Saturday, November 24, 2007

புல்லாகிப் பூண்டாகி (பாகம் 1)


கந்தன் திருவண்ணாமலைக்குப் போவது இது இரண்டாவது தடவை. இதற்கு முன் பள்ளிக்காலத்தில் அப்பா, அம்மா, தங்கச்சி என்று எல்லாருடனும் சுற்றுலா சென்ற போது போனது. அதற்குப் பின்னால் திருவண்ணாமலை செல்லும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அதனால் தான் கேசவன் கேட்டவுடனே 'சரி போகலாம்' என்று கிளம்பிவிட்டான். கேசவன் கந்தனின் கல்லூரித் தோழன். கல்லூரி விடுதியில் இவர்கள் இருவரும் போட்ட சாமியார் வேஷங்கள் இவர்கள் கல்லூரியை விட்டு வந்து மூன்று வருடங்கள் ஆன பின்னரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கந்தனைச் சின்ன சாமி என்றும் கேசவனை பெரிய சாமி என்றும் நண்பர்கள் கிண்டல் செய்யும் அளவிற்கு இவர்களின் ஆட்டம் இருந்தன.

போன வருடம் தான் சென்னையில் மீண்டும் கேசவனைப் பார்த்தான் கந்தன். நடுவில் இரண்டு வருடங்கள் யார் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் நண்பர்கள் மூலம் தெரிந்திருந்தாலும் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை; பார்க்கவில்லை. கந்தன் எப்போதுமே இப்படித் தான். எவ்வளவு தான் நெருங்கிப் பழகியவர்கள் என்றாலும் கண்ணை விட்டு நகர்ந்துவிட்டால் மறந்துவிட்டதைப் போல் நடந்து கொள்வான்.

கேசவனைப் பார்த்தவுடன் மீண்டும் அவனுடன் ஒட்டிக் கொண்டான் கந்தன். வேலை பார்க்க வந்திருக்கும் சென்னையில் வீட்டுச் சாப்பாடு கேசவன் வீட்டில் கிடைக்கவே அடிக்கடி கேசவன் வீட்டிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுவிட்டான். சரியான சாப்பாட்டு ராமன்.

நேற்று கேசவன் 'டேய் கந்தா. தாத்தாவைப் பார்க்க திருவண்ணாமலை போறேன். நீயும் வர்றியா?' என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்லிவிட்டான். நினைத்தாலே முக்தி கிடைக்குமாமே. அது மட்டுமா எத்தனை எத்தனை மகான்கள் இந்த திருவண்ணாமலை மலையிலும் அடிவாரத்திலும் வசிக்கிறார்கள். ஒரு முறை இரமணாச்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆச்ரமம் என்று எல்லா இடத்திற்கும் சென்று வந்துவிட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டான்.

தாத்தாவைப் பார்க்கப் போகிறோம் என்று கேசவன் சொன்னானே; அவர் கேசவனின் சொந்தத் தாத்தா கிடையாது. அவர் பெயர் இராமன் ஐயப்பன். எப்படி அவர் கேசவனின் வீட்டிற்கு வந்தார் என்று தெரியாது. கேசவன் வீட்டிற்குப் போகும் போது இரண்டு மூன்று முறை அவரை கந்தன் பார்த்திருக்கிறான். வெள்ளை வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு வெள்ளை தாடியுடன் திருநீறு அணிந்த நெற்றியுடன் இருப்பார். கந்தன் எத்தனை முறை தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டாலும் மோகன் என்றே அழைப்பார். ஏன் என்று தான் கந்தனுக்குப் புரிவதில்லை. கந்தன் இல்லாத நேரத்தில் கேசவனிடம் கந்தனைப் பற்றி நிறைய பேசியிருக்கிறாராம். தெய்வ அருள் பெற்றவன் மோகன் என்று பத்து தடவையாவது சொல்லியிருப்பாராம். கேசவன் சொன்னான்.

அந்தத் தாத்தாவைப் பார்க்கத் தான் கேசவன் திருவண்ணாமலைக்குப் போகிறான். கந்தனும் அதற்குத் தான் வருகிறான் என்று நினைத்துவிட்டான். ஆனால் கந்தன் செல்வதோ அண்ணாமலையாரையும் உண்ணாமுலையம்மையையும் பார்க்க.

(தொடரும்)

அடுத்த அத்தியாயம் இங்கே

27 comments:

G.Ragavan said...

கந்தனையும் கேசவனையும் நட்பாக்கி அண்ணாமலைக்கு அழைத்துச் செல்லும் வகையில் குமரன் ஒரு தொடர்கதையைத் தொடங்கியிருக்கிறார் என்றால்.....அதில் ஏதோ இருக்கிறது. அடுத்தடுத்த பகுதிகளைப் படிப்போம்.

rv said...

என்ன ஆன்மீக செம்மல்களெல்லாம் தொடர்கதைக்கு மாறிட்டீங்க? :)

நல்லாருக்கு.


அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்.



ஜிரா,
//கந்தனையும் கேசவனையும//
இதெல்லாம் ஸ்பஷ்டமா தெரியுமே உமக்கு? :))

jeevagv said...

மிக்க நன்று குமரன், தொடர்ந்து படிக்க நாங்க ரெடி...

தாத்தா தான் இங்கே கந்தனுக்கு சித்தரோ என்ற ஊகத்தை ஏற்படுத்துகிறது (அந்த ஊகத்தை ஏற்படுத்த்திய தாக்கத்திற்கு VSK சாருக்கு நன்றி!)

RATHNESH said...

ஏன் குமரன்,

கதையில் வர்ற பாத்திரங்கள் பெயரையாவது வேற மாதிரி வைக்கக் கூடாதா? கந்தனுக்கு அண்ணாமலை எப்படி தாத்தாவாக முடியும்னு குழம்பி அப்புறம் தான் மேலே கண்ணில் பட்டது சிறுகதை என்கிற குறிப்பு. முழுக்கதையும் குழம்பாமல் நான் படித்து முடித்து பின்னூட்டம் போட்டு விட்டால் என் பகுத்தறியும் திறனை நானே மெச்சிக் கொள்ளலாம்.

cheena (சீனா) said...

தீபத்திருநாளில், திருவண்ணாமலையை நோக்கி, அண்ணாமலையாரையும் ,உண்ணாமுலையம்மையையும் பார்க்க கந்தன் என்ற மோகன் கேசவனுடன் புறப்படுகிறான். ஆரம்பம் அருமை. நண்பர் விஎஸ்கேயின் தொடர் போல அமையுமா ??

வாழ்த்துகள் குமரன்......

குமரன் (Kumaran) said...

சைவ வைணவ ஒற்றுமையைப் பற்றி இந்தக் கதை பேசுமா? தெரியவில்லை இராகவன். இந்தக் கதையைப் பற்றிச் சிந்தித்த போது இந்தப் பெயர்கள் தான் மனத்தில் தோன்றின. அதற்குக் காரணங்கள் உண்டு. அவை போகப் போக கதையில் சொல்லப்படும். :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராம்ஸ். அடுத்து இரவிசங்கர், ஜீவா, கீதாம்மா, வல்லியம்மா, திராச, மௌலி எல்லோரும் தொடர்கதை எழுத வரிசையில் நிற்கிறார்கள். ஒவ்வொன்றாக வெளியில் வரும். :-) ச்சும்மா.

நல்லாருக்கா?! மகிழ்ச்சி.

விடாம படிங்க. பின்னூட்டம்? உங்க விருப்பம். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவா. தாத்தா தான் இங்கே இந்தக் கந்தனுக்குச் சித்தரா? ஊகம் தானே. இன்னும் கொஞ்சம் நாளில் சரி பார்த்துக் கொள்ளலாம். :-)

குமரன் (Kumaran) said...

இரத்னேஷ். உங்களைக் குழப்பியதற்கு மன்னிக்கவும். என்னங்க பண்றது? நான் கதை எல்லாம் எழுதுவேன்னு நீங்க எதிர்பார்க்கலை போலிருக்கு. முந்தியே கொஞ்சம் கதையெல்லாம் எழுதியிருக்கேனுங்க. பேரு தானா அமையிறது தானே?! என்ன பண்றது? :-)

கதையோட முதல் பாகத்தை முழுசா இன்னொரு தடவை படிச்சிருங்க. இது தொடர்கதைங்கறதால எல்லாமே இப்பவே புரியணுங்கற கட்டாயம் இல்லை. :-) அதனால உங்க பகுத்தறிவின் திறனைப் பற்றி எந்த ஐயமும் வேண்டாம். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி சீனா ஐயா. எஸ்கே ஐயாவோட தொடர் போல அமையுமா? முருகனருள் எப்படி இருக்கோ தெரியலை. நீங்களும் தொடர்ந்து படிச்சுப் பார்த்து சொல்லுங்க.

நன்றிகள் ஐயா.

இலவசக்கொத்தனார் said...

அங்க கந்தன் கதை முடிஞ்சுதேன்னு நினைச்சா இப்போ இங்க ஆரம்பமா? அட்டகாசமா இருக்கு ஆரம்பம். இங்க எப்படி வாரம் ஒரு நாளா? இல்லை வாரம் ஐந்து நாட்களா? எம்புட்டு நாள் வரும்? இதெல்லாம் கொஞ்சம் சொல்லிடுங்க சாமி.

குமரன் (Kumaran) said...

நன்றி கொத்ஸ். தினமும் எழுத நேரம் வசதிப்படுமான்னு தெரியலை கொத்ஸ். ஆனா வாரம் ஒரு தடவைன்னா மெதுவா போகுமோன்னு தோணுது. அதனால வாரம் ரெண்டு நாள்ன்னு வச்சுக்கலாமா? அமெரிக்க திங்கள் காலை & வியாழன் காலை.

மெளலி (மதுரையம்பதி) said...

அண்ணாமலை உடனுறை உண்ணாமுலையாள் அனுக்கிரகத்தில் கந்தனுக்கும், கேசவனுக்கும் நல்லனுபவங்கள் வாய்க்கட்டும்.

//அடுத்து இரவிசங்கர், ஜீவா, கீதாம்மா, வல்லியம்மா, திராச, மௌலி எல்லோரும் தொடர்கதை எழுத வரிசையில் நிற்கிறார்கள்//

அட நீங்க வேற குமரன், எனக்கு தெரிந்ததை எழுதினா அதுவே பப்ளிஷ் பண்ணற அளவு கோர்வையா இல்லயின்னு தோணுது....இதுல கதையெல்லாம்? ஏங்க ஜாம்பவான்கள் லிஸ்ட்-ல என்னையும் சேக்கறீங்க.....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னது...வரிசையில நிக்கறேனா? கதையெல்லாம் எழுதி முடிச்சி ரெடியா இருக்கு! காதல் கதை! இயக்குனர் கிட்ட கொடுத்திருக்கேன். அவரு அனுமதி பெற்று ஒவ்வொரு தொடரா வரும்! :-))

கந்தன், கேசவன் நட்பு வித்தியாசமான ஒன்றா இருக்கு குமரன். சுவாரஸ்யம் கூடும்னு நினைக்கிறேன்...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!

தருமி said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு நீங்களே ஒரு காலவரையறை வைத்து
எழுதுகிறீர்கள் போலும் .. நல்லது. தொடருங்கள். வாசிப்பேன். நன்றி

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துகளைக் கந்தனும் கேசவனும் பெற்று நன்றிகளைச் சொல்லச் சொன்னார்கள் மௌலி.

செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்வார்கள்; இப்போதெல்லாம் செந்தமிழும் வலைப்பதிவில் எழுத்துப்பழக்கம் ஆகிவிட்டது மௌலி. எழுத எழுதக் கோர்வையாக எழுதத் தானே வரும். இதில் தயக்கம் எதற்கு?! விரைவில் நீங்களும் தொடர்கதை எழுதுங்கள். :-)

குமரன் (Kumaran) said...

இயக்குனர் யாரு இரவிசங்கர். எல்லாரையும் இயக்கும் அந்த இயக்குனரா? இல்லை உங்களுக்கு மட்டுமே இருக்கும் கூடுதல் இயக்குனரா? யாரிடம் உங்கள் காதல் கதையைக் கொடுத்திருக்கிறீர்கள்?

கந்தன் கேசவன் நட்பில் எதுவும் வித்தியாசமா இருக்கிற மாதிரி தோணலையே?! எதைச் சொல்கிறீர்கள்?

குமரன் (Kumaran) said...

நன்றி தருமி ஐயா. வாசிப்பேன் என்று சொன்னதற்கும் நன்றி.

Geetha Sambasivam said...

கந்தன் என்ற பேரைப் பார்த்ததும், சித்தர் தான் கண்ணிலும் தெரிகிறார். கனவு மெய்ப்பட்ட அதே கந்தன் தானா தெரியலை!!!! ஆனால் தாத்தா சொல்றதைப் பார்த்தாலும் சந்தேகமா இருக்கு. இந்த அளவுக்கு எல்லாம் என்னால் யோசிச்சு எழுத வராது. மத்தவங்க கூட என்னையும் சேர்த்தது உங்களோட அன்பைக் காட்டுது. மற்றபடி அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்கிலே நானும், ரவிசங்கர் எழுதப் போற "காதல் கதை"க்கும் வெயிட்டிங்க்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், ரத்னேஷுக்கு நீங்க சொன்னாப்பல மறுபடி படிச்சேன்.??????

குமரன் (Kumaran) said...

இந்தக் கந்தன் வேறு கீதாம்மா. கனவு மெய்ப்பட்ட கந்தனுக்கும் இந்தக் கந்தனுக்கும் ஒற்றுமைகள் இருக்கலாம்; ஆனால் வெவ்வேறு ஆட்கள்.

தாத்தா சொன்னதைப் பற்றி இனி வரும் அத்தியாயங்களில் தெரியும் அம்மா. தொடர்ந்து படிச்சீங்கன்னா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிக்க வேண்டியிருக்காது. :-)

நீங்க ஏற்கனவே தொடர் எழுதிக்கிட்டுத் தானே இருக்கீங்க. தொடர்கதையும் எழுதலாம். :-)

VSK said...

அட்டகாசமான ஆரம்பம், குமரன்!

கந்தன் பெருமை பாடும் இன்னொரு தொடர்கதை.

கண்டிப்பாகப் படிப்பேன்.

தயவுசெய்து என்னையும் உங்கள் மெயிலிங் லிஸ்டில் சேர்த்து விடுங்களேன்.

அதன் மூலமாகத்தான் அலுவலில் இதைப் படிக்க முடியும்.
நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி எஸ்.கே.

உங்கள் மின்னஞ்சலையும் மின்னஞ்சல் பட்டியலில் சேர்த்துவிடுகிறேன். நன்றி.

வெற்றி said...

குமரன்,
அருமையான துவக்கம். மிகவும் சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.
தொடருங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.

நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி வெற்றி.

Kavinaya said...

இப்பதான் ஆரம்பிக்கிறேன் கந்தா.... ஐ மீன் குமரா... :)

குமரன் (Kumaran) said...

மோகன கந்தன் உங்களுடன் மீண்டும் படிக்கிறான் அக்கா. :-)