Wednesday, November 07, 2007

நம்மாழ்வாரின் பெருமானும் அருணகிரிநாதரின் பெருமாளும்...

இது சென்ற இடுகையின் தொடர்ச்சி.

வைணவர்கள் தங்கள் குல முதல்வன் என்று போற்றும் மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் பாசுரங்களில் பல இடங்களில் அரனை அயனை அரியை என்று மூவரையும் சேர்த்துப் பாடுகிறார்.


இறைவனைப் போற்றும் போது...

ஒளி மணிவண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ நான்முகக் கடவுள் என்கோ
அளிமகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்தவை ஏத்த நின்ற
களிமலர்த்துளவன் எம்மான் கண்ணனை மாயனையே


ஒளிவீசும் கரு மாணிக்கம் போல் நிறம் கொண்ட திருமால் என்பேனோ? ஒரே இறைவன் என்று உலகத்தவர் எல்லாம் போற்றிப் புகழ நின்ற அமுதம் நிரம்பிய மதியைச் சடையில் வைத்திருக்கும் சிவபெருமான் என்பேனோ? நான்முகக் கடவுளான பிரம்மன் என்பேனோ? உலகத்தை எல்லாம் படைத்து எல்லா உலகங்களும் போற்ற நின்ற திருத்துழாயாம் துளசி மாலை அணிந்த என் இறைவன் கண்ணனை மாயனையே!

கண்ணனை மாயனை ஒளி மணிவண்ணன், நளிர்மதிச் சடையன், நான்முகக் கடவுள் என்றவர் கீழே சொல்லபப்டும் பாடலில் மூவரையும் போற்றுங்கள் என்கிறார்.

ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே


ஒன்று, பல என்று யாரும் அறிவதற்கு அரிதாக பற்பல வடிவில் நின்று அருளும் நற்குணங்களால் நிரம்பிய நாரணன், நான்முகன், அரன் என்னும் இந்த மூவரை ஒன்றி உம் மனத்தில் வைத்து என்றும் அவரைப் போற்றி பாவம், புண்ணியம் என்ற இரு பாசங்களையும் அறுத்து நன்று நன்று என்று நலம் செய்யும் நாளே நாமும் அவனும் கலந்து ஆனந்தம் அனுபவிக்கும் நாளாகும். (ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியம் பேசப்படுகிறது)

தான் மூவராலும் அருளப்பட்டவன் என்று தானே சொல்கிறார் இன்னொரு பாடலில்.

தெருளும் மருளும் மாய்த்துத் தன்
திருந்து செம்பொற் கழலடிக்கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப்பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி அடிக் கீழ் இருத்தும் நம்
அண்ணல் கருமாணிக்கமே


மயககமும் தெளிவும் மாறி மாறி வரும் நிலையை மாற்றி தனது செம்பொற்கழலடிகளின் கீழ் அருள் செய்து இருத்தும் தலைவனாம் நான்முகனாம் சிவனாம் திருமாலாம் எம்பெருமானால் அருளப்பட்ட சடகோபனாகிய நான் எழுதிய இந்த ஓர் ஆயிரம் பாடல்களில் இப்பத்துப் பாடல்களைப் பாடுவதால் நம் அண்ணல் கருமாணிக்கம் பாடியவரை எல்லாம் தன் திருவடிகளின் கீழ் அருள் செய்து இருத்துவான்.

இன்னொரு இடத்தில் தனக்கு அருளிய இறைவன் தன்னை விட்டு நீங்கக் கூடாது என்று கூவும் போது இவ்வாறு உருகுகிறார்.

முனியே நான்முகனே முக்கண்ணப்பா என் பொல்லா
கனி வாய் தாமரைக்கண் கருமாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலைமிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே


என் தலைவனே! நான்முகனே! முக்கண்ணப்பனே! என் பொல்லாத கனி போன்ற திருவாயை உடைய தாமரைக்கண்களை உடைய கருமாணிக்கமே! என் கள்வனே! என்னுடைய ஆருயிரே! என் தலைமிசையாய் உன் திருவடிகளை நீ வைத்த பின் இனி நான் உன்னை போக விடமாட்டேன். ஒரு மாயமும் என்னிடம் செய்யாதே.

தன் திருவாய்மொழி ஆயிரம் பாடல்களை நிறைக்கும் போதும் மூவரும் நினைவிற்கு வருகின்றனர் நம்மாழ்வாருக்கு.

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந் தந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந் தாதி பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.


அவா நீங்கும் படி சூந்து வரும் திருமாலை, நான்முகனை, சிவபெருமானைப் போற்றிப் பாடி, அவா நீங்கி வீடு பெற்ற குருகூரின் சடகோபனாகிய நான் சொன்ன அவா நீக்கும் அந்தாதித் தொடையால் அமைந்த இந்த ஆயிரம் பாடல்களை நிறைவு செய்த அவா நீக்கும் அந்தாதியான இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்கள் வீடு பேறு பெற்று உயர்ந்தார்கள் என்றே கொள்ளலாம்.

இந்தப் பாசுரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடுகை இடும் அளவிற்கு அழ்ந்த பொருள் உடையது. இங்கே எடுத்துக் கொண்ட பொருள் கருதி சுருக்கமாகப் பொருளுரைத்தேன்.

***

நம்மாழ்வார் இப்படி பல பாசுரங்களில் சிவபெருமானையும் போற்றிப் பாடும் போது, முருகப்பெருமானைப் பாடப் புகுந்த, 'பெருமாளே' என்று ஒவ்வொரு பாடலையும் நிறைவு செய்த, ஓசைமுனி அருணகிரிநாதர் நிறைய திருப்புகழ் பாடல்களிலும் மாமனைப் போற்றிய பின்னரே மருகனைப் போற்றுகிறார். இங்கே ஒரு பாடலைப் பார்ப்போம்.


முத்தைத் தரு என்று முருகப்பெருமானால் எடுத்துத் தரப்பட்டு அருணகிரியார் பாடிய 'முத்தைத் தரு பத்தித் திருநகை' பாடலிலும்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்


என்று பச்சைப்புயலைப் போற்றுகிறார்.

'இராவணனுடைய பத்துத் தலைகள் அழிக்கக் அம்பு தொடுக்கும், மந்தர மலையை மத்தாக வைத்துப் பாற்கடலைக் கடையும், பட்டப்பகலில் அருச்சுனனைக் காப்பதற்காக சக்கரம் கொண்டு சூரியனை மறைக்கும், பக்தனாகிய அருச்சுனனுக்கு சாரதியாக தேரோட்டும், பச்சைப்புயல்' என்கிறார்.

***

இப்படி அருளாளர்கள் எல்லாம் தெய்வங்களை மாற்றி மாற்றிப் போற்றியிருக்கும் போது எப்போதோ நடந்த சமயச் சண்டைகளில் இப்போதும் மனம் செலுத்தி நம்மை நாமே குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று வேண்டி இத்துடன் இந்த இடுகையை நிறைவு செய்கிறேன்.

***

அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்

16 comments:

Unknown said...

Kumaran,

Thangalukum, thangal Kudumbathaarkum, Inia diwali nal vaazthukal.

Anbudan,
Natarajan

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பெரும்+ஆள்=பெருமாள்
இது பொதுவான பொருளில் கூட வரலாம் தான்!
ஆனால் அருணகிரியார் ஏன் இந்தச் சொல்லைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் பெருமாளே என்று சொல்ல வேண்டும்? இது பற்றிப் பல நாள் யோசித்ததுண்டு!

பொதுவா ஒன்றுக்கு அடையாளமாகி விட்ட ஒன்றை இன்னொன்றுக்குப் பயன்படுத்த மாட்டார்கள்!
பொன்னார் மேனியனே என்றால் அது சிவன் தான்!
முருகா என்றால் அது கந்தக் கடவுள் தான்!

முருகன்=அழகன் என்ற பொதுப் பொருளில், பெருமாளையோ, சிவனையோ கூட முருகா-ன்னு கவிஞர்கள் சொல்லலாம்! ஆனால் அப்படி யாரும் சொன்னாரில்லை!
அப்படி இருக்க, அருணகிரியார் இப்படி வரிக்கு வரி பெருமாளே-ன்னு முருகனைப் பாடுகிறார் என்றால், அவருக்கு எவ்வளவு துணிவும் தெளிவும் பெரிய மனமும் இருந்திருக்க வேண்டும்?

அந்த மனம் தான் நமக்கும் தேவை!
இப்படி ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் போற்றி வளர்த்த நல்லிணக்கத்தை நாமும் சிதைக்காது வளர்க்கணும்!

அப்போ தான் நாமும் பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ஆவோம்! :-)
சரி தானே குமரன்?

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!!

குமரன் (Kumaran) said...

நன்றி நடராஜன். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவள் நல்வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்கு சொன்னீர்கள் இரவிசங்கர். உங்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

ஜெயஸ்ரீ said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் குமரன்.

குமரன் (Kumaran) said...

ஆகா. இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள் ஜெயஸ்ரீ. வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஜீவி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள், குமரன்.

வாழ்க வளமுடன்.

அன்புடன்,

ஜீவி

ஜெயஸ்ரீ said...

சில காலம் பெட்டி பழுதாகியிருந்தது. பண்டிகைக் காலமும் சேர்ந்துகொண்டது. விடுபட்ட பதிவுகளையெல்லாம் படித்துவிட்டு வருகிறேன் :)

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவி ஐயா. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அமெரிக்காவில் தங்கள் மகள் வீட்டில் தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள்?

குமரன் (Kumaran) said...

சரி. சரி. மெதுவா படிச்சுட்டு வாங்க ஜெயஸ்ரீ.

கோவி.கண்ணன் said...

//எப்போதோ நடந்த சமயச் சண்டைகளில் இப்போதும் மனம் செலுத்தி நம்மை நாமே குழப்பிக் கொள்ள வேண்டாம் //

குமரன்,

சைவ - வைணவ சண்டையெல்லாம் பெரிய இடத்து விவகாரம், உண்மையான பக்தன் இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. மதக்காவலாராக நினைப்பவர்கள் யார் கை ஓங்கி இருக்கிறது என்று காட்டுவதற்காக தற்புகழ்ச்சியை விட மாற்றான் இகழ்சியை ஆயுதமாக வைத்திருப்பார்கள்.

jeevagv said...

குமரன்,
இதற்கு ஒரே வழி - பொதுவாக இந்து சமயம் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான். இதைத்தான் அன்றே ஆதி சங்கரர் செய்தார். அதற்கப்புறம் ஏற்பட்ட பக்தி இயக்கம் அதை பல ஆண்டுகளுக்கு காத்து வந்தது.
இன்று அரசியலாக்கப்பட்டு அடையாளமற்றுப் போவதற்குள் - இருக்கும் கொஞ்ச நஞ்ச உணர்வுகளை இணைத்து பொதுமைப் படுத்த வேண்டும். வேறுபடுத்திப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு அது கடினம்தான், இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமைகளைப் போற்ற வேண்டும்.

ஜீவி said...

வழக்கம் போல்தான் குமரன்.

என்ன, 'விஸ்..விஸ்' என்று வீசிய குளிர் காற்று உடலைக் கொஞ்சம சில்லிட வைத்தது. சமாளித்துக்கொண்டு சாஸ்திரத்திற்கு பட்டாசு கூட வெடித்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

விசாரிப்புகளுக்கு நன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

உண்மையான பக்தன் இந்தச் சண்டையை எல்லாம் பொருட்படுத்த மாட்டான் என்பது உண்மை தான் கோவி.கண்ணன். நன்றி.

குமரன் (Kumaran) said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜீவா.

குமரன் (Kumaran) said...

ஜீவி ஐயா. இங்கே மினசோட்டாவில் இன்னும் அதிக குளிர். சாஸ்திரத்திற்கு வெடிக்க என்று கொஞ்சம் மத்தாப்பு பட்டாசுகளை வாங்கி வைத்திருந்தோம். மகள் விரைவிலேயே உறங்கிவிட்டதாலும் குளிர் அதிகமாக இருந்ததாலும் அவை எல்லாம் கராஜில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. மார்ச் ஏப்ரலில் எங்கள் (நான், மகள்) பிறந்த நாளுக்கு (பங்குனி உத்திரத்திற்கு) வெடித்துக் கொள்ள வேண்டியது தான். :-)