said...

ஆமாம் பாலாஜி. பாரி மகளிர்ன்னு இலக்கியங்களில் சொல்லப்படும் அங்கவை சங்கவை தான் இந்த மன்னனை மணந்த பெண்கள்.

உடுக்கை இழந்தவன் கை என்ற தலைப்பு நட்பு அதிகாரத்தில் வரும் குறட்பா தான். இங்கே பாரி - கபிலர் நட்பைக் கூறி நின்றது. அது வரை சரி. நண்பனை இழந்ததைக் குறிக்கவில்லை. இங்கே உடுக்கை இழந்தவன் பாரி; கையாக நின்றது கபிலர்.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்.

1. சரியா சொன்னீங்க. அகரத்திலும் உகரத்திலும் நிறைய இலக்கியங்கள்/பாடல்கள் தொடங்குகின்றன. அதனால் இங்கே முதலில் உலக உயிர்கள் என்று தொடங்கினேன். பின்னர் உவகை என்று மாற்றி வேறு பொருளைப் பேசத் தொடங்கிவிட்டேன். உவகை என்று தொடங்கியதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. என்ன என்று சொல்லுங்கள். :-)

2. ஆமாம். இங்கே நண்பனின் இடுக்கணைக் களையும் நண்பனாக இருந்தவர் இந்தப் புலவர் பெருந்தகை.

3. ஆமாம். கீதையில் கண்ணன் சொல்வது தான். இன்ப துன்பங்கள் குளிர் வெப்பங்களைப் போல் மாறி மாறி வருகின்றன என்று சொன்னார். அதையே இங்கு 'எடுத்தாண்டேன்'. :-)

4. கடமை புரிவார் இன்புறுவார்ன்னு சொன்னதும் கண்ணன் தான். ஆனால் ஏதோ ஒரு விரக்தியில் பாரதியார் அதைப் போட்டு உடைக்கிறார். அது பண்டைக்கதை; இந்தக் காலத்திற்கு ஏற்க முடியாதது என்று.

முழுப்பாடலையும் தருகிறேன்.

கடமை புரிவார் இன்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்
கடமை அறியோம் தொழில் அறியோம்
கட்டென்பதனை வெட்டென்போம்
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவைப் போல்
கடமை நினைவும் தொலைத்திங்கு
களியுற்றென்றும் வாழ்குவமே

5. இதுவும் கீதையில் வரும் உவமை தான். கரும யோகத்திற்கு வரையறை செய்து வரும் போது கர்மத்தில் அகர்மம்; அகர்மத்தில் கர்மம் (செயலில் செயலின்மை, செயலின்மையில் செயல்) என்பதற்கு சூரியனை எடுத்துக்காட்டாக சொல்வார். அதனையே இங்கே எடுத்தாண்டேன். இன்னொருவரையும் கரும யோகத்திற்கு எடுத்துக்காட்டாக கண்ணன் கீதையில் சொல்வார். அவர் யார் தெரியுமா இரவிசங்கர்? 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதைக்கு விமர்சனத்தில் தி.ரா.ச. அவரைப் பற்றி சொல்லியிருந்தார். அவர் சுகப்பிரம்மம் இல்லை.

6. ஜப்பானிய ஷிண்டோ மதத்தில் என்பது எனக்குப் புதிய செய்தி. அமெரிக்க பழங்குடிகள் மதத்திலும் கதிரவன் தந்தை; பூமி அன்னை.

7. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விட்டுவிடுவீர்களோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நான் அறிந்த வரை பாரியின் மரணத்திற்குக் காரணம் இந்தக் குடிப் பெருமை தான். வேளிர் குலத்தவனான தனது மக்களை முடி வேந்தர் மூவரில் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று அவன் மறுத்தான். இதுவே நான் அறிந்தது. மூவேந்தரின் முற்றுகைக்கு வேறு ஏதேனும் காரணத்தை எவராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனக்குக் கிடைத்திருக்கும் புறநானூற்றுப் பாடல்களில் மூவேந்தரின் முற்றுகையைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஆனால் எந்தக் காரணத்தினால் முற்றுகை என்பதைப் பற்றிய குறிப்பு இல்லை. வேறெங்கோ படித்ததை வைத்துத் தகுந்த தரவின்றி இந்தக் கதையில் அந்தக் காரணத்தைக் கூறத் தயக்கமாக இருக்கிறது. அந்தப் பகுதி வருவதற்குள் யாராவது வந்து வேறு காரணம் சொன்னால் கதையை மாற்றிவிடுகிறேன்.

இரவிசங்கர். நீங்கள் சொன்ன விடை நான் அறிந்த வரையில் சரியே. ஒத்த குடிகளில் இடையிலேயே பழந்தமிழர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஆனால் அது சாதியைப் போன்ற இறுகிய பழக்கமா அல்லது சமுதாய அந்தஸ்து என்ற வகையிலா அல்லது வேறு வகையிலா என்பதில் தெளிவில்லை.

குமரன் (Kumaran) said...

எல்லாவற்றிற்கும் விடைகள் சொன்னதற்கு மிக்க நன்றி இரவிசங்கர். தெரிந்த வரையில் விடை சொன்னதற்கு நன்றி பாலாஜி.

விடை தெரிந்திருந்தும் சொல்லாத நண்பருக்கு விக்கிரமாதித்தன் கதையில் வரும் கோ ரா மான வேளாளம் இன்று இரவு வந்து பயமுறுத்தட்டும் என்று வாழ்த்துகிறேன். :-)

மௌலி. எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்லிவிட்டார் இரவிசங்கர். நீங்கள் கேட்டுக் கொண்டபடியே. உங்களின் குருநாதர் அவர் தான் என்பதை மீண்டும் நிறுவிவிட்டார். :-) இன்னும் நிறைய கேள்விகள் கேளுங்கள். தகவல் மழை பொழியட்டும்.

நல்ல வேளையாக இந்தக் கேள்விகளுக்கு விடைகள் 40 பின்னூட்டங்களுக்குள்ளேயே வந்துவிட்டன. :-)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கும் பாராட்டிற்கும் நன்றி எஸ்.கே.

நான் நடுவில் வந்து பேசாமல் இருந்திருக்க வேண்டும். நடுவில் வந்து பேசியதால் கோவி - இரவி உரையாடல் நின்றுவிட்டது. :-(

Geetha Sambasivam said...

இன்னிக்குத் தான் வர முடிஞ்சது, அதுக்குள்ளே, இங்கே ஒரு இலக்கிய வகுப்பே எடுத்திருக்கீங்க, நல்லது, இனிமேலே இறை அருள் இருந்தால் அடுத்த அத்தியாயத்துக்குச் சீக்கிரமா வரப் பார்க்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இது தொடர்கதைன்னு நான் சொன்னாலும் இது தொடர் இலக்கியக் கட்டுரையாகத் தான் வரும் போலிருக்கு கீதாம்மா. முடிஞ்சவரைக்கும் கதையாவே எழுத முயல்கிறேன். :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
கதைக்கு அழகான வர்ணனையும் தேவை; சுவை கூட்டுமென்பது புரிகிறது. எனக்குச் சரித்திர;வரலாறு
அறிவு அதிகமில்லை. தங்கள் கதையில் கூறும் விடயங்கள் மூலம் அறியவுள்ளேன்.

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. எனக்கும் பாரி வள்ளலைப் பற்றி சிறிதே தான் தெரிந்திருந்தது. நீங்கள் கேட்டதால் தேடிப் பார்த்ததில் கொஞ்சம் அதிகம் தெரிந்து கொண்டேன். அவற்றை வைத்து இந்தக் கதையை எழுதுகிறேன். தெரியாத பகுதிகளுக்கு கொஞ்சம் கற்பனை செய்திருக்கிறேன். அவற்றில் ஏதாவது தவறு இருந்தால் படிப்பவர்கள் சுட்டிக் காட்டுவார்கள் என்று நம்புகிறேன்.